Thursday, March 30, 2006

நிகர்நிலைகள் AICTEக்குக் கட்டுப்பட்டவை

இந்தச் செய்தி முற்றிலுமாக என் கண்ணிலிருந்து நழுவியுள்ளது. நேற்று தினகரனில் பார்த்தேன். இணையத்தில் தேடிப்பார்த்ததில் செய்தி வெள்ளியன்றே (25 மார்ச்) தி ஹிந்துவில் வந்திருந்தது.

பல பொதுநல வழக்குகள், ரிட் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி AP ஷா, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் AICTE கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவைதான் என்று கூறியுள்ளார். இதற்குச் சாதகமாக AICTE vs பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

இது தீர்ப்பல்ல; தலைமை நீதிபதியின் கருத்து மட்டுமே. ஆனாலும் இந்தக் கருத்தின் பலம் தீர்ப்பில் வரத்தான் செய்யும்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடர்ந்துள்ளது. இன்று எந்தச் செய்தித்தாளிலும் இதுபற்றிய தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை.

முந்தைய பதிவுகள்:
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்
நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை

Wednesday, March 29, 2006

தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு

உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தடைசெய்ய மறுத்ததனால் அண்ணா பல்கலைக்கழகம் தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வை நடத்தத் தீர்மானித்துள்ளது.

மே 13,14 தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். ஆனாலும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்குப் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடக்கும் என்பது தீர்மானமாகும் என்று தெரிகிறது. அதாவது நுழைவுத்தேர்வை எழுதிய பின்னரும் தேர்வு முடிவுகள் தேவையில்லை என்று ஆகலாம்!

முந்தைய பதிவுகள்:
நுழைவுத் தேர்வு வழக்கு
நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து

Tuesday, March 28, 2006

ஆயிரம் விளக்கு அஇஅதிமுக வேட்பாளர்

ஆயிரம் விளக்கு தொகுதிக்கான அஇஅதிமுக வேட்பாளராக ஆதி ராஜாராம் நிறுத்தப்பட்டுள்ளார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை வேட்பாளராக N.பாலகங்கா நிறுத்தப்பட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் பிளசெண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது நடுத்தெருவில் குதித்து ஆர்ப்பாட்டம் செய்து கார்களை, பஸ்களை உடைத்தவர்கள். கடுமையான ஆயுதங்களை வைத்துப் பொதுமக்கள்மீது தாக்குதல் செய்ததாக இவர்கள்மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. பின்னாளில் இந்த வழக்குகள் அஇஅதிமுக அரசால் இழுத்து மூடப்பட்டன.

நல்லவர்களுக்கு அஇஅதிமுக வாய்ப்பு கொடுக்காத வரையில் என் வாக்கு அவர்களுக்குக் கிடையாது.

Sunday, March 26, 2006

வாக்காளர் அடையாள அட்டை

இன்று காலை எங்கள் தொகுதிக்கு (ஆயிரம் விளக்கு) வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது தொடங்கியது. செவ்வாய் வரை செல்லும்.

ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் என்று நிர்ணயித்துள்ளார்கள். முதல் நாளே அடையாள அட்டை இல்லாத, ஆனால் பட்டியலில் பெயர் இருக்கும் வாக்காளர்களுக்கெல்லாம் ஏற்கெனவே நிரப்பிய ஒரு விண்ணப்பப் படிவத்தை வீடுவந்து கொடுக்கிறார்கள். அதில் கையெழுத்து இடுவது மட்டும்தான் நம் வேலை.

ஞாயிறு என்றதால் நல்ல கூட்டம். வரிசையில் நின்று நம் முறை வந்ததும் கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து அத்துடன் ஏதாவது ஒரு புகைப்படம் உள்ள (அல்லது அல்லாத) அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என்று ஏதும் இல்லாவிட்டால் வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் கேட்கிறார்கள். இதுவும் இல்லாவிட்டால்? தெரியவில்லை. ஆனால் பொதுவாக மிகக் குறைவானவர்களே ரேஷன் கார்டு இல்லாமல் வரிசையில் நின்றனர். அவர்களும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தனர். மிக மிகச் சிலரே எந்த அடையாளமும் இல்லாமல் அலுவலர்களுடன் சண்டைபோட்டனர்.

நம் விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்ததும், அந்தத் தகவல் ஒரு பதிவேட்டில் எழுதப்படுகிறது. நாம் கையெழுத்திடுகிறோம். நமக்கு ஒரு டோக்கன் கொடுக்கிறார்கள். அடுத்து ஒரு டிஜிட்டல் கேமராவால் நமது முகம் பிடிக்கப்படுகிறது. நமது தகவல்கள் (பெயர், முகவரி) ஏற்கெனவே கணினியில் உள்ளன. அதிகபட்சமாக ஆங்கில ஸ்பெல்லிங்கைச் சரி செய்யலாம். வேறெந்தத் தகவலையும் மாற்ற முடியாது.

புகைப்படங்கள் கணினியில் உள்ளிடப்பட்டதும், நான்கு நான்காக வாக்காளர் தகவல்கள், படத்துடன் லேசர் பிரிண்டர் மூலம் ஒரு தாளில் அச்சிடப்படுகிறது (கறுப்பு/வெள்ளைதான்). ஒவ்வொரு படத்தின்மேலும் பாதி இருக்குமாறு ஒருவர் தமிழக அரசின் கோபுர சீல் ஹாலோகிராமை ஒட்டுகிறார். அதிகாரி ஒருவரின் கையெழுத்து fascimile அச்சிடப்படுகிறது. துண்டு துண்டாக வெட்டப்பட்டவுடன், லாமினேட் செய்யப்படுகிறது. நான்கு அடையாள அட்டைகள் தயார்.

நமது டோக்கனைக் கொடுத்து நமது அடையாள அட்டையைச் சரிபார்த்து, அதைப் பெறுகிறோம். அதை நமக்குக் கொடுக்கும் முன்பாக நமது வாக்காளர் அடையாள எண்ணை பதிவேட்டில் நமது பெயருக்கு நேராகக் குறித்துக் கொள்கிறார் அலுவலர்.

அவ்வளவுதான்.

நம் எதிர்பார்ப்பைவிடச் சிறிது மெதுவாகவே வேலை நடக்கிறது என்றாலும் அதிகமாகக் குறை சொல்ல முடியாது.

அரசு அலுவலர்கள் தொழில்நுட்பத்தை நல்லபடியாக ஏற்றுக்கொண்டிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.

Friday, March 24, 2006

மைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி

இன்று என் பதிவில் பின்னூட்டம் செய்திருந்த ஒருவர் எனது வலைப்பதிவை பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டியில் நாமினேட் செய்திருப்பதாக எழுதியிருந்தார்.

ஏற்கெனவே ஒருமுறை indibloggies விருதுகள் சமயத்தில் சில தமிழ் வலைப்பதிவர்கள் என்மீதும் பிறர்மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இம்முறையும் பிறர் வாயில் விழுந்து புறப்படாமல் இருப்பதற்காக இந்தப் பதிவு.

பாஷா இந்தியா Indic Bloggers Awards தளம்

இங்குள்ள தகவலின்படி, யார் வேண்டுமானாலும் தனது வலைப்பதிவை விருதுக்குத் தாமே பதிய முடியும். அல்லது பிறரின் பதிவையும் சிபாரிசு செய்யலாம். ஒவ்வொருவரும் ஒரு துறைக்கு ஒரு பதிவைத்தான் நாமினேட் செய்யலாம். பதிவுகள் இந்திய மொழியில் மட்டுமே இருக்க முடியும். 5 மே 2006 வரையில் தளங்களை நாமினேட் செய்ய முடியும். தளம் பிப்ரவரி 2006க்கு முன் ஆரம்பித்திருக்கப்படவேண்டும்.

நாமினேட் செய்யப்பட்ட தளங்களை 6-12 மே 2006 சமயத்தில் பாஷா இந்தியா நீதிபதிகள் கணித்து மதிப்பெண்கள் போடுவார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறும் வலைப்பதிவுக்குப் பரிசுகள் கிடைக்கும்.

தமிழ் வலைப்பதிவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் போட்டியில் தங்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்

இரண்டு நாள்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஹிந்துத் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு திருமணம் ஒட்டவைக்க முடியாத அளவுக்கு உடைந்துவிட்டால் விவாகரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்பதுதான் அது. இப்பொழுது இருக்கும் ஹிந்துத் திருமணச் சட்டம் (1955)-ன்படி, கீழ்க்கண்ட காரணங்களுக்காக விவாகரத்து கோரலாம்.

கணவன், மனைவி இருவருள் ஒருவர்:

1. கள்ள உறவு வைத்திருந்தால் (adultery)
2. மற்றவரைத் துன்புறுத்தினால் (cruelty)
3. விட்டுவிட்டு ஓடிவிட்டால் (குறைந்தது இரண்டு வருடமாவது ஆகியிருக்கவேண்டும்!)
4. ஹிந்து மதத்தைவிட்டு மாறினால்
5. மனம் பேதலிக்கப்பட்டால்
6. தொழுநோயால் பீடிக்கப்பட்டால்
7. அடுத்தவரைப் பற்றும் பால்வினை நோயால் பீடிக்கப்பட்டால்
8. துறவு பூண்டால்
9. இறந்துவிட்டார் என்று கருதப்பட்டால்

பாதிக்கப்பட்ட மற்றவர் விவாகரத்து கோரலாம். மேலும்,

(10) நீதிமன்றத்தில் மனு செய்து ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் உரிமையை (judicial separation) பெற்றபின் ஒரு வருடமோ, அதற்கு மேலோ ஆகியும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால், விவாகரத்து கோரலாம்.

(11) இருவரும் தானாகவே பிரிந்து இருக்கும்போது ஒருவர் நீதிமன்றத்தில் மனு செய்து சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கலாம். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழப் பணிக்கும்போது (Restitution of Conjugal Rights) அதை மறுத்து, சேரவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து செய்யக் கோரலாம்.

இந்தக் காரணங்களுக்கு மேலாக, இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் - இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் - அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது.

உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.

ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இரு தரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்...)

====

இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதைப் பற்றி All-India Democratic Women's Association (AIDWA) கவலை தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தம் பெண்களுக்கும் நன்மை செய்யக்கூடியதே என்றாலும் ஆண்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படுத்துவார்கள் என்று AIDWA நினைக்கிறது. அதற்கென அவர்கள் சொல்லும் காரணமும் சரியானதே. AIDWA தலைவி சுபாஷினி அலி சொல்கிறார்:
Government should not take such a step in the absence of legislation on women's rights to marital property, child support and adequate maintenance. Given the status of deserted women and children, a law to get divorce on this ground would worsen their position. Indian women do not have the right to any of the assets in the matrimonial home even after years of marriage.
ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து. முதலில் விவாகரத்தின்போது சொத்துக்களைப் பிரிப்பது, குழந்தைகளுக்கான செலவை ஏற்பது, ஆணோ/பெண்ணோ - அவர்களுக்கான ஜீவனாம்சத்தைச் சரியாகக் கணக்கிடுவது, அதைக் கட்டாயமாகச் செலுத்த வகை செய்வது ஆகியவற்றுக்கான சட்டங்களை இயற்றியபின், அத்துடனே உச்சநீதிமன்றத்தின் யோசனையையும் நிறைவேற்றலாம்.


====

நான் சென்ற வாரம் எழுதியிருந்த பிரிட்டனில் ஷரியா - சரியா? பதிவுக்கு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எதிர்வினை செய்திருந்தார்.

ஏற்கெனவே நம் நாட்டில் பொது சிவில் சட்டங்கள் உள்ளன, யார் விரும்பினாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார் பிரபு. ஆனால் அதே சமயம் யார் விரும்பினாலும் அவரவர் மதத்துக்கென இருக்கும் தனிச்சட்டத்தையும் பின்பற்றலாம். அதுதான் என்னைப் பொருத்தவரை பிரச்னையே. ஹிந்துச் சட்டங்கள்தான் உயர்வு, முஸ்லிம் சட்டங்கள் தாழ்வு என்று நான் சொல்லவில்லை. இரண்டிலும் பல ஏற்கத் தகாத விஷயங்கள் உள்ளன. இரண்டிலும் பல நல்ல வழிகள் இருக்கின்றன. இவற்றைக் களைந்து ஒரே சட்டமாக, அனைவருக்கும் பொதுவாக இருக்கச் செய்வதில் யாருக்கு நஷ்டம் என்று பார்க்கவேண்டும்.

இது ஒருமைப்பாட்டு விஷயம் அல்ல. சட்டங்கள் நாம் வாழும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். தனித்தனியாக ஒவ்வொரு மதத்தினருக்கும் சட்டங்கள் என்றால் இந்தச் சட்டங்களில் ஒரேமாதிரியான திருத்தங்கள் ஏற்படுவதில்லை. சில மதத்துக்கான - முக்கியமாக சிறுபான்மை மதங்களுக்கான - சட்டங்கள் பின்தங்கிவிடுகின்றன. அதில் மாற்றங்களை ஏற்படுத்த அந்தந்த மதத்தின் முக்கியமான தலைவர்கள் விரும்புவதில்லை. Status quoதான் அவர்களுக்கு வசதி. எதிர்த்து நின்று போராட அந்தந்த மதங்களில் உள்ள பாதிக்கப்படுபவர்களுக்கு (பொதுவாக பெண்களுக்கு) போதிய சக்தி இல்லை.

ஆனால் பொதுவாக ஒரு சீரான சட்டம் இருந்தால் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்படும், மாற்றங்கள் தொடர்ந்து நிகழும். ஹிந்துச் சட்டங்களில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, முஸ்லிம் சட்டங்களில் எவ்வளவு மாற்றங்கள் இதுவரையில் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனித்துப் பார்த்தாலே இது தெரியவரும்.

மதக் கடமையையும் சட்டங்களையும் குழப்பிக்கொள்ளவேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர்க்கு விருப்பமான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம். (சர்ச்சிலோ, கோயிலிலோ, மசூதியிலோ, குருத்வாராவிலோ...) ஆனால் அந்தத் திருமணங்களும், தொடரும் விவாகரத்தும், சொத்துரிமையும் ஒரே சட்டத்தைப் பின்பற்றினால் அதன்மூலம் மக்களுக்கு நன்மை பிறக்கும் என்பது என் கருத்து. எனவே திருமணம் வெவ்வேறு முறைகளில் செய்யப்படக்கூடாது என்று நான் சொல்லவில்லை. திருமணத்தைப் பதிவு செய்வது ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

பிரபுவின் தீர்ப்பு: "தற்பொழுது நிலுவையிலுள்ள சட்ட முறைகளிலேயே அவ்வப்போது தேவையான மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்."

