Tuesday, May 03, 2005

மேரியும் மாரியும்

ஞாயிறு (1 மே 2005) அன்று நாகபட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தேர் + செடில் திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். அதற்கு முதல்நாள் வேளாங்கண்ணி கிறித்துவத் தேவாலயம் சென்றோம்.

தேவாலயத்தைச் சுற்றி ட்சுனாமியின் தாக்கம் எங்கும் கண்ணுக்குத் தென்படவில்லை. ஆலயம் தூய்மையாக, வெண்மையாக, அழுக்கு எதையும் காணமுடியாததாக உள்ளது.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம்

ஆலயத்தினுள் ஒளிப்படங்கள் எடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கையை சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். உடனடியாகக் கையில் இருந்த விடியோ கேமராவை மூடிவைத்தேன். செல்பேசிகள் ஒலிக்காமலும், கூட்டமாக வருபவர்கள் சத்தமாகப் பேசாமலும் இருக்க பணியாளர்கள் சுற்றி வந்து எச்சரிக்கை செய்கிறார்கள்.

தேவாலயங்களில் செருப்பு அணிந்து செல்வதற்குத் தடையில்லை. ஆனாலும் இந்தியப் பாரம்பர்யத்தில் வரும் பலரும் செருப்புகளை வாசலிலேயே கழற்றிவிட்டுத்தான் செல்கிறார்கள். இந்தியா முழுதிலிருந்தும் மக்கள் கூட்டம் வேளாங்கண்ணிக்கு வருகிறது. வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேளங்கண்ணிக்கு வருபவர்கள் அங்கு வசிக்கும் மக்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

நாகையை ஒட்டியுள்ள கடற்கரைக் கிராமமான வேளாங்கண்ணியில் சுமார் 5,000 பேர்தான் வசிப்பார்கள். அதில் எத்தனை பேர் ட்சுனாமியின்போது மாண்டனர் என்று தெரியவில்லை. இறந்தவர்களில் பெருமளவு வெளியார்தான்.

இந்து ஆலயங்கள் பலவுக்கும் இருப்பது போல இந்தக் கிறித்துவத் தேவாலயம் தோன்றியதற்கென சில கதைகள் உள்ளன. மேரி பால்காரனுக்குக் காட்சியளித்ததும், மோர் விற்கும் முடவனிடமிருந்து மோர் வாங்கிக் குடித்ததும், போர்ச்சுகீசியக் கப்பல் ஒன்றினைக் கடும் மழை, புயலிலிருந்து காத்ததும் ஐதீகங்கள். முன்னிரண்டும் "இங்குதான் நடந்தது" என்று போர்டு அடித்து மாட்டி, குட்டிக் கட்டடங்கள் காணப்படுகின்றன.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா (Our Lady of Health) ஆலயம் 1700களில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இப்பொழுதுள்ள ஆலயக் கட்டடம் 1800களிலும், அதன் விரிவாக்கங்கள் 1900களிலும்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

கத்தோலிக்க நம்பிக்கையில் வேரூன்றிய, இந்திய மதங்களிலிருந்து பெரிதும் வேறுபடாத, அற்புதங்கள் சார்ந்த ஆலயம் இது. இங்கு வருபவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமல்லாது தம் நிகழ்கால வாழ்க்கையின் உடனடித் தேவைகளை ஆரோக்கியமாதா பூர்த்தி செய்வாள் என்று பரிபூரணமாக நம்புகிறார்கள். இறக்கும் தருவாயில் உள்ளவர்களைப் பிழைக்க வைப்பது, உடல் உபாதைகளை நிவர்த்தி செய்வது, பேய்/கெட்ட ஆவிகளைப் போக்கடிப்பது என்று பல விருப்பங்கள். மந்திரித்த எண்ணெய் புட்டிகளில் விற்கப்படுகிறது. மந்திரித்த சிறு/பெரு தாய்+குழவுச் சிலைகள் விற்கப்படுகின்றன. பூமாலைகள், அர்ச்சனைத் தட்டுகள், மெழுகுவர்த்திகள் என்று காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பூமாலைகளை வாங்கி மேரியின் மீது சார்த்தி, மீண்டும் பக்தர்களிடம் கொடுக்கிறார் பாதிரியார்! இந்துக் கோயில்களில் எண்ணெய் விளக்கேற்றி வைப்பது போல் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவென்று ஓரிடம். புனித நீர் கையில் வழங்கப்படுவதும் உண்டு.

