Sunday, March 27, 2005

சேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது

பாகிஸ்தான் 570, இந்தியா 379/6

அசல், நகல் என்று ஏற்கெனவே பலமுறை எழுதியாகி விட்டது. விரேந்தர் சேவாகை இனியும் அசலா, நகலா என்னும் கேள்விகளுக்குள் கட்டுப்படுத்துவது அவருக்கும் நியாயமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் நியாயமல்ல.

விரேந்தர் சேவாக் சதமடித்தார். அதன்பிறகு இரட்டை சதமடித்தார்.

அவ்வளவுதானா? அதற்கு மேல் பலவற்றையும் தனது ஆட்டத்தில் காண்பித்தார் சேவாக்.

முதலில் கவனிக்க வேண்டியது: சேவாகின் ரன்கள் பெறும் வேகத்தை. அவர் சந்திக்கும் 100 பந்துகளில் 70க்கும் மேலான (72.4) ரன்களைப் பெற்று வருகிறார். இன்றும் அப்படியே. உதாரணத்துக்கு பாகிஸ்தானுக்காக இன்ஸமாம்-உல்-ஹக் 264 பந்துகளில் 184 ரன்கள் பெற்றார். அதாவது 100 பந்துகளுக்கு கிட்டத்தட்ட 70 ரன்கள். அதே நேரம் யூனுஸ் கான் 100 பந்துகளுக்கு சுமார் 50 ரன்கள் பெற்றார். இதனால் இன்ஸமாம் வெகு வேகமாக ரன்களைப் பெறுவது போல நமக்குத் தோன்றியது. சேவாக் 262 பந்துகளில் பெற்ற ரன்கள் 201. அதாவது 77 ரன்கள். இது இப்பொழுதைக்கு உலகில் கிரிக்கெட் விளையாடுவோரில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுக்கு அடுத்த நிலையில் உள்ளது. (கில்கிறிஸ்ட் 83.10 என்ற நிலையில் இருக்க்கிறார்!)

இரண்டாவது: சேவாகின் ரன் பசி. நூறு அடித்தால் போதும் என்று விட்டுவிடுவதில்லை. இதுவரை பத்து முறை சதத்தைத் தொட்டுள்ளார். ஆனால் அதில் 6 தடவை 150க்கு மேல்! அதில் நேற்று 201, பாகிஸ்தானில் 309. ஆஸ்திரேலியாவில் 195. இதே போட்டித்தொடரில் மொஹாலியில் 173. இதே போல ஐம்பதைத் தாண்டினால் பாதிக்குப் பாதி நூறைத் தொடுகிறார். அதாவது இதுவரையில் இவர் பத்து முறை நூறுக்கு மேலும், ஒன்பது முறைதான் ஐம்பதிலிருந்து நூறுக்குள்ளாகவும் இருந்துள்ளார். இதுவும் இந்தியாவுக்கு மிகவும் உபயோகமானது.

மூன்றாவது: டைமிங். சேவாக் பந்தை அடிக்கும்போது அந்த அடியில் மிக அதிகமான விசை இருப்பது தெரிய வரும். எப்படித் தெரிய வரும்? பாயிண்ட், கவர் திசைகளில் இருக்கும் தடுப்பாளர்கள் திரும்புவதற்கு முன்னரே பந்து அவர்களைத் தாண்டி விடும். அவர்கள் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னமேயே பந்து எல்லைக்கோட்டைக் கடந்து விடும். அதென்ன சேவாக் 'காட்டடி' அடிக்கிறாரா என்ன? கிடையாது. இதைத்தான் டைமிங் என்று சொல்வோம். சரியான நேரத்தில் பந்தை மட்டையால் சந்திக்க வேண்டும். சிறிது முன்னதாகவோ, அல்லது சிறிது தாமதித்தோ மட்டையால் பந்தை அடித்தால் பந்து கேட்சாக மாறலாம். அல்லது எதிர்பார்த்த இடத்துக்குச் செல்லாமல் வேறு இடத்துக்குச் செல்லலாம். அல்லது சற்றே மெதுவாகச் செல்லலாம்; எனவே தடுப்பாளர்களால் தடுக்கப்படலாம். சேவாகின் டைமிங் இன்றைய தேதியில் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஒப்பிடுகையில் முதலாவதாக உள்ளது. பிரையன் லாராவை விட உயர்வாக. அதனால்தான் இவர் பந்துவீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். நேற்று இவர் அடித்த சில ஸ்கொயர் கட், கவர் டிரைவ்களை உதாரணமாகச் சொல்லலாம். அதே அடியை அடுத்து டெண்டுல்கரோ, லக்ஷ்மணோ அடித்த போது பந்தை தடுப்பாளர்களால் எளிதாகத் தடுக்க முடிந்தது. ஆனால் சேவாக் அடித்தபோது பந்தைத் துரத்தக் கூட முடியவில்லை. எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து பொறுக்கிக் கொண்டு வரமட்டும்தான் முடிந்தது.