இது சரியாகப் படவில்லை எனக்கு. ஏகப்பட்ட சட்டத் திருத்தங்கள் தேவைப்படும். Uniformity இருக்காது. ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகள் என்ன என்பதைத் தனியாக விளக்கவேண்டும். ஒவ்வொரு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர ஒவ்வொரு சமுதாயத்திலும் பெரும்பான்மை ஒப்புதல் பெறவேண்டும். சில நேரங்களில் இது சாத்தியமில்லாமல் போகும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் பின்தங்கிவிட நேரிடும்.

"அதைப்பற்றிக் கவலைப்பட நீ யார்? அவரவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று சிலர் சொல்லலாம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் தலையிட பிறருக்கு உரிமை வேண்டியதில்லை. ஆனால் சமுதாயம், சட்டங்கள் என்று வரும்போது அனைவரும் ஒரேபோல முன்னேறிட உதவும் சட்டங்களை உருவாக்க பொதுக்கருத்து என்று ஒன்று வேண்டும். இதையெல்லாம் ஒவ்வொரு சமூகமும் தனக்குத் தானே முடிவு செய்துகொள்ளவேண்டும், பிறர் தலையிடக் கூடாது என்று சொல்வது சரியல்ல என்றே நினைக்கிறேன்.

ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமை கூடாது; இந்தியாவிலேயே தீண்டாமை கூடாது என்று சொல்ல முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்கும் முழு உரிமை உண்டு. அதற்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல பிற மதச் சட்டங்களிலோ, பிற சமுதாயங்களிலோ உள்ள பிரச்னைகளைப் பற்றிப் பேச, போராட மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.

Thursday, March 23, 2006

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்

* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணையலாம்; ஒரு கடிதம் கொடுத்தாலே போதும் என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன். ஆனால் இப்பொழுது நடக்கும் விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுக்கிறார்.

* S.T.கிருஷ்ணமூர்த்தி என்பவர், வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள 19 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து சில அடிப்படையான, கட்டாயமான தகவல்களைப் பெற அவர் முயற்சி செய்ததாகவும், அந்தத் தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் புகார் செய்துள்ளார்.

* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி. நெருக்கடி நிலையின்போதுகூட இம்மாதிரி இருந்ததில்லை என்கிறார்.

* Students Federation of India, All India Students Federation போன்ற மாணவர் சங்கங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஆதரித்து திருவான்மியூரில் போராட்டம் நடத்தின. சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மாணவர்களை மிரட்டியதாகவும் அதனால் அவரைக் கைது செய்யவேண்டும் என்றும் கோருகின்றனர்.

முந்தைய பதிவு: நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை

Wednesday, March 22, 2006

நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை

நேற்று சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்பொழுது (யார் காரணமோ...) கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு குடிசைக்குத் தீவைக்கப்பட்டது.

நேற்று தொலைக்காட்சியில் பல மாணவர்கள் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, அடையாளம் தெரியாமல் பொங்கிக் கொட்டினர்.

தி ஹிந்து செய்தி, தினமணி செய்தி

கம்யூனிஸ்ட் கட்சி சார்பு இந்திய மாணவர் சங்கம் (Student Federation of India) மாநிலச் செயலர் செல்வா நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் AICTE அங்கீகாரம் பெறாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் (தினகரன் செய்தி). இந்த வழக்கு மார்ச் 29 அன்று விசாரணைக்கு வருகிறது.

முந்தைய பதிவுகள்:

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாமா?
எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளை

தலித் சமைத்த உணவைச் சாப்பிட எதிர்ப்பு

தி ஹிந்து செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பஞ்சாயத் யூனியனில் உள்ள மோட்டூர் பஞ்சாயத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மஹேஸ்வரி என்ற தலித் சமைக்கும் உணவைச் சாப்பிடமாட்டோம் என்கின்றனர்.

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை.

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மாடன், Village Gounder (அப்படியென்றால்?) மாதேஷ் ஆகியோர் மஹேஸ்வரியை ஏசியுள்ளனர். அதிகாரிகள் மஹேஸ்வரியை வேறு பள்ளிக்கு மாறச் சொல்லியுள்ளனர்.

மாடன், மாதேஷ் ஆகியோர்மீது Protection of Civil Rights Act, Section 4(3) வழக்கு போடப்பட்டுள்ளது.

தீண்டாமை தொடர்கிறது.

Update: தி ஹிந்துவில் வந்த மற்றொரு செய்தி

சேலம் பொன்னம்மாபேட்டையில் ஒரு கோயிலில் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கும்போது, எல்லோருக்கும் வாழை இலையிலும், மாதேஷ் என்ற தலித் இளைஞருக்கு மட்டும் கையில்தான் கொடுப்பேன் என்றும் சொல்லியுள்ளனர். இதை மாதேஷ் எதிர்த்துக் கேட்டதற்கு திடீரென சிலர் கையில் அரிவாளுடனும் கட்டைகளுடனும் வந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

Tuesday, March 21, 2006

தமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்

அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் 1.5 கோடி புதிய வேலைகள் உருவாகும் என்று Confederation of Indian Industry (CII) - Tamil Nadu கூறுகிறது.

தி ஹிந்து செய்தி

இதில்
  • துறைத் தேர்ச்சி ஏதும் இல்லாத (unskilled) வேலைகள் = 90 லட்சம் - 1.1 கோடி
  • ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சியுள்ள (skilled) வேலைகள் = 30-40 லட்சம்
  • தீவிரமான துறைத் தேர்ச்சி (highly specialised) வேலைகள் = 1-3 லட்சம்
ஆனால்...

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் 40% மாணவர்கள், கலை/அறிவியல் கல்லூரிகளில் படித்து வரும் 70% மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்களாக உள்ளனர் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

அதாவது வேலைகள் உருவாகும். அந்த வேலையைச் செய்யக்கூடிய தகுதி படைத்த ஆள்கள் இருக்கமாட்டார்கள்.

கல்வி கற்பிக்கும் முறை மாறினால் ஒழிய, மாணவர்களுக்குக் கல்வியில் ஓரளவுக்காவது ஆர்வம் ஏற்பட்டால் ஒழிய, கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்கள் கொஞ்சமாவது உருப்படியாக இருந்தால் ஒழிய - இந்த நிலை மாறப்போவதில்லை.

இப்பொழுது இருக்கும் நம் கல்வித்துறையின் வழியே வரும் மாணவர்களுக்கு
  • தன்னம்பிக்கையோடு பேசத் தெரிவதில்லை
  • தமிழோ, ஆங்கிலமோ - ஏதோ ஒரு மொழியில்கூட சரளமாக எழுதத் தெரிவதில்லை
  • கூர்ந்து கவனித்து, உலகில் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளத் தெரிவதில்லை
  • ஆழ்ந்து சிந்தித்து, பிரச்னை என்ன என்பதைப் புரிந்து கொள்ளத் தெரிவதில்லை
  • பிரச்னைக்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிப்பதில்லை
  • Presentation skills சிறிதுகூட இல்லை
உருப்போட்டு பத்தி பத்தியாகப் பரீட்சை எழுதி 100/100 மதிப்பெண்கள் வாங்குவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இந்தப் பிரச்னைக்கான தீர்வு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் வரும் என்று நான் நினைக்கவில்லை. சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொல்கிறார்:
To this end, the varsity authorities proposed to the Universities Grant Commission to set up community colleges to train drop-outs/semi-skilled labour
இதற்கு UGC எதற்கு? தனியார்களால் இந்தக் காரியத்தை நன்றாகச் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. எப்பொழுது சான்றிதழ்கள் தேவை இல்லையோ, அப்பொழுதே UGC, அரசு மான்யம் ஆகியவை தேவையில்லை. அதோடுகூட அவர்களது தேவையற்ற பீரோக்ரசியும் தேவையில்லை.

