முயல்
பத்ரி சேஷாத்ரி, 20 அக்டோபர் 2003



புது வீட்டுக்குக் குடி வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. நான்கு வயது மகளுடன் தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

"அப்பா இதென்ன செடிப்பா?"

கல்யாண முருங்கை... எவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் பார்க்கிறேன்? மனம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போனது.

-*-

"அம்மா, நா எழுத்தாத்து சுரேஷோட வெளில போய்ட்டு வரேன்"

"எங்கடா போற? அப்பா வரதுக்குள்ள வந்துடு, இல்லாட்டிக் கொன்னுடுவா"

"வந்துடறேம்மா, எல பறிக்கப் போறோம்"

"என்ன எலைடா? எங்க போறேள்?"

"ஏதோ கல்யாண முருங்க எலயாம்மா, எழுத்தாத்துல முயல் வாங்கியிருக்கா, அது சாப்டறதுக்காம்", என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்தேன். எதிர் வீட்டில் இரண்டு முயல் குட்டிகள் வாங்கி வைத்திருந்தனர். அவர்கள் வீட்டில் முயல் வருவதற்குமுன் கோழிக்குஞ்சுகள் நிறைய இருந்தன. அவை தெருவில் போய் இரைதேடி வரும். முட்டைகளை மட்டும் தவறாமலே வீட்டிலேயே போட்டு விடும். சில முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடுவார்கள். அவை சிறிதாக இருந்து வளர்ந்து பெரிதாகி, பின்னர் திடீரென்று பிடிக்கப்பட்டு காணாமல் போய்விடும்.

எல்லாமே முட்டையிலிருந்து மற்றவர்கள் வீட்டின் மேஜையில் உணவாகிப் போனதில்லை. சிலவற்றைப் பருந்து தூக்கிக் கொண்டு போகும். அப்பொழுது எதிர் வீட்டுக் குழந்தைகள் அவற்றைத் துரத்திக் கொண்டு போவார்கள். தாய்க் கோழியும் துரத்தும். எட்ட முடியாத வானில் உயரப் பறக்கும் பருந்தை, பரிதவிக்கும் கோழியினால் என்ன செய்து விட முடியும்? முடங்கிப் போய் வீடு வந்து சேரும். இன்னும் சில குஞ்சுகள் வியாதி வந்து செத்துப் போகும். அதற்கு முன் பல வண்ணங்களில் கழியும். உடல் வற்றி, பார்த்தவுடனே நோய் பிடித்த கோழி என்று தெரியும். செத்தவுடன் அதை மண் தோண்டிப் புதைத்து விடுவார்கள்.

சில சமயம் நாங்கள் கோழிக் குஞ்சுகளுக்கு ஈ பிடித்துப் போடுவோம். நாங்கள் என்று சொல்லக் கூடாது. மழை காலத்தில் மொய்க்கும் ஈக்களை லாவகமாய்ப் பிடிக்கும் ஒரு சிலர் இருந்தனர். அடித்துப் போட்ட சின்ன ஈக்களைக் கோழிக்குஞ்சுகள் விரும்பி உண்ணும். எங்கள் தெருவில் ஒரு நாயும் இருந்தது. அதன் முதுகில் உன்னி என்று சொல்லப்படும் ஈக்கள் ஒரு பைக்குள் இருக்கும். அதையும் பிய்த்துக் கோழிகளுக்குப் போடுவோம். நாய்க்கும் நிம்மதி, கோழிகளுக்கும் உணவு. ஒருநாள் அம்மா நான் அங்கு இருப்பதைப் பார்த்து விட்டாள்.

"ஏண்டா பாவி இந்த மாதிரியெல்லாம் உயிர்வதை பண்ரே, நரகத்துக்குத்தான் போவே"

"இல்லம்மா, நான் ஒன்னுமே பண்ணல, வெறும பாத்துண்டுதான் இருந்தேன்"

"வேண்டாம், பார்க்கவே வேண்டாம், மொத உள்ள வந்து தொலை"

அதற்குப் பின், நான் இந்த விளையாட்டுகளிலும் இறங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கோழிகளெல்லாம் எதிர் வீட்டில் காணாமல் போயின.