தங்கத்தாலும் வெள்ளியாலும் காணிக்கைகள் செலுத்தவென்று தனி இடம் உள்ளது. பக்தர்கள் தங்கள் உடலின் உபாதைகள் உள்ள இடத்தினை வெள்ளியாலோ, தங்கத்தாலோ தகடாகச் செய்து (கண், காது, கை, கால்) காணிக்கையாகக் கொடுக்கலாம்.

மொட்டை அடிப்பதற்கும் காது குத்துவதற்கும் என்று அதிகாரபூர்வமாக ஓரிடம் தேவாலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டைத்தலையுடன் கடலில் மூழ்கி எழுந்து தலைமுழுதும் தடவிய சந்தனத்துடன் பல சிறுவர் சிறுமிகளை இங்கு காணமுடியும்.

தேவாலயத்திலிருந்து கடலுக்குச் செல்லும் பாதையில் இருமருங்கிலும் கடைகள். சினிமா பாடல்களின் ட்யூனில் இயேசு, மாதா பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் முதல் மாதா (கையில் குழந்தை இயேசுவுடன்) இலச்சினையுள்ள சாவிக்கொத்து, ஸ்டிக்கர் பொட்டுகள், பலூன்கள், ஊதுகுழல்கள், குட்டிக்குட்டி பொம்மைகள், மெழுகுவர்த்திகள் என அனைத்தையும் விற்கும் கடைகள். நடுநடுவே மொட்டை அடிக்கவென சில கடைகள். ஆங்காங்கே சைக்கிளில் நின்று இளநீர் விற்கும் ஆள்கள். ட்சுனாமி அழிவினைக் காண்பிக்கும் சிடி ஒன்றும் விற்பனைக்கு உள்ளது.

தேவாலயமே நடத்தும் ஓர் உணவுவிடுதி உள்ளது (குத்தகைக்கு விட்டிருப்பார்கள்.) தேவாலயம் யாத்ரீகர்களுக்கென தங்கும் விடுதி ஒன்றும் நடத்துகிறது. தனியார் விடுதிகள் பலவும் உண்டு. ஒரு மூன்று நட்சத்திரத் தங்கும் விடுதியும் கண்ணில் பட்டது. தேவாலயத்தை ஒட்டி பேருந்து நிறுத்துமிடம். நாகபட்டினத்திலிருந்து ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் பயணச்சீட்டைப் பதிவு செய்யுமிடம்.

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆரோக்கியமாதாவுக்குக் காணிக்கையாக வந்திருப்பனவற்றைக் காட்சிச்சாலையில் வைத்துள்ளார்கள். பலவகையான தாலிகள் (தாலி பாக்கியம் வேண்டி, காணிக்கையாகக் கொடுக்கப்பட்டிருப்பவை), தங்கம், வெள்ளியில் உடலுறுப்புகள், ஆடுகள், மாடுகள், பக்தர்கள் எழுதிய கடிதங்கள் என்று பலவும் காட்சிப்பொருளாக உள்ளது. நான் அங்கு நின்றுகொண்டிருக்கும்போது வெளியே வருபவர்கள் சிலருக்கு துண்டுக்காகிதம் ஒன்றைக் கொடுத்தார் ஓர் ஊழியர். அவர்கள் அதை வாங்கமறுத்து "நாங்கள் இந்துக்கள்!" என்றனர். "அதனால் என்ன, எல்லா ஆறுகளும் கடலை நோக்கிப் போவதுபோல எல்லா மதங்களும் அந்தப் பரம்பொருளைக் கண்டறியத்தானே உதவி செய்கின்றன" என்று பதில் சொன்னார் அந்த ஊழியர். வேளாங்கண்ணிக்கு வருபவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கிறித்தவர்கள் அல்லாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஜெபமாலை அணிந்துகொண்டு தோளில் காணிக்கையைச் சுமந்துகொண்டு கால்நடையாகவே ஆலயத்துக்கு வருபவர்கள் அதிகமாகி விட்டனராம். இந்தப் பழக்கம் எப்பொழுது தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி வருபவர்கள் நேர்ந்துகொண்டு அணிந்திருக்கும் ஜெபமாலையைக் கழற்றவென்று தனியாக ஓரிடம் உள்ளது.

