Friday, March 11, 2005

ராஜீவ் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் கிடைத்த இடங்களுக்கெல்லாம் ராஜீவ் காந்தியின் பெயரையோ, இந்திரா காந்தியின் பெயரையோ வைத்துத் தள்ளுகிறார்களாம். இதுபற்றிய செய்தித்துணுக்கு ஒன்று NDTVயில் காட்டப்பட்டது.

ஏற்கெனவே இந்தியாவில் பல இடங்களில் உள்ள கிரிக்கெட் அரங்கங்களுக்கு ஜவஹர்லால் நேஹ்ரு பெயரை வைத்தாகி விட்டது. அடுத்து இந்திரா காந்தி பெயர்தான் அதிகம். இப்பொழுது ஹைதராபாத் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் அரங்கத்துக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்ட மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி கையை முறுக்குகிறாராம். ஆனால் ஒரு சின்னப் பிரச்னை - இந்த அரங்கம் கட்ட விசாகா சிமெண்ட் 6.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளது. அதனால் அரங்கத்துக்கு விசாகா ஸ்டேடியம் என்று பெயர் வைக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் மாநில அரசும் ஏதோ உதவி செய்துள்ளது என்று நினைக்கிறேன். (அரங்கம் கட்ட இடம் குறைந்த செலவிலோ, அல்லது இலவசமாகவோ கொடுத்திருப்பார்கள் - அதுவும் தெலுகு தேசம் ஆட்சியில் இருந்தபோது கொடுத்தது.) ஆனால் இப்பொழுது ராஜசேகர ரெட்டி ராஜீவ் காந்தி பெயரைச் சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

ராஜசேகர ரெட்டி அடுத்து ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தி பெயரை வைக்க முடிவு செய்து விட்டார்.

மத்தியில் ஆளும் கூட்டணி எல்லாத் திட்டங்களுக்கும் ராஜீவ், இந்திரா பெயர்களை வைத்தது போல ஆந்திர மாநில அரசும் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கெல்லாம் அவசர அவசரமாக ராஜீவ், இந்திரா பெயர்களை வைத்த வண்ணம் இருக்கிறார்களாம்.

இதெல்லாம் நல்லதுக்கில்லை என்று தெலுகு தேசம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சொன்னார்.

ஆந்திர மக்கள் தங்களுக்கு வாக்களித்ததன் மூலம் எதற்கெடுத்தாலும் ராஜீவ் காந்தி பெயரை வைக்கும் உரிமையையும் கொடுத்து விட்டார்கள் என்பது போலப் பேசுகிறாராம் ராஜசேகர ரெட்டி.

இப்படியே போனால் ஆந்திரப் பிரதேசத்துக்கே ராஜீவ் பிரதேசம் என்று பெயர் வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்றார் NDTV நிருபர்.

===

ஒன்று கவனித்தீர்களா? நேஹ்ரு பெயரை மறந்து விட்டார்கள். ராஜீவ் அல்லது இந்திராதான். எனவே அடுத்து ராஹுல் காந்தி வந்தால்தான் இந்திரா காந்தி பெயரை மறப்பார்கள்.

1 comment:

  1. Badri, related funny stuff here

    http://www.yazadjal.com/2005/03/jai_shivaji.html

    ReplyDelete