இன்று மாணவர்களுக்குத் தேவை:
  • ஏதாவது ஒரு துறையில் மிகவும் அடிப்படைத் திறன்; அதற்கு மேல் வேண்டியதில்லை. இது கணினி தொடர்பாக இருக்கலாம். பற்று/வரவு கணக்கு எழுதுவதாக இருக்கலாம். பொருள் விற்பனையாக இருக்கலாம்.
  • தமிழில் நன்றாகப் பேச, எழுதப் பயிற்சி
  • ஆங்கிலத்தில் படித்துப் புரிந்து கொள்ள, நன்றாகப் பேச, ஓரளவுக்கு எழுதப் பயிற்சி
  • எந்தக் கூட்டத்திலும், யார் முன்னாலும் நாக்கு தொண்டைக்குள் மாட்டிக்கொள்ளாமல் தைரியமாக எழுந்து நின்று பேசக்கூடிய தன்னம்பிக்கை
  • அடிப்படையான கணினி அறிவு (உலாவி, மின்னஞ்சல், கூகிள் தேடல், வெட்டி ஒட்டல்...)
  • வோர்ட் பிராசஸிங் திறன். நன்கு அழகாக ஒரு ரிப்போர்ட் எழுதுவது (தமிழிலோ, ஆங்கிலத்திலோ)
  • பிரசெண்டேஷன் திறன். பவர்பாயிண்ட் அல்லது அதுபோன்ற மென்பொருளில் ஒரு குறிப்பிட்ட கருத்தை அழகாக வெளிக்கொணர்வது
இதை ஒரு வருட காலத்துக்குள் மிக அழகாகச் சொல்லித் தரலாம். குறைந்த பட்சக் கட்டணமாக ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வசூலிக்கலாம். UGCயும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்.

Sunday, March 19, 2006

சென்னை இணைய மையங்கள் மீதான கட்டுப்பாடுகள்

சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையின்படி சென்னையில் உள்ள இணைய மையங்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி நடக்கவேண்டும்.

1. ஒவ்வொரு இணைய மையமும் காவல்துறையிடம் பதிவு செய்துகொள்ளவேண்டும். பதியாத மையங்கள் தொழில் நடத்தமுடியாது. (ஆனால் பதிவது எளிது. வெறும் ரூ. 25தான் கட்டணம். விண்ணப்பித்த ஓரிரு நாள்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும்.)

2. பதிவு செய்துள்ள மையங்கள் பதிவேடு ஒன்றை வைத்திருக்கவேண்டும். அந்தப் பதிவேட்டில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கையெழுத்திடவேண்டும். வாடிக்கையாளரின் பெயர், அவர் எந்தக் கணினியில் உட்காருகிறார்; எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறார் என்பது பதியப்படவேண்டும்.

3. வாடிக்கையாளரின் பெயர், முகவரி ஆகியவை பதிவுசெய்யப்படவேண்டும். அவை சரியானவையா என்று பார்ப்பது இணைய மையத்தை நடத்துபவரது வேலை. அதாவது பிரவுசிங் செய்ய வருபவரிடம் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், (வாக்காளர் அடையாள அட்டை?) என்று ஏதாவது புகைப்படம் ஒட்டப்பட்ட, முகவரி எழுதப்பட்ட அடையாள அட்டை இருக்கவேண்டும். அப்படி ஏதும் இல்லாதவர்களை இணைய மையத்தில் பிரவுசிங் செய்ய அனுமதிக்கக்கூடாது(?).

4. ஒவ்வொரு கணினியிலும் ஒற்றுவேலை செய்யும் மென்பொருளை நிறுவவேண்டும். இந்த மென்பொருள் ஒருவர் எந்தெந்த இணையத்தளங்களுக்குச் செல்கிறார் என்ற தகவலை சேகரித்துக்கொள்ளும். இந்தத் தகவலையும், பதிவேட்டில் உள்ள தகவலையும் காவல்துறை கேட்கும்போது இணைய மையத்தினர் கொடுக்கவேண்டும்!

5. இணைய மையத்தில் மூடப்பட்ட கேபின்கள் கூடாது. அதாவது மறைவான பிரைவசி கூடாது.

6. பிரவுசிங் செய்ய வருபவர்கள் "தடை செய்யப்பட்ட" தளங்களைப் பார்க்கக்கூடாது. (எவை தடை செய்யப்பட்ட தளங்கள் என்று தெளிவாகச் சொல்லாவிட்டாலும் போர்னோகிராஃபி தளங்கள் இதில் அடக்கம் என்றுமட்டும் தெரிகிறது.)

இவைதான் நான் இதுவரையில் ஆங்காங்கே விசாரித்துத் தெரிந்துகொண்டது. காவல்துறை ஆணையை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. சென்னை நகர காவல்துறை சட்டம் 1888-ன்படி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்! 1888-ம் வருடச் சட்டத்தைப் பயன்படுத்தி 2006-ல் இணையத்தைக் கட்டுப்படுத்தும் விந்தைதான் என்னே!

இதைப்பற்றி ஆல்பர்ட் என்பவர் தன் பதிவில் எழுதியிருந்தார்.

மேற்படி வழிமுறைகளைப் புகுத்தியதற்கான காரணம் திருநெல்வேலியிலிருந்த ஒரு கணினி வழியாக குடியரசுத் தலைவருக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது இந்தக் கட்டுப்பாடுகள் மிகவும் அபத்தமாகத் தோன்றுகின்றன.

முதலில் நம் நாட்டில் புகைப்படம், முகவரியோடு இணைந்த அடையாள அட்டைகள் பலரிடமும் கிடையாது. அடுத்ததாக 'தீவிரவாதத்தைத் தடுக்கிறேன் பேர்வழி' என்று கிளம்பி மாரல் போலிசிங் வேலையையும் செய்திருக்கிறார் காவல்துறை ஆணையர். இவ்விரண்டையும் ஒன்று சேர்ப்பதின் நோக்கம் புரியவில்லை.

போர்னோகிராஃபி பார்ப்பதைத் தடுப்பது எந்தச் சட்டத்தின்கீழ் வருகிறது என்று சரியாகப் புரியவில்லை. இன்று போர்னோ எழுத்துகள் கடைகளில் புத்தகமாகக் கிடைக்கின்றன. போர்னோ சிடிக்கள் விடியோ லைப்ரரிகளில் கிடைக்கின்றன. சாஃப்ட் போர்ன் விடியோக்கள் நல்ல தரமான விடியோ டிஸ்டிரிப்யூட்டர்கள் வழியாகவே வெளியாகின்றன. நண்பர்கள் மூலமாகவும் ஸ்பாம் வழியாகவும் ஆண், பெண் நிர்வாணப் படங்கள் மின்னஞ்சலுக்கு வருகின்றன. இதையெல்லாம் தடுக்கவேண்டுமா என்பது ஒரு கேள்வி. தடுக்கவேண்டும் என்றால் எப்படிச் செய்யப்போகிறார்கள் என்று அடுத்த கேள்வி. சைபர் கஃபேயில் பார்ப்பதைத் தடுக்கலாம். அலுவலகங்களிலும் வீடுகளிலும் பார்ப்பதை, படிப்பதை, பகிர்வதைத் தடுக்க முடியுமா? முடியும் என்றால் எந்த சட்டத்தில் மூலம்?

