Tuesday, September 30, 2003

என் முகம்

இதுவரை என்னைப் பார்க்காதவர்கள் இந்தப் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பதுதான் நான்.



Sunday, September 28, 2003

அடுத்த பயணம்

இன்னும் ஒரு வாரம் பிரித்தனில். இது வேலை நிமித்தமாக. விடுமுறை நன்கு சென்றது. தாய்லாந்து பற்றி எழுத வேண்டும்.

யாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது ...

யாஹூ குழுமங்கள் மீதான இந்திய அரசின் தணிக்கை பற்றி முதலில் அறிந்து கொண்டது நானாகத்தானிருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இருக்கும். போன சனிக்கிழமைக்கு முதல் சனிக்கிழமை முதல் டிஷ்நெட் இணையச்சேவையிலிருந்து திடீரென்று யாஹூ குழுமங்களுக்குச் செல்ல முடியாமல் போனது. திங்கள் அன்று தொலைபேசியில் பேசி என்ன நடந்தது என்று கண்டுபிடித்தேன். வீட்டில் எனக்கு டிஷ்நெட் DSL இணைப்பு. அலுவலகத்தில் வீ.எஸ்.என்.எல் லின் இணைப்பு. அலுவலகத்தில் ஒரு தொல்லையும் இல்லை அந்த சமயத்தில்.

மேற்கொண்டு சிஃபியில் தொடர்பு கொண்டு பேசிய போது அங்கிருகும் மேல்நிலை அலுவலர் அம்மாதிரி ஒரு தடை வந்ததே தெரியாது என்றார். பின்னர் இதுபற்றி இணையத் தொழில்நுட்பர்கள் விவாதிக்கும் குழுவான india-gii@cpsr.org (http://cpsr.org/) க்கு அனுப்பினேன். அங்கு விவாதம் நடைபெற்றது; வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

விஷயம் என்ன என்பது இப்பொழுது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். மேகாலயாவைச் சேர்ந்த இந்திய நடுவண் அரசுக்கு எதிரான கைன்ஹ்யுன் என்போர் நடத்தி வரும் ஒரு யாஹூ குழுமம்தான் காரணம். வெங்கட் எழுதியுள்ள திண்ணைக் கட்டுரையின் சுட்டி இதோ.

எதோ ஒரு தகவல்தொடர்பு அமைச்சக அதிகாரியின் மரமண்டைக்கு இந்த விஷயம் எட்டியிருக்கிறது. அந்தப் புண்ணியவான் உடனே அனைத்து இணையச்சேவை நிறுவனங்களுக்கும் தனது அதிகாரத்தை நிலைநாட்டி உடனடியாக இந்த குழுமத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். முதலில் இந்தப் பெருமையை தட்டிச் சென்றது டிஷ்நெட். கட்டளைக்கு முற்றும் அடிபணிந்த டிஷ்நெட், யாஹூ குழுமங்களையே ஒரேயடியாக வெட்டிச் சாய்த்தது. ஏனெனில் அவர்களுக்கு இந்தக் குழுமத்தை மட்டும் தனியாக மக்களைச் சென்றடையா வண்ணம் தடுப்பது எப்படி என்று தெரியவில்லை. அதனால் அவர்களது router என்னும் கருவியில் groups.yahoo.com என்னும் URL வராதவண்ணம் செய்து விட்டனர்.

கடந்த ஒருவார காலமாக நான் இந்தியாவில் இல்லை. இந்த நேரத்தில் மற்ற இணையச் சேவை நிறுவனங்களும் இந்த URL வராதவண்ணம் செய்து விட்டனர்.

இதுதான் வழியா? இல்லை. சிறு முயற்சி செய்தால் http://groups.yahoo.com/group/kynhun/ என்னும் URL மட்டும் வராதவாறு இணையச்சேவை அளிப்பவர்களால் செய்ய முடியும். அதற்கான கருவிகள் அவர்களிடம் இருந்தாலும் இதற்கான பயிற்சி அவர்களிடம் உள்ளதா என்பதே சந்தேகம். மேலும் இந்தியாவில் எத்தனை பேர் யாஹூ குழுமங்களைப் பயன்படுத்துகின்றனர்? இவர்களைத் தொல்லைக்குள்ளாக்கினால் எத்தனை பேர் சத்தம் போடப் போகின்றனர் என்ற அலட்சியமான மனப்பான்மையும் காரணம்.

இனி இந்தியாவில் வசிகும் நாம் என்ன செய்வது?

1. முதலில் யாஹூ குழுமங்களை வலையில் படிப்பவர்கள், அக்குழுக்களின் அஞ்சல்களைப் பெற குழுமங்களின் பண்புகளை மாற்ற வேண்டும். groups.yahoo.com க்குப் போகவே முடியாது என்கையில் எவ்வாறு இதனைச் செய்வது என்று சிலர் கேட்கலாம். டிஷ்நெட் ஆக இருந்தால் (மற்ற இணைய சேவையாக இருந்தாலும் இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன், இதுவரை முற்றும் பரிசோதிக்கவில்லை) http://in.groups.yahoo.com/ என்னும் முகவரிக்குச் செல்லுங்கள். ஆம், இந்த முகவரி தடைசெய்யப்படவில்லை. இங்கு சென்று நுழைவுப்பெயரையும், கடவுச்சொல்லையும் அளித்தபின் "Edit My Groups" என்பதைத் தேர்வு செய்து உங்கள் குழுக்களில், தேவையானவற்றை மட்டும் "No Email" என்பதிலிருந்து "Individual Emails" என்று மாற்றி விடுங்கள்.

2. அனாமதேயப் பிராக்ஸி சர்வர்கள்: இந்திய அரசும், இணையச் சேவை செய்வோரும் சிறிது கூடத் தடை செய்ய முடியாத anonymous proxy servers முறை மூலம் உங்களுக்கு வேண்டிய யாஹூ குழுமத்தைப் படிக்கலாம். இதற்கு இந்தக் குழுமங்களை உறுப்பினர் அன்றி அனைவரும் படிக்குமாறு வைத்திருக்க வேண்டும். உதாரணம்: ராயர் காபி கிளப். இதில் எழுதப்படுவதைப் படிக்க ஒருவர் குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. படித்துவிட்டு, பதில் எழுத மின்னஞ்சல் முறையைப் பயன்படுத்தலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

டயலப் முறையில் இணையத்தில் இணைபவர்கள் - இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில் - Tools->Internet Options ->Connections -> Settings (உங்கள் ISP dialer க்கானது) எடுத்து அங்கு "Use a proxy server for this connection" என்பதைத் தேர்வு செய்து Addres என்னுமிடத்தில் 216.56.22.43 என்றும் Port என்னுமிடத்தில் 80 ஐயும் அடித்து, சந்தோஷமாக http://groups.yahoo.com/ செல்லவும். நேரடியாக ஒரு குழுமத்தைப் படிக்க http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/ என்று அடித்தால் போதும். அதன்பிறகு ஒவ்வொரு கடிதமாகப் படிக்கலாம்.

http://www.publicproxyservers.com/page1.html என்னும் தளம் சென்று அங்கு கொடுத்திருக்கும் பல சர்வர்களையும் பயன்படுத்தலாம். இதுபோல் பல தளங்களின் முகவரிகள் அங்கே உள்ளன. மொசில்லா மற்றும் அனைத்து உலாவிகளும் இந்த வசதியை அளிக்கின்றன.

இதன் மூலம் படிக்க மட்டும்தான் முடியும், post செய்ய முடியாது. ஏனெனில் இதற்குத் தேவையான cookies உங்கள் கணினியில் வந்து சேராது. மற்ற தளங்களுக்குச் செல்கையில் இந்தப் பண்பை மாற்றி விடவும். இவ்வாறு படிக்கையில் உடனடியாக யாஹூ மெயில் மூலம் அஞ்சல் (அந்த யாஹூ குழுமத்துக்கோ, மற்றவர்களுகோ அனுப்ப வேண்டுமானால், Proxy பண்புகளை மாற்றிய இடத்தில் "Advanced" என்பதனை சொடுக்கி அங்கே "Do not use proxy server for addresses beginning with" என்னும் இடத்தில் "mail.yahoo.com; in.*.mail.yahoo.com" போன்றவைகளை சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் யாஹூ மெயில் மட்டும் உங்கள் ISP மூலமாகவும் (அப்பொழுதுதான் சரியான cookies உங்கள் கணினியை வந்தடையும்), யாஹூ குழுமம் மட்டும் வேறொரு பிராக்ஸி மூலமாகவும் செல்லும்.

3. உங்கள் இணையச் சேவையை அளிப்பவரிடம் சண்டை போடுங்கள். உங்கள் ஊர் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கடிதம் எழுதுங்கள். DOT, TRAI, ISPAI ஆகிய நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதுங்கள். முட்டாள்தனமான தடை, தணிக்கையினால் இணையத்தில் எதையும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று அவர்களது மண்டைக்குள் புகுமாறு சொல்ல வேண்டும்.

யாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை

இன்று விடியற்காலை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகாவினரோடு சண்டை போட்டுவிட்டு வந்து சேர்ந்தால் மதிப்புக்குறிய இந்திய நடுவண் அரசு கடைசியாக இந்திய இணையச் சேவை நிறுவனங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக யாஹூ குழுமங்களை (http://groups.yaho.com/) தடை செய்ய வைத்திருப்பதை அறிந்தேன். இந்திய அரசும், இந்திய இணைய நிறுவனங்களும் இணையத்தைப் பற்றி சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.

இந்தத் தடையினால் பொது மக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் என்பதை முட்டாள்கள் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். யாஹூ குழுமங்களைப் படிப்பவர்கள் அடுத்துள்ள கட்டுரையினால் பயன்பெறலாம்.

Monday, September 22, 2003

விடுமுறை தாய்லாந்தில்

சனிக்கிழமை முதல் தாய்லாந்தில் (ஜோம்தியன் பீச்) விடுமுறையில் இருக்கிறேன். நிறைய டிஜிட்டல் கேமராப் படங்கள் எடுத்தாயிற்று. அமைதியான இடம். வெஜிடேரியன் சாப்பாட்டுக்குத்தான் தொல்லையே.

Friday, September 19, 2003

நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்�

திண்ணையில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை, யூனிகோடில் இங்கு கொடுத்துள்ளேன்.
போன வாரம் இந்திய விமானப் படை சென்னைக் கடற்கரையில் போர்ச் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மறைந்த வழக்கறிஞர் மற்றும் வரித்துறை நிபுணர் நானி பால்கிவாலா நினைவாக மற்றுமொரு வழக்கறிஞர், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி, கடற்கரைக்கு வெகு அருகில் இருந்த அரங்கம் ஒன்றில் 'நீதித்துறையில் சீர்திருத்தம்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

மத்தியத் தட்டு மக்கள் அரசியல் கட்சிகளின் மீதுள்ள நம்பிக்கையைக் காற்றில் பறக்க விட்டு அதிக நாட்கள் ஆகி விட்டது. இப்பொழுது அவர்கள் நம்பிக்கையெல்லாம் நீதிமன்றங்களின் மேல்தான். நீதிமன்றத்தின் ஒவ்வொரு தீர்ப்பினையும் கை கொட்டி ஆரவாரிக்கும் இவர்கள் ராம் ஜேத்மலானி சொல்வதை சற்றே செவி கூர்ந்து கேட்க வேண்டும்.

அவரது பல கருத்துக்களில் ஒன்றே ஒன்றை மட்டும்தான் நான் இங்கே விரிவு படுத்த எண்ணியுள்ளேன்.

  • நீதிமன்றங்கள் அதிகமான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டன. தரம் வாய்ந்த நீதிபதிகள் இப்பொழுது இல்லை.
  • நீதிமன்றங்கள் தேவையற்ற பிரசங்கங்களைச் செய்வதோடு மட்டுமில்லாமல், அரசுக்குத் தேவையில்லாத, அவசியமில்லாத அறிவுரைகளைத் தருகிறார்கள்.

கடைசியாக வெளி வந்துள்ள ஒரு சில நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நீதிபதிகளின் "அறிவுரைகளைப்" பற்றி சிறிது பார்ப்போம்.
  1. ஏர் இந்தியாவில் பெண்கள் 50 வயதுக்கு மேல் விமானப் பணிப்பெண்களாக இருக்கக் கூடாது என்று நிர்வாகம் தீர்மானம் செய்தது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் வழக்குத் தொடுத்து வென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து, ஏர் இந்தியா நிர்வாகத்துக்குச் சாதகமான தீர்ப்பைச் சொல்லியுள்ளது. உலகெங்கிலும் தனியார்கள் நடத்தும் விமானச் சேவையில் கூட இல்லாத பெண்களுக்கு எதிரான இந்த நிலைமை, இந்திய அரசாங்கம் நடத்தும் ஒரு விமான நிறுவனத்தில் நடக்கிறது. அதை நாட்டின் உச்ச நீதிமன்றம் மகிழ்வோடு கட்டிக் காக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அழகாயில்லையாம், அதனால் அவர்கள் விமானப் பணிப் பெண்களாக இருக்கக் கூடாதாம். ஆனால் தொந்தியும், தொப்பையும், வழுக்கையுமான கிழ ஆண்கள் 58 வயது வரை பறக்கும் விமானத்தில் பணியாளராக இருக்கலாமாம்.

