Sunday, June 06, 2004

கட்டாய மாநிலமொழிக் கல்வி

போன வாரம் மாநில மொழி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து மரத்தடி யாஹூ! குழுமத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் ஆரம்பப் பதிவு இதோ. அந்த விவாதம் பற்றிய என் பதிலை இங்கே கொடுத்திருந்தேன். மரத்தடி குழுமத்தின் இடுகைகளை உறுப்பினரல்லாதோர் படிக்க முடியாதென்று நினைக்கிறேன். அதனால் அந்த பதிலை இங்கே கொடுக்கிறேன். ரவி ஸ்ரீநிவாஸ் தனது கருத்தை இங்கே கொடுத்துள்ளார்.

மாநிலமொழிக் கல்வி

ஜெயஸ்ரீ ஆரம்பித்து வைத்த திரியில் ஏகப்பட்ட விவாதம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்.

மேலும் எனக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை. வழக்கின் பின்புலம் தெரிய வேண்டும். சம்பந்தப்பட்ட மஹாராஷ்டிர அரசின் ஆணை பற்றிய விவரங்களும் இப்பொழுதைக்கு என்னிடம் இல்லை. வாதி, பிரதிவாதிகளின் வாதங்கள் பற்றிய தகவலும் இல்லை.

ஒன்றை கவனிக்க வேண்டும். எல்லா பத்திரிகைகளும் 'தாய்மொழிக் கல்வி' என்றே எழுதினர். இது தாய்மொழிக் கல்வி பற்றிய பிரச்சினை இல்லை. மாநில/பிராந்திய மொழியினை கட்டாயப்படுத்துவதைப் பற்றியது. இந்த வழக்கின் வாதி மாநில அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு குஜராத்தி அறக்கட்டளை நடத்தும் பள்ளி.

இங்கு விவாதித்தவர்கள் பொதுவாக கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி பேசினார்கள்:

1. ஊர் ஊராகச் சென்று வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள், பாவம்?
2. எந்தவொரு மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. அவரவர்கள் விரும்பியதைப் படித்து விட்டுப் போகட்டுமே?

ஊர் ஊராகச் சென்று வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களுக்காக வேண்டி சட்ட திட்டங்களை இயற்றிக் கொண்டிருக்க முடியாது. அதற்குத்தான் CBSE இருக்கிறதே என்று சிலர் சரியாகவே பதில் சொன்னார்கள். ஜெயஸ்ரீ ஓரிடத்தில் வங்கி ஊழியர்கள் குக்கிராமங்களிலெல்லாம் கூடப் போய் இருக்க வேண்டியுள்ளது. அங்கெல்லாம் CBSE பள்ளியா இருக்கும் என்று கேட்டிருந்தார். அங்கெல்லாம் சரியான பள்ளிகள் முதலில் இருக்கின்றனவா? அங்குமட்டும் ஒரு குழந்தைக்காக பிரெஞ்சு மொழியில் பாடம் நடத்த ஓர் ஆசிரியர் இருப்பார் என்றா எதிர்பார்க்கிறார் ஜெயஸ்ரீ? ஒழுங்காக கணக்கையும், அறிவியலையும் நடத்துவதற்கே ஆசிரியர் இருப்பாரா என்பது சந்தேகம்.

ஊர் ஊராக வேலை பார்ப்பவர்கள் குழந்தைகளை வேறிடத்தில் - தாத்தா/பாட்டியிடம் தங்கிப் படிக்குமாறு செய்ய வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் மனைவியோ, கணவனோ - யாருக்கு மாற்றல் உத்தியோகமோ, அவர் மட்டும் ஊர் ஊராக தேசாந்திரம் செய்ய, மற்றவர் ஓரிடத்தில் தங்கி பிள்ளைகளின் படிப்பை கவனித்துக் கொள்ள வேண்டியதுதான். இதற்கெல்லாம் அரசா வந்து உதவி செய்து கொண்டிருக்க முடியும்? வேண்டுமானால் வேலையை மாற்றிக் கொள்ளலாம். அல்லது வேலை தருபவர் கழுத்தைப் பிடித்து என் பிள்ளைகளுக்கு ஒரு வழி செய் என்று கேட்கலாம். மத்திய அரசின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு வழி செய்து கொடுக்கட்டும். மாநில அரசின் கீழ் வேலை செய்பவர்களை அந்த மாநிலத்தின் உள்ளேயேதான் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

மேற்படி சட்டம் நிசமாகவே தேவைதானா என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம். தேவையோ, இல்லையோ, அப்படி சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அது செல்லுபடியாகும் என்கிறது உச்ச நீதிமன்றம். தேவை என்கிறேன் நான். முதலில் ஊர் சுற்றும் சிறுபான்மை மக்களை மறந்துவிடுவோம். மற்றபடி ஓரிடத்திலேயே இருக்கும் பெரும்பான்மை மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும். கல்விக்கென ஒவ்வொரு மாநில அரசும் மிக அதிக அளவில் செலவு செய்கின்றன. தனியார் பள்ளிகளுக்கும் கூட சலுகை அடிப்படையில் கொடுக்கும் நிலமும், வரி விலக்குகளும், குறைந்த கட்டணத்தில் மின்சாரமும் என பல்வேறு சலுகைகள். பள்ளிக்கூடங்களைச் சுற்றி போக்குவரத்து நெரிசல்களை கவனிப்பது முக்கியமாக பெருநகரங்களின் காவல்துறைக்கு பெரும் தலைவலியானது.

