Wednesday, January 24, 2007

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா?

ஆளுநர் உரை என்பது அரசியல் கொள்கைகளை விளக்கும் மேடையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

முதலில், ஆளுநர் உரை என்பது பெயரளவில்தான். அதை எழுதுவது முதல்வரின் செயலகம். அதை அப்படியே படிக்கவேண்டியது மட்டும்தான் ஆளுநரின் பொறுப்பு.

ஆளுநர் பாராட்டுவதுபோல தனது அரசைத் தானே பாராட்டி முடித்ததும், அடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கை.

இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவை?

1. மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும். அப்பொழுதுதான் சரியான கூட்டாட்சி முறை நிலவும். முக்கியமாக மாநிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

2. சமூக நீதி. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது ஷரத்தில் இஷ்டத்துக்கு சட்டங்கள் செருகப்படுவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காததற்கு எதிர்வினை.

ஏற்கெனவே பல சட்டத் திருத்தங்கள் மூலம் அரசியல் அமைப்பில் தேவையான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய சட்டத்திருத்தங்கள், அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதிக்காதவண்ணம் இருக்கவேண்டும். அவ்வாறு பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் நினைத்தால் சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்க முடியும்.

மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டுமென்றால் அவற்றை சட்டத்திருத்தத்தின் மூலமாகவே செய்யமுடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி எழுத வேண்டியதில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தையும் அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பார்க்கிறது என்பதையும் கட்டுப்படுத்தவே அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது என்று தோன்றுகிறது.

பல நாடுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பலமுறை மாற்றி எழுதியுள்ளன என்று ஆளுநர் அறிக்கையில் வந்துள்ளது. நிலையான குடியாட்சி நாடுகளை எடுத்துக்கொள்வோம். எங்கு இவ்வாறு அரசியல் அமைப்பு பலமுறை மாற்றி எழுதப்பட்டுள்ளது? அமெரிக்காவில்? மேற்கு ஐரோப்பிய நாடுகளில்? ஆஸ்திரேலியாவில்? ஜப்பானில்?

எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு என்ன தருகிறது?

1. மக்களுக்கு அடிப்படை உரிமைகள்.
2. ஆட்சி முறை. தேர்தல் முறை. எந்த விதமான ஆட்சிமுறை வந்தாலும் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்க வேண்டும்.
3. ஆட்சி நடத்துவோர் எவ்வாறு வருமானத்தைப் பெறுவது, எந்தெந்தப் பணிகளை எந்தெந்த அரசுகள் செய்ய வேண்டும். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான உறவுகள்.
4. மக்களைக் கட்டுப்படுத்தும் அடிப்படைச் சட்டங்கள், மேற்கொண்டு சட்டம் இயற்றும் வழிமுறைகள், நீதிமன்றங்கள் எவ்வாறு உருவாக்கப்படும் ஆகியவற்றுக்கான விதிமுறைகள்.

பொதுவாக அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்படுவது ஆட்சிமுறை மாற்றத்தைச் செயல்படுத்தத்தான். சட்டத்திருத்தங்கள் மூலமாக மட்டுமே இதனைச் செய்வது சாத்தியப்படாது என்ற பட்சத்தில் இவ்வாறு செய்யப்படும்.

பாகிஸ்தானில் பல அரசியல் அமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1956, 1973, 1988 சட்டத்திருத்தம், அவ்வப்போது ராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை தொங்க விடுவது என்று ஏகப்பட்ட குழப்பங்கள். பிரதமர் ஆட்சியா, ஜனாதிபதி ஆட்சியா? ஒற்றையாட்சி முறையா, கூட்டாட்சி முறையா? உள்ளாட்சிக்கு அதிகாரங்கள் உண்டா, இல்லையா? இவைதான் பெரும்பாலும் அரசியல் அமைப்புச் சட்டங்களை மாற்றி அமைக்கத் தூண்டுகின்றன.

இலங்கையில் அரசியல் அமைப்புச் சட்டம் 1972-லும் பின்னர் 1978-லும் மாற்றி எழுதப்பட்டது. இங்கு ஆட்சி முறை மாறியதுடன் சிறுபான்மை மக்களது உரிமையும் மறுக்கப்பட்டது கவனத்தில் கொள்ள வேண்டியது.

பல நாடுகள் உடையும்போது, புது நாடுகள் உருவாகும்போது, புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கும். சேர்ந்து இருக்கும்போது தேவையான சில சட்டங்கள், அமைப்பு முறைகள் இப்பொழுது தேவையில்லை என்பதால்.

