Wednesday, November 24, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்

தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட், இந்தியா 401/4 (114 ஓவர்கள்) - திராவிட் 52*, லக்ஷ்மண் 4*

மூன்றாம் நாள் இந்தியா விளையாடும்போது, தென் ஆப்பிரிக்கா எத்தனை மெதுவாக, நத்தை, ஆமை போல விளையாடி ஆட்டத்தையே வீணடித்து விட்டனர் என்று தோன்றியது. நான்காம் நாள் ஆட்டத்தைப் பார்க்கும்போது, இந்தியாவும் விதிவிலக்கல்ல, சேவாக்-கம்பீர் ஜோடி மட்டும்தான் விதிவிலக்கு என்று புரிந்தது.

நான்காம் நாள் காலையும் பனிமூட்டத்தால், ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. ஆனால் மூன்றாம் நாள் போலல்லாமல் உணவு இடைவேளைக்கு முன்னரேயே ஆட்டம் தொடங்கிவிட்டது. சேவாக் எடுத்த எடுப்பிலேயே ரன்கள் பெற ஆரம்பித்தார். முதலிரண்டு ஓவர்களில் தலா ஒரு நான்கு. இந்தியா இருனூறைத் தாண்ட அதிக நேரம் எடுக்கவில்லை. எண்டினி வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர லெக் ஸ்டம்பைக் குறிவைத்தே பந்துவீசினார். சேவாக் அந்தப் பந்துகளை அடிக்க - அதாவது நான்குகள் அடிக்க - சிரமப்பட்டார். கிட்டத்தட்ட ஷார்ட் மிட்விக்கெட்டுக்கு ஒரு கேட்ச் போலப் போனது. ஆனால் தடுப்பாளர் முன் விழுந்து விட்டது. அடுத்த சில ரன்கள் ஒற்றைகளாகவே வந்தன. எண்டினியின் பந்தை ஃபைன் லெக்கிற்குத் தட்டி ஒரு ரன் பெற்று அதன்மூலம் தன் 8வது சதத்தைப் பெற்றார்.

நேற்றே நான் எழுதியிருந்தது போல, கடந்த எட்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஏழில், ஒவ்வொன்றிலும் ஒரு சதமாவது அடித்துள்ளார் சேவாக். வேறெந்த இந்திய மட்டையாளரும் செய்யாத சாதனையிது.

மறுமுனையில் கம்பீரும் சதமடித்து, இந்தியாவிற்காக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடிக்கும் நான்காவது ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. [முதல் மூன்று ஜோடிகள்: விஜய் மஞ்ச்ரேகர்-முஷ்டாக் அலி, பங்கஜ் ராய்-வினு மன்கட், கவாஸ்கர்-ஸ்ரீக்காந்த் - இதில் பங்கஜ் ராய்-வினு மன்கட் இருவரும் சென்னையில் சேர்ந்து அடித்தது 413 ரன்கள், இன்றுவரை முதல் விக்கெட்டுக்கான உலக சாதனை.] கம்பீர் தன் சதத்தை நெருங்கும்போது மிகவும் மெதுவாக ரன்கள் பெற ஆரம்பித்தார். அதெ நேரம் போலாக், எண்டினி இருவருமே பந்துவீச்சை நெறியாக்கி, நன்றாக வீச ஆரம்பித்தனர். கம்பீர் 96இல் இருக்கும்போது போலாக் ஆஃப் ஸ்டம்பில் வீசி வெளியே கொண்டுபோன பந்தைத் தட்டி சோலிகிலே கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 218/1.

இந்த நேரத்தில் லக்ஷ்மண் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் உள்ளே வந்தது திராவிட். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டுமானால் ஒரே வழிதான் இருந்தது. கிடுகிடுவென ரன்களைச் சேர்ப்பது, நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது கிட்டத்தட்ட 550-600 ரன்கள் வரையில் இருப்பது. ஐந்தாம் நாள் காலையில் ஒரு மணிநேரம் விளையாடி 650 வந்ததும் டிக்ளேர் செய்து பந்துவீசி, தென் ஆப்பிரிக்காவை இரண்டாம் இன்னிங்ஸில் அவுட்டாக்குவது. ஆனால் திராவிட் இதுபோன்ற வேலைகளுக்கு சற்றும் லாயக்கல்ல. வந்தது முதலே ஆடுகளத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைப் பற்றிய பி.எச்டி தீஸிஸ் செய்வதைப் போல ஆடுகளத்தை மட்டையால் தட்டியும் கொட்டியும் இருந்தார். இந்த ஆடுகளம் மோசமானது, பந்துகள் திடீரென தரையோடு உருளும், திடீரென பிளவில் பட்டு எம்பும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதுதான் கம்பீர்-சேவாக் ஜோடி ரன்கள் பெற்றது. ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் ரன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் திராவிட் வந்ததும் மொத்த ரன் ரேட்டே 3.6க்கு வந்தது. பல மெய்டன் ஓவர்கள் பறந்தன. தெய்வாதீனமாக எண்டினி பந்தில் இரண்டு - அடுத்தடுத்த பந்துகளில் - விளிம்பில் பட்டு ஸ்லிப் வழியாக திராவிடுக்கு இரண்டு நான்குகளைப் பெற்றுத் தந்தன. இரண்டுமே கிட்டத்தட்ட உருண்டு போன பந்துகள்தான். மறுமுனையில் சேவாக் ஒரு ரன்னைப் பெற்றால் மீதமுள்ள பந்துகளை திராவிட் ஒழித்துக் கட்டிவிடுவார்.

இப்படியே உணவு இடைவேளையின்போது 235/1 என்ற ஸ்கோர் இருந்தது. சேவாக் 108* (193 பந்துகளில்), திராவிட் 11* (33 பந்துகளில், இரண்டு விளிம்பில் பட்ட நான்குகள் அடக்கம்).

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சேவாக் தடையை உடைத்தார். முதல் ஓவரிலிருந்தே பொறி பறக்க ஆரம்பித்தது. ஆண்டிரூ ஹால் ஓவரில் ஒரு நான்குதான். அதற்கடுத்த ஆண்டிரூ ஹால் ஓவரில் சேவாக் தன் முதல் ஆறையும், தொடர்ந்து ஒரண்டு நான்குகளையும் அடித்தார். அந்த ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள். அடுத்த டி ப்ருயின் ஓவரில் 14 ரன்கள். அதற்கடுத்த ஹால் ஓவரில் சேவாக் ஒரு ரன் பெற்று இந்த வருடத்தில் (2004) டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைத் தாண்டிய ஏழாவது வீரரும், முதல் இந்தியரும் ஆனார்.

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சன் வந்தார். சேவாக் அவரை லாங்-ஆன் மேல் சிக்ஸ் அடித்து தன் 150ஐத் தாண்டினார். மற்றுமிரண்டு நான்குகளுடன் அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தன. ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹால் வீசிய இன் கட்டரில் எல்.பி.டபிள்யூ ஆனார் சேவாக். 164, 228 பந்துகள், 24x4, 2x6. இந்தியா 294/2. அத்துடன் இந்தியா விளையாடிய ஆக்ரோஷமான ஆட்டமும் அடங்கிப்போனது.

இந்தியாவின் தலைசிறந்த மட்டையாளர் டெண்டுல்கர் வந்து, சிறிது நேரம் தடுமாறிய பின்னர் ஹால் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து கால் காப்பில் பட்டு ஸ்டம்பில் போய் விழுந்தது. டெண்டுல்கர் 3, இந்தியா 298/3. திடீரென ஆடுகளம் மோசமாகிப் போனதுபோலத் தோற்றமளித்தது.

கங்குலியும், திராவிடும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விளையாடுவது போலவே விளையாடினர். விட்டால் நம் அணி ஃபாலோ-ஆன் வாங்கிவிடும் போலவும் அதன் பின் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றுவிடுவது போலவும், இந்தப் பந்துவீச்சு உலகின் தலைசிறந்த பந்துவீச்சு போலவும், ஆடுகளம் மும்பை ஆடுகளம் போலவும் நினைத்துக்கொண்டு பந்துக்குப் பந்து திடுக்கிட்டு திடுக்கிட்டு விளையாடினர். சற்றுமுன்னர் வரைதான் சேவாக் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சொல்லிவைத்து அடித்துக் கொண்டிருந்தார்.

சேவாக் அவுட்டான பின், கிட்டத்தட்ட 108 பந்துகளுக்கு மேல் நான்குகள் எதுவும் போகவில்லை. அதன்பின் பீட்டர்சன் பந்தில் திராவிட் மிட் ஆனில் ஒரு நான்கு அடித்தார். அதுதான் திராவிட் உருப்படியாக அடித்த முதல் நான்கு. தொடர்ந்து கங்குலி சற்றே மனதிடத்துடன் விளையாடினார். ரன்களும் அவருக்கு வர ஆரம்பித்தது. ஆனாலும் அவ்வப்போது எண்டினி வீசிய அலவு குறைந்து எழும்பி வரும் பந்துகளில் மிகவும் சிரமப்பட்டார். கையிலும், உடலிலும் பலமுறை அடிவாங்கினார். இந்த ஆடுகளத்தில் இன்னமும் சிறிது உயிர் இருந்திருந்தால் மிகப்பெரும் கங்குலியின் வாழ்க்கை சோகமாகிப்போயிருக்கும். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 338/3 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கங்குலி சற்று அதிகமாக ரன்களைப் பெற்றார். ஆஃப் திசையிலும் சில நான்குகள் பறந்தன. எண்டினி வீசிய அளவு குறைந்த பந்தை ஹூக் கூட செய்து ஒரு நான்கைப் பெற்றார் கங்குலி. இப்படியாக கங்குலி திராவிடைத் தாண்டிப் போய், ஹால் பந்தில் ஒரு நான்கை அடித்து தன் அரை சதத்தைப் பெற்றார். ஆனால் அதற்கு சில ஓவர்கள் தாண்டி டி ப்ருயின் பந்தை ஃபைன் லெக்கிற்குத் திருப்பி அடித்து அங்கு ராபின் பீட்டர்சனுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கங்குலி 57, இந்தியா 394/4. இதுவே டி ப்ருயின் டெஸ்ட் வாழ்வில் முதல் விக்கெட்.

லக்ஷ்மண் உள்ளே வந்தார். திராவிட் அந்த ஓவரிலேயே தன் அரை சதத்தைத் தொட்டார். இந்தியா 400ஐக் கடந்தது. மூன்றாம் நாள் போலவே போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் தடை செய்யப்பட்டது.

இனி இந்த ஆட்டம் டிரா ஆவதைத் தவிர வேறு வழியில்லை. ஆட்டத்தில் இரண்டு அம்சங்கள்தான் இதுவரை பார்க்க சுவாரசியம். ஒன்று சேவாகின் அற்புதமான சதம். இரண்டாவது கம்பீர் சேவாகுக்குக் கொடுத்த துணை. மற்ற இந்திய மட்டையாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

இரண்டாவது டெஸ்டிலாவது நல்ல, உயிருள்ள ஆடுகளத்தை வைத்து, தயங்கித் தயங்கி விளையாடும் தென் ஆப்பிரிக்காவை ஜெயிக்க இந்தியா முயல வேண்டும். இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. சென்ற வருடம் கூட நியூசிலாந்து விளையாட வந்திருந்த போது அஹமதாபாதிலும், மொஹாலியும் படு திராபையான ஆடுகளங்களை வைத்து இரண்டு டெஸ்ட்களையும் டிராவாக்கிய இந்தியா இப்பொழுதும் அதைப்போலவே நடந்து கொள்ளாமல் இருக்க எல்லாம் வல்ல கிரிக்கெட் இறைவனை வேண்டுவோம்.

1 comment:

  1. பத்ரி,

    நல்ல இடுகை. 5ஆம் நாள் ஆட்டத்தில் இப்படி சொதப்பி எல்லோரும் அவுட் ஆனது ஆச்சரியம்.

    ரிலையன்ஸ் பற்றிய கட்டுரைக்கு காத்திருக்கிறோம்

    - அலெக்ஸ்

    ReplyDelete