Sunday, October 19, 2003

கவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்

நேற்று கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய 'கவிதைக் கணம்' கூட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.

அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்ற பெரிய படைப்பாளிகள் வந்திருந்தனர். ராகாகியில் இருக்கும், நான் இதுவரை நேரில் சந்தித்திராத ஒரு சிலரைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது - வைதீஸ்வரன், ஹரிகிருஷ்ணன், வாஞ்சி, ஆசாத்.

இதுதான் நான் முதலில் பங்கு கொள்ளும் இலக்கியக் கூட்டம். அதிகமாக எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எனக்கு நானே எச்சரிக்கை விடுத்திருந்தாலும், கடைசியில் ஏமாற்றம்தான். இனிவரும் இலக்கியக் கூட்டங்களுக்கு என் மனதை இன்னும் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நிகழ்ச்சி நடந்தது தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பறையில். நான் ஒரு பள்ளி வகுப்பறைக்குள் கால் மிதிப்பது 17 வருடங்களுக்குப் பின்னர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் வைதீஸ்வரனை ஆசிரியர் அமரும் நாற்காலியில் உட்கார வைத்தனர். வைதீஸ்வரனின் ஒரு கவிதையும் சில ஓவியங்களின் பெரிதாக்கப்பட்ட ஒளிநகல்களும் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னால் உள்ள கரும்பலகையில் ஒரு சில கணித சமன்பாடுகள் எழுதப்பட்டிருந்தன (நிகழ்ச்சி நடத்துபவர்களின் ஏற்பாடு இல்லை, முந்தைய வகுப்பில் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்!).

விருட்சம் அழகியசிங்கர் முதலில் (புதுமைப்பித்தன்?) கவிதை ஒன்றைப் படித்து நிகழ்ச்சியைத் துவக்கினார். அதன் பின் கி.ஆ.சச்சிதானந்தம் வைதீஸ்வரன் கவிதை பற்றிய தன் நினைவுகளைப் பற்றி, நினைவிலிருந்தே (எழுதி எதுவும் வைத்துக் கொள்ளாமலே) பேசினார். அவர் எடுத்துக் காட்டும் கவிதைகளில் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் வைதீஸ்வரன் அடிகளை நிரப்பினார். தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் நினைவிலா வைத்துக் கொண்டிருப்பார்?

அடுத்து இரா.முருகன் ராகாகி சார்பாக பேசினார். கிளப்பில் பரிமாறப்பட்ட வைதீஸ்வரன் படைப்புகளைப் பற்றி (கவிஞர் மட்டுமல்ல, ஓவியர் மற்றும் மேடை நாடகக்காரர்) சிறிது சொல்லிவிட்டு பரிசு ஒன்றையும் வைதீஸ்வரனுக்குக் கொடுத்தார்.

அதன்பின் வைதீஸ்வரன் கவிதைகள் பற்றிய விமரிசனம், திறனாய்வு, வாசகனின் அபிப்ராயம் என்று பலர் எழுதி வந்த கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தனர். சுப்ரமணியன் என்பவர் தான் விமரிசகன் இல்லை, திறனாய்வும் செய்யவில்லை, ஒரு வாசகனாக, வாசகனுடைய எண்ணங்களைப் பதிவு செய்கிறேன் என்ற பெருத்த பீடிகையோடு ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள், நெருக்கி எழுதிய தாள்களைப் படித்துப் பேசியிருப்பார். நன்கு செய்த ஆராய்ச்சிக் கட்டுரை போலிருந்தாலும் இது எழுத்து வடிவத்தில் இன்னும் உதவியாய் இருந்திருக்கக் கூடும்; இந்தக் கூட்டத்தில், துவக்க நிலை வாசகனான எனக்கு, அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. அதன் பின் கட்டுரை படித்தவர்கள் நேரத்தை இந்த அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் நேரம் ஓடிக் கொண்டே போனது. கவிதாயினி மாலதி மும்பையிலிருந்து எழுதி அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப் பெற்றது. அடுத்து பூமா ஈசுவரமூர்த்தி தன் கட்டுரையப் படித்தார். சிறிய கட்டுரை ஆனாலும் சுவையாயிருந்தது. அதன்பின் கிளப்பில் இருக்கும் பாரதிராமன் (அவரும் வந்திருந்தார்) எழுதியிருந்த கட்டுரையை லதா ராமகிருஷ்ணன் வாசித்தார்.

அடுத்து பிரியம்வதன்(?) என்பவர் எழுதிக் கொண்டு வராமல் தான் எவ்வாறு வைதீஸ்வரன் கவிதைகள் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதைப் பற்றிப் பேசினார். மரபுக் கவிதை, செய்யுள், புதுக்கவிதை பற்றியெல்லாம் பேசினார். அதில் உள்ள கருத்து எல்லோருக்கும் உடன்பாடாயிருந்திருக்காது. ("குறுந்தொகையிலும் எதுகை மோனையின்றி, கூற்று மட்டுமே பிரதானமாக ஒரு கவிதை உள்ளது" என்று எடுத்துக் காட்டினார். முன் அமர்ந்திருந்த ஹரியும் முருகனும் ஏதோ சொல்லிக் கொண்டனர். ஹரி இந்தப் பாட்டில் மோனை நிச்சயமாக உள்ளது என்று சொன்னமாதிரி என் காதில் விழுந்தது.)