    ஏர் இந்தியா மனமுவந்து 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களை தரையில் வேலைக்கு வைத்துக் கொள்ள சம்மதிக்கிறார்களாம். என்ன? ஒரு சின்ன வித்தியாசம். கீழே கிடைக்கும் சம்பளம், மேலே பறப்பதில் கிடைப்பதைவிட நான்கில் ஒரு பங்குதான்.
  2. தமிழக அரசு ஊழியர்கள் லட்சம் பேருக்கு மேல் மிக அவசரமாகக் கொண்டுவந்த சட்டம் மூலம் நீக்கப்படுகின்றனர். நீதிமன்றத்துக்கு ஓடுகின்றனர். கீழே உள்ள நீதிமன்றம் அரசைக் குறை கூற, வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் சென்று பின்னர் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்கின்றது. அங்கு அரசு ஊழியர்கள் கேட்பதெல்லாம் இந்த டெஸ்மா அவசரச்சட்டம் நியாயமானதா என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்பதே. உச்ச நீதிமன்றம் அந்தக் கேள்விக்கான பதிலைத் தரவில்லை. அதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதற்கான எந்தவொரு உரிமையும் இல்லை என்று பிரசங்கம் செய்கிறது. அதன்பிறகு பெரிய மனசு வைத்து எப்படியாவது எல்லா ஊழியர்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அரசிடம் சமரசம் பேசுகின்றனர் நீதிபதிகள். பின்னர் அரசு ஒப்புக் கொள்ள, அவர்களைப் பாராட்டுகிறது நீதிமன்றம். வழக்கறிஞர் கே.எம்.விஜயன் இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை சுட்டி இதோ.
  3. செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் விட்டு விட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்பொழுதே பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறுகிறார். உடனே ஆளும் கட்சி பாரதீய ஜனதா முதல் தமிழக முதல்வர் வரை அவரை ஆதரிக்கிறார்கள். இந்த அறிவுரை தேவையற்றது என்பதைத் தவிரவும், அவசரப்பட்டு பொதுச் சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தொல்லைகளைப் பற்றி சிறிது கூட யோசிக்காமல் சொல்லப்பட்டது என்றும் புரிய வருகிறது. ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கும் மதவாதத் தீயில் ஒரு தலைமை நீதிபதியா எண்ணெய் ஊற்ற வேண்டும்? இவரை யாராவது கேட்டார்களா? தனது சொந்தக் கருத்து என்றால் அதைத் தனியாகத் தெரிவிக்கக் கூடாதா? அதுவும் அன்றி பாராளுமன்றத்திற்கு எப்பொழுது தேவை என்று தோன்றுகிறதோ அப்பொழுது அவர்கள் தீர்மானித்து, எப்படிச் செய்வது என்று முடிவு எடுத்து செய்து விட்டுப் போகிறார்கள்?

    முன்னாள் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ண ஐயர் பொதுச் சிவில் சட்டம் பற்றி எழுதியுள்ள கட்டுரை சுட்டி இதோ. ராம் ஜேத்மலானியும் இந்த பொதுச் சிவில் சட்ட முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்தார்.
  4. இப்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் 'கிடா வெட்டல் தடை' எதிர்ப்பான பொது நல வழக்கு. வழக்கின் நடுவே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஏன் மக்கள் "சைவ முறையில்" வழிபாடு நடத்தக் கூடாது என்று ஒரு கேள்வி கேட்கிறார். இது தேவையா? ஒரு இந்துவிடம் போய் நீ நாளை முதல் ஏன் உருவ வழிபாடு செய்வதை நிறுத்தி விட்டு முஸ்லிம்கள் மாதிரி அருவத்தை வழிபடக் கூடாது என்று கேட்க இவருக்குத் தைரியம் வருமா? காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழிபாட்டு முறையை மாற்றியமைக்குமாறு சொல்லும் போது எவ்வளவு கவனத்தோடு கேள்விகள் கேட்க வேண்டும்?

அடுத்து ஓர் அரசு இனிமேல் அனைவரும் மாமிச உணவு சாப்பிடக் கூடாது என்று (ஒரு பேச்சுக்கு) ஆணை பிறப்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி 'ஏன் நீங்கள் மரக்கறி உணவை இனிமேல் சாப்பிடக் கூடாது?' என்று கேள்வி கேட்பாரா?

இந்தக் குளறுபடிகள் ஏன் நடக்கிறது?

பெண்களுக்கு எதிரான தீர்ப்பு, பெரும்பாண்மை அரசு ஊழியர்களுக்கு எதிரான தீர்ப்பு, சிறுபான்மை மதப்பிரிவினர் பற்றி, பழங்குடியினர் மற்றும் வேறு பல வழக்கங்களைப் பின்பற்றுவர்களுக்கு எதிரான தீர்ப்பு, கருத்து என்று ஏன் மிக உயர்ந்த நீதிமன்றங்களிலிருந்து வந்து கொண்டிருக்கிறது?

உயர், உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளில் எத்தனை பேர் பெண்கள்? எத்தனை பேர் தலித்துகள்? எத்தனை பேர் கிறித்துவ, இஸ்லாம் மதத்தினர்? எத்தனை பேர் சீக்கியர்கள்? எத்தனை பேர் மலைவாழ்ப் பழங்குடியினர்? எத்தனை பேர் அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள்?

இப்பொழுதிருக்கும் நீதிபதிகளுக்கு மலைவாழ் பழங்குடியினர் எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறார்கள், எவ்வாறு வழிபாடு செய்கிறார்கள் என்றெல்லாம் தெரியுமா?

இந்தப் பெரும்பான்மை வாதத்தை எப்படி ஒழிப்பது? இதற்கும் பதில் ராம் ஜேத்மலானியிடமிருந்து வருகிறது.

"நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க 'தேசிய நீதிக் கமிஷன்' ஒன்று தேவை. இந்தக் கமிஷனில் உறுப்பினர்களாக ஆளும் கட்சி, முக்கிய எதிர்க் கட்சி நியமிக்கும் ஆட்களோடு, பார் கவுன்சில், நீதித்துறை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் நீதிபதிகளை நியமிக்கும் போது தகுதியோடு சமூகத்தில் உள்ள எல்லாப் பிரிவினருக்கும் தகுந்த இடங்கள் கிடைக்க வேண்டும், முக்கியமாகப் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர்."

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% சதவிகித இடம் கிடைக்கப் பாடுபட்டால் மட்டும் போதாது, நீதிமன்றங்களில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலித்துகளுக்கும், மதச் சிறுபான்மையினருக்கும் நிறைய இடங்கள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதாவது முட்டாள்தனமான தீர்ப்புகளும், தேவையற்ற கருத்துகளும் நீதிமன்றங்களிலிருந்து வருவது குறையும்.

Thursday, September 18, 2003

அசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்

அசோகமித்திரனின் ஒற்றன் படிக்க ஆரம்பித்துள்ளேன்.

1970களில்(?) அமெரிக்காவில் அயோவாசிடியில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஆதரவில் உலகின் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒன்று சேர்ந்து இருக்கையில் (அதில் அ.மியும் ஒருவர்) நடந்ததைப் பற்றி எழுதியது. புனைகதையா, நிஜ சம்பவங்களா என்று தெரியாது பின்னிப் பினைந்தது என்று தோன்றுகிரது. இப்பொழுதுதான் 6 அத்தியாயங்கள் படித்துள்ளேன். புத்தகத்துக்கு அறிமுகம் பா.ராவின் 154 கிலோபைட்.

இப்பொழுது எழுதவிருப்பது அவரது புத்தகம் எனக்குள் எழுப்பிய சிந்தனைகள். தான் சாப்பிடப் பட்ட கஷ்டத்தைப் பற்றி எழுதுகிறார் அ.மி. காலையில் கோல்டு சீரியல், பாலில் கலந்து சாப்பிடுவாராம். சீரியல் ஃபுட் என்று கடையில் கிடைக்கும் என்கிறார் (அந்த நாட்டுப் பொங்கல்... என்கிறார்). எனக்கென்னவோ இது சீரியலைப் பாலில் கொட்டி மைக்ரோவேவ் அவனில் கொதிக்க வைத்து, குழைத்து, ஆற வைத்து அவரிடம் கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சோறு வடிக்கக் கஷ்டப்பட்டு மேலே குழைந்து, அடியில் பிடித்து, இடையில் வேகாமல் இருக்கும் சமாச்சாரத்தைப் பற்றிப் பேசுகிறார்.

என் வாழ்க்கை இத்தாகாவில் இப்படியெல்லாம் இல்லை. நான் போனது 1991இல். நான்கு நண்பர்கள். ஆளுக்கொரு பிரெஷர் குக்கரைக் கையோடு கொண்டுபோயிருந்தோம். ஒவ்வொரு குக்கருக்கும் முன்னெச்சரிக்கையோடு 2-3 குக்கர் வெயிட் வேறு. ஆனால் அதற்கெல்லாம் வேலையே இல்லாது போய் விட்டது. ஜப்பானியர்களின் அதிமுக்கியக் கண்டுபிடிப்பான மின்சார அரிசி சமைப்பான் (electric rice cooker) அப்பொழுது அங்கு விற்றுக் கொண்டிருந்ததுதான் காரணமே. நேஷனல் பானாசானிக் எத்தனையோ மின், மின்-அணு சமாச்சாரங்கள் செய்து விற்றுக்கொண்டிருந்தாலும் எதுவும் இந்த ரைஸ் குக்கருக்கு ஈடு இல்லை என்று சொல்வேன்.

வேண்டுமென்ற அரிசியைப் போட்டு அதில் ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவுக்குத் தண்ணீரைக் கொட்டி, சுவிட்ச் போட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் போய்விட்டு வரலாம். இருபது நிமிடத்தில் சோறு தயாராகி சூடு ஆறாமல் இருக்கும். இரண்டு, மூன்று மணி நேரமானாலும் சுற்றி விட்டு வரலாம். கொஞ்சம் தண்ணீர் அதிகமாகவோ, குறைவாகவோ ஊற்றியிருந்தாலும் பரவாயில்லை, சோற்றின் பதம் அவ்வளவாக வித்தியாசமாக இருக்காது.

அன்றிலிருந்து இன்றுவரை, சென்னையிலும் எனக்கு அரிசிச்சோறு ஜப்பான் ரைஸ் குக்கரில் மட்டுமே. மேலே கஞ்சி இருக்காது. குழையாது, எந்தவொரு தொல்லையும் கொடுக்காது.

அதிலும் அமெரிக்காவில் இருக்கும் போது தாய்லாந்து ஜாஸ்மின் அரிசி என்று ஒன்று கிடைக்குமே, அடடா, பிரமாதம். நம்மூர்ப் பொன்னி எல்லாம் அதனிடம் பிச்சை வாங்கவேண்டும் அய்யா! இப்பொழுது வேறு வழியில்லாமல் பொன்னியிலே போகிறது வாழ்க்கை. (சனிக்கிழமை முதல் ஒரு வாரம் தாய்லாந்தில் விடுமுறைக்குப் போகிறேன், லோக்கல் அரிசிச் சோற்றை ஒரு பிடி பிடிக்க வேண்டும்)

அப்புறம் அந்த மோர் இருக்கிறதே. இத்தாகாவில் கிரௌளி பட்டர்மில்க் என்று கிடைக்கும். கொஞ்சம் திக்காக. நம்மூர் மோர் மாதிரி வராவிட்டாலும் டெட்ராபாக்கில் கிடைக்கும் இந்த மோரில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சோறுடன் பிசைந்து (ஒரு துளி உப்பு இல்லாமலா?) பொழுதைப் போக்கி விடலாம். கட்டித் தயிரும் (யோகர்ட் என்ற பெயரில்) கிடைக்கும், ஆனால் கிரௌளி மோர் எப்பொழுதுமே எனக்கு அதிகப் பிடித்தமானதாக இருந்தது.

இத்தாகாவில் ஒரு சீக்கியர் மளிகைக்கடை+உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தார். அவர் அதை இந்தியக் கடை என்று பெயர் வைத்திருந்தாலும் காலிஸ்தானை ஆதரிப்பதாகத் தன் வேனில் எல்லாம் எழுதி வைத்திருப்பவர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரது கடையிலிருந்து 'பேடேக்கர்' ஊறுகாய்களை வாங்கி வீட்டில் அடைத்து விடுவோம். ஊறுகாய் தொட்டுக் கொள்ளக் கிடைக்காத மோர்சாதமும் ஒரு மோர்சாதமா?

இது சமைக்கவே தெரியாத ஜடங்களுக்கு. நான் அப்படியல்லவே. கையோடு ஈயச்சொம்பு முதற்கொண்டு கொண்டு போயிருந்தேன். எதற்கா? ஏனய்யா, இது கூடத் தெரியாது? சாற்றமுது ஈயச்சொம்பில் கொதிக்கும் போதுதானே உயிரும், மணமும் பெறுகிறது?

இரண்டு பெரிய தக்காளிகளை நெடுக்காக நறுக்கி வைக்கவும். சரி, புளிக்கு என்ன செய்வது. முதலில் கையோடு இந்தியாவிலிருந்து கொண்டு வந்த கொட்டை நீக்கிய புளி இருந்தது. வெகு சீக்கிரமாகவே அங்கேயே புளிப்பசை டப்பாவில் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டோ ம். ஒரு ஸ்பூனை எடுத்து தண்ணீரில் கரைத்தால் புளித்தண்ணீர் ரெடி. ரசப்பொடியைப் போட்டுக் கொதிக்க வைக்க, பிரஷர் குக்கரில் வேக வைத்த துவரம்பருப்பு (தூர்தால் என்ற பெயருடன்) போட்டு நான்கு கொதி வந்ததும் தாளித்து இறக்க வேண்டியதுதான் பாக்கி. கொத்துமல்லி? அதெல்லாம் கிடைக்காது. சிலான்ட்ரோ என்று பெரிசு பெரிசாய் கொத்தமல்லி மாதிரி (வாசனை கம்மி) கிடைக்கும், பிய்த்துப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். பெருங்காயத் தூள் (எல்.ஜி) அதே காலிஸ்தானிக் கடையில் கிடைக்கும். இப்படியாகப் பருப்பு ரசம்.

புளியை நீக்கி, எலுமிச்சை சாறு உபயோகித்தால் எலுமிச்சை ரசம். அப்புறம் அந்த அன்னாசிப் பழம் இருக்குமே, அதைச் சின்ன சின்னதாய் நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்தால் அன்னாசி ரசம். அந்தப் ரசப் பொடியைத் தூக்கிக் கடாசி விட்டு மிளகையும், வத்தல் மிளகாயையும், சீரகத்தையும், கொத்தமல்லி விதைகளையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து ஒரு மிளகு ரசம் பண்ணலாம். மிளகைக் குறைத்து, கொஞ்சம் தேங்காய் அரைத்து விட்டு மைசூர் ரசமும் கூட. தேங்காய்த் துறுவலைக் கூட பிளாஸ்டிக் பேக்கட்டில் அடைத்து விற்பார்கள்.

இப்படியாக மணக்கும் சாற்றமுதும், சோறும், கையில் கிடைக்கும் காய்கறிகளை வதக்கிக் கறியோ, கூட்டோ, கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸ், நேரம் கிடைத்தால் இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த/அமெரிக்காவிலேயே கிடைக்கும் வத்தல், அப்பளங்களை எண்ணெயில் பொறித்து ஒரு கலக்கல்.

அவ்வப்போது சாதத்தைத் தயிருடன் கலந்து கேரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டு, முழிக்க முழிக்க குட்டி திராட்சைகளைப் போட்டு அமர்க்களமாகத் தயிர்சாதம்.

சாப்பாட்டுக்குக் கஷ்டம் என்று இருந்ததே இல்லை.

Tuesday, September 16, 2003

மர்டாக்: ஸ்டார் நியூஸ்

ஸ்டார் நியூஸ்

8. இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் ஆரம்பித்த போது எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதிருந்தது. நிகழ்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் ஆகிய இடங்களிலிருந்து செயற்கைக்கோள் மூலமாக ஒளிபரப்பப் பட்டன. அப்பொழுது ஸ்டார் நிறுவனம் பிரனாய் ராய் என்பவரின் என்.டி.டீ.வீ என்னும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தங்களது ஸ்டார் நியூஸ் என்னும் சானலுக்கு நிகழ்ச்சிகளை செய்து தருமாறு ஒட்டுமொத்தக் குத்தகைக்கு விட்டு விட்டனர். இந்த நேரத்தில் இந்தியாவில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. இந்தியாவிலிருந்தபடியே செயற்கைக்கோளில் நிகழ்ச்சிகளை மேலேற்றும் உரிமை அப்பொழுது அரசின் தூரதர்ஷனிடம் மட்டுமே இருந்து வந்தது. [இது ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இதனை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனால்தான் தூரதர்ஷன் தவிர்த்த மற்ற சானல்களுக்கும் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப முடிந்தது - 1993, ஹீரோ கப் கிரிக்கெட் போட்டி, இந்தியா] பின்னர் இந்தியாவிலிருந்து எல்லா கேளிக்கை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளும் நேரிடையாக செயற்கைக்கோளுக்கு மேலேற்றலாம் என்ற திருத்தம் வந்தது. ஆனால் இந்த அனுமதி செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் முழுதாக வழங்கப்படவில்லை. செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு இந்திய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்று அரசு சொல்ல ஆரம்பித்தது. இந்தக் கொள்கையையும் அரசு முழுமையாக வெளியிடவில்லை. இந்த சமயத்தில் ஸ்டாருக்கும் என்.டி.டீ.வீக்குமான ஒப்பந்தம் மார்ச் 2003இல் முடிவடைந்தது. அதற்குப் பின் ஸ்டார் தானே தனது செய்திச் சானல் ஸ்டார் நியூஸை நடத்துவேன் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் செய்யவும் ஆரம்பித்தது. மத்திய அரசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே இந்தியாவிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றல் அனுமதி வேண்டுமென்றால் ஒரு செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தில் இந்தியர்கள் 74% பங்கு வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது.

இது போன்ற பல சோதனைகளை சந்தித்திருந்த மர்டாக்கின் நிறுவனம் பல தகிடுதத்தங்களைப் புரிந்து பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதில் ஸ்டார் நியூஸ் என்னும் தொலைக்காட்சியை நிர்வகிக்கும் நிறுவனத்தில் ஒரு சில பிரபலமான இந்தியர்களுக்கு 74% பங்குகளை அளித்தது, ஆனால் அவர்கள் அனைவரில் எந்த ஒருவருக்கும் ஸ்டார் நிறுவனத்திடமிருந்த 26% பங்குக்குக் குறைவாகத்தான் இருந்தது. இது மட்டுமில்லாமல், ஒப்பந்தம் மூலம் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கைக்குள்ளேயே வைத்திருந்தது ஸ்டார். எடிட்டர் மற்றும் வேறு பணியாளர்களை மாற்றுவது முதல், விளம்பரங்களை விற்பது முதலான அனைத்து நடவடிக்கைகளும் ஸ்டாரின் கைக்குள்ளே. நாட்டில் உள்ள மற்ற ஊடகப் பெருமுதலாளிகள் ஒன்று சேர்ந்து இதைக் கடுமையாக எதிர்த்தனர். பிரதமர், துணைப்பிரதமர் என்று அனைவரையும் சந்தித்து சண்டை போட்டனர். இதற்கிடையே மத்திய அரசும் விடாது கேள்விமேல் கேள்வி கேட்டு ஸ்டாருக்குக் கடிதம் எழுத,தாவர்களும் பதில் எழுத மாதங்கள் நகர்ந்தன. குமார் மங்கலம் பிர்லா தன் பங்கை சுஹேல் சேத் என்பவருக்கு விற்க, சுஹேல் சேத் என்பவரிடம் ஸ்டாரை விட அதிகப் பங்கு வந்து சேர்ந்தது. அதனையும் மத்திய அரசும் ஏற்கவில்லை; இந்திய ஊடக நிறுவனக்களும் ஏற்கவில்லை.

பின்னர் மத்திய அரசு இன்னும் கடுமையான கட்டுப்பாடாக, செய்தித் தொலைக்காட்சியில்ல் 51% பங்காவது ஒரு இந்தியக் குடும்பத்திடமோ, அல்லது இந்திய நிறுவனத்திடமோ இருக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடும் இந்தியர்கள் கையில் இருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அதோடு ஒரு மாத காலத்தில் ஸ்டார் (மற்றும் பலரும்) இதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சொன்னது. உடனே இந்தியா வந்திறங்கிய ரூப்பர்ட் மர்டாக்கின் மகன் ஜேம்ஸ் மர்டாக் (ஸ்டார் நிறுவனத்தின் சேர்மன்) ஆனந்த பாஜார் பத்ரிகா எனப்படும் கல்கத்தாவைச் சேர்ந்த அச்சு ஊடக நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து முடித்தார். இது நேற்றைய செய்தி. ஆக இதன்படி ஆனந்த பாஜார் பத்ரிகா ஸ்டார் நியூஸில் 74% பங்கும், ஸ்டார் நிறுவனம் 26% பங்கும் வைத்திருக்கும்.

இனி என்ன ஆகும்? வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலை மாறும். அதன்படி ஸ்டார் தனது பங்கை அதிகரித்துக் கொண்டே போகும். ஆனந்த பாஜார் பத்ரிகாவின் அச்சுப் பதிப்பிலும் 24% வரை ஸ்டார்/மர்டாக் பங்கு எடுக்கும். பின்னர் அந்த நிறுவனம் முழுவதையும் அல்லது 51% வாங்கும். அதன் பின்னர் இந்தியாவும் மர்டாக்கின் கைக்குள்.

இதையெல்லாம் பார்க்க ரூப்பர்ட் மர்டாக் உயிருடன் இருப்பாரா என்பதுதான் அடுத்த கேள்வியே. மனிதருக்கு 73 வயதாகிறது. அவரின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த இரண்டு மகன்கள் ஜேம்ஸ் மற்றும் லாக்லான், ஒரு மகள் எலிசபெத் (முதல் திருமணத்தில் ஒரு மகள் இருக்கிறார், அவர் தந்தையின் தொழிலில் ஈடுபடுவது இல்லை) ஆகியோர் தந்தையின் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மகளும் இப்பொழுது இந்தத் தொழிலிலிருந்து பிரிந்து விட்டார். இரு மகன்களில் யாருக்குப் பட்டம் சூட்டுவது என்று தந்தை இன்னும் தீர்மானிக்கவில்லை. இதற்கிடையில் தற்போதைய மனைவி வெண்டி (சீனர்) இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் (70 வயதுக்கு மேலும், புற்று நோய் வந்து நோயிலிருந்து மீண்ட மர்டாக் பெரிய ஆசாமிதான்).

நாளை பாதி சீனர் ஒருவர் இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் தலைமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

மர்டாக்: சீனா, இந்தியா

சீனா, இந்தியா

6. ஹாங்காங் ரிச்சர்ட் லீயின் ஸ்டார் டீவீயை மர்டாக் வாங்கியது சீனாவுக்காக. இந்தியாவும் ஒரு பெரிய சந்தையாகும் என்று இவர் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் சீனா மர்டாக்கைக் கடுமையாக ஆரம்ப காலத்தில் எதிர்த்தது. அதற்கு ஒரு காரணம் சீனாவிற்கு கடுப்பேத்தும் வகையில் பீபீசீ தொலைக்காட்சி செய்திகளைப் பரப்பும்போது அந்தச் சானலை ஸ்டார் டீவீ நிறுவனம் கிழக்கு ஆசியாவில் அலை பரப்பிக் கொண்டிருந்ததுதான். பத்திரிக்கை தர்மம் முக்கியமல்ல, பணமும், ஆளுமையும் தான் முக்கியம் என்னும் உன்னதக் கோட்பாடின் படி மர்டாக் பீபீசீயைத் தூக்கி எறிந்து விட்டு, பின்னர் ஒரு சீனப் பெண்னையும் மூன்றாவது மனைவியாக (முதல் மனைவி இறந்து விட்டார்; இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்து விட்டுத்தான்) மணம் புரிந்து கொண்டார். அதன்மூலம் இப்பொழுது சீனாவில் ஃபீனிக்ஸ் என்னும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக ஆகி அந்த நாட்டில் ஒரு மாதிரி கால் வைத்து விட்டார்.

7. இந்தியாவிற்கு வருவோம்: ஸ்டார் டீவீ கையில் கிடைத்தபோது மர்டாக் ஏற்கனவே சுபாஷ் சந்திராவின் ஜீ டீவீ நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். அப்பொழுது ஸ்டார் இந்தியாவில் பெரிய நிலையில் இல்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சி சானல் ஈ.எஸ்.பி.என் என்னும் மற்றுமொரு (டிஸ்னி நிறுவனத்தின்) விளையாட்டுச் சானலோடு படு சண்டை போட்டுக் கொண்டிருந்தது. பணமெல்லாம் இந்தச் சண்டையை நிலைநிறுத்துவதிலேயே கழிந்து கொண்டிருந்தது. பின்னர் இந்தச் சண்டை சமரசமாகி 50:50 நிறுவனமாக ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவானது. இது நாட்டில் கிரிக்கெட்டை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. இதன்பிறகு சுபாஷ் சந்திராவும் மர்டாக்கும் ஜீ டீவீயில் உள்ள பங்குகளைப் பிரித்துக் கொண்டு 'நீ உன்வழி போ, நான் என் வழியே' என்று ஆகி விட, மர்டாக் தன் முழுத் திறமையையும் ஸ்டாரில் நுழைத்ததால், அமிதாப் பச்சனின் 'கவுன் பனேகா கரோட்பதி' நிகழ்ச்சி மூலமாகவும், பாலாஜி டெலிஃபிலிம்ஸின் பல கண்ணீர்க் காவியங்கள் மூலமும் ஹிந்தியில் நம்பர் 1 சானலாக ஸ்டார் பிளஸ் உருவெடுத்தது. தற்போது கேளிக்கை சானல்களில் இதனிடம்
  • ஸ்டார் பிளஸ் - ஹிந்தி புதுசு, அழுமூச்சி மெகா சீரியல், சினிமா
  • ஸ்டார் கோல்டு - ஹிந்தி பழசு
  • ஸ்டார் வோர்ல்டு - ஆங்கிலம் கலவை
  • சானல் [வீ] - ஹிந்தி/ஆங்கிலம் திரைப்பட/பாப் பாடல்கள்
  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஈ.எஸ்.பி.என் - ஆங்கிலம், விளையாட்டு
  • நேஷனல் ஜியாகரபி - ஆங்கிலம் இயற்கை, விலங்குகள்
  • ஸ்டார் விஜய் - தமிழ், அழுமூச்சி மெகா சீரியல், சினிமா, சினிமாப்பாட்டு
இருக்கின்றன.

மர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ்யம்

ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா

4. ஆஸ்திரேலியாவை மர்டாக்கும், கெர்ரி பேக்கரும் துண்டாடி ஆளுக்குப் பாதி என்று வைத்துக் கொண்டனர். அங்கிருந்துதான் மர்டாக் உலகை வெல்ல முதலில் பிரித்தன் போய்ச் சேர்ந்தார். பிரித்தனில் சன், தி டைம்ஸ், படு கேவலமான ஆனால் மிக அதிகமாக விற்கும் நியூஸ் ஆஃப் தி வோர்ல்டு போன்ற பத்திரிக்கைகளை வாங்கினார். அதில் கிடைக்கும் பணத்தை, மற்றும் கடனாக வாங்கிய பணத்தை வைத்து செயற்கைக்கோள் தொலைக்காட்சி நடத்துகிறேன் என்று நிறுவனத்தைக் கிட்டத்தட்ட முழுக வைத்தார். பின்னர் ஸ்கை என்னும் தன் நிறுவனத்துக்குப் போட்டியான பீ.எஸ்.பீ என்னும் மற்றுமொரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனம் முழுகுமாறு இருக்கும் போது அத்துடன் தன் நிறுவனத்தை இணைத்து (பீஸ்கைபீ), கால்பந்தில் எக்கச்சக்கமாக பணத்தைப் போட்டு இன்னும் தீவிரமாக சூதாடி இப்பொழுது பணம் கொழிக்கும் நிறுவனமாக மாற்றிவிட்டார். தாட்சர் காலத்தில் பிரித்தன் அரசு இவர் பையில் இருந்தது. அப்படியும் இன்றுவரை இவரால் செயற்கைக்கோள் அன்றி தரைமார்க்கமான தொலைக்காட்சி எதனையும் நடத்தமுடியாமல் சட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது அதனையும் தகர்த்து சானல் 5 எனப்படும் தரைவழித் தொலைக்காட்சியை இவர் வாங்கிவிடுவாரென எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து பிரித்தனும் இவரது பைக்குள். இங்கு ஆரம்பித்து பிரான்ஸில் கானால் ப்லுஸ், இத்தாலியில் செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் என்று அங்கங்கு தாவிக் கொண்டிருக்கிறார்.

5. அமெரிக்காவில் மூன்று தரைவழித் தொலைக்காட்சிகள் நாட்டையே தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. அவை என்.பீ.ஸீ, ஸீ.பீ.எஸ், ஏ.பீ.ஸீ என்பன. இவர்களைத் தாண்டி யாருமே வர முடியாது என்ற நிலையில் பிரித்தனில் இருந்து வரும் லாபத்தைக் கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்காவில் கொட்டி ஃபாக்ஸ் என்னும் தரைவழித் தொலைக்காட்சி நிறுவனத்தைப் படைத்தார். அமெரிக்காவே ஆட்டம் கண்டது. அமெரிக்கனாக இல்லாத ஒருவனால் அமெரிக்காவின் தொலைக்காட்சி நடத்தக் கூடாது என்ற சட்டம் தன்னை ஒன்றும் செய்யாதிருக்க அமெரிக்கக் குடிமகனானார். இப்பொழுது நாட்டின் இரண்டு பெரிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தில் மிகப் பெரியதான டைரக்டீவீ என்னும் நிறுவனத்தை GM இடமிருந்து வாங்கி விட்டார். இந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்தியாவில் VSAT வசதியைச் செய்து கொடுக்கும் ஹ்யூஸ் என்னும் நிறுவனமும் மர்டாக் கையில். இவ்வாறு அமெரிக்கா முழுதும் இவர் கையில் என்ற நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா

நான் ஸ்டார் நியூஸ் பற்றி இந்த வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன். அதன் முதல் இரண்டு பாகங்கள் இங்கே. பாகம் 1 | பாகம் 2

மேலும் எழுத முயன்ற போது கோப்பை சேமிக்காததால் எல்லாம் அழிந்து போனது. ரூப்பர்ட் மர்டாக்கின் சாபம் என்று அதை மேலும் தொடராது விட்டு விட்டேன். இப்பொழுது இந்த விவாதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால், ஒரு சிறு குறிப்பு மட்டும் கீழே.

