Tuesday, December 09, 2003

நடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு

தினமலரில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கையில் திடீரெனக் கண்ணில் பட்டது "நடிகை மும்தாஜுக்கு மூன்று சினிமாப் பத்திரிக்கைகள் நஷ்ட ஈடு தரவேண்டும்" என்ற நீதிமன்றத் தீர்ப்பு. இந்த சுட்டி தினமலர் ஆன்லைனில் இல்லை. 'தி ஹிந்து'வில் முழுத் தகவல்கள் வெளியே வரவில்லை. தினமணியிலும் முழுத் தகவல்கள் வெளியே வரவில்லை.

ரோஜா, சினி லவ், சினித் திரை என்னும் இந்த [மஞ்சள்] பத்திரிக்கைகள் மும்தாஜ் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதோடு மட்டுமல்லாமல், மும்தாஜுக்கு அவரது மேனேஜரின் மனைவியோடு "ஒருபால் தொடர்பு" இருக்கிறது என்றும் எழுதினவாம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரூ. 11 லட்சம் நஷ்ட ஈடு தரச்சொல்லியுள்ளார். இந்தியாவில் அவதூறு வழக்குகள் இவ்வளவு சீக்கிரத்தில் தீர்ப்பாகும் என்று நம்ப ஆச்சரியமாக உள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற அவதூறு வழக்குகள் மிகவும் பரபரப்பாக வெகுஜனப் பத்திரிக்கைகளால் பேசப்படும். ஆனாலும் முடிவென்னவோ சொதப்பலாக இருக்கும். சில நேரங்களில் அவதூறினால் பாதிக்கப்பட்டவர் பண நஷ்டம் அடைந்துள்ளார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். மனத் தொல்லைகளுக்கு ஆளானார் என்றால் அதற்கு எத்தனை நஷ்ட ஈடு கொடுப்பது என்று நிர்ணயம் செய்வதும் கடினம்.

மேற்சொன்ன வழக்கில் நஷ்ட ஈட்டுத் தொகை 'ல'கரத்தில் இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. இனியும் மஞ்சள் பத்திரிக்கைகளோ, மற்ற பத்திரிக்கைகளோ, தேவையில்லாமல் பிறரது தனிவாழ்க்கையை மையமாக வைத்து, அசிங்கமான அவதூறு செய்யாமல் இருக்கும்.

No comments:

Post a Comment