நான்காவது: புதுமை. இன்னோவேஷன் என்பார்களே... இதை ஜீனியஸ் கிரிக்கெட் வீரர்களால்தான் செய்ய முடியும். பந்து வீச்சாளர் ஒரு குறிப்பிட்ட தடுப்பு வியூகத்தை அமைத்து குறிப்பிட்ட முறையில் பந்து வீசி அதன்மூலம் மட்டையாளரை சிரமத்தில் ஆழ்த்தத் திட்டமிடுகிறார். ஆனால் பந்து வீசுபவர் எதிர்பாராத வகையில், வேறெந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஒன்றைச் செய்வதன் மூலம் எதிரணியின் திட்டங்களை உடைப்பது. கனேரியா வீசும் கை விக்கெட்டை விலகி வர (ரவுண்ட் தி விக்கெட்) லெக் ஸ்டம்புக்கு வெளியே லெக் ஸ்பின்னர்களை வீசுகிறார். ரன்களைத் தடுக்க கால் திசையில் நிறைய தடுப்பாளர்கள் வேறு. இந்தப் பந்துகளை விளையாடி ரன்கள் பெறுவது கஷ்டம். முடிந்தவரை கால்களில் வாங்கிக்கொள்வதுதான் முடியும். ஆனால் சேவாக் கைகளை விதம் விதமாகத் திருப்பு பந்தைச் சந்தித்து தர்ட்மேன் வழியாகவெல்லாம் நேற்று ரன்களைப் பெற்றார்.

ஐந்தாவது: பொறுமை! என்ன? சேவாகிடம் பொறுமையா என்ற கேள்வியை எழுப்பலாம். கடந்த இரண்டு வருடங்களில், சேவாக் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சேவாக் குறைந்த அளவு கொண்டு, எழும்பி வரும் பந்தைச் சரியாக விளையாடுவதில்லை என்பது எதிரணி வீரர்களுக்குத் தெரிந்துள்ளது. அதனால் மொஹம்மத் சாமி, அப்துல் ரஸாக் வீசிய அதுபோன்ற பந்துகளை எதிர்கொள்ளும்போது முடிந்தவரை விலகியே சென்றார். அதை ஹூக், புல் செய்ய முயற்சி செய்யவில்லை. சில முறை உடலில் அடிவாங்கினார். சிலமுறை எதிரணி வீரர்கள் அவரைத் தூண்டிவிட அருகில் வந்து சதா பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருப்பதை முற்றிலுமாக அசட்டை செய்தார். தன் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

ஆக முற்றிலுமாக ஒரு முழுமையான மட்டையாளராகப் பரிணமித்துள்ளார் சேவாக்.

நேற்று தனது 34வது டெஸ்டில், 55வது இன்னிங்ஸில் 3,000 ரன்களைத் தாண்டினார் சேவாக். இதுதான் இந்தியாவுக்காக அதிவேகமாக ஒருவர் 3,000 ரன்கள் எடுத்துள்ளது. டெண்டுல்கரை விட வேகமாக. காவஸ்கரை விட வேகமாக. திராவிடை விட வேகமாக. குண்டப்பா விஷ்வனாத்தை விட வேகமாக.

உலக அரங்கில் சேவாகை விட வேகமாக இந்தச் சாதனையைச் செய்தது யாரெல்லாம் தெரியுமா? டொனால்ட் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), எவெர்டன் வீக்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஹெர்பெர்ட் சட்கிளிஃப் (இங்கிலாந்து), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), நீல் ஹார்வே (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்). சேவாகுக்கு அடுத்த நிலையில் இருப்பது யார் தெரியுமா? கேரி ஸோபெர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)!

