Sunday, August 03, 2003

கிரிக்கெட் அனுபவம் - 1: ஆட்டமோ ஆட்டோ

எனக்கு சென்னையில் ஆட்டோவில் ஏறுவது என்றாலே கதி கலங்கும். சென்னைத் தெருக்கள் பற்றி உங்களுக்குத்தான் தெரியுமே? எங்கே, எப்பொழுது, யார் குழி தோண்டுவார்கள் என்று தெரியாது. நம் நாட்டின் "தகவல் நெடுஞ்சாலை" வெறும் தார் சாலைகளின் அடியே தோண்டி எடுக்கப்பட்ட பள்ளங்களின் ஊடே செல்லும் ஒளிநார்க் குழாய்களின் வழியேதான். தகவல் நெடுஞ்சாலையில் தகராறு இல்லாமல் பிட்டும், பைட்டும் ஓடும்போது மேலே பல்லவனும், ஆட்டோக்களும் தடக்-தடக் என்று தட்டுத் தடுமாறித்தான் போகும்.

சர்ரென்று ஓடும் ஆட்டோவை கிறீச்சென்று சத்தம் போட்டு நிறுத்தி, "ஏண்டா கசுமாலம், வூட்டுல சொல்லிக்கினு வந்தியா" என்று கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு, ஓட்டுனர் நம்மிடம் திரும்பி நாடு கெட்டுப்போய்விட்டதைப் பற்றி ஒரு பிரசங்கத்தை ஆரம்பிப்பார். நானும் உயிரை கெட்டியாகக் கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது வீடு போய்ச் சேர வேண்டுமே என்ற கவலையில் அசிங்கமாகப் புன்னகை செய்து கொண்டும், "உம்" கொட்டிக்கொண்டும் இருப்பேன்.

இரண்டு வருடத்திற்கு முன் ஃபோர்ட் ஐக்கனும், அதன்கூட ஒரு திறமை மிக்க ஓட்டுனரும் கிடைத்தனர். அவர் ஓட்டும்போது எனக்கு உயிர்மீது ஒரு கவலையும் இருந்ததே இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் 130kmphஇல் போகும் போதும், அண்ணா சாலையில் இடைஞ்சல்களுக்கிடையில் புகுந்து புகுந்து வெளியே வரும்போதும், லாரித்தண்ணி வழிந்து வழிந்தே ரோடே குண்டும் குழியுமான கோடம்பாக்கம் ஹைரோட்டில் முன்னேறும் போதும், எதுவானாலும் என் ஓட்டுனர் ஓட்டும்போது மேகத்தில் பறக்கும் கதிரவனின் தேர் வழுக்கிக் கொண்டு போவது போல் இருக்கும்.

இனிமேல் ஆட்டோ தொல்லை ஏதுமில்லை, விட்டது கவலை என்றிருந்தேன்.

எனக்கு சனி கொழும்புவில் வந்தது.

ஐசிசி சாம்பியன் கோப்பை ஆட்டங்களைப் பார்க்க செப்டம்பர் 2002இல், மனைவியுடன் கொழும்பு சென்றிருந்தேன். இறுதியாட்டம் வரை எங்கோ காணாமல் போயிருந்த மழை இந்தியாவைப் பழிவாங்க வேண்டுமென்றே மெனக்கெட்டுக் காத்துக்கொண்டிருந்தது. இறுதியாட்டத்துக்குக் குறித்திருந்த முதல் நாள் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழப்புடன் முடித்தது. பிரேமதாசா அரங்கில் இரவில் விளக்குகள் எரிய தினேஷ் மோங்கியாவும், விரேந்திர சேவாக்கும் களம் இறங்கினர். முதல் ஓவரில் மோங்கியா ரொம்பவே தடவினார். எண்ணிக்கை பூஜ்யத்திலேயே. ஏண்டா இந்த திராபையைத் துவக்க ஆட்டத்துக்கு இறக்கினர் என்ற கடுப்பில் இந்தியர்கள் வெறுத்துப் போயிருக்க, புலஸ்தி குணரத்னே பந்து வீச்சைத் துவங்கினார். லேசாகத் தூறல். முதல் இரண்டு பந்துகளில் பெரிதாக ஒன்றும் இல்லை, ஆளுக்கொரு ஓட்டம். மூன்றாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே. வானில் பளிச்சென்று மின்னல். நான்காவது பந்து சற்றே அளவு குறைவாக வீசப்பட்டது. சேவாக் கொஞ்சம் பின்வாங்கிப் பந்தைத் தட்ட அது பாயிண்ட் திசையில் பறக்கிறது. நான்கு ஓட்டங்கள். இந்தியப் பார்வையாளர்கள் பாங்கரா நடனம் ஆடத்துவங்கினர். அடுத்த பந்து அதே மாதிரி அளவு குறைவாக வீசப்பட்டது, மீண்டும் நடராஜர் பின்கால் நடனம், ஒத்தி அடித்த பந்து பாயிண்டுக்குப் பின் பறக்கிறது. வானில் இடி, இன்னும் கொஞ்சம் மழைத்தூறல். குணரத்னேக்கு வயிற்றைப் பிசைகிறது. இரண்டு மோசமான பந்துகள், இரண்டும் நான்குகள். கடைசிப் பந்தை எப்படியாவது ஓட்டம் கொடுக்காமல் வீச வேண்டும். கால் திசையில் அளவு அதிகமாக வீசுகிறார், சேவாக்கோ மயிலிறகால் தொடுவது போல் மட்டையால் பந்தை ஒத்துகிறார், வீசப்பட்ட வேகத்தில் பந்து ஃபைன் லெக்குக்குப் பறக்கிறது. நாங்கள் குதிக்கிறோம், வருணனும் கொட்டத் தொடங்குகிறான்.

ஜயசூரியாவுக்கு நிம்மதி. இந்த மாதிரி மழை பெய்தால் இனி விளையாட்டு காலி என்று அவருக்கும் தெரியும், ஆடுகளத்தைக் காக்கும் பணியாளர்களுக்கும் தெரியும். தார்ப்பாலின் போட்டு ஆடுகளத்தை மூடுகின்றனர். நாங்கள் மழையில் நனைந்தபடி ஒரு ஆட்டோவில் ஏறி ஒருமாதிரி விடுதியைச் சென்றடைகிறோம்.

ஊருக்கே தெரிகிறது அடுத்த நாளும் மழை கொட்டும் என்று. ஆனால் மழை சாயந்திரம் ஆறு மணிக்குதான் ஆரம்பமாகும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஐசிசிக்கு மட்டும் இது எப்படியோ தெரியவில்லை. ஆட்ட விதிகளின் படி, முடியாத இறுதியாட்டம் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து தொடரப்படக் கூடாதாம். மற்றுமொரு புதிய ஆட்டம், அதே களத்தில், அதே நேரத்தில் துவக்கப்பட வேண்டும். காலை முழுதும் கொளுத்தும் வெய்யில். முதல் நாள் மழை பெய்ததா என்றே தெரியாத மாதிரி ஈரமே இல்லாத மைதானம். ஆனால் ஆட்டம் மதியம் 2.30க்குத்தான் தொடங்குகிறது. இந்த முறையும் முதலில் மட்டையெடுத்து ஆடுவது இலங்கை. முதல் நாளைவிட மோசமாக ஆடி வெறும் 222 ஓட்டங்களே எடுக்கின்றனர், 7 விக்கெட் இழப்பிற்கு.

இன்றும் மோங்கியாதான் சேவாக்கோடு ஆட்டத்தைத் துவக்குகிறார். ஆனால் கடவுள் புண்ணியத்தில் ஓட்டமெதுவும் எடுக்காமல், பந்துகளை வீணாக்காமல் ஒழிகிறார். உள்ளே நுழைவது சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் இந்தப்போட்டி முழுவதுமே கொஞ்சம் தடவல். வந்து கொஞ்சம் பந்துகளை வீண் செய்கிறார். சேவாக் அவ்வப்போது ஒரு நான்கை அடித்துக் கொஞ்சமாவது ஓட்டம் சேர்க்கிறார். ஆனாலும் 8 ஓவர்களில் வெறும் 28 ஓட்டங்களே. ஒன்பதாவது ஓவர் பந்து வீசப்போவது வர்ணகுலசூரிய பதபெந்திகே உஷாந்தா ஜோசப் சமிந்தா வாஸ் (அம்மாடி!). அவரது பெயரைக் கண்டும், பந்தைக் கண்டும் பயப்படக்கூடியவரல்ல சேவாக். முதல் பந்து அளவு குறைந்து நடு ஸ்டம்பை நோக்கி வருகிறது. சேவாக் பந்தை லாவகமாகத் தூக்கி மிட்விக்கெட் திசையில் அடிக்கிறார், போடு ஒரு நான்கு! இன்னும் இரண்டு பந்துக்குப் பிறகு ஆஃப் திசையில் அளவு குறைந்து வீசப்பட்ட பந்து: அல்வா கிண்டுபவர் திருப்பியை வளைத்துக் கிளறுவது போல் பந்துக்கு அடியில் மட்டையை வைத்துத் திருப்பிக் கிண்டுகிறார், பந்து பறக்கிறது பாயிண்ட் திசையில்! எல்லைக்கோட்டுக்கு வெளியே ஆறு ஓட்டங்கள். (இந்த அல்வா கிண்டும் ஆறு இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை ஆட்டத்தில் பிரசித்தம். டெண்டுல்கர், பெரிய வாய் ஷோயப் அக்தருக்கும், சேவாக், வக்கார் யூனிஸுக்கும் கொடுத்த பரிசு)

எங்கள் சந்தோஷம் போன இடம் தெரியாமல் மழை கொட்டத் தொடங்குகிறது.

வெறுப்போடு ஆட்டோவில் நானும் மனைவியும் ஏறுகிறோம். மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. தெருவெங்கும் தண்ணீர்ப் பிரளயம். நம்மூர் ஆட்டோக்காரர்களை விட மோசம் கொழும்பு ஆட்டோ ஓட்டுனர்கள். இத்தனைக்கும் தெருவில் ஒன்றும் போக்குவரத்தே இல்லை. வெற்றுச் சாலை, கொட்டும் மழை, திடீரென்று எங்கள் கண் முன் மற்றுமொரு ஆட்டோ . எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. ஒரு நொடியில் எனக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. ஓட்டுனர் பிரேக் பிடிக்க, பிரேக்தான் ஒத்துழைக்க மறுத்தது. நாங்கள் பயணம் செய்த ஆட்டோ நேரடியாக முன்னால் இருந்த ஆட்டோவில் மோத, ஒரு விநாடி எனக்கு என்ன ஆனதென்றே புரியவில்லை. எங்கள் ஆட்டோ குடைசாய்ந்தது. ஆட்டோவோடு நானும் மனைவியும் சாய்ந்தோம். முதலில் என் மனைவி கீழே விழ, நான் அவள் மீது விழுந்தேன். திறமையான ஆட்டோ ஓட்டுனர் துள்ளி வெளியே குதித்து விட்டார். யாருக்கும் உயிர் போகவில்லை. எனக்குக் காயம்கூட இல்லை. மனைவிக்கு மட்டும் கொஞ்சம் சிராய்ப்பு. பக்கத்தில் ஒரு ஆட்டோ நிறுத்துமிடம் இருந்தது. அதிலிருந்த எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் ஓடி வந்து எங்களைத் தூக்கி எழுப்பினர். மற்றுமொரு ஆட்டோக்காரர் எங்களை ஓட்டிக்கொண்டு விடுதியில் வந்து சேர்த்தார்.

நானும் என் மனைவியும் இதைப்பற்றிப் பேசுவதேயில்லை.

மீண்டும் கொழும்புவுக்கு கிரிக்கெட் பார்க்கப் போவோம். ஆனால் ஆட்டோவில் ஏறுவதேயில்லை என்று உறுதியெடுத்துள்ளேன்.

No comments:

Post a Comment