Monday, January 12, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 6

மற்றுமொரு புத்தக வெளியீடு

ப.சிவகாமி இ.ஆ.ப
முதலிரண்டு புத்தக வெளியீடுகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த என்னை மேடையில் உட்கார வைத்து விட்டனர். அதனால் என்னை நானே படம் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. இந்தப் புத்தக வெளியீடு இரவு 20.45க்கு ஆரம்பமாகவிருந்தது. ஆனால் நாள் முழுதும் நிகழ்ச்சிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் ஆரம்பிக்க 21.15க்கு மேல் ஆயிற்று. அதுவும் இலக்கிய உலகில் இல்லாத பெரும் பிரபலங்கள் பங்கு பெறும் மேடை (இல்லை, என்னைச் சொல்லவில்லை). இந்த வெளியீட்டில் சிவகாமி இ.ஆ.ப அவர்களின் 'கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியும், ஆர்.வெங்கடேஷின் 'முதல் மழை' என்ற சிறுகதைத் தொகுதியும், தமிழ் சினிமாவில் அதிகத் தரம் வாய்ந்த பல நல்ல படங்களை வழங்கியுள்ள இயக்குனர் மகேந்திரனின் 'சினிமாவும் நானும்' என்னும் புத்தகமும் வெளியிடப்பட்டன.

இயக்குனர் மகேந்திரன்
ப.சிவகாமியின் புத்தகத்தை வெளியிட்டவர் கிறிஸ்துதாஸ் காந்தி இ.ஆ.ப, பெற்றுக் கொண்டவர் பிரதிபா ஜெயச்சந்திரன். இந்தப் புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை. சிறுகதைகள் அனைத்தும் ஜப்பானில் இடம்பெறுவது போல் அமைத்துள்ளார் சிவகாமி. இவர் தமிழக அரசுப்பணி காரணமாக ஜப்பானில் சிலவருடங்கள் இருந்துள்ளாராம். புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழை நடத்துபவர். புத்தகத்தை வெளியிட்டு பிரதிபா ஜெயச்சந்திரனும் பேசினார். கிறிஸ்துதாஸ் காந்தியும் பேசினார்.

அடுத்து ஆர்.வெங்கடேஷின் புத்தகம். வெளியிட்டவர் வையவன். வாங்கிக்கொண்டது அடியேன். என்னை பேசச் சொல்லக்கூடாது என்று முன்னமே உறுதிமொழி வாங்கிக் கொண்டேன். அரங்கு பிழைத்தது. வையவன் பேசும்போது இவ்வளவு நேரம் கடந்து இந்த வெளியீட்டு விழாவினை வைத்திருப்பது சரியல்ல என்றார். புத்தகம் முதல் நாள்தான் (வெள்ளிக்கிழமை) அச்சானதாம். அன்று இரவு 12.00 மணிக்குதான் வெங்கடேஷ் வையவனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு பிரதியை அனுப்பி வைத்தாராம். இந்தக் கதைத்தொகுதியையும் நான் இன்ன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் வையவன் வார்த்தையில் இது மத்திய தட்டு மக்களைப் பற்றியது. அந்த மத்தியத் தட்டு மக்களிலும், உயர், இடை, கடை என்று மூன்றாகப் பிரித்தால், அதில் இடை-மத்தியத் தட்டு மக்களைப் பற்றியது. வாழ்க்கையின் அவலங்களை "மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தவிக்கும் மக்களைப் பற்றியது. கதைகள் திரும்பத் திரும்ப திருவல்லிக்கேணியையே சுற்றி வருகின்றனவாம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் கரப்பான் பூச்சி - ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் மரபணுத் தொடர்ச்சியாக வரும் இன்றைய ஆஞ்சநேயர் கோவில் கரப்பான் பூச்சி மாதிரி திருவல்லிக்கேணியின் மரபணு இவரது கதைகளை விட்டு அகல்வதில்லையாம். கதைகளில் டைடல் பார்க்கும், இணையத்தளங்கள் அமைக்கும் மென்பொருளாளனும் வருகின்றனர். படித்து விட்டு எழுதுகிறேன். மேடையில் இருந்ததால் வையவனை கேமராவில் பிடிக்க முடியவில்லை.

இயக்குனர் பாரதிராஜா
கடைசியாக மகேந்திரனின் 'சினிமாவும் நானும்'. இயக்குனர் பாரதிராஜா புத்தகத்தை வெளியிட, இயக்குனர் பாக்யராஜ் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். கேமராக்கள் பளிச்சிட, 'என் இனிய இலக்கிய நண்பர்களே' என்று ஆரம்பித்து பாரதிராஜாவின் உரை தொடர்ந்தது. மகேந்திரன் சினிமாவைப் பற்றி எழுதத் தனக்கிருக்கும் தகுதியைப் பற்றி தயக்கத்துடன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பாரதிராஜா, "உனக்கில்லையென்றால் வேறு யாருக்கும் இல்லை" என்றார். மகேந்திரன் பற்றிய பல புதிய விஷயங்களை பாரதிராஜாவின் பேச்சின் வழியேதான் அறிந்து கொண்டேன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த மகேந்திரன் எதேச்சையாகத்தான் சினிமாவில் கதை-வசனம் (ஆடு புலியாட்டம்) எழுதப் போனாராம். அங்கிருந்து 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' போன்ற அற்புதப் படங்களை உருவாக்கியுள்ளார். பாரதிராஜாவின் பேச்சைத் தொடர்ந்து பாக்யராஜும் பேச ஆரம்பித்தார். அதிகமாக ஒன்றும் அந்தப் பேச்சில் வெளிவரவில்லை.

மகேந்திரன் நன்றியுரையில், தான் செய்ததெல்லாம் சிறிதும் திட்டம் தீட்டாமல் செய்தது. அப்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார். இலக்கிய கர்த்தாக்க்கள் சினிமாவை உதறித் தள்ளக்கூடாது, சினிமாவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாகப் பேசிய பாரதிராஜாவும் இதையே வலியுறுத்தினார். இந்த அமர்வுக்குத் தலைவராக இருந்த சிற்பி பாலசுப்ரமணியனை சுட்டிக் காட்டி, சிற்பியை ஒரு படத்துக்கு (கிழக்கே போகும் இரயில்) இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாட்டெழுதக் கூட்டி வந்ததாகவும், அந்தப் பாடல் கடைசியாக படத்தில் இடம் பெறவில்லை என்றும் அதன்பிறகு சிற்பி, சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்றும் சொன்னார் பாரதிராஜா. அத்துடன் இது சிற்பியின் நல்லகாலம். இல்லாவிட்டால் யாராவது அவரை 'கட்டிபுடி, கட்டிபுடி' என்று பாட்டெழுத வைத்திருப்பர் என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.

No comments:

Post a Comment