Thursday, March 10, 2005

சேவாகின் அட்டகாசம்

யுவ்ராஜ் சிங் இல்லை. ஹர்பஜன் சிங் இல்லை. மண்ணின் மைந்தர்கள் இல்லாது மொஹாலியில் டெஸ்டா? தில்லியில் வசித்தாலும் விரேந்தர் சேவாக் பஞ்சாபிதானே? அதனால் அட்ஜஸ்ட் செய்துகொண்டு ஆட்டத்தைப் பார்த்தார்கள் மொஹாலி/லாஹூர் பஞ்சாபிகள்.

முதல் நாள் பாலாஜியுடையது. மழை பெய்த இரண்டாம் நாள் சேவாகுடையது. காலையிலிருந்தே சிறு தூறல், வெளிச்சமின்மை. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமேதும் நடைபெற வாய்ப்பில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு மணிநேரம் கழித்தே ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய முதற்கொண்டே சேவாகும், கம்பீரும் தடாலடிதான். பந்து காற்றில் பறந்து செல்வதைப் பற்றி சேவாக் கவலைப்படவே இல்லை. பாகிஸ்தான் வீரர்களால் கேட்ச் பிடிக்க முடியாது என்றே முடிவு கட்டிவிட்டார் போலும். சேவாக் 15ல் இருக்கும் போது ஸ்லிப்பில் கேட்ச் ஒன்று நழுவியது. கம்பீர் பத்துக்குள் இருக்கும்போதே சேவாக் முப்பதைத் தாண்டி விட்டார். அவர் நாற்பதுகளில் இருக்கும்போது தேநீர் இடைவேளை. தேநீர் இடைவேளை முடிந்து வந்தவுடன் ஐம்பதை 49 பந்துகளில் கடந்தார் சேவாக். அந்த நேரத்தில் கம்பீரும் சேர்ந்துகொண்டு ரன்களை விளாச ஆரம்பித்தார்.

பாகிஸ்தான் புதுப்பந்து வீச்சாளர்கள் நவீத்-உல்-ஹசன், மொஹம்மத் சாமி இருவரும் நிறையவே உதை வாங்கினர். அப்துல் ரஸாக் முதலில் குறைந்த ரன்கள் கொடுத்தாலும் விரைவில் அவரிடமும் நிறையவே கறந்து விட்டார்கள். தனீஷ் கனேரியா ஒருவர்தான் ஓரளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசினார். இன்ஸமாம்-உல்-ஹக் வேறு வழியின்றி தனீஷை அழைக்க, அவரது இரண்டாவது ஸ்பெல்லில் முதல் பந்தில் கம்பீர் இறங்கி வந்து அடிக்க முனைந்து தவறிழைத்து மிட்-ஆனில் கேட்ச் கொடுத்தார். முதல் விக்கெட் ஜோடி 17 ஓவர்களில் 113 ரன்கள் பெற்றது (ஓவருக்கு 6.65 ரன்கள்).

அடுத்து உள்ளே வந்தவர் ராஹுல் திராவிட். சேவாக் இருக்கும்போது யாருக்கும் திராவிட் ஆட்டத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. ஆனால் திராவிட் அவ்வப்போது நிறைய ரன்களைச் சேகரித்துக்கொண்டுதான் இருந்தார். சொல்லப்போனால் சேவாக்தான் சற்று பொறுமை காக்கத் தொடங்கினார். தனீஷின் பந்துவீச்சில் நிறைய சின்னச்சின்ன மாறுபாடுகள் இருந்தது. அவரது கூக்ளி, லெக் பிரேக் இரண்டுமே நன்றாக வந்தது. அவ்வளவாக ஃபிளிப்பர் வீசத் தெரியவில்லை இவருக்கு. அதைக் கவனிப்பது முக்கியம். 85ல் இருக்கும்போது சேவாக் தனீஷ் கனேரியா பந்தில் ஸ்லிப்பில் ஒரு கேட்ச் கொடுத்தார். அதுவும் நழுவ விடப்பட்டது. ஆட்டம் முடியும்போது இந்தியா 184/1 என்ற கணக்கில் இருந்தது. வெளிச்சம் போதாமை காரணமாக ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இன்றும் ஆட்டம் மழையினால் தடைப்படலாம்... இந்தியா இந்த ஆட்டத்தை ஜெயிப்பதில் ஒரே தடை மழையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment