பத்ரி சேஷாத்ரி

Saturday, September 04, 2010

இளம் மாணவர்களுடன் சந்திப்பு - 1

மாணவர்களிடம் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதற்காக சோதனை முயற்சியாக ஒன்றை ஆரம்பித்துள்ளேன். இவர்கள் அனைவரும் தக்கர் பாபா உறைவிட ஆரம்பப் பள்ளியில் படிக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருபவர்கள். தொடர்ந்து 45 நிமிடங்களுக்குமேல் அவர்களை கவனம் செலுத்தவைப்பது கடினமாக உள்ளது. இன்றைய தொடக்கத்துக்குப்பின், அடுத்த சந்திப்புகளில் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன், ஆடியோ, வீடியோ ஆகியவை உதவியுடன் மாணவர்களிடம் உரையாடப்போகிறேன். தொடர்ந்து அந்தச் சந்திப்புகளின் காணொளியையும் தருகிறேன்.

Thursday, September 02, 2010

பூனை

பக்கத்து வீட்டில் நான்கு பூனைக் குட்டிகள் இருக்கின்றன. பொதுவாக தாய்ப் பூனை இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் போடும். வெகுசில சமயங்களிலேயே இப்படி நான்கு.

காலை எழுந்தவுடன் பல் தேய்த்துக்கொண்டே பால்கனிக்கு வந்துவிட்டால், அடுத்தவீட்டு மொட்டைமாடியில் ஃபிரெஷ்ஷாக அந்த நான்கு குட்டிகளும் ஒன்றோடு ஒன்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கும். ஒரு குட்டி, உதிர்ந்திருக்கும் இலை ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்து, அதைக் கீழே எறிந்து, என்னவோ அது தன்மீது எறியப்பட்ட கிரனேட் என்று நினைத்துக்கொண்டு பக்கவாட்டில் சைடு ஜகா வாங்கும். அப்போது அதன் வால் சிலிர்த்துக்கொண்டு தூக்கியபடி நிற்கும். உடனே மற்ற மூன்றும் தங்கள் கவனத்தை இந்தப் பக்கம் திரும்பும்.

சில நிமிடங்களிலேயே இது பொய்யான விளையாட்டு என்று தெரிந்துகொண்டு அந்தக் குற்றவாளிமீது பாய்ந்து அதைக் கீழே தள்ளி, மோசமாகக் கடிப்பதுபோல ஒன்று தாக்கும். மற்ற இரண்டும் வேறு விளையாட்டுகளை விளையாடப் போய்விடும்.

எப்போதாவது தாய் அங்கு படுத்தபடி, வாலை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருக்கும். உடனே குட்டிகளுக்குக் கொண்டாட்டம். தன் பஞ்சு முன்னங்காலால் ஆடும் வாலைத் தட்டும்; சில நேரங்களில் இரு முன்னங்கால்களாலும் அம்மாவின் வாலைப் பிடித்துத் தூக்கி நறுக் என்று கடித்துவிடும். ம்ர்ர்ர்ர் என்று அம்மா ஒரு சத்தம் கொடுக்க, சப்தநாடியும் ஒடுங்கி, அமைதியே வடிவாகக் குட்டிகள் அடங்கிப்போகும்.

தாவித் தாவி ஒன்றை ஒன்று கீழே தள்ளி, அதன்மீது ஏறி, அடிப்பதும் கடிப்பதும் அவர்களது வேட்டைத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு விளையாட்டு. ஆனால் பெரும்பாலும் இந்தப் பூனைக் குட்டிகள் யாரையும் வேட்டையாடுவது கிடையாது.

நாகபட்டினத்தில் எங்கள் வீட்டில் ஒரு சாதுப் பெண் பூனை இருந்தது. என் அம்மாவின் தோஸ்த். காலையில் அம்மா சீக்கிரம் எழுந்து வீட்டு வேலைகளை ஆரம்பித்துவிடும்போது இதுவும் கூடவெ கிளம்பிவிடும். அம்மா அந்தப் பூனையுடன் பேசிக்கொண்டே வேலை செய்வார். இதுவும் அவ்வப்போது ஏதாவது சத்தம் கொடுத்தபடி இருக்கும். ஒரு கட்டத்தில் எலிகளைப் பிடிக்கும் பழக்கம் நின்றுபோய், பல்லிகளைப் பிடிப்பதோடு நிறுத்திக்கொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு பல்லிகளைப் பிடிப்பதையும் நிறுத்திவிட்டது. மோர் சாதம் அல்லது பால் சாதம் மட்டும்தான்.

அவ்வப்போது குட்டிகளைப் போடும். ஆனால் கவனமாக, குட்டிகள் வளர்ந்தபின், அவற்றை எங்காவது கொண்டுபோய் அதுவே விட்டுவிடும். தன் வீட்டில் தன் சோற்றுக்குப் பாதகமாக வேறு போட்டிகள் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. அப்படியும் மீறி ஒருமுறை அது போட்ட இரண்டு குட்டிகளை வேறு எங்கும் விடவில்லை. அந்த இரண்டு குட்டிகளும் எங்களுடன் (நான், என் தங்கை, இரண்டு பூனைக் குட்டிகள்) சேர்ந்து வளர்ந்தன. அந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். ஆண் சற்று குண்டாக, கொழு கொழுவென இருந்தது. பெண் சோனியாக இருந்தது. எனவே அவற்றுக்கு குண்டு, சோனி என்று பெயர்கள்.

