Wednesday, March 09, 2005

அருண் வைத்யநாதனின் குறும்படங்கள்

அருண் வைத்யநாதன்நேற்று (8 மார்ச் 2004) அருண் வைத்யநாதன் தான் எடுத்த சில குறும்படங்களை சென்னை ஸ்ரீதேவி பிரிவ்யூ தியேட்டரில் திரையிட்டுக் காண்பித்தார்.

நியூ யார்க் ஃபில்ம் அகாடெமியில் தான் படித்த போது வகுப்புப் பயிற்சிக்காக எடுத்த நான்கு படங்கள், அதன் பின்னர் எடுத்த இரண்டு படங்கள் என்று மொத்தமாக ஆறு துண்டுப் படங்கள் காண்பிக்கப்பட்டன.

சென்னையில் இருக்கும் தமிழ்/ஆங்கில வலைப்பதிவர்கள், அருணின் உறவினர்கள், சில பத்திரிகைக்காரர்கள், அருணின் நண்பர்கள் என்று சுமார் 30 பேர்கள் வந்திருப்போம் என நினைக்கிறேன்.

அருணின் வலைத்தளத்தில் இந்தப் படங்கள் பற்றி நிறைய இருக்கும். எனக்கு கடைசியாகக் காண்பிக்கப்பட்ட "As you wish...", "Stinking Cigar" என்னும் இரண்டு படங்களும் பிடித்திருந்தன. முழுநீளத் திரைப்படம் ஒரு நாவல் போன்றது என்றால் இந்தக் குறும்படங்கள் - 3-5 நிமிடங்களே ஆனாலும் - நல்ல சிறுகதைகளைப் போன்றவை. "As you wish..." களம் கருணைக்கொலையை முன்வைப்பது. கதையில் புதுமை ஒன்றும் இல்லையென்றாலும் படத்தை எடுத்திருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. நான் ஒரு சினிமா விமர்சகன் அல்லன். எனக்கு சினிமாவின் இலக்கணங்கள் தெரியாது. எனவே அதை விடுத்து பார்வையாளனாக எனக்குத் தோன்றிய அனுபவங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடியும்.

வயதான கணவன், மனைவி. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை, சாகக் கிடக்கிறாள். அவளுக்கு மருத்துவமனை செல்வதில் விருப்பமில்லை. சிறு வயதில் அவனது புல்லாங்குழல் இசைக்கு மயங்கி அவள் அவனைக் காதலித்து மணம் புரிந்திருக்கிறாள். அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை. இறக்கும் தருவாயில் அவனைப் புல்லாங்குழல் இசைக்கச் சொல்கிறாள். அந்த இசையின் ஊடாக இருவரும் தம் வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களைப் பார்க்கிறார்கள். இசை முடிந்ததும், தன் வலியிலிருந்து மொத்தமாக நிவாரணம் பெற தன் கணவனிடம் தன் சுவாசத்தை முடிக்குமாறு வேண்டுகோள் விடுகிறாள். கணவன் தலையணையை அவள் முகத்தில் அழுத்தி அவள் உயிர் பிரிய வகை செய்கிறான். அத்துடன் படம் முடிகிறது.

இந்தப் படம் சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ எந்தக் கேள்வியையும் எழுப்பி அதனைப் பரிசீலனை செய்வதில்லை. பார்க்கும்போது எனக்குத் தொண்டையை அடைத்தது. அந்த அளவில் - என்னளவில் - இந்தக் குறும்படம் வெற்றி பெற்றது என்றுதான் என்னால் சொல்லமுடியும்.

இதைப்போலவே "Stinking Cigar." பதின்ம வயதுள்ள பெண். தாயும் தந்தையும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். பெண் தாயுடன் வாழ்கின்றாள். தாய் பெண் மீது அதிக கவனம் செலுத்தாமல் தன் காதலனுடன் ஊர் சுற்றுகிறாள். குடும்பம் என்னும் கட்டமைப்பின் மீது பெண்ணுக்கு முற்றிலுமாக நம்பிக்கை போய்விடுகிறது. ஒரு நாள் வீட்டுக்கு வரும் வழியில் கீழே கிடக்கும் சுருட்டு ஒன்றைப் பற்றவைத்துப் புகைத்து, புகையிலையை உடம்பெங்கும் தடவிக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள். இச்செய்கையின் மூலம் தாய் தன்னைக் கண்டிப்பாள், பின் தான் தன் மகளைக் கவனிக்காததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று தன்னையே கடிந்துகொண்டு மகளின் மீது கவனத்தையும் அன்பையும் செலுத்துவாள் என்பது பெண்ணின் நினைப்பு. ஆனால் அந்த நினைப்புக்கு மாறாக தாய் வீடுவந்த பெண்ணை சிறிதும் கண்டுகொள்ளாமல், மகளை வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு காதலனுடன் வெளியே செல்கிறாள்.

இனி தனக்குதவி தானேதான் என்று முடிவு செய்யும் வண்ணமாக பெண் வாயை லிஸ்டரின் வைத்துக் கொப்பளித்து சுருட்டின் சுவையைப் போக்குகிறாள். படம் அத்துடன் முடிவடைகிறது.

தொழில்நுட்ப ரீதியில் சில குறைகள் இருப்பதை அருணே சுட்டிக்காட்டினார். கேள்வி பதில்களின் போது பலரும் சில குறைபாடுகள் பற்றிப் பேசினர்.

குறும்படங்கள் சிறு சம்பவத்தை அழகாக வெளிக்கொணர ஒரு படைப்பு சாதனம் என்பதை அருண் தெளிவாகக் காட்டியுள்ளார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் செலவு அதிகமாகும் என்பதையும் அருண் விளக்க்கினார். அனைவருக்கும் சம்பளம் கொடுத்துச் செய்தால் ஒரு 5 நிமிடக் குறும்படம் எடுக்க $7,000 வரை செலவாகும் என்றும் தான் எடுக்கும் படங்கள் $1,500-$2,000 ஆகின்றன என்றும் சொன்னார். இத்தனை செலவு செய்து எடுத்தாலும் இது ஆத்மார்த்த திருப்திக்குத்தான். போட்ட பணம் கிடைக்க சந்தையென்று ஏதும் இப்பொழுதைக்குக் கிடையாது. Triggerstreet என்னும் தளத்தில் அருணின் படங்களும் பிறர் எடுத்துள்ள படங்களும் கிடைக்கின்றன.

1 comment:

  1. நன்றி பத்ரி. நானும் அவர் படங்களைப் பார்க்க ஆவல் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்ட வசமாக சென்னையை விட்டு சீக்கிரமே ஊருக்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது. பரவாயில்லை உங்கள் பதிவின் வழி அவர் படங்கள் எப்படியிருந்திருக்குமென கணிக்க முடிகிறது.

    ReplyDelete