ஆலயத்தின் உள்ளே வருபவர்களை யாரும் தொந்தரவு செய்வதில்லை. வெளியே சிலர் ஜெபமாலை, ஸ்டிக்கர் ஆகியவற்றை வாங்கச் சொல்லியும், அர்ச்சனைப் பொருள்களை வாங்கச் சொல்லியும் பின்தொடர்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் மாதத்தில் மாபெரும் விழா ஒன்று வேளாங்கண்ணியில் நடக்கும். அப்பொழுது லட்சக்கணக்கானோர் இங்கு வருவார்கள். மாவட்ட நிர்வாகம் இதற்கென தனியாக பேருந்துகளையும், ரயில்களையும் ஓட்டும்.

வேளாங்கண்ணி ஆலயத்துக்கென ஓர் இணையத்தளம் உள்ளது: http://www.vailankannichurch.org/

-*-

இந்தப்பகுதியில் நெல்லுக்கடை மாரியம்மனும் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம். புராதனத் தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வங்களான மாரியம்மன், எல்லையம்மன், கார்த்தவீரியன் ஆகியோர்கள் அடங்கிய கோயில் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். கார்த்தவீரியன் வெளியே வருவது ஏப்ரல்/மே மாத செடில் விழாவுக்காகத்தான்.

மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழா பற்றி எழுதும்போது, செடில் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் ஒருவருக்கும் அதுபற்றித் தெரியவில்லை, இந்த விழாவைப் பற்றிக் கேட்டிருக்கவில்லை, இது தமிழ்நாட்டின் பிறவிடங்களில் இருப்பதில்லை என்று தோன்றியது. இந்த விழாவைப் ஆவணப்படுத்த எண்ணி கையில் சாதா கேமரா, விடியோ கேமரா சகிதம் போய்ச்சேர்ந்தேன்.

இந்தப் பதிவு மிகவும் பெரிதாகிவிட்டதால் அடுத்த பதிவுகளில் மாரியம்மன் திருவிழா பற்றி எழுதுகிறேன்.

4 comments:

  1. Sedil Vizhavai patri aria avaludan ullen

    ReplyDelete
  2. ஓஹோ இது தான் விஷயமா, என்னடா கொஞ்ச நாளா சத்தத்தையே காணோமேன்னு யோசிக்கிட்டு இருந்தேன். ஆக ஒரு பெரிய ரவுண்டு அடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். எழுதுங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. பத்ரி சரியான தொடர்கதை உத்தி கையாண்டுள்ளீர்கள் :-) செடில் எப்போ ? அடுத்த வாரமா?

    அதுசரி ; வேளாங்கண்ணி (அம்மன்??) கோவில் படங்களும் இன்னும் நிறைய போடுங்களேன்.

    ReplyDelete
  4. Excellent..

    Canteen which is opposite to
    vailanganni shrine is run by
    shrine management, not leased
    to third party.

    The person who takes care of
    garland is not Priest, he is
    altar boy.

    2000 people died in tsunami
    most of them are pilgrims

    ReplyDelete