Saturday, April 08, 2006

அரிசி மான்யம் (Rice subsidy)

கலைஞர் கருணாநிதி ரூ. 2க்கு கிலோ அரிசி கொடுப்போம் என்கிறார். கேப்டன் விஜயகாந்த் "ஏழைகளுக்கு" மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்போம் என்கிறார்.

தற்போது தமிழகத்தில் நடப்பது என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை வந்தது. அதனால் கொஞ்சம் நேரம் செலவு செய்து பார்த்ததில் எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை.

தமிழகத்தில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுகள் மொத்தம் 1.88 கோடி. இதில் சென்ற வருடம் 1.76 கோடி குடும்பங்கள் மட்டுமே ரேஷனில் அரிசி வாங்கியுள்ளனர்.

இந்த 1.88 கோடி குடும்பங்களில் மத்திய அரசு கிட்டத்தட்ட 50 லட்சம் குடும்பங்களை மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் என்று அறிவிக்கிறது. (ஆண்டு வருமானம் ரூ. 24,000க்குக் கீழே). மத்திய அரசே மாநில அரசுகளுக்கு மான்ய விலையில் அரிசியை விற்கிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு கிலோ ரூ. 5.65 என்ற கணக்கில் மாநில அரசுக்கு அரிசி விற்கிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு அரிசி வழங்க வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து இந்த அரிசியை வாங்க வேண்டுமானால் அதற்கு ஆகும் செலவு கிலோவுக்கு தற்போது ரூ. 9.15 !

வறுமைக்கோட்டுக்குக் கீழே:
மொத்தக் குடும்பங்கள் = 50 லட்சம்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு வேண்டிய அரிசி = 240 கிலோ
ஒரு கிலோவுக்கு ஆகும் செலவு = ரூ. 5.65
அதை ரூ. 2.00க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டம் = 50 லட்சம் * 240 * (5.65 - 2.00) = 438 கோடி

வறுமைக்கோட்டுக்கு மேலே:
மொத்தக் குடும்பங்கள் = 1.88 கோடி - 50 லட்சம் = 1.38 கோடி
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு வேண்டிய அரிசி = 240 கிலோ
ஒரு கிலோவுக்கு ஆகும் செலவு = ரூ. 9.15
அதை ரூ. 2.00க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டம் = 1.38 கோடி * 240 * (9.15 - 2.00) = 2,368 கோடி

மொத்த நஷ்டம் = ரூ. 2,806 கோடி

இதுதான் மான்யத் தொகையாகக் காண்பிக்கப்படும்.

நடக்கும் நிதியாண்டு 2006-07-ல் தமிழக அரசு இந்த மான்யத்துக்காக ஒதுக்கி வைத்த தொகை ரூ. 1,500 கோடி. (அதாவது அரிசி ரூ. 3.50 என்று இருந்தால்). சென்ற ஆண்டுகளில் மக்கள் எந்த அளவுக்கு அரிசி வாங்குகிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றவாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இந்த மான்யம். இப்பொழுது கருணாநிதியின் கணக்கின்படி வெறும் ரூ. 540 கோடிதான் அதிகம் தேவைப்படும் என்று அவர் சொல்கிறார். ஆனால் உண்மையில் மான்யம் இன்னமும் ரூ. 1,300 கோடி அதிகம் தேவைப்படும். ரூ. 2 க்கு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அரிசி கிடைத்தால் அதிக அளவில் வாங்குவார்கள். அதனால் முழு மான்யமாக ரூ. 2,800 கோடி தேவைப்படும். எனவே பட்ஜெட் எஸ்டிமேட்டைவிட நிச்சயம் ரூ. 1,000-1,300 கோடி அதிகம் தேவைப்படும்.