ஒல்லி, கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி. பிடித்தால் சரக்கென்று நகத்தால் கீறிக் கிழித்துவிடும். குண்டு பரம சாது. அதற்கு ஆண்களைப் பார்த்தால் பயம். குண்டான பெண்களைப் பார்த்தாலும் பயம். எங்கள் வீட்டில் என்னிடம் மட்டும்தான் கொஞ்சம் பயம் இல்லாமல் வரும். என் அப்பாவைப் பார்த்தால் கதறிக்கொண்டு ஓடிவிடும். அம்மா, தங்கை ஆகியோரிடம் பயம் இல்லை. வெளியிலிருந்து யாராவது வந்தால் தயங்கித் தயங்கித்தான் வந்து பார்க்கும். கொஞ்சம் பயம் என்றாலும் எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும்.

ஒரு கட்டத்தில் குண்டும் சோனியும் பெரியவர்களாக ஆகியும் எங்கள் வீட்டிலேயே தொடர்ந்து வசித்தன. இப்போது மூன்று பூனைகள். இதற்குள் தாய்ப் பூனைக்கு வயதாகி, பேசுவதை (அதாவது சத்தம் போடுவதை) முற்றிலுமாக நிறுத்தியிருந்தது. குட்டிகள் போடுவதையும்தான். அவ்வப்போது வரும், சாப்பிடும். எங்காவது காணாமல் போய்விடும். சோனியின் சேட்டைகள் அதிகமாகின. ஒருமுறை ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா ஒருவரைக் கீறிவிட்டது. அவர் சாக்குப் பைக்குள் அதை எடுத்துக்கொண்டுபோய் எங்கேயே விட்டுவிட்டுத் திரும்பினார். எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து, திரும்ப வந்துவிட்டது. இப்படியே இரண்டு மூன்று முறை அவர் செய்ய, அதுவே கடுப்பாகி, ‘நீயும் வேண்டாம், உன் வீடும் வேண்டாம்’ என்று முடிவுசெய்து வேறு எங்கோ ஓடிவிட்டது.

குண்டைப் பற்றி அந்தக் கவலை இல்லை. யாருக்கும் அதனால் எந்தப் பயமும் இல்லை. வெறும் தயிர் சோறு மட்டுமே தின்று, தன் இனத்துக்கே உரிய எந்த தாமஸ குணமும் இல்லாமல் வளர்ந்துவந்தது. சில நேரங்களில், பல்லி, கரப்பு, தட்டான் போன்றவற்றைப் பிடித்துவிடும். ஆனால் அவற்றைக் கொல்லக்கூடத் தெரியாமல் தட்டித் தட்டித் துரத்தி விட்டுவிடும்.

அது ஆணாகவும் பிறந்து, வீரம் இல்லாமல் இருந்ததே அதற்கு எமனாகப் போயிற்று. அந்தப் பகுதியில் சில முரட்டு ஆண் பூனைகள் இருந்தன. இந்தக் கடுவன் பூனைகள் அவ்வப்போது அந்தப் பகுதியில் இருக்கும் பெண் பூனைகளை சினையேற்றும், தங்களுக்குள் சண்டை போட்டுகொண்டு வீட்டுக் கொல்லைகளில் கர்ர்ர் புர்ர்ர் என்று உறுமும் அல்லது ஒருவித சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும். சில நேரங்களில் சிறு குழந்தைகள் அமானுஷ்யமாக அழுவதுபோன்றும் ஓலமிடும். குண்டுப் பூனை வளர்ந்து பெரிதாகிக் கொழுகொழுவென்று வெளியே செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஒன்றுசேர்ந்து குண்டனைத் தாக்க ஆரம்பித்தனர்.

நன்கு செமத்தியாக டின் கட்டி அடித்துக் கடித்துவிடுவார்கள். இதுவும் கதறிக்கொண்டு வீட்டுக்கு வந்துசேரும். அடுத்த சில நாள்கள் தன் காயங்களை நக்கி ஆற்றும். பின் மீண்டும் வெளியே சென்று உதை வாங்கிக்கொண்டு வரும். பகுத்தறிவற்ற அதற்கு சொன்னால் என்ன புரியப்போகிறது? ஒருமுறை நாங்கள் ஊருக்குப் போய்விட்டு சில நாள்கள் கழித்துத் திரும்பினோம். பிற ஆண் பூனைகள் எல்லாம் சேர்ந்து கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது என்றார்கள் அக்கம்பக்கத்தினர். கிணறில் விழுந்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். காணவில்லை.

அந்தப் பூனையை வைத்து நான் சில சோதனைகளைச் செய்துள்ளேன். ஒரு உயரத்திலிருந்து தலைகீழாகத் திருப்பி அதனைப் போட்டாலும் தரையில் விழும்போது உடலை நாசூக்காத் திருப்பி, நான்கு கால்களால் மெத்தென்று கீழே விழும் திறன் பூனைகளுக்கு உண்டு. அதன் கால் நகங்களை அழுத்திப் பார்த்திருக்கிறேன். பாதத்தில் மெத்தென்று இருக்கும் இடத்தை அழுத்தும்போது அதன் நகப்பையிலிருந்து கூரான நகம் வெளியே எட்டிப் பார்க்கும். அந்த நகங்களை ஒருக்காலும் தன்னைக் காப்பதற்காகக்கூட குண்டுப் பூனை பயன்படுத்தியதில்லை. அதேபோல அதன் பல் வரிசைகளை வாயைத் திறந்து, வாய்க்குள் விரலைவிட்டு எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் கொஞ்சமும் பதறாமல் காட்டிக்கொண்டு கம் என்று இருக்கும் அந்தப் பூனை. சீரான பற்கள். கடைக் கோடியில் மட்டும், நீண்ட ஊசிபோன்ற பற்கள். அவற்றையும் அது தன் வாழ்நாளில் ஒழுங்காகப் பயன்படுத்தியதில்லை. தயிர் சாதம் சாப்பிட இந்தப் பற்கள் எதற்கு?

