Wednesday, November 03, 2004

மும்பை டெஸ்ட் - முதல் நாள்

இந்தியா 22/2 (11 ஓவர்கள்) - திராவிட் 9*, டெண்டுல்கர் 2*

அரபிக் கடலில் எதிர்பாராத காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். மழை பிடித்துக்கொள்ள, மும்பையில் காலையில் ஆட்டம் தொடங்கவில்லை.

சற்று மழை விட்டு, நீர் உறிஞ்சுவானைப் பயன்படுத்தியபின் மதியம் 2.00 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. கடைசியாக இந்தியா டாஸில் ஜெயித்து, முதலில் பேட்டிங் செய்தது. அணியில் பல மாற்றங்கள். பார்த்திவ் படேலுக்கு பதில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர். ஆகாஷ் சோப்ராவுக்கு பதில் அவரது தில்லியிலிருந்தே கவுதம் கம்பீர் தொடக்க ஆட்டக்காரர். இருவருக்கும் இதுவே முதல் டெஸ்ட். ஹர்பஜன் சிங் ஜுரத்திலிருந்து மீண்டதால், அகர்கருக்கு பதில் உள்ளே வருகிறார். ஆஸ்திரேலியா அணியிலும் மாற்றம். பாண்டிங் அணித்தலைவராக, லெஹ்மனுக்கு பதில் வருகிறார். ஷேன் வார்ன் கை விரலில் முறிவு. அதனால் நேதன் ஹவ்ரிட்ஸ் என்னும் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் புதிதாக வருகிறார், அவரது முதல் டெஸ்டும் இதுவே.

மெக்ராத், கில்லஸ்பி இருவரும் நன்றாகவே பந்து வீசினர். சேவாக் அபாயத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்தார். மூன்றாவது ஸ்லிப்புக்கும், கல்லிக்கும் இடையில் பறந்த ஒரு நான்கும் அதில் அடக்கம். மூன்றாவது ஓவர் கடைசிப் பந்தில், மெக்ராத்தின் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து உள்ளே வெட்டி வந்தது. சேவாக் பெரிய ஷாட் ஒன்றை அடிக்கப் போய், பேட்டுக்கும், கால் காப்பிற்கு இடையில் நிறைய இடைவெளி விட்டிருந்தார். பந்து ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. சேவாக் 8, இந்தியா 11/1.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கில்லெஸ்பி புதியவர் கம்பீரை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். லெக் ஸ்டம்பில் விழுந்த பந்து நடு ஸ்டம்பில் காலில் பட்டது. கம்பீர் 3, இந்தியா 11/2.

டெண்டுல்கர் வந்தது முதற்கொண்டே தடுமாறினார். அந்த ஓவரின் கடைசியிலேயே மழை மீண்டும் பிடித்துக் கொண்டது. சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் திராவிடும் டெண்டுல்கரும் விளையாட வந்தனர். திராவிட் விளிம்பில் தட்டி முதல் ஸ்லிப் ஹெய்டன் கையில் விழாமல் முன்னாலேயே விழுந்த கேட்ச் ஒன்று அவருக்கு நான்கு ரன்களைக் கொடுத்தது. மெக்ராத் பந்துவீச்சில் டெண்டுல்கர் அடிக்காது விட்ட பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, உள்ளே சடாரென திரும்பி காலில் பட்டது. அவுட்டாயிருக்கலாம். ஆனால் நடுவர் ரூடி கொர்ட்சன் கொடுக்கவில்லை. டெண்டுல்கர் மிகவும் கஷ்டப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். மெக்ராத்தின் ஒரு பந்து எழும்பும் என்று நினைத்து குனிந்தார் டெண்டுல்கர், ஆனால் பந்து முதுகில் வந்து இறங்கியது. மற்றொரு முறை எழும்பி வந்த பந்து தோள்பட்டையில் அடித்தது.

உருப்படியான ஒரே ஷாட் திராவிட் கில்லெஸ்பியின் பந்தை நேராக ஸ்டிரெயிட் டிரைவ் செய்து பெற்ற நான்கு ரன்களே. டெண்டுல்கர் வெளிச்சம் சரியாக இல்லையென்று அவ்வப்போது வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அரங்க நிர்வாகம் ஒளி விளக்குகளைப் போட்டது. ஆனால் அந்த வெளிச்சம் சரியில்லையென்று இந்தியர்கள் புகார் செய்ய, கொர்ட்சன், அலீம் தர் அதை ஏற்க, டெண்டுல்கர் 'அப்பா, பிழைத்தோம்' என்று கிளம்பி விட்டார். ஆனால் பாண்டிங் கடைசிவரை நடுவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். இன்னமும் இரண்டு, மூன்று ஓவர்கள் இருந்திருந்தால் டெண்டுல்கர் விக்கெட் விழுந்திருக்கும். 'இன்று போய் நாளை வா' தான் இப்பொழுது. நாளை பார்க்கலாம் டெண்டுல்கரும், இந்திய அணியும் எத்தனை நேரம் தாக்குப் பிடிக்கிறார்கள் என்று.

1 comment:

  1. சரியாப்போச்சு நீங்க சொன்னது. டென்டுல்கர் நைட் வாட்ச்மேன வேலைய கரெக்டா செஞ்சாருப்பா. 6 விக்கெட்டுக்கு அப்புறம் தான் நம்ம டீம் பேட்டிங் ஆர்டர் ஆரம்பிக்குது. 104 க்கு கோவிந்தா.
    மழை பெய்து இந்தியாவையும், இந்தியா கிரிக்கெட் டீமையும் காப்பத்து சாமி

    By: rajaBy: raja

    ReplyDelete