முதலில் ஏன் அனைத்து மக்களுக்கும் - அதாவது வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கும் - சுமார் 1.38 கோடி குடும்பங்களுக்கு - மிக அதிக அளவில் மான்யம் வழங்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு, அதாவது சுமார் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மான்யம் என்றால் அதனால் ஆகும் செலவு குறைவுதான். பிறருக்கு மான்யமே இல்லாது கிலோ ரூ. 10 என்ற அளவில் அரிசியை விற்கவேண்டும்.

எந்த மான்யமாக இருந்தாலும் ஏன் அதைக் கொடுக்கிறோம், யாரிடமிருந்து பணத்தை எடுத்து குறிப்பிட்ட வகுப்பினருக்குக் கொடுக்கிறோம் என்று கவனிக்கவேண்டும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

குறைந்த விலை அரிசி அல்லது கலர் டிவி இலவசம் என்பது தேவையா, அதற்குபதில் வேறெதாவது செய்வது நல்லதா என்று கவனிக்கவேண்டும். அடிப்படை உணவு, அடிப்படை மருத்துவம், அடிப்படைக் கல்வி, மேற்படிப்பு, கல்விக்குத் தேவையான பிற (சைக்கிள், பஸ் பாஸ், புத்தகங்கள்) ஆகியவை தவிர்த்து வேறெதற்கும் மான்யங்கள் தருவதை மிகுந்த யோசனையுடனே செயல்படுத்தவேண்டும்.

விவசாயத்துக்கான மான்யம் (மின்சாரம், உரம், தண்ணீர், குறைந்த வட்டிக் கடன்) ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. வீட்டுக்கான மின்சாரம் ஏற்றுக்கொள்ள முடியாதது - வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள வீடுகளுக்கும்கூட! ஆனால் இன்னமும் தொடர்கிறது.

திமுக எப்படியாவது இந்தத் தேர்தலை வெல்லவேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு வாரிவிடும் தேர்தல் வாக்குறுதிகள் அவர்களை கேலிக்குள்ளாக்கும்.

இதற்கிடையில் புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த் இதைவிட கேலிக்கூத்தான மான்யங்களையும் இலவசங்களையும் பேசுகிறார். ஏழைகளுக்கு 15 கிலோ அரிசி மாதத்துக்கு இலவசம் என்பதை மட்டும் சில மாறுதல்களுடன் ஏற்றுக்கொள்வேன். வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசம் என்பது முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. உணவு அடிப்படை என்ற வகையில். அதற்குமேல் அவர் ஏகப்பட்டவற்றை வாரி வழங்குகிறார். அவருக்கு தான் ஜெயிக்கவே போவதில்லை என்று தெரிந்துள்ளது. ஏனெனில் ஜெயித்தால் நிச்சயமாக அவரால் இந்த வாக்குறுதியில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது.

5 comments:

  1. ஆட்சியைப் பிடித்த பிறகு "வாக்கரிசி' போட கூட இவர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை மக்கள் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. பத்ரி, அதிமுக தேர்தல் வாக்குறுதி என்ன?

    I don't know really, can u please tell me if they have released one and if so how realistic is it.

    Just for understanding not to comment on your post.

    ஸ்ரீதர்

    ReplyDelete
  3. அது அவருக்கம் தெரியும் இலவச அலையில் தன் தேர்தல் அறிக்கை காணாமல் போகாமல் இருக்க ஒரு கவன ஈர்ப்புக்கா தான் இதை அறிவித்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    மற்றபடி மிச்சமிருக்கிற வாக்குறுதிகள் செயல்படுத்த முடிந்தால் நல்லவையாக தான் தோன்றுகின்றன.

    ReplyDelete
  4. சிவா குமார்Fri Mar 25, 02:04:00 PM GMT+5:30

    என் ஒட்டு யாருக்கு,

    இரண்டு வியாபாரிகள், இரண்டு சலுகைகள்,

    இதில் எனக்கு பிடித்தது, ஒன்னு வாங்கினால் ஒன்னு இலவசம்........

    ReplyDelete