Monday, February 27, 2006

நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து

தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ஸ்டேட் போர்ட் மாணவர்களுக்கு மட்டும் நீக்கி பிற போர்ட் மாணவர்களுக்கு மட்டும் வைக்கும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் செல்லாது என்று இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்குப் பின்னணியில் மூன்று விஷயங்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் எடுத்து வைத்துள்ளனர். (தொலைக்காட்சிச் செய்தியிலிருந்து கேட்டதன்மூலம் எழுதுவது; அதனால் சில தவறுகள் இருக்கலாம்.)

1. இந்த மாதிரியான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்துக்குக் கிடையாது.
2. மேற்படிச் சட்டம் மெடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா (MCI), ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிகல் எஜுகேஷன் (AICTE) ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு எதிரானது.
3. மேற்படிச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'அனைத்து மக்களின் சம உரிமைக்கு' எதிரானது.

-*-

திருப்பத்தூருக்கு அருகில் உள்ள மிட்டூர் என்ற கிராமத்தில் 'மனம் மலரட்டும்' என்ற அறக்கட்டளை அமைப்பை சரவணன் என்ற நண்பர் நடத்தி வருகிறார். சரவணனும் அவரது நண்பர்களும் கிராமப்புறங்களில் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் துறை நுழைவுத் தேர்வுப் பயிற்சியினை இலவசமாகச் அளித்து வருகின்றனர்.

நேற்று இந்த மாணவர்களைச் சந்திக்க நான் திருப்பத்தூர் சென்றிருந்தேன். 44 மாணவர்கள். பாதிக்குப் பாதி (22) பெண்கள். திருப்பத்தூரில் YMCA மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. இந்த மாணவர்கள் தற்போது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் நுழைவுத் தேர்வை உடைப்பதற்கான பயிற்சிகள் நடத்தும் பள்ளிகள் பல உள்ளன. இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் வருடத்துக்கு கிட்டத்தட்ட ரூ. 24,000 வரை கட்டுகிறார்கள். தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகிறார்கள். இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நுழைவுத் தேர்விலும் சரி, ஆண்டிறுதித் தேர்விலும் சரி - அதிக மதிப்பெண்கள் பெற்று நிச்சயமாக மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த - அதுவும் குறிப்பாக தமிழ் மீடியத்தில் படிக்கும் - மாணவர்களால் இந்த ராசிபுரம்/நாமக்கல் மாணவர்களுடனோ, அல்லது சென்னையைச் சேர்ந்த மாணவர்களுடனோ போட்டி போட முடிவதில்லை.

சரவணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்களுக்குப் பலன் இருக்கும் என்றார். ஒரு சிலராவது பொறியியல் கல்ல்லூரிகளில் சேரும் அளவுக்கு ஆண்டிறுதித் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவார்கள் என்றார். நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சி இவர்களுக்குக் குறைவு என்றும் அதுபோன்ற பயிற்சியை எந்த அரசுப் பள்ளிக்கூடங்களாலும் கொடுக்க முடியாது என்றும் சொன்னார்.

நான் பேசிக்கொண்டிருந்த 44 மாணவர்களில் 8 பேர் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்படுவதாகச் சொன்னார்கள். அதில் 6 பேர் பெண்கள். ஆனால் வெறும் 1,000 இருக்கைகளே உள்ள மருத்துவப் படிப்பில் இவர்களில் யாராவது ஒருவருக்காவது இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஓரிருவர் வர வாய்ப்புள்ளது என்றார் நண்பர் சரவணன். பொறியியல் கல்லூரிகள் நிறைய இருப்பதால், முக்கியமாக சுயநிதிக் கல்லூரிகள் இருப்பதால், இந்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் கல்விக் கட்டணம் அதிகமாகும். இந்த மாணவர்கள் அனைவரும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரப் பிரிவினர். பின் தங்கிய சமூகப் பிரிவினரும்கூட. தத்தம் கிராமங்களிலிருந்து நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக திருப்பத்தூர் வரையில் வரும் பஸ் கட்டணம்கூடக் கட்ட முடியாதவர்கள். அந்தக் கட்டணத்தையும் 'மனம் மலரட்டும்' அமைப்பே இவர்களுக்குக் கொடுக்கிறது.

ஆனால் இந்த மாணவர்களில் யாருக்கேனும் பொறியியல், மருத்துவம் இடம் கிடைத்தால் மேற்கொண்டு படிக்க ஸ்பான்சர்ஷிப் பணம் கொடுக்க அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக சரவணன் சொன்னார்.

-*-

'நுழைவுத் தேர்வு அவசியம் தேவை' என்று கொள்கையளவில் நினைப்பவன் நான். ஆனால் நேற்றைய சந்திப்புகள் என் கருத்தை நிறையவே மாற்றியுள்ளன.

