Tuesday, January 26, 2010

வளையல் கிரகணம்

ஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா?’ என்று கேட்டார்.

மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில் மட்டும்தான் இந்த வளையல் (அல்லது கங்கண) சூரிய கிரகணம் தெரியும். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் குறை கிரகணம் மட்டுமே தெரியும்.

வளையல் கிரகணம் ஏன் ஏற்படுகிறது?

சூரிய கிரகணம் என்பது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது ஏற்படுவது. சூரியன் என்பது மிகப்பெரிய கோளம். சூரியனுடன் ஒப்பிடும்போது சந்திரனின் விட்டம் மிக மிகச் சிறியது. ஆனாலும், சூரிய, சந்திர மையப்புள்ளிகளை நீட்டி ஒரு நேர் கோடாக்கி இழுத்து பூமியில் விட்டால் அது விழும் புள்ளிக்கு அருகில் இருப்பவர்களால் சூரியனை (பொதுவாக) முற்றிலும் பார்க்கமுடியாது. இந்தப் பகுதிக்கு umbra (கருநிழல்) என்று பெயர். இந்த மையப்பகுதிக்கு இரு புறமும் இருக்கும் பகுதிக்கு penumbra (புறநிழல்) என்று பெயர்.

ஆனால் சந்திரன் பூமியிலிருந்து சற்று அதிகத் தொலைவில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனால் சூரியனை முற்றிலுமாக மறைக்கமுடியாது. அந்தக் கட்டத்தில் சூரியனின் வெளிப்புற வட்டம் மட்டும் பிரகாசமாகத் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் பகுதி சந்திரனால் முற்றிலுமாக மறைக்கப்படும். ஜனவரி 15 அன்று அதுதான் நடந்தது.

நாங்கள் ராமேஸ்வரம் செல்லலாம் என்று முடிவெடுத்த அதே நேரம், தமிழக ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலாவும் ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். நிச்சயம் கிரகணம் என்னும் அபூர்வ அறிவியல் நிகழ்வைப் பார்க்க அல்ல என்றே நினைக்கிறேன். எதோ புண்ணியம் சம்பாதிக்க என்று சந்தேகம்... ஆனால் எங்கள் பாவத்தை நிச்சயம் சம்பாதித்தார். தங்க ஓர் இடமும் கிடைக்கவில்லை. கடைசியில் ராமநாதபுரத்தில் தங்கிக்கொண்டு ராமேஸ்வரம் சென்று பார்க்கலாம் என்று முடிவானது. ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்ல நல்ல தரமான சாலை. ஒரு மணி நேரம்தான் ஆகிறது.

14-ம் தேதி அன்றே வெள்ளோட்டம் விட ராமேஸ்வரம் சென்றோம். அன்றே ஆளுநருக்காக ஊரில் கெடுபிடி. ஓட்டல் தமிழ்நாடு உணவு விடுதியில் சாப்பிடும்போது தமிழ்நாடு வானியல் சங்கத்தின் உறுப்பினர்கள் பேரா. அனந்தனை அடையாளம் கண்டுகொண்டனர். கூட்டமாக வந்து அவருடன் பேச ஆரம்பித்தனர். சங்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், பல இளைஞர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் ஓலைக்குடா விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர். அங்கேயே வந்து அடுத்த நாள் நிகழ்வைப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதுவும் நல்லதாகப் போயிற்று.

இந்தச் சங்கத்தினருடன் வட வங்காள வான் நோக்குனர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் அதே விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்கள் பலரும் தரமான கருவிகளுடன் வந்திருந்தனர். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பல ஃபில்டர்களையும் எடுத்து வந்திருந்தனர். தமிழ்நாடு வானியல் சங்கத்தின் விஜயகுமார் தானே தயாரித்திருந்த ஃபில்டர் பொருத்திய பைனாகுலருடன் கேமராவை வைத்துப் படம் பிடிக்கும் கருவியைக் கொண்டுவந்திருந்தார். பேரா. அனந்தன், சில வெல்டிங் ஃபில்டர் கண்ணாடிகளைக் கொண்டுவந்திருந்தார்.

