Wednesday, March 16, 2005

புத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்!

நமக்கெல்லாம் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் கவலை! சினிமாப் படம் என்றால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஓடவேண்டும். எத்தனை ரூபாய் டிக்கெட் என்றாலும் பரவாயில்லை. நூறு நாள் 'கியூ'வில் தவங்கிடந்தாவது, அல்லது 'பிளாக்' மார்க்கெட்டிலாவது டிக்கெட் வாங்கியாக வேண்டும். ஏனோ புத்தகங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் ஏற்படவில்லை. தமிழகத்தின் மக்கட்தொகை நாலு கோடியே பதினோரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நூற்று அறுபத்தெட்டு (4,11,99,168). அதில் படித்தவர்கள் 1,62,56,393. அதாவது ஏறத்தாழ 40 சதவிகிதம். கல்லூரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், நூலகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும், கோவில்களுக்கும் குறைச்சல் இல்லை. சரி, நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்திரிகைகள் விற்பனையாகின்றன. போகட்டும், நல்ல செய்திதான். ஆனால் எஞ்சிய எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எங்கே போனார்கள்? அவர்கள் படிப்பதே இல்லையா? படிப்பதில் அக்கறை இல்லையா, புத்தகம் வாங்கப் பணம் இல்லையா? இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் அல்லது கணித்தால் பதிப்பாளர்களின் நிலை எங்கே என்பது விளங்கும். பசுமைப் புரட்சி, தொழில் புரட்சி, அந்தப் புரட்சி, இந்தப் புரட்சி என்று புரட்சிக்கோஷங்களை எழுப்புகிறோம்; ஆனால் வாசிப்புப் புரட்சிதான் ஏற்படவில்லை.

சென்ற மாதம் மிஜோரமிற்குச் சென்றிருந்தேன். மிஜோரம் பங்களாதேசத்திற்கும், பர்மாவுக்கும் இடையே, வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்ற ஒரு மலை ராஜ்யம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மொத்த மக்கள் தொகை 3,50,000. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 56 சதவிகிதம். அவர்கள் மொழி எழுத்து வடிவம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் புத்தக வெளியீடு எனக்குப் பெருவியப்பை அளித்தது. ஒரே பதிப்பில் ஒரு புத்தகம் எண்ணாயிரம் பிரதிகளுடன் வெளிவருகின்றது. ஏழாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டு முடிவதற்குள் தீர்ந்துவிடுகின்றன. ஆகவே அந்தப் பதிப்பகம் 'லெட்டர் பிரஸி'லிருந்து 'ஆப்செட்' பிரஸுக்கு மாறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது! அந்த மக்களின் பொருளாதாரமும், வளர்ச்சியும் நமக்கிருப்பதில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. நூல் படிக்கும் ஆர்வம் அந்தச் சின்னஞ்சிறு ராஜ்யத்தில் ஓங்கி நிற்கின்றது!
---- தி.பாக்கியமுத்து. "தமிழ்ப் புத்தக வெளியீடும், பத்திரிகைகளும்" என்னும் கட்டுரையிலிருந்து. "வரும் பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக வெளியீடு", தொகுப்பாசிரியர்: ஆதவன் சுந்தரம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புதுடில்லி, 1978. நேஷனல் புக் டிரஸ்ட் சென்னையில் நவம்பர் 26, 27, 28, 1977-ல் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

தி. பாக்கியமுத்து பற்றி: பதிப்புச் செயலாளர், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை. பிறந்தது 20-6-1923. பி.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (தமிழ்); பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் 1949-1968 பணியாற்றினார். 1967-ல் உலக சர்ச்சுகள் கவுன்சிலின் உதவிப்பணம் பெற்று அமெரிக்கா சென்று கொலம்பியா, நியூ யார்க் பல்கலைக் கழகங்களில் நாடகம் எழுதுவதிலும் பதிப்புக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்; தமிழில் சில நாடகங்களை இயற்றியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து கிறிஸ்துவ நூல்களை மொழி பெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய நான்கு தொகுப்புகளின் பதிப்பாசிரியர்.

4 comments:

  1. இந்தப் பதிவு 2004-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் வலைப்பதிவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. badri,

    I am searching for this book for the last three years, where did you get it ? If its not available in print now, may be I can take a xerox of the rare copy you seem to be having :)

    N. Chokkan,
    Bangalore.

    ReplyDelete
  3. தமிழ் மக்களின் படிப்பார்வம் பற்றி பத்ரி கவலைக்கொள்வது கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்துவிட்ட காரணத்தினாலா? அல்லது கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்ததே அந்த கவலையின் காரணமாகவா?

    ReplyDelete
  4. சொக்கன்: அற்புதமான தொகுப்பு இது. 1978-ல் இந்த விஷயத்தில் ஒரு கருத்தரங்கு நடத்தி, அதைத்தொகுத்து வெளியிடத் தோன்றியதே! அவரைப் பாராட்ட வேண்டும்.

    தனி அஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    பெயர் குறிப்பிடாத நண்பரே... எனக்குப் பல கவலைகள் உண்டு. அதில் மக்கள் புத்தகங்களைப் படிக்காமல் இருப்பதும் ஒரு கவலை. மற்ற சில கவலைகள்... மக்கள் படிக்கக்கூடிய மாதிரியான தரமான புத்தகங்களை வெளியிட நிறையப் பதிப்பாளர்கள் வராமல் இருப்பது. பதிப்புத் துறைக்குத் தேவையான முதலீடுகள் அதிகம் வராதிருப்பது. நல்ல திறமையுள்ள பலர் பதிப்புத் துறைக்கு வராமலிருப்பது.

    ReplyDelete