Monday, March 31, 2008

சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்

ஒன்று சில நாள்களுக்கு முன் நடந்துமுடிந்த விஷயம். மற்றொன்று இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம்.

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் யார் தேவாரம் பாடவேண்டும், எங்கு நின்றுகொண்டு தேவாரம் பாடவேண்டும் என்பதில் பிரச்னை. பிரச்னையைப் பற்றி நிறையவே படித்திருப்பிர்கள். என் கருத்து:

* நடராஜர் கோயில் போன்று எந்தப் பெரிய கோயிலும் தனியார்வசம் இருக்ககூடாது. அப்படியானால் மசூதி, கிறித்துவ தேவாலயம் ஆகியவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று கேட்கலாம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. மதவழிபாட்டிலிருந்து, கல்வி நிலையங்கள் அமைப்பதுவரை. அந்த சலுகைகள் ஒருசில காரணங்களுக்காகவே உள்ளன. ஆனால் இதுபோன்ற பாதுகாப்புகள் பெரும்பான்மையினருக்குத் தேவையில்லை.

* பாரம்பரியம் என்ற போர்வையில் சில பிரிவினரை ஓரங்கட்டி, பொதுமக்கள் மொழியையும் பெரும்பான்மை சாதியினரையும் அவமதிப்புக்குள்ளாக்கும் எந்தப் பழக்கத்தையும் லிபரல் சிந்தனையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. 'தேவாரம் பாடக்கூடாது' என்பது அல்லது 'நாங்கள்தான் பாடுவோம், இவர் பாடக்கூடாது' என்பது அல்லது 'இந்த இடத்திலிருந்து பாடக்கூடாது' என்பது அவமரியாதையான செயல். இதைக் கேட்க ம.க.இ.க அல்லது பெரியார் ஆதரவாளர்கள் யார் என்ற கேள்விக்கே இடம் இல்லை. உயர்சாதி இந்துக்கள், உருப்படியாக ஒன்றும் செய்யாதபோது, இந்தப் பிரச்னையை போராட்டமாக்கி, எதிர்கொண்டு, அரசை சரியான தீர்ப்பு அளிக்க வைத்தது இவர்களே.

* இதை இத்துடன் நிறுத்திவிடாமல், எந்தெந்தக் கோயில்களில் என்னவிதமான சாதி அவமரியாதைகள் நடக்கின்றன என்று கண்காணித்து, அவற்றை மாற்ற சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆவது முதற்கொண்டு இதில் அடங்கவேண்டும்.

* எந்தவித சடங்கு, சம்பிரதாயத்துக்கும் ஆதரவு தெரிவிக்காத, அவற்றை ஏற்றுக்கொள்ளாத எனக்கு இதில் கருத்து கூற உரிமையுள்ளது என்றே நினைக்கிறேன். அதுபோன்றே ம.க.இ.க போன்றோருக்கும், பெரியார் அமைப்பினருக்கும் இதற்கு முழு உரிமையுள்ளது என்று நினைக்கிறேன்.

***

விழுப்புரம் இறையூரில் கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே இப்போது நடந்துவரும் பிரச்னை இரண்டு முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறது.

(1) சாதி என்பது மதமாற்றத்தால் மாறிவிடுவதில்லை. வன்னிய கிறித்துவர், தலித் கிறித்துவர் என்ற பாகுபாடு கேட்பதற்கே சங்கடம் தருகிறது. கிறித்துவத்துக்கு மதம் மாறினால் சாதி போய்விடும் என்ற நம்பிக்கை அபத்தமானது என்றே இது காட்டுகிறது. தனி வாயில்கள், தனிப் பாதை, வெவ்வேறு இடுகாடு, வெவ்வேறு திருவிழாக்கள் என்று பிரித்துப் பார்ப்பது இந்து மதத்தின் கேவலமான செய்கைகள் என்றால், அதில் ஒரு சிறிதும் குறைவுபடாமல் நடக்கும் தமிழ் கத்தோலிக்க கிறித்துவத்தையும் அதே பாணியில் சாடவேண்டும்.

(2) வன்னிய கிறித்துவர்கள், தாங்கள் தலித் கிறித்துவர்களால் தீட்டுப்படாமல் இருக்கவேண்டும் என்றால் மீண்டும் 'தாய் மதத்துக்கே திரும்புவோம்' என்று சொல்வதை, பலரும் சொல்வதைப்போன்று இந்துமதத்தை அவமதிப்பதாகும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இந்துமதம் இதுபோன்ற அயோக்கியத்தனங்களை எதிர்க்காது என்பதால்தான் வன்னிய கிறித்துவர்கள் இப்படிச் சொல்கின்றனர்.

மேலும் ஒற்றைக்குடையின்கீழ் நிறுவனப்படாத இந்து மதத்துக்கு யாரும் அதிபதி என்று கிடையாது. நாளை இந்த வன்னிய கிறித்துவர்கள் மதம் மாறி, இந்துக்கள் என்று சொன்னால் யாரும் அவர்கள் அப்படிக் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒரு விநாயகர் அல்லது அம்மன் கோயிலைக் கட்டிக்கொண்டு, தாராளமாக தீண்டாமையை அங்கு உலவவிட்டு, இந்த 'வன்னிய புது இந்துக்கள்' வாழ்க்கை நடத்தலாம்.

காரணம், ஏற்கெனவே பல இந்துக் கோயில்களிலும் வழிபாடுகளிலும் தீண்டாமை நிலவிவருவதுதான். மேலும் யாரிடமும் அனுமதி கேட்காமல், மறை ஆயர் அல்லது வக்ஃப் வாரியம் என்று எந்த வழிமுறையும் இல்லாமல், ஒரு இந்துக் கோயிலைக் கட்டி, 'குடமுழுக்கு' செய்வித்து, ஐயரை வைத்து அபிஷேகமும் தீபாராதனையும் செய்து தீண்டாமையை நன்கு பரப்பலாம். எங்களது தெருவில் கடந்த இரண்டு மாதத்துக்குள் தெருவோர பிள்ளையார்கள் கோயில்கொண்ட பிள்ளையார்களாக மாறியுள்ளனர். உருவாக்கியவர்கள் ஆட்டோக்காரர்கள். தினமும் மணியடித்து பாலபிஷேகம் செய்பவர்கள் பூணூல் போட்ட ஐயர்கள்.

***

மேற்கண்டதுபோல சாதி/மொழி பேதங்களால் பல பிரச்னைகள் வழிபாட்டுத் தலங்களில் நிலவுகின்றன. இதற்குக் காரணம், இந்து மதத்தை மறுகண்டுபிடிப்பு செய்யும் மாபெரும் ஆன்மிகத் தலைவர்கள் சமீபத்தில் தோன்றாததே. சிலர் மதத்தை முற்றிலுமாக அழித்துவிடவேண்டும் என்று சொல்கிறார்கள். அது முடியுமா, இல்லையா என்று தெரியவில்லை. பெரியார், கம்யூனிஸ்டுகள் என இருவருமே முனைந்தாலும் அவர்களால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதேதவிர, மதத்தின் தாக்கத்தில் பெரிய மாற்றமில்லை.

எனவே ஒருபக்கம் மத எதிர்ப்பு இயக்கங்கள் நடந்துவரும்போதிலும், மதத்துக்குள்ளான சீர்திருத்தப் பிரசாரத்தை எடுத்துச் செல்லும் ஆசாமிகளும் தேவை.

Sunday, March 30, 2008

தொழில்முனைவர்கள் 101

©The Hindu


வெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரும்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதிலுமாக சில தொழில்முனைவர்களைத் தேர்ந்தெடுத்தது.

இந்தப் புத்தகத்தை உருவாக்கும் பொறுப்பு நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. சி.ஐ.ஐ குறிப்பிட்டிருந்த 101 பேரையும் நேர்முகம் செய்து, அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றி சுமார் 850-1000 வார்த்தைகளுக்குள் எழுதி, அவர்களது வண்ணப்படங்களைச் சேர்த்து, அவற்றைக் கோர்த்து, ஒரு மழமழ தாள் (ஆங்கிலப்) புத்தகமாக மாற்றவேண்டும். இதனை ரெகார்ட் நேரத்தில் செய்துமுடித்தோம். தொழில்முனைவர்கள் அனைவருமே மிகவும் பிசியான ஆசாமிகள். பெரும் நிறுவனங்களின் தலைவர்கள். இவர்களில் ஒரு பகுதியினரைத்தான் நேரில் பார்த்துப் பேச முடிந்தது. பிறருடன் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது.

நேர நெருக்கடிதான் பிரதானம். புத்தகத்தை அச்சிட்டு உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நாள்களாவது தேவைப்படும். ஹார்ட்பவுண்ட் புத்தகம். அனைத்துப் பக்கங்களும் கலர். இவற்றை பிரிண்ட் செய்து, பைண்டிங் செய்ய நேரம் பிடிக்கும் செயல். வேறு பல நெருக்கடிகளும் இருந்தன. இருந்தும் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடிந்தது.

இந்த 101 பேர்களின் வாழ்க்கையுமே சுவாரசியம்தான். என்றாலும் இதில் சிலர் தனித்துத் தெரிகிறார்கள். நான் சற்றும் அறிந்திராத பல தொழில்முனைவர்கள் இதில் தென்பட்டார்கள். தொழில்முனைவர்கள் என்றாலே அம்பானி, நாராயண மூர்த்தி, லக்ஷ்மி மிட்டல், ஜே.ஆர்.டி.டாடா என்றுதான் இருக்கவேண்டும் என்றில்லை. சொல்லப்போனால் எந்தப் பின்னணியும் இல்லாமல் உழைப்பு ஒன்றைமட்டுமே பிரதானமாகக் கொண்டு, ரூ. 5 லட்சத்துக்குள்ளாக மட்டுமே முதலைக் கையில் கொண்டு, இன்று ரூ. 50 கோடிமுதல் ரூ. 2000 கோடிவரை பல தமிழக தொழில்முனைவர்களது தொழில் வளர்ந்துள்ளது.

இந்தப் புத்தகம் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கப்போவதில்லை. சி.ஐ.ஐ தன்னுடைய உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்க குறைவான பிரதிகளே உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்குக் கொடுக்க என்று கடைசி நேரத்தில் சில பிரதிகளை தமிழில் செய்து கொடுத்திருந்தோம். எனவே அதுவும் வெளியாகப் போவதில்லை.

ஆனால் இதில் பலருடைய கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இதிலிருந்து சிலவற்றை எனது வலைப்பதிவில் கொடுக்க முயற்சி செய்கிறேன். இதிருந்து சில பகுதிகளையாவது ஒன்றுசேர்த்து, ஒரு பேப்பர்பேக் புத்தகத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

Friday, March 28, 2008

சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று



கடந்த இரண்டு நாளாக கிரிக்கெட்டுக்குப் போகவிடாமல் வேலை இருந்தது. இன்று எப்படியும் போய்விடுவது என்ற முடிவில் இருந்தேன். சேவாக் எப்படியும் ஒரு சதம் அடிப்பார் என்று தெரிந்தது. நேற்று மாலை 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால் சுரத்தே இல்லாத இந்த ஆடுகளத்தில் சேவாக் அடி பின்னி எடுத்துவிட்டார். காலையில் அதிகம் பிரச்னையில்லாமல் முதல் சதம். பின் மதிய உணவு இடைவேளைக்கு அடுத்த வேளையில் இரட்டை சதம், தேநீர் இடைவெளைக்குப் பிறகு முச்சதம் என்று வெளுத்துக்கட்டிவிட்டார். அத்துடன் அவரது அதிகபட்ச ஸ்கோரான 309-ஐயும் எட்டி ஆட்டமிழக்காமல் உள்ளார். அதனால் இந்த ஸ்கோரே ஒரு இந்தியரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகிறது.

சொத்தை ஆட்டத்தில் நிறைய ரன் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். 'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்தில் சொல்கிறார்களே, அதைப்போன்றது. ஆனால் சேவாக், நோஞ்சானைக் குத்துவிடுவதில் பழி, பாவம் பார்ப்பதில்லை. அடித்து மிதித்து சண்டியர்தனம் செய்துவிடுவார். சேவாக், பல சமயங்களில் பயில்வானையும் குத்துவிட்டவர் என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

வாசிம் ஜாஃபரும் ராஹுல் திராவிடும் சொத்தை ஆட்டக்காரர்கள் கிடையாது. ஆனால் ஸ்லோவான ஆட்டக்காரர்கள். பொதுமக்கள், சேவாகின் ஆட்டத்தைப் பார்த்து, ஃபோர், சிக்ஸ் என்று கத்திக்கத்தி, திராவிடின் ஆட்டத்தில் கடுப்பாகி, பலமுறை இவர்களாகவே அவருக்கு அவுட் கொடுத்தார்கள். ஆனால் யாரையுமே அவுட்டாக்கக்கூடிய பவுலிங் தென்னாப்பிரிக்காவிடம் இல்லை. அதைவிடக் கொடுமை, ஸ்மித்துக்கு ஃபீல்டிங் செட்டப் வைக்கவே தெரியவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு, சேவாகுக்கு 4 (ஆஃப்) - 5 (லெக்) ஃபீல்டிங் வைத்தார். அதில் ஒரு தர்ட்மேன், ஒரு மிட்-ஆஃப், போக வெறும் இரண்டு பேர் கவரிலிருந்து பாயிண்ட் வரை கவர் செய்யவேண்டும். சேவாக் ஸ்டெயினை பலமுறை அங்கு அடித்து சாத்தினார். அதே நேரத்தில் வேலையின்றி இரண்டு ஷார்ட் மிட்விக்கெட் வைத்திருந்தார்.

ஹாரிஸ் நிறைய நெகடிவ் பந்துவீச்சு செய்தார். சேவாகுக்கு வீசும் கை விக்கெட்டின் மேல் வர இடதுகை ஆர்தொடாக்ஸ் சுழல் வீச்சு. காலுக்கு வேளியே வீசி, பந்தை ஸ்பின் செய்து உடம்பின் மேல் படுமாறு செய்வார். ஆஷ்லி கைல்ஸ் ஐடியாதான். ஆனால் சேவாக் நிறையவே ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். ரிவர்ஸ் ஸ்வீப் என்பதைவிட, ரிவர்ஸ் புல் என்றுகூடச் சொல்லலாம்.

சேவாக் கடைசி 15 நிமிடம்தான் டயர்டாகத் தென்பட்டார். பல தவறுகளைச் செய்ய முற்பட்டார். பின் சுதாரித்துக்கொண்டு அவுட்டாகாமல் திரும்பினார்.

அவர் மூன்று சதங்களையும் தெனாவெட்டாகக் கடந்தார். முதல் சதத்தை அடுத்தடுத்து இரண்டு நான்குகளை அடித்ததன்மூலம். 190களில் ஒரு சிக்ஸ், 290களிலும் ஒரு சிக்ஸ். மகாயா எண்டினியை சர்வசாதாரணமாக சிக்ஸ் அடித்து சிதைத்துவிட்டார் என்றே சொல்லலாம். எண்டினி, பவுண்டரியில் ஃபீல்ட் செய்யும்போது, ரஜினிகாந்தின் பாபா முத்திரையைக் காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பின்பக்கத்தை நன்கு ஆட்டி விளையாட்டு காட்டினார். அதைத்தவிர வேறு எதையும் செய்ய ஆடுகளம் இடம் கொடுக்கவில்லை.

இந்த ஆட்டம் படுமோசமான டிராவாகப் போகாமல் சுவாரசியமானதாக மாற்றும் திறம் இப்போது சேவாக் + பிற இந்திய ஆட்டக்காரர்களுக்கே உண்டு. இன்று 85 ஓவரில் 386 ரன்கள் எடுத்தனர் (சேவாக் எடுத்தார் என்று சொல்லவேண்டும்!). அதாவது ஓவருக்கு 4.54. இதே வேகத்தில் அல்லது முடியுமானால் ஒஅருக்கு 5.0 என்ற கணக்கில் நாளை இன்னமும் ஒரு 300 ரன்கள் அடிக்கவேண்டும். அதாவது 770 ரன்களை அடையவேண்டும். அப்போது 230 ரன்கள் லீட் இருக்கும். மீதம் வீச கையில் 25 ஓவர்களாவது இருக்கும் + ஐந்தாம் நாள் இருக்கும். ஆடுகளம் ஸ்பின் எடுத்தால், இந்தியா ஜெயிக்க வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் இந்தியா வெறும் 72 ரன்கள் மட்டுமே பின்னிலையிலும், கையில் 9 விக்கெட்டுகள் இருப்பதாலும் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் கிடையாது என்று சொல்லிவிடலாம்.

நாளை பார்ப்போம்.

Friday, March 21, 2008

ஐன்ஸ்டைனுக்கும் அடிசறுக்கும். சுஜாதாவுக்கும்.

[நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகள். இந்த டிராஃப்ட் எடிட்டரால் ஏற்றுக்கொள்ளப்படாததால், மீண்டும் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் சுஜாதாவின் குங்குமம் கேள்வி-பதில் (கடைசி) பார்த்ததால் பழைய வெர்ஷனை உடனடியாக இங்கே கொடுக்கிறேன்.

கே: டார்வினின் பரிணாமத் தத்துவத்தையும் பொருளின் அழியாத் தன்மையையும் அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டபோதே 'கடவுள்' காணாமல்போகிறதே, கவனித்தீர்களா?

சுஜாதா பதில்: கடவுள் காணாமல் போகவில்லை. ட்யூட்டி மாறிவிட்டார். பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்திற்கு அவர் தேவைப்படுகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே 'கடவுள் பிரபஞ்சத்துடன் தாயம் ஆடுவதில்லை' என்றார்.]

****

ஐன்ஸ்டைன் அரசியல் அல்லது பொதுவாழ்க்கையில் தப்பு செய்யலாம். ஆனால் அறிவியலில்?

எந்த ஐன்ஸ்டைன், அறிவியல் உலகையே குலுக்கிய உண்மைகளை, எந்தவித பயமும் இன்றி வெளிப்படுத்தினாரோ, அதே ஐன்ஸ்டைன் குவாண்டம் இயல்பியல் விஷயத்தில் சறுக்கினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குவாண்டம் இயல்பியலின் முன்னேற்றத்துக்கு ஐன்ஸ்டைனே, அவருக்குப் பிடிக்காவிட்டாலும்கூட, காரணமாக இருந்தார்.

இந்த குவாண்டம் இயல்பியல் என்பது என்ன? ஏன் ஐன்ஸ்டைனுக்கு அது பிடிக்கவில்லை?

எலெக்ட்ரானை ஜே.ஜே.தாம்சன் கண்டுபிடித்தபின்னர், எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், அணுவின் வடிவம் எத்தகையது என்பதைக் கண்டறிய முற்பட்டார். அவரது சோதனைகளின் முடிவாக, அணுவுக்குள் உட்கரு என்ற பகுதி உள்ளது என்றும், அதனைச் சுற்றி எலெக்ட்ரான்கள் ஒரு வட்டப்பாதையில் சுற்றுகின்றன என்றும் விளக்கினார்.

ஆனால் ரூதர்ஃபோர்டின் மாடலில் சில பிரச்னைகள் இருந்தன. டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் போர் அணுவின் வடிவம் எப்படி இருக்கலாம் என்பதற்கு திட்டவட்டமான சில பரிந்துரைகளைக் கொடுத்தார். அத்துடன், ஹைட்ரஜன் அணுவை (ஒரு புரோட்டான், ஒரு எலெக்ட்ரான்) உதாரணமாக எடுத்துக்கொண்டு, சரியான கணித மாதிரியையும் உருவாக்கினார்.

நீல்ஸ் போர், வெர்னர் ஹெய்சன்பர்க், எர்வின் ஷ்ரோடிங்கர், வுல்ஃப்காங் பாலி, பால் டிராக், லூயி டி புராக்லி போன்ற பல இளம் விஞ்ஞானிகள் அணுக்களைப் பற்றிய கொள்கைகளை வெளியிட ஆரம்பித்தனர்.

இவர்கள் அனைவருமே, ஐன்ஸ்டைனை தங்கள் குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர். ஐன்ஸ்டைன் தங்களது கொள்கைகளைப் பற்றி என்ன சொல்கிறார், என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருந்தனர்.

சின்னஞ்சிறு அணுவின் அளவுக்குச் சென்று பார்த்தால், பல விஷயங்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்லமுடியாது என்ற ‘நிச்சயமற்ற கொள்கை’யை ஹெய்சன்பர்க் வெளியிட்டார். அதாவது ஓர் எலெக்ட்ரான் எங்கே உள்ளது என்று துல்லியமாகச் சொன்னால், அது எந்த வேகத்தில் செல்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது. அதன் வேகத்தைத் துல்லியமாகச் சொன்னால், அதன் இடத்தைத் துல்லியமாகக் கணிக்கமுடியாது. இதுதான் ஹெய்சன்பர்க் கொள்கை.

இதனை ஐன்ஸ்டைன் ஏற்க மறுத்தார்.

நியூட்டனின் இயக்கவியலில் எந்த ஒரு பொருளையும் காண்பித்து, தொடக்கத்தில் அந்தப் பொருளின் இடம், அதன் வேகம், அதன்மீது இயங்குகின்ற விசைகள் ஆகியவற்றைச் சரியாகச் சொன்னால், பிறகு எந்தக் கணத்திலும் அந்தப் பொருள் எங்கே இருக்கும் என்பதைச் சொல்லிவிடலாம்.

ஏதாவது ஒரு செயல் நடக்கிறது என்றால், அதற்கான காரணம் என்ன என்பதைச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்பதே அந்தச் சமயத்தில் விஞ்ஞானிகளின் எண்ணமாக இருந்தது. இதற்கு causality - காரணவாதம் என்று பெயர். காரணமே இல்லாமல் ஒரு செயல் நடக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட விசை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்தை நோக்கி, குறிப்பிட்ட வேகத்தில் செல்லமுடியாது. இதுதான் அப்போதைய எண்ணம்.

நியூட்டனின் இயக்கவியலை முழுதும் ஏற்காவிட்டாலும், இந்தக் காரணவாதத் தத்துவத்தை ஐன்ஸ்டைன் முற்றிலுமாக ஏற்றுக்கொண்டார். நியூட்டனின் இயக்கவியலில் இருந்த காலம், வெளி தொடர்பான கருத்துக்களை மட்டுமே மாற்றி அமைத்தார். ஆனால் காரணவாதத்தை அவர் தொட முயற்சி செய்யவில்லை.

ஆனால் ஹெய்சன்பர்க், போர் கூட்டணியினர் காரணவாதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினர். மிகச்சிறு துகள் ஒன்றை நோக்கும்போது அது எங்கே இருக்கிறது என்றே சொல்லமுடியாது; அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு (probability) என்பதை மட்டுமே சொல்லலாம் என்றனர்.

நிகழ்தகவு என்ற சொல் ஐன்ஸ்டைனைப் பாடுபடுத்தியது. அவரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்குதான் அவர் ‘கடவுள் தாயக்கட்டை விளையாடுவதில்லை’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினார். (இங்கே கடவுள் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை விடுத்து, ஐன்ஸ்டைன் இறை நம்பிக்கையாளர் என்று சிலர் அவசரமாகச் சொல்லிவிடுகிறார்கள்.)

‘ஒரு பொருள் எங்கே இருக்கும் என்பதை காசைச் சுண்டி பூவா, தலையா போட்டுப் பார்த்து முடிவு செய்யமுடியாது. அது எங்கே இருக்கவேண்டும் என்பதை அதன்மீது இயங்கும் விசைகள் தெளிவாகக் குறிப்பிட்டுவிடும்’ என்பது ஐன்ஸ்டைனின் கருத்து.

ஐன்ஸ்டைனின் தாயக்கட்டை கமெண்டுக்கு எதிர்வினையாக போர், ஐன்ஸ்டைனைப் பார்த்துச் சொன்னார்: ‘ஐன்ஸ்டைன், கடவுள் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை நீ சொல்லாதே!’ (உடனே நீல்ஸ் போரும் இறை நம்பிக்கையாளர் என்று நாம் சொல்லிவிடக் கூடாது.)

இங்கு உருவான இடைவெளி விரிந்துகொண்டே போனது. ஷ்ரோடிங்கர், ஹெய்சன்பர்க் இருவரும் தனித்தனியாக, குவாண்டம் இயல்பியலில் அடைப்படையை வேவ் ஃபங்ஷன் என்பதாக வடிவமைத்தனர்.

இதன்படி, எந்தப் பொருளும் எந்த இடத்தை வேண்டுமானாலும் வியாபிக்கலாம். ஆனால் சில இடங்களில் அவை காணப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஓர் அணுவில், ஓர் எலெக்ட்ரான் மட்டும் இருந்தால், அந்த எலெக்ட்ரான் எங்கெல்லாம் இருக்கமுடியும் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஓர் அணுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரான்கள் இருந்தால் அவை ஒவ்வொன்றும் எங்கே இருக்கலாம் என்ற நிகழ்தகவுப் பரவலைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கும் மேலாகச் சென்று இந்தக் கணத்தில் இந்தக் குறிப்பிட்ட புள்ளியில்தான் எலெக்ட்ரான் உள்ளது என்பதைச் சொல்லமுடியாது.

இதுதான் குவாண்டம் இயல்பியலின் அடிப்படை.

அடுத்து, ஒரு பொருள் ஒரே நேரத்தில் எடையுடன்கூடிய, ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை வியாபிக்கக்கூடிய துகளாக உள்ளது; ஓர் ஆற்றல் அலையாகவும் உள்ளது என்ற கருத்து (பொருளின் இரட்டைத் தன்மை).

இந்தக் கருத்தையும் ஐன்ஸ்டைன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெளியிட்டவரே ஐன்ஸ்டைன்தான். அதன் பின்னரே ஒளி, ஒரே நேரத்தில் துண்டாகவும் அலையாகவும் திகழ்கிறது, இரட்டைத் தன்மையுடையதாக உள்ளது என்ற கருத்து பரவியது.

அதைப்போன்றேதான், துகள்களும் இரட்டைத் தன்மையுடையன என்று டி புராக்லி போன்றோர் சோதனைமூலம் நிரூபித்தனர்.

***

புரட்சிகரமான கருத்துகளை வெளியிட்ட ஐன்ஸ்டைனாலேயே மேலும் புரட்சிகரமான கருத்துகளை ஏன் வரவேற்க முடியவில்லை?

வயதானது ஒரு காரணம். ஐன்ஸ்டைன் அறிவியலைவிட்டு அரசியலில் ஈடுபட்டது மற்றொரு காரணம்.

இளையவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப்போய்விட்டதனால் அவரால் புரட்சிகரமான கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ள மறுத்தார் அவர்.

பதிலுக்கு, குவாண்டம் இயல்பியல் தவறானது என்பதை நிரூபிக்க, அவர் பல ‘சிந்தனைச் சோதனைகளை’ உருவாக்கினார். சிந்தனைச் சோதனைகள் என்றால் ஒரு பரிசோதனைச் சாலையில் சென்று செய்துபார்க்கும் சோதனைகள் கிடையாது. மனத்துக்குள்ளாகவே செய்து பார்க்கக்கூடியவை.

ஐன்ஸ்டைன் ஒவ்வொரு சோதனையாகச் சொல்லச்சொல்ல, போர் அவற்றை மறுத்து, அவை எங்கே தவறாகின்றன என்று விளக்கினார். அதன் பின்னும், ஐன்ஸ்டைன் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

***

ஐன்ஸ்டைன் போருக்கு எதிரான தனது கருத்துகளால் பழைமைவாதி அமெரிக்கர்களால் வெறுக்கப்பட்டார். ஐன்ஸ்டைன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பல இடங்களின் ஐன்ஸ்டைன் கடவுளை நம்புபவர்போலச் சித்திரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனது கடவுள் சம்பந்தமான கொள்கைகளைத் தெளிவாகச் சொல்லியுள்ளார். மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒருவர் கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.

ஐன்ஸ்டைனைப் பொறுத்தமட்டில், கடவுள் என்பவர் இயற்கையும் இயற்கை உருவான, இயங்குகின்ற விதிகளும்.

ஐன்ஸ்டைனின் இந்தக் கொள்கைகளுக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஒண்டவந்த இடத்தில் தனது கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பற்றி இந்த ஆள் சொல்கிறானே என்று அமெரிக்கக் கிறித்துவர்கள் குறைபட்டுக்கொண்டனர்.

அமெரிக்காவின் கொள்கைமுழக்கம், ‘In God, we trust’ என்பது. எனவே அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற ஒருவர் கடவுளுக்கு எதிராகப் பேசக்கூடாது, அது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சிலர் சொன்னார்கள்.

***

[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் தேவைப்படுகிறார் என்கிறார். அதுவும் உண்மை கிடையாது. அதைப்பற்றி வேறொரு சமயம்.]

Thursday, March 20, 2008

திபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்

திபெத்தில் கலவரங்கள் ஓய்ந்தமாதிரி உள்ளது. தமிழகத்தில் இருந்துகொண்டு இணையம் அல்லது பிபிசி போன்ற தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால், என்ன நடக்கிறது என்பதை யாருமே தெரிந்துகொள்ளமுடியாது.

தமிழ் பத்திரிகைகள் ஆதியோடு அந்தம் எதையும் விளக்குவதில்லை. அதுவும் திபெத் எந்தப்பக்கம் என்றுகூடத் தெரியாமல் இருக்கின்றன. தி ஹிந்து, இலங்கை தொடர்பாக எழுதும் பொய் செய்திகளைப் போன்றே, திபெத் தொடர்பாக அட்டூழியம் செய்கிறார்கள். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் காசில் திபெத் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு என்.ராம் உளறித் தள்ளி கட்டுரைகள் சிலவற்றை எழுதியாகிவிட்டது. இப்போது நியூஸ் கவரேஜ் அற்புதமாக உள்ளது.

வேறு ஏதாவது காலை செய்தித்தாளை வாங்கித் தொலைப்போம் என்றால், ஒரு எழவும் உருப்படியாக இல்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவையா வாங்கித் தொலைக்கவேண்டும் என்று பயமாக இருக்கிறது.

செய்தித்தாள்களில் 24% வரை மட்டுமே அந்நிய முதலீடு இருக்கலாம் என்ற நிலை இப்போது. இது மாறலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. 49% வரை உயர்த்தினார்கள் என்றால் 'தி கார்டியன்' போல் யாராவது இந்தியா வந்து, நல்ல நியூஸ்பேப்பர் நடத்துவது எப்படி என்று நமக்கு சொல்லித்தரலாம்! (அஃப்கோர்ஸ், மர்டாக்கும் வந்து கழுத்தறுப்பார்!)

Saturday, March 15, 2008

நந்திகிராமமும் கண்ணூரும்

நேற்று கம்யூனிஸ்டுகளுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் (State Department) உலகின் எல்லா இடங்களிலும் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி ஆண்டாண்டு ஓர் அறிக்கையை வெளியிடும். (இதில் ஐரனி என்னவென்றால் அமெரிக்காவே முன்னின்று நடத்தும் மனித உரிமை மீறல்கள் பற்றி அதில் ஒன்றும் இருக்காது!) 2007-ம் ஆண்டுக்கான அறிக்கை இங்கே.