ஆக உலகின் மிக முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சேவாக்; இந்தியாவின் டெண்டுல்கரை விடவும் பல அதிக சிறப்புகளைத் தன் குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்தவர் சேவாக் என்பது தெளிவாகிறது.

இனியும் சேவாகை, டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்!

சரி, இனி நேற்றைய ஆட்டத்துக்கு வருவோம். முதல் நான்கு விக்கெட்டுகள் மோசமான முறையில், தேவையற்ற வகையில் விழுந்தன. கவுதம் கம்பீர் கேட்ச் பிராக்டீஸ் கொடுப்பது போல மொஹம்மத் சாமி பந்துவீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் இருக்கும் யூனுஸ் கான் கையில் கேட்ச் கொடுத்தார். கம்பீர் 24, இந்தியா 98/1. அடுத்து திராவிட் - மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் - கனேரியாவின் பந்தில் முன்னதாகவே முடிவு செய்து ஸ்வீப் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். திராவிட் 22, இந்தியா 172/2. டெண்டுல்கர், இம்முறை மிகவும் நன்றாகவே ஆரம்பித்தார். அர்ஷத் கானை பலமுறை ஸ்வீப் செய்து ரன்கள் பெற்றார். ஆனால் ஆஃப்ரீதி பந்தை கட் செய்யப்போய், கல்லியில் யூனுஸ் கான் கையில் எளிதான கேட்சைக் கொடுத்தார். 35வது சதத்துக்காக நாம் இன்னமும் காத்திருக்க வேண்டும். டெண்டுல்கர் 41, இந்தியா 257/3. அடுத்து கங்குலிக்கு பதில் லக்ஷ்மண் வந்தார். சேவாக் தன் இரட்டை சதத்தைத் தொட்ட விதமே சற்று மோசமாக இருந்தது. சதத்தைத் தாண்டும்போது மிகவும் அருமையாக ஒரு நான்கு, பின் ஒரு வேகமான ஒன்று என்று வந்தார். 150ஐத் தொடுவது கனேரியா பந்துவீச்சில் ஒரு சிக்ஸாக இருந்தது. ஆனால் 200ஐத் தாண்ட பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார். நல்லவேளையாக அங்கு யாரும் இல்லை கேட்ச் பிடிக்க. ஆனால் அதே ஓவரில் பந்தை சரியாக, நெருங்கி அணுகாமல் நின்ற இடத்திலிருந்தே மெதுவாகத் தட்டிவிட, கனேரியாவிடமே கேட்ச் ஆனது. சேவாக் 201, இந்தியா 337/4.

அடுத்து கங்குலி மிக மோசமான முறையில் அவுட்டானார். முதலில் நெருங்கிய எல்.பி.டபிள்யூ அப்பீல். அடுத்த பந்தில் இறங்கி அடிக்க முயற்சி செய்து கனேரியாவின் கூக்ளியில் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். கங்குலி 1, இந்தியா 343/5. கார்த்திக், லக்ஷ்மண் ஜோடி சேர்ந்து இந்தியாவை ஃபாலோ-ஆன் நிலையிலிருந்து காத்தனர். ஆனால் சாமியின் பந்தை கட் செய்து கார்த்திக் கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்தார். கார்த்திக் 10, இந்தியா 374/6. நாளின் இறுதியில் இந்தியா 379/6 என்ற நிலையில் இருந்தது.

நிச்சயமாக இப்பொழுது பாகிஸ்தானே முன்னிலையில் உள்ளது. ஆனால் இப்பொழுதும் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது. நான்காம் நாள் காலையில் உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியா 100 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தால், அடுத்த இரண்டு வேளைகளில் - நான்கு மணிநேரங்களில், 60 ஓவர்களில் - பாகிஸ்தானை 180க்குள் ஆல் அவுட் ஆக்க வேண்டும். அப்படியானால் ஐந்தாம் நாள் இந்தியாவுக்கு 270 ரன்கள் வரை எடுக்க வேண்டியிருக்கும். அது முடியக்கூடிய காரியமே.

பார்க்கலாம் நான்காம் நாள் என்ன நடக்கிறதென்று.

2 comments:

  1. நல்ல தலைப்பு.

    ReplyDelete
  2. I feel that sewag will end his career with best ever averages among all indian batesmen ( Past and Present )

    Reason :

    1) He always make BIG hundreds

    2) And he make them frequently

    ReplyDelete