Wednesday, September 09, 2009

நீங்க தமிழா?

சென்ற வாரம் நானும் சத்யாவும் திருநெல்வேலி சென்றிருந்தோம். திருநெல்வேலியில் கிழக்கு பதிப்பக ஷோரூம் திறக்கும் விழா. ரயில் நிலையத்திலிருந்து நேராக ஹோட்டல் சென்றோம். தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாக மாற்றி, லோக் சபா என்ற அருமையான சானலில் வந்து நின்றோம்.

சரோஜ் பாண்டே என்ற மத்தியப் பிரதேச பாஜக (பெண்) எம்.பியுடன் ஒரு பேட்டி நடந்துகொண்டிருந்தது. பேட்டி இந்தியில். நான் ஷேவிங் செய்துகொண்டிருக்கும்போது ஹோட்டல் பையன் அறைக்குள் நுழைந்தான். எதோ புரியாத பாஷை டிவியில் ஓடிக்கொண்டிருந்ததால் சத்யாவிடம் ‘இது என்ன பாஷை?’ என்று விசாரித்தான். சத்யா ‘இந்தி’ என்று பதில் சொன்னான்.

சிறிது நேரம் கழித்து நான் வெளியே வந்து டீ குடித்துவிட்டு கம்ப்யூட்டரைக் குடைந்துகொண்டிருந்தேன். அதே பையன் திரும்பி வந்தான். அப்போதும் லோக் சபா சானல்தான் ஓடிக்கொண்டிருந்தது. பையன் என்னுடன் பேச ஆரம்பித்தான்.

‘தமிளு தெரியுமா?’

‘ஏம்ப்பா, நல்லா தெரியுமே?’

‘இல்ல, ஒங்களைப் பாத்தா தமிளு மாதிரி தெரியல...’

‘அப்படின்னா என்னப்பா அர்த்தம்? பார்த்தாலே தமிழ்னு எப்படிப்பா சொல்லமுடியும்?’

‘சுத்தி உள்ள ஆளுங்களப் பாருங்களேன்? உங்களப் பாத்தா வேற ஆளுங்க மாதிரி இருக்கீங்க. தமிளங்க வேற மாதிரி இருப்பாங்க.’

பையன் சொல்லவந்தது தோல் நிறத்தை என்று நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தில், தென் தமிழகத்திலும் சேர்த்து, வெளுத்த தோல் முதல் கறுத்த தோல் வரையிலும், இடைப்பட்ட பல்வேறு ஷேட்களிலும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

பையனுக்கு நம்பிக்கை பிறக்கவே இல்லை. அடுத்த அறையில் எங்கள் சேல்ஸ் மேனேஜர் மணிவண்ணன், ரீஜனல் சேல்ஸ் மேனேஜர் சசி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் சென்று, ‘சார் அவங்க, அவங்களா இல்ல வேறயா’ என்று விசாரித்திருக்கிறான். (நாங்கள் நிஜமாகவே தமிழர்கள்தானா என்பதுதான் அந்தப் பையனுடைய கேள்வி என்று நான் நினைக்கிறேன்.) மணிவண்ணன் முற்றிலுமாகக் குழம்பிப்போய் விட்டார்.

கடைசிவரை அந்தப் பையன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித முகபாவத்துடன் சிரித்தபடியே இருந்தான்.

அடுத்தமுறை திருநெல்வேலி போகும்போது அவனிடம் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று பாடி, நான் தமிழன்தான் என்று நிரூபிக்கவேண்டும்.

11 comments:

  1. சிவப்புத்தோல், மீசையற்ற மிக உருண்டை முகம் தான் பையனின் சந்தேகத்திற்கு காரணம். எங்கே ஹரனை பார்த்து சந்தேகப் படச் சொன்னால் கூட உங்களை நம்ப மாட்டான்.

    ReplyDelete
  2. அரவிந்தசாமி, மாதவன், அப்பாஸ், ஷாம் மாதிரியான கதாநாயகர்கள் இங்கே சினிமாவில் எடுபடாமல் போனதற்கு இது முக்கிய காரணம்.

    இதுக்காக ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ பாட வேண்டாம்.

    ‘நான் அடிச்சா தங்க மாட்ட... நாலு மாசம் தூங்க மாட்ட’ன்னு ஒரு விஜய் பாட்டு வருது. அதை மனப்பாடம் பண்ணிட்டு போங்க!

    ReplyDelete
  3. சிம்பிள். நல்ல தமிழனுக்கு இலக்கணம் மீசை. அப்பறம், இந்தி தெரியாம இருப்பது. மற்றபடி திருநெல்வேலிக்காரங்க ரொம்ப வெகுளி. அம்மாதான் அவங்களுக்கு தமிழ்த்தாய் கன்னிமேரி எல்லாம்.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு. லைட்டான மேட்டர டைட்டா சொல்லி இருக்கீங்க. நீங்க இன்ஃபார்மலா பேசற விஷயங்கள் எல்லாமே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

    ReplyDelete
  5. nalla kattanya, neenga ellam tamil thanu, i think he used to read your blogs, so he got dout. am i correct?

    ReplyDelete
  6. சத்யாவுக்கு மீசை உண்டு என்பதை நினைவில் வைக்க!

    ReplyDelete
  7. //அடுத்தமுறை திருநெல்வேலி போகும்போது அவனிடம் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று பாடி, நான் தமிழன்தான் என்று நிரூபிக்கவேண்டும்.//

    கஷ்டம் ...

    அதை விட எளிது நாக்க முக்க, அல்லது லாலாக்கு டோல் டப்பி மா, அல்லது சிக்கு புக்கு ரயிலே என்று ஏதாவது முயற்சிக்கலாம்

    ReplyDelete
  8. 1. நீங்களும் சத்யாவும் பொதுவாகத் தமிழில் பேசுவதில்லை என்பது காரணமாயிருக்கலாம்

    2. சத்யாவுக்கு மீசை இருந்தாலும் ஒருமாதிரி வடகர்நாடக முகவெட்டு என்பது காரணமாயிருக்கலாம்

    3. வாராத தலையும் மீசையற்ற முகமும் அழுக்கு அரை டிராயரும் டிஷர்ட்டுமாக நீங்கள் அவனுக்கு ஒரு பீடாக்கடைக்காரராகத் தோற்றமளித்திருக்கலாம். எனவே சேட்டு என நினைத்திருக்கலாம்

    4. அறைக்குள் நீங்கள் செருப்பு அல்லது ஷூ அணிந்திருக்கலாம்

    5. உங்கள் லேப்டாப்பில் சவீதாபாபி போன்ற இந்தி பின்னவீனத்துவ இலக்கிய சைட் ஏதாவது ஓப்பன் ஆகியிருக்கலாம். அது அவன் கண்ணில் பட்டிருக்கலாம்

    6. நீங்கள் ஓர் ஹிந்திக்காரர் என்று பிரசன்னாவோ யாரோ முன்னதாகச் சொல்லிவைத்துப் பழிவாங்கியிருக்கலாம்.

    மேலும் பல காரணங்களும் சொல்லலாம். ஆனால் நீங்கள் தமிழர்தான் என்பதை நிரூபிக்க கொங்குதேர் வாழ்க்கை சொன்னால் நீங்கள் ஹிந்திக்காரர்தான் என்பது அவனுக்கு மிகவும் உறுதியாகிவிடும் அபாயமும் உள்ளது.

    ReplyDelete
  9. நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்திருந்தீர்களா ?

    ReplyDelete