Friday, March 28, 2008

சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று



கடந்த இரண்டு நாளாக கிரிக்கெட்டுக்குப் போகவிடாமல் வேலை இருந்தது. இன்று எப்படியும் போய்விடுவது என்ற முடிவில் இருந்தேன். சேவாக் எப்படியும் ஒரு சதம் அடிப்பார் என்று தெரிந்தது. நேற்று மாலை 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால் சுரத்தே இல்லாத இந்த ஆடுகளத்தில் சேவாக் அடி பின்னி எடுத்துவிட்டார். காலையில் அதிகம் பிரச்னையில்லாமல் முதல் சதம். பின் மதிய உணவு இடைவேளைக்கு அடுத்த வேளையில் இரட்டை சதம், தேநீர் இடைவெளைக்குப் பிறகு முச்சதம் என்று வெளுத்துக்கட்டிவிட்டார். அத்துடன் அவரது அதிகபட்ச ஸ்கோரான 309-ஐயும் எட்டி ஆட்டமிழக்காமல் உள்ளார். அதனால் இந்த ஸ்கோரே ஒரு இந்தியரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகிறது.

சொத்தை ஆட்டத்தில் நிறைய ரன் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். 'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்தில் சொல்கிறார்களே, அதைப்போன்றது. ஆனால் சேவாக், நோஞ்சானைக் குத்துவிடுவதில் பழி, பாவம் பார்ப்பதில்லை. அடித்து மிதித்து சண்டியர்தனம் செய்துவிடுவார். சேவாக், பல சமயங்களில் பயில்வானையும் குத்துவிட்டவர் என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

வாசிம் ஜாஃபரும் ராஹுல் திராவிடும் சொத்தை ஆட்டக்காரர்கள் கிடையாது. ஆனால் ஸ்லோவான ஆட்டக்காரர்கள். பொதுமக்கள், சேவாகின் ஆட்டத்தைப் பார்த்து, ஃபோர், சிக்ஸ் என்று கத்திக்கத்தி, திராவிடின் ஆட்டத்தில் கடுப்பாகி, பலமுறை இவர்களாகவே அவருக்கு அவுட் கொடுத்தார்கள். ஆனால் யாரையுமே அவுட்டாக்கக்கூடிய பவுலிங் தென்னாப்பிரிக்காவிடம் இல்லை. அதைவிடக் கொடுமை, ஸ்மித்துக்கு ஃபீல்டிங் செட்டப் வைக்கவே தெரியவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு, சேவாகுக்கு 4 (ஆஃப்) - 5 (லெக்) ஃபீல்டிங் வைத்தார். அதில் ஒரு தர்ட்மேன், ஒரு மிட்-ஆஃப், போக வெறும் இரண்டு பேர் கவரிலிருந்து பாயிண்ட் வரை கவர் செய்யவேண்டும். சேவாக் ஸ்டெயினை பலமுறை அங்கு அடித்து சாத்தினார். அதே நேரத்தில் வேலையின்றி இரண்டு ஷார்ட் மிட்விக்கெட் வைத்திருந்தார்.

ஹாரிஸ் நிறைய நெகடிவ் பந்துவீச்சு செய்தார். சேவாகுக்கு வீசும் கை விக்கெட்டின் மேல் வர இடதுகை ஆர்தொடாக்ஸ் சுழல் வீச்சு. காலுக்கு வேளியே வீசி, பந்தை ஸ்பின் செய்து உடம்பின் மேல் படுமாறு செய்வார். ஆஷ்லி கைல்ஸ் ஐடியாதான். ஆனால் சேவாக் நிறையவே ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். ரிவர்ஸ் ஸ்வீப் என்பதைவிட, ரிவர்ஸ் புல் என்றுகூடச் சொல்லலாம்.

சேவாக் கடைசி 15 நிமிடம்தான் டயர்டாகத் தென்பட்டார். பல தவறுகளைச் செய்ய முற்பட்டார். பின் சுதாரித்துக்கொண்டு அவுட்டாகாமல் திரும்பினார்.