விருட்சம் அழகியசிங்கர் வைதீஸ்வரன் கவிதைக் கணம் பற்றி வாசகர்களிடம் சொல்லி கருத்து கேட்டிருந்ததற்கு பதிலாக வந்த கடிதங்களைப் படித்தார். அதை அவர் படிக்கும் போது அறை முழுவதும் அவ்வப்போது தீபாவளி வெடிச்சிரிப்பு நிறைந்தது. ஒருசில

<துவக்கம்>
இவரது 'கிணற்றில் விழுந்த நிலவு' முதல் கவிதையிலேயே "திருஷ்டி கழித்து அவளை திருப்பி அனுப்பிவிடு" என்று வடமொழிச் சொல் வருகிறது. அதனால் மேற்கொண்டு இந்தக் கவிதைத் தொகுதியை நான் படிக்கவில்லை. இவரது பெயரிலேயே வைதீஸ்வரன் என்று வடமொழி எழுத்து வருகிறது. அதை இவர் மாற்றி வைதீசுவரன் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
<முடிவு>

<துவக்கம்>
இவரது கவிதைகள் எல்லாவற்றிலும் ஆண்களில் குரலே உள்ளது. பெண்களே இல்லை.
<முடிவு>

<துவக்கம்>
இன்னொரு அய்யரா? ஏன் நீங்கள் தலித் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதில்லை? தலித் கவிஞர்களுடன் கவிதைக் கணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை?
<முடிவு>

கிட்டத்தட்ட ஆறு மணிக்குத் துவங்கிய கூட்டம், இப்பொழுது மணி ஏழு நாற்பத்தி ஐந்து ஆகி விட்டது. நான் மிகவும் ஆவலோடு வைதீஸ்வரனைப் பேசச் சொல்லுவார்கள், அவரைக் கேள்விகள் கேட்பார்கள், அவருகும், அசோகமித்திரன் போன்றவர்களுக்கும் இடையில் ஏதாவது விவாதம் நிகழலாம், அதிலிருந்து ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று ஆவலோடு காத்திருந்தது நடக்கவில்லை. ஒருவேளை நான் எழுந்து வந்தபின் இவை அனைத்தும் நடந்திருக்கலாம்.

ஆனால் ஒரு மூத்த கவிஞரை, "புதுக்கவிதை"யை வழி நடத்தி வந்தவர்களில் ஒருவர் என்று நினைக்கப்படுபவரை சும்மா உட்கார வைத்துவிட்டு இத்தனை பேர்களும் தங்களது பாண்டித்யத்தை வெளிப்படுத்துவதா இம்மாதிரிக் கூட்டங்களின் நோக்கம் என்று எனக்குப் புலப்படவில்லை. ஒருவேளை கவிதைக் கணத்தின் குறிக்கோளே இதுவானதாக இருக்கலாம். ஆனால் இந்த நீண்ட கட்டுரை வாசிப்பு சரியானதாகத் தோன்றவில்லை. கட்டுரை எழுத்தில் பார்ப்பதில்தான் சுகமும், அறிவும் தரும். நேரில் பேசும்போது அதற்கேற்ற மாதிரி மேடைப்பேச்சு பாணியில் பேச வேண்டும். மேற்கோள்கள் தேவை, உட்கார்ந்திருப்போருடன் ஊடாடல் தேவை. ஒரு கேள்வி, சில பதில்கள், ஒரு கலந்துரையாடல். புதியவன் ஆனாலும் நான் சொல்வதைக் கேட்பார்களா?

அதேபோல் நேரத்துக்கு சற்று மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. இரண்டு மணி நேரம் என்பதே என்னைப் பொறுத்தவரை அதிகமானது. பத்து மணி நேரம் கூட இருக்கத் தயார், அதில் பயன் உண்டு என்றால். ஆனால் அவ்வாறு பயன் ஏதும் இருப்பதில்லை போலத்தான் தோன்றுகிறது. மூன்று பேருக்கு மேல் பேசக்கூடாது. 15 நிமிடத்துக்கு மேல் ஒருவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. விழா நாயகனுடன் கலந்துரையாட 30-60 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். கையில் செல்பேசி கொண்டு வந்திருக்கும் நண்பர்கள் நிர்தாட்சணியமாக அதனை 'மௌன'மாகவோ அல்லது அணைத்தோ விடுதல் நலம். நடுவில் எழுந்திருந்து வெளியே போய் (கூட்டத்தை நடத்தும் அழகியசிங்கரே இவ்வாறு செய்து கொண்டிருந்தார்) பேசி விட்டு வருவது கூட்டத்தில் உள்ள அனைவரையும், முக்கியமாக வைதீஸ்வரனையும் அவமதிப்பது போலாகும்.

அப்புறம் இந்த டீ, காபி. அவசியமே இல்லை என்று தோன்றுகிறது. அவை வேண்டுமென்றால், தெருவோரக் கடைக்குப் போய்க்குடித்துக் கொள்ளலாம். இல்லை, இடைவேளை உண்டாக்கி ஐந்து நிமிடங்கள் டீ, தம், செல்பேசிக்கு ஒதுக்கலாம்.

ஒரு சுய-ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் முன்னேறுதல் கடினம் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment