இந்தியாவிற்கு வரும் வேலைகள் - 3
பத்ரி சேஷாத்ரி, 14 அக்டோபர் 2004
சமாச்சார்.காம்




இதுவரை வேலைகளை இந்தியாவிற்கு அனுப்பி விடுவதால் அமெரிக்காவில் நடக்கும் விவாதங்கள் பற்றிப் பார்த்தோம்.

இதுபோன்ற வேலைகள் இந்தியாவிற்கு வருவதால், இந்தியாவில் என்ன நடக்கின்றது என்றும் பார்ப்போம்.

BPO வேலைகள் - அழைப்பு மைய உதவியாளர் வேலை, மருத்துவ அறிக்கைகளைப் பிரதியெடுக்கும் வேலையிலிருந்து தொடங்கி பெரும் வேலைகள் எதுவானாலும் தொடக்கச் சம்பளம் மாதம் கிட்டத்தட்ட ரூ. 10,000 கிடைக்கிறது. இந்திய சராசரியைப் பார்க்கும்போது இது அதிகம். இந்தியாவில் இன்றும்கூட, அனுபவம் வாய்ந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் இந்தச் சம்பளத்தை தாங்கள் ஓய்வுபெறும் வேளையில்தான் பெறக்கூடும். மேற்சொன்ன சம்பளத்தைப் பெற ஒருவருக்கு எந்த தனித்தகுதியும் தேவையில்லை. கல்லூரி முடிந்து - எந்தப் பாடமாக இருந்தாலும் சரி! - வெளியே வந்தால் போதும். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசத் தெரிந்திருந்தால் போதும், அழைப்பு மையத்தில் மூன்று மாதப் பயிற்சிக்குப் பின் வேலை. பேசத் தெரியவில்லையா, தட்டச்சு தெரியுமா? மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலை. வேகமாகத் தட்டத் தெரியாதா? ஆனால் ஆங்கில இலக்கணம் தெரியுமா? சரி, எதாவது ஒரு அமெரிக்க, பிரிட்டன் மேகசினுக்கு சப்-எடிடிங் செய்வதில் வேலை.

ஆனாலும் அதிக ஆட்கள் தேவைப்படுகின்றன. சென்னையில் மட்டும் அடுத்த ஒரு வருடத்தில் IT, BPO துறையில் 1 லட்சத்துக்கு மேல் புதிய வேலைகள் உருவாகும் எனத் தெரிகிறது. இந்த நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கான உரிய பயிற்சி கொடுக்க நேரமில்லை. அவ்வளவு வேலைகள் குவிகிறதாம். அதனால் ஏற்கனவே பயிற்சி கொடுக்கப்பட்ட ரோபோக்கள் தமக்கு வேண்டும் என நினைக்கிறார்கள். நாஸ்காம் போன்ற சங்கங்கள் BPOவை கல்லூரிப் பாடமாக வைக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே கல்லூரிப் பாடத்திட்டங்கள் கேவலமாக உள்ளன. அடுத்து B.A (BPO) என்று ஒரு பாடத்திட்டம் கொண்டுவந்தால்? கல்லூரிகள் மாணவர்களுக்கு பொதுக்கல்வி அறிவு கொடுப்பதை முதன்மையாகக் கருத வேண்டும். துறை சார்ந்த பயிற்சியை அந்தந்த நிறுவனங்கள்தாம் கொடுக்க வேண்டும். ஆனால் முதலில் கண்ணுக்குத் தெரியும் பணத்தைப் பார்க்கும்போது கல்வித்துறை எதைப்பற்றியும் கவலைப்படாது மோசமான, அறிவுத்திறன் குறைந்த மாணவர்களை மேலும் உருவாக்குவார்கள் என்றே தோன்றுகிறது.

இரண்டாவது பிரச்னை வேலை பார்க்கும் இடங்களில். அழைப்பு மைய வேலைகள் பெரும்பாலும் இந்தியாவின் இரவு நேரங்களில், அல்லது விடிகாலை நேரங்களில் இருக்கும். அழைப்பு மையங்கள் 24 மணிநேரமும் இயங்க வேண்டிவரும். இதனால் இங்கு வேலை பார்க்கும் பலருக்கும் இயல்பான வாழ்க்கை என்று ஒன்று இல்லாமல் போகிறது. கண்ட நேரத்தில் வேலைக்குப் போவது, கண்ட நேரத்தில் வீட்டுக்கு வந்து தூங்குவது. இந்த இடங்களில் அதிகமாக வேலை செய்வது மணமாகாத இளைஞர்களே. வேலைக்கு முன் இருப்பதிலிருந்து வேலைக்கு பின் ஏற்படும் மாற்றங்களால் இவர்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்னைகள் பல. இவர்களுக்கு கையில் நிறையப் பணம் புழங்குகிறது. இதுநாள் வரை இல்லாத ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. அதையொட்டி பல கெட்ட வழிகளில் பணத்தைச் செலவழிப்பது முதல் வேலை செய்யும் இடங்களிலேயே கிடைக்கும் அரை மணிநேர இடைவெளியில் இருபாலரும் உடலுறவு கொள்வது வரை (அப்படித்தான் சில செய்தித்தாள்கள் பேசுகின்றன) சீரழிவு நடக்கிறது.

அழைப்பு மையங்களில் வேலை செய்பவர்களை பல 3rd Party BPO நிறுவனங்கள் விரட்டி விரட்டி வேலை வாங்குகின்றன. மற்றுமொரு தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த பிரச்னையை சமாளித்தால் அதிகப்பணம் உண்டு என்ற வகையில் சிறிதும் ஓய்வின்றி வேலை செய்வதால் மிக சீக்கிரத்திலேயே உடலும், மூளையும் சோர்வடைகிறது. வேண்டிய நேரத்தில் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது. இதனால் வெளியார் உறவின்றி இவர்கள் தனித்தீவாக வசிக்க வேண்டியதாகிறது. அழைப்பு மையங்களில் அமெரிக்காவில் இருப்பவர்களுடன் சூசி, ஷாரன், சமாரா, சாம், டாம், பாப் என்ற பெயரிலெல்லாம் பேசி, அவர்களிடம் பேஸ்பால் பற்றியும், "அமெரிக்கன்" புட்பால் பற்றியும், ஹாலிவுட் படங்கள் பற்றியும் அறுத்து கண்ணாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தவுடன் கீழ் மத்தியதரக் குடியிருப்பில் வசித்துக் கொண்டு, தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், குடும்பத்தினருடன் சண்டை, தனியறை இல்லாமை என்று ரவியாகவும், புவனாவாகவும் வாழ்வது கொடுமைதானே?

அழைப்பு மையம் என்றில்லை... எங்கெல்லாம் வேலைகள் பொதி போல முதுகில் சுமர்த்தப்படுகின்றதோ, அங்கெல்லாம் வேலை செய்பவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விடும் நிலை உள்ளது.

மற்றுமொரு பெரிய கவலை - திறமை அதிகம் உள்ள இளைஞர்கள் புத்தி அதிகம் தேவையில்லாத BPO வேலைகளுக்குப் போய்விட்டால் மற்ற துறைகள் என்ன செய்வது என்பதே. ஒன்றுமில்லா வேலைகளுக்கெல்லாம் - இவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாவதால் - எக்கச்சக்க சம்பளம் கொடுக்க முடியும். ஐந்து நட்சத்திர வசதிகளை வேலை செய்யுமிடத்தில் கொடுக்க முடியும். இலவச உணவு, காபி எல்லாம் உண்டு. மூன்று வேளையும்! வீட்டிற்கு வந்து அழைத்துக் கொண்டு, மீண்டும் கொண்டுவிடும் பஸ் வசதி உண்டு. உள்ளூர் வேலைகளில் எதுவும் கிடையாதே?

மற்றுமொரு பிரச்னை - குறிப்பிட்ட ஒரு சிலர் கையில் மட்டும் பணம் அதிகம் புழங்குவதால் உண்டாகும் பணவீக்கம் தொடர்பானது. சென்னையில் அடுத்த வருடம் உருவாகும் 1 லட்சம் வேலைகள், சராசரி 20,000 ரூபாய் மாதச் சம்பளத்தில்... என்றால் இந்த நகரத்தில் மட்டும் மாதத்திற்கு புதிதாக 200 கோடி ரூபாய்கள் புழக்கத்துக்கு வருகின்றன. வருடத்திற்கு ரூ. 2,400 கோடி. அத்துடன் இவர்கள் அனைவரும் மாதச்சம்பளம் போல குறைந்தது பத்து மடங்கு கடன் வாங்க முடியும். அது இன்னமும் ரூ. 2,000 கோடி.

இதுபோல அடுத்த நான்கு வருடங்களுக்கு - வருடத்திற்கு 1 லட்சம் வேலைகள் வீதம் உருவாகும் எனத் தெரிகிறது. இத்தனை பேர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் வசிக்க வீடுகள் தேவை. அனைவரும் தெருவில் பயணம் செய்ய, போக்குவரத்து நெரிசல் என்னவாகும்? தண்ணீர் பிரச்னை?

இவர்கள் செலவு செய்யும் பணம் அதிகமாக இருக்கும். அப்பொழுது பள்ளிக்கூட ஆசிரியரோ, முனிசிபாலிட்டி கிளர்க்கோ, முறைசாராத் தொழிலாளரோ தம் குறைந்த சம்பளத்தில் எப்படி ஈடுகொடுக்க முடியும்? தக்காளி விலை என்னவாகும்?

இந்த BPO நிறுவனங்களை திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் நிறுவ முடியுமா? அப்படி நடந்தால் பல நன்மைகள் உண்டு. ஆனால் உடனடியாகச் செய்ய முடியாது. ஏனெனில் இந்த இடங்களிலெல்லாம் ஆதார வசதிகள் பல குறைவு. நெடுஞ்சாலை வசதிகள், தங்கும் விடுதிகள், இணைய அகலப்பாட்டை, தடையில்லா உயர்தர மின்சாரம், இப்படி பல...

தமிழக அரசும், பிற மாநில அரசுகளும் இதைத்தான் முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். எப்படி வளரும் BPO தொழிலைப் பயன்படுத்தி வளரா நிலையிலிருக்கும் மாநிலத் தலைநகரல்லா பிற பெரு நகரங்களை வளர்க்க முடியும் என்பது பற்றி தீவிரமாக யோசித்து, செயலாற்ற வேண்டும்.


எண்ணங்கள் வலைப்பதிவு