தாய்லாந்தில் ஒரு வாரம்
பத்ரி சேஷாத்ரி, நவம்பர் 2003
திசைகள்




பத்ரியும், இரண்டு குரங்குகளும்

கிழக்காசிய நாடான தாய்லாந்து, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓரு நாடு. வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட GDPயில் 6%ஆகும்.

நான் சென்ற மாதம் என் மனைவி, குழந்தையுடன் ஒரு வார விடுமுறையைக் கழிக்க இங்குதான் போனேன். தலைநகரமான பாங்காக்கை விடுத்து, இரண்டாவது பெரிய நகரமான பட்டாயாவின் அருகில் உள்ள ஜோம்தியன் பீச் என்னும் கடற்கரை ஊரைத் தேர்ந்தெடுத்தோம். சுற்றுலாவுக்குப் பேர் போன நாடென்பதால் இங்கு தங்கும் இடங்களும், வசதிகளும் அதிகம். ஜோம்தியன் கடற்கரைச் சாலையில் இருப்பவை அனைத்துமே சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களே. அந்தக் கடற்கரையில் ஆரம்பித்து பட்டாயா கடற்கரை வரையிலான சாலையெங்கும் கண்ணில் படுவது ஹோட்டல்களும், உணவு விடுதிகளும், கடைகளும் மட்டுமே. ரசிக்கத் தக்க கடற்கரை.

சென்னையில் உள்ள மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது பெரிய பீச் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப் படுகிறோம். ஆனால் உள்ளூர் மக்களுக்கோ, சுற்றுலா வரும் வெளிநாட்டவருக்கோ நம் கடற்கரையில் ஒரு வசதியும் கிடையாது. ஆனால் ஜோம்தியன் பீச் மற்றும் பட்டாயா பீச் மிக அருமையாகப் பராமரிக்கப் படுகிறது. கடற்கரை மணல் வெளி சிறியதாகவே உள்ளது. கடற்கரை ஓரத்தில் நெருக்கமாக உட்காருவதற்கு வசதியாக இருக்கைகளும், மழையிலிருந்து தப்பிக்கக் குடைகளும் உள்ளன.

ஜோம்தியன் கடற்கரை

எல்லா இடங்களிலும் கடல் தண்ணீரில் குளித்து விளையாட காற்றடித்த ரப்பர் வளையங்கள் இருக்கின்றன. கடலில் குளித்து விளையாடிவிட்டு இருக்கைகளில் அமர்ந்து சாலையோரக் கடைகளில் வித விதமான உணவுப் பொருட்களை வரவழைத்து உண்ணலாம். தாய்லாந்து உணவு உணவைப் பொறுத்தவரையில் இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அத்தனை வகை பறக்கும், நடக்கும், ஊரும் உயிரினங்களும் உணவாகக் கிடைக்கின்றது. ஒருசில உணவு வகைகள் வியப்பையும் அளித்தன. வெட்டுக்கிளி போன்ற உயிரி ஒன்றைக் கடலை வறுத்தது போல் வறுத்துக் கொட்டி வைத்திருந்தனர் ஓரிடத்தில்!

அரிசிச் சோறு எல்லா இடத்திலும் கிடைக்கின்றது. இந்திய உணவகங்கள் மூன்றினை நாங்கள் பட்டாயாவில் கண்டு பிடித்தோம். அதைத் தவிர ஒரு நேபாளி உணவகத்தையும் கண்டுபிடித்தோம். இந்தியாவிலிருந்து செல்லும் இறைச்சி உண்ணாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தேவையான அளவு இந்திய சாப்பாடு கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட வித்தியாசமாக தள்ளு வண்டியில் தோசை போன்ற உணவு எங்களுக்குக் கிடைத்தது. வழுவழுவென உள்ள எவர்சில்வர் தட்டில் மாவினை ஊற்றி அதன் மேல் நமக்கு வேண்டிய பதார்த்தங்களைத் தூவி வார்த்தவுடன் எடுத்துத் தருகிறார். கிட்டத்தட்ட பிஸ்ஸாவின் மேல் போடும் 'டாப்பிங்' மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

தாய்லாந்து தோசை

மாவில் முட்டை கலந்திருக்கும் என்று தோன்றுகிறது. டாப்பிங்காக முட்டை, உலர்ந்த திராட்சை, ஹாம், சர்க்கரை, ஹாட் டாக், வாழைப்பழம், பைனாப்பிள், செர்ரி என்று புகுந்து விளையாடலாம்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

ஸ்ரீரச்சா டைகர் ஜூ:

கடற்கரையில் வேண்டியவரை விளையாடி விட்டு மற்ற நாட்களை கேளிக்கையாகவும், அதே நேரத்தில் அறிவூட்டுவதாகவும் கழிக்க பல இடங்கள் உண்டு. நாங்கள் ஸ்ரீரச்சா டைகர் ஜூ என்னும் இடத்திற்குப் போயிருந்தோம். மிக நன்றாகப் பராமரிக்கப்படும் விலங்குகள் காட்சியகம் இது. சின்னஞ்சிறு புலிக்குட்டிகளை நம் கையில் கொடுத்து அதற்கு புட்டியில் பால் கொடுக்க அனுமதிக்கிறார்கள். அவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொள்ள தனியாகக் காசு வசூல்! பூனை போல ஒரு புலிக்குட்டி சாதுவாகக் கைக்கடக்கமாக உட்கார்ந்து பால் குடிப்பது அருமையான அனுபவம் - எனக்கும் என் மகளுக்கும்.