முன்னுரை

1. ரூப்பர்ட் மர்டாக் ஸ்டார் டீவீ என்னும் ஹாங்காங் நிறுவனத்தை முழு விலைக்கு வாங்கினார். அந்த நிறுவனம் அப்பொழுது ஹாங்காங்கின் மிகப் பெரிய தொழிலதிபரான லீ கா-ஷிங் என்பவரின் மகனான ரிச்சர்ட் லீ என்பவரது நிறுவனமாக இருந்தது. [லீ கா-ஷிங்கின் நிறுவனம்தான் ஹச்சிசன் எனப்படும் உலகில் பல இடங்களில் செல்பேசித் தொலை தொடர்பு சேவையை அளிக்கும் நிறுவனம். இந்தியாவில் எஸ்ஸார் (மற்றும் பல) நிறுவனத்தின் கூட்டோடு பல இடங்களில் செல்பேசிச் சேவையை அளித்து வருகிறது. ரிச்சர்ட் லீ ஸ்டார் டீவீயை மர்டாக்கிற்கு விற்ற பின் PCCW என்னும் நிறுவனத்தைத் துவக்கி, இந்தியாவிலும் Data Access என்னும் தொலை தொடர்பு மற்றும் இணைய வசதி தரும் நிறுவனத்தில் பெரும் பங்கு வைத்திருந்து இப்பொழுது அதை விற்றுவிடத் தீர்மானித்திருப்பதாகச் செய்தி].

2. ரூப்பர்ட் மர்டாக் என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அதிபர், ஆஸ்திரேலியா தனக்குப் பத்தாது என்று அங்கிருந்து பிரித்தன் போய் அங்குள்ள பல செய்தித்தாள் மற்றும் ஸ்கை என்னும் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தன் கைக்குள் வைத்திருப்பவர்; அமெரிக்காவில் ஃபாக்ஸ் தொலைக்காட்சி மற்றும் பல புத்தக அச்சிடும் நிறுவனங்கள், ஹாலிவுட்டில் சினிமா எடுக்கும் தொழிற்சாலை (ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்) வைத்திருப்பதோடு இப்பொழுது டைரக்டீவீ என்னும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தையும் விலைக்கு வாங்கியிருப்பவர். மகா பெரிய ஊடகப் பேரரசர். இவரை விட உலகெங்கிலும் ஊடகத்தைத் தன் கைக்குள் வைத்திருப்பது யாரும் அல்ல. நிஜமாகவே இவரது ஊடக சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் மறைவதே இல்லை. கிழக்குக் கோடியில் ஆஸ்திரேலியா, ஜப்பானில் ஆரம்பித்து, ஆசியா முழுவதும் நிறைந்து, ஐரோப்பாவில் கால் பதித்து, வட, தென் அமெரிக்காவை ஆட்டி வைக்கும் அளவிற்கு இவரது நீட்சி. ஆப்பிரிக்காவில்தான் இவருக்கு அதிகமாக ஒன்றுமே இல்லை எனலாம்.

3. சென்ற இடம் எல்லாம் வென்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் நடந்து கொள்ளும் இவருக்கு பல நாடுகளில் ஆட்சி செய்யும் அரசுகள் தொல்லையைக் கொடுத்தன. மற்ற எல்லாத் தொழிலிலும் தலையையே நுழைக்காத அமெரிக்கா கூட ஊடகங்களைப் பொறுத்தவரை மிக அதிகக் கட்டுப்பாடு வைத்துள்ளது. சீனா என்றால் சொல்லவே வேண்டாம். இவைகளுக்கு முன் இந்தியா வெறும் ஜுஜுபி. அதிக நேரம் செலவு செய்யாமல் இவர் எவ்வாறு உலக அரசுகளை வென்றார், அடிபணிய வைத்தார் அல்லது சலாம் போடுவது போல் போட்டு தன் வெற்றியை முன்னேற்றினார் என்று பார்க்கலாம்.

Sunday, September 14, 2003

நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா

காஞ்சா அய்லய்யா உஸ்மானியாப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். ஆந்திராவில் குருமா இனத்தில் பிறந்தவர்.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்னும் ஆங்கில அறிஞர் "Why I am not a Christian" என்று ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அவரது கருத்து அவர் ஒரு atheist என்னும் முறையில் வெளிப்படுகிறது. ஆனால் அய்லய்யா இந்தியாவில் இருக்கும் சாதி வேற்றுமைகள் மற்றும் தலித்துகளின் மேல் நடத்தப்படும் அடக்குமுறைக் கொடுமைகளைக் கண்டித்து, ஆனால் தங்களுக்கே உரிய (தலித்துக்களுக்கே உரிய) கடவுள் மற்றும் மதக் கோட்பாடுகளை ஆதரித்து "தான் இந்து அல்ல, ஆனால் தனி அடையாளம் கொண்ட தலித் பகுஜன்" என்னும் பொருள் பட இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்து என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சட்டத்தின் மூலமும், இந்துக்களின் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் இந்துத் தீவிரவாத இயக்கங்கள், பார்ப்பன மதவாத மடாதிபதிகள் மூலமும் என்னவென்றால் கிறித்துவ, இஸ்லாம், சீக்கியர் இல்லாத மற்ற அனைத்து மக்கள். இதில் தலித்துகள், மலைவாழ்ப் பழங்குடியினர் ஆகிய அனைவரையும் அடக்கியே சிவில் சட்டம் இந்துக்களை வரையறுக்கிறது. ஆனால் தலித்துகள் இந்துக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார்கள். இது உணவு, உடையிலிருந்து, திருமண, சாவுச் சடங்குகளிலிருந்து, கடவுள் வணக்கம், மறுவாழ்வு பற்றிய கோட்பாடுகளிலிருந்து, சொத்துரிமை என்று எங்கும் பரவியிருக்கிறது. பெண்களின் உரிமையைப் பொறுத்தவரை தலித் பெண்கள் இந்துப் பெண்களின் நிலையிலிருந்து வெகுவாக உயர்ந்திருக்கிறார்கள். மணவிலக்கு பெறுவதிலும், மறுமணம் புரிந்து கொள்வதிலும், "கணவனே கண் கண்ட தெய்வம்" என்ற பத்தாம்பசலித்தனம் இல்லாது வெகு உயர்வான நிலையிலேயே தலித் பெண்கள் உள்ளனர்.

இதையெல்லாம் அய்லய்யா தன் புத்தகத்தில் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

இப்பொழுது பொதுச் சிவில் சட்டம் வேண்டுமென்று பாரதீய ஜனதா முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை குரல் எழுப்பிக் கொண்டிருகிறார்கள். இதைத் தற்பொழுது தீவிரமாக எதிர்ப்பது முஸ்லிம்கள் மட்டுமே. ஆனால் இந்துகளுக்குள் "அடக்கப்பட்டிருக்கும்" தலித்துகளும் (புத்த, ஜைனர்களும்) தீவிரமாக எதிர்க்க வேண்டும். இந்த பொதுச்சட்டம் இந்துச் சட்டமாகி விடக் கூடாதே என்ற பயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அய்லய்யா அடக்குமுறைப் பார்ப்பனியத்தைத் தூக்கி நிறுத்துபவர்களாக பார்ப்பன, பனியா மற்றும் புதிய சத்திரியர்களை அடையாளம் காண்கிறார்.

புத்தகத்தில் பல இடங்களில் அவருக்கு பார்ப்பன, பனியாக்கள் மீதுள்ள கோபம் மிக வெளிப்படையாகத் தெரிகிறது. உண்டு கொழுத்தவர்கள், உடல் உழைப்பு இல்லாது சோம்பிக் கிடப்பவர்கள், சுரண்டுபவர்கள், ஏமாற்றுபவர்கள் என்றெல்லாம் அவர் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது. புதிய சத்திரியர்கள் ("சூத்திர மேல்சாதியினர்") மீது அவருக்குள்ள ஆதங்கமும் வெளிப்படுகிறது. தலித்துகளோடு சேராமல், பார்ப்பன, பனியாக்களுடன் சேர்ந்து தலித்துகள் மீது அடக்குமுறையை வெளிப்படுத்தும் ஒரு அங்கமாக அவர்கள் மாறி வருகின்றனர் என்கிறார்.

புராணக் கடவுளர்கள் மற்றும் தலித் கடவுளர்கள் பற்றி அவரது எண்ணங்கள் ஆதாரமில்லாது, அவசரத்தில் எழுதியது மாதிரிதான் தோன்றுகிறது. தலித் கடவுள்கள் எல்லோரும் பார்ப்பனக் கடவுள்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போரில் உயிர்விட்டவர்கள் என்று அவர் சொல்லும்போது கொஞ்சம் சிரிப்புத்தான் வருகிறது. கடவுள்கள் அனைவருமே மனிதனின் உருவாக்கங்கள்தாம் என்னும்போது என் கடவுளும் உன் கடவுளும் சண்டை போட்டான் என்கிற மாதிரி சொல்வதை விட இன்னும் பகுத்தறிவுடன் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சாதிச் சண்டைகளும், பிரிவினைகளும் வலுத்துவரும் இந்தக் காலத் தமிழகத்தில் அனைவரும் படித்து தங்களை மாற்றிக் கொள்ள உதவும் ஒரு புத்தகம்.

-*- -*-


நான் ஏன் இந்து அல்ல, இந்துத்துவா பற்றிய ஒரு சூத்திரனின் விமரிசனம், காஞ்சா அய்லய்யா, தமிழாக்கம் மு.தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன், விலை ரூ.75, பதிப்பகம்: அடையாளம்

புத்தகத்தின் முழு ஆங்கில வடிவம் இங்கே கிடைக்கிறது.

பி.கு: மோகன்தாஸ் காந்தி "Why I am a Hindu" என்ற புத்தகம் எழுதியுள்ளார் என்றும், "Why I am not a Hindu" என்னும் புத்தகத்தை ராமேந்திர நாத் என்பவர் எழுதியுள்ளார் என்பதையும் இணையத்தில் அறிந்து கொண்டேன்.

Saturday, September 13, 2003

தி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்

இதற்கான விழாவில் கலந்து கொள்ள இன்று பிரதமர் வாஜ்பாயி சென்னை வருகிறார்.

நாகையில் நான் பள்ளி மாணவனாக இருக்கையில் தினமும் எதிர் வீட்டில் கடன் வாங்கி தி ஹிந்து படித்து விட்டுத்தான் பள்ளிக்குப் போவேன். பின்னர் சென்னைக்கு ஐ.ஐ.டியில் படிக்க வந்த போது நான்தான் முதலாவதாக ஹாஸ்டலுக்கு வரும் தி ஹிந்துவைப் படிப்பேன்.

மேற்படிப்புக்கு அமெரிக்காவில் கார்னல் பல்கலைக் கழகம் போகும்போது தி ஹிந்து படிக்க முடியாதே என்ற வருத்தம் இருந்தது. இதெல்லாம் இணையத்தை ஊடக நிறுவனங்கள் அறிந்து கொள்ளாத நேரம். கார்னல் போனபின்னர்தான் கார்ல் குரோக் ஆசிய நூல்நிலையம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். தி ஹிந்து மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து வரும் அனைத்து முக்கியமான ஆங்கில நாளிதழ்களும் அங்கு கிடைத்தன. என்ன, ஒரு வாரம் கழித்து வந்து சேரும். ஆனாலும் ஒரு வரி விடாது படித்து முடித்து விடுவேன்.

கார்னலில் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு தி ஹிந்துவின் அனைத்து இதழ்களும் microfishe முறையில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். அதன்பிறகு 1947க்கான இதழ்கள் வேண்டுமென்றால் அந்த வருடத்தின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பக்கத்தையும் மைக்ரோபிஷ் படிப்பான் மூலம் படிக்கவும் முடியும், அதைத் தாளில் அச்சிடவும் முடியும்.

இப்படியாக இந்தியா விளையாடிய ஒவ்வொரு கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தி ஹிந்துவின் ரிப்போர்ட் அனைத்தையும் படித்திருக்கிறேன்; தாளில் அச்சிட்டு சேர்த்தும் வைத்திருந்தேன். அதன்பிறகு மீண்டும் இந்தியா வரும்போது அத்தனை 'குப்பை'யையும் தூர எறிந்துவிட்டு வரவேண்டியதாயிற்று. இப்பொழுது மீண்டும் சென்னை வாசம் கடந்த 7 வருடங்களாக. வெளியூர்ப் பயணம் என்றால், இருக்கவே இருக்கிறது தி ஹிந்து ஆன்லைன்.

நான் காலையில் காப்பி குடிக்கும் வழக்கம் கொண்டவனல்லன். தி ஹிந்துதான்.

Friday, September 12, 2003

ஓப்பன் ஆஃபீஸ் குறுந்தகடு

நான் ஓப்பன் ஆஃபீஸ் மற்றும் பல உருப்படியான செயலிகளை (முரசு அஞ்சல், எ-கலப்பை, தாப், தாம், திஸ்கி, யூனிகோடு எழுத்துருக்கள், வின்-ஜிப்) ஒரு குறுந்தகட்டில் போட்டு வைத்துள்ளேன். தமிழகத்தில் (அல்லது இந்தியாவில்) யாருக்காவது இணைய வசதி சரியாயில்லை, ஆனால் இந்த செயலிகள் தேவை என்றால் மின்னஞ்சல் அனுப்பவும், கூரியரில் இலவசமாக அனுப்பி வைக்கிறேன். கிராமம் மற்றும் சிறு நகரங்களிலிருந்து கேட்பவர்களுக்கு முன்னுரிமை.

அதே மாதிரி மாண்டிரேக் 9.1 லினக்ஸ் குறுந்தகடுகள் வேண்டுமென்பவரும் எழுதவும், அனுப்பி வைக்கிறேன்.

Thursday, September 11, 2003

பாரதி நினைவு நாள்

சுப்ரமணிய பாரதி இறந்த நாள். சிஃபி.காம் தமிழில் சிறப்புப் பகுதி இங்கே. Internet Explorer இல்தான் தெரியும் [இயங்கு வார்ப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால்]. நேற்று தவறாக வேறு ஒரு சுட்டியை இங்கு கொடுத்து விட்டேன், அதற்கு மன்னிக்கவும்.