அந்தப் பூனையை மாதிரியாக வைத்து தரையில் சாக்பீஸால் படம் வரைந்து பழகியிருக்கிறேன். (இப்போது மறந்துவிட்டது.) கிட்டத்தட்ட பக்கத்தில் உள்ள படத்தைப்போல கொஞ்சம் கறுப்பாக, உடலெங்கும் வரி வரியாக இருக்கும் அந்தப் பூனை. அதன் பல்வேறு விளையாட்டுகளை அருகே இருந்து ரசித்திருக்கிறேன். பெரியாழ்வார் போல கவித்திறன் இருந்திருந்தால் பல பாடல்களை எழுதியிருந்திருப்பேன்.

இப்போது மீண்டும் அதே விளையாட்டுகளை (இண்டூ ஃபோர்) பார்க்க முடிகிறது. ஆனால் இப்போதும் கவித்திறன் கைகூடவில்லை.

Wednesday, September 01, 2010

வீடு - 2

சிங்கப்பூர் சென்றிருந்தபோது தேசிய நூலகத்தில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அந்த ஆவணப்படத்தைப் பார்த்தபின் எழுதியிருந்த வரிகள் சில.
யேமெனில் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.
முதலில் ஒரு பொறியியல் மாணவனாக, இந்தச் செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. களிமண் என்றால் நமக்குத் தோன்றும் எண்ணம், அது தரமற்றது என்பதுதான். ஆனால் சிமெண்ட் என்றால், அது உலகின் மிக உயரிய பொருள்; அழிவற்றது, நிரந்தரமானது.

ஆனால் உண்மை முற்றிலும் மாறானதாக உள்ளது. இந்தியா வந்தபின் இங்குள்ள பல அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டபோது அவர்களும் இதைத்தான் சொன்னார்கள். களிமண்ணால் கட்டினால் அந்தக் கட்டடம் பல நூறாண்டுகள், ஏன், ஆயிரம் ஆண்டுவரைகூட இருக்கும். இண்டாக்கின் (INTACH) சுரேஷ், தஞ்சாவூர் அருகே களிமண்ணால் கட்டிய ஒரு கட்டடத்தை இடிக்கமுடியாமல் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னார். அதேபோல சுதையால் (சுண்ணாம்புக் கலவை) கட்டப்படும் சிலைகள், கோபுரங்கள், வீடுகள் பல நூறு ஆண்டுகள் இருக்கக்கூடியவை. நாம் இன்றும் பார்க்கும் கோயில்கள் பலவற்றுக்கும் அடிப்பகுதி கல்லாலும் (கிரானைட்) மேல்பகுதி செங்கல்+சுதை கொண்டும் கட்டப்பட்டவையே. சில நூறு ஆண்டுகள் தாங்கியும் மிகக் குறைவான அழிவுடன் அப்படியே நிற்கின்றன.

ஆனால் சிமெண்ட் நூறு ஆண்டுகள் கூடத் தாங்காது; 60 ஆண்டுகளில் உதிர்ந்து வீணாகத்தொடங்கிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பின் என்ன காரணத்தால் இப்படி சிமெண்ட், காங்கிரீட் என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறோம்?

சிமெண்ட், முக்கியமாக இரும்புக் கம்பிகள் (முறுக்கேறிய இரும்புக் கம்பிகள் என்றால் இன்னும் சிறப்பு) செருகப்பட்ட சிமெண்ட், கட்டுமானத் துறையில் ஒரு சிறப்பான பொருள்தான். அதனால் இழுத்தல், அழுத்தல் என இரண்டு விசைகளையும் தாங்கிக்கொள்ள முடியும். முறுக்கேறிய கம்பிகள் என்றால் திருகல் விசைக்கும் நல்ல எதிர்ப்பைக் காண்பிக்கும். எனவே உயரமான, பல அடுக்கு கொண்ட கட்டடங்களைக் கட்ட இவை பொருத்தமானவையே. ஆனால் இந்தக் கட்டடங்கள் குறுகிய காலம் மட்டுமே தாங்கக் கூடியவை. சிமெண்ட் உதிர்ந்து பலமிழந்துபோகும்போது, கட்டடத்தின் ஆயுளும் முடிந்துவிடும். அப்போதுதான் பிரச்னையே ஆரம்பமாகும். இந்தக் கட்டடத்தை அழிப்பது பெரும்பாடு. மாபெரும் இயந்திரங்கள் கொண்டு இடிப்பதுதான் ஒரே வழி. அல்லது வெடி கொண்டு தகர்ப்பது. ஏனெனில் உறுதிக்குத் தேவையான இரும்புக் கம்பிகளே இப்போது அழிப்பதற்கும் தடையாக இருக்கும்.

எனவே சிறுசிறு கட்டடங்கள், அதுவும் முக்கியமாக, இரண்டு தளங்கள் மட்டுமே கொண்ட கட்டடங்கள் என்றால் அதைக் கட்ட சிமெண்டும் காங்க்ரீட்டும் தேவையே இல்லை. களிமண், செங்கல் கொண்டு கட்டி, நல்ல தரமான மேல்பூச்சுக்கு ஒரு வழி செய்துவிட்டால் அற்புதமான வீடு கிடைத்துவிடும். வாழும் காலத்தில் அழிவில்லாமல் இருக்கும். மேல் பூச்சுக்குக்கூட சிமெண்டைத் தவிர்த்து, சுதை (காரை) கொண்டு பூசி, இன்று கிடைக்கும் தரமான பெயிண்டுகளை மேலே அடித்துவிடலாம். அல்லது இந்த பெயிண்டுகளையும் விடுத்து, நல்ல சுண்ணாம்புப் பூச்சை மேலே அடித்து அழகான தாவர வண்ணங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

தரைத் தளத்தின் கூரையாக மச்சு வீடுகள் என்று முன்னால் சொல்லப்பட்டிருந்த அதே முறையில் சுதை கொண்டே ஓடுகளை ஒட்டலாம். அதில்கூட மேலும் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டு காங்க்ரீட் இல்லாமல் செய்யமுடியும். இதுபற்றி மேலும் யோசிக்க சிவில் எஞ்சினியரிங் படிக்காத என்னால் முடியவில்லை. சிவில் எஞ்சினியரிங் துறை வல்லுனர்கள் இதுபற்றிச் சிந்திக்கலாம்.

செங்கற்கள் என்றால், இந்தோ சாரசெனிக் பாணிக் கட்டடங்கள் சென்னையில் பல காணக் கிடைக்கின்றன. அவற்றில் பயன்படுத்தப்பட்டதுபோல நல்ல தரமான, கெட்டியான, glazed செங்கற்களைப் பயன்படுத்தினால், மேல் பூச்சு என்பதே தேவை இல்லை என்று தோன்றுகிறது.

நம் நாட்டில் நல்ல தரமான கட்டுமானக் கலை இருந்துள்ளது. பின்னர் அவை திரிந்து, தரமற்ற கைவினைஞர்கள் கையில் மோசமான கட்டடங்களாக மாறியுள்ளது. அந்த நிலையில் மேற்கிலிருந்து வந்த சில தொழில்நுட்பங்கள்தான் நமக்கு முற்றுமுழுதான தீர்வு என்று எடுத்துக்கொண்டு, அதே மோசமான கைவினைஞர்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மோசமான கட்டடங்களையும் அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத கட்டடங்களையும் நாம் இன்று எழுப்புகிறோம்.

எனவே இன்றைய தேவை, நம் சூழலுக்கு (வெப்பமண்டலச் சூழலுக்கு) தேவையானபடி கட்டுமானக் கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது.

இதுபற்றி சிந்திக்கும் சிவில் எஞ்சினியர்கள் எங்கே இருக்கிறார்கள்?

(தொடரும்)

Monday, August 30, 2010

தமிழக ஓவியங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். ஜோப் தாமஸ் என்ற அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் ஒருவர் தமிழகத்தின் கோயில் ஓவியங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார் என்று எங்கள் ஆங்கில எடிட்டோரியலிலிருந்து தகவல் வந்தது. யாரோ ஒரு அமெரிக்கர் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒரு தமிழர்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் டேவிட்சன் கல்லூரியில் இந்தியக் கலை, கலாசாரம், காந்தியம், இஸ்லாமியக் கலை ஆகியவை தொடர்பான பாடங்களை நடத்துபவர்.

பொதுவாக நாங்கள் அகடெமிக் புத்தகங்களைச் செய்வதில்லை. பொதுமக்களுக்கான புத்தகங்கள்தாம். அவரிடம் அதைத்தான் சொன்னேன். அவரும் அதைத்தான் விரும்பினார். அவரது பிரதியில் ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் இருந்தன. அகடெமிக் ரிகர். ஆனால் அனைத்தையும் வைத்துக்கொள்வோம், அடிக்குறிப்பாக அல்ல, புத்தக இறுதியில் end notes ஆக என்று முடிவெடுத்தோம்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் பாறை ஓவியங்கள் எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் படிமங்கள் மிக அதிகமாகக் கிடைத்துள்ளன. ஜோப் தாமஸின் புத்தகம் அதிலிருந்தே தொடங்குகிறது. அடுத்து, சங்க காலத்தில் ஓவியங்கள் நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என்பதை சங்க இலக்கிய மேற்கோள்களிலிருந்தே தாமஸ் நிறுவுகிறார். துரதிர்ஷ்டவசமாக அவை ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. அடுத்து நமக்குக் கிடைப்பது பல்லவர் கால ஓவியங்களும் பாண்டியர்களின் சித்தன்னவாசல் ஓவியங்களும். வெகு நாள்களாக பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்களுடையவை என்று தவறாகச் சொல்லப்பட்டன. இப்போது அந்தத் தவறு திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், பிற்காலச் சோழர்களின் அருமையான ஓவியங்கள். அவற்றில் முக்கியமான பலவும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள உள்பிராகாரத்தில் உள்ளன. அவை பொதுமக்களுக்குக் காணக் கிடைக்கா.