புலிக்குப் பால் கொடுக்கும் பிரியா, பத்ரி

இதுபோல் கையில் சின்ன முதலைகள், மலைப்பாம்பு, கங்காருக் குட்டி ஆகியவைகளைத் தொட்டுப் பிடித்தவாறு படங்கள் எடுத்துக் கொள்ளலாம். மயிர்க் கூச்செரிய வைக்கும் முதலைக் காட்சி ஒன்றும் நடைபெற்றது இங்கே. இதில் ஒரு முதலையில் திறந்த வாய்க்குள் ஒரு மனிதன் தலையை விட்டு கண் நேரத்தில் மீண்டும் தலையை எடுத்து விடுகிறார். தேர்ச்சி பெற்ற புலிகளும், யானைகளும் விளையாட்டு காண்பிக்கின்றன. நம்மூர் வண்டலூர் ஜூவில் இருப்பது போல் இல்லாது விலங்குகள் இருக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் காட்சியளிக்கிறது. விலங்குகளுக்கு உண்ண நல்ல உணவு கிடைக்கிறது என்பதை அவைகளைப் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

நோங் நூச் டிராபிகல் தோட்டம்

பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானது. நன்கு பராமரிக்கப்படும் இந்தத் தோட்டத்தில் பலவகை டிராபிகல் மலர்ச் செடி கொடிகள், மரங்கள், தோட்ட வகைகள் ஆகியவை காணக் கிடைக்கின்றன. ஏழு வகையான தோட்டங்கள் (ஐரோப்பா வகைத் தோட்டம், இங்கிலாந்து வகைத் தோட்டம் போன்ற பல) அழகாக அமைக்கப்பட்டு உள்ளன. இங்கும் ஒரு சில மிருகங்கள் பார்வைக்கு உள்ளன. அவைகளுடன் சேர்ந்து நின்றோ, கைகளில் வைத்துக் கொண்டோ நாம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதே இடத்தில் மாலை தாய்லாந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தாய்லாந்து இசை மற்றும் நாட்டியம், தாய் குத்துச் சண்டை (இதில் கைகளால் தாக்கிக் கொள்வதுடன், குதித்துக் கால்களாலும் உதைத்துக் கொள்வார்கள்), ஒரு சிறு இசை நாடகம் (ஒரு போர் நடக்கிறது, ஒரு கோட்டையை வீரர்கள், யானைகள் உதவியுடன் தாக்குகின்றனர்), அதனைத் தொடர்ந்து யானைகள் பங்கு பெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் என்று நேரம் போவதே தெரியவில்லை.

புத்த, இந்துக் கோயில்கள்

தாய்லாந்து முழுவதுமே எண்ணற்ற புத்தக் கோவில்களும், இந்துக் கோவில்களும் நிறைந்துள்ளன. நாட்டிலேயே ராமராச்சியம் தான். முடியாட்சி நாடென்றாலும், பதவி பாராளுமன்றம் கையில்தான் என்று தெரிகிறது. முடி சூட்டிய அரசர்களுக்கு "ராமா" என்றுதான் பெயர். (ராமா 1, ராமா 2 என்று போகும்). புத்த மதம் தான் பெரும்பான்மை மக்களுடையது. ஒரு காலை நேரத்தில் பட்டாயாவில் உள்ள ஒரு புத்தர் கோவிலுக்கு சென்றிருந்தோம். மக்கள் கூட்டம் அலை மோதுவதில்லை. கோவிலுக்கு நிறைய வருமானம் இருக்க வேண்டும். கூரைகள் எல்லாம் தங்கத்திலேயே வேயப்பட்டிருக்கிறது. கோவில் வளாகத்திலேயே இளம் துறவிகள் பிக்-அப் டிரக்கில், ஏதோ இராணுவக் கூடத்தில் இருப்பது போல, இங்கும் அங்கும் சென்ற வண்ணம் இருக்கின்றனர். கோவில் உள்ளே பெரிய வெண்கல புத்தர் சிலை இருக்கிறது. சிலைக்குப் பின்னே பலவித ஓவியங்கள் தீட்டப் பெற்றுள்ளன. சிலைக்கருகே ஒரு புத்தத் துறவி அமர்ந்து மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கேயே புத்தர் சிலைகள் (பிறந்த நாளின் கிழமைக்கு ஒரு புத்தர் சிலையாக) விற்பனை செய்து கொண்டிருந்தனர். வெளியே இரண்டு பக்கங்களிலும் நம்மூர் இந்துக் கோயில்களில் இருப்பது போல துவார பாலகர் சிலைகள் இருந்தன. (இவற்றுக்கு புத்த மதப்படி என்ன பெயர் என்று தெரியவில்லை.) பச்சை, சிவப்பு வண்ணத்தில் இருக்கும் இந்தச் சிலைகள் பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் உள்ளன.