பாரதி நினைவு நாளன்று அவன் வாழ்ந்த திருவல்லிக்கேணியில், "வெளிநாட்டவர்" [வெள்ளைக்கார வெளிநாட்டவர்?] மட்டும் வந்து தங்கக்கூடிய ஒரு விடுதி இந்த நாளிலும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்? அது பற்றிய தி ஹிந்து நாளேட்டின் கட்டுரை இதோ. தங்கும் விடுதிக்கு ஒரு நாள் கட்டணம் வெறும் ரூ. 200 தானாம். உள்ளூர்க்காரனை உள்ளே விட்டால் குடித்து ரகளை செய்வானாம். வெள்ளைக்காரன்தான் ஒழுங்காய் இருப்பானாம். ஆக ஜியார்ஜ் புஷ், டோனி பிளேர் வந்தால் பரவாயில்லை. ஜெயலலிதாவைத் தங்க விட மாட்டார்கள். சோனியா காந்தி பரவாயில்லை?

Wednesday, September 10, 2003

ஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்

என்னுடைய வீட்டில் உள்ள கணினியில் எக்கச்சக்கமான பணம் கொடுத்து வாங்கிய மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2000 உள்ளது. அதில் யூனிகோட் தமிழில் அடித்தால், லதா எழுத்துருவைப் போட்டால் சொல்லுக்கு சொல் தேவையில்லாத இடைவெளி. இணைமதி போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தினால், உகர, ஊகார, எகர, ஏகார, ஐகார, ஒகர, ஓகார, ஔகார (ouch!) உயிர்மெய்கள் அத்தனையும் அம்பேல். மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 2003 வாங்கவேண்டுமாம். போங்கடா திருட்டுப் பசங்களா என்று பேசாமல் இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் ஆஃபீஸ் 1.1 ஐக் கீழிறக்கி எ-கலப்பை கொண்டு அடிக்க ஆரம்பித்தால் அருமையாக வருகிறது. அதிலும் லதா எழுத்துரு சரியாக வருவதில்லை. இணைமதிதான் சரியாக வருகிறது. மற்ற தமிழ் யூனிகோடு எழுத்துருக்களை இனிமேல்தான் கீழிறக்கி சோதனை செய்து பார்க்க வேண்டும்.

அத்துடன் கூட PDF முறையில் கோப்புகளை சேமிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நாம் உருவாக்கும் தமிழ்க்கோப்புகளை தமிழ் எழுத்துருவே இல்லாத ஒருவருக்கு PDF முறையில் அனுப்பி விடலாம்.

Tuesday, September 09, 2003

தலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்

நேற்று என் நண்பர் எனக்கு பேட்ரிக் லென்சியோனி (Patrick Lencioni) என்பவர் எழுதிய "The five temptations of a CEO, a leadership fable" என்னும் புத்தகத்தைக் கொடுத்தார். ஒரு தலைமை நிர்வாகி எளிதாக எந்த ஐந்து சபலங்களுக்கு ஆட்படுவார் என்பதை ஒரு கதை போன்று விளக்கும் புத்தகம் இது.

இதுபோன்ற புத்தகங்கள் சாதாரணமாக ஆளைக் காய்ச்சும் வகையில் ஒரு தலைமை நிர்வாகி செய்ய வேண்டியவை இவை என்று புள்ளி வைத்து ஒரு அட்டவணையைத் தயாரித்து அறிவுரையை அள்ளி வழங்குவார்கள். அய்யோ, இன்னும் ஒரு புத்தகமா என்று தூக்கி எறிந்துவிடத் தோன்றும். ஆனால் மிக அருமையான, எளிதான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு நாவலைப் படிக்குமாறு ஒரே நாளில் (மும்பையில் ஆட்டோக்களில் பயணித்த நேரத்தில்) 134 பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அந்த ஐந்து சபலங்கள் என்ன என்கிறார்?
  1. நிறுவனத்தின் முன்னேற்றத்தில் கவனம் வைக்காமல், தன்னுடைய சுய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் வைப்பது. எ.கா: வாழ்க்கையில் நீ முக்கியமான சாதனை என்று எதை நினைக்கிறாய் என்ற கேள்விக்கு நான் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது என்ற பதில் சுய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டதனால் விளைவது. என் முக்கிய சாதனை என் நிறுவனத்தின் முக்கியமான சாதனையான எதாவது ஒன்று பதில் சொல்பவர் இந்த சபலம் இல்லாதவர் ஆவார். தலைமைப் பதவியை அடைவது முக்கியமல்ல. அந்தப் பதவியை அடைந்த பிறகு, அந்த நிறுவனத்தை என்ன சாதிக்க வைத்தாய் என்பதுதான் முக்கியம்.
  2. தன் கீழ் நேரடியாக வேலை பார்ப்பவர்களிடம் அதிக நட்பு பாராட்டி அவர்கள் பொறுப்பற்று வேலையை சரியாகச் செய்யா விட்டாலும், அவர்கள் தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக அவர்களைக் கண்டிக்காது விடுவது.
  3. சரியான முடிவை எடுக்க வேண்டும் என்ற காரணத்தால் கையில் தேவையான தகவல் இல்லை என்று எந்தவொரு முடிவையும் எடுக்காமல், தனக்கும், கீழே வேலை செய்பவர்களுக்கும், முழு நிறுவனத்துக்கும் துல்லியமானதொரு நோக்கை வைக்காமல் இருப்பது. தவறான முடிவை எடுப்பது, எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருப்பதைவிடச் சிறந்தது. வேண்டுமென்றே தவறான முடிவை எடுப்பது சிறந்தது அல்ல, ஆனால் கையில் உள்ள தகவலை வைத்துக் கொண்டு பயமின்றி ஒரு முடிவை எடுத்து அதைச் செயல்படுத்தும்போது அது தவறானதாக இருப்பின் அதை ஒத்துக்கொள்வது எவ்வளவோ சிறந்தது.
  4. நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் வேறுபாடுகளைத் தவிர்த்து ஒருமித்த கருத்துடன் இருக்க விழைவது. அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தால்தான் கருத்து மோதல்கள் ஏற்படும், விவாதம் வலுக்கும், சரியான முடிவுகள் எடுக்கத் துணை புரியும்.
  5. கீழ் வேலை பார்ப்பவர் தன் கருத்துக்களை எதிர்த்துப் பேச, தன் கருத்துக்களைத் தவறு என்று எடுத்துச் சொல்ல அனுமதிக்காமை. அவர்களை நம்பாததால், அவர்களும் தன்னை நம்பாததால், "ஆமாம் சாமி" போடுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை.
ஆகத் தலைமை நிர்வாகி என்ன செய்ய வேண்டும்?
  1. கீழ் வேலை செய்பவரிடம் நம்பகத்தன்மையை உருவாக்குதல். தன் கருத்துக்களை அவர்கள் எதிர்த்துப் பேசும் அளவிற்கு தைரியத்தை வழங்குதல்.
  2. கருத்து ஒருமித்தலை விடுத்து கருத்து வேறுபாட்டுடன் கூடிய விவாதத்தை வரவேற்றல்.
  3. வழவழா என்று முடிவு எடுக்காமல் இருப்பதை விடுத்துக் குறைவான தகவலே இருந்தாலும் தீர்மானமான முடிவை எடுத்தல்.
  4. கீழ் வேலை பார்ப்பவர் தன்னை விரும்பாவிட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் பொறுப்பினை உணர்த்துதல்.
  5. தன் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிறுவனம் எந்த நிலையை அடைய வேண்டுமென்பதை முன்வைத்தல்.

கணபதி பப்பா மோரியா

மும்பையில் இன்றுதான் களிமண் பிள்ளையார் சிலைகளுக்குக் கடல் கரைப்பு. இன்று போய் விமானநிலையம் போக வேண்டிய வேலை எனக்கு. மூன்று மணிநேரம் முன்னதாகவே கிளம்பு என்று நண்பர்கள் எச்சரிக்கிறார்கள்.

நேற்று 30 நிமிடம் ஆக வேண்டிய டாக்ஸிப் பயணம் 90 நிமிடம் ஆனது. தெருவெங்கும், ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் - குறிப்பாக இங்குதான் - பந்தல் அமைத்து பூவினால் அழகு படுத்தி, புதுச்சட்டை போட்ட ஏழை மக்கள் ஆட்டமும் பாட்டமுமாகத் திருவிழா கொண்டாடுகிறார்கள். தெருவில் போக்குவரத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அங்கங்கே ஹோலியில் வண்ணப்பொடியைத் தூவிக்கொண்டிருப்பது போல் ஒருவர் மீது ஒருவர் பொடியைத் தூவிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

கொஞ்சம் நாட்கள் முன்னர்தான் 'கேட்வே ஆஃப் இந்தியா'விற்கு முன்னால் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. மும்பையில் தற்போது காவலர்கள், மிகவேக இயங்கு படை (Rapid Action Force) என்றெல்லாம் 30,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சில சமயங்களில் நெருக்கமான, கூட்டம் மிகுந்த, வசதிகள் மிகக் குறைந்த பெருநகரங்களில் இதுபோன்ற விழாக்கள் நடக்கத்தான் வேண்டுமா என்று தோன்றுகிறது. தெருவோர ஏழைகளைப் பார்க்கையில், அவர்கள் இந்த விழாக்களுக்குச் செலவிடும் நேரத்தைப் பார்க்கையில், ஓரிடத்துக்குப் போய் கொஞ்சமாக நேரத்தைச் செலவு செய்து, கடவுளைக் கும்பிட்டு ஒழுங்காக வாழ்க்கையில் முன்னேறும் வழையைப் பார்க்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமும் வருகிறது. தெருவில் உள்ள விளம்பரப் பலகைகள் எல்லாம் விநாயகரை முன்வைத்து செல்பேசிகளை விற்க முயற்சிக்கின்றன. பால் தாக்கரேயும், மகன் உத்தவ் தாக்கரேயும் சுவரொட்டிகளிலிருந்து மக்களைப் பார்த்து விநாயகர் விழாவைக் கொண்டாடச் சொல்லிச் சிரிக்கின்றனர்.

பால கங்காதர திலகர் தொடங்கி வைத்த வழக்கம், இந்தியாவில் வேறெங்கும் இல்லாத மாதிரி மகாராஷ்டிரம் முழுக்க ஒரு தனித்தன்மையோடு இப்படி நடந்து வருகிறது.

எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுவோம்.

Monday, September 08, 2003

Tomb Raider 2 - Lara Croft and the Cradle of Life

சனிக்கிழமை ஏதாவது ஒரு படத்துக்குப் போக வேண்டுமென்று முயற்சித்ததில், வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தபடியால் [சத்யம் தியேட்டரில்] மேற்படி படத்துக்கு மனைவியுடன் சென்றேன். Tomb Raider 1 விமானத்தில் எங்கோ பறந்தபோது [மிகக்] குட்டித்திரையில் பார்த்தது. இப்பொழுது மகா பெரிய திரையில் 2ஐப் பார்ப்பது.

பெரிய திரையில், லாரா க்ராஃப்டாக நடிக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு பெரிய மார்பகங்கள், பெரிய உதடுகள். படத்தில் அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை.

[மாமன்னர்] அலெக்சாண்டர் உலகையே அழிக்க வல்லமை படைத்த பண்டோராப் பெட்டியை [Pandora's box] எங்கோ பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு, தான் கட்டிய சந்திரக் கோயிலில் அந்த ஒளித்து வைத்த இடத்திற்கான ஒரு வரைபடத்தை voice cryptography முறையில் மாற்றி வைத்து விடுகிறாராம். [இங்கிருந்து ஆரம்பிக்கிறது காதுல பூ]. சாண்டோ ரினி என்னும் கிரேக்கத் தீவு ஒன்றின் அடியில் இந்த அரண்மனை எரிமலைக் குமுறலில் புதைந்து போய் விட்டது என்பது கிரேக்கப் பழங்கதை. மீண்டும் அந்தத் தீவில் எரிமலை குமுறிக் கொட்ட, லாரா [கண்ணைப் பறிக்கும் நீச்சல் உடையில்] கையில் கணினி ஒன்றை வைத்து எந்த இடத்தில் அந்த அரண்மணை மூழ்கியிருக்கக் கூடும் என்று தீர்மானிக்கிறார். பின்னர் உதவிக்கு இரண்டு ஆட்களோடு நீருக்கு அடியில் மூழ்கி, சரியாக அந்த வரைபடம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அந்த தகதகவென மின்னும் தங்க உருண்டையை [அந்த உருண்டைதாங்க வரைபடம்] எடுத்து வருகிறார். அப்பொழுதுதான் வந்து சேருகின்றனர் கெட்ட வில்லனின் அடியாட்கள்.

சென் லோ என்பவனின் தலைமையில் நடக்கும் சீன வில்லன் கூட்டம் லாராவைத் தாக்கி அந்த உருண்டையை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடுகிறது. சென் லோ இந்த கெட்ட காரியத்தை ஜோனாதன் ரீஸ் என்னும் மற்றுமொரு மகா வில்லனுக்காகச் செய்கிறான். இந்த ரீஸ் படவா, இந்தப் பண்டோராப் பெட்டியைக் கைப்பற்றி அதில் உள்ள கெட்ட வைரஸ்கள் மூலம் உலகை அழிக்க [வேறென்ன?] முயற்சிக்கிறான் - அல்லது அதை வைத்து பயம் காட்டி மில்லியன்களைப் பறிக்கப் பார்க்கிறான். ஆக, இவர்களை நிறுத்தியே ஆக வேண்டும்.

அதன் பின் "காதுல பூ" மிகவும் வேகமாகத் தொடருகிறது. MI6 என்னும் பிரிட்டன் உளவு நிறுவனம் மூக்கை நுழைக்கிறது. லாராவே கதி, அவளால்தான் இந்த வில்லன் கூட்டத்தை ஒழிக்க முடியும் என்றாகிறது. லாராவுக்கு இரண்டு "geek" துணை - ஒருவன் கணினி வல்லுனன், கணினி கொண்டு எதையும் சாதித்து விடுவான். மற்றவன் சும்மா உப்புக்குச் சப்பாணி போல் உதை வாங்க. லாராவின் பழைய காதலன் டெர்ரி ஷெரிடன் [இப்பொழுது கஜக்ஸ்தான் சிறையில் இருக்கிறான்] தனக்குக் கிடைத்தால்தான் அவனது உதவியோடு வில்லன்களை ஒரு கை பார்க்கலாம் என்று அடம் பிடித்து, லாரா, காதலனோடு ஏதோ ராக்கெட் விட்டு, பின்னர் மோட்டார் பைக் விட்டு, நடுவில் கொஞ்சமாக காதல் விட்டு, சீனா சென்று அங்கு வில்லன்களைப் பந்தாடி, தங்க உருண்டையைக் கைப்பற்றி சென் லோவை நரகத்துக்கு அனுப்பி விட்டு, அந்த உருண்டையின் படங்களைக் கணினி வல்லுன உதவியாளனுக்கு செயற்கைக்கோள் மூலம் அனுப்பி வைக்கிறாள்.

