Monday, June 07, 2004

கிருஷ்ணா கிருஷ்ணா

இந்திரா பார்த்தசாரதியின் நாவல். இதுதான் அவர் எழுதி நான் படிக்கும் முதல் படைப்பு. [என் படிப்பறிவு அவ்வளவு குறைவு!] ஜனவரியில் கையில் கிடைத்த புத்தகம் கடைசியாக சனி, ஞாயிறு படித்து முடித்தேன்.

நம் எல்லோருக்கும் தெரிந்த கதையின் நாயகன் மகாபாரத/பாகவத கிருஷ்ணன் இ.பாவின் கைவண்ணத்தில் பாகாய்க் கரைகிறான், வெண்ணெயாய் வழுக்குகிறான். ஜரா என்னும் வேடன் கிருஷ்ணனின் காலில் அம்பெய்ய, உயிரை இழக்கும் முன்னர் கிருஷ்ணன் ஜராவிடம் தன் வாழ்க்கைக் கதையை விவரிப்பதாக இ.பா கற்பனை விரிகிறது. அந்த ஜரா 'world's first ever journalist' நாரதரிடம் கிருஷ்ணன் தனக்குச் சொன்னதைச் சொல்ல, நாரதர் இ.பா வழியாக நமக்கு அந்தக் கதையைச் சொல்கிறாராம்.

முதலிரண்டு அத்தியாயங்களில் இப்படிக் கதை சொல்லும் விதம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பக்கங்கள் தாண்டத் தாண்ட இ.பாவின் நடை சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அனாயாசமாக ஆங்கிலச் சொற்களைப் பேசும் நாரதர், சமகால விஷயங்களைப் பற்றி, ஹிட்லரைப் பற்றி, காந்தியைப் பற்றி, ஜாதிப்பிரச்சினை பற்றி, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி வரும்போதும், ஆழ்வார்களிடமிருந்தும், ஷேக்ஸ்பியரிடமிருந்தும், பாரதியிடமிருந்தும், கம்பனிடமிருந்தும் மேற்கோள்களை எடுக்கும்போதும், அதிலுள்ள anachronism புதுமையாகவும், ஒவ்வொரு இடத்திலும் apt ஆகவும் இருக்கிறது. Foul goal போடுவதைப் (பீமன் துரியோதனனின் தொடைகளில் கதையால் அடிப்பது) பற்றிப் பேசும் இ.பா கிரிக்கெட் ரசிகர் இல்லை போலும். 'It is not cricket' என்று எங்கும் வருவதில்லை :-(

என்னை ஏன் பெண்ணாக நினைத்து, தங்களை ஆண்களாகப் பாவித்து பக்தர்கள் வேண்டிக்கொள்வதில்லை எனக் கேள்வி கேட்கிறானாம் கிருஷ்ணன் ஜராவிடம். அதுதான் தனக்கு அதிகப் பிடித்தமானது என்கிறான் கிருஷ்ணன். பின் பாரதியார் அப்படிச் செய்தவர்தான் என்பதையும் மறக்காமல் ஞாபகப்படுத்துகிறான்.

நாவலில் கிருஷ்ணன் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவனாக, பெண்களின் காதலனாக, தன்னுடைய 'brand of' தர்மத்தைக் காப்பவனாக, ஒரு சாதாரண மனிதனாக வருகிறான். இதில் என்னைக் கவர்ந்தது காதலன் கண்ணன்தான். ராதையோ, ஏன் பூதனையோ, ஆசைப்பட்டு ஆனால் கல்யாணம் செய்து கொள்ள இயலாத திரவுபதியோ, ஷைல்பியாவோ, இல்லை சற்றே ஆண் தன்மையுள்ள பாமாவோ, ருக்மிணியோ - இ.பாவினால் உந்தப்பட்டு நாமே அவர்களாகி கிருஷ்ணனைக் காதலிக்கிறோம். இங்குதான் இ.பாவின் எழுத்து வன்மை வெளிவருகிறது.

பாகவதத்திலும், மகாபாரதத்திலும் கிருஷ்ணன் பற்றி சொல்லப்பட்ட அத்தனை நுணுக்கமான விஷயங்களும் கதையில் உள்ளது. அவற்றில் சொல்லப்படாத கற்பனை உரையாடல்களும் உண்டு. கதை சொல்லும் விதத்தில் நேர்க்கோட்டில் செல்லாமல் அங்கும் இங்கும் தாவிச் செல்லும் உத்தி - post-modernismஓ என்ன இழவோ - அதெல்லாம் முக்கியமில்லை, ஆனால் இங்கு மிக இயல்பாகச் செல்கிறது. அங்கும் இங்குமாகக் கிளைக் கதைகள். கதையில் கிருஷ்ணனை அடுத்து அதிகமாக வருவது ஜராசந்தன். அவன் பிறப்பிலிருந்து, பீமன் அவனைக் கையால் நீளவாட்டில் கிழித்து மாற்றிப்போடும் வரை ஜராசந்தன் எங்கும் நிறைகிறான். அதனால்தானோ என்னவோ 'ஜரா என்னும் வேடன்' என்னும் தொடரை இ.பா மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். யாரும் ஜராவை ஜராசந்தனோடு குழப்பிக் கொள்ளக் கூடாது அல்லவா?

காதல் சொட்டும் கதையாக இருந்தும் எங்கும் விரசம் துளிக்கூட இல்லை. அது உடம்பில் பொட்டுத்துணி கூட இல்லாது குளித்து எழும் ஷைல்பியாவைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, பிருந்தாவனத்தில் நடக்கும் ராசலீலைகளைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, பூதனையின் ஒரு மார்பை கையால் நெருடி, நெருடி மறு மார்பில் பால்குடித்து, பின்னர் உயிரையே குடிக்கும்போதும் சரி [பெரியாழ்வார் பாடல் போன்றே], வார்த்தைகளைக் கையாளும் விதம் பிரமிக்க வைக்கிறது.

கிருஷ்ணன் தன்னைக் கவர்ந்தவர்களாக இருவரைச் சொல்கிறான். பீஷ்மன், ராதேயன் (கர்ணன்), அதிலும் கர்ணனே மேலானவனாகத் தெரிகிறானாம். மகாபாரதத்தை நடத்திய இருவர் பாஞ்சாலியும், கிருஷ்ணனுமாம். அதுவும் பாஞ்சாலியின் மனத்துணிவு இல்லாவிட்டால் பாரதப்போர் நடந்தேயிருக்காது என்கிறான் இ.பாவின் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் ஷத்ரியர்களின் எதிரியாக, ஷத்ரியர்களைப் பூண்டோடு அழிக்க வந்தவனாகக் காண்பிக்கப்படுவது சற்றே வித்தியாசமான கண்ணோட்டம். பல இடங்களில் வசுதேவன்-வாசுதேவன் குழப்பம் அச்சில் காணப்படுகிறது. சில இடங்களில் சரியான நிறுத்தக் குறியீடுகள் இல்லாமல் யார் யாரிடம் என்ன சொல்கிறார்கள் என்று குழம்புகிறது.

Penultimate chapterஇல் கீதையைப் பற்றிய விளக்கம் வந்தாலும் கடைசியாக முடிக்கும்போது இந்த நாவலில் எந்த போதனையையும் தேட வேண்டாம் என்கிறார் இ.பா. சரிதான். எந்த போதனையையும் பற்றிக் கவலைப்படாது ஒரு நல்ல சுகமான அனுபவமாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது. மீண்டும், மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

தி ஹிந்துவில் வெளியான பிரேமா நந்தகுமாரின் விமரிசனம்
இரா.முருகனின் நூல் வெளியீட்டு விழா சிறப்புப் பேச்சு
கிருஷ்ணா கிருஷ்ணா புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றிய என் பதிவுகள் ஒன்று | இரண்டு

கிருஷ்ணா கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, படங்கள் ஆதிமூலம். மித்ர, 375/8-10, ஆர்காட் சாலை, சென்னை 600 024, முதல் பதிப்பு 2004, விலை ரூ. 95.

6 comments:

  1. கிருஷ்ணா நாவல் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. இந்த நாவலை வாசித்தபோது கிருஷ்ணர் என்கிற கேரக்டரின் விஸ்வரூபத்தையும் இ.பா. என்கிற எழுத்தாளரின் மேலான திறமையையும் ஒருங்கே ரசித்தேன்.

    உண்மையில் நமது இதிகாச, புராணங்களின் சிருஷ்டிப்பில் கிருஷ்ணரைப் போன்ற ஆகிருதி மிக்க பாத்திரம் வேறில்லை. நூறு நாவல்களுக்கு விஷயமுள்ள கதாபாத்திரமாக எப்படித்தான் கட்டமைத்தார்களோ என்று எப்போதும் வியப்பேன். மேலும் கடவுளாகக் கருதி நெருங்கினால் வெறும் ஆசீர்வாதத்தை மட்டும் அளிப்பது; வேறு எந்த வகையில் அணுகினாலும் தோழமை காட்டி, தோளில் கைபோட்டுப் பேசுவது என்று தோன்றிய காலத்திலிருந்து வழக்கம் வைத்துக்கொண்டிருப்பவர் அவர்.

    இதைத்தான் இ.பா. மிகவும் சாதகமாக்கிக்கொண்டு கிருஷ்ணனைத் தம் நாவலில் மறு கட்டமைப்பு செய்கிறார். இந்த நாவலின் மிகப்பெரும் சிறப்பாக எனக்குத் தோன்றுவது இ.பா. கையாண்டிருக்கிற துள்ளிக்குதிக்கும் மொழி. டின் டிரம்மில் குந்தர்கிராஸ் கையாண்ட விதமான மொழி அது. (இதைச் சொல்லித்தான் தமிழிலக்கியம் 2004ல் இரா. முருகன், எஸ்.ராவின் சாபத்துக்கு இலக்கானார். ஆனால் முருகன் சொன்னது சரியே என்பது இதையும் கிராஸையும் படித்தவர்களுக்குப் புரியும்.)

    நம்மிடையே சாதனையாளர்களுக்குக் குறைவில்லை. பிரச்னை நமது தாழ்வு மனப்பான்மை சார்ந்தது.

    ReplyDelete
  2. Have you read Irawati Karve's Yugatantar.It is available in Tamil Translation also.English version
    published by Orient Longman.Irawati gives an interesting picture about krishna(n) aka vasudevan
    and his character in mahabaratha

    ReplyDelete
  3. Irawati Karve's Yugatantar - படிக்கவில்லை. வாங்கிப் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. Karveயின் Yuganta - The End Of An Epoch <-- இந்தப் புத்தகம்தானே? வாங்கிவிட்டேன். மெதுவாக இன்னமும் இரண்டு நாட்களில் வீடு வந்து சேர்ந்து விடும். விலை ரூ. 100 தான். ஏதோ நடுநிசியில் புத்தகம் வாங்கக் கூடிய இந்த அளவிற்கு இணையக் கடைகள் இந்தியாவில் வளர்ந்திருப்பது வரவேற்கத்தக்கதே!

    ReplyDelete
  5. நல்ல அலசல். இ பா வின் பல நாவல்கள் கலக்கல். குறிப்பாக தந்திர பூமி, ஏசுவின் தோழர்கள், குருதிப் புனல்

    ReplyDelete
  6. குருதிப்புனல் வாங்கி வைத்துள்ளேன், இனிதான் படிக்க வேண்டும்.

    ReplyDelete