Tuesday, November 30, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 359/6 (125 ஓவர்கள்) - கார்த்திக் 35, பதான் 21

முன்பெல்லாம் டெண்டுல்கர் விளையாடப்போகிறார் என்றாலே கூட்டம் திரண்டு வரும். தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். டெண்டுல்கர் அவுட்டானதுமே உடனே பலர் அரங்கிலிருந்து கிளம்பி விடுவார்கள். தொலைக்காட்சியின் TRP ரேடிங் குறைந்துபோகும்.

சேவாக் டெண்டுல்கரைப் போலக் காட்சி அளிக்கிறாரோ, இல்லையோ; டெண்டுல்கரைப் போலவே விளையாடுகிறாரோ, இல்லையோ; நிச்சயமாக டெண்டுல்கரைப் போல பார்வையாளர்களை ஈர்க்கிறார். இன்றைய ஆட்டம் அதற்கு அத்தாட்சி. நேற்று சேவாக் அரங்கில் இருந்தவரை ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. முதல் டெஸ்டிலும் அப்படியே. இன்று காலை சேவாக் அவுட்டானதும் ஆட்டமும் சோபை இழந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரில் மிச்சமிருந்த இரண்டு பந்துகளும் இன்று காலை போடப்பட்டன. அந்த இரண்டு பந்துகளில் புதுமையாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் அடுத்த ஓவரில் திராவிட் எண்டினி பந்துவீச்சில் அற்புதமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். கால் திசையில் வந்த பந்தை மிட்விக்கெட் திசையில் தள்ளிப் பெற்றது முதல் நான்கு. அடுத்தது இரண்டாம் ஸ்லிப்பிற்கும், கல்லிக்கும் இடையே அடித்தது. அடுத்த ஓவரில் போலாக் பந்துவீச்சில் நல்ல அளவில் வீசப்பட்ட - குற்றம் ஒன்றுமே சொல்லமுடியாத பந்தை - அனாயாசமாக லாங் ஆன் மேல் தூக்கி ஆறாக அடித்தார். போலாக் நம்பவே முடியாமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள். இந்த வேகத்தில் எங்குபோய் முடியுமோ என்று தென்னாப்பிரிக்கர்கள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.

எண்டினி தன் இரண்டாவது ஓவரைத் தொடங்கினார். முதல் பந்தில் திராவிடுக்கு ஒரு ரன். சேவாக் வந்ததுமே எண்டினி அவருக்கு குறைந்த அளவுள்ள பந்துகளாக வீசத்தொடங்கினார். எல்லாமே அளவு குறைந்து, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்டு, உள்நோக்கி, முகத்தைப் பார்த்து வீசப்பட்டவை. முதல் பந்தை சேவாக் விட்டுவிட்டார். இரண்டாவதை சற்று பின்னால் சென்று நன்றாகவே தடுத்தாடினார். மூன்றாவது பந்தோ அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்துவிட்டது. அதனால் பந்து கைக்காப்பில் பட்டு மேல்நோக்கிச் சென்றது. முதல் ஸ்லிப்பிலிருந்து ஸ்மித் ஓடிச்சென்றுப் பிடித்தார். தென்னாப்பிரிக்கர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சேவாக் 118 பந்துகளில் 88, 11x4, 2x6. இந்தியா 144/2.

டெண்டுல்கர் உள்ளே வந்ததும் மிகவும் பாதுகாப்பாகவே விளையாடினார். திராவிட் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி தன் அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் எப்படியாவது அவுட்டாகாமல் இருப்பதே நோக்கம் என்பதுபோல விளையாடினர். தாங்களாகவே ரன் அடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றவில்லை. அடிப்பது போல பந்துவந்தால் அடிப்பார்கள் - அதுவும் 1, 2 ரன்களுக்குத்தான். இல்லாவிட்டால் சந்தோஷமாக தடுத்தாடிவிடுவார்கள். அவ்வப்போது விளிம்பில் பட்டு ஃபைன் லெக்கிலோ, தர்ட்மேனிலோ நான்குகள் கிடைக்கும்.

ஜஸ்டின் ஆண்டாங் பந்துவீச வந்ததும் டெண்டுல்கர் ஒரு ஷாட் தூக்கியடித்து விளையாடினார். ஆகா, மனிதர் இனியாவது நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தால்... வெகு சீக்கிரத்திலேயே டி ப்ருயின் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை வெட்டி ஆடப்போய், உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். டெண்டுல்கர் 20, இந்தியா 189/3. கங்குலி உள்ளே வந்தார். வந்தது முதற்கொண்டே அவசரமாக ரன்களைப் பெறுவதன் மூலம்தான் இந்த ஆட்டத்தை வெல்ல முடியும் என்பதைப் புரிந்துகொண்டவர் போல விளையாடினார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பு வியூகம் கங்குலிக்கு நிறைய வாய்ப்பைக் கொடுக்கவில்லை. திராவிடோ இந்த முயற்சியைக் கூடச் செய்யவில்லை. தடுத்தாடுவதிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 198/3 என இருந்தது.

இடைவேளைக்குப் பின்னரும் கங்குலி ரன்கள் பெறும் வேகத்தைக் கூட்டினார். ஆனால் திராவிடும், டெண்டுல்கர் வழியிலேயே ஆண்டிரூ ஹால் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை உள்ளே இழுத்து வந்து ஸ்டம்பில் விழவைத்து தன் விக்கெட்டை இழந்தார். திராவிட் 247 பந்துகளில் 80, 8x4, இந்தியா 238/4. அடுத்து லக்ஷ்மண் உள்ளே வந்தார். லக்ஷ்மணும் மிக மோசமான ஃபார்மில் இருப்பதால் தடவித் தடவியே விளையாடினார். கங்குலி மட்டும் ஆஃப் திசையில் சில நல்ல விளாசல்களையும், கால் திசையில் கிடைக்கும் ரன்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, ஆட்டம் கிட்டத்தட்ட சதுரங்கத்தில் 'stalemate' என்பார்களே - அதுபோன்று விட்டது. இந்தியாவால் பந்துவீச்சைத் தகர்த்து ரன்களை வேகமாக சேர்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவால் இந்தியாவின் மிஞ்சிய விக்கெட்டுகளை கிடுகிடுவென சாய்க்க முடியவில்லை. விளைவு? பார்வையாளர்கள் தூங்கி வழிந்தனர். இந்த நேரத்தில் இதுவரையில் செய்யாத தவறொன்றை நடுவர் டாஃபல் செய்தார். டி ப்ருயின் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, கங்குலியின் காலில் பட்ட பந்தில் கங்குலி எல்.பி.டபிள்யூ என்று தீர்மானித்தார். கங்குலி 73 பந்துகளில் 40 ரன்கள், 5x4, இந்தியா 267/5. இப்பொழுதும் இந்தியாவின் எண்ணிக்கை தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையை விடக் குறைவுதான்.

புதியவர் தினேஷ் கார்த்திக்குடன் லக்ஷ்மண் ரன்களைச் சேர்த்து எப்படியாவது 305ஐத் தாண்டுவது என்று விளையாடினார். லக்ஷ்மணை விட கார்த்திக் சற்று ஆக்ரோஷமான விளையாட்டைக் காண்பித்தார். தேநீர் இடைவேளையின்போது இந்தியா தென்னாப்பிரிக்காவின் ஸ்கோருக்கு அருகில் வந்துவிட்டது. 293/5.

இடைவேளைக்குப் பின், லக்ஷ்மண் சற்று சுதந்திரமாக விளையாடத் தொடங்கினார். எண்டினி பந்தில் அவருக்கு அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நான்குகள் கிடைத்தன. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையைத் தாண்டியது. ஆனால் எண்டினி அகலம் கொடுத்த ஒரு பந்தை அடிக்கப்போய் அதை பாயிண்ட் திசையில் நின்றிருந்த ஆண்டாங் கையில் கேட்சாகக் கொடுத்தார். லக்ஷ்மண் 86 பந்துகளில் 39, 4x4, இந்தியா 308/6.

ஆனால் இந்த நிலையிலும் கூட தென்னாப்பிரிக்காவின் பலம் குறைந்த பந்துவீச்சால் இந்தியாவின் வாலை ஒட்ட நறுக்க முடியவில்லை. இர்ஃபான் பதான் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டம் முடியும்வரை எண்ணிக்கையை 359/6 என்ற நிலைக்குக் - 54 ரன்கள் கூடுதலாகக் - கொண்டு சென்றனர். இன்றும் வழக்கம் போல 4.15க்கே ஆட்டம் முடிந்தது. இன்றைய கணக்கான 90 ஓவர்களுக்கு நான்கு ஓவர்கள் குறைவு.

இனி ஆட்டம் என்ன ஆகும்? இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் மட்டையை முடிந்தவரை வீசி ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் சேர்க்க முயல வேண்டும். அவுட்டானாலும் தவறில்லை. இன்னமும் 100 ரன்கள் சேர்த்தபின் பந்துவீச வேண்டியதுதான். தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை 200க்குள் அவுட்டாக்கினால், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் ஆட்டம் டிரா.

No comments:

Post a Comment