புத்த துவார பாலகர்?

இப்படிப்பட்ட சிலைகளை பட்டாயாவில் ஒரு மேக்டானல்ட்ஸ் உணவகம் முன்னும் நிறுத்தி வைத்திருந்தது வினோதம்! அருகில் உள்ள ஒரு இந்துக் கோவிலுக்கும் சென்றிருந்தோம். கோவிலின் அமைப்புகள் தென்னிந்தியக் கோவில்களை ஒத்துள்ளன. நீண்ட நெடிய கோபுரம், உச்சியில் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

இந்துக் கோயில்

சுற்றுப்புறத்தில் இந்துப் புராணக் கடவுளர்களின் உருவங்கள் கோபுரத்தில் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. பார்த்த இரண்டு கோயில்களுமே நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. அருகில் உள்ள கலைப்பொருட்கள் காட்சியகத்தில் தகதகவென மின்னும் மீசை வைத்த பிரமன் சிலை இருக்கிறது. (இந்த இதழின் முகப்பில் அதைக் காணலாம்)

அல்கசர் இசை நாட்டியம்

அல்கசர் என்னும் இடத்தில் நடந்த இசை நாட்டியத்துக்குச் சென்றிருந்தோம். லண்டனில் வெஸ்ட் எண்ட், நியூ யார்க் பிராட்வே போன்ற இடங்களில் இருப்பது போலல்லாமல் இது ஒரு முழுக் கதையாக இல்லை. துண்டு துண்டாக பல்வேறு நடனங்கள் தாய், மற்றும் மேலைய நடனங்களைக் கலந்து இருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

தாய்லாந்தின் உள்ளூர் அரசியல் நிலைமை வலுவானதாக இருப்பதால் நாட்டில் நல்ல பொருளாதார வளர்ச்சி உள்ளது. சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் மேலை நாட்டுப் பொருட்கள் எல்லாம் தாராளமாகக் கடைகளில் கிடைக்கின்றன் சாலைகள் நன்கு பேணப்படுகின்றன.

ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் இந்தியப் பிரதமர் வாஜ்பாயி தாய்லாந்து சென்று நல்லுறவுகளை வளர்க்கும் விதங்களில் பல ஒப்பந்தங்கள் செய்துள்ளார். இந்தியாவைப் போலவே வளரும் பொருளாதாரம் தாய்லாந்து. இங்குள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட 65 மில்லியன்கள் ஆகும்.

இங்குள்ள மக்களுக்கு ஆங்கிலம் அதிகம் தெரிவதில்லை. இருந்தாலும் நம் போன்ற சுற்றுலாப் பயணிகள் சைகைகளை வைத்தே பிழைத்து விட முடிகிறது!

தாய்லாந்தில் செக்ஸ் தொழில் மிகவும் தலைவிரித்தாடுவது சுற்றுலா வரும் பலருக்கு அதிசயமாக இருக்கலாம். பலர் இதற்காகவே தாய்லாந்து வருகிறார்கள். எப்படி மகாபலிபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 'கைடுகள்' வந்து நச்சரிக்கிறார்களோ, அதுபோல் தாய்லாந்தில் பல இடங்களில் 'உடல் பிடித்துவிடுவதில்' ஆரம்பித்து அதற்கும் மேற்கொண்டும் போவதற்கு பெண்கள் அலைகிறார்கள். மேலை நாட்டிலிருந்து வரும் தனி ஆண்கள் பலரும் தாய்லாந்து வந்தவுடனே ஒன்று (அல்லது அதற்கும் மேல்) தாய்லாந்துப் பெண்களோடு 'காதலோடு' சுற்ற ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் இந்தப் பிரதேசத்திலேயே எய்ட்சு நோய் அதிகமாக இருக்கிறது.

அதனால்தானோ என்னவோ அந்த ஊரில் விற்கப்படும் ஒரு கலைப்பொருள் காந்தியின் 'மூன்று குரங்குகள்' கூட மற்றொன்றும் சேர்க்கப்பட்ட நான்கு குரங்குகளாகக் காட்சியளிக்கிறதோ!

அனைத்துயும் பொத்திக்கொள்ளும் நான்கு குரங்குகள்

--*--

எண்ணங்கள் வலைப்பதிவு