கணினி வல்லுனன் கழுத்தில் துப்பாக்கி வைத்துக் கொண்டு அந்தப் பக்கம் இருப்பது ரீஸ். என்னவோ புருடா விட்டு ஒருமாதிரியாக பண்டோராப் பெட்டி இருக்கும் இடம் ஆப்பிரிக்காவில் மசாயி இனக் குடியினர் இருக்கும் இடம் என்று லாரா கண்டுபிடிக்கிறாள். வில்லன் ரீஸும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். இதற்கு நடுவில், லாரா தன் காதலன் டெர்ரி கொஞ்சம் சரியில்லை என்று அவனைக் கட் பண்ணி விட்டுத் தனியாகக் கிளம்பி விடுகிறாள்.

அடுத்து ஆப்பிரிக்கா. லாரா பாராசூட்டில் இருந்து குதித்து நேராக லோக்கல் நண்பன் கோசாவின் ஜீப்பில் இறங்கி, மசாயி மக்களை வேண்டி, அவர்கள் உதவியோடு நேராக "உயிர்த் தொட்டில்" இருக்கும் இடத்திற்குப் போகிறாள். வில்லன் கூட்டம் அங்கு வந்து மசாயி வீரர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளி, லாராவை அழைத்துக் கொண்டு உள்ளே போக, அங்கே அமானுஷ்யமான மிருகப் பிசாசுகள் எல்லோரையும் கபளீகரம் பண்ணிவிட, எஞ்சிப் பிழைப்பது லாரா, கோசா, ரீஸ். இதற்கு நடுவில் டெர்ரி, கணினி வல்லுன மற்றும் உப்புக்குச் சப்பாணி உதவியாளர்களைக் காப்பாற்றி, எல்லாம் நடக்கும் இடத்திற்கு வந்தருளுகிறான். அங்கே அமில ஆறு, அதற்கு நடுவே பண்டோராப் பெட்டி.

அடிதடியில், லாரா ரீஸ் படவாவை அமிலத்தில் தள்ளிக் கொல்கிறாள். டெர்ரி தன் கெட்ட புத்தியைக் காண்பித்து அந்த பண்டோராப் பெட்டியை எடுத்துக் கொண்டு உலகத்தை மிரட்டப் போவதாகக் கூறி லாராவை ஒரு அறை விட (!), அவனை இடுப்புக்குக் கீழே சுட்டு துஷ்ட நிக்ரஹம் முழுவதுமாக முடிந்தேறுகிறது.

அப்புறம் லாரா அந்த பண்டோராப் பெட்டியை பத்திரமாக அமில ஆற்றின் நடுவே வைத்து விட்டு மசாயி மக்களின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டு, தன் உதவியாட்களைக் கேலி பண்ணி விட்டு படத்தை முடிக்கிறாள்.

நிறைய கிராபிக்ஸ், அடி தடி, துளிக்கூட நம்ப முடியாத கதை. சுத்தப் பேத்தல். அடாலசண்ட் பசங்களாக இருந்தால் மட்டும், ஏஞ்சலினா ஜோலிக்காக படத்தைப் பார்க்கப் போகவும். மற்ற அனைவரும் வேற வேலை எதையாவது பாருங்க.

இயக்கம்: ஜேன் டி பாண்ட்

ஊர்ப் பயணம்

இன்றும், நாளையும் மும்பை வாசம், அதற்கு மறுநாள் பெங்களூர், வியாழன் அன்று சென்னை. விமானத்தில் செல்லும்போது படிக்க காஞ்சா அய்லய்யாவின் "நான் ஏன் இந்து அல்ல" (தமிழாக்கம்) + எஸ்.வி.இராஜதுரையின் "பதி பசு பாகிஸ்தான்".

Sunday, September 07, 2003

கூகிள் பற்றி

வெங்கட்டின் வலைப்பதிவில் கூகிள் என்னும் தேடியந்திரம் பற்றிய ஒரு தொடரை ஆரம்பித்துள்ளார். இதற்கான சுட்டிகள் இதோ: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

மின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்

"தொலைக்காட்சியின் அசுரத்தாக்குதல்களில் இருந்து சற்றே இளைப்பாறிக் கொள்ள இந்த மின்னிதழ் உங்களுக்கு உதவுமானால் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்." என்று ஆரம்பிக்கும் இந்தக் குறுந்தகடு மின்னிதழ் "மின்தமிழ்" இதழ் 3 இலிருந்து:

திரைப்படத் தணிக்கை பற்றி

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரும், தணிக்கை குழு உறுப்பினருமான லலிதா சுபாஷ் ஆபாசப் படஙிகளின் காட்சிகளை வெட்டி வெட்டி, வெளியே அனுப்பிய பின்னாலும் அந்தப் படம் ஆபாசமாக இருக்கிறது என்று மக்கள் கூறுவதிலிருந்து தணிக்கைக் குழௌவை அடையும் முன்னால் அந்தப் படம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் என்கிறார். ஒரு சில அமைப்புகள், 100-200 பேரோடு போராடுவதால் ஆபாசக் காட்சிகள் நீக்கப்படாது என்றும் அதற்கு அரசு சட்டமே இயற்ற வேண்டும் என்றும் சொல்கிறார். வியப்பாக இருக்கிறது. அப்படியானால் தணிக்கைக் குழு இப்பொழுது என்னதான் செய்து கொண்டிருக்கிறது? ஏதோ காட்டிய படத்தில் ஒரு 10-20% வெட்டிவிட்டு மீதியை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று அனுப்பி விடுகிறார்களா? முழுப் படத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்று ஏன் சொல்லக் கூடாது?

திரைப்படங்களுக்குத் தேவை தணிக்கைகளா? அல்லது "ரேட்டிங்" (rating) ஆ? ஒவ்வொரு படத்திலும் இதை வெட்டு, அதை நீக்கு என்று சொல்வதைக் காட்டிலும் படத்துக்கு அமெரிக்காவில் இருப்பது போல U, PG13, R, X, XX, XXX என்று சொல்லி விடலாமே? திரையரங்குகளுக்கு எந்தப் படத்தை வெளியிடுவது? அந்தப் படங்களை தியேட்டரில் பார்க்க யாரை அனுமதிக்கலாம் என்ற சட்ட திட்டங்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே? ஷங்கரின் "பாய்ஸ்" படம் பெரும் ஆர்ப்பாட்டத்தை விளைவிக்க இருக்கும் இந்த நேரத்தில் நம்முடைய திரைப்படத் தணிக்கை எவ்வாறு இயங்குகிறது, மற்றும் 'பாய்ஸ்" மாதிரி கொஞ்சம் வெளிப்படையாக ஒரு படம் (ஆபாசமா, இல்லையா என்றெல்லாம் நான் சொல்லப்போவது இல்லை) எடுக்கவே கூடாதா என்ற கெள்விகள் கேட்கப்பட வேண்டும்.

எப்.எம்.ரேடியோக்கள்

பாமரன் என்பவர் எப்.எம் ரேடியோக்கள் பற்றி மிகவும் காட்டமாகப் பேசினார். கிட்டத்தட்ட பா.ராகவனின் "கேட்டுக்கிட்டே இருங்க" கட்டுரையின் [154 கிலோபைட், சபரி பதிப்பகம், ஆகஸ்டு 2003] கருத்துக்களை அப்படியே பிரதிபலித்தது. சிறுவர் நேரத்தில் 12 வயதுக்கும் கீழுள்ள பையன் தொலைபேசி அடித்து "திட்றாங்க, திட்றாங்க ... தம்மடிச்சா திட்றாங்க" பாட்டைப் போடச்சொல்லிக் கேட்க அதையும் செய்கின்றனர் பண்பலைக் காரர்கள், இதென்ன பண்பலை வானொலியா, பண்பில்லா வானொலியா என்று கேட்கிறார். காதல் நேரத்தைப் பற்றிக் காட்டமான கருத்து - "யாரோ எழுதி, யாரோ இசையமைத்து, யாரோ பாடி, இங்க யாரோ யாருக்கோ டெடிகேட் செய்றான்... ஏதோ நாட்டின் பிரதமர் கூடங்குளத்துல அணுமின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கற மாதிரி." "காதல் கடிதங்களை நோட்டு புக்குகளில் வைத்து காதலிக்கு அனுப்ப வேண்டிய காலமெல்லாம் போச்சு, வானொலி நிலையத்துக்கே அனுப்பிவிட்டால் அவங்களே பாத்துப்பாங்க. தொலைபேசி ஒரு முக்கியமான நிகழ்வை அடுத்தவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று இருக்கையில் இப்படி ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வானொலி நிலையத்தைத் தொலைபேசியில் அழைக்க, 'அம்மாவுக்கு உடம்பு சரியில்ல' என்ற விஷயத்தைச் சொல்ல முற்படுபவருக்கு 'இந்தத் தடத்தில் உள்ள எல்லா இணைப்புகளும் இப்பொழுது உபயோகத்தில் உள்ளன' என்ற செய்தி வருகிறது. இந்த மாதிரி தொலைக்காட்சி, வானொலிகளுக்கு தொலைபேசுவதை எதிர்த்து பொது நல வழக்கு ஒன்று போடலாமா என்று சிந்தித்து வருகிறேன் என்கிறார்.

அவரையும் நம்மையும் மிகவும் கடுப்பில் ஆழ்த்துவது இந்த வானொலி ஜாக்கிகள் ஒவ்வொரு நேயரையும் பல வருடங்கள் அறிந்திருந்த பாசப் பிணைப்போடு பேசிக்கொள்வதுதான். தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார், ஜெனரல் டயரை சுட்டுக் கொன்றவன் யார் என்றெல்லாம் தெரியாதவர்கள் வானொலியில் நிகழ்ச்சி வழங்குபவர்கள் அத்தனை பேரையும் முழுவதாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் காட்டமாகக் குறைபட்டுக் கொண்டார் பாமரன்.

சினிமா ரசனையைப் பாடமாக வைக்க வேண்டும்

இயக்குனர் பாலு மகேந்திரா பள்ளிகளில் 'சினிமா ரசனை' (film appreciation) என்ற பாடம் கொண்டுவரப் பட வேண்டும் என்ற தன் கருத்தினைப் பற்றிச் சொல்கிறார். சினிமாவின் தாக்கம் தகவல் தொடர்பு ஊடகங்களின் [தொலைகாட்சி, வானொலி] தாக்கத்தை விட அசுரத்தனமானது. இன்றைக்கு மக்கள் இசை என்றால் திரை இசை, கவிதை என்றால் திரைப்படப் பாடல், ஓவியம் என்றால் திரைப்பட விளம்பரப் பலகை என்றதொரு நிலையில் இருக்கையில் நல்ல படம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்க, அத்தி பூத்தாற்போல் ஏதோ ஒரு நல்ல படம் வருகையில் அதைப் புரிந்து கொள்ள முடியாது அது வர்த்தக ரீதியில் தோல்வியடைகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவே இந்த திரைப்பட ரசனை பற்றிய பாடம் பள்ளிகளில் தேவை என்கிறார்.

ஒரு நாள் நிகழ்வு

பாரதிவாசன் இயக்கிய ஒரு குறும்படம். குடிகாரத் தந்தை, மகளுக்குப் படிப்பு தேவையில்லை என்னும் தாய் இவர்களுக்கு மகளாகப் பிறந்த பெண்ணின் வாழ்வின் ஒரு நாளைப் படமாக்குகிறது இந்த ஆவணப்படம். 5 நிமிடங்களே ஆகும் இந்தப் படத்தில் அந்தச் சிறுமி வேலை பார்க்கத் தெருவில் நடக்கும் போது அங்கே கவலையின்றி விளையாடும் குழந்தைகள் ஏற்படுத்தும் பாதிப்பு, தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும் மனிதனின் ஏச்சுகள், பேருந்தில் நெருக்கியடித்துச் சென்று துணி தைக்கும் தொழிற்சாலையில் நாளைக் கழித்து வீடு வந்து தம்பி படிக்கும்போது அதைத் தானும் தெரிந்து கொள்ள ஆசையாகப் பக்கத்தில் போய் உட்காரும்போது 'பொம்பளப் புள்ளக்கி படிப்பெதுக்கு? நாளக்கி எவன் வூட்டுலயோ சாப்பாடு தூக்கிக்கிட்டு இருக்கப்போற, பசங்கன்னாலும் ஒரு நாலு காசு சம்பாரிச்சு குடும்பத்தக் காப்பாத்தும்' என்று வள்ளென்று விழும் தாய், தன்னிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டாயா என்று நச்சரிக்கும் தாய் (இல்லாவிட்டால் நாளைக்கு கடன் காரன் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் தூக்கிக் கொண்டு போய்விடுவான்), இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் குடித்து விட்டு இரவு போதையில் வந்து சேரும் தந்தை என்று முடிகிறது அவளுடைய நாள். மீண்டும் அதே போல் அடுத்த நாள் துவங்குவதற்காக.

இம்மாதிரியாக ஒவ்வொரு இதழிலும் ஒரு குறும்படத்தைக் காண்பிக்க இருப்பதாகச் சொல்கின்றனர் இதழாசிரியர்கள்.

இதைத்தவிர ஒரு கோயில் பற்றி (ஈஸ்வரர் கருப்புசாமி திருக்கோயில்), கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணனின் தொழில் வளர்ச்சி பற்றி, செந்தில்நாதனுடன் உலகமயமாதல் பற்றி, மலர் மருத்துவமனை உளவியல் மருத்துவர் என்.ரங்கராஜன் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பற்றி, கிருத்திகா என்னும் சிறுமி தானே இயற்றிய கானாப் பாடல்களைத் தானே இசையோடு பாடுவது ['நான் ஆளான சின்னப் பொண்ணு, ஆனா வாடாத ரோசாக் கண்ணு' என்று சினிமாத்தரத்திற்கு தாழ்ந்தும், மற்றபடி பொருள் செறிவு ஏதும் இல்லாமலும், ஆனால் நல்ல குரல் வளத்தோடு], கனகராஜன் வாசிக்கும் கவிதைகள் [ஓரளவுக்குப் பரவாயில்லை] என்று முடிகிறது குறுந்தகடு.

ஆசிரியர்கள்: P. தனபால், N. கனகராஜன். மாத இதழ் ரூ. 38, வருட சந்தா ரூ. 440.

தொலைக்காட்சியின் அசுரத்தாக்குதல்களில் இருந்து சற்றே இளைப்பாறிக் கொள்ள இந்த மின்னிதழ் நிச்சயமாக நமக்கு உதவும்.

பி.கு: இந்தக் குறுந்தகட்டை விசிடி கருவிகள் மூலமோ அல்லது கணினியில் எம்பெக் செயலிகள் மூலமோ (Windows Media Player, Real Player) பார்க்கலாம்.

நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை

"நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை" பற்றி ராம் ஜேத்மலானி நேற்று சென்னை இமேஜ் அரங்கில் பேசினார். இது பால்கிவாலா நினைவிப் பேச்சுகளில் மூன்றாவது.

அதே நாளில், அதே நேரத்தில் இந்திய விமானப் படை போர் சாகசங்களை வானில் நிகழ்த்தியே தீருவேன் என்று முடிவு எடுத்ததோடு மட்டும் இல்லாமல் தமிழ் நாளிதழ்கள் வேறு விடாப்பிடியாக சென்னைவாசிகளை கடற்கரைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று தினம் சொன்ன காரணாத்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக மெரீனா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தெருவெல்லாம் போக்குவரத்துக் குழப்பமும் நெரிசலும். ராம் ஜேத்மலானி சொன்ன நேரத்துக்கு முன்னமே வந்து விட்டார். 10.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பேச்சு பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு ஒரு அரை மணிநேரம் தாமதப் படுத்தப்பட்டது.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் திரு. பராசரன் ராம் ஜேத்மலானியை அறிமுகப்படுத்தினார். அறிமுகப் படுத்தியபோதே மிக்க தைரியசாலி என்று ராம் ஜேத்மாலானியைப் பற்றிச் சொன்னார். பின்னர் பேசத்தொடங்கிய ராம் ஜேத்மலானி முதலில் நானி பால்கிவாலாவுக்கு புகழாரம் சூட்டியபின், நீதித்துறையில் செய்யப்பட வேண்டிய அவசிய மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசத் தொடங்கினார்.

[போனமுறை பேசிய என்.விட்டலின் பேச்சை அச்சிட்ட தாளில் கொடுத்ததால், இந்தமுறையும் ஜேத்மலானியின் பேச்சையும் அப்படியே செய்வார்கள் என்று கைக்குறிப்பில் அதிகமாகக் குறித்துக் கொள்ளவில்லை. ஆனால் காலை வாரி விட்டனர் ஏற்பாடு செய்திருந்தவர்கள்.]

முக்கியக் குறிப்புகள் பின்வருமாறு:

  • உச்ச, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் தரம் குறைந்து கொண்டே வருகிறது
  • நீதிபதிகளை நீக்கும் (impeachment) முறை மிகக் கடினமாகவும், குழப்பமாகவும் இருப்பதால் இது நடைமுறையில் சாத்தியம் இல்லாது இருக்கிறது.
  • இப்பொழுதைய முக்கியத் தேவை National Judicial Commision (தேசிய நீதி வாரியம்?). இந்த வாரியத்தில் ஆளும் கட்சி நியமிக்கும் உறுப்பினரோடு, முக்கிய எதிர்க்கட்சி நியமிப்பவரும், நீதிக்கல்வித்துறை அறிஞர்களும், பார் கவுன்சில் அமைப்பின் நியமன உறுப்பினரும் இருக்க வேண்டும்.
  • நீதிபதிகளைத் தேர்வு செய்கையில் 'தகுதி' (merit) யோடு, அவர்கள் சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது பெண்கள், தலித்துகள், மதச் சிறுமான்மையினர் ஆகியவர்களுக்குத் தகுந்த இடங்கள் தர வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத்தின் ஒருசில தீர்ப்புகளைக் குறை கூறிய ஜேத்மலானி முக்கியமாக ஏர் இந்தியா வழக்கில் பெண்கள் 50 வயதுக்கு மேல் விமானப் பணியாளராக இருப்பதை எதிர்த்த ஏர் இந்தியாவிற்கு எதிரான மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்தார்.
  • பொதுச் சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசுகையில், நேற்றைய தி ஹிந்து நாளிதழில் வீ.ஆர்.கிருஷ்ண அய்யர் எழுதிய கட்டுரையைத் தான் முழுவதுமாக ஆதரிப்பதாகச் சொன்னார்.
  • நாட்டுக்குத் தேவை பொதுச் சிவில் சட்டம் அல்ல, பொதுவான நீதியும், நியாயமுமே
  • நீதிமன்ற அவமதிப்பு (contempt of court) பற்றிய தன் கருத்துகளைச் சொல்கையில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு, உண்மையைச் சொல்வது சில சமயங்களில் நீதிமன்ற அவமதிப்பாகி விடுகிறது என்றார். அப்படியாயின் "வாயமையே வெல்லும்" என்று சொன்ன காந்தியும் நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என்றாகி விடும் என்றார்.

என் நண்பன் நிறையக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளான். அதனைப் பின்னர் இங்கு வெளியிடுகிறேன்.

Saturday, September 06, 2003

நேற்று, இன்று

நேற்று பிறந்த நாள் ராதாகிருஷ்ணனுடையது மட்டும் அல்ல; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடையதும். சுதந்திரமடையா இந்தியாவில் கம்பெனி முறையில் பங்கு விற்று கப்பல் தொழில் நடத்தி சுதேசி வியாபாரத்தைப் பெருக்கி ஆங்கிலத் தொழில் ஆதிக்கத்தை அடக்க நினைத்த நல்லதொரு தொழில் முனைவர். ஆங்கிலேய அடக்குமுறையால் சொத்திழந்து, ஜெயிலில் செக்கிழுத்துப் பின்னர் நோயால் உயிர் விட்டவர்.

இன்று சென்னை வானில் இந்திய விமானப் படையின் விமானங்கள் தன் தீர வீரச் செயல்களைக் காண்பிக்கும். இதை சென்னை தூரதர்ஷனும் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கிறார்கள். அதே நேரத்தில் பால்கிவாலா ஃபவுண்டேஷன் சார்பாகப் புகழ் பெற்ற வழக்கறிஞர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜேத்மலானி "Judicial system - need for urgent reforms" என்னும் தலைப்பில் பேசுகிறார். விமான வான் காட்சி இருக்கவே இருக்கிறது. பின்னர் பார்த்துக் கொள்ளலாம். சென்றமுறை பால்கிவாலாப் பேச்சில் என்.விட்டல் பேசியிருந்தார். அவரது பேச்சின் அச்சிட்ட தாள் என்னிடம் உள்ளது. தமிழ்ப்படுத்தி அதனையும், இன்றைய ராம் ஜேத்மலானியின் பேச்சையும் இங்கு போடுகின்றேன்.

Friday, September 05, 2003

ஆசிரியர் தினம்

இன்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு சர்வேபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள். என் அலுவலகம் இருக்கும் தெருவில்தான் (இப்பொழுது இதன் பெயர் இராதாகிருஷ்ணன் சாலை), அலுவலகத்திற்குப் பக்கத்தில்தான் அவர் வசித்து வந்த வீடு. இந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வானொலியில் குழந்தைகளுக்காக ஆற்றிய உரை இங்கே கிடைக்கும். நேரம் இருந்தால் இதைத் தமிழ்ப்படுத்தி இங்கே இடுகிறேன்.

மஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்டுரை

'தி ஹிந்து' நாளேடு பற்றி மஞ்சுளா நவநீதன் திண்ணையில் எழுதிய கட்டுரையில் பல குழப்பங்கள் நிறைந்துள்ளன.

தி ஹிந்து பற்றி பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பல பேசுகிறார்.

1. திமுக பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்தது என்கிறார், ஆனால் இன்று திமுகவிற்கு நேரிடையாக ஆதரவு தராவிட்டாலும் ஜெயலலிதாவின் ஒவ்வொரு எதேச்சாதிகாரப் போக்கையும் கண்டித்து இதே நாளிதழ்தான் தீவிரமாகப் பேசி வருகிறது. அதன் பலனாக 10க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

2. பெரியாரை இருட்டடிப்பு செய்தது என்ற குற்றச்சாட்டோடு, காஞ்சா அய்லய்யா மற்றும் கெயில் ஓம்வேத் ஆகியோருக்கு விடாது இடம் கொடுத்தும் வருகிறார்கள் என்றால் என்ன பொருள்? பிராமணீயத்தை ஆதரிக்கிறார்களா இல்லை எதிர்க்கிறார்களா? நாட்டில் உள்ள மதக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் பாரதீய ஜனதாவும், சங்கப் பரிவாரங்களுமே என்று தோலுரித்துக் காண்பிக்கும் தி ஹிந்து வை பெரியார் அபிமானிகள் பாராட்டத்தானே வேண்டும்?

3. குழிமாற்றுத் திருவிழாவினைக் கண்டித்து எழுதினார்கள் என்னும்போது அத்துடன் கூட MSS பாண்டியனின் மாற்றுக் கருத்தையும் வெளியிட்டார்கள் (அந்த மாற்றுக் கருத்துக்கு மாற்றுக் கருத்தாக முகுந்த் பத்மநாபன் கருத்தையும் வெளியிட்டார்கள்) என்பதை மஞ்சுளா அவர்கள் அறிந்திருக்கவில்லை. நல்ல விவாதம் நடக்குமாறு ஒரு மேடையைத் தருவதில் தி ஹிந்துவை விட சிறந்த இந்திய ஆங்கில நாளிதழை நான் பார்த்ததில்லை.

சென்னையிலிருந்து வெளியான 'தி மெயில்' என்னும் ஆங்கிலேயர் வசமிருந்த, ஆங்கிலேயர்களின் கருத்தை மட்டுமே சொல்லும் நாளிதழுக்கு எதிர்ப்பாக, தேசியத்தை முன்னிறுத்தும் விதமாகத் துவங்கியது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ். அதை ஏன் தமிழில் துவங்கவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பது அறியாமையால் மட்டுமே. தமிழ் என்ற வார்த்தையே அந்த நாளிதழில் வராது என்கிறார். எந்தத் தமிழ் நாளிதழும் செய்யாத 'literary review' வில் தமிழ்ப் புத்தகங்களை நன்கு அறிமுகம் செய்துகொண்டு வருவது தி ஹிந்து மட்டுமே. மஞ்சுளா அவர்கள் தி ஹிந்துவைப் படிக்கிறாரா என்ற சந்தேகமே நமக்கு வருகிறது.

பாக்கிஸ்தான், இந்தியா, சீனா, என்.ராமின் கம்யூனிச ஆதரவு, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது அபாண்டம், எமர்ஜென்சி ஆதரவு என்று பல கருத்துக்களைக் கூறுகிறார். தி ஹிந்துவின் ஒவ்வொரு காலகட்ட ஆசிரியர்களும் செய்த எல்லாமே சரி என்று யாரும் வாதிட முடியாது. ஆனால் மொத்தத்தில், அந்தக் குறைபாடுகளையெல்லாம் தவிர்த்துப் பார்க்கையில் தி ஹிந்து வின் 150 வருட வரலாற்றில் நிறையே மிஞ்சுகிறது.

Thursday, September 04, 2003

மதுரை ஆதீனத்தின் அருள்வாக்கு

  • குழந்தைகளுக்கு சாதிப்பெயர் சூட்ட வேண்டும்
  • தேவர் இனமக்கள்தாம் தமிழகத்தில் ஆளப் பிறந்த சாதி
  • தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜன் யாரைக் காட்டுகிறாரோ, அவர்தான் இனிமேல் முதல்வர், பிரதமர்
தினமலர் சுட்டியில் இதுபற்றி வந்திருக்கும் செய்தியைப் படியுங்கள்.

இந்த மாதிரிப் பேச்சு ஒரு சாதிக்கட்சித் தலைவரிடமிருந்து வந்தால் அதை மன்னித்து விடலாம். ஒரு சைவ மடத்தைக் கட்டிக் காக்கும் ஆதீனத்திடமிருந்து வந்தால்?

சினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்

இதற்கெல்லாம் என்ன சம்பந்தம்?

மும்பையில் சினிமா தியேட்டர்களில் படம் காட்ட ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் ஒலிபரப்புவார்களாம். அப்பொழுது பாதி மக்கள் கூட்டம் கூட எழுந்து நின்று மரியாதை செலுத்த மாட்டார்களாம். ஆமய்யா, அவனவனுக்கு "நம்ம சீட்டுல உக்காந்து சாவகாசமா பாப் கார்ன் சாப்பிட்டுகிட்டு இருக்கற குண்டு மாமாவ எடத்தக் காலி பண்ணச் சொல்லி சண்டை", "கோக்கா கோலா இரண்டு கப் வாங்கிட்டு வா - காதலியோட தொணதொணப்பு", "யாரோட காலையாவது நறுக்குன்னு ஷூவால மிதிச்சிட்டு திட்டு வாங்கற கடுப்பு", இப்படி இருக்கும் கவலைகளில் தேசிய கீதமா காதில் விழும்? விழுந்தாலும், எழுந்து நிற்கும்போது "புஷ் பேக்" சீட் பின்னால் மடங்கி, நிற்க கொஞ்சமாக இடம்.

மும்பையைச் சேர்ந்த விளம்பரத் துறைக் கலைஞர்கள் ரகு, மனீஷ் பட் என்ற இருவரும் இந்த நிலைமையைக் கண்டு வெறுத்துப்போய் ஒரு விளம்பரம் படம் ஒன்று எடுத்துள்ளனர். வாருங்களேன், நாமும் அந்த விளம்பரத்தைப் பார்ப்போம்.

நசநசவென மக்கள் கூட்டமாய், மும்முரமாய்த் தன் வேலையைப் பார்க்கும் மும்பைத் தெரு. ஒரு பேல்பூரி, பானி பூரி, பிரெட் சாண்ட்விச், வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு வியாபாரி, ஒரு நொண்டி செருப்புத் தைக்கும் கிழவன், ஒரு கடிகார ரிப்பேர் ஆசாமி, ஷூ துடைக்கும் மூன்று சிறுவர்கள். பம்பரமாய் உழைக்கும் வர்க்கம், உழைத்தால்தான் உணவு.