அடுத்து சைபர் குற்றங்கள். ஒன்று இணையத்தைப் பயன்படுத்தி அனுப்பும் மிரட்டல் கடிதங்கள், cyber stalking, ஐடெண்டிடி திருட்டு போன்றவை. அடுத்தது இணையம் மூலம் பணத்தைத் திருடுவது, ஏமாற்றுவது, கிரெடிட் கார்டு மோசடி ஆகியவை. மூன்றாவது இணையம் வழியாக வைரஸ்களைப் பரப்புவது, ஸ்பாம் அனுப்புவது போன்றவை.

இதில் மிரட்டல் கடிதங்களை எப்படிக் கையாள்வது, எந்த அளவுக்கு சீரியசாக எடுத்துக் கொள்வது ஆகியவற்றை காவல்துறையினர் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியத் தபால் துறை மூலமாகக்கூட குடியரசுத் தலைவருக்கு மொட்டைக் கடிதாசு மிரட்டல் அனுப்பமுடியும். அதனால் நாளை முதல் கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுபவர்கள் அனைவரும் புகைப்படம், முகவரி உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தால்தான் அவர்களது கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை அறிவிக்குமா? கணினி என்ற உடனேயே அபத்தமான விதிகளைக் கொண்டுவருகிறார்கள்.

இணையம் வழியான பிற மோசடிகளைக் கையாள காவல்துறை தனிப்படைகளை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. இணையம் வழியாகக் கிடைக்கும் வரி வருமானத்தில் ஒரு பகுதியை காவல்துறையில் இந்தத் தனிப்படைக்காகச் செலவழிக்கலாம்.

பிரவுசிங் மையங்கள் பெரும்பாலும் சிறுதொழில்கள் ரகத்தைச் சேர்ந்தவை. அவர்களே இன்று சரியும் கட்டணத்தால் லாபமா/நஷ்டமா என்ற நிலையில் இருக்கிறார்கள். சிஃபி ஐவே, ரிலையன்ஸ் வெப்வோர்ல்ட்/வெப்எக்ஸ்பிரஸ் போன்றவை தவிர மீதி உள்ளவர்கள் அமைப்புரீதியாக வலு இல்லாதவர்கள். இவர்களால் காவல்துறை ஆணையை எதிர்த்துப் போராடமுடியாது. இவர்களது வருமானம் குறைந்து கொஞ்ச நாளில் காணாமல் போகப்போகிறார்கள்.

சைபர் குற்றங்கள் பெருகியுள்ள ஐரோப்பிய நாடுகளில்கூட சென்னை காவல்துறை அறிவிப்பைப்போன்ற மோசமான ஆணைகள் கிடையாது. இந்த ஆணை எதிர்க்கப்படவேண்டிய இன்று. இதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடியதான குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளை, சட்டமன்றம் மூலம் உருவாக்கி, விதிக்கவேண்டும்.

முக்கியமாக இந்த விதிகள் தனியாரது அந்தரங்கத்தை மதிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். மூடப்பட்ட கேபின்கள் அவசியம். ஒருவர் உலாவும் அத்தனை இணையத்தளங்களையும் கண்காணிக்கக்கூடாது. அதை காவல்துறைக்குத் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. போர்னோகிராஃபி தளங்களைப் பார்க்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

ஆனால் இது தேர்தலுக்கு முன்னதாக நடைபெற வாய்ப்பில்லை. தேர்தலுக்குப் பிறகாவது?

1888-ம் வருடச் சட்டங்களைத் தூக்கி உடைப்பில் போடவேண்டும்.

Friday, March 17, 2006

Gesture-based keyboard

HP நிறுவனம் கணினிகளுக்கான புதிய தட்டச்சுப் பலகை ஒன்றை உருவாக்கியிருப்பதாக நேற்று தி ஹிந்துவில் செய்தி வந்திருந்தது.

இது பார்க்கும்போது டேப்ளட் கருவி போல் உள்ளது. ஸ்டைலஸ் வைத்து இந்த டேப்ளட்டில் எழுதினால் எழுத்து என்ன என்பதை உணர்ந்து அந்த எழுத்தைத் திரையில் கொண்டுவரும் நுட்பம்தான் இது.

எந்த அளவுக்கு தமிழ் மற்றும் பிற மொழிகளை உணர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

இந்த முறையில் வேகமாக எழுதமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாததற்கு தட்டித் தடவி எழுத்து எழுத்தாக எழுதி ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடலாம் என்று நினைக்கிறேன்.

HP-யில் வேலை பார்க்கும் யாராவது இந்த கீபோர்டை எப்படி வாங்குவது என்று தகவல் சொல்லமுடியுமா?

பிரிட்டனில் ஷரியா - சரியா?

மார்ச் 14 தி ஹிந்து கருத்துப் பத்தியில் ஹசன் சுரூர் எழுதிய கட்டுரை இங்கே: Rooting for Sharia laws in Bradford

அதைப் படித்தபின் தேடியபோது அகப்பட்ட டெய்லி டெலிகிராஃப் சுட்டிகள் இங்கே:
Poll reveals 40pc of Muslims want sharia law in UK
Survey's finding of growing anger in the Islamic community are described as 'alarming' by leading Muslim Labour MP
What is sharia law?

சென்ற மாதம் பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை டென்மார்க் கார்ட்டூன் பிரச்னையை ஒட்டி பிரிட்டனின் முஸ்லிம் பகுதிகளில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. அந்தக் கருத்துக் கணிப்பின்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுள் ஒன்று பிரிட்டனின் முஸ்லிம் பகுதிகளில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமா என்பது. அதற்கு 40% மக்கள் "ஆம்" என்றும், 41% மக்கள் "கூடாது" என்றும் சொல்லியிருந்தனர். 19% மக்கள் கருத்து ஏதும் சொல்லவில்லை போல.

அதையொட்டி பிரிட்டனில் கடுமையான விவாதங்கள் நடந்துவருகின்றன. பிரிட்டன் ஒரு செகுலர் நாடு என்றாலும்கூட அடிப்படை உணர்வில் ஒரு கிறித்துவ நாடு. சில முஸ்லிம்கள் பிரிட்டனில் ஷரியா சட்டம் வேண்டும் என்று சொல்வதற்கே கடுமையான எதிர்ப்பு இருக்கும். ஷரியா என்பது சிவில், கிரிமினல் சட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையில்லாத எந்த நாடும் ஷரியாவின் கிரிமினல் சட்டங்களைப் பயன்படுத்த அனுமதி தராது. கையை வெட்டுவதும் கண்ணைத் தோண்டுவதும் கல்லால் அடித்துக் கொல்வதும் இன்று பாகிஸ்தான், மலேசியாவில்கூடக் கிடையாது. சவுதி அரேபியா மட்டும் விதிவிலக்கு.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்களுக்கு ஷரியா முறையில் சிவில் சட்டங்கள் செல்லுபடியாகின்றன. இந்தியாவில் சிவில் சட்டங்கள் பெரும்பான்மை மதங்களுக்கு வேறு வேறாக உள்ளன. இந்துச் சட்டம் வேறு (இதில் ஜைன, புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களும் உண்டு), முஸ்லிம் தனிச்சட்டம் வேறு, பிற மதங்களுக்கான சிவில் சட்டங்கள் வேறு. முக்கியமாக திருமணச் சட்டம், விவாகரத்துச் சட்டம், தத்தெடுப்பது தொடர்பான சட்டம், வாரிசுகளுக்கான சொத்துரிமைச் சட்டம் - இந்த நான்கும்தாம் தினம்தினமும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நான்கிலும் பொதுவாக ஹிந்து அல்லது பிற மதங்களுக்கான சட்டங்களை நாடாளுமன்றமோ குறிப்பிட்ட சட்டமன்றங்களோ அவ்வப்போது, தேவைக்கேற்றமாதிரி மாற்றுகின்றன. ஆனால் முஸ்லிம் ஷரியா சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர இந்திய நாடாளுமன்றமோ சட்டசபைகளோ முயற்சி செய்வதில்லை. The All India Muslim Law Personal Board என்று ஒன்று உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஏதும் முஸ்லிம் சட்டங்களில் கைவைக்காமல் இருக்கப் போராடுவதுதான் இவர்களது வேலை.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கான தனிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டது 1937-ல், பிரிட்டிஷ் ஆட்சியின்போது. (The Muslim Personal Law (Shariat) Application Act, 1937) பின் இந்திய விடுதலைக்குப் பிறகு இவை தொடர்ந்து வந்துள்ளன. ஷா பானு என்பவரின் விவாகரத்து/ஜீவனாம்சம் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அடுத்து ராஜீவ் காந்தி அரசு கொண்டுவந்த Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 என்னும் சட்டத்தைத் தவிர அதிகமாக முஸ்லிம் தனிச்சட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. முஸ்லிம் பெண்களின் சொத்துரிமை சரியாக இல்லை என்பதால் தேசிய பெண்கள் கமிஷன் ஷரியா சட்டத்தில் சில மாறுதல்களை வேண்டியுள்ளது.

ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. எந்த மதக்குழுவும் தனக்கென தனியான சிவில் சட்டங்களை எதிர்பார்ப்பதும் அதற்காகப் போராடுவதும் சரியாகத் தோன்றவில்லை. பிரிட்டனில் எப்படியும் ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதே அபத்தமாக உள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற தனிச்சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும். நாடு முழுவதற்கும், மக்கள் அனைவருக்குமான பொதுச்சட்டங்கள் தேவை. அது எல்லாத் தனிச்சட்டங்களிலும் உள்ள குறைகளைக் களைந்து பெண்களின் உரிமைகளை நிலைநாட்டக்கூடிய சட்டமாக இருக்கவேண்டும்.

Wednesday, March 15, 2006

Man eats dog; loses eyesight - தினகரன்

இன்று தினகரனில் வெளியான ஜோக் விளம்பரத்தைப் பார்த்தோம். அடுத்து ஜோக்கான செய்தியா அல்லது சோகமான செய்தியா என்று புரியாத இந்தச் செய்தியைக் கவனிக்கவும்!

தனக்கு வைத்திருந்த சாப்பாட்டைத் தன் வீட்டு நாய் சாப்பிட்டுவிட்டது என்பதால் கோபம் கொண்ட ஒருவர் அந்த நாயை அடித்து, சமைத்துச் சாப்பிட்டு விட்டாராம். அதைத் தொடர்ந்து அவருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் சேர்த்தும் பலன் கிட்டாமல் இப்பொழுது அவருக்குக் கண்பார்வையும் மங்கிவிட்டது.

கொரியாவில் மக்கள் எல்லாம் தேக ஆரோக்கியத்தோடுதானே இருக்கிறார்கள்?

லூசுத்தனமான அரசியல் கட்சி

இன்று தினகரனில் ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு புது அரசியல் கட்சி உதயமாகிறதாம்.

அவர்கள் தங்களது கொள்கையாக சிலவற்றைச் சொல்லியிருந்தனர். எல்லோரும் சொல்லும் விஷயங்கள்தாம். ஆனால் ஒரேயொரு கொள்கை பார்த்தவுடனே சிரிப்பை வரவழைத்தது.

கட்சியின் பெயர் விச்சர்தி விச்சார்ட்டி. (என்ன இழவோ, எப்படி உச்சரிப்பு என்று தெரியவில்லை. காலையில் தமிழில் பார்த்தது ஞாபகம் வரவில்லை. URL மட்டும் குறித்துக்கொண்டேன்.) அவர்களது இணையத்தளம்: http://www.vicharti.org/. அந்த சூப்பர் கொள்கை என்ன தெரியுமா?
The New Party in power will offer rupees 5000 every month to every Indian Citizen.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மாசம் ரூ. 5,000 வழங்குவதென்றால் ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு = 110 கோடி (மக்கள்) * ரூ. 5,000 = 5,50,000 கோடி. ஒரு வருடத்துக்கு ரூ. 66,00,000 கோடிகள் = . இன்றைய டாலர் கணக்கில் சுமார் 1.5 டிரில்லியன் டாலர்கள்.

இந்தியாவின் GDP எவ்வளவு தெரியுமா? சுமார் 3.3 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே!

ஆக இந்த முட்டாள்கள் அதில் கிட்டத்தட்ட பாதியை மக்களுக்கு சும்மா, இலவசமாகத் தூக்கிக் கொடுக்கப்போகிறார்களாம்!

இந்திய அரசின் ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

நடப்பாண்டு வரி வருமானம் (எதிர்பார்ப்பு) = 4,42,153 கோடி ரூபாய்கள்.
வரியில்லா பிற வருமானம் (எதிர்பார்ப்பு) = 76,260 கோடி ரூபாய்கள்

ஆக மொத்த வருமானம் (எதிர்பார்ப்பு) = 5,18,413 கோடி ரூபாய்கள்.

இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒருவருக்கு மாதம் ரூ. 5000 கூடக் ஒருவருக்கு ரூ. 5000 வீதம் அனைவருக்கும் ஒரு மாதம்கூடக் கொடுக்க முடியாது. அதற்கே ரூ. 5,50,000 கோடிகள் தேவைப்படும்.

ஒரு வழிதான் உண்டு. இஷ்டத்துக்கு நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்க வேண்டியதுதான். இதனால் பணவீக்கம் கிட்டத்தட்ட 50 மடங்குக்கு மேல் அதிகரிக்கும். இதனால் ஒரு வாழைப்பழம் சுமார் 50 ரூபாய்க்கு விற்கும். அப்பொழுது மாதம் கிடைக்கும் ரூ. 5000-ல் 100 வாழைப்பழங்கள் மட்டும்தான் வாங்கலாம்!

இதுபோன்ற கிறுக்குத்தனமான ஐடியாக்களையெல்லாம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யும் அளவுக்கு ஜோக்கர்கள் நம் நாட்டில் உள்ளார்கள்!

Tuesday, March 14, 2006

தபால் துறை - கூரியர் பிரச்னை

Rediff.com: Panicky courier cos want govt to rethink move

தனியார் கூரியர் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து தங்களுக்கு அரசிடமிருந்து நேர இருக்கும் ஆபத்திலிருந்து எப்படித் தங்களைக் காப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தபால் துறை அமைச்சகம் Indian Post Office Act, 1898-ல் சில மாறுதல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. அவை:

1. 500 கிராமுக்குக் கீழ் உள்ள கடிதங்கள்/பொதிகளை இந்திய தபால் துறை மட்டுமே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.

2. தபால்/கூரியர் துறையைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளர் (Regulator) பதவி ஏற்படுத்தப்படும்.

3. தொலைத்தொடர்புத் துறையில் நடப்பது போல Universal Service Obligation (USO) ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் தபால் துறையின் நஷ்டங்கள் சரிக்கட்டப்படும்.

தனியார் கூரியர் நிறுவனங்கள் வந்துள்ளதால் தபால் துறை நஷ்டப்பட்டிருக்கிறது என்பது சரிதான். ஆனால் அதற்காக இப்படி அரசே தன் நாட்டு நிறுவனங்களை மிரட்டி, பகல் கொள்ளை அடிப்பது கோபத்தை வரவழைக்கிறது.

இந்த USO என்பதை தொலைத்தொடர்புத் துறையிலாவது ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். பி.எஸ்.என்.எல் உருவாக்கி வைத்திருந்த அடிப்படைக் கட்டுமானத்தைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தன. ஆரம்பத்தில் தனியார் நிறுவனங்களின் தொலைப்பேசித் தொடர்புகள் குறைவாகவும் பி.எஸ்.என்.எல்லின் கம்பிவழித் தொலைப்பேசிகள் எக்கச்சக்கமாகவும் இருந்தன. பி.எஸ்.என்.எல் தொலைப்பேசிகளை அழைப்பதன்மூலம்தான் தனியார் தொலைப்பேசி நிறுவனங்களுக்கு வருமானம் பெரிதும் வந்தது. ஆனால் இப்பொழுது நிலைமை மாறியுள்ளது. தனியார்கள் வழங்கும் தொலைப்பேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல் இதுவரையில் கொடுத்திருந்த இணைப்புகளின் எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. இன்னமும் இரண்டு வருடங்களில் USO முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும்.

ஆனால் எந்த வகையில் போஸ்ட் ஆஃபீஸ் USO என்று ஒன்றை எதிர்பார்க்க முடியும்? ஒருவகையில் கூரியர் கம்பெனிகளின் வருமானத்தை 50%-80% அளவுக்கு ஒழிக்கப்பார்க்கிறார்கள். அதற்குமேல் ஒரு பிளாக்மெயில் தொகைவேறு எதிர்பார்க்கிறார்கள். ஜேப்படித் திருடர்கள்கூட இதைவிட நியாயமாக நடந்துகொள்வார்கள்.

இப்பொழுதைக்கு The Competition Commission of India - முந்தைய MRTP போர்டு - அரசின் இந்த நோக்கத்துக்கு ஓரளவுக்காவது முட்டுக்கட்டை போடும் என்று தெரிகிறது.
Expressing surprise that CCI had not been consulted on this move, the commission member Vinod Dhall said: "I don't know what stage the Bill has reached. We will make a request to the ministry concerned to have it (consultations) so that we can also study it from the point of view of competition and then offer our views."
ஆனால் இதையும் மீறி இந்த மசோதா நாடாளுமன்றத்துக்கு வந்தால் நம் அருமைமிகு உறுப்பினர்கள் கொறடா சொல்பேச்சைக் கேட்டு வெற்றிகரமாக வாக்கெடுப்பில் வாக்குகளைக் குத்தி இதைச் சட்டமாக்கிவிடுவார்கள்.

அதற்குப்பின் நீதிமன்றங்கள்தான் வழிகாட்டவேண்டும்.

என் முந்தைய பதிவு: தனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு?

Monday, March 13, 2006

புஸ்பராஜா மறைவு

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (ISBN எண்: 81-7720-028-3) என்னும் புத்தகத்தை எழுதிய சி.புஸ்பராஜா மாரடைப்பால் குடல் புற்றுநோயால் காலமானார்.

சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராஜா சென்னை வந்திருந்தபோது, கிழக்கு பதிப்பகத்தின் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நானும் பா.ராகவனும் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம்.

ஈழப் பிரச்னை பற்றி ஆழப் பேசவில்லை. மேலோட்டமாகத்தான் பேசினோம். இந்தியாவின் ஈடுபாடு இல்லாமல் பிரச்னை தீராது என்ற எண்ணம் கொண்டிருந்தார் புஸ்பராஜா.

புஸ்பராஜாவின் புத்தகத்தை பா.ராகவனிடமிருந்துதான் வாங்கினேன். ஆனால் அதனை என்னால் படிக்க முடியவில்லை. அதிகம் இருபது பக்கங்களைத் தாண்டியிருப்பேன். அதற்குமேல் போரடித்தது. மிக மோசமாக எழுதப்பட்ட, எடிட் செய்யப்பட்ட புத்தகம் அது என்பது என் கருத்து. படிப்பவரை உள்ளே இழுக்கும் வண்ணம் எழுதப்படவில்லை. பிறகு படித்துக் கொள்ளலாம் என்றே தள்ளிப்போட்டேன். (இனியும் படிப்பேனா என்று தெரியவில்லை.) ஆனால் ராகவன், ஆர்.வெங்கடேஷ் போன்றவர்கள் அந்தப் புத்தகத்தைப் பெரிதும் சிலாகித்து எழுதியிருந்தனர். (சுட்டிகளைத் தேடவேண்டும்.)

நான் அதிகமாகப் பேசியது புஸ்பராஜா என்னும் ஃபிரான்சில் வாழும் ஈழ அகதியைப் பற்றித்தான். ஈழத்தில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் உறவுக்காரர்களிடமிருந்து எப்பொழுதும் பணத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார். தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை இலங்கையில் இருப்பவர்கள் உணர்ந்துகொள்வதில்லை என்றார்.

ஷோபா சக்தியின் கதைகள் பற்றிப் பேசினோம். அவரது கதைகளில் சில நிகழ்வுகளில் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.

தான் இலங்கையில் இருப்பது தெரியவந்தால் தன்னை 'போட்டுத்தள்ள' பலர் தயாராக இருக்கிறார்கள் என்று சொன்னார். புலிகளா என்று கேட்டேன். அவர்கள் மட்டுமல்ல, டக்ளஸ் தேவானந்தா (இந்தப் பெயரைத்தான் சொன்னார் என்று ஞாபகம்) கூடத் தன் உயிருக்குக் குறிவைத்திருப்பதாகச் சொன்னார். ஐரோப்பாவில் இருக்கும்போது புலிகளாலோ, பிற போராளிக்குழுக்களாலோ அவரது உயிருக்கு ஆபத்து வருமா என்று கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. ஈழப்போராட்டம் பற்றி (ex)பெண் போராளிகள் யாருமே ஆவணப்படுத்தவில்லை என்றார். யாரோ கனடாவில் வசிக்கும் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவரை எழுதச் செய்ய, தான் முயற்சி செய்வதாகவும் சொன்னார். தனது புத்தகம்கூட 'தனது சாட்சியம்' மட்டும்தான் என்றும் அதுதான் அப்பட்டமான உண்மை என்று தான் சொல்லவில்லை என்றும், பலரும் தமது கருத்துகளைப் பதிய வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் சொன்னார்.