14 அன்று தனுஷ்கோடி சென்று அங்கே இருந்து கிரகணத்தைக் காணமுடியுமா என்று பார்த்தோம். ஆனால் அங்கு வசதிகள் போதாது என்று தீர்மானித்து, ஓலைக்குடாவுக்கு வந்துவிடுவது என்று முடிவெடுத்து, அன்று இரவு ராமநாதபுரம் மீண்டோம்.

15 காலையில் சீக்கிரமாகக் கிளம்பி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். ஆளுநர் கெடுபிடி தாங்கவில்லை. எல்லாவித முக்கியமான வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இரு ஆட்டோக்களைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி, ஏதேதோ பின்வழிகள் வழியாக ஓலைக்குடா நோக்கிப் புறப்பட்டோம். ஒருவழியாக காலை 10.20-க்குள் அந்த இடத்துக்கு வந்துவிட்டோம். கடற்கரைக்கு நேர் எதிரே நூறடிக்குள் இருக்கும் கட்டடத்தின் மொட்டை மாடி.



களைகட்டி இருந்தது. ஒருபக்கம் தமிழ்நாடு வீரர்கள்.



மறுபக்கம் வங்காள வீரர்கள்.



பைனாகுலர்கள், தொலைநோக்கிகள், மானிட்டர்கள், வெப்பமானிகள், வீடியோ கேமராக்கள், சாதா கேமராக்கள் (ஆனால் பீமபுஷ்டி லேகியம் சாப்பிட்டாற்போல குண்டு குண்டாக!), விதம் விதமான ஃபில்டர்கள். அனைவரிடமும் ஒருவித பதற்றம்.

ராக்கெட் விடும்போது கவுண்ட் டவுன் நடப்பதுபோல வங்காள அணியினர் அவ்வப்போது 50 மினிட்ஸ் டூ எக்லிப்ஸ் ஸ்டேஜ் 1, 30 மினிட்ஸ் டூ எக்லிப்ஸ் ஸ்டேஜ் 1 என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தனர். சிறு குழந்தைகள் சில (என் பெண்ணையும் சேர்த்து) அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.

கிரகணம் ஆரம்பித்தது. ஒரே ஆரவாரம். வானம் தெளிவாக இருந்தது. மேகங்கள் எதையும் மறைக்கவில்லை. எல்லோரும் ஃபில்டர்களைக் கொண்டு வானை நோக்க ஆரம்பித்தோம். லேசாக ஒரு விள்ளல் சூரியனைக் காணவில்லை.



ஒரு இளைஞர், ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வெப்பத்தை அளக்க ஆரம்பித்தார். ஒரு பக்கம் இரு இளைஞர்கள், புவி ஈர்ப்பில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை அளக்க ஒரு சர்க்யூட்டை வைத்துக்கொண்டு எதையோ அளந்துகொண்டு எண்களைச் சத்தமாகச் சொல்லி கூச்சலிட்டனர்.

சிறு பின் ஹோல் கேமராவைக் கொண்டு சுவற்றில் கிரகணப் படம் காண்பிக்கப்பட்டது. வெறும் கையைக் குறுக்கு நெடுக்காக வைத்தாலே கிரகணத்தின் நிழல் வெளிச்சம் தரையில் விழுவதைக் காண குழந்தைகளிடம் ஒரே குதூகலம். இப்படியே இப்படியே விள்ளல் பெரிதாகி, அந்தக் கண்கொள்ளாக் காட்சி. அற்புதமான வளையல். இதற்குள் வெப்பம் சுமார் 8 டிகிரி கீழே இறங்கியிருந்தது. அதிகபட்சமான 34-லிருந்து 26 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிட்டது!



பதிவர் பிரபு ராஜதுரை குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை அங்கு சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர் தனது புரொஃபஷனல் கேமராவைக் கொண்டு பல படங்களை எடுத்தார். நான் எனது டப்பா மொபைல் கேமராவைக் கொண்டு கிரகணத்தைப் படம் எடுக்கும் அபத்தத்தைச் செய்யவில்லை. (இங்கு காணப்படும் படங்கள் பலவும் விருபாக்ஷன் என்ற நண்பர் எடுத்துக்கொடுத்தது!)

முழு வளையல் கிரகணம் ஏற்பட்டபோது விஜயகுமார் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வங்காள வீரர்கள் முகத்தில் ஆனந்தப் பெருமிதம். யாஹூ யாஹூ என்று கத்தினர். கிரிக்கெட் வீரர் தன் வாழ்க்கையின் முதல் டெஸ்ட் செஞ்சுரி அடிக்கும்போது பேட்டை உயர்த்திக் காண்பித்து ஒரு குதி குதிப்பாரே, அந்த அளவுக்குப் பெருமிதம்!

வானியல் ஆர்வலர்களின் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்னளவில் இது ஒரு மாபெரும் நிகழ்ச்சி. ஆனால் பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டி நடந்துகொள்வது என் பண்புக்கு மாறானது. அமைதியாகவே சுற்றிலும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பேரா. அனந்தனுக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த நிகழ்வைப் பார்த்துவிட விரும்பியிருந்தார். அந்த நிறைவு முகத்தில் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரகணம் விடுபட ஆரம்பித்தது. அடுத்த கட்டம் ராட்சசன் கொம்பு. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அனைத்தும் விலகி முழுச் சூரியன்.

வங்காளிகளும் தமிழர்களும் சேர்ந்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.



தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றிய பெருமிதமோ ஆச்சரியமோ ஏதும் இன்றி ஒரு பெருங்கூட்டம் கடற்கரை ஓரத்தில் கிரகண தர்ப்பணத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தியா நிஜமாகவே ஒரு வித்தியாசமான நாடு.

கொஞ்சம் கொஞ்சமாக பசியை உணர ஆரம்பித்தோம். மெதுவாக ஓட்டல் தமிழ்நாடு வந்து, கொஞ்சம் காத்திருந்து கிடைத்த உணவை உண்டோம். மெதுவாக ராமநாதபுரம் நோக்கித் திரும்பினோம்.

இது ஓர் அற்புதமான நாள். என்றுமே நினைவிலிருந்து நீங்காத ஒரு நாளாக இருக்கும்.

14 comments:

  1. Thanks for the information and photos Badri.

    Venkat

    ReplyDelete
  2. ஆகா! உங்களுக்கு வாய்த்த இந்த அனுபவத்தை பார்க்கும் போது நமக்கு ஏன் இந்த மாதிரி பயணங்கள் அமைவதில்லை அல்லது ஏன் நான் அப்படி அமைத்து கொள்வதில்லை என்று மனச்சுமை குடி கொண்டது. இந்த கிரகணம் வரும் போது சென்னை எல்டாம்ஸ் சாலையில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வெளியே தெருவிற்கு வந்தேன். கோக் பாட்டிலை கண்ணில் வைத்து அதனூடாக இளைஞர்கள் சிலர் கிரகணத்தை பார்த்து கொண்டிருந்த போது தான், 'ஆகா! இப்போது கிரகணம்,' என்று மண்டையில் பல்பு எரிந்தது. என்றாலும் சூரியனை பார்க்க கூடாது என சொல்கிறார்களே என்கிற குழப்பத்தில் வானத்தை பார்க்காமல் நடந்து போய் விட்டேன்.

    உங்களுடைய அனுபவத்தை பார்க்கும் போது பத்து பதினொரு வருடங்களுக்கு முன்பு இரவு குவியல் குவியலாய் எரிகல்கள் விழுந்தது நினைவிற்கு வருகிறது. அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். கல்லூரி ஃபுட் பால் மைதானத்தில் இரவு ஒரு மணி சுமாருக்கு நூற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே கூடி இருந்தோம். முதல் எரி கல் விழுந்ததும் பெரிய கரகோஷம். அப்புறம் தீபாவளி வாண வேடிக்கை போல அடுத்த அரை மணி நேரம் வாண வேடிக்கை போல எரி கற்கள் விழுந்து கொண்டிருந்தன. மறக்க முடியாதது அந்த இரவு.

    ReplyDelete
  3. //ஆனால் பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டி நடந்துகொள்வது என் பண்புக்கு மாறானது. அமைதியாகவே சுற்றிலும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.//
    //தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றிய பெருமிதமோ ஆச்சரியமோ ஏதும் இன்றி ஒரு பெருங்கூட்டம் கடற்கரை ஓரத்தில் கிரகண தர்ப்பணத்தில் ஈடுபட்டிருந்தது.//

    உங்களைப் போன்றவர்களே அந்தப் பெருங்கூட்டத்தினரும் என்பதையே அவர்களின் செயல் காட்டுகிறது.

    ReplyDelete
  4. நமது ஆளுநரும், பாண்டிச்சேரி லெப்டினண்ட் கவர்னரும் (சீக்கியர்) அங்குள்ள குருத்வாராவுக்கு வந்ததாக சொல்லிக் கொண்டனர். வரும் வழியில் அவர்களின் ஹெலிகாப்டர் இறங்கியதால் வாகனங்களை நிறுத்தி விட்டனர்...பின்னர் ஹெலிகாப்டரை மட்டும் பார்த்தோம்.

    வேறு ஒரு பதிவர், தென்னைமர ஓலைகளுக்கிடையே விழும் கிரகண பிம்பத்தை அருமையாக படம் பிடித்து வெளியிட்டிருந்தார். amazing!

    ReplyDelete
  5. //தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றிய பெருமிதமோ ஆச்சரியமோ ஏதும் இன்றி ஒரு பெருங்கூட்டம் கடற்கரை ஓரத்தில் கிரகண தர்ப்பணத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தியா நிஜமாகவே ஒரு வித்தியாசமான நாடு.//

    இது தான் படிச்சவன் அலட்டலோ என்று எனக்கு தோன்றுகிறது. அவரவர் priority அவரவர்க்கு. தன் தகப்பனார்க்கு தர்ப்பணம் செய்வதில் ஒருவற்கு உங்களை விட "பெருமிதம்" இருக்க கூடாதா?
    நான் ஒன்னும் தப்பா சொல்லலையே என்று நீங்கள் கூறலாம். But the tone of your message is pretty blatant and imho, a tad offensive to someone else's beliefs. To each his own மென்டாலிட்டி நமக்கு ஏன் வரமட்டேன் என்கிறது?

    ReplyDelete
  6. கௌரிசங்கர்Tue Jan 26, 11:21:00 PM GMT+5:30

    சந்திரன் புவியை சுற்றும் நாட்களும், புவி சூரியனை சுற்றும் நாட்களும் always constant. அப்படி இருக்கையில் ஏன் கிரகணங்கள் "பௌர்ணமி" "அம்மாவாசை" போன்று குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏற்படுவதில்லை?
    இன்னுமொரு சந்தேகம், எப்பொழுது சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் வரும்போதும் இது போன்று மற்றுமொரு நிகழ்வு 100௦௦ வருடங்களுக்கு நிகழாது என்று கூறுகிறார்கள் அனால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுகிறது ஏன்?

    ReplyDelete
  7. வாவ்!

    நான் நோகாமல் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே...

    http://www.saravanakumaran.com/2010/01/blog-post_16.html

    ReplyDelete
  8. அருமையான பதிவு பத்ரி

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  9. மிகவும் அருமை. புகைப்படங்களும், உங்கள் அனுபவங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. கௌரிசங்கர்: சூரியனை பூமி சுற்றும் நீள்வட்டப் பாதையும், பூமியை சந்திரன் சுற்றும் நீள்வட்டப் பாதையும் ஒரே சமதளத்தில் இல்லை. இரண்டும் சற்றே சாய்மானமான தளத்தில் உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியும் அமாவாசையும் வந்தாலும் ஒவ்வொரு மாதமும் கிரகணங்கள் வருவதில்லை. இரண்டு சுற்றுப்பாதைகளும் ஒரே தளத்தில் இருந்தால் மாதாமாதம் கிரகணம்தான்.

