Wednesday, May 17, 2006

மேலவையின் தேவை?

ஒவ்வோர் ஆட்சி மாற்றத்தின்போதும் மேலவை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் வருகிறது. எம்ஜிஆர் மேலவையை இழுத்து மூடியதிலிருந்து என்னவெல்லாம் நடந்துள்ளன என்று தினமணி விவரிக்கிறது. கருணாநிதியின் கடந்த இரண்டு ஆட்சியிலும் மேலவையைக் கொண்டுவரச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் இம்முறை மேலவையை உருவாக்கத் தேவையான் அரசியல் வலு திமுகவுக்கு மாநிலத்திலும் உண்டு, மத்தியிலும் உண்டு.

அப்படி உருவாக்கப்படும் மேலவை என்ன சாதிக்கும்? அதற்கு என்று தனியாக என்ன சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படும்?

நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், மாநிலங்களவையால் மக்களவை கொண்டுவரும் மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியும். அதை மக்களவை ஏற்காவிட்டால், இரு அவைகளையும் ஒன்றாக அமர்த்தி வாக்கெடுப்பு நடத்தி தான் விரும்பியதை சாதிக்கமுடியும். மேலும் நிதி தொடர்பான சட்டங்களை மாநிலங்களவையால் தடுக்க முடியாது. மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது சட்டமாகிவிடும்.

மாநிலங்கள் அவையில் இருப்பது அதிக பட்சமாக 250 உறுப்பினர்கள். மக்களவையில் இருப்பதோ 545 இடங்கள். அதனால் இரு அவைகளும் சேர்ந்து அமரும்போது மக்களவை நினைப்பதுதான் நடந்தேறும். இப்படிப்பட்ட நிலையில் மாநிலங்களவை என்று ஒன்று தேவையா என்றுகூடக் கேட்கலாம். தேர்தலில் நிற்க விரும்பாத ஆனால் பதவி வகிக்க ஆசைப்படுபவர்கள்; கட்சிக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் சில அனுதாபிகள்; தேர்தலில் தோற்ற ஆனால் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டியவர்கள் போன்றவர்களுக்காக மட்டும்தான் மாநிலங்களவை பயன்படுகிறது. நியமன உறுப்பினர்களால் மாநிலங்கள் அவையில் நிறைய நல்ல விவாதங்கள் நடக்கும் என்பதும் கட்டுக்கதைதான். முதலில் நியமன உறுப்பினர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்பதே சந்தேகம். அடுத்து இவர்களை இரண்டாம் பட்சமாகத்தான் கருதுகிறார்கள். அதாவது தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் பேசும் வாய்ப்பு நியமன உறுப்பினர்களுக்குக் கிடையாது. இதைப்பற்றி துக்ளக்கில் சோ எழுதியுள்ளார்.

ஆனால் ஒருவகையில் மாநிலங்களவை வண்டிக்கு பிரேக் போலச் செயல்படும் என்ற நம்பிக்கையில் அனுமதிக்கலாம் என்று தோன்றுகிறது.

அதைப்போலவே சட்டமன்ற மேலவையும் தேவைப்படும் நேரங்களில் சட்டப்பேரவைக்கு பிரேக் போலச் செயல்படுமா?

தற்போதைக்கு 28 மாநிலங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில்தான் மேலவை உள்ளது (உத்தர பிரதேசம், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்). மேலவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பேரவையில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்க முடியாது. எனவே தமிழ்நாட்டுக்கு 78 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.

மேலவைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பதையும் மேலவைக்குக் கிடைக்கும் சிறப்பு அதிகாரங்கள் என்னென்ன என்பதையும் வைத்துக்கொண்டுதான் மேலவை அவசியமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது குறித்து சில யோசனைகள்:

1. இங்காவது 50% பெண்களாக இருக்க வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்யலாம்.
2. பொதுவாக ஊனமுற்றோர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவ்வளவாகப் போட்டியிடுவதில்லை. ஊரெல்லாம் சுற்றி தேர்தல் கூட்டங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எனவே ஊனமுற்றோருக்கு என்று 5% இடங்களை ஒதுக்கலாம்.
3. பட்டதாரிகளுக்கு என்று தனியாக constituency இருந்தது - முந்தைய மேலவையில். இது சற்றே அபத்தமான ஒரு பிரிவாக இப்போது தோன்றுகிறது. எனவே இதை அறவே ஒழித்துவிடலாம். இதற்கு பதில் சில தொழில் பிரிவுகளுக்கு என்று இடங்களை ஒதுக்கலாம். உதாரணமாக
     (அ) விவசாயத் தொழில் புரிவோர்
     (ஆ) முறைசாராத் தொழிலாளர்கள்
     (இ) சொந்தமாக சிறுதொழில், நடுத்தரத் தொழில் புரிவோர் - அதாவது வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள்
     (ஈ) ஆசிரியர்கள்
     (உ) வேறு ஏதாவது?
இப்படி ஒரு குழுவுக்கு இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 10 இடங்களை இதற்காக ஒதுக்கலாம்.
4. நியமன உறுப்பினர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கும் சில சமுதாயப் பிரிவுகளிலிருந்து - ஆனால் தனித்தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஷெட்யூல்ட் பிரிவுகளில் இல்லாதவர்களாக இருக்கலாம். உதாரணமாக மத, இனச் சிறுபான்மையினர் (1) சீக்கியர்கள் (2) ஜைனர்கள் (3) புத்த மதத்தினர் (4) யூதர்கள் (இருந்தால்) (5) பார்சி (6) ஆங்கிலோ இந்தியர் - என ஆறு பேர்கள் இருக்கலாம்.
5. கலைகளுக்கு என்று தனியாக இருக்கவேண்டுமா என்று தெரியவில்லை. பாடகர்கள், நாட்டியக்காரர்கள் என்றால் அது கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று மட்டும்தான் என்றில்லாமல் பிற கலைஞர்களாகவும் இருக்கவேண்டும். இந்த constituency-ஐ ஒரேயடியாக மறந்துவிட்டாலும் குற்றமில்லை என்று தோன்றுகிறது.
6. பத்திரிகைக்காரர்கள் என்று சிலரை உறுப்பினராக்கவேண்டுமா? தேவையில்லை என்று தோன்றுகிறது.
7. பஞ்சாயத்துகள் மூலமாக மூன்றில் ஒரு பங்காவது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் இது எப்படி நடக்க வேண்டும் என்று முழுமையான யோசனைகள் என்னிடம் இல்லை.

மேலவைக்கு எந்த மாதிரியான அதிகாரங்கள் கொடுக்கப்படலாம் என்பது பற்றி சில யோசனைகள்:

1. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு உள்ள அதே அதிகாரங்கள் - நிதிக் கோரிக்கைகள் தவிர்த்து பிறவற்றை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பும் அதிகாரம், புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் அதிகாரம் ஆகியவை
2. அதற்கு மேலாக, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு மசோதாவும் மேலவையில் 2/3 என்ற கணக்கில் வெற்றிபெறாவிட்டால் நிறைவேறாது என்பதுபோன்ற ஒரு கட்டுப்படுத்தும் அதிகாரம்
3. எந்த (மத, இன) சிறுபான்மைக் குழுவையும் பாதிக்கும் எந்தவொரு சட்டமாக இருந்தாலும் மேலவையில் 2/3 பெரும்பான்மை வாக்குகள் இல்லாவிட்டால் சட்டமாகாது என்ற அதிகாரம்

மற்றொன்று. இப்பொழுது மேலவை ஏற்படுத்தப்பட்டுவிட்டால் பின் அது எந்தத் தருணத்திலும் இழுத்துமூடப்படாது என்ற நிலையும் ஏற்படவேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்துவதும் நீக்குவதுமாக இருந்தால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை.

இன்னமும் சிலவற்றை யோசிக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறப்பு அதிகாரங்கள் இல்லாவிட்டால் மேலவை என்று ஒன்று இருப்பது அவசியமே அல்ல என்பது என் கருத்து. ஆனால் எந்த சட்டப் பேரவையாவது தனது அதிகாரங்களைக் குறுக்கிக்கொண்டு மற்றொரு அவையை உருவாக்குமா என்பது தெரியவில்லை. பார்க்கலாம்.

2 comments:

  1. மேல் அவையை பற்றி விபரமாக விளக்கியதற்கு நன்றி. நானும் உங்கள் கருத்தில் ஒத்து போகின்றேன். ஏற்படுத்தினால் தொடர்ந்து செயல்பட வேண்டும். மற்றவர் ஆட்சிக்கு வந்தால் கலைப்பது போல் இருந்தால் அதை ஏற்படுத்தாமல் இருப்பதே மேல்

    ReplyDelete
  2. Hi Badri
    Quite informative post.Though I am not able to agree with you on certain aspects, would like to support most of it.
    Keep it flowing ......
    with best CT

    ReplyDelete