Wednesday, August 31, 2011

ஊழலுக்கான காரணங்கள்

ஓரிரு தினங்களுக்குமுன் லோக்பால் தொடர்பான விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது ஓர் ஓரத்தில் நானும் ஒரு பங்கேற்பாளனாக அமர்ந்திருந்தேன்.

ஊழல் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி’ என்று திருவள்ளுவரை மேற்கோள் காட்டி, நாம் சிம்ப்டம்ஸ் பற்றித்தான் பேசுகிறோம், காஸ் பற்றிப் பேசுவதில்லை என்றார். பின்னர் பேசிய எழுத்தாளரும் களப்பணியாளருமான ஒருவர், 1991-க்குப் பிறகான புதிய தாராளவாதக் கொள்கைதான் ஊழல் இந்த அளவு வளர்வதற்குப் பெரும் காரணம் என்றார்.

அதற்குமுன் ஊழலே இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

தாராளமயவாதிகளான என்னைப் போன்றோர், ஊழல் ஏற்படக் காரணமே பெருத்துப்போன அரசுதான் என்று நம்புகிறோம். அரசும் அரசு ஊழியர்களும்தான் ஊழலின் அடிப்படைக் காரணம் என்பது எங்கள் கருத்து. இடதுசாரிகளின் கருத்து வேறுமாதிரியாக உள்ளது. ஊழலுக்குக் காரணமே முதலியம்; பெரும் ஊழல் அனைத்துமே கொலைகாரப் பாவிகளான கேபிடலிஸப் பெருமுதலாளிகளால்தான் என்கிறார்கள் அவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தங்கள் கட்சிக் கொள்கையை எடுத்துரைக்கும்போது ஊழலுக்குக் காரணம் Politician-Bureaucrat-Corporate nexus என்றார்.

அண்ணா ஹசாரே இயக்கத்தை எதிர்ப்பவர்கள், ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தில் ஏன் கார்பொரேட் நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை, ஏன் என்.ஜி.ஓ அமைப்புகள் சேர்க்கப்படவில்லை, ஏன் மீடியா நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். இன்னும் கேட்கப்படாத ஒரே கேள்வி, ஏன் அமெரிக்க அதிபரை இதில் சேர்க்கவில்லை என்பதுதான்.

நேற்று சிபிஐ பொறி வைத்துப் பிடித்த ஒரு வழக்கு செய்திகளில் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த எவெரான் என்ற கார்பொரேட் நிறுவனம், கல்வித் துறையில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதை ஒரு வருமான வரி அதிகாரி கண்டுபிடிக்கிறார். உடனே அவர் என்ன செய்யவேண்டும்? அந்த நிறுவன அதிகாரியைக் கம்பி எண்ண வைத்துவிட்டு, நிறுவனச் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, வரியைக் கட்டுமாறு செய்திருக்கவேண்டும். ஆனால், மாறாக என்ன செய்கிறார்? ஓர் இடைத்தரகரை வைத்து (அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்!) பேரம் பேசி, 50 லட்ச ரூபாய் பணமாகப் பெற்றுக்கொண்டு, வரியைக் குறைக்கிறார். [செய்திகளின்படி, எவெரான் நிறுவன நிர்வாக இயக்குனர்தான் ஓர் இடைத்தரகர்மூலம் வருமான வரி அதிகாரி ரவீந்தரைத் தொடர்புகொள்கிறார்.] அப்போதுதான் சிபிஐ அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது.

இப்போது என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? எவெரானின் நிர்வாக இயக்குனர் கிஷோர்மீது உடனடியாக வழக்கைப் பதிவுசெய்துவிடலாம். அவர்களது நிறுவனம், ஏமாற்றிய வருமான வரியை இன்னும் ஒரு மாதத்துக்குள் கட்டவேண்டும் என்று ஆணை பிறப்பித்துப் பணத்தை மத்திய அரசு வசூலித்துவிடும். கிஷோர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.

ஆனால், லஞ்சம் வாங்கிய ஐ.ஆர்.எஸ் அலுவலரான ரவீந்தருக்கு என்ன ஆகும்? அவர்மீது வழக்குப் பதிவு செய்ய மேலிட அனுமதி தேவைப்படும். டிபார்ட்மெண்டல் என்கொயரி நடக்கும். அவர் தாற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்படுவார். அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. சில ஆண்டுகள் கழித்தும்கூட அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.

கிஷோர் செய்தது குற்றம் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை லோக்பால் மசோதா இல்லாமலேயே தீர்க்கமுடியும். தீர்த்தும் விடுவார்கள். ஆனால் ரவீந்தரை என்ன செய்யலாம்? அடுத்து வரும் தினங்களில் நாமே பார்க்கப்போகிறோம். இந்த வழக்கு நல்லதோர் உரைகல்லாக இருக்கும்.

கார்பொரேட் பூச்சாண்டியைச் சற்று ஆழமாகப் பார்ப்போம். கார்பொரேட் நிறுவனங்கள் அரசு ஊழியர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் சேர்ந்து பேசி, தமக்குச் சாதகமான கொள்கைகளை எடுக்கத் தூண்டுகின்றன. லாபியிங் செய்கின்றன. இந்த லாபியிங் வெளிப்படையாக இருக்கும்வரை இதில் பிரச்னை இல்லை என்று தோன்றுகிறது. நாம் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் அரசிடம் லாபியிங் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.

ஆனால் சிலருக்கு லாபமும் பெரும் பலருக்கு நஷ்டமும் வரும் வகையில் கொள்கைகளை மாற்ற (பணமாகவோ அல்லது பொருளாகவோ) லஞ்சம் கொடுப்பதைத்தான் நாம் ஊழல் குற்றம் என்கிறோம். இந்தக் குற்றம் நடைபெறும்போது இன்றைய தேதியில் சட்டப்படி, கார்பொரேட் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் அரசியல்வாதிமீதோ அதிகாரிமீதோ நடவடிக்கை எடுப்பது மிகவும் சிக்கலானதாக, கிட்டத்தட்ட முடியாததாக ஆகிவிடுகிறது. இதைத்தான் ஒரு வலுவான லோக்பால் சட்டம் மாற்ற முனைகிறது. அப்படிப்பட்ட வலுவான சட்டத்தை நிறைவேற்ற அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். எனவே ஒரு மக்கள் போராட்டம் நிகழ்கிறது.

ஒரு கார்பொரேட் நிறுவனம் பல இடங்களில் தவறுகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது. அரசுடன் உறவாடும் இடங்களில்; ஒரு கார்பொரேட் நிறுவனத்துக்கும் இன்னோர் அரசு-சாரா அமைப்புக்கும் (அது கார்பொரேட் நிறுவனமாக இருக்கலாம்; தனி நபராக இருக்கலாம்; என்.ஜி.ஓவாக இருக்கலாம்) இடையிலான உறவில்; கார்பொரேட் நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உள்ள உறவில்; கார்பொரேட் நிறுவனம் தன் வேலையைச் செய்யும் இடத்தைச் சுற்றியுள்ள மக்களுடனான உறவில்.

இதில் அரசுடனான உறவில்தான் ஊழல் என்பது வருகிறது. பிற நிறுவனங்கள் அல்லது தனியாருடனான உறவில் ஏமாற்றுதல் அல்லது ஒப்பந்தத்தை மீறுதல் என்பதுதான் நடக்கிறது. தன் அலுவலகம், தொழிற்சாலை போன்றவை உள்ள இடங்களில் சூழியல் சார்ந்த பிரச்னைகள், அங்குள்ள மக்களுடைய வாழ்வாதாரம்மீதான பிரச்னைகள் ஆகியவை நடைபெறலாம்.

இதில் ஊழலை ஒழிக்கப் புறப்படுகிறோம் என்றால் அரசுடனான உறவைப் பரிசீலித்தால் மட்டும் போதுமானது. பிறவற்றைச் சீரமைக்க நீதிமன்றச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தினாலே போதும். இங்கு காவல்துறை ஈடுபட்டுக் கட்டப் பஞ்சாயத்து செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது உடனடியாக அரசுடனான உறவாகிறது; ஊழலாகிறது. உடனே லோக்பால் போன்ற சட்டம் அமலில் இருந்தால், அது நடைமுறைக்கு வரும்.

என்.ஜி.ஓ, மீடியா ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலும் இதேதான். எனவே அரசுத் தரப்பிலிருந்து ஊழலைக் கட்டுப்படுத்தினாலேயே கார்பொரேட் ஊழல் அடிபட்டுப் போய்விடும். அதைவிடுத்து ஊரில் உள்ள அனைத்து அமைப்புகளையும் தேவையின்றி உள்ளே புகுத்துவது லோக்பால் மசோதாவை நீர்த்துப்போகச் செய்யும்.

இது ஏதோ கார்பொரேட் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்க என்று அல்ல. அரசு ஊழலை எடுத்துக்கொண்டால் அதிலேயே கார்பொரேட் நிறுவனங்கள் மாட்டிக்கொண்டுவிடும் என்பதால்தான் இப்படிச் சொல்கிறேன். இல்லாவிட்டால் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு மையங்கள் மாதிரி ஆகிவிடும் லோக்பால் நீதிமன்றங்கள்!

***

அங்கு விவாதிக்கப்பட்ட மேலும் இரண்டு விஷயங்களை அடுத்து எடுத்துக்கொள்ளப்போகிறேன்.

1. இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பானது.
2. (ஜன்) லோக்பால் மட்டும் ஊழலை ஒழித்துவிடும் என்பதை எப்படி நம்புவது?

***

தொடர்புள்ள இரு பதிவுகள்:

வினவு: 50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!
மாமல்லன்: ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு


12 comments:

  1. பத்ரி சார்,
    அருமையான பதிவு.
    உங்கள் வலைப்பக்கத்தில் " வலைப்பதிவர்" என்ற லிங்க் இருக்குமே ???
    அதனை எடுத்து விட்டீர்களா??

    ReplyDelete
  2. Off Topic:
    அடடா. பக்கவாட்டில் இருந்த வேறு வலைப்பூக்களுக்கு இருந்த இணைப்புகளை நீக்கி விட்டீர்களே. நான் வெகு வருடங்களாக தமிழ் பதிவுகளை முதலில் இங்கே வந்து உங்கள் பதிவுகளை படித்து பிறகு மற்ற வலைமனைகளுக்கு அந்த இணைப்பிலிருந்துதான் செல்வேன். வேறு முக்கிய காரணமாக நீக்கியிருந்தால் சரி, இல்லையெனில் மீண்டும் இணைத்தால் மகிழ்ச்சி.
    நிஜமாகவே அடுத்து எதை படிப்பது என்று திகைப்பாக உள்ளது! :)
    -ஜெகன், கோவை

    ReplyDelete
  3. கவலைப்படாதீர்கள். மீண்டும் சேர்க்கப்போகிறேன். என் வலைப்பதிவின் டிசைனை மாற்றும் வேலையில் இருக்கிறேன். அதற்கான முன்னேற்பாடுதான் இது. எங்கு, எந்த இடத்தில் சேர்ப்பது என்பதில் குழப்பம். ஓரிரு நாள்கள் பொறுத்திருங்கள். அனைத்தையும் மீண்டும் சேர்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  4. IAS/IRS அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் நடத்த முன் அணுமதி தேவையில்லை என சுப்பிரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    ReplyDelete
  5. Dear Badri..
    Whenever there is hot topic going around for sure i will check your site. You always enlighten the unseen side of an issue. Some times it is bit difficult to agree, but it is very much necessary to see the whole face of the issue.Kudos for your efforts and this is your strength.

    ReplyDelete
  6. Badri

    Don't you think high corporate taxation is itself the root cause of the whole malaise? Instead of levying close to 35%, the government can split it into 10% permanent non-refundable tax and 25% refundable tax. The latter can be held in bonds for a particular timeframe, earning a nominal interest. This would greatly encourage corporates to stop evading tax, reduce the incentive for bribe and increase liquidity in the system. [Is that a stupendously stupid idea? :) Please feel free to diss it. Naan local party, nee IIT, Cornell-la ellam padichu PhD ellam vaangina periya mandai. You should be able to enlighten us.]

    ReplyDelete
  7. Cram: The taxation in India is not high in my opinion. As such corporates should not even think of evading tax.

    I also think the personal income tax in India is very reasonable and there is no reason why anyone should even think about dodging this.

    ReplyDelete
  8. பத்ரி,

    //சென்னையைச் சேர்ந்த எவெரான் என்ற கார்பொரேட் நிறுவனம், கல்வித் துறையில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது //

    இதைத்தான் நோய் முதல் நாடி என்று அந்த நிகழ்ச்சியில் பேசியவர் குறிப்பிட்டிருக்கிறார். 'ஊழலின் ஊற்றுக் கண் பெரு நிறுவனங்களில்தான் இருக்கிறது. அரசு அதிகாரிகள் அவற்றிலிருந்து ஆதாயம் சம்பாதித்துக் கொளகிறார்கள்' என்பதுதான் வாதம்.

    //கிஷோர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.//

    ஜெயிலுக்குப் போவதெல்லாம் குப்பனும் சுப்பனும்தான். பெரு நிறுவன உரிமையாளர்கள் ஜெயிலுக்குப் போவதில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் வெளிநாட்டு அழைப்பு சேவை அளிப்பதில் மோசடி செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அனில் அம்பானி ஜெயிலுக்குப் போனாரா? அபராதம் கட்டி விட்டு தொடர்ந்து தமது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    அதே போல சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் உரிமம் வாங்கி விட்டு மற்ற வட்டங்களுக்கும் சட்ட விரோதமாக இணைப்பு அளித்தார்கள். அதுவும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் அபராதம் கட்டி விட்டு விதி முறைகளையே சாதகமாக மாற்றிக் கொண்டார்கள்.

    என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன் 'எங்க அப்பா டிரெயினில் டிக்கெட்டே வாங்க மாட்டார். என்னைக்காவது பிடிச்சா அபராதம் கட்டி விட்டுப் போகிறேன். டிக்கெட் காசு மிச்சம் பிடிச்சதை விட அபராதம் குறைவாத்தான் இருக்கும்' என்று பீத்திக் கொண்டான். அதுதான் ரிலையன்சின் வழிமுறை.

    கூடவே விதிமுறைகளையும் சட்டங்களையும் வகுக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறார்கள் பெரு நிறுவனங்கள்.

    இதற்கு லோக்பால் என்ன செய்யும்?

    //இந்த லாபியிங் வெளிப்படையாக இருக்கும்வரை இதில் பிரச்னை இல்லை என்று தோன்றுகிறது. நாம் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் அரசிடம் லாபியிங் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.//

    'எல்லோருமே லாபியிங் செய்கிறோம்' என்பது பொதுவான பேச்சு.

    தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் எடுக்க கோக் நிறுவனம் கோடிக் கணக்கில் பணம் கொட்டி 'லாபியிங்' செய்யும், செய்ய முடியும். அவர்களின் தொழிலே அதுதான்.

    பாதிக்கப்படும் கிராம மக்கள் எவ்வளவு பணம் செலவழித்து தில்லிக்குப் போய் ராம் ஜெத்மலானிகளை நியமித்து 'லாபியிங்' செய்ய முடியும்! அவர்கள் தமது வாழ்க்கைப் பிழைப்பை விட்டு விட்டு போராட்டத்திலும் வழக்குகளிலும் இறங்கினால்தான் ஏதாவது கவன ஈர்ப்பைச் செய்ய முடியும்.

    நீங்கள் சொல்வது போல லாபியிங் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால், லோக்பாலுக்கு வேலையே இல்லை.

    //ஒரு கார்பொரேட் நிறுவனம் பல இடங்களில் தவறுகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது. அரசுடன் உறவாடும் இடங்களில்; ஒரு கார்பொரேட் நிறுவனத்துக்கும் இன்னோர் அரசு-சாரா அமைப்புக்கும் (அது கார்பொரேட் நிறுவனமாக இருக்கலாம்; தனி நபராக இருக்கலாம்; என்.ஜி.ஓவாக இருக்கலாம்) இடையிலான உறவில்; கார்பொரேட் நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உள்ள உறவில்; கார்பொரேட் நிறுவனம் தன் வேலையைச் செய்யும் இடத்தைச் சுற்றியுள்ள மக்களுடனான உறவில்.//

    பெரு நிறுனங்கள்தான் தவறுகளின் ஊற்றுக் கண் என்று தெரிகிறது.

    பெரு நிறுவனங்கள் செய்யும் தவறுகளின் தாக்கம் பெருவாரியான மக்களை பாதிக்கின்றன.

    பொருளாதாரத்தின் எல்லா முக்கிய பகுதிகளையும் பெரு நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அரசு ஊழியர்களின் ஊழலுக்கு உறை போட நினைப்பது 'குதிரையை தப்பிக்க விட்டு விட்டு லாயத்தை மூடுவது' போன்றது!

    பெரு நிறுவனங்களின் நிறுத்திக் கொள்ள முடியாத வளர்ச்சி தாகம், 'மொத்த வருமானத்தையும், லாபத்தையும் பெருக்கிக் கொண்டே போக வேண்டும்' என்ற அடிப்படை உந்துதல் இயல்பாகவே ஊழலுக்கு வழி வகுக்கிறது.

    ReplyDelete
  9. Cram
    A PhD from Cornell does not make Badri an expert in economics. But compared to left-wing rooftop howlers like MaSi and most of our media, and unfortunately, Badri is practically a genius. Practical experience as an entrepeneur helps.

    I am a MS in Computer Science from Texas A&M (a farmer's college). I am no expert in economics either. But considering that even today's essay by Jagdish Bhagwati, a noted economist, in Times of India (Sept 3, 2011), seems like a lame and poor explanation of corruption, I suggest you (& others) read a book by Alan Beattie called False Economy, which explains various types of corruption and their diverse effects. And I agree with you,that the corp tax in India is too high, but not with your remedy. I believe governments should be starved of funds; they should be forced to fight for every new paisa of tax.

    As for Ma Sivakumar, I advise him to move a corporation-free paradise like North Korea. Or he can stop posting a blog on an MNC-websise using an MNC-PC running MNC-software in SFP-country. SFP= Single Family Party.

    ReplyDelete
  10. லஞ்சம், ஊழல் என்பதை தாண்டி ஜன் லோக்பால் என்பது accountability என புரிந்து கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் யாராக இருந்தாலும் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் (தவறு செய்து மாட்டிக் கொண்டால்) என்கிற அச்சத்தை உண்டாக்கும். மற்றபடி மாட்டாமல் தவறு செய்பவர்கள் எல்லா காலங்களிலும் உண்டு. அதை ஒன்றும் செய்ய முடியாது. இப்போது இருக்கிற சூழலில் இந்த monitoring agencies சரியாக செயல்படவில்லை அல்லது அதற்கு தகுந்த அதிகாரமில்லை என சொல்லபடுகிறது. என்னுடைய கருத்து என்னவென்றால் ஜன் லோக்பால், இப்போது இருக்கிற monitoring agenicies-யின் decentralized network-யாக இயங்கினால் நலம். head of everything என்பது மற்றொரு தலைவலி/அதிகார மையம் என்கிற பேராபத்தை கொண்டு வந்து விடும்.

    இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசியதற்கு நன்றி.

    ReplyDelete
  11. @avvai7
    //As for Ma Sivakumar, I advise him to move a corporation-free paradise like North Korea. Or he can stop posting a blog on an MNC-websise using an MNC-PC running MNC-software in SFP-country. SFP= Single Family Party.//

    Advise taken!
    Hope to reach a mega-corporation free paradise. Till then spend life working towards it.

    ReplyDelete