Wednesday, August 18, 2004

நாட்டு நடப்பு - மணிப்பூர்

மத்திய அரசின் மணிப்பூர் பற்றிய நிலை குழப்பமானதாகவே இருக்கிறது. ஏதோ ஒரு சின்ன மாநிலம், இதற்குப் போய்க் கவலைப்படுவானேன் என்ற எண்ணமா என்று புரியவில்லை. Armed Forces Special Powers Act என்பது கிட்டத்தட்ட TADA, POTA போன்ற கொடுமையான சட்டம். இதன்படி வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்யலாம். கீழ்நிலையில் உள்ள - அதாவது சாதாரண சிப்பாய் கூட - ஒரு குடிமகனைக் கைது செய்து விசாரணை செய்யலாம்.

மணிப்பூரில் ஜூலை 11, 2004 அன்று மனோரமா தேவி என்ற பெண்ணின் பிணம் வயலோரத்தில் கிடைத்துள்ளது. அவர் உடலில் வன்புணரப்பட்டதற்கான ஆதாரங்களும், துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஆசாம் ரைஃபிள்ஸ் எனப்படும் இராணுவ டிவிஷன்தான் இந்தக் கொடுமைக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகப்பட்டுக் கொதித்தெழுந்தனர். கிட்டத்தட்ட 12 பெண்கள் இராணுவத் தலைமயகத்திற்குச் சென்று தாங்கள் அணிந்திருந்த துணிகளை முற்றிலுமாகத் துறந்து 'எங்களை வன்புணருங்கள்' என்று கோஷம் போட்டுப் போராடினர். அங்கிருந்தே பிரச்சினை வலுக்க ஆரம்பித்தது. இராணுவம் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஆசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டது. தேவையேற்பட்டால் இந்த இராணுவ டிவிஷனை விலக்கிக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாடில் அறிவித்தார்.

ஆனால் போராடும் மணிப்பூர் மாணவர்கள் மற்றும் அமைப்புகள் Armed Forces Special Powers Actஐ முற்றிலுமாக விலக்கிக்கொள்ள வேண்டும், இராணுவம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்கின்றனர்.

இதற்கிடையில் மணிப்பூரின் காங்கிரஸ் முதல்வர் ஓக்ராம் ஐபோபி சிங் ஆகஸ்ட் 12 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலின் ஒருசில பகுதிகளில் AFSPAஐ விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். போராட்டக்காரர்களுக்கு இது போதுமானதாக இல்லை. ஷிவ்ராஜ் பாடிலோ, இந்த விலக்கு நடந்திருக்கக்கூடாது என்றும் மத்திய அரசின் அறிவுரைக்கு மாறாகவே மணிப்பூர் முதல்வர் நடந்து கொண்டுள்ளார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மணிப்பூர் முதல்வரோ தன் கைகள் கட்டப்பட்டுள்ளன, தன்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரு மாணவர் தலைவர் AFSPAவை விலக்கக் கோரி தன் உடலில் தீவைத்து இறந்து போய்விட்டார். இது நிலைமையை இன்னமும் கடுமையான கலவரத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது.

மன்மோகன் சிங், ஷிவ்ராஜ் பாடில் மற்றும் பிற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனடியாக நிலைமையை ஒழுங்காக்க முயல வேண்டும். இந்நேரத்தில் குறுகிய அரசியல் நோக்கோடு நடந்து கொள்ளக் கூடாது. மேற்படி சட்டம் AFSPA உடனடியாக விலக்கிக் கொள்ளப் பட வேண்டும். மாணவர் தலைவர்களோடும், பிற மணிப்பூர் அமைப்புகளோடும் மத்திய உள்துறை அமைச்சரும், மணிப்பூர் முதலமைச்சரும் இணைந்து பேச்சுக்களை நடத்த வேண்டும். மணிப்பூரில் எதற்கு இராணுவம் தேவை என்பதை மத்திய அரசு விளக்கிக் கூற வேண்டும்.

கடந்த இருபது வருடங்களில் பஞ்சாப், காஷ்மீர், ஆசாம் ஆகிய இடங்களில் இந்திரா காந்தியின் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தால் பெரும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளோம். பிரிவினைவாதிகள், பயங்கரவாதம், இராணுவ அடக்குமுறை, கொலைகள், பொதுமக்களிடையே பீதி என்று தாங்கமுடியாத கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பஞ்சாப் பிரச்சினை ஒன்றுதான் இப்பொழுது முழுவதுமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் இன்றும் ஆசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய இடங்களில் பிரிவினைவாதிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே பல பிரச்சினைகள் இருந்தவண்ணம் உள்ளன. மணிப்பூரை மற்றுமொரு காஷ்மீராகவோ, பஞ்சாபாகவோ ஆக்க வேண்டாம்!

5 comments:

  1. 1. அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்,மனோரமாவை நள்ளிரவில் கைது செய்ததற்கும், அவரது படுகொலையில் சந்தேகப் படத் தகுந்த விதத்தில் பங்கு இருப்பதற்குமான ஆதார செய்திகள் வெளியாகி உள்ளன. அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் விசாரனணக்கு ஒத்துழையாமல் இருப்பது இதை இன்னும் வலுப்படுத்துகின்றது. நீதிபதி உபேந்திரா கமிஷன் முன் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பை பற்றி.....
    ரெடிஃப்-ல்லிருந்து:
    //Despite sending two summons to five Assam Rifles personnel belonging to the 17 Assam Rifles -- Commanding Officer Colonel Jagmohon Singh, Naik Subedar Digambar Dutt, Havildar Suresh Kumar, Riflemen Ajit Kumar and T Lotha -- they failed to appear before the judicial commission.