சில வருடங்களுக்கு முன் பாஜகவின் அத்வானி ஜனாதிபதி ஆட்சிமுறை வேண்டும் என்றும் அதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டும் என்றும் சொல்லியது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கலாம்.

இப்போதைய நிலையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

====

பங்களாதேச அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி (Referendum) அதிலும் பாதிக்கு மேல் வாக்குகள் பெறவேண்டும்.

அதே முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தினால்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தன்னிஷ்டத்துக்கு சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவதைத் தடுக்க முடியும். மேலும் சில சமயம் சில கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலம் கிடைக்கும்போது சர்வாதிகாரத்தனம் மேலோங்காமல் இருக்க வகை செய்யும்.

Tuesday, January 23, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை

நேற்றுடன் 30வது சென்னை புத்தகக் கண்காட்சி முடிவுற்றது. இந்த முறை புதிய இடம். இதுநாள்வரையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்துவந்த கண்காட்சி இம்முறை செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சில பதிப்பாளர்கள் இதனால் கூட்டம் வருமா என்று பயந்தனர். ஆனால் நல்ல கூட்டம் வந்தது. எப்பொழுதும் கண்காட்சிக்கு வரும் சிலர் வராமல் போயிருக்கலாம். ஆனால் அதனை ஈடுசெய்யும் வகையில் புதிய பலர் வந்திருந்தனர்.

புதிய இடம் பெரியது. அதனால் நிறைய கடைகள். அரங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நன்றாக எழுப்பப்பட்டிருந்தது. பலகைகள் போடப்பட்டு சமதளமான தரையாக இருந்தது. மேல்பகுதி முற்றிலும் மூடப்பட்டிருந்ததால் புழுதி குறைவு. ஆனால் காற்றோட்ட வசதி குறைவு. போட்டிருந்த மின்விசிறிகள் போதவில்லை. மார்கழி மாதத்தில்கூட மதியம் வெய்யில் கடுமையாக இருந்தது. வயதானவர்களும் சிறு குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர். சிலர் மூச்சுவிடக் கஷ்டப்பட்டனர். ஒரிருவர் தலைசுற்றி உட்கார இடம் தேடினர். அடுத்தமுறை பல இடங்களில் எக்ஸ்ஹாஸ்ட் விசிறிகள் வைக்க வேண்டியிருக்கும்.

இம்முறை நிறைய கடைகள். எப்பொழுதும் இருக்கும் 275க்கு பதில் கிட்டத்தட்ட 400. ஆனால் முழுவதும் சுற்றிப்பார்க்க முடியாமல் பலர் களைப்படைந்தனர். இரு வாயில்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வாயில் வழியாக கூட்டம் உள்ளே விடப்பட்டது. அதனால் அந்தந்த நாள்களில் முதல் வரிசையில் இருக்கும் கடைகளில் நல்ல விற்பனை. இவ்வாறு முதல் வரிசையில் இல்லாமல் நடுவில் இருந்த கடைகள் நல்ல விற்பனை இல்லாமல் திண்டாடினர். நடுநடுவே இருந்த எமெர்ஜென்சி வழிகள் வழியாக மக்கள் வெளியே செல்ல முற்பட்டனர்.

கழிப்பிட வசதி, உணவு வசதி ஆகியவை அரங்குக்கு வெளியே. ஒருமுறை நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே வந்தால், வெளியே போய்விட்டு மீண்டும் உள்ளேவர மற்றொரு நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நிற்கவேண்டும். இது சரியானதல்ல. அடுத்தமுறை அரங்கம் அமைக்கும்போது உணவு மற்றும் கழிப்பிட வசதிகளும் அடங்கிய வளாகத்தை அமைக்கவேண்டும். முக்கியமாக, கழிப்பிட வசதிகளை மேம்படுத்தவேண்டும்.

கடைசி நான்கு நாள்கள், பால் தினகரன், தினகரன் சுவிசேஷக் கூட்டத்துக்காக பார்க்கிங் வசதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால் பலருக்கும் பிரச்னைகள்.

-*-

புத்தகங்களைப் பொறுத்தமட்டில், ஒப்பீட்டு அளவில், தமிழ் பல வருடங்கள் பின்தங்கியுள்ளது. இந்த நிலை மாற இன்னமும் பல ஆண்டுகள் ஆகலாம். பல துறைகளில் அடிப்படையான புத்தகங்களே இல்லை. புத்தகத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு இதுவரை தமிழுக்கு வந்ததில்லை. குடிசைத் தொழிலாகவும் குடும்பத் தொழிலாகவும் மட்டுமே இருந்துவந்ததிலிருந