ஓர் அரசு ஏன் இதையெல்லாம் செய்கிறது? கல்விதான் பிற்காலத்திய சந்ததியினருக்காக ஓர் அரசு செய்யும் மிகப்பெரும் மூலதனம். இந்தச் செலவு இன்னமும் அதிகரிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இப்படி செலவு செய்யும் ஓர் அரசு அதற்கு பிரதியுபகாரமாக சிலவற்றை எதிர்பார்க்கிறது. அதிலொன்று இப்படிப்பட்ட கல்விக்கூடங்களிலிருந்து படித்து வெளிவருபவர்கள் அந்த மாநிலம் நலம்பெற உதவவேண்டும் என்பதே. அம்மாநில மொழியைச் சரியாகக் கற்காமல் அம்மாநிலத்தின் மக்களுக்கு ஒருவர் எப்படி உதவ முடியும்? இல்லை, ஆங்கிலத்தில் கல்வி பயின்றால்தான் எனக்கு வேலை கிடைக்கும் என்று பெரும்பான்மையினர் கேட்டுக்கொண்டதால் கடந்த 20 ஆண்டுகளில் ஆங்கில மீடியம் பள்ளிகள் அதிகரித்தன. அதற்கு மேலும் போய் ஒருவர் இரண்டாவது மொழியாகக் கூட அம்மாநிலத்தின் மொழியைப் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால்? தானாகவே அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் (அங்கேயே பிறந்து வளர்ந்தவரும், பிழைப்புக்கு வந்தவரும்) அம்மாநில மொழியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அரசுகள் எதிர்பார்த்திருந்தன. இந்த நிலைமை கடந்த பத்து வருடங்களில் பெருமாற்றம் அடைந்தது. இதைத்தான் நகரங்களில் இன்று பார்க்கிறோம். படிப்பது ஆங்கில மீடியத்தில். இரண்டாவது மொழியாக ஏதேனும் ஒன்று. விட்டால் பாபுவா நியூ கினியில் பேசும் மொழியைக் கூட ஒரு பாடமாக எடுத்துவிடுவார்கள்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் சலுகையாகக் கிடைக்கும் கல்வியினால் அந்த மாநிலத்தின் பொதுமக்களுக்குத் தேவையான நலன் கிடைக்காமல் போகும். இதனைக் கருத்தில் கொண்டே மாஹாராஷ்டிர அரசு இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தை பிற மாநிலங்களும் தத்தம் மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

இது பெற்றோர்களின் மீது எதையும் திணிப்பதாக ஆகாது. தங்கள் குழந்தைகள் பிரெஞ்சுதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் Alliance Francais எங்காவது இருக்கிறதா என்று தேடிப்போகலாம். எந்தப் பெற்றோரும் 'பாடத்திட்டத்தில் ஏன் அறிவியல் இருக்கிறது? அதற்கு பதில் நாட்டியம் சொல்லிக்கொடுக்கலாமே' என்று கேட்க முடியாது. அந்த மாநிலக் கல்வித்துறை நடத்தும் 10வது/12வது வகுப்புத் தேர்வு எழுதவேண்டுமென்றால் அவர்கள் கொடுத்துள்ள பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. விருப்பம் இல்லாதவர்கள் வேறு மாதிரியான பாடத்திட்டத்தைத் தேடிப் போகலாம்.

இத்திணிப்பைப் எதிர்க்கும் சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் கூட மாநில அரசின் கல்வித்திட்டத்தை விலக்கி விட்டு CBSE கல்வித்திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு.

1 comment:

  1. மகாபலிபுரத்திலோ, அஜந்தாவிலோ, எல்லோராவிலோ, ""தொடாதே, புகைப்படம் எடுக்காதே, மீறினால் அபராதம் " என்பது நம் ஆர்வத்தைக் குறைக்கவோ அன்றி நம் உரிமையில் குறுக்கிடுவதோ கிடையாது. அந்த இடங்களின் , சிற்பங்களின், ஓவியங்களின் மாட்சிமை அழிந்துவிடக்கூடாது என்பதினால்தான். வெளிநாட்டு, வெளி மாநிலத்து வசதிகள் வேண்டும் வாய்ப்புகள் வேண்டும் ஆனால் அவர்களின் கொள்கைகள் மட்டும் கூடாது. இது எந்த நியாயமோ தெரியவில்லை.
    நம் மாநிலத்தை விட்டு வெளியே செல்வது என்பது நம் சுய தேவைகளுக்காகத்தானேயன்றி பொதுச் சேவைக்காக அல்ல. பொதுச் சேவை செய்பவர்களுக்கு இத்தேவைகளும் கிடையாது.
    என் வீட்டுக்கு வருபவர்கள் செருப்பை வெளியில் விட்டுவிட்டுத்தான் வரவேண்டும், நான் தரும் உபசரிப்பைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். செருப்புடனே நுழைவேன் என்பது அபத்தம்.

    நிர்வாண உலகில் கோமணம் கட்டியவன் நிச்சயம் பைத்தியம்தான்
    BE A ROMAN IN ROME

    Srinivas venkat

    ReplyDelete