அவர் மூன்று சதங்களையும் தெனாவெட்டாகக் கடந்தார். முதல் சதத்தை அடுத்தடுத்து இரண்டு நான்குகளை அடித்ததன்மூலம். 190களில் ஒரு சிக்ஸ், 290களிலும் ஒரு சிக்ஸ். மகாயா எண்டினியை சர்வசாதாரணமாக சிக்ஸ் அடித்து சிதைத்துவிட்டார் என்றே சொல்லலாம். எண்டினி, பவுண்டரியில் ஃபீல்ட் செய்யும்போது, ரஜினிகாந்தின் பாபா முத்திரையைக் காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பின்பக்கத்தை நன்கு ஆட்டி விளையாட்டு காட்டினார். அதைத்தவிர வேறு எதையும் செய்ய ஆடுகளம் இடம் கொடுக்கவில்லை.

இந்த ஆட்டம் படுமோசமான டிராவாகப் போகாமல் சுவாரசியமானதாக மாற்றும் திறம் இப்போது சேவாக் + பிற இந்திய ஆட்டக்காரர்களுக்கே உண்டு. இன்று 85 ஓவரில் 386 ரன்கள் எடுத்தனர் (சேவாக் எடுத்தார் என்று சொல்லவேண்டும்!). அதாவது ஓவருக்கு 4.54. இதே வேகத்தில் அல்லது முடியுமானால் ஒஅருக்கு 5.0 என்ற கணக்கில் நாளை இன்னமும் ஒரு 300 ரன்கள் அடிக்கவேண்டும். அதாவது 770 ரன்களை அடையவேண்டும். அப்போது 230 ரன்கள் லீட் இருக்கும். மீதம் வீச கையில் 25 ஓவர்களாவது இருக்கும் + ஐந்தாம் நாள் இருக்கும். ஆடுகளம் ஸ்பின் எடுத்தால், இந்தியா ஜெயிக்க வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் இந்தியா வெறும் 72 ரன்கள் மட்டுமே பின்னிலையிலும், கையில் 9 விக்கெட்டுகள் இருப்பதாலும் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் கிடையாது என்று சொல்லிவிடலாம்.

நாளை பார்ப்போம்.

3 comments:

  1. //'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்தில் சொல்கிறார்களே, அதைப்போன்றது. ஆனால் சேவாக், நோஞ்சானைக் குத்துவிடுவதில் பழி, பாவம் பார்ப்பதில்லை. அடித்து மிதித்து சண்டியர்தனம் செய்துவிடுவார்.//

    தென்னாப்பிரிக்க அணி நோஞ்சான் அல்ல.அதுவும் ஒரு தலை சிறந்த அணிதான்.

    ReplyDelete
  2. இந்த ஆடுகளத்தில் எல்லா பந்துவீச்சாளர்களுமே நோஞ்சான்கள்தான். நேற்று எண்டினி காலையில் புதுப்பந்தில் அடுத்தடுத்து சேவாகையும் டெண்டுல்கரையும் வீழ்த்தினார். மதியம் ஸ்டெயின் தோனி, கும்ப்ளே, ஆர்.பி.சிங் ஆகியோரை அடுத்தடுத்து எடுத்தார். இவற்றைத் தவிர்த்து பந்துவீச்சாளர்களிடமிருந்து எதையும் பெரிதாகப் பார்க்க முடியவில்லை.

    தென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் ஆரம்பித்தபோதும்கூட இந்தியப் பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.

    ஆக, இங்கே 'நோஞ்சான்' என்று ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவை கேலி செய்யவில்லை. இந்த கண்டிஷனில் ஆஸ்திரேயா பவுலிங்கும் இப்படித்தான் அடிவாங்கியிருக்கும்.

    ReplyDelete
  3. I doub on whether it has to do with the pitches only. If if it just pitch, indiann would not have lost 9 wickets for less than 200 runs. And when someone like sehwag hits out, it requires a lot of courage from the opposing captain to keep it in check. And sometimes, all the ploys fail. I remember australia losing their plot when SA was chasing 434 in 50 overs. And believe me, whatever be the pitch and the strength of opposing bowlers, it is definitely not that easy to score a triple hundred. How many triples were scored against zimbabwe or say bangladesh.

    mani

    ReplyDelete