இந்த அறிக்கையில் நந்திகிராமம் இடம் பெற்றுவிட்டது என்பது பற்றி லோக் சபாவில் பெரும் கூச்சல், குழப்பம், சண்டை. கம்யூனிஸ்டுகளுக்குக் கடும் கோபம். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியும்கூட அமெரிக்கா இவ்வாறு நந்திகிராமத்தைக் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நந்திகிராமத்தில் நடந்தது மனித உரிமை மீறல் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் மனித உரிமை மீறல் என்றாலும் அமெரிக்கா யார் இதைப்பற்றிச் சொல்ல என்று கேட்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

சரி, இந்த அறிக்கையில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் நந்திகிராமத்தைப் பற்றி என்று பார்த்தேன். பார்த்தால் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த அத்தனை மனித உரிமை மீறல்களையும் பட்டியலிட்டுள்ளனர். இதில் கம்யூனிஸ்ட் மேற்கு வங்கம் மட்டுமல்ல, தமிழகமும் இடம் பெறுகிறது. மனித உரிமை மீறல் என்றால் அரச அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், காவல்துறை, ராணுவம் ஆகியவை அப்பாவி மக்கள்மீது செலுத்தும் அதிகார துஷ்பிரயோகம். இந்த அறிக்கையில் இடம்பெறாத மாநிலமே கிடையாது என்று சொல்லலாம். ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், சட்டிஸ்கார், தமிழகம், கேரளம், ஆந்திரா .... அத்தனையும் உள்ளன. சென்னையில் நடந்த ஒரு லாக்-அப் கொலை பற்றி இதோ:
On December 11, Chennai police arrested 50-year-old Syed Ali, a tea shop worker in Vadapalani, Chennai, for the alleged unlawful sale of lottery tickets. Syed died in custody. The Tamil Nadu government ordered an inquiry into the incident after Chennai shopkeepers alleged that the death was due to police torture. At year's end, the investigation was ongoing.
நந்திகிராமம் பற்றிய விஷயம் இங்கே:
From November 6 to 11, CPM members, whom human rights groups claim had state government support and direction, conducted a violent campaign of intimidation to regain control over the Nandigram area from the Bhumi Uchhed Protirodh Committee (BUPC). The BUPC included those opposed to the CPM's plan to acquire local land for industry, some former CPM supporters, and opposition party workers and was backed by the Trinamul Congress, part of the West Bengal opposition. News reports and eyewitness accounts noted that CPM cadres fired on BUPC supporters and local villagers, killing at least three and injuring others, burned many houses, and engaged in numerous rapes. On November 27, journalists reported the discovery of mass graves in the area. Following a government order on December 7, the CID initiated an inquiry into the identity of the bodies.
இதில் எங்குமே பிரச்னை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 'எங்கள் ஊரில் நாங்கள் யாரை வேண்டுமானாலும் கொல்வோம், வெட்டுவோம், அதைப்பற்றி கருத்து கூற நீ யார்' என்று அமெரிக்காமீது நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கோபம் வந்துள்ளது.

வேண்டுமென்றால் இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஆண்டுக்கு ஒரு ரிப்போர்ட் எழுதி அதில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களைப் பற்றி பத்தி பத்தியாக விளக்கிவிட்டுப் போகட்டும்.

இதேபோல இலங்கை அரசும் அமெரிக்க தூதரை அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்பியுள்ளது.

அமெரிக்கா, உலகத்துக்கெல்லாம் போலீஸ் கிடையாது. அவர்களும் இந்த அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இந்தியாவைக் கூப்பிட்டு விளக்கம் கேட்பது கிடையாது. எனவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி கோபம் கொள்வது தேவையற்றது. அடுத்த நாடு இந்தியாவில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி ஓர் அறிக்கைகூட வெளியிடக்கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது!

***

அடுத்த ஆண்டு நிச்சயமாக அமெரிக்க அறிக்கையில் கண்ணூரில் இப்போது நடந்துவரும் கட்சிப் படுகொலைகளைப் பற்றி தகவல் வருவது நிச்சயம். ஆட்சியில் இருக்கும் சிபிஎம் கொலைப்படை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் 7 பேரைக் கொலை செய்துள்ளது. பதிலுக்கு ஆர்.எஸ்.எஸ் கொலைப்படையால் ஒரு சிபிஎம் தோழரை மட்டுமே கொல்ல முடிந்துள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் வேறுமாதிரியாக இருக்கும் என்று சொல்கிறார் கேரள நண்பர் ஒருவர். காங்கிரஸ் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் வலுவடைவதும், பிறகு சிபிஎம் ஆட்சி வரும்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் வலுவைக் குறைக்க சிபிஎம் கொலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாம்.

இத்தனைக்கும் இதுபோல அரசியல் கொலைகள் கிட்டத்தட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலுமே நின்றுபோய்விட்டன.

கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்கும் மாநிலங்கள் தவிர.

நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்

இதற்குமுன் ராஜ்ய சபா (மேலவை) தேர்தலை அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. இப்போது பாமக புண்ணியத்தில் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் கொஞ்சம் சூடு பிடித்தது. ஆனால் மீண்டும் சூடு அடங்கிவிட்டது.

தமிழகத்துக்கு மொத்தம் 18 மேலவை உறுப்பினர்கள். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் இருக்கும் 234 உறுப்பினர்களும் சேர்ந்து இந்த 6 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். உறுப்பினராகத் தேர்வாக ஒரு வேட்பாளருக்கு 34 வாக்குகள் தேவை என்று படித்தேன். இந்த 34 என்ற எண் எங்கிருந்து வந்தது என்று குழப்பமாக இருந்தது. எந்த அடிப்படையில் ஒருவருக்கு 34 வாக்குகள் வேண்டியுள்ளது?

கொஞ்சம் தேடிப் பார்த்ததில் விக்கிபீடியா உதவிக்கு வந்தது. இதற்குப் பெயர் Single transferable vote என்பதாம்.

அதாவது பலர் தேர்தலுக்கு நிற்கிறார்கள். ஆனால் 6 பேரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குதான். எப்படி, குறைந்த காலத்துக்குள், சரியாக 6 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது?

6 இடங்கள். 7 பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தேர்தலே தேவைப்படும். 6 பேர் மட்டுமே நின்றால் அனைவரும் ஜெயித்தவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா? சரி, இப்போது 7 பேர் நிற்கிறார்கள். இப்போது ஒருவர் ஜெயிக்க குறைந்தபட்சம் எவ்வளவு வாக்குகள் தேவைப்படும்? வாக்குகள் அனைவருக்கும் சமமாகச் சிதறிச் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒவ்வொருவருக்கும் 234/7 வாக்குகள் கிடைக்கும். இதற்குமேல் ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலும், அவரை ஜெயித்ததாகச் சொல்லிவிடலாம். அதாவது கட்டாயமாக ஜெயிக்க ஒருவருக்குத் தேவை (234/7)+1 வாக்குகள் = 34.43 வாக்குகள். இதை ரவுண்ட் ஆஃப் செய்தால் கிடைப்பதுதான் 34 வாக்குகள்!

சரி, 7 பேர் நிற்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு 34 வாக்குகள் கிடைத்தாலே போதும், அவர் ஜெயித்தவராகிவிடுகிறார். ஆனால் அவருக்கு 35, 36 அல்லது அதற்கும்மேல் வாக்குகள் கிடைத்தால் என்ன செய்வது? மீதமுள்ள 5 இடங்களுக்கு 6 பேரிலிருந்து தேர்வு செய்யவேண்டியுள்ளதே?

இங்குதான் வாக்குச்சீட்டில் இரண்டாம், மூன்றாம் சாய்ஸ்கள் உள்ளன. வாக்காளர் தனது முதல் விருப்பத் தேர்வாக ஒரு வேட்பாளரைக் குறிப்பிடுகிறார். இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தேர்வாக வேறு வேட்பாளர்களைக் குறிப்பிடுகிறார். இப்போது முதல் விருப்பத் தேர்வில் உள்ள ஒருவர் ஏற்கெனவே பிறரது வாக்குகளால் ஜெயித்துவிட்டார் என்றால், அவருக்கு 34-க்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொடுக்காமல் அந்த வாக்குகளை இரண்டாவது விருப்பத் தேர்வு வேட்பாளருக்குக் கொடுத்துவிடுவார்கள்.

அந்த வகையில்தான், திமுக கூட்டணி, அணி மாறாமல் வாக்களித்தால், ஐந்து இடங்களைக் கைப்பற்றமுடியும்.

அஇஅதிமுக-விடம் 60 இடங்கள், மதிமுக-விடம் 6 இடங்கள். இவர்கள் கையில் இன்னமும் 2 இடங்கள் இருந்தால் இந்தக் கூட்டணியால் 2 ராஜ்ய சபா இடங்களைக் கைப்பற்றியிருக்கமுடியும். ஆனால் தொலைநோக்கு என்பதே சிறிதும் இல்லாத ஜெயலலிதாவால் இவ்வளவு தூரம் யோசிக்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் பஞ்சாயத்துத் தேர்தல் சமயத்தில் ஒழுங்கான உடன்படிக்கை செய்திருந்தால் இன்று இந்தக் கூட்டணிக்கு மற்றுமொரு ராஜ்ய சபா இடம் கிடைத்திருக்கும்.

திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் ஒதுக்காததில் வியப்பில்லை. ராமதாஸ் தடாலடியாகப் பேசி எப்படியெல்லாம் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்துவருகிறார். அதில் பல கருத்துகள் நேர்மையானவையே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் கூட்டணியில் இருக்கும்போது இதனை வேறுவிதமாக எதிர்கொள்ளவேண்டும். ராமதாஸ் அவ்வாறு செய்வதில்லை.

இருந்தும், பாமகவின் எண்ணிக்கையை மனத்தில் வைத்து, கம்யூனிஸ்டுகளுக்கு பதில் பாமகவுக்கு ஓரிடத்தை திமுக கொடுத்திருக்கலாம்.

நிற்க. வசந்தி ஸ்டான்லி என்ற திமுக ராஜ்ய சபா வேட்பாளர்மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என்று பத்திரிகைகளில் தகவல் வந்துள்ளது. நில ஆவண மோசடி, பல இடங்களில் கடன்கள் வாங்கி சுவாஹா செய்தார் என்று. இப்படிப்பட்ட வேட்பாளரைத்தான் திமுக நிறுத்தவேண்டுமா?

Thursday, March 13, 2008

கேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா

நடுவில் இரண்டு நாள் ஆலப்புழைக்கும் திருவனந்தபுரத்துக்கும் போய்விட்டு வந்தேன். ஆலப்புழையில் 'அஞ்சாதே' படத்துக்கான போஸ்டர் கண்ணில் பட்டது. போஸ்டர் சென்னை தெருக்களில் காணப்பட்ட அதேதான். ஆனால் எழுத்துகள் மலையாளத்தில் இருந்தன.

அதற்குள் மலையாளத்தில் டப் செய்து வெளியிட்டுவிட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். படம் முழுக்க முழுக்க தமிழில்தானாம். ஆனால் போஸ்டர் மட்டும் மலையாளத்தில். படம் நன்றாக ஓடுகிறதாம்.

இது வெறும் தமிழர்கள் மட்டும் பார்ப்பதால் வருவதல்ல. அனைத்து மலையாளிகளும் சந்தோஷமாக தமிழ் (வெகுஜன) சினிமாக்களைப் பார்க்கிறார்கள். விஜய் நடித்த போக்கிரி நம்பர் ஒன் படமாம். 100 நாள் தாண்டி ஓடியதாம்.

ஆனால் பெங்களூருவைப் போலன்றி, தமிழ்ப் படங்களைக் காண்பிப்பதற்கு கேரளாவில் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. எதிர்காலம் எப்படியோ.

ஆனால் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக கேரளா இருக்கிறது என்று தெரிகிறது.

Friday, March 07, 2008

தி.மு.க. வரலாறு

தி.மு.க. வரலாறு, டி.எம்.பார்த்தசாரதி, பாரதி பதிப்பகம், முதல் பதிப்பு ஜனவரி 1961, இப்போதைய பதிப்பு மார்ச் 2006, விலை ரூ. 100. கிரவுன் 1/8, பக்: 468.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வரலாறு என்று கருதப்படும் இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் திமுகவின் நிறுவன முன்னோடிகளில் ஒருவர். அதனால் அருகில் இருந்து கண்ணால் பார்த்தவற்றை கவனமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்திய குடியாட்சி வரலாற்றில் பல அரசியல் கட்சிகள் தோன்றியுள்ளன. பல பிளவுண்டு புதிய கட்சிகளைத் தோற்றுவித்துள்ளன. பல கட்சிகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. இந்தக் கட்சிகள் உருவான காலகட்டம், அவற்றுக்கான தேவை, இந்தக் கட்சிகளின் லட்சியம், லட்சியத்தை அடைவதில் அவை வெற்றிகண்டனவா இல்லையா ஆகியவற்றை விளக்கும் வண்ணம் கட்சிகளுக்கான முழுமையான வரலாறுகள் தேவை.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, அண்ணாதுரை என்ற தனிமனிதர், எந்த அளவுக்கு டெமாக்ரசி என்பதன் கருத்தை உள்வாங்கி, சிறப்பான முறையில் ஒரு கட்சியை அமைத்து குறுகிய காலத்துக்குள் அந்தக் கட்சியின் லட்சியங்களை அடைந்தார் என்பது பிரமிக்க வைக்கிறது.

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பிரதான சீடர்களில் ஒருவராக இருந்த அண்ணாதுரைக்கு பெரியாரின் சர்வாதிகாரப் போக்கு சிறிதும் ஒவ்வாததாக இருந்திருக்கிறது. மணியம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தது முதற்கொண்டு, அதற்காக ராஜாஜியை பெரியார் கலந்தாலோசித்தது, தன்னைச் சுற்றியுள்ளவர்களை பெரியார் சோம்பேறிகள், பணத்தை லவட்டுபவர்கள் என்றெல்லாம் பேசியது அண்ணாதுரையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

கொள்கையில் பெரிதும் பெரியாரை அப்படியே பின்பற்றினாலும், கட்சி அமைப்பை உருவாக்குவதில் அண்ணாதுரை முற்றிலும் புதிய வழியைக் கடைப்பிடித்தார். அண்ணாதுரை எந்தக் கட்டத்திலும் ஒரு துளியேனும் தன் வழியைப் புகுத்துபவராகக் காணப்படவில்லை. செயல்குழு, பொதுக்குழு, மாநாடு, கட்சி அமைப்பு, கட்சிக்கான சட்டதிட்டம், கிளை அமைப்புகள் என்று கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். தொடக்கம் முதலே கட்சியின் தனிப்பெரும் தலைவன் தான்தான், மற்றவரெல்லாம் வெறும் ஜீரோ என்ற எண்ணம் அண்ணாதுரையிடம் இருந்ததாகவே தெரியவில்லை.

இன்று ஆளுக்காள் கட்சி ஆரம்பிக்க முனைகிறார்கள். கட்சி ஆரம்பிப்பது, கட்சியை வளர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அண்ணாவைப் படிப்பது அவசியமாகிறது. கட்சிப் பணிக்கு ஆள் சேர்ப்பது, கட்சிக்கு நிதி சேர்ப்பது, பத்திரிகைகள் நடத்தி, அதன்மூலம் கொள்கைகளை விசுவாசிகளிடம் கொண்டுசேர்ப்பது, தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பதை அண்ணாவின் வாழ்கையைப் படித்தே ஒருவர் தெரிந்துகொள்ளலாம். (விஜயகாந்த், சரத்குமார் கவனிக்க!)

அந்நாளைய காங்கிரஸ் கட்சியின் தமிழகக் கிளை எவ்வளவு அபத்தமாக ஆட்சி செய்துள்ளது என்பது அதிர்ச்சியைத் தருகிறது. சொல்லப்போனால், ஆங்கிலேயர்கள் வெளியேறி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, ஆங்கிலேயர் அளவுக்கு அதே மூர்க்கத்தனத்துடன் ஆட்சியை நடத்தியுள்ளனர் காங்கிரஸார். இதில் ராஜாஜி மட்டுமல்ல, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரும் அடக்கம்.

உப்புப்பெறாத விஷயங்களுக்கும்கூட இம்மியளவு எதிர்க்கருத்துகளுக்கு இடம் கொடுக்காமல் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். சில்லறை விஷயங்களுக்கெல்லாம் திமுக தலைவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு, சிறைத்தண்டனை, அபராதம், திமுக தொண்டர்கள்மீது போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடு என்று நடந்திருக்கிறது.

இந்தக் கண்மூடித்தனமான அடக்குமுறையே தமிழகத்தில் காங்கிரஸ்மீதான வெறுப்பாக மாறி, காங்கிரஸை முற்றிலுமாக அழித்துவிட்டது. அவ்வப்போது முதல்வர் கருணாநிதி எழுதும் கவிதைகளில் வரும் ஒரு வரி 'கொள்கை மறவர் கொட்டிய குருதியில் குழைத்துக் கட்டிய கோட்டை'. இதைப் படிக்கும்போது அபத்தமாகத் தோன்றும். ஆனால் திமுக வரலாற்றைப் படிக்கும்போது நிஜமாகவே அந்தக் கட்சியைக் கட்டமைக்க, ஏகப்பட்ட ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்று புரிகிறது.

திமுக உருவான கட்டத்திலிருந்து அண்ணாதுரை ஆட்சியில் ஏறுவதுவரை விளக்கும் இந்தப் புத்தகத்தில் ஈ.வி.கே.சம்பத் கட்சியிலிருந்து பிரிவது விரிவாகக் காணப்படுகிறது. இந்தக் கட்டம் மிக முக்கியமானது. அண்ணாதுரை கடைசிவரை இந்தப் பிளவு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள பல முயற்சிகள் எடுக்கிறார். ஆனால் முடியவில்லை. இதைப்பற்றி சம்பத் தரப்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் என்று நான் தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.

திமுக கட்டமைப்பில் அண்ணாதுரைக்கு அடுத்தபடியாக மதியழகன், சம்பத் (பின்னர் விலகிவிடுகிறார்), நெடுஞ்செழியன் போன்ற பலர் இருந்துள்ளனர். கருணாநிதியும் முக்கியமான தலைவர்கள் வரிசையில் உள்ளார். ஆனால் அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் கருணாநிதி எப்படி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பார்த்தசாரதி விளக்கவில்லை. புத்தகம் 1984-ல் நான்காம் பதிப்பாக விரிவாக்கி எழுதப்பட்டாலும், இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இந்தப் புத்தகத்தின் குறைகள் சில:

* சீனப்போருக்குப் பிறகு, தனித் திராவிட நாடு கொள்கையிலிருந்து, இந்திய நாட்டுக்குள்ளாக ஒரு கூட்டாட்சி (ஃபெடரல்) அமைப்பை நோக்கிச் செல்வதாக அண்ணாதுரை முடிவெடுப்பது, அதற்கு கட்சிக்குள் எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது ஆகியவற்றை சற்றே அதிகமாக விளக்கியிருக்கலாம்.

* பெரியார் என்ற நபர் புத்தகத்தின் ஆரம்பத்தில் வருகிறார். ஆனால் திமுக தொடங்கப்பட்டதும், அவர் வேறெங்குமே காணப்படுவதேயில்லை!

* திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த 1967 தேர்தல் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. அதற்கு முந்தைய தேர்தல்களில் கட்சி எந்தெந்தத் தொகுதிகளில் யாரை நிற்கவைத்தது என்பதுவரை தகவல் கொடுத்தவர், இதற்கும் நிறைய பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம்.

* புத்தக மொழி முழுவதுமே மேடைப்பேச்சு மொழியாகவே அமைந்துள்ளது. இதனால் பல இடங்களில் வாக்கியங்கள் முற்றுப்பெறுவதே இல்லை. குழப்பமான வாக்கியங்கள் பல உள்ளன. கடுமையான எடிடிங் தேவை.

* பின்னணித் தகவல்கள் போதவில்லை. இந்தி திணிப்புக்கான போராட்டம் பல கட்டங்களில் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அடிப்படைக் காரணத்துக்காக. தூண்டுகோல் பற்றிய விளக்கம் குறைவாக உள்ளது. அதேபோலவே குலக்கல்வித் திட்டம் பற்றியும் விளக்கம் குறைவுதான்.

தூரதர்ஷன் என்னும் தொல்லைக்காட்சி

எப்போதோ பார்த்த படம். பீட்டர் செல்லர்ஸ் நடித்த 'Being There'. ஒரு வயதானவர் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் குறைந்த ஐக்யூ உள்ள ஒரு மனிதர். எழுதப் படிக்கத் தெரியாதவர். வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் போனதில்லை. ஆனால் நல்ல உடையணிந்து பார்க்க பெரிய மனிதரைப் போலத் தோன்றுவார். தோட்டவேலை செய்ததுபோக, அவரது ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது. அந்தத் தொலைக்காட்சியின் ரிமோட்தான் அவரது உற்ற நண்பன். தொலைக்காட்சி வழியாக மட்டுமே அவர் கற்றதும் பெற்றதும்.

வயதானவர் செத்துப்போக, நடுத்தெருவுக்கு அனுப்பப்படும் சான்ஸ் கார்டெனர் வாழ்வின் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை.

கதை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு மனிதன் தொலைக்காட்சிமூலமாக மட்டுமே உலகை உணரமுடியுமா, அறியமுடியுமா? தனது புறவுலகை தொலைக்காட்சியின் அசையும் படங்களாலும் ஒலிக்கும் குரல்களாலும் மட்டுமே கட்டமைக்கமுடியுமா? அப்படி நடந்தால் என்ன ஆகும்?

அற்புதமான கற்பனை.

ஆனால் அந்தத் தொலைக்காட்சியில் தூரதர்ஷன் மட்டும்தான் தெரியும் என்றால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பகீர் என்கிறது.

நல்லவேளையாக எந்தத் தொலைக்காட்சி சானலும் என் புறவுலகைத் தீர்மானிக்கவில்லை. 'டிவி பார்த்தா கெட்டுப்போயிடுவான்' என்று என் வாத்தியார் அப்பா, நான் 12-வது தாண்டும்வரை டிவியே வாங்கவில்லை. அதற்குப்பின் நான் என் பெற்றோர் வீட்டில் வசிக்கவுமில்லை.

அடுத்த நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் கழித்த தினங்களில் தூரதர்ஷனைப் பார்த்துள்ளேன். மொத்தமாக ஐந்து நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வருகிறது. ஒவ்வொரு ஞாயிறு காலையும் வந்த ராமனந்த் சாகரின் ராமாயணம், வாராவாரம் புதன்கிழமை இரவு வரும் சித்ரஹார் - ஹிந்தி சினிமாப் படங்களின் ஒலியும் ஒளியும், வெள்ளிக்கிழமை தமிழ்ப் படங்களில் ஒலியும் ஒளியும், கடைசி இரண்டு வருடங்கள் பார்த்த என்.டி.டி.வியின் The World This Week-ம், அதில் பார்த்த ஈராக்-குவைத் போரும், தினம் பார்த்த தூரதர்ஷன் செய்திகளும்.

அதைத்தவிர என் நினைவில் இருப்பவை எல்லாம் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்', அதையே ஹிந்தி மொழியில் 'ருகாவட் கே லியே கேத் ஹை', ஙொய் என்ற சத்தத்துடன் பல வண்ண நெடுக்குப் பட்டைகளுடன் காட்சியளிக்கும் திரை, சமயோசிதமே இல்லாமல் மிக முக்கியமான கிரிக்கெட் மேட்சில், மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது செய்திகளுக்குக் கட் செய்வது...

அய்யோ! அப்புறம் அந்த கிரிக்கெட் மேட்ச்களை என்னவென்று சொல்வது. ஹாஸ்டலில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது சுகமான அனுபவம். ஆனால் அதற்கு முன்னரே பள்ளிக்கூடச் சிறுவனாக இருக்கும்போதே எப்போதாவது தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துள்ளேன். நான் வசித்த நகரம் ராஜீவ் காந்தியால் அப்போது ஆசீர்வதிக்கப்படவில்லை. எனவே வானம் நிர்மலமாக இருக்கும் பொழுதுகளில்மட்டுமே தொலைக்காட்சியில் பலவித டிசைன்களுக்கு இடையில் வெள்ளையுடை வீரர்கள் ஓடுவதும் நடப்பதும் தெரியும். அதுவும்கூட சாஸ்வதம் கிடையாது. எப்போதுவேண்டுமானாலும் திரை புள்ளிகளாக மாறலாம். யார் எப்படி அவுட்டானார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பதற்கு தனி சாமர்த்தியம் வேண்டியிருக்கும். பின் கொடைக்கானலிலோ கும்பகோணத்திலோ ஒரு டிரான்ஸ்மிட்டர் வைக்கப்பட்டதால் படம் கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது என்றார்கள். ஆனால் நான் கிறிஸ்டல் கிளியர் தொலைக்காட்சியை சென்னை வந்துதான் பார்த்தேன்.

தெருவோர சாயா கடையில் சிங்கிள் டீ அடிப்பவனை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டுபோய் டீ கொடுத்தால் எப்படியிருக்கும்? அங்கே பால், டீத்தூள் பொட்டலம், சர்க்கரை, சுகர் ஃப்ரீ என்று என்னென்னவோ வைத்திருப்பார்கள். இதை நாமே கலக்கி சாப்பிடுவதற்கு இவனுக்கு எதற்குப் பணம் என்று நாம் யோசிப்போம். எதையாவது தப்பாகச் செய்கிறோமோ என்று பயம் இருக்கும். நம்மை ஆங்காங்கே பயங்கர ஸ்டார்ச் போட்டு உடையணிந்த பேரர்கள் உளவு பார்ப்பதாகத் தோன்றும். கடைசியில் டீயே வேண்டாம் என்று ஓடிவிடுவோம்.

அதேபோல வெறும் தூரதர்ஷன் உலகத்திலிருந்து பல சானல்கள் இருக்கும் அமெரிக்க கேபிள் டிவி உலகத்துக்குச் சென்றது பயங்கர கல்ச்சர் ஷாக்காக இருந்தது. பொருள்களை விற்பதற்கு என்றே தனி சானல். சதா 24 மணி நேரமும் செய்திகளுக்கு என்று சில சானல்கள். அல்லேலுயா சானல்கள். ஒரே காதலனுக்காக 'நீ முண்டை, நான் முண்டை' என்று அசிங்க அசிங்கமாகத் திட்டிக்கொண்டே ஒருவர்மீது ஒருவர் பாய்ந்து அடித்துக்கொள்ளும் பெண்கள், ஆங்காங்கே பீப் பீப் என்று கெட்டவார்த்தைகளை சென்சார் செய்தவண்ணம் இருக்கும் ரியாலிட்டி தொலைக்காட்சி சானல்கள். (அந்தக் காதலன் ஒய்யாரமாக ஒருபக்கம் சாய்ந்தவாறு, விவஸ்தையே இல்லாமல் உட்கார்ந்திருப்பான்.) சினிமாப் படங்களுக்கு என்றே 24 மணிநேரமும் இயங்கும் சானல்கள்.

எல்லாம் இருந்தும் நான் அமெரிக்காவைவிட்டு மீண்டும் இந்தியா வரும்வரையில் கிரிக்கெட் மட்டும் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாய்க்கவில்லை.

மீண்டும் இந்தியா வந்து பார்த்தால், தெருவோரக் கடையில் டீ ருசித்தது. ஆனால் தூரதர்ஷனைப் பார்க்கும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. சொஃபிஸ்டிகேஷன் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பார்கள். அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத, யோசனை துளிக்கூட இல்லாத, போரடிக்கும் சானல்கள். மற்றொரு பக்கம், போட்டிபோட்டுக்கொண்டு கிளம்பியிருந்த கேபிள் சானல்கள், படுபயங்கர வேகத்தில் முன்னேறினார்கள். தூரதர்ஷன் மட்டும் கடந்த காலத்திலேயே இருந்தது.

இத்தனைக்கும் அரசு நடத்தினால் அது மோசமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அரசே நேரடியாக நடத்தாவிட்டாலும் பொதுமக்கள் காசில் நடக்கும் பிபிசியைப் பாருங்களேன்? பொறாமைப்பட வைக்கிறார்கள். அட, இப்போது சீன அரசு நடத்தும் ஆங்கில மொழிச் சானலான CCTV-9 எவ்வளவு ஒய்யாரமாக சீனாவை உலகுக்குக் காட்டுகிறது? இதே வேலையை நம் மானம் கப்பலேறிப் போகும் அளவுக்கு தூரதர்ஷனும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டுதானே இருக்கிறது தினம்தினம்?

தூரதர்ஷன் நாளைக்கே நிறுத்தப்பட்டால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடமாட்டேன். கடவுள் புண்ணியத்தில் நாளைக்கு தூரதர்ஷனை தனியார்வசம் ஒப்படைத்தால்தான் அதை இனி மனிதன் உட்கார்ந்து பார்க்கமுடியும்.

Tuesday, March 04, 2008

2008-09 இந்திய பட்ஜெட்

மைய அரசின் நிதிநிலை அறிக்கைமீது இப்போதெல்லாம் அதிக சுவாரசியம் இருப்பதில்லை.

என் பார்வையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வந்துள்ளன. முதலாவது விஷயம், வருமான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம். குறைந்தபட்சம் ரூ. 4,000-லிருந்து, கிட்டத்தட்ட ரூ. 50,000 வரை சேமிப்பு இருக்கும். (பெண்களுக்கு, சீனியர் குடிமகன்களுக்கு சற்றே மாறுபடும்.) இது நிச்சயமாக நல்ல செய்திதான். சந்தோஷம் தரக்கூடியதே.

இரண்டாவதாக விவசாயக் கடன் ரத்து. எந்தக் கடன் ரத்தும் எனக்கு ஏற்புடையது அல்ல.

அட, உன் வரியைக் குறைத்தால் சந்தோஷப்படும் நீ, அடுத்தவன் கடன் சுமையைக் குறைத்தால் அதை ஏற்பதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

இரண்டையும் நான் சமமாகக் கருதவில்லை.

வரிச்சலுகை வேறு, கடன் ரத்து வேறு.

ஒரு பக்கம், அரசு பொதுமக்களிடமிருந்து இதுவரை வரியாகப் பெற்ற பணத்தை சற்றே குறைத்துப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஏன் இப்படிச் செய்யவேண்டும்? அரசு எதிர்பார்த்ததைவிட இப்போது அதிகமான வருமான வரி சேகரமாகிறது.

முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் அதிகமானபேர் வருமான வரி கட்டியுள்ளனர். நாட்டின் ஜிடிபியுடன் ஒப்பிட்டால் அதிக சதவிகிதம் வரி அரசுக்குச் சேர்கிறது. மக்கள் மனத்தில் வரி ஏய்க்கவேண்டும் என்ற எண்ணம் சற்றே குறைந்துள்ளது என்று இதிலிருந்து தெரிகிறது. இதனால் அரசு மக்களுக்கு கொஞ்சம் ரிபேட் கொடுத்துள்ளது.

இப்போதும்கூட பலர் வருமான வரியிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஏமாற்றவேமுடியாதவர்கள் என்று பார்த்தால் அது மாதச் சம்பளக்காரர்கள்தான்! ஏன் ஏமாற்றமுடியாது? இவர்களது வரியை இவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே சம்பளத்திலிருந்து பிடித்து முழுமையாகக் கட்டிவிடவேண்டும்.

நீங்கள் தொழில் செய்கிறீர்கள் என்றால், உங்களது வருமானத்திலிருந்து உங்கள் செலவுகளைக் கழித்துக்கொண்டு மீதமுள்ளதற்கு மட்டும் வரி கட்டலாம். ஆனால் நீங்கள் ஒரு அலுவலகத்தில் சம்பளத்துக்கு வேலை செய்கிறீர்கள் என்றால் இந்தச் செலவு, அந்தச் செலவு என்று கழித்துக்கொள்ளமுடியாது.

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இல்லாது, ஒப்பந்தக்காரராக (contractor) பணிபுரிகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது 'ஊதியத்தில்' 10.3% வரியாகப் பிடித்து கட்டிவிட்டு, மீதத்தை உங்களுக்குத் தந்துவிடுவார்கள். இந்த 10.3% என்பது TDS - Tax deducted at source. நீங்கள் உங்கள் வரியைச் செலுத்தும்போது, உங்களது செலவுகள் பலவற்றைக் கழித்துக்கொள்ளலாம். உதாரணமாக பெட்ரோல் செலவு, ஓட்டுனர் இருந்தால் அவரது சம்பளத்தில் ஒரு பகுதி அல்லது முழுப்பகுதி, உங்களது வேலையை/ஒப்பந்தத்தை நிறைவேற்ற உங்களுக்குத் தேவையாக இருக்கும் பொருள்களை வாங்கச் செலவழித்த தொகை ஆகியவற்றைக் கழித்துக்கொள்ளலாம். நீங்கள் வேறு சிலரை உங்களுக்குக்கீழ் வேலை செய்ய வைத்துக்கொண்டதாகக் காண்பித்து அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைச் செலவாகக் கழித்துக்கொள்ளலாம். இங்கு 'திருட்டுத்தனம்' செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. செய்யப்படுகிறது.

நீங்கள் சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் என்றால் (டாக்டர், வக்கீல், முடிவெட்டுபவர்...) இதேபோல உங்களது வருமானம், உங்களது செலவுகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மிச்சம் இருக்கும் தொகையில் பல கழிவுகளைக் கணக்கில் எடுத்து, மீதத்துக்கு வரி கட்டுகிறீர்கள்.

ஆனால் மாதச் சம்பளக்காரர்களால் இதையெல்லாம் செய்யமுடியாது. அவரது மாதச் சம்பளத்தை முன்வைத்து அவரது ஆண்டு வருமானம் எவ்வளவு என்று கணக்கிட்டு அடிப்படைப் பிடித்தங்கள்போக (அதற்கு ரசீதுகளைக் காண்பித்தாகவேண்டும்) மீதத்துக்கு கறாராக வரியைக் கணக்கிட்டு, மாதாமாதம் அந்த வரி பிடிக்கப்பட்டு, அந்தந்த மாதமே அரசிடம் கட்டப்பட்டுவிடும்.

மாதச்சம்பளக்காரர் பகுதிநேரத் தொழில் ஒன்றைச் செய்து அதில் நஷ்டம் வந்தது என்றால் அந்த நஷ்டத்தைத் தனது மாதச் சம்பளத்தில் கழித்துவிட்டு வரி கட்டமுடியாது. ஆனால் டாக்டர் ஒருவர், தனது டாக்டர் தொழிலுடன் ஒரு பெட்டிக்கடையையும் வைத்திருப்பதைக் காண்பித்து (நிஜமாகவே அப்படி ஒன்று இருந்தால்) ஒன்றில் வரும் லாபத்தை மற்றொன்றில் வரும் நஷ்டத்துடன் இணைத்து மொத்தம் லாபமாக அல்லது நஷ்டமாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல வரி கட்டலாம்.

நிறுவனங்கள் மாதச் சம்பளக்காரர்களுக்கு பல சலுகைகள் (allowance) கொடுத்துவந்தன. இதில் ஏதோ வரி ஏய்ப்பு நடக்கிறது என்று நினைத்து சிதம்பரம் fringe benefit tax (FBT) என்ற கொடூரமான வரியைக் கொண்டுவந்தார். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் - FBT என்பது நிறுவனங்களுக்கு திகிலை ஏற்படுத்தும் ஒரு விஷயம். இதனால் பல நிறுவனங்களும் FBT வலைக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அலவன்ஸுகளை மொத்தமாக நிறுத்தினர். விளைவாக, கையில் கிடைக்கும் மொத்த வருமானத்துக்கும் மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கட்டவேண்டி இருந்தது. இப்போது மாதச் சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் அதிகமான ரிலீஃப் கிடைத்துள்ளது. FBT இன்னமும் இருக்கிறது.

இந்தப் பிரச்னைகள் ஏதும் இன்றி, சுயதொழில் செய்வோர் தங்களது செலவுகளைக் கழித்து, வரிச்சுமையைக் குறைக்கமுடியும். அவர்களுக்கும் இந்த வரி மாறுதல்களால் அதிகமான லாபம்தான். ஆனால் நிஜமாகவே மகிழ்பவர்கள் மாதச் சம்பளக்காரர்களே.

***

ஆனால் கடன் விவகாரம் என்பது முற்றிலும் வேறு.

விவசாயிகள் பெறும் கடனை ரத்துசெய்யும்போது பல விஷயங்கள் கவனிக்கப்படுவதில்லை.

விளைச்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட விவசாயி யார், பாதிக்கப்படாதவர் யார் என்று தீர்மானிப்பது கிடையாது. ஒட்டுமொத்த கடன் ரத்து ஏற்படுகிறது. இரண்டு ஹெக்டேர் என்று நிலத்துக்கு ஒரு வரம்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியா முழுமையிலும் 2 ஹெக்டேர் வைத்து விவசாயம் செய்த அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா, என்ன? ஒருவருக்குக்கூடவா லாபம் ஏற்படுவதில்லை.

விவசாயம் என்பது ஒரு புனிதப்பசுவாகி விடுகிறது. விவசாய வருமானத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை. அவர்கள் உணவு தயாரிப்பதால் (அதில் பலரும் காட்டாமணக்குமுதல் மல்லிகைப்பூவரை எதை வேண்டுமானாலும் பயிரிடலாம்!) அவர்களுக்குச் சிறப்பிடம் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், விவசாயத்தை வளரவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துவிடுகிறோம். கடன் ரத்து என்பதே அத்தகைய ஒரு விஷயம்தான். அடுத்தமுறை எந்த வங்கியும் விவசாயக் கடன்களைக் கொடுக்காமல் அதற்குபதில் பணம் ஒழுங்காகத் திரும்பக் கிடைக்கும் மைக்ரோஃபைனான்ஸ் பக்கம் போய்விடுவார்கள்.

விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை என்றால் அதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. விதை, உரம், பூச்சிக்கொல்லி, தண்ணீர், சாகுபடிக்கான காப்பீடு, பொருள்களைப் பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதன வசதி, நல்ல கொள்முதல் விலை - இவற்றில் எங்கு பிரச்னை என்பதைக் கவனிப்பதில்லை நாம்.

இயற்கை விவசாயத்தை முன்வைக்கவேண்டுமா? கொள்முதல் விலையை வெகுவாக அதிகரிக்கவேண்டுமா? சாகுபடிக்குக் கட்டாயக் காப்பீடு எடுக்க விவசாயிகளை வற்புறுத்தவேண்டுமா? அல்லது காப்பீட்டுக்கான பிரீமியத்தை அரசே செலுத்தவேண்டுமா? தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைக் குறைவான விலையில் (இலவசமாக அல்ல), வேண்டிய அளவு தர முயற்சிகள் எடுக்கவேண்டுமா?

இவற்றை விட்டுவிட்டு கடன்களை ரத்துசெய்வதால் என்ன விளைவு ஏற்படும்? வங்கிகள் அனைத்தும் பிரச்னையில் மாட்டும். அதுவும் அரசாங்க வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும்தான் பிரச்னையில் மாட்டும். தனியார் வங்கிகள் இதில் ஈடுபடுவதே இல்லை. கொடுத்த கடன் திரும்பி வராமலே போகலாம் என்பதால்தான் தனியார் வங்கிகள் விவசாயம் பக்கமே போக பயப்படுகிறார்கள்.

***

வரி விகிதத்தில் உள்ள மாற்றம் ஏப்ரல் மாதம் முதலே மாதச் சம்பளக்காரர்களைத் தொட்டுவிடும். அவர்கள் மாதம் வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோகும் தொகை அதிகரிக்கும். விவசாயக் கடன் ரத்து பற்றி சிதம்பரம் அறிவித்துவிட்டாரேதவிர இன்னமும் எப்படி இதனைச் செயல்படுத்துவது என்று யோசித்து முடிக்கவில்லையாம். எனவே நடைமுறைக்குவர நாளாகும். அதற்குள் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்ற அரசு வங்கித் தலைமையில் உள்ளவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்.

கருணாநிதி/அன்பழகன் செய்ததுபோல, சிதம்பரமும் வங்கிகளுக்குக் கடன் பத்திரங்களைக் கொடுத்து நழுவிக் கொள்ளலாம். வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் உதை வாங்கும். அவர்களது லாபம் குறையும். கேஷ் ஃப்ளோவிலும் பிரச்னை வரும்.

இல்லாவிட்டால் சிதம்பரம் இன்னொன்றைச் செய்யலாம். வருமான வரி கட்டும் அனைவரும் 3% சிறப்புக் கல்வி வரி (educational cess) என்பதை சேர்த்துக் கட்டுகிறோம். இதுவே சிதம்பரம் உருவாக்கிய பஜனை வரி. நேரடி வரி வருமானத்திலிருந்து கல்விக்கு அதிகமாகச் செலவு செய்யாமல் அங்கும் இங்கும் திரட்டி கல்விக்குச் செலவழிப்பதாகப் போக்கு காண்பிக்கிறார். 2% என்று ஆரம்பித்து இப்பொது 3% ஆக்கியுள்ளார். அதேபோல விவசாயச் சிறப்பு வரி (agricultural cess) என்று மேலும் ஒரு 2%-3% சேர்க்கலாம். அதில் வரும் பணத்தைக்கொண்டு கடன் ரத்துக்கு பதிலாக விவசாயிகளுக்கு மான்யமாகக் கொடுக்கலாம்.