10 comments:

  1. Also read the article by kalyani in Dinamani.It was published last week (friday or saturday).The issue is not just rural vs urban as
    projected by PMK and the govt.
    It is easy to find some populist
    measures like abolishing CET than finding long term solutions and
    improving the quality and access to secondary education in rural and
    semi-urban areas.Some times the cures are worse than the disease.
    abolishing CET is an example for that.
    ravi srinivas

    ReplyDelete
  2. //'நுழைவுத் தேர்வு அவசியம் தேவை' என்று கொள்கையளவில் நினைப்பவன் நான். ஆனால் நேற்றைய சந்திப்புகள் என் கருத்தை நிறையவே மாற்றியுள்ளன.
    //

    உங்கள் கருத்து மாற்றம் IIT களுக்கு நடத்தப்படும் JEE க்கும் பொருந்துமா?

    ரவி சொல்வதுபோல தலையாயப் பிரச்சினை பள்ளிக்கல்வி வழங்கப்படுவதில் இருக்கும் சீர்க்கேடுகளே. எத்தனை விதமான போர்டுகள்? எத்தனை விதமான பள்ளிகள்? எத்தனை விதமான தேர்வுகள்? பள்ளிக்கல்வியில் சீர்த்திருத்தம் செய்யும் வரை அகில இந்திய தேர்வு, மாநிலத் தேர்வு போன்ற அராஜகங்களை ஒழிக்கவேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடே. நம் நீதிமான்களின் கருத்துக்கள் எனக்கு வியப்பளிக்கவில்லை.

    ReplyDelete
  3. சுந்தரமூர்த்தி: கருத்து மாற்றம் முழுமையாக இன்னமும் நிகழவில்லை.

    குறைவான இடங்கள், நிறைய மாணவர்கள் என்றாலே போட்டி நிலவத்தான் செய்கிறது. ஏதாவது வழியில் இடங்களை நிரவ வேண்டும். அதற்கு நுழைவுத் தேர்வுதான் ஒரே வழியா, நியாயமான வழியா என்பது கேள்வி.

    முற்றுமுழுதான நியாயமான வழி அது என்று சொல்வதற்கில்லை. IIT JEE அல்லது வேறெந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும் சரி.

    ஆனால் மாற்று வழி பற்றி இப்பொழுதைக்கு முழுமையான எண்ணம் எனக்கில்லை.

    ReplyDelete
  4. What about Cancelling IAS.....

    1. Not everyone is able to write that
    2. Of the 500 candidates selected, less than 5 are from villages
    3. IAS Coaching classes are costly

    In short, you will see that the arguments told against ENtrance are the same points that can be applied to Cancelling the entire exam process

    ReplyDelete
  5. In short we have 4 gross divisions
    1. City vs Village
    2. Poor vs Rich
    3. Educated Parents vs Illiterate Parents
    4. Forward Caste vs Backward Caste

    In all 4 divisions, you can see that there is IMPROVED PERFORMANCE IN BOTH THEORY AS WELL AS ENTRANCE

    Now come to the most important point.

    Which is more difficult
    1. TO train to student to get 48 out of 50 in entrance
    2. TO train a student to get 200 out of 200 in theory


    Well…. I do not know what you will answer, but from my personal experience, my marks in Entrance was 49.17 out of 50 where as my theory mark was 196.

    The BITTER Truth is that getting 48 out of 50 in Entrance is MUCH EASIER than getting 200 out of 200 in Theory.

    If you cannot train village students to get 48 out of 50 in entrance and therefore want to abolish the entrance, how are you going to make them get 200 out of 200.

    Remember that there are about 1000 candidates (out of which 998 will be from Chennai, Tirunelveli and namakkal ) with centum in theory.

    If there are NO entrances, obviously, they alone will be getting ALL THE MEDICAL SEATS, because the intense coaching, training, 5-tests-every-week-schedule are possible only in cities and “special schools” and not in village schools.

    Village students, inspite of their hard word DO NOT USUALLY GET CENTUM because of poor handwriting and poor presentation – factors which play havoc in theory where as these are not needed in entrance.

    In short, the factors I have mentioned above for common for ALL Exams (including IAS) and not just entrance

    ReplyDelete
  6. when we want to make everyone engineer/doctor ..we will be thinking only one thing..to make things easier.Supply (of engineering seats) is more ..so educational business is down and there comes political interests.

