Sunday, October 29, 2006

வங்கதேச அரசியல் குழப்பம்

நம் அண்டைநாடான வங்கதேசம் (பங்களாதேஷ்) இப்பொழுது மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலையில் உள்ளது.

தமிழக அரசியலில் எப்படி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆகாதோ அதைவிட மோசமான அரசியல் உறவு வங்கதேசத்தின் முக்கியமான கட்சிகளின் தலைவர்களான பேகம் காலீதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகியோரிடையே உள்ளது.

1971-ல் வங்கதேசம் உருவான பிறகு தலைவராக - முதலில் பிரதமராக, பின் அதிபராக - இருந்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும் இவரது குடும்பத்தோரும் சில வருடங்கள் கழித்து ராணுவப் புரட்சியின்போது கொல்லப்பட்டனர். இவரது குடும்பத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இவரது மகள்களான ஹசீனா, ரெஹானா ஆகியோர். இந்த ஹசீனாதான் முஜிபுர் ரெஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவர்.

முஜிபுர் ரெஹ்மான் கொலைக்குப் பிறகு சிலர் கைகளில் ஆட்சி சில நாள்கள் இருந்தாலும் சீக்கிரமே ராணுவ ஜெனரலான ஜியா-உர்-ரெஹ்மான் கைக்குக் வந்துவிட்டது. ஜியா நேரடியாக முஜிபின் கொலைக்குக் காரணம் என்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், தான் பதவிக்கு வந்தவுடன் முஜிபின் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கிவிட்டார். இந்த ஜியாவின் மனைவிதான் பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவர் காலீதா ஜியா.

ஷேக் ஹசீனா, காலீதா ஜியா இருவருக்கிடையேயான வெறுப்பு எப்படிப்பட்டது என்பதை இப்பொழுது உங்களால் புரிந்துகொள்ளமுடியும்!

ஜெனரல் ஜியா பதவியில் இருந்தபோதே மற்றொரு ராணுவப் புரட்சியில் கொலை செய்யப்பட்டார். அதை அடுத்து கொஞ்ச நாள்கள் பல்வேறு சிவிலியன், மிலிடரி ஆசாமிகள் பதவியில் இருந்தாலும் சீக்கிரமே பதவியைக் கைப்பற்றினார் மற்றொரு ராணுவ ஜெனரலான எர்ஷாத். 1990-ல் ஏற்பட்ட மக்கள்/மாணவர் புரட்சியில் எர்ஷாத் தூக்கி எறியப்பட்டார்.

அப்பொழுதுதான் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம், குடியாட்சி முறை ஆகியவை அமலுக்கு வந்தன. அதனையடுத்து இதுவரை மூன்று முறை தேர்தல்கள் நடந்துள்ளன. இரண்டு முறைகள் காலீதா ஜியாவும், ஒருமுறை ஷேக் ஹசீனாவும் - கருணாநிதி, ஜெயலலிதா போல - மாறி மாறி பிரதமராக இருந்துள்ளனர். கடைசியாக ஆட்சியில் இருந்தவர் காலீதா ஜியா.

இந்தியா போலவே, மேற்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வங்கதேசத்தில் பிரதமருக்குத்தான் முழு அதிகாரமும். குடியரசுத் தலைவர் டம்மிதான். ஆனால் இந்தியாவில் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதுபோல வங்கதேச தேர்தல் ஆணையம்மீது கட்சிகளுக்கு முழு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வழி உள்ளது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் ஆட்சி முடியும்போது நடுநிலையான ஒருவரை காபந்து ஆலோசகராக நியமிப்பார்கள். இவரது தலைமையில் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும். வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைத்ததும் இந்த நடுநிலையாளர் பதவியைக் காலி செய்துவிடுவார்.

இப்படிப்பட்ட நடுநிலையாளர் ஒருவர்தான் நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கூடியவர் என்று கட்சிகள் நினைக்கின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரை இந்தப் பொறுப்பில் அமர்த்திவிடுவார்கள். ஆனால், கடந்த இரண்டு முறைகளைப் போல் அல்லாமல் இந்தமுறை இந்த நடுநிலையாளர் விஷயத்திலேயே பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.எம்.ஹஸன் என்பவரை ஆளும் கட்சி BNP ஆலோசகராக நியமிக்க விரும்பியது. ஆனால் அவர் BNP ஆள் என்று சொல்லி, அவாமி லீக் அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

தன் மீதான அவநம்பிக்கையால் வெறுத்துப்போன ஹஸன், தனக்கு உடம்பு சரியில்லை என்று ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அடுத்த இரண்டு முந்தைய நீதிபதிகளை அவாமி லீக் வலியுறுத்த அவர்களை ஏற்றுக்கொள்ள BNP மறுத்தது. தற்போதைய குடியரசுத் தலைவரான இயாஜுதீன் அஹமதையே ஆலோசகர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வைக்கலாம் என்று BNP யோசனை கூறியது. ஆனால் அவாமி லீக் அதனை ஏற்க மறுத்தது - ஏனெனில் இயாஜுதீன் அஹமது BNP கட்சியில் இருந்தவர், அந்த வழியில்தான் அவர் குடியரசுத் தலைவராகப் பதவிக்கு வந்தார்.

கடந்த சில தினங்களாக முக்கிய கட்சிகள் இரண்டும் தெருவில் இறங்கி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி குடியரசுத் தலைவர் இயாஜுதீன் அஹமத் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தானே ஆலோசகராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதாவது இப்பொழுதைக்கு குடியரசுத் தலைவரும் அவரே. கேர்டேக்கர் பிரதமரும் அவரே. இது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை.

இதை நிச்சயம் அவாமி லீக் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனை எதிர்த்து அவர்கள் தெருவில் இறங்கிப் போராடினால் பதிலுக்கு இயாஜுதீன் ராணுவத்தையும் காவலதுறையையும் ஏவிவிடலாம். விளைவு பல ஆயிரம் உயிர்கள் காலியாகும்.

பொதுவாக பொதுத்தேர்தல் என்றால் வங்கதேசத்தில் 2000 பேர்கள் வரை உயிரிழப்பார்கள்.

இம்முறை என்ன ஆகப்போகிறதோ!

முகமது யூனுஸுக்கு நோபல் பரிசு கிடைத்ததால் மகிழ்ந்திருக்கும் வங்கதேச மக்கள், அரசியல் ரீதியில் தம் நாட்டுக்கு எப்பொழுதுதான் முதிர்ச்சி கிட்டப்போகிறதோ என்று குழம்பிக் போயிருக்கிறார்கள்.

1 comment:

  1. Thanks for the crisp backgrounder.

    Dinamani's editorial (saved here: Bangladesh Elections - Kudos to the bipartisan system « Tamil News: "வங்கதேசத்தில் தேர்தல்") gave a rosy picture of 'impartial' superior handling by our neighbor.

    Your post clarified many of my questions.

    ReplyDelete