***

இந்த இரண்டு மாயாபஜார் வேலைகளைக் கொண்டு வாக்குகளை வாங்கிவிடுமா காங்கிரஸ் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

Monday, March 03, 2008

மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை

இன்று (3 மார்ச் 2008) தினமணி நடுப்பக்கக் கருத்துப்பத்தியில் மாலன் 'தடுமாறுகிறார் முதல்வர், ஏன்?' என்ற தலைப்பில் எழுதியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1. திருமாவளவன் 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தியதனால் அவர் கைதுசெய்யப்படவேண்டுமா என்ற கேள்விக்கு மாலன் இவ்வாறு எழுதுகிறார்:
திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது 'தெரியாமல்') அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. "விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக'' என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?
இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும். மற்றபடி, 'புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன்' என்று திருமாவளவன் சொல்லியிருந்தால், அவர்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது புலிகளுக்காக என்பதனால் அல்ல, ஆயுதம் கடத்துதல் என்ற இந்தியச் சட்டங்களுக்குப் புறம்பான ஒரு விஷயத்தை முன்வைத்ததனால். அதுவும்கூட இதைப்போன்ற ஒரு விருப்பத்தைத் தெரிவித்ததனால் கடுமையான தண்டனைக்கு ஒருவரையும் உள்ளாக்கமுடியாது. ஆனால் திருமாவளவனது நண்பர்கள் அவரிடம் இதுபோன்று தேவையற்று வாயைக் கொடுத்து உளறி, உங்களது செயலை, விடுதலைப் புலிகளுக்கான தார்மீக ஆதரவை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லவேண்டும்.

2. தமிழ்ச்செல்வன் கொலை விவகாரம் பற்றி மாலன் இவ்வாறு எழுதுகிறார்:
தமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.
இது கடுமையான வலதுசாரிக் கருத்து. இதனை எந்த லிபரல் சிந்தனை உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் பர்வீஸ் முஷரஃப் பாகிஸ்தான் ராணுவத்தில் பலகாலம் பணிபுரிந்து, பல இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றவர். கடைசியாக கார்கில் யுத்தத்தின்போது பல இந்திய ராணுவ வீரர்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். ஆனால் அவர் பாகிஸ்தானின் அதிபராக (இத்தனைக்கும் மக்களால் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கூடக் கிடையாது) இந்தியா வருகிறார். இந்தியாவின் டிப்ளோமேட்டிக் மரியாதை அத்தனையையும் வாங்கிக்கொள்கிறார். கட்டியணைத்து அவரை வரவேற்கிறார்கள் இந்தியாவின் தேசபக்தியைக் கட்டிக் காக்கப் பிறந்துள்ளதாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் வாஜபேயி, அத்வானி ஆகியோர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. இறையாண்மை உள்ள நாடுகள் அல்லது பிரிவினைக்குப் போராடும் தலைமை அமைப்புகள் சொல்வதை அந்தந்தப் படைவீரர்கள் செய்கின்றனர். தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது? தமிழ்ச்செல்வன் அப்பொது அங்கீகரிக்கப்பட்ட அமைதிப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போர்நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் அமுலில் இருந்தது. (இருபக்கமும் அதைத் தினம் தினம் மீறிக்கொண்டிருந்தனர் என்பது வேறு விஷயம்.) நார்வே தலைமையிலான அமைதிக்கான குழு தமிழ்ச்செல்வனை விடுதலைப்புலிகளின் சிவிலியன் அதிகாரி என்ற முறையிலேயே சந்தித்துப் பேசிவந்தனர். அந்த நிலையில் தமிழ்ச்செல்வன்மீது குண்டுவீசிக் கொன்றது எந்தவித யுத்த தர்மத்துக்கும் முரணானது என்பதை மனித நேயமுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது. மேலும் மாலன் இவ்வாறு சொல்கிறார்:
தமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு.
இது சரியான விவாதம் அல்ல. காந்தியும் கிங்கும் முழுக்க முழுக்க அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்ச்செல்வனை அவர்களோடு ஒப்பிட முடியாது. யாரோடு ஒப்பிடலாம்? ஃபிடல் காஸ்ட்ரோ? யாசிர் அரஃபாத்? மாவோ? இவர்கள் அனைவருமே துப்பாக்கி ஏந்திச் சண்டை போட்டவர்கள். பிறரை சண்டையில் கொன்றவர்கள். இதில் காஸ்ட்ரோவும் மாவோவும் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை ஆண்டவர்கள். ஆனால் அரஃபாத் கடைசிவரை நாடு கிடைக்காமல், தன் மக்களுக்கு முழுமையான வழியைக் காட்டாமல் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக உயிரை விட்டார். தமிழ்ச்செல்வன், துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டவர்தான். ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டபோது அவர் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைதிப்பணியைத்தான் செய்துவந்தார் என்பதை ஏன் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதாவது இன்றைய பி.எல்.ஓவின் அப்பாஸ்போல. பொட்டு அம்மான்மீதோ பிரபாகரன்மீதோ குண்டுவீசித் தாக்கியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால் தமிழ்ச்செல்வன்மீதான் தாக்குதல் நிச்சயம் உலக நாடுகளால் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

3. தமிழக முதல்வர் கருணாநிதி தடுமாறுகிறாரா என்பதைப் பற்றி மாலன் கட்டுரை முழுக்க ஆராய்கிறார். மொத்தத்தில் மாலனின் வாதம் இதுதான்:
விடுதலைப் புலிகளை அவர் [கருணாநிதி] ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை.

...

கருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?
ஆக, விஷயம் இதுதான். கருணாநிதியும் திமுகவும் மிகவும் டெலிகேட்டான ஒரு சூழ்நிலையில் உள்ளனர். உணர்வுரீதியாக விடுதலைப் புலிகளது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் அரசியல்ரீதியாக அதனை வெளிப்படையாகச் சொல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வருத்தம் கொடுக்கும் எதையும் திமுகவால் இப்போது செய்யமுடியாது. இந்த தர்மசங்கடமான நிலையில் கருணாநிதி தனது நிலையை விளக்கியாகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவோ, பத்திரிகையாளராக மாலனோ கேட்பது நியாயம்தான்.

முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.

கருத்துரிமை மீட்பு மாநாடு பற்றி நான் எழுதியது: திருமாவளவனுக்கு ஆதரவாக

கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்

இப்போது நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டங்களின்போது ஏற்பட்டுவரும் விவாதங்கள், பிரச்னைகள் அனைத்துமே ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு இடையே இதற்குமுன் இருந்த மின் அதிர்வுகள் இப்போது இல்லை. அதேபோல இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டங்களிலும் இப்போது கடும் போட்டி இருப்பதில்லை. இடையில் சில காலம் மட்டுமே இருந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆட்டங்களின் சுவாரசியமும் இப்போது இல்லை.

ஆனால் இப்போது இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டங்களில் மட்டுமே கடுமையான போட்டி நிலவுகிறது. தங்களை சாம்பியன் என்று கருதிவரும் ஆஸ்திரேலிய மீடியா, விசிறிகள், விளையாட்டு வீரர்கள் அனைவருமே இதனை எதிர்பார்க்காததால் தங்களது கோபத்தை எதிரணியின்மீது திருப்புகிறார்கள். இந்திய அணி வீரர்களுக்கு சொஃபிஸ்டிகேஷன் பத்தாது. ஆனால் போட்டி மனப்பான்மை (காம்பெடிடிவ் ஸ்பிரிட்) ஜாஸ்தி. கங்குலி காலத்திலிருந்து தொடர்வது இது.

அதன் விளைவாகவே இன்று நாம் பார்க்கும் பிரச்னைகள், விவாதங்கள் அனைத்துமே வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடியது. அதனை அடுத்து, ஹர்பஜன் சிங்மீது மற்றுமொரு குற்றச்சாட்டு. ஏற்கெனவே ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா ஆகியோர்மீது ஆட்ட நடுவர் தண்டனை விதித்துள்ளார். இதில் ஹர்பஜன்மீது இனவெறி என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஆஸ்திரேலிய வீரர்கள் - ஹெய்டன், கிளார்க், பாண்டிங், சிமான்ஸ் ஆகியோர் இந்திய வீரர்களிடம் மோசமாக நடந்துகொண்டுள்ளனர். வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை இனவெறி என்ற கட்டத்துக்குள் இந்தியா அடைக்கவில்லை. ஆஸ்திரேலிய மீடியா இந்த அபத்தத்துக்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது.

ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு கறுப்பினத்தவர் விளையாடுகிறார். அவரும் இங்கிலாந்தில் வளர்ந்தவர். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகத்தவர், பிற நாடுகளிலிருந்து வந்து ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர் என்று ஒருவர்கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. சில வருடங்களுக்குமுன் ரிச்சர்ட் சீ-க்வீ என்ற சீன (ஹாங் காங்?) வம்சாவளியினர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவ்வளவுதான். இதுதான் ஆஸ்திரேலியாவின் சமதர்ம, சமத்துவ, இன அமைதிக் கொள்கை.

அதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காத ஆஸ்திரேலிய மீடியா, கிடைத்த ஒரே வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று சிமான்ஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. கறுப்போ/வெள்ளையோ, சிமான்ஸ், சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் சதா வாயால் பேசி எதிரணி வீரர்களைத் தாக்கும் ஒரு பேர்வழி. ஹெய்டன், நேற்றைக்கு விளையாட வந்துள்ள மைக்கேல் கிளார்க், அணித்தலைவர் பாண்டிங் என்று ஒருவர்கூட 'வாய்வார்த்தை' விஷயத்தில் நேர்மையான ஆட்டக்காரரில்லை. இதில் இவர்கள் அடுத்த அணி ஆட்டக்காரர்களைப் பற்றிக் குறைசொல்வது மகா அபத்தம்.

***

இந்தியா அடுத்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று, காமன்வெல்த் கோப்பையைக் கைப்பற்றுவதுதான் ஆஸ்திரேலிய மீடியாவுக்குக் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

Buy NHM BOOKS on

Amazon

Kizhakku Nalam Varam

மொழிபெயர்ப்புகள்

என் புத்தகங்கள்

  
  
  
  

துறைகள்