இரண்டு புர்க்கா அணிந்த பெண்கள் தெரு ஓரத்தில் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். செருப்புத் தைப்பவனின் வானொலியிலிருந்து கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிக்கான நேர்முக வர்ணனை கசிந்து கொண்டிருக்கிறது. ஒரு தாய் தன் மகளைக் கையில் பிடித்தபடி அந்த பானி பூரிக் கடைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.

முதலில் சிறு தூரல், கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைகிறது. செருப்பு தைப்பவனுக்கு வானொலி ஒரு பொக்கிஷம். அணைத்து எடுத்து மழையிலிருந்து காக்க வேண்டும். பழைய வானொலிப் பெட்டியிலிருந்து வெறும் கர்-புர் சத்தம் மட்டும் இப்பொழுது. ஷூ துடைக்கும் சிறுவர்களின் கேலியைப் பொருட்படுத்தாது, வானொலியை அள்ளி எடுத்து டியூனரைத் திருப்புகிறான், ஆனால் வானொலி வேறு ஸ்டேஷனுக்குச் செல்கிறது.

அங்கிருந்து சுபா முத்கலின் கம்பீரமான குரலில் தேசிய கீதம் வழிந்தோடுகிறது. கொட்டும் மழையில் தன் டேப் போட்டு ஒட்டிய மூக்குக் கண்ணாடியை சரிபடுத்தியபடி, ஊன்றுகோல் துணையுடன் நொண்டிக் கிழவன் எழுந்து நிற்கிறான்.

அந்த மூன்று சிறுவர்களும் அமைதியாக ஒன்றன் பின் ஒன்றாக கொட்டும் மழையில் எழுந்து நிற்கிறார்கள்.

படு ஸ்டைலாக ஆடை உடுத்திய இரண்டு இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு எதையும் சட்டை பண்ணாமல் அந்தப் பக்கமாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கணீரென அமிதாப் பச்சனின் குரல் ஒலிக்கிறது: "தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்காமல் தேசத்தை எப்படி மதிக்க முடியும்? தேசிய கீதத்தை மதியுங்கள்."



இப்பொழுது இந்த விளம்பரப் படம் மும்பை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

பிசினஸ் லைனில் வந்த இந்தச் செய்தியின் சுட்டி இதோ.

Wednesday, September 03, 2003

தொலைதொடர்புக் குழப்பங்கள்

வெகு நாட்கள் முன்னர் தொலைதொடர்பு விஷயமாக நான் ஒருசில கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். அதில் செல்பேசி நிறுவனங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவை இங்கே:

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

இந்த நேரத்தில்தான் ரிலையன்ஸ் தனது limited mobility செல்பேசிச் சேவையை நாடெங்கிலும் அளிக்க ஆரம்பித்தது. GSM செல்பேசி நிறுவனங்கள் இதை வன்மையாக எதிர்த்தன. ரிலையன்ஸ் CDMA முறையில் கொடுக்க ஆரம்பித்த செல்பேசிகள் குறைவான வீச்சில் இல்லாது GSM செல்பேசிகள் போலவே தொலைபேசி வட்டங்கள் (telecom circle) முழுமைக்கும் வேலை செய்தன. ஜி.எஸ்.எம் செல்பேசி நிறுவனங்கள் கூட்டமைப்பான COAI இதைக் கொண்டு TDSAT என்னும் தொலைதொடர்பு தீர்ப்பாணை நடுவர் மன்றத்துக்குச் சென்றன. இந்த நடுவர் மன்றம் limited mobility செல்லுபடியாகும் என்று ஒருமனதாகத் தீர்ப்பு அளிக்க, அதை எதிர்த்து COAI உச்ச நீதிமன்றத்துகுச் சென்றது. உச்ச நீதிமண்ரம் இந்த வழக்கை மீண்டும் TDSAT பக்கமே மறு பரிசீலனைக்குத் தள்ளி விட்டது. போன மாதம் TDSAT இந்த வழக்கை 2-1 என்ற பெரும்பான்மையில், லிமிடெட் மொபிலிடி செல்பேசிகளை வழங்குவதில் தவறில்லை என்று தீர்ப்பு அளித்தது. ஆனால் அதோடு இல்லாமல் லிமிடெட் மொபிலிடி நிறுவனங்கள் "roaming" சேவையை அளிக்கக் கூடாது என்றும் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

இது பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் விக்ரம் ராகவனின் தளத்திற்குச் சென்று பார்க்கவும்.

திறந்த நிரல் செயலிகள்

முருகபாண்டியன் என்பவர் திறந்த நிரல் செயலிகள் (open source software) பற்றி ஒரு தமிழ் இணைய தளத்தை உருவாக்கி அதில் பல தமிழ் கட்டுரைகளை சேர்த்திருக்கிறார். இது உங்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும்.

அரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

கே.எம்.விஜயன் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர். மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் தேவைப்படும்போது உயர், உச்ச நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளைக் கொண்டுவருவார். தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் போது, டெஸ்மா சட்டம் கொண்டு அரசு லட்சக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது தொடர்பான வழக்கு "டெஸ்மா சட்டம் நியாயமானதா? அதை ரத்து செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லாமல் தமிழக அரசிடம் அனைத்து ஊழியர்களையும் வேலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அரசு ஊழியர்கள் எந்தக் காலத்திலும் வேலை நிறுத்தம் செய்ய உரிமையே கிடையாது என்று தனது சொந்தக் கருத்தையும் சேர்த்து விட்டது. இதுபற்றிய தனது கருத்தை விஜயன் இந்த மாதத் திசைகள் இதழில் எழுதியுள்ளார். அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

டாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்

ஏற்கனவே நான்கு முறை டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றுமொரு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இந்தப் பட்டம் "மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்தியதற்காகவும், ஆண்-பெண்களிடையே சம்த்துவத்தைக் கொண்டு வந்ததற்காகவும், அரசில் சீர்திருத்தம் கொண்டு வந்ததாலும், மழைநீர் சேமிப்பைத் தீவிரமாக வலியுறுத்தியதாலும், பள்ளிகளில் அறிவியல் தமிழை உள்ளிட்டதாலும்" கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

ஏதோ கட்சிக் கூட்டத்தில் புகழாரம் கொடுப்பது போல் உள்ளது.

இந்தப் புகழாரத்தில், "யானைகளுக்கு சத்துணவு கொடுத்ததாலும், கோயிலில் 1000 பேருக்கு மணம் செய்வித்ததாலும், இலவச உணவு போட்டதாலும், கிடா வெட்டத் தடை செய்ததாலும்" என்று சேர்க்காமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சியே.

Tuesday, September 02, 2003

சண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு

பிரித்தனின் சண்டே டைம்ஸ் இதழ் மாதத்திற்கு ஒருமுறை ஒரு குறுந்தகடு ஒன்றினை இணைப்பாக வழங்க ஆரம்பித்து உள்ளதாம்.

அது பற்றிய பிபிசி செய்தியும் விமரிசனமும் இதோ.

இந்திய மற்றும் தமிழ் இதழ்களும் இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது போல் குறுந்தகடுகளையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

தமிழில் குறுந்தகட்டில் விசிடி இதழ்கள் இரண்டு வெளியாகின்றன என்று தெரியுமா உங்களுக்கு? தமிழ் இணையம் 2003 கண்காட்சியில் இவைகளைக் கண்டேன். வாங்கி வீட்டில் வைத்துள்ளேன். இன்னும் பார்க்க முடியவில்லை, பார்த்தபின் அதைப்பற்றி எழுதுகிறேன். ஒன்று சிறுவர்களுக்காகவும், மற்றொன்று பெரியவர்களுக்காகவும்.

மாத இதழாக வெளியாகும் இவை கோவையில் உள்ள நிறுவனம் மூலம் வெளிவருகிறது.

All India Radio - Director General post

இன்று காலை செய்தித்தாளில் பெரிய விளம்பரம்: அகில இந்திய வானொலி நிலையத்திற்கு டைரக்டர் ஜெனரல் தேவையாம். ஆகா! எனக்குக் கிடைத்தது நல்ல வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டேன். அ.இ.வா வை ஒரேயடியாக மாற்றி அமைத்து விடலாம். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் பண்பலை வானொலிகளை ஓட ஓட விரட்டி விடலாம் என்று மேலும் படிக்கத் தொடங்கினேன்.

சம்பளம் வெறும் ரூ. 24,000 த்தில் தான் ஆரம்பிக்கிறது என்று போட்டதும் கொஞ்சம் வருத்தம். சரி, நாட்டுக்கு சேவை செய்ய இப்படி ஒரு குறைந்த சம்பளம் கிடைத்தால் பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். மேலே படிக்கத் தொடங்கினேன்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பட்டப்படிப்பு இருக்க வேண்டுமாம். நிச்சயம் அதில் தேறி விடுவேன்.

குறைந்த பட்சம் 25 வருடங்களாவது வேலை செய்திருக்க வேண்டுமாம், அதிலும் 15 வருடங்கள் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்திருக்க வேண்டுமாம். இது தனியார் நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லையாம். [ஊடக நிறுவனம் தவிர, திட்டமீட்டும் பணியில் இருந்தாலும் தேவலாமாம் - Policy planning. திட்டமீட்டும் பணி என்றால் என்ன?]

போச்சு.

இந்த மாதிரி பைத்தியக்காரத் தனமான நிபந்தனைகள் விதிக்கப்படும் வரை உருப்படியான யாரும் இந்த வேலைக்குக் கிடைக்கப் போவதில்லை. முதுகலைப் பட்டப் படிப்புக்குப் பிறகு 25 வருடம் வேலை செய்துள்ளவர், நிச்சயமாக 50 வயதை நெருங்குபவர். கடந்த 15 வருடங்களாக ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்திருப்பவர் நிச்சயமாக அகில இந்திய வானொலிக்காரராக அல்லது தூரதர்ஷன் காரராக மட்டுமே இருக்க முடியும். திட்டம் தீட்டும் பணியில் இருப்பவர் என்றால் இந்தியன் சிவில் சர்வீஸ் பணி?

ஆக மொத்தம், உள்ளுக்குள் ஒருத்தருக்கு வேலை போட்டுக் கொடுப்பதுதான் தீர்மானம் போல். அ.இ.வா உருப்படாமலே போவதின் காரணம் இப்பொழுது புரிகிறதா? அதுவும் ரூ. 25,000 சம்பளத்தில். நம்மூரில் எந்த மென்பொருள் நிறுவனமானாலும் (இப்பொழுதைய மந்த கதியில் கூட) 3 வருடத்தில் இந்த சம்பளம் வாங்கின்றனர் சின்னப் பசங்கள் எல்லாம். திட்டக் கமிஷனின் பத்தாவது திட்டத்தில் ரூ 1463 கோடி அகில இந்திய வானொலிக்கென ஒதுக்கப்பட்டுள்ள சமயத்தில், அதைப் பராமரிப்பவருக்கு மாத வருவாய் வெறும் ரூ. 25,000.

பண்பலை வானொலிக்காரர்கள் சந்தோஷத்தில் திளைப்பதாகச் செய்தி.

Monday, September 01, 2003

சென்னையில் CAS

இன்று செப்டெம்பர் 1ஆம் தேதி. எங்கு செயல்படுத்தப்பட்டதோ இல்லையோ, கறாராக சென்னையில் conditional access system அமுலாக்கப்பட்டுள்ளது. CAS க்கு கந்துறு அணுக்கச் சிட்டம் என்று சொல்கிறார் முனைவர் இராம.கி.

என் பெண்ணுக்குப் பிடித்தமான கார்ட்டூன் நெட்வொர்க்ஸ், அனிமல் பிளானெட், டிஸ்கவரி மற்றும் நேஷனல் ஜியாகரபி எல்லாம் காலி. எனக்குத் தேவையான ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டென் ஸ்போர்ட்ஸ் எல்லாமும் காலி. வேறு வழியில்லாது சுமங்கலி கேபிள் விஷனோ, ஹாத்வே கேபிளோ, ஏதோ ஒன்றில் ஒரு set-top box வாங்க வேண்டும். [Set top boxes = கொத்து மேல் பெட்டிகள் - இராம.கி] நல்ல டிஜிட்டல் பெட்டிகளுக்குக் கிட்டத்தட்ட ரூ. 4500 ஆகிறதாம். இப்பொழுதைக்கு இந்த மல்கு சிட்ட இயக்காளர்கள் (multi-system operators) வெவ்வேறு கன்னல்களுக்குத் தனி வசூல் ஆரம்பிக்கவில்லை. அந்த வசூல் இன்னும் சில நாட்களில் தீவிரமாக ஆரம்பிக்கும்.

எது எப்படியாயினும் நல்ல தரத்தில் ஒளியோடை தெரிந்தால் நல்லதே.

திசைகள் கட்டுரை

வலைப்பதிவு செய்வது எப்படி என்று நான் திசைகள் செப்டெம்பர் இதழில் எழுதிய கட்டுரை சுட்டி இதோ.

இன்னும் விரிவாகப் படங்களுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய செய்திகள்

* தி ஹிந்து விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரவில்லை. தினமலர்தான் காலையை ஆரம்பித்தது.
* பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. உயர்த்தும் போது ரூ 1 அல்லது 2; குறைக்கும் போது வெறும் 10 பைசாதான். தினமலர் தலைப்பு "கிடு கிடு".
* பாவப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் இன்றுமுதல் கூட்டம் கூட்டமாக உயர் நீதிமன்றம் நியமித்த மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன் வந்து கெஞ்சவேண்டும். அவர்களுக்கு விடிவு கிடைக்க நம் பிரார்த்தனைகள்.
* தினமலர் தற்கொலைப் பக்கம்: விதவிதமான வேதனைகளினால் பலர் தற்கொலை செய்து கொள்ள (மொத்தம் ஐந்து தற்கொலைகள் அந்தப் பக்கத்தில் வந்துள்ளது), இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஒருவர் விநாயக சதுர்த்தி கொண்டாடத் தேவையான பணம் இல்லை என்பதனால் தற்கொலை செய்து கொண்டாராம். பிள்ளையார் இவரை நரகத்தில் சந்தித்துத் தன் தும்பிக்கையால் நான்கு போடு போடவேண்டுமென்று வேண்டிக் கொள்வோம்.
* கடைசியாக ஜெயலலிதாவின் "கிடா வெட்டல் தடை": காவலர்கள் ஊர் ஊராக சென்று கோயில்களில் ஆட்டையும், கோழியையும் வெட்டி விருந்து படைப்பதைத் தடை செய்ய, கோயிலுக்கும், ஊருக்கும் வெளியே அவை நடைபெறுகின்றன. வீட்டுக்குள் நடந்தால் என்ன செய்வார்கள் காவலர்கள்?