கடைசியில் அவரது மரணம் இயற்கையாக, உடல் உபாதை காரணமாகத்தான் நிகழ்ந்துள்ளது.

நா.கண்ணனின் அஞ்சலி: இறப்பவர்க்கில்லை துக்கம், அது இருப்பவர்க்கே!

சில சுட்டிகள் (நன்றி ஜெயஸ்ரீ)

புஸ்பராஜா நேர்காணல்
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் புத்தகம் பற்றிய விமரிசனங்கள்: சுந்தரவடிவேல் | பா.ராகவன் | வெங்கட் | டிசே

Saturday, March 11, 2006

நுழைவுத் தேர்வு வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தோற்றபின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்கு நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கை எடுத்துச் சென்றுள்ளது.

ஆனால் வழக்கை உடனடியாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லவேண்டும் என்ற தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கு மார்ச் 27ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Friday, March 03, 2006

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாமா?

மூன்று நாள்களுக்கு முன்னர் எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பொருள்கள் நாசமாயின; சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த நாளே சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அங்கும் கல்லுரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சில குண்டர்கள் மாணவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

என்ன பிரச்னை?

தமிழகத்தில் ஐந்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை:
1. எஸ்.ஆர்.எம் (சென்னை)
2. சத்தியபாமா (சென்னை)
3. விநாயகா மிஷன் (சேலம்)
4. சண்முகா (தஞ்சாவூர்)
5. வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (வேலூர்)

2003-ல் AICTE நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தம்மிஷ்டத்துக்கு தம்முடைய பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்கிறார்கள் என்றும் அதற்கான அடிப்படை வசதிகள் இந்தக் கல்லூரிகளில் இல்லை என்றும் அறிந்து இந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் உடனடியாக இந்தக் கல்லூரிகள் சில நீதிமன்றம் சென்று இந்த நோட்டீஸுக்குத் தடையுத்தரவு வாங்கியுள்ளன. இந்தத் தடையுத்தரவு அக்டோபர் 2005 சமயத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. உடனே AICTE மறுபடியும் இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து விநாயகா மிஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தடையுத்தரவு வாங்கியிருக்கிறது. இந்தத் தடையுத்தரவின்படி தமிழகத்தில் உள்ள ஐந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் தடை இருக்கும்வரையில் AICTE எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.

இதை எதிர்த்து AICTE சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகிறது.

இதற்கிடையில் இந்த ஐந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தமது மாணவர்களிடம் திறந்த மனத்துடன் இந்தப் பிரச்னைகளைப் பற்றிப் பேசவில்லை. மீடியாக்களும் இந்தப் பிரச்னையைப் பற்றி எழுதக்கூடச் செய்யவில்லை. ஆனால் காற்றில் வதந்திகள் பரவியுள்ளன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் AICTE அனுமதியின்றி புதுப் பாடங்களை ஆரம்பிக்கலாம் என்பது இவர்களின் வாதம். AICTE இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறது. ஆனால் புதுப் பாடங்களைத் தொடங்கினாலும் பொறியியல் பாடங்கள் என்றால் அவை AICTE விதிமுறைகளுக்கு உட்படுகிறதா என்று கண்காணிப்பது தங்கள் கடமை என்கிறது AICTE. இல்லை; AICTE எங்களைக் கட்டுப்படுத்தாது; நாங்கள் UGC கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வருபவர்கள் என்கின்றன இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்.

இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றங்கள்தான் முடிவுகட்டவேண்டும். ஆனால் இதற்கிடையில் மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை வருகிறது. இந்தத் தனியார் கல்லூரிகள் லட்ச லட்சமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு மாணவர்களைச் சேர்க்கிறார்கள். இதில் நியாயமான, அரசு நிர்ணயித்த கட்டணமும் உண்டு; ரசீது கொடுக்காமல் வாங்கும் திருட்டுப் பணமும் உண்டு.

இப்படிக் கொட்டிக் கொடுத்துப் படிக்கும் மாணவர்கள் தங்களது எதிர்காலம் பற்றிய கவலை தாக்கும்போது வெகுண்டெழுவது சகஜம்தான். அதுதான் எஸ்.ஆர்.எம்மில் நடந்துள்ளது; சத்தியபாமாவிலும் நடந்துள்ளது. எஸ்.எம்.எஸ் மூலம் பரவிய வதந்திகளில் B.Tech என்ற பட்டத்துக்குப் பதில் B.Sc என்ற பட்டம்தான் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றதும் மாணவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

ஆனால் மாணவர்கள் நேரடியாகவோ, பிறரைத் தூண்டிவிட்டோ வன்முறையில் ஈடுபட்டது தவறு. ஆனால் உடனடியாக இந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். போராட்டத்தின்மூலமாக மட்டுமே இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் செய்யும் அட்டூழியங்கள் வெளியே தெரிய வரும்.

தி ஹிந்து: New programmes by deemed varsities do not need AICTE nod

தி ஹிந்து: Withdraw deemed university status to five institutions, demands SFI

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்றால் என்ன என்பது பற்றி சத்யாவின் வலைப்பதிவு

பிற்சேர்க்கை: தினமணியில் வெளியான இரு செய்திகள்:

1. காஞ்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பிரச்னை. (இதுவும் நிகர்நிலை என்று எனக்குத் தெரியாது. தமிழகத்தில் ஐந்துதான் உள்ளன என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!)

2. நிகர்நிலைப் பல்கலைகளை நெறிப்படுத்த புது விதிமுறைகள்

Wednesday, March 01, 2006

எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளை

முழு விவரங்கள் இப்பொழுதைக்குத் தெரியவில்லை. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், ஹோட்டல் நிர்வாகம் போன்ற பல பட்டப்படிப்புகள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.

நேற்று இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் கூட்டமாகக் கூடி இந்தக் கல்லூரி தொடங்கும் படிப்புகளுக்கு AICTE அனுமதி உள்ளதா என்று கேள்விகள் எழுப்பியிருக்கின்றனர். அதை NDTV கேமரா படம் எடுக்கச் சென்றுள்ளது. தொடர்ந்து மாணவர்கள் அடிதடியில் இறங்கினர், கம்ப்யூட்டர் லாபுக்குள் புகுந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள பொருள்களை நாசமாக்கியுள்ளனர் என்று கல்லுரி நிர்வாகம் கூறுகிறது. மாணவர்கள் தரப்பில் அவர்கள் எதையும் செய்யவில்லை என்றும் அடிதடியில் ஈடுபட்டது நிர்வாகத்தின் கைக்கூலிகள்தாம் என்றும் சொல்லப்படுகிறது. NDTV நிருபரும் கேமராமேனும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. அத்துடன் அவர்களது விடியோடேப் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கும் பாடங்களுக்கு AICTE அனுமதி தேவையில்லை; பல்கலைக் கழக மானியக் குழு (University Grants Commission) அனுமதியே போதுமானது என்கின்றது நிர்வாகம். (இது உண்மையா என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.)

சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிக்குக் காலவரையரையற்ற விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து செய்தி ஒன்று | இரண்டு
தினமணி செய்தி ஒன்று | இரண்டு

மணிமேகலை பிரசுரம் செய்வது சரியா?

திண்ணை இணைய இதழில் முருகபூபதி என்பவர் எழுதியுள்ள கட்டுரைக்கான சுட்டி இதோ:

மணிமேகலை பிரசுரம் - தமிழ் சேவையா? வியாபார தந்திரமா?