    Havildar Suresh Kumar had signed the arrest memo of Manorama on the night of July 10-11 when she was
    taken away from her home by the Assam Rifles personnel on suspicion of being a member of the banned People's Liberation Army (PLA). //


    2. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் உள்பட, ஏழு வட-கிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்டத்தின் துணை கொண்டே ஆட்சியை நிலை நிறுத்துகின்ற இந்த அரசியல், ஜனநாயக முறைகளை கேலிக் கூத்தாக்குகிறது. இந்த சட்டத்தை பற்றி 1991-ல் அப்போதைய அட்டார்னி ஜெனரல் கூறியது ("The Attorney General of India relied on the sole argument that the AFSPA is a necessary measure to prevent the secession of the North Eastern states") ஆட்சியாளர்களுக்கு (மைய/மாநில) மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தெளிவான முன்னோக்கோடு சந்திப்பதற்கான திறனின்மையை காட்டுகின்றது. எத்தனை ஆண்டுகள் ஆயினும் மக்களை ஆயுதமேந்திய அடக்குமுறையின் மூலம் பிணைத்திருக்கச் செய்யும் வழிமுறைகளைப் பற்றி ஜனநாயகம் பேசும் நமக்கு இப்போது வரை எந்த உறுத்தலும் இல்லை.


    3. நடந்த இந்த நிர்வாணப் போராட்டம் ஒரு மனோரமாவின் படுகொலைக்கு எதிரானதாக புரிந்து கொள்வதும், அதற்கேற்ற எதிர்வினை ஆற்றுவது (அஸ்ஸாம் ரைஃபிள்ஸை அகற்றி விட்டு இன்னொரு படையை நிலைப் பெறச் செய்வது, AFSPA வை குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்து அகற்றுவது) தேர்தல் கால உத்திகளை போலிருக்கின்றதே அல்லாமல் மக்களது பிரச்சனகளை, இறையாண்மையை முன் வைத்து அரசியல் தொலை நோக்கோடு செய்யப்படும் வழிமுறைகளாக இல்லை.


    1.http://in.rediff.com/news/2004/jul/21mani.htm

    2.http://www.hrdc.net/sahrdc/resources/armed_forces.htm

    ReplyDelete
  2. பாலாஜி: விரிவாகப் பின்னிணைப்புகள் கொடுத்ததற்கு நன்றி. படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ஆசாம் நீங்கலாக (ஆசாமில் AFSPA நடைமுறையில் இல்லை என நினைக்கிறேன்) பிற வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசின் நிலைப்பாடு காலம் காலமாகவே ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளது.

    (ஆசாம் பிரச்சினை பற்றி தனியாக எழுத வேண்டும்.)

    மத்திய அரசு - முக்கியமாக மன்மோகன் சிங் - இந்தப் பிரச்சினை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பது போலத் தோன்றுகிறது. நாட்டின் ஒருமைப்பாடு என்று சொல்லியே நாம் சில இனக்குழுக்களை இந்தியாவிலிருந்து விலகிப் போகுமாறு செய்து விடுகிறோமோ என்று பயமாக இருக்கிறது. ஆசாம் சேர்த்த வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி மிகக் குறைவு. வசதிகள் மிகக் குறைவு. இந்திய தேசிய நீரோட்டத்தோடு அம்மக்கள் கலக்குமாறு செய்ய வெளிப்படையாக எந்த முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

    இந்திய மைய அரசுக்கு அந்த நிலப்பரப்பு இந்தியாவோடு இணைந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த எண்ணமும் மனதில் இல்லையோ என்று தோன்றுகிறது. அதற்காக என்ன செலவானாலும் பரவாயில்லை, இராணுவத்தைக் கொண்டுபோய் அங்கே நிறுத்து என்ற வகையில் நடந்து கொள்கிறார்கள்.

    நிகழும் மணிப்பூர் கலவரம் பிற இந்தியர்களின் கவனத்தைக் கவர வேண்டும். அந்த மாநிலத்தில் என்னதான் நடக்கிறது, ஏன் இராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது, அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசின் மீது, தங்கள் உள்ளூர் அரசின் மீது, இராணுவத்தின் மீது எத்தனை கோபம், ஏன் ஆகிய விஷயங்கள் பெரும்பான்மை இந்திய மக்களுக்குப் புரிந்தாக வேண்டும்.

    இராணுவம் என்றாலே மக்கள் மீது மோசமாக நடந்து கொள்வது - அதிலும் பெண்கள் மீது தங்கள் வெறியை அதிகமாகக் காண்பிப்பது என்ற நிலை இந்தியாவின் பெரும்பான்மை மக்களை வெகுண்டெழச் செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியின் உள்துறை அமைச்சரும், இராணுவ அமைச்சரும் ஏன் இன்னமும் மணிப்பூர் போகவில்லை? தேர்தலில் மணிப்பூரால் ஒரு பிரயோசனமுமில்லை என்பது மட்டும்தான் காரணமா?

    ReplyDelete
  3. அஸ்ஸாம் பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. பத்ரி,
    மணிப்பூர் பற்றிய ஒரு பதிவு,
    http://ntmani.blogspot.com/2004/08/blog-post_21.html

    ReplyDelete
  5. பத்ரி,
    மணிப்பூர் பற்றிய ஒரு பதிவு,
    http://ntmani.blogspot.com/2004/08/blog-post_21.html

    ReplyDelete