தாமஸின் புத்தகம் இவை அனைத்தையும் அழகாகப் பதிவுசெய்து, அவை பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது.

அடுத்து, தமிழகத்தின் வரலாற்றில் பெரும் மாற்றம். விஜயநகர அரசர்கள், அதன்பின் அவர்களது ஆளுநர்களான நாயக்கர்கள் காலத்தில் அழகுணர்ச்சி போய், வேறுவிதமான நோக்கங்கள் கோயில் ஓவியங்களில் வந்துசேருகின்றன.

அடுத்து, கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ்காரர்கள் காலம். அப்போது தஞ்சை மராத்திய மன்னர்கள் அவையில் முதன்முதலாக, செகுலர் காட்சிகள் படமாக வரையப்படுகின்றன. போர்ட்ரே என்ற ஆசாமிகளைத் தத்ரூபமாகப் படமாக வரையும் முறை வருகிறது. மற்றொரு பக்கம், கம்பெனியார், ஓவியத்தை தங்களது வணிகக் காரணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாமிகளையும் பக்தர்களையும் வரைந்தவர்கள், பருத்திச் செடிகளையும் மாம்பழ வகைகளையும் வரைகிறார்கள். வெள்ளைக்காரப் பெண்கள் அணிந்துகொள்ளவேண்டிய கவுன் துணியில் அழகழகான வடிவங்களை வரைகிறார்கள். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி, தியோசாஃபிகல் சொசைட்டி வரை தாமஸ் ஓவிய மோஸ்தர் மாற்றங்களைப் பின்பற்றிச் செல்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் முதற்கொண்டு, அதன் இறுதி வடிவம் வரை பணியாற்றியது நான் ஈடுபட்ட சந்தோஷமான வேலைகளில் ஒன்று. இறுதியில் 32 பக்க வண்ண ஓவியங்களுடன் புத்தகமாகக் கொண்டுவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது. நியூ ஹொரைஸன் மீடியா கொண்டுவந்துள்ள மிகச் சிறந்த புத்தகங்களில் இது ஒன்று.

புத்தகத்தின் அறிமுக விழாவின்போது பேரா. ஜோப் தாமஸ் கொடுத்த காணொளிப் பேச்சை இங்கே தருகிறேன்.

புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும். ரூ. 300 புத்தகம், சில நாள்களுக்கு மட்டும் சலுகை விலையாக ரூ. 250/-க்குக் கிடைக்கும்.



வீடியோவைத் தரவிறக்கம் செய்துகொள்ள
.

Sunday, August 29, 2010

வீடு

நாகபட்டினத்தில் நான் வசித்தது ஒரு ஓட்டு வீட்டில். அன்றைய காலத்தின் வீடுகளுக்கே உரிய வடிவம். நடுவில் திறந்த சதுர வடிவிலான முற்றம் (முத்தம் என்று அழைக்கப்படும்). நான்கு பக்கமும் சுற்றி தாழ்வாரம், அதற்கு அடுத்து கூடம். பல வீடுகளில் கூடமும் நான்கு பக்கங்கள் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் இரண்டு பக்கத்தில் மட்டும்தான் இருந்தது. வீடு வடக்கு தெற்கானது. தெற்கு பார்த்த வாசல், வடக்கில் கொல்லை. கூடம் கிழக்கிலும் மேற்கிலும்தான். கூடத்தின் இரு முனைகளிலும் அறைகள். வட எல்லைகளில் அச்சாக இரு பக்கமும் சமையலறை போன்ற பகுதி. அறை என்றால் இரட்டை அறையானது. சமையல் அறைக்கு முன்பகுதி அறைக்கு காமிரா அறை என்று பெயர். அங்குதான் அரிசி டின் இருக்கும். பெரிய இரும்பு டின். அங்குதான் ஆராதனைக்குரிய பெருமாள் விக்கிரகங்களும் சாளக்ராமங்களும் இருக்கும்.

வாசலின் இரு பக்கமும் திண்ணைகள் உண்டு. எங்கள் வீட்டில் ஒரு பக்கம் திண்ணை சற்று பெரிதாகவும், மற்றொரு பக்கம் திண்ணை சிறிதாகவும் ஆக்கப்பட்டிருந்தது. திண்ணை இழந்திருந்த பகுதி ஒரு அறையாக உருவெடுத்திருந்தது.

வாசலிலிருந்து பார்த்தால் முற்றமும், தொடர்ந்து தாழ்வாரப் பகுதியும், பிறகு ரேழி தாண்டி கொல்லையும், கொல்லையில் இருக்கும் கிணறும் நேராகத் தெரியும். கிணறைச் சுற்றி கொஞ்சமாக தரையில் சிமெண்டு போடப்பட்டிருக்கும். சுற்றி மண் தரையில் வாழை, தென்னை மரங்கள், சில பல செடிகள், அதில் முக்கியமாக செம்பருத்திச் செடி, பின் மதில் சுவர்கள். ஒரு கோடியில் கழிவறை இருக்கும். கழிவறைக்கு வந்து மலத்தை எடுத்துச் செல்ல துப்புறவுப் பணிப்பெண்கள் வர கொல்லைக் கதவு ஒன்றும் இருக்கும். எங்கள் வீடு தெருக்கோடி என்பதால் கொல்லைக் கதவு மேற்குச் சுவரில் இருந்தது.