"ஏண்டா சுரேஷ், உங்காத்துக் கோழியெல்லாம் நீங்களே சாப்டுடுவேளா?"

"இல்லடா, பணம் வேணுங்கறப்ப எங்க மாமாகிட்ட கொடுத்து வித்துடுவோம்"

"அப்ப உங்காத்துல கோழியே பண்ண மாட்டேளா?"

"கோழிக்கறி செய்வாங்க, ஆனா வேற கோழி கடைல வாங்கிட்டு வந்து"

என் அம்மா ஞாயிற்றுக் கிழமைகளில் எதிர் வீட்டுக்கு என்னைப் போக விட மாட்டாள். அவர்கள் வீட்டுக் கதவும் அன்று சாத்தியே இருக்கும். அவர்களும் நான் அன்று அவர்கள் வீட்டுக்குள் வருவதை விரும்ப மாட்டார்கள்.

நானும் சுரேஷும் கல்யாண முருங்கை மரத்தைக் கண்டுபிடித்தோம். புளிய மரத்தடி வீதிக்குப் பின்னாடி வரை போக வேண்டியிருந்தது. அங்குள்ள ஒரு குடிசை வீட்டைச் சுற்றி முல் வேலிகள் இருந்தன. உள்ளே முருங்கை மரமும், வேறு சில செடிகளும், மரங்களும் இருந்தன. ஒரு அடி பம்பும் இருந்தது. அந்த பம்பைச் சுற்றி தண்ணீர் இறைந்து ஒரு சின்ன குளமாகத் தேங்கி இருந்தது. ஒரு நாய் பக்கத்தில் நிழலில் படுத்துக் கொண்டிருந்தது. அதன் வயிறு உப்பி, உப்பி, அடங்கிக் கொண்டிருந்தது. எனக்கு உள்ளே போக பயம். நாய் கடித்து விடுமென்று. அம்மா வயிற்றைச் சுற்றி நாற்பத்தியைந்து ஊசி போட வேண்டுமென்று பயமுறுத்தியிருந்தாள். சுரேஷ் தைரியமாக உள்ளே போனான்.

"யாராச்சுமிருக்கீங்களா?"

"என்ன தம்பி வேணும்?" என்றவாறு ஒரு பெண் வெளியே வந்தார்.

"கொஞ்சம் கல்யாண முருங்கை எல வேணுங்க"

"எதுக்கு தம்பி?"

"எங்க வீட்டுல முயல் வாங்கியிருக்கு, அதுக சாப்டுறதுக்கு"

ஒரு மரத்தைக் காண்பித்துப் பறித்துக் கொள்ள அனுமதித்தார். நான் வெளியிலேயே நின்று கொண்டிருந்தேன். சுரேஷே மேலே ஏறிப் பறித்து வந்தான். வெளியில் வந்ததும் நானும் அந்த இலைக்கட்டுகளை சிறிது நேரம் வாங்கிக் கையில் வைத்திருந்தேன். நேரே முயல்களைப் பார்க்கப் போனோம். அவை இரண்டும் வெளியே வரவேயில்லை. அவர்கள் வீட்டு முன்பகுதியில் கடப்பைக் கற்கள் பதித்த தரை இருந்தது. மூன்று பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. நான்காவது பக்கத்தில் மூன்றடி உயரத்துக்கு மரத்தால் தட்டி எழுப்பி மறைத்திருந்தனர். அதன் மேலே மெல்லிய கம்பி வலை ஓடு வரை எழுப்பப் பட்டிருந்தது. தரையில் ஒரு கடப்பைக் கல்லைப் பெயர்த்து மண்ணை சிறிது தோண்டி வைத்திருந்தனர். முயல்களும் அங்கு வந்திருந்த முதல்நாள் இரவு நேரத்திலேயே அந்தக் குழியை விரிவாக்கி, நிலத்துக்கு அடியில் தங்கள் வீட்டினை அமைத்திருக்க வேண்டும்.

சுரேஷின் மாமா தட்டியைத் திறந்து ஓட்டின் அடியில் ஓடும் மர ரீப்பரில் ஒரு ஆணி அடித்து அதில் ஒரு கயிற்றைத் தொங்க விட்டு அதில் கல்யாண முருங்கைத் தழைகளைக் கட்டினார். கொஞ்ச நேரம் முயல்கள் வெளியே வரும் என்று காத்திருந்தேன். வரவேயில்லை.

அம்மா வீட்டினுள் இருந்து கொண்டு கத்தினாள். "வாடா நாழியாறது, கை கால் அலம்பிண்டு சஹஸ்ரநாமம் சொல்லனும்"

அதன்பின் ஒவ்வொரு முறை சுரேஷ் கல்யாண முருங்கை இலைகள் பறிக்கும் போதும் நான் அவனுடன் சென்றேன். ஆனால் முயல்களை மட்டும் பார்க்கவே முடியவில்லை. காலையில் பார்க்கும் போது கல்யாண முருங்கை இலைகள் மட்டும் சாப்பிடப் பட்டிருக்கும். பாதி கடிக்கப்பட்ட இலைகளில் பல்வரிசை பதிந்திருக்கும்.

முயல்கள் வந்து ஒரு மாதம் கழிந்திருக்கும். குட்டி போட்டுவிட்டது என்றார்கள். எனக்குக் குட்டிகளும் கண்ணில் படவில்லை. அடுத்த சில நாட்களில் முயல் குடும்பம் பெரிதாகிக் கொண்டே வந்தது. முயல்களும் தங்கள் மாளிகைகளைக் கட்டிக் கொள்ள கீழே உள்ள மண்ணைத் தோண்டி வெளியே குவித்திருக்கும். கடைசியாக மூன்று மாதங்கள் சென்ற பிறகு அவைகளைப் பார்த்து விட்டேன்.

சுரேஷின் மாமா ஒரு முயலின் நீண்ட காதுகளைப் பற்றித் தூக்கி வைத்திருந்தார். ஒரு அழுக்கு வெள்ளை நிறத்தில் இருந்தது. பின்னங்காலைத் தூக்கியும், முன்னங்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், நன்கு கொழுத்துப் பெரிதாயிருந்த அந்த முயலைக் கிட்டே போய்ப் பார்த்தேன். கிட்டே போகும் போது மூத்திர நாற்றம் அடித்தது.

"அய்யோ மாமா, இப்பிடிப் பிடிசுத் தூக்கிணா அதுக்குக் காதெல்லாம் வலிக்காதா?"

"இல்ல தம்பி, இத இப்பிடித்தான் தூக்கணும், நீ தூக்கிப் பாரேன்"

"அய்யோ நா மாட்டேன், அம்மா திட்டுவா"

அவர் சிரித்துக் கொண்டே முயலைக் கீழே போட்டார். அது எம்பி எம்பி முன்னங்கால்களை மேலே தூக்கி, தன் கூர்மையான பற்களால் கல்யாண முருங்கை இலைகளைக் கடித்துச் சாப்பிட ஆரம்பித்தது. அப்படியே பார்த்தவண்ணம் இருந்தேன். முயல்கள் கோழிகள் மாதிரி இல்லை. கோழிகளை வெளியே போக விடுவார்கள். அவைகளும் குப்பைகளைக் கிளறித் தெரு மேய்ந்த பின்னர் மாலை சுரேஷோ அவன் அக்காவோ இல்லை அம்மாவோ துரத்திக் கொண்டு வரும்போது வீடு வந்தடைந்து கூடைகளின் அடியில் அமைதியாக ஒண்டிவிடும். அவைகள் தொலைந்து போகாது, பருந்துகளிடம் மாட்டாத வரை. முயல்கள் அப்படியில்லை. அவைகளை வெளியே விட முடியாது. கோழிகள் போல முயல்கள் மனிதர்களை நம்பாது. மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து விட வேண்டும் போலத் தோன்றும். ஒளிந்து கொள்ளத் தெருவில் சாக்கடைகளை விட்டால் வேறிடமில்லை. அந்த சாக்கடைகளிலும் பன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கும். தெருவில் ஒரு சில நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும். அவையெல்லாம் கோழிகளை ஒன்றும் செய்யாது. ஆனால் முயல்களைப் பார்த்தவுடன் துரத்திக் கொண்டு போகுமோ என்னவோ?

