Wednesday, December 01, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305 & 172/5 (58 ஓவர்கள்) - கால்லிஸ் 52*, டி ப்ருயின் 9*; இந்தியா 411

நான்காம் நாளின் கடைசி இரண்டரை மணிநேரங்களுக்கு முன்னர் ஆட்டம் சுவாரசியமற்று இருந்தது. யாரோ ஒருவர் ஸ்விட்ச் ஒன்றைப் போட்டது போல, தென் ஆப்பிரிக்காவின் 23ஆவது ஓவரில் தொடங்கி திடீரென எல்லாமே மாறி விட்டது.

காலையில் கார்த்திக், பதான் ஜோடி கருமமே கண்ணாக, மெதுவாக ரன்கள் சேர்த்தனர். முதல் ஓவரிலிருந்தே தென் ஆப்பிரிக்கா புதுப்பந்தை எடுத்துக்கொண்டது. 125 ஓவர்கள் வரை புதுப்பந்தை எடுக்காதது ஆச்சரியம்தான்! வெகு சீக்கிரமே பதான் லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கிச் சென்ற எண்டினியில் பந்தை அடிக்க, அது இரண்டாம் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்தினால் அற்புதமாகப் பிடிக்கப்பட்டது. பதான் இன்று காலை தன் எண்ணிக்கையில் மூன்று ரன்களை மட்டுமே அதிகரித்திருந்தார். பதான் 24, இந்தியா 366/7. இந்தியா தனது ஆட்டத் திட்டத்தில் சிறிதும் மாறுதல் செய்யவில்லை. ஹர்பஜனை உள்ளே அனுப்பி ரன்களை அவசரமாகச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கும்ப்ளேதான் வந்தார். வந்தவர் தடவித் தடவித்தான் விளையாடினார். இதற்கிடையில் கார்த்திக் சிறிது சிறிதாக ரன்கள் சேர்த்து தன் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கும்ப்ளே எண்டினியின் பந்துவீச்சில், அளவு குறைந்து வந்த பந்தைத் தட்டி இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற கால்லிஸ் கையில் கேட்ச் கொடுத்தார். கும்ப்ளே 26 பந்துகளில் 8, இந்தியா 382/8.

கார்த்திக் 46 ரன்களில் இருக்கும்போது போலாக் பந்துவீச்சில் கால் திசையில் பந்தை அடித்தாடப்போய், பந்தை விட்டுவிட, அது கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. கார்த்திக் 147 பந்துகளில் 46, 6x4, இந்தியா 387/9. முதல் டெஸ்டைப் போலவே ஹர்பஜனும், ஜாகீர் கானும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்காக சில ரன்களைப் பெற்றனர். 400ஐத் தாண்டினர். ஆனால் அதே நேரத்தில் காலத்தையும் கடத்தினர். கிட்டத்தட்ட உணவு இடைவேளை நெருங்கியபோது ஹர்பஜன் ஆண்டாங் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப்போய் பந்தை பாயிண்ட் திசையில் ட்Hஉக்கி அடிக்க, அங்கு டிப்பெனார் கேட்ச் பிடித்தார். ஹர்பஜன் 14, ஜாகீர் கான் 11*, இந்தியா 411 ஆல் அவுட். முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் அதிகம்.

தென் ஆப்பிரிக்காவை 200 ரன்களுக்குள் - சீக்கிரமாக - அவுட்டாக்கினால்தான் இந்தியாவிற்கு ஜெயிக்க வாய்ப்பு என்று இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித், ஹால் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆளுக்கு மூன்று ஓவர்களைப் போட்டதும் கும்ப்ளேயிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது. இந்த முதல் ஆறு ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 23/0 என்ற நிலையில் இருந்தது. அதில் ஐந்து நான்குகளும் அடக்கம். ஸ்மித் நன்றாகவே விளையாடினார்.

கும்ப்ளே வந்ததற்கு பதில் ஹர்பஜனைப் பந்துவீச அழைத்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. கும்ப்ளே பந்துவீச வந்தது முதலே மட்டையாளர் யார், அவருக்கு எங்கு பந்துவீசுவது என்பதை யோசிக்காமல் முந்தைய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஏற்படும் கால் அடையாளங்கள் (bowlers' footmarks) - இதை ரஃப் (rough) என்று சொல்வார்கள் - எங்கு உள்ளதோ அங்கேயே வீசுவேன் என்று விடாப்பிடியாக வீசினார். இந்த காலடையாளங்கள் ஆடுகளத்தின் மேற்பரப்பை சிதைத்து குழிகளை ஏற்படுத்தியிருக்கும். பொதுவாக good length என்று சொல்லப்படும் நல்ல அளவுள்ள பந்துகள் விழும் இடங்களில் இருக்கும். நான்காவது, ஐந்தாவது நாள்களில் இந்தக் காலடையாளப் பரப்பு பந்துவீச்சாளர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் இடதுகை மட்டையாளருக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயும், வலதுகை மட்டையாளருக்கு லெக் ஸ்டம்பிற்கு வெளியேயும் இருந்தது. ஷேன் வார்ன் போன்ற அதிக சுழற்சியைக் கொடுக்கும் பந்துவீச்சாளரால் இந்த ரஃப் பகுதியை மிக அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதிகமாக ஸ்பின் ஆவதால் இதுபோன்ற பந்துகளை ஸ்வீப் செய்வதும் கஷ்டம்.

ஆனால் கும்ப்ளே வார்ன் அளவுக்கு பந்தை சுழற்றுபவர் அல்ல. அதனால் இவர் ரஃபில் வீசுவது அனைத்தும் வீணாகப் போயிற்று. வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர மீண்டும் மீண்டும் ரஃபில் இவர் வீச, மட்டையாளர்கள் இஅடலைக் காட்டியோ, இல்லை, மட்டையால் பந்தைத் திருப்பி விட்டோ விளையாடினர்.

15 ஓவர்கள் வரை ஹர்பஜனைக் காணவே காணோம். ஹர்பஜன் வந்ததுமே முதலிரண்டு ஓவர்களை நன்றாக வீசினார். இவரது மூன்றாவது ஓவரில் அதுவரை தூங்கிக்கொண்டிருந்த ஹால் இறங்கி வந்து மிட்விக்கெட் மேல் சிக்ஸ் அடித்தார். ஹர்பஜனின் நான்காவது ஓவரில் ஒரு நான்கு போனது. 22 ஓவர்கள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 69/0 என்ற நிலையில் இருந்தது. கும்ப்ளே அதுவரை 8 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்திருந்தார். ஹர்பஜன் 4 ஓவர்களில் 14 ரன்கள்.

23ஆவது ஓவரை கும்ப்ளே வீசினார். இப்பொழுது ரஃபில் விழுந்த பந்துகள் மிக அதிகமாக ஸ்பின் ஆக ஆரம்பித்தன. ஒரு பந்து ஸ்மித்தின் வயிற்றில் அடித்தது. இன்னொரு பந்தில் ஸ்லிப், கீப்பர் நடுவில் விளிம்பில் பட்டு நான்கு ரன்கள் கிடைத்தன. மற்றுமொரு பந்தை மட்டையாளர், விக்கெட் கீப்பர் இருவரௌம் தடவி, நான்கு ரன்கள் பையாகக் கிடைத்தன. இன்னொரு பந்தில், ஸ்மித் வெட்டியாடப் போய் பந்து தரையில் விழுந்து ஸ்டம்பிற்கு மேலாகப் போனது! இப்படியாக ஸ்மித் மிகவும் ஆடிப்போயிருந்தார் இந்த ஓவரில்.

24ஆவது ஓவர் ஹர்பஜன் வீசிய முதல் பந்தை ஹால் ஸ்வீப் செய்யப்போனார். பந்து கையுறையில் பட்டு, எழும்பி விழுந்தது. கார்த்திக் நன்றாகத் தாவிப்பிடித்தார். ஹால் 21, தென் ஆப்பிரிக்கா 77/1. புதிதாக உள்ளே வந்தவர் ஜாக் ருடால்ப். ஸ்மித் இப்பொழுது 49 ரன்களில் இருந்தார். அடுத்த ஓவரில் ஒரு ரன் பெற்று தன் அரை சதத்தைப் பெற்றார். அடுத்த ஓவர் ஹர்பஜன் பிரமாதமாக வீசினார். ஒவ்வொரு பந்தையும் ருடால்பை விளையாட வைத்தார். ஒவ்வொன்றும் ஆஃப், அல்லது நடு ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்பின் ஆனது. ஆனால் கடைசியாக வீசிய பந்து மிகப்பெரும் 'தூஸ்ரா'. இடதுகை ஆட்டக்காரர் ருடால்பின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்தது. இது நிச்சயமாக வெளியே போய்விடும் என்று இரண்டு கைகளையும் தூக்கி கால்காப்பை முன்னால் வைத்தார் ருடால்ப். ஆனால் பந்து சடாரென உள்ளே வந்து கால்காப்பில் பட, நடுவர் ஹார்ப்பரால் அவுட் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ருடால்ப் 2. தென் ஆப்பிரிக்கா 81/2. உள்ளே வந்தவர் கால்லிஸ்.

அடுத்த ஓவர் கும்ப்ளே வீசினார். லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போன ஒரு பை நான்கு ரன்கள். மீண்டும் ஹர்பஜன் வந்தார். தன் முந்தைய இரண்டு ஓவர்களில், ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இந்த ஓவரில் கால்லிஸ் முன்னால் வந்து தடுத்தாட முற்பட்டார். பந்து உள்விளிம்பில் பட்டு, கால்காப்பில் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற கம்பீர் கையில் விழுந்தது. இந்தியர்கள் அனைவரும் குதித்தனர். கால்லிஸ் தன் மட்டையை மேலே தூக்கிக் காட்டி பந்து காலில் பட்டது என சைகை காட்டினார். நடுவர் ஹார்ப்பரும் நம்பினார். அவுட் தரவில்லை. அப்பொழுது தென் ஆப்பிரிக்கா 89/2. கால்லிஸ் 2. மேலும் இரண்டு ரன்கள் கால்லிஸ் பெற 91/2 என்ற நிலையில் தேநீர் இடைவேளை.

தேநீர் இடைவேளையின்போது இந்தியர்கள் கொதித்துப் போயிருக்க வேண்டும். கால்லிஸ் அவுட்டாகியிருந்தால் ஆட்டமே வேறு மாதிரியாக இருந்திருக்கும்! இடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் விழும்போலவே இருந்தது. வருத்தம் என்னவென்றால் கும்ப்ளே அந்த அளவுக்கு ஈடுகொடுக்கவில்லை. அது மட்டுமல்ல, ஸ்மித்துக்கு ரன்களும் கொடுத்துக்கொண்டிருந்தார். சில ஓவர்கள் கழித்து ஹர்பஜன் ஸ்மித்துக்கு நன்கு மிதந்துவந்த, அளவு அதிகமாக விழுந்த ஆஃப் பிரேக் ஒன்றை வீசினார். அது ஸ்மித்தின் வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பிற்குத் தள்ளிப் பறந்தது. ஆனால் அங்கு நின்றுகொண்டிருந்த லக்ஷ்மண் பறந்து இடதுகையால் அந்த கேட்சை லபக்கென்று பிடித்தார். ஸ்மித் 124 பந்துகளில் 71, 11x4, தென் ஆப்பிரிக்கா 126/3. உள்ளே வந்தவர் ஹாஷிம் ஆம்லா.

கால்லிஸ் விக்கெட் கிடைக்காதது துரதிர்ஷ்டம் என்றால் அடுத்து ஹர்பஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதிகமாக சுழலும் என எதிர்பார்த்து ஆம்லா பந்தை மிட்விக்கெட் திசையில் திருப்ப நினைக்க, பந்து கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மண் கையில் விழுந்தது. ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையில் படவில்லை என்று தோன்றியது. ஹார்ப்பரோ இது அவுட் என்று சொல்லிவிட்டார். ஆக ஆம்லா 2, தென் ஆப்பிரிக்கா 138/4.

சில ஓவர்கள் கழித்து கடைசியாக கும்ப்ளே விக்கெட் ஒன்றை எடுத்தார். நடு ஸ்டம்பில் விழுந்து பந்து லெக் ஸ்பின் ஆகி வெளியே சென்றது. டிப்பெனாரில் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் கார்த்திக்கின் கால்காப்பில் பட்டு கல்லி திசையில் சென்றது. அங்கு நிற சேவாக் அதைப் பிடித்தார். டிப்பெனார் 2, தென் ஆப்பிரிக்கா 147/5. ஆக விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்குப் பிறகு கால்லிஸ், ஜாண்டர் டி ப்ருயின் இருவரும் நாளின் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கால்லிஸ் தன் அரை சதத்தையும் பெற்றார். முதல் இன்னிங்ஸில் கால்லிஸ் சதமடித்திருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இப்பொழுதைக்கு தென் ஆப்பிரிக்கா கையில் ஐந்து விக்கெட்டுகளுடன் 66 ரன்கள் அதிகத்தில் உள்ளது.

நாளை - கடைசி நாள் - ஆட்டத்தில் இந்தியா மிச்சமிருக்கும் விக்கெட்டுகளை சுலபமாக எடுத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஹர்பஜன் மிக அருமையாக வீசுகிறார். கும்ப்ளே சிறிது தோள் கொடுத்தால் இன்னமும் 40-50 ரன்களுக்குள் மிச்சமிருக்கும் ஐந்து விக்கெட்டுகளைப் பெற்று விடலாம். அதன்பின் இந்தியாவால் 120 ரன்களை வேகமாகப் பெற முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவிடம் உருப்படியான ஸ்பின்னர்கள் யாரும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக கால்லிஸை இன்னொருமுறை அவுட்டாக்க முனைய வேண்டும்.

1 comment:

  1. தமிழில் ஒரு புதிய கிரிகெட் அகராதியை கொன்டுவரவேன்டும் எங்கிர உஙள் முயர்சி பாராட்டுக்குரியது. கிரிகெட் ஒரு சர்வதேச விளயாட்டு எஙிர காரணத்தால் இன்த முயர்சியின் தொடர்சியிலெயே standardization கொன்டுவந்தால் நல்லது. அதர்க்கு 'wiki' ஒரு நல்ல ஒருதுணையாக விளங்கும் என்று நினைக்கிரேன். அதில் நீஙள் மட்டுமின்றி உலகெஙும் வசிக்கும் தமிழர்கள் அவர்களுக்கு தோன்றும் வார்தைகளை கூட பதிவு செய்யலாம்.
    What say?
    Can you suggest a good online English-Tamil dictionary? Also, what is the Tamil equivalent of 'standardization'?

    By: keeravani

    ReplyDelete