ஆரம்பத்தில் திண்ணைப் பகுதியை உள்ளடக்கி வெளிக் கதவுகள் எவையும் கிடையாது. திண்ணை தாண்டிதான் கதவே. பின்னர்தான் திண்ணையை உடைத்து வெளியேயும் கேட் போட்டோம்.

கூடம், தாழ்வாரம், அறைகள் அனைத்தின்மேலும் ஓடுகள்தான். ஓடுகள் முற்றத்தில் வந்து சரியும். அதேபோல, வெளிச்சுவர்கள் மேலாகவும் சரியும். எனவே நடுவே சுமாராக, கூடமும் தாழ்வாரமும் பிரியும் இடத்தில்தான் மிக உயரமாக எழும்பி இருக்கும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் நான்கு மூலைகளிலிருந்தும் நீர் ஒரு பரவளையப் பாதையில் வந்து கொட்டும். மழை மிகவும் கடுமையாக இருக்கும்போது மூலை விட்டத்தின் இரு பக்கங்களிலிருந்தும் கொட்டும் தாரைகள் ஒன்றை ஒன்று தொடும் அளவுக்குப் போய்விடும்.

வீட்டின் கூரை ஓடுகளால் ஆனது. கூரையைத் தாங்குவது மரத்தால் ஆன தூண்களும் உத்தரங்களும். உத்தரங்களுக்குக் குறுக்கே மர ரீப்பர்கள் அடிக்கப்பட்டு, அவற்றின்மீதுதான் ஓடுகள் உட்காரவைக்கப்படும். கடுமையான புயல் வீசும்போது ஓடுகள் அப்படியே பறந்துவிடும். நல்ல மழை பெய்தால், என்னதான் ஓடுகள் நெருக்கமாக இருந்தாலும் தண்ணீர் ஒழுக ஆரம்பித்துவிடும்.

சுவர்கள் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையே. செங்கற்களை காரையில்தான் பதிய வைப்பார்கள். மேல் பூச்சுக்கு மட்டும்தான் சிமெண்ட். ஆரம்பகாலத்தில் இவை அனைத்தும் களிமண்ணாலேயே பிணைக்கப்பட்டு, சுவரில் பூசுவதும் களிமண்ணாகவே இருந்திருக்கவேண்டும். பின்னர் காரை (சுண்ணாம்பு) பயன்பட்டிருக்கவேண்டும். பிறகு சிமெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்துள்ளது. நான் வசித்த வீட்டில் தரையும் சுவர் மேல்பூச்சும் சிமெண்ட்தான். தரை வழவழ என்று இருக்காது. சொரசொரப்பாகவே இருக்கும். கீழே விழுந்து முட்டியைப் பேர்த்துக்கொண்டால் அப்படியே வழட்டிவிடும். சில பகுதிகளில் சிமெண்ட் பால் ஊற்றி, அதில் சில வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து பூசியிருப்பார்கள். அங்கே தண்ணீர் தரையில் சிந்தியிருந்தால் வழுக்கும்.

வாசல்கள் எல்லாமே மரத்தால் ஆனவை. சிக்கல் என்னவென்றால் முழுவதுமான ஃபிரேமும் மரத்தால் ஆனதால், தரையில் நிலப்படி இருக்கும். சிறுவர்கள் தடபுடவென்று ஓடமுடியாது. நன்கு தடுக்கிவிடும். நான் ஒருமுறை கீழே விழுந்து தாவாங்கட்டையைப் பேர்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பல் அடிவாங்கியது, இன்றும் தனி வண்ணத்தில் தெரிகிறது. தாடையிலும் ஒரு பெரிய தழும்பு உண்டு.

அதேபோல வாசலை ஏதோ நாலடிக்காரர்கள் உள்ளே நுழைவதற்காக மட்டுமே வைத்திருப்பார்கள். குனிந்துதான் உள்ளே நுழையவேண்டும். அதிலும் நான் வளர்ந்தபின் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக, நான் வசிக்கும்போதே என் வீட்டில் பல மாற்றங்கள் நிகழந்தன. ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு வேறு கட்டடத்தைக் கட்டவில்லை. அந்த அளவுக்கு என் தந்தை சம்பாதிக்கவில்லை. கொல்லைத் தோட்டத்தில் ஒரு பகுதி அழிக்கப்பட்டு, சமையல்கட்டுடன் சேர்க்கப்படு, என் தாய்க்குப் பிடித்தமான அளவுக்கு சமையலறை விரிவாக்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட கேஸ் அடுப்பு, பின்னர் வந்துசேர்ந்த கிரைண்டர், மிக்ஸி (ஆனால் நாகபட்டினத்தில் நாங்கள் இருந்தவரை கடைசிவரை ரெஃப்ரிஜிரேட்டர் வரவேயில்லை) ஆகியவற்றுக்கும், அப்போதும் தேவைப்பட்ட அம்மி, கல்லுரல் ஆகியவையும் அந்தச் சமையல் அறையில் நுழைந்தன. அதற்குமுன் இருந்த சமையலறையில் தேள்கள் குடித்தனம் இருக்கும். ஓடுகள் விறகடுப்பின், கரி அடுப்பின் கரியால் அண்டக்காக்கை நிறத்தில் இருக்கும். ஆனால் சமையலறை விரிவாக்கத்தின்போது அந்த இடம் ‘ஒட்டப்பட்டது’.

ஒட்டு என்றால் நடுவில் உத்தரங்கள் போட்டு, குறுக்காக பல மரக்கட்டைகளை வைத்து, ஒரு ஓரத்திலிருந்து நன்கு சலித்த சுண்ணாம்பில் ஒட்டப்பட்ட பட்டையான சுட்ட ஓடுகளை ஒட்டிக்கொண்டே வருவார்கள். பிறகு மேலும் கீழும் சிமெண்ட் பூசப்படும். நாங்கள் இருந்தவரை நாகப்பட்டினம் வீட்டில் ரீஇன்ஃபோர்ஸ்ட் காங்கிரீட் வரவில்லை. இப்போதெல்லாம் தூண்களும் காங்கிரீட், உத்தரங்களும் காங்கிரீட். செங்கற்களுக்கு இடையில் சிமெண்ட், சுவரின் மேல்பூச்சு சிமெண்ட். தரையில் டைல்ஸ் அல்லது கிரானைட் அல்லது மார்பிள் அல்லவா? அப்போதெல்லாம் மொசாயிக் என்ற தொழில்நுட்பம் நுழைந்திருந்தது. தரையில் எதையோ பதித்து, வழவழ என்று இழைத்துக்கொட்டுவார்கள். பிறகுதான் அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆனது.

வீட்டில் வேலை நடக்கும்போதெல்லாம், தலைமைக் கொத்தனார், தலைமைத் தச்சர், அவர்கள்கீழே வேலை செய்யும் பல வேலையாட்கள், சித்தாள்கள், இடை இடையே அவர்கள் வேலையை நிறுத்திவிட்டு, ஒருவரை அனுப்பி வாங்கிக்கொண்டுவந்து தின்னும் வடை, குடிக்கும் டீ, ஒதுங்கிச் சென்று அடித்துவிட்டுவரும் பீடி என்று ஜெயகாந்தன் கதைப் பின்னணியில் இருக்கும். தச்சர்கள் வேண்டிய உத்தரங்களை, ரீப்பர்களை, தூண்களை உருவாக்குவார்கள். நமக்கு வேண்டும் என்றால் உட்கார நாற்காலிகள், மேஜைகளையும் செய்துதருவார்கள். அலமாரிகளைச் செய்வார்கள், ஜன்னல்களுக்கான கதவுகளைச் செய்வார்கள். பிறகுதான் காங்கிரீட் ஸ்லாப்கள் அமைக்கப்பட்டு ராட்சச ஸ்டோரேஜ் இடங்கள் உருவாக ஆரம்பித்தன. தச்சர்கள் காணாமல் போக ஆரம்பித்தனர்.

நாகபட்டினத்தின் உப்புத் தண்ணீரைக் கொண்டு செய்த சுவர்களும் தரைகளும் மழைக்காலத்தில் ஊற ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் வீடு கட்ட நல்ல தண்ணீர் கொண்டுவர வழியே இல்லை. இப்போது ஒருவேளை சாத்தியமோ என்னவோ. மழைக்காலத்தில் தரையில் சாக்குகளை விரித்துவைப்பது ஒன்றுதான் வழி. மேலிருந்து ஒழுகும் நீரையும் எடுத்துக்கொள்ளும், கீழிருந்து ஊறும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.

மார்கழி மாதத்தில் என்னவோ பெரிய குளிர் என்று என் தந்தை சாக்குப் படுதா கொண்டு முற்றத்தின் திறந்த வெளியை எல்லாம் மறைப்பார்.

எந்தக் கோடையிலும் எங்களுக்கு மின்விசிறி தேவைப்பட்டதே கிடையாது. நாங்கள் பொதுவாக கூடத்திலோ தாழ்வாரத்திலோதான் படுத்திருப்போம். மிகக் கடுமையான கோடையில் விசிறி கொண்டு விசிறிக்கொண்டே தூங்கவேண்டும். ஆனால் தூக்கம் வந்தபின் விசிறிக்குத் தேவை கிடையாது. சிறு குழந்தைமுதல் கிழவர்கள்வரை அந்தக் கோடைக்குக் கஷ்டப்பட்டதாக நினைவில்லை. இப்போது ஏசி இல்லாமல் முடிவதில்லை.

***

ஏன் இந்தப் பெரிய நாஸ்டால்ஜிக் கட்டுரை? தொடர்கிறேன்.

Tuesday, August 24, 2010

பூணூல்

பார்ப்பானுக்குத்தான் பூணூலா? இல்லை பிறரும் அணியலாம் என்று சொல்கிறார்கள். எத்தனை பார்ப்பனர்கள் இன்று பூணூல் அணிகிறார்கள் என்பது வேறு விஷயம்.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் பலவகைப் பூணூல்களைப் பார்க்கலாம். இவை நூலால் செய்யப்பட்டவை, துணியால் செய்யப்பட்டவை, ருத்ராக்‌ஷ மாலையால் ஆனவை என மூன்று வகை.

சிலர் அணிந்துள்ள பூணூல் உபவீதம் என்ற வகையில் இடது தோள் மேலிருந்து வலது இடுப்பில், கைக்குக் கீழாகச் செல்லும். பிறர் அணிந்துள்ள பூணூல் நிவீதம் என்ற வகையில், இடது தோள் மேலிருந்து வலது கைக்கு மேலாக இருக்குமாறு இருக்கும். சிலர் சன்னவீரம் என்ற வகையில் இரு பூணூல்களை இரண்டு தோளிலிருந்தும் மாறு கையை நோக்கிச் செல்லுமாறு அணிந்திருப்பார்கள்.

தேவர்கள், அசுரர்கள், கடவுள்கள், ராஜாக்கள் என அனைத்து ஆண்களும் பூணூல் அணிந்துள்ளனர். சில மனிதர்களுக்குப் பூணூல் இல்லை என்பதையும் இந்தச் சிற்பங்களில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

இப்போது சில படங்களைப் பார்ப்போம்.

இடது பக்கம் நீங்கள் பார்ப்பது ‘அர்ஜுனன் தபசு’ என்று சொல்லப்படும் பெருந்தவ வெளிப்புற சிற்பத் தொகுதியில் காணப்படும் சிவனின் சிற்பம். இவர் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். உபவீதமாக அணிந்துள்ளார். அருகில் உள்ள பூதகணங்கள் பூணூல் அணியவில்லை.

இந்தக் காட்சியில் அர்ஜுனன் தவம் செய்வதும், சிவன் காட்சி அளித்து அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தைத் தருவதும் காட்டப்பட்டுள்ளது. சிவன் கையில் வேல் போலத் தோற்றம் அளிக்கும் ஆயுதம்தான் பாசுபத அஸ்திரம்.

கடவுளைப் பார்த்தோம். அசுரர்கள் எப்படி? மகிஷாசுரனை எடுத்துக்கொள்வோம். தேவியுடன் போரிடும் மகிஷனின் சிற்பத்தை வலப்புறம் பார்க்கலாம். மகிஷனும் கனமான துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளான். மகிஷனுக்குமேல் உள்ள ஓர் அசுரனும் வஸ்திரத்தால் ஆன பூணூலை அணிந்திருப்பதை உங்களால் பார்க்கமுடியும்.
ஆக, கடவுள்களுக்கு உண்டு; அசுரர்களுக்கு உண்டு. தேவகணங்களுக்கு இல்லையா என்றால் பூணூல் அணிந்த கணங்களும் உண்டு, அணியாத கணங்களும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். பூணூல் அணிந்துள்ள கணம் ஒன்றின் படத்தை வலப்பக்கத்தில் காணலாம். வராக மண்டபத்தில் துர்கையின் அருகில் காணப்படும் இந்த கணம், துணியால் ஆன பூணூலை அணிந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

எத்தனை பூணூல்? அதில் என்ன கணக்கு என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு, கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள். இரண்டுமே கோவர்தன சிற்பத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை.


மேலே, இடப்புறம் உள்ளது பலராமன். பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் இடையனைக் கட்டி அணைத்து பயத்தைப் போக்குவிக்கும் நிலையில் உள்ள பலராமன் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். அருகே, ஒரு கையால் மலையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் கிருஷ்ணன் அணிந்திருப்பது இரண்டு பூணூல்கள். இரண்டுமே துணியால் ஆனவை.

ஆனால், பலராமன் அணைத்துக்கொண்டு நிற்கும் இடையன் பூணூல் அணிவதில்லை!

சரியான கிராஸ் பெல்ட் என்றால் அது சுப்ரமணியர்தான். திரிமூர்த்தி மண்டபத்தில் பிரம்ம சாஸ்தாவாக நிற்கும் சுப்ரமணியர் அணிந்திருக்கும் பூணூலை இடப்பக்கம் காணலாம். இந்தப் பூணூல் ருத்ராக்‌ஷ மணிகளால் ஆனது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று செல்லுமாறு அணியப்பட்டுள்ளது.

பொதுவாக வெகு சிலரே இப்படி அணிந்திருக்கிறார்கள்.


நூலால் ஆன பூணூலை யாருமே அணிவதில்லையா? நிவீதம் முறையில் யாரும் அணிவதில்லையா என்றால், அதற்கான் ஒரு முழுமையான உதாரணம் இந்தக் காட்சி. அனந்தசயனக் காட்சி.

இங்கே படுத்திருக்கும் விஷ்ணு அணிந்திருப்பது நிவீதமாக துணியால் ஆன பூணூல். கீழே இருக்கும் ஆயுத புருஷர்களில் வலப்பக்கம் தெரிபவர் நூலால் ஆன பூணூலை அணிந்துள்ளார் - நிவீதம். கீழே இடப்பக்கம் உள்ளவர் ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூலை நிவீதமாக அணிந்துள்ளார். மேலே உள்ள கணங்களில் இடப்பக்கம் உள்ள கணம் துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளது. அருகில் உள்ள பெண் போன்ற உருவம் பூணூல் ஏதும் அணிந்தாற்போலத் தெரியவில்லை.

கவனமாகப் பார்த்தால் மது, கைடபன் இருவரில் ஒருவர் முதுகில் பூணூல் ஓடுவதைப் பார்க்கலாம். எனவே மற்றவரும் பூணூல் அணிந்திருக்கத்தான் வேண்டும் என்பதை யூகிக்கலாம்.

Sunday, August 22, 2010

சினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ

நேற்று மாலை தக்கர் பாபா வித்யாலயா, வினோபா அரங்கில், கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம் புத்தகத்தின் அறிமுக விழா நடைபெற்றது. அதன் ஒளிப்பதிவு இங்கே.

ஆள்கள் தேவை!

தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுத அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிமாற்ற விரும்புகிறீர்களா? எங்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழிபெயர்ப்புகள்

என் புத்தகங்கள்

  
  
  
  

Buy NHM BOOKS on

Amazon

Kizhakku Nalam Varam

துறைகள்