அடுத்த ஒரு வருடத்தில் முயல்களின் எண்ணிக்கை பெருத்துப் போய்விட்டது. சின்னஞ்சிறு முயல் குட்டிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவ்வப்போது கிடைக்கும். ஆனால் என்னைப் பார்த்தவுடன் அவை பொந்துக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். ஒவ்வொரு முயல் ஜோடிகளும் மாதத்திற்கு ஒரு ஈடு குட்டிகள் போடும் என்றும் அவற்றின் எண்ணிக்கை ஃபிபனோச்சி தொடர் போல வளர்ந்து கொண்டே போகும் என்று பின்னர் தெரிய வந்தது. நானும் சுரேஷும் கொண்டு வரும் கல்யாண முருங்கை இலைகளின் அளவும் அதிகமானது.

ஒரு நாள் என்ன காரணமோ, நாங்கள் இலை பறிக்கப் போகும் வீட்டின் பெண் இனிமேல் இலை தரமுடியாது என்று சொல்லி விட்டார். தயங்கித் தயங்கி அங்கேயோ நின்று கொண்டிருந்தோம். அவருக்கு எங்கள் மேல் இரக்கமே வரவில்லை. வேறு எங்காவது போய்த் தேடிக்கொள்ளச் சொன்னார்.

எங்கெங்கோ தேடினோம், வேறு இடம் கிடைக்கவில்லை. முயல்களுக்கு ஏதாவது உணவு வேண்டுமே? மற்ற இலைகளை முயல்கள் சாப்பிடவில்லை. எதிர் வீட்டில் முட்டைக்கோஸ் வாங்கிப் போட ஆரம்பித்தனர். கட்டுப்படியாகவில்லை. இனியும் தாங்காது என்று முடிவு செய்து அவர்கள் முயல்களை விற்றுவிடத் தீர்மானித்திருக்க வேண்டும். குடும்பத்தோடு நாங்கள் ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டி இருந்தது. திரும்பி வரும்போது முயல்கள் ஒன்றும் இல்லை.

வந்தவுடன் சுரேஷிடம் சென்றேன்.

"என்னடா ஆச்சு, முயல்லாம் எங்கே?"

"எல்லாத்தையும் மாமா புடிச்சிகிட்டுப் போயி வித்துட்டாரு"

"நாம கல்யாண முருங்கை எல கண்டுபுடிக்க முடியலங்கறதுனாலதான் இப்பிடி ஆயிடுத்து?"

சுரேஷின் கண்கள் கலங்கின. என் கண்களும்தான்.

அதன்பிறகு நாங்கள் நாகப்பட்டிணம் முழுக்க பலவருடங்கள் சேர்ந்து சுற்றியிருப்போம், அந்த ஒரு வீட்டைத் தவிர கல்யாண முருங்கை மரம் என் கண்ணிலேயே பட்டதில்லை.

எவ்வளவோ ஊர்களில் வசித்திருப்பேன். என் கண்ணில் கடந்த 25 வருடங்களாகக் கல்யாண முருங்கை பட்டதில்லை. இன்றுவரை.

-*-

"அம்மா, அப்பா நெஜம் முயல் வாங்கித் தரேன்னா" என்று குதித்துக் கொண்டே என் மகள் வீட்டுக்குள் ஓடி வந்தாள்.

என்ன ஆயிற்று எனக்கு என்பது மாதிரி என் மனைவி என்னைப் பார்த்தாள்.

என் குற்றத்தை எப்படிப் புரிய வைப்பேன் இவளுக்கு?