    ReplyDelete
  7. பத்ரி,
    /ஆனால் மாற்று வழி பற்றி இப்பொழுதைக்கு முழுமையான எண்ணம் எனக்கில்லை/

    மாநில அல்லது மாவட்ட அளவில் பள்ளி இறுதித் தேர்வு, அகில இந்திய அளவில் தரப்படுத்திய தேர்வு என ஒரு மாணவர் இரண்டு முறை தேர்வு எழுதினால் மட்டும் போதும். மாநில போர்ட் தேர்வுகள் இப்போதுள்ளது போல நடத்தாலாம். தரப்படுத்தப்பட்ட தேர்வுகள்
    1. ஒரு இந்திய மொழி, 2. ஆங்கிலம், 3. அலசல் திறமை, 4. சிறப்புப்பாடங்கள் (அவரவர் கல்விப்பின்னணிக்கும், அடுத்து என்ன படிப்பு படிக்க விழைகிறார் என்பதற்கும் தகுந்தமாதிரி 3 முதல் ஐந்து பாடங்கள் வரை) என்று நான்கு பகுதிகளில் நடத்தலாம். பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண்களும், இந்த தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்களும் எல்லா கல்வி நிறுவனங்களின் (அரசு மற்றும் தனியார்) அனுமதிக்கும் கட்டாயமாக்கலாம். இதை ஐஐடி முதற்கொண்டு ஊர் பேர் தெரியாத தனியார் கல்லூரி வரை அனைத்துக்குமே பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்கொண்டு அரசு/தனியார் வகுத்துக்கொண்ட கொள்கைகள்படி, மாணவரின் சமூகப்பின்னணி, குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, இதர திறமைகள் போன்றவற்றிற்கும் புள்ளிகள் அளித்து மொத்த கூட்டுத் தொகையின் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம். அதைவிட்டு ஐஐடிக்கு ஒரு தேர்வு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேர்வு, தனியார் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வு என்று 16-17 வயது மாணவர்களை வாட்டியெடுக்கத் தேவையில்லை. அதுவும் இந்த நாடகங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதிரி நடத்தப்பட்டு அரசு, கல்லூரிகள், கோர்ட்டு என்று எல்லோரும் சேர்ந்து மாணவர்களைப் பந்தாடுவது பரிதாபமாக இருக்கிறது.

    ReplyDelete
  8. கிராமப்புறங்களிலிருந்து தொழிற்கல்லூரிகளுக்கு வருவது கடினம் என்று சொல்லப்படுவது குறித்த (மருத்துவக்கல்லூரிகள் என்று பார்க்காமல், தொழிற்கல்லூரிகள் என்று பொதுவில் பார்த்தால்) எண்ணிக்கை/சதவிகிதம் ரீதியான தகவல்கள் இருப்பின் அறியத்தாருங்கள். மருத்துவத்துக்கு இருக்கும் 1000 இடங்களின் அடிப்படையில் இதை அனைத்துக்கும் பொருத்தி பொத்தாம்பொதுவாகச் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது - பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடப்பதை இந்தப் பின்னணியில் எப்படிப் புரிந்துகொள்வதென்றும் தெரியவில்லை - நல்ல கல்லூரிகளுக்குச் செல்லத்தான் மாணவர்கள் விரும்புவார்கள் என்பதையும் தாண்டி. என்னைப் பொறுத்தவரை, கிராமப்புற மாணவர்களுக்கு இடம் கிடைப்பது சிரமமாயிருக்கக்கூடியது பொருளாதார வசதியில்லாததாலும், சரியான வழிகாட்டல் இல்லாததாலும்தான் - திறமை இல்லாததனால் அல்ல. அதைச் சரிசெய்ய முயற்சிக்கவேண்டுமே தவிர, நுழைவுத்தேர்வை ரத்துசெய்வது போன்ற பொத்தாம்பொதுவான விஷயங்களில் இறங்கினால், கடைசியில் General Knowledge கேள்விகளை மட்டுமாவது தவிர்க்கலாம் - ஏனெனில் கிராமங்களில் தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற வசதிகள் நகரத்தைப்போல இல்லை என்ற ரீதியில் போய்த்தான் நிற்கும். அப்போதைக்கப்போது ஓட்டையை அடைப்பது நீண்ட காலம் உதவாது.

    ReplyDelete
  9. //Dr. Bruno: Come on..... grow up....In my opinion, such generalizations are simply absurd, .//

    நான் கூறியது absurdஆ அல்லது validஆ என்பது இன்னும் 2 மாதங்களில் தெரிந்துவிடும்

    ReplyDelete
  10. //General Knowledge கேள்விகளை மட்டுமாவது தவிர்க்கலாம் - ஏனெனில் கிராமங்களில் தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற வசதிகள் நகரத்தைப்போல இல்லை என்ற ரீதியில் போய்த்தான் நிற்கும்.//

    நான் TNPSC நேர்முக தேர்விற்கு பயிற்சி அளித்து உள்ளேன். I can very well tell that Guys from Chennai had very poor general Knowledge compared to students from other places. The only General Knowledge that was found in abundance from Chennai Students are related to Cricket and Cinema

    ReplyDelete