    இந்த இரு சுற்றுப்பாதைகளும் கொண்ட தளங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும்போது புதிய சமதளம் ஒன்று ஏற்படுகிறது. இதில் பூமி, சந்திர, சூரியன் ஒரே நேர்க்கோட்டில் வருவது இரு முறை நடக்கிறது. இவைதான் கிரகணங்கள் ஏற்படக் காரணம். இந்த வெட்டுப் புள்ளிகள் (approximately) 180 டிகிரி கோணத்தில் எதிரும் புதிருமாக உள்ளவை.

    ஒவ்வோர் ஆண்டும் சூரிய கிரகணம் ஏற்பட்டாலும், பல காரணங்களால் குறை சூரிய கிரகணமே ஏற்படும். அடுத்தது, கிரகணம் நடக்கும் கால அளவு 1 நிமிடம் அல்லது அதற்குக் குறைவாகவும் இருக்கலாம். 15 ஜனவரி அன்று 10 நிமிடத்துக்கு மேல் கிரகணம் நீடித்தது. முழு சூரிய கிரகணம் அல்லது வளையல் சூரிய கிரகணம் அபூர்வமாகவே நடக்கும்.

    அடுத்தது, எந்த இடத்தில் நடக்கும் என்பது... பெரும்பாலான சூரிய கிரகணங்கள் கடலுக்கு நடுவில் யாராலும் நெருங்கமுடியாத இடத்தில், யாராலும் பார்க்கமுடியாத இடத்தில் நடந்துவிடும். சில அபூர்வமான (ஜனவரி 15) கிரகணங்களே அனைவராலும் பார்க்கமுடியும் வகையில் நாட்டுக்கு நடுவில் நடக்கும். ஜனவரி 15 ஒரு நீண்ட கிரகணம். வளையல் கிரகணம். தமிழகத்தில் நடந்தது. எனவே தமிழகத்தைப் பொருத்தமட்டில் அபூர்வமானது. சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் இதுபோல நடைபெற்றது.

    ஆனால் 2019-ல் (என்று நினைக்கிறேன்) அடுத்து வளையல் கிரகணம் தமிழகத்தில் ஏற்படும். ஜனவரி 15-ஐ விட சற்றுக் குறைவான நேரமே. ஆனால் ராமேஸ்வரம், கன்யாகுமரி என்ற இரு ஊர்களைப் போல் அல்லாமல், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இதனைப் பார்க்கலாம். கோவை மாவட்டத்தில் மிக அற்புதமாகத் தெரியும். தஞ்சாவூர் மாவட்டம் தொடங்கி, கோவை வழியாக கேரளா, கர்நாடகா செல்லும்.

    அதனை விரும்பிப் பார்க்கும் அளவுக்கு 2019-ல் அறிவியல் உணர்ச்சி பரவியிருக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  11. மிக நல்ல பதிவு பத்ரி

    ReplyDelete
  12. கௌரிசங்கர்Wed Jan 27, 11:23:00 PM GMT+5:30

    சிறந்த விளக்கம். புரிந்தது போன்ற உணர்வு. 3D Visual-ல் கற்பனை செய்ய முயல்கிறேன். நன்றி பத்ரி.

    ReplyDelete
  13. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
    // (இங்கு காணப்படும் படங்கள் பலவும் விருபாக்ஷன் என்ற நண்பர் எடுத்துக்கொடுத்தது!)//
    நான் ' படங்கள் அனைத்தும்' வேறு அர்த்தம் 'படங்கள் பலவும்' வேறு அர்த்தம் என்று நினத்தேன். இரண்டும் ஒன்றுதான?. :‍‍ )

    ReplyDelete