Wednesday, September 14, 2005

ராஜபக்ஷேயின் ஒப்பந்தங்கள்

இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் SLFP கட்சியின் சார்பில் நிற்க இருக்கும் வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான மஹிந்தா ராஜபக்ஷே, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஒரு செய்தி வெளியானது. இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட முறையில் ராஜபக்ஷேயுடன் ஜே.வி.பி கட்சி செய்துகொண்டது என்று அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்குப் பிறகு SLFP கட்சித் தலைவரும் தற்போதைய குடியரசுத் தலைவருமான சந்திரிகா குமரதுங்க, ராஜபக்ஷேயின் ஒப்பந்தத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். அவரது சகோதரர் அணுர பண்டாரநாயகவும் - கதிர்காமர் மரணத்துக்குப் பின்னான வெளியுறவுத்துறை அமைச்சரும், SLFPயின் அடுத்த பிரதமர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் - இந்த ஒப்பந்தத்தை விமரிசித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக இரண்டு ஷரத்துகள் பற்றி பிரச்னை எழுந்துள்ளது. ஒன்று, சுனாமிக்குப் பிறகான மறுசீரமைப்புக் குழுவில் விடுதலைப் புலிகளும் ஈடுபடுமாறு உருவாக்கிய P-TOMS எனப்படும் குழுவை ஒழித்துக்கட்டுவது. ஜே.வி.பி இந்தக் குழு மீண்டும் கொண்டுவரப்படக்கூடாது என்று விரும்புகிறது. ஜே.வி.பி தொடுத்த வழக்கால்தான் இந்தக் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தால் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, இலங்கையின் அரசியலமைப்பில் சமஷ்டி அரசுமுறை (federalism) கொண்டுவரப்படாமல், இப்பொழுது இருக்கும் unitary அமைப்பு முறை - அதாவது வலுவான, சர்வாதிகாரம் படைத்த மைய அரசு, ஒப்புக்குச் சப்பாணிகளான பிராந்திய அரசுகள் - பாதுகாக்கப்படவேண்டும் என்பது. அதாவது சிறுபான்மை இனக்குழுக்கள் நசுக்கப்படவேண்டும்.

ஜே.வி.பி ஓர் இடதுசாரி அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது சமீபத்திய இயங்குமுறையைக் கவனித்தால் ஒரு மோசமான மதரீதியிலான வலதுசாரி எதிர்வினை அமைப்பைப் போலத்தான் காட்சியளிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து, ராஜபக்ஷே சிங்கள வலதுசாரி புத்தபிட்சுக்களின் கட்சியான ஜாதிக ஹேல உருமயாவுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்னமும் கடுமையான சில ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.

அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும்போது "வழமையான எல்லைகள் மதிக்கப்படாது", "எந்த ஒரு குழுவுக்கும் சுய-நிர்ணய உரிமை வழங்கப்படாது", போன்ற சில கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன என்று 'தி ஹிந்து' தெரிவிக்கிறது.

இதை ராஜபக்ஷே ஏற்றுக்கொண்டதே அமைதி ஒப்பந்தத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியது.

சந்திரிகா, அணுர இருவருமே இன்று சக்தியற்றவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மாறியுள்ளனர்.

ராஜபக்ஷேயின் வெற்றி உறுதியாகவில்லை என்றாலும்கூட, விக்ரமசிங்கே குடியரசுத் தலைவர் ஆகவும் வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட, ஒரு கட்சியினால் மட்டும் அமைதியை முன்னெடுத்துச் செல்லமுடியாது. சிங்களப் பெரும்பான்மை அரசியல் கட்சிகளிடையே விடுதலைப் புலிகளுடனான உறவு குறித்த ஒருமித்த கருத்து இல்லாத பட்சத்தில் அமைதி வருவது சாத்தியமில்லை.

எனவே விடுதலைப்புலிகள் இந்நிலையில் செய்யக்கூடியது ஒன்றுதான். தன்னிச்சையாக தமிழர் பகுதிகள் விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்து உலக நாடுகளிடையே அங்கீகாரம் பெற உழைக்க வேண்டும். இதையும் உடனடியாக, இலங்கை அதிபர் தேர்தல் நடக்கும் முன்னதாகவே செய்துவிட வேண்டும். இந்த அறிவிப்பின் அவசரம் என்ன என்பதை விடுதலைப் புலிகள் உலகுக்கு விளக்க இது வழிவகை செய்யும். உலக நாடுகள் பலவும் ராஜபக்ஷேயின் ஒப்பந்தங்கள் தமிழர்களின் விருப்பத்துக்கு முற்றிலும் எதிரானது, தமிழர்களின் இத்தனை வருடத்தைய போராட்டங்களை அவமதிப்பது போலாகும் என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

10 comments:

  1. பத்ரி,
    இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? ஷரத்துகளை பார்த்தேன். மோசமானவை என்பதில் வேறு கருத்து கிடையாது. ரணில் விக்கிரமசிங்கே வரும் பட்சத்தில் இதனால் அதிகம் பாதிப்பிருக்காதல்லவா? இலங்கை அரசியல் முழுவதும் தெரியாதெனினும் ரணில் அமைதியான தீர்வுக்கு முயற்சி செய்கிறார்/செய்வார் என்று தோண்றுகிறது. அதேபோல் இதை செய்து பின் ரணில் அதிபரானால் எதிர்ப்புகள் ஈழத்தவர் மீது திரும்பி நிலையை இன்னும் மோசமாக்கிவிடுமே. மற்றொரு கோணத்தில் இந்நிகழ்வு பெரும்பாண்மை சிங்களவரை ஒண்றாக்கி ராஜபக்ஷே வெற்றிக்கு வழி வகுக்குமோ?. இலங்கை அரசியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
    இந்த பதிவை படிக்கும் வரை ராஜபக்ஷே வந்தால் மீண்டும் சண்டை உண்டாகும். அதுவும் அவர்களே ஆரம்பிப்பார்கள். பின்பு புலிகள் நீங்கள் சொன்னதையே செய்வார்கள். அதுசமயம் வெளிநாடுகளின் ஆதரவு புலிகட்கு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் சொல்லும் அளவு அவசரம் என்று நான் நினைக்கவில்லை. அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்பே இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
    [இலங்கை அரசியல் செய்திகளாக மட்டும் தெரியும். கொஞ்சம் விளக்கமாகவும் தெரிந்துகொள்ள ஆவலோடிருக்கிறேன்]

    ReplyDelete
  2. ரணில் தலைமையிலான அரசும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய சில மாதங்கள் கழித்து விடுதலைப் புலிகள் ISGA - Interim Self Governing Authority எனப்படும் இடைக்கால சுயாட்சி அமைப்புக்கான சில திட்டங்களை முன்வைத்தனர்.

    அந்தத் திட்டங்கள் பிரிவினைக்கு அடிகோலுபவை என்றே சிங்களப் பெரும்பான்மையினர் நினைத்தனர். அதனாலும், வேறு சில காரணங்களாலும் அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அதன்பின் ரணில் போய் ராஜபக்ஷே வந்தார். சுனாமி வந்தது. P-TOMS ஏற்படுத்தப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்டது.

    இப்பொழுது ISGAவுக்கு மறுகோடிக்கு இட்டுச் செல்கிறார் ராஜபக்ஷே.

    இது சிங்களத் தீவிரவாத நிலைப்பாடு. அதுவும் சிறிதும் விட்டுக்கொடுக்காத ஒரு நிலைப்பாடு. இதை யாரும் வன்மையாகக் கண்டிக்காத நிலையில் ஜே.வி.பியைத் தொடர்ந்து ஜே.ஹெச்.யு கட்சியுடன் ராஜபக்ஷே ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பது தமிழர்களின் நலனுக்கு மிகவும் கெடுதல்.

    உலக நாடுகள் முக்கியமாக இந்தியா இதுபற்றி எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நார்வே கூட வாயைத் திறக்கவில்லை.

    உடனடியாக உலக நாடுகளின் கவனத்தை இந்தப் பிரச்னையை நோக்கித் திசைதிருப்ப வேண்டுமானால், விடுதலைப் புலிகளுக்கு Unilateral Proclamation of Independence ஐத் தவிர வேறு வழியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

    ராஜபக்ஷே அதிபரானால் சண்டை நடக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் அமைதியை நோக்கிப் போகமுடியாது என்பது திட்டவட்டம்.

    ReplyDelete
  3. இதற்கிடையில் ராஜபக்ஷெக்கு அநுர ஆதரவு (அதிபர் தேர்தலுக்கு) தரமாட்டேன் என்று சொல்கிறார். சந்திரிகா ராஜபக்ஷெயை விமர்சிக்கும் அதே நேரத்தில் அவருக்கே ஓட்டுப் போடுங்கள் என்கிறார். சூதும் குழப்பமுமாய்த் தெரிகிறன.

    ReplyDelete
  4. ஜேவிபி, ஜாதிக ஹெல உருமையா இவைகளின் தீர்மானங்களும், ராஜ பக்க்ஷேயின் உடன்பாடுகளும் நல்ல மாற்றங்களாகத் தெரிகின்றன. தெற்கிலங்கை அரசியற் கட்சிகளின் ஈழ/ தமிழர்களின் தன்னுரிமை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளை வெளியிடச்சொல்லி புலிகள் நீண்டகாலமாக் கூறிவருகிறார்கள். ஆனால் பிரதான தெற்கிலங்கை அரசியல் கட்சிகள் இரண்டும் தங்களது சிங்கள் தேசியவாதப் போக்குகளை பெரும்பாலும் மறைத்தும், வெளிப்படாதவாறும் போக்கு காட்டி வந்தவேளையிலேயே தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகளாக (ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே) சமஸ்ட்டி முறையையோ, அல்லது மற்ற அதிகாரப்பகிர்வு முறைகளையோ நேர்மையாக முன்னெடுக்கவும், தேசத்தின் மிகப்பெரிய பிரச்சனை குறித்து, தங்கள் தொண்டர்களை, மக்களை தயார்ப்படுத்தவும் எதுவும் செய்யவில்லை. P-TOMS குழுவை ஏற்படுத்துவதில் கூட அவைகள் நேர்மையான முனைப்பை நல்கவில்லை. இனமுரன்பாட்டையும், பெரும்பான்மைவாத தேசியவாதத்தையும் இந்தக்கட்சிகள் மிகவும் திறமையாகவே தங்கள் கோசங்களுக்குள்ளும், அறிவிப்புகளுக்குள்ளும், நாடகங்களுக்குள்ளும் மறைத்தே வந்தன. இதற்கிடையிலே புலிகளை இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தி தமிழர்களை கட்டுப்படுத்த எண்ணி எடுத்த முயற்சிகளோடு ஒப்பிட்டால் அரசியல் ரீதியாக இந்தக் கட்சிகள் இனப்பிரச்சனையைத் தீர்க்க எதையுமே செய்யவில்லை எனலாம். இவ்வாறு ஒரு போலித்தனமான மென்போக்கை அக்கட்சிகள் கடைப்பிடித்தற்கு இந்திய (அரசு, அரசு சாராத புள்ளிகளின்) வழிகாட்டுதல்களும் முக்கியமானவை. ஏனெனில் பச்சையான வெளிப்படுத்தப்பட்ட இனவாதம் புலிகளை நியாயப்படுத்திவிடும் என்று அஞ்சியதில் வியப்பில்லை. இந்நிலையில் இடதுசாரி முகமூடி அணிந்த ஜேவிபி வளர்ச்சியடைய இன்னொரு போலித்தனமான மென்போக்கை கடைப்பிடிக்க முடியாது. அதே போல புத்தமதப்போர்வையில் இருக்கும் கட்சியும் வெகுநாளைக்கு காத்திருக்க முடியாது. அவர்கள் புலிகளை இராணுவரீதியாக அரசுகள் முறியடித்துவிடும் என்று இத்தனை காலம் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அது பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் பிக்குகளே கூட களத்துக்கு துப்பாக்கியோடு விரைவதான நாடகமெல்லாம் ஆடமுடியாது. முன்னரங்கத்துக்கு இனவாத அரசியல் வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இந்நிலையில் ரணில் இன்னும் சிலகாலம் மென்போக்கு போக்கு காட்டும் அரசியலை கைகொள்ளலாம்; அதுவும் வெகுநாட்களுக்கு நீடிக்கமுடியாது. ஏனெனில் நிலவும் இச்சுழலில் சற்றே நியாயமான சமிக்கைகளை அவர் காட்டினாலும் அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இந்நிலையில் ராஜபக்ஷே செய்திருப்பது சரியானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் ஆகும். இப்படி இனவாதம் கூர்மை அடைவதைக்கண்டு வருந்தும் ஒரு தரப்பு இருக்கிறதென்றால் அது இந்தியாவில் இருக்கும் சிலர்தான்; ஆனால் அது தமிழர்களின் மேலுள்ள அக்கறையினால் அல்ல(... It is easy to blame the recent developments on an underlying streak of Sinhala majoritarianism, but that does not capture the essence of the situation. True, Sinhala-Buddhist chauvinism, with an extremist fringe, continues to afflict Sri Lanka...Ref. http://www.hindu.com/2005/09/13/stories/2005091302851000.htm)

    இந்நிலையில் ரணிலும் தனது வேசத்தை கலைக்கும் வரை காத்திருப்பதும் நல்லதாகவே தோன்றுகிறது. ஏனெனில் உண்மையில் தெற்கிலங்கை அரசுகள் தமிழர்களுக்கு தருவதற்கு ஒன்றுமில்லை என்பது முற்றாக நிரூபணம் ஆகவேண்டியுள்ளது.

    ReplyDelete
  5. இந்நிகழ்வுகளை பற்றிய தினமணியின் (Wednesday September 14 2005 )தலையங்கம் (http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20050913123810&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0)

    ReplyDelete
  6. ஜாதிக ஹெல உருமையாவின் 12 தீர்மானங்கள். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15859
    முக்கியமான ஒன்று எந்த தேசிய இனத்துக்கும் சொந்தமானதாக இலங்கைக்குள் தாயகப்பிரதேசங்களை ஒழித்து புதிய மாவட்ட, மாநில எல்லைகளை நிர்ணயித்தல். இதை அரசு உதவியுடன் தமிழர்களை வெளியேற்றுதல், பாரிய குடியேற்றங்களைச் செய்தல், புத்தர் சிலைகள், விகாரைகளை உயர்பாதுகாப்பு வலையங்களில் நிறுவுதல், ஊர்களின் பெயர்களை சிங்களத்துக்கு மாற்றுதல் போன்றவற்றின் மூலம் மறைமுகமாக
    செய்யப்பட்டவைதான்,. இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன.இந்தத் தீர்மானங்களில் இந்தியத்தரப்புக்கு 10 வது ஷரத்தைத் தவிர ஒவ்வாத வேறு ஒரு ஷரத்தும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    ஆனால் ரணிலைவிட ராஜபக்ஷவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக நான் நினைக்கிறேன். இல்லாவிட்டாற்கூட கடுமையான போட்டி இருக்கும்.
    ராஜபக்ஷ கண்முன் தெரியும் நேரடியான எதிரி. ஆனால் ரணில் அழகான நல்ல பாம்பு. அவ்வளவு தான்.

    இம்முறை மாவீரர் தினத்துக்கு முன்னர் தேர்தல் வருகிறது. மாவீரர் தின உரையில் நிறைய விடயங்கள் எதிர்பார்க்கலாம்.
    இப்போதிருக்கும் பிரச்சினை எப்படி இந்தப் பொறியிலிருந்து வெளியேறுவது என்பது தான்.

    ReplyDelete
  8. இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? ஷரத்துகளை பார்த்தேன். மோசமானவை என்பதில் வேறு கருத்து கிடையாது. ரணில் விக்கிரமசிங்கே வரும் பட்சத்தில் இதனால் அதிகம் பாதிப்பிருக்காதல்லவா? இலங்கை அரசியல் முழுவதும் தெரியாதெனினும் ரணில் அமைதியான தீர்வுக்கு முயற்சி செய்கிறார்/செய்வார் என்று தோண்றுகிறது. அதேபோல் இதை செய்து பின் ரணில் அதிபரானால் எதிர்ப்புகள் ஈழத்தவர் மீது திரும்பி நிலையை இன்னும் மோசமாக்கிவிடுமே. மற்றொரு கோணத்தில் இந்நிகழ்வு பெரும்பாண்மை சிங்களவரை ஒண்றாக்கி ராஜபக்ஷே வெற்றிக்கு வழி வகுக்குமோ?. இலங்கை அரசியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
    இந்த பதிவை படிக்கும் வரை ராஜபக்ஷே வந்தால் மீண்டும் சண்டை உண்டாகும். அதுவும் அவர்களே ஆரம்பிப்பார்கள். பின்பு புலிகள் நீங்கள் சொன்னதையே செய்வார்கள். அதுசமயம் வெளிநாடுகளின் ஆதரவு புலிகட்கு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் சொல்லும் அளவு அவசரம் என்று நான் நினைக்கவில்லை. அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்பே இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
    [இலங்கை அரசியல் செய்திகளாக மட்டும் தெரியும். கொஞ்சம் விளக்கமாகவும் தெரிந்துகொள்ள ஆவலோடிருக்கிறேன்]

    ReplyDelete
  9. Badri, Sundaravadivel, thangamani, Vasanthan thanks for your reply.

    Edwin ?? i didnt understand.

    ReplyDelete
  10. நல்ல பதிவு. இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாகப் படுகிறது.

    சிங்கள அரசியல் கட்சிகளின் மீள முடியாத இனவாத அரசியலையும், ஏமாற்று ஜனநாயகத்தையும், இதைப் பற்றி அறிந்தும் அறியாதது போல் தன்னலத்தை மட்டுமே கருத்தில் கொண்ட இந்திய அரசின் நாடகமும் உலக அரங்கத்துக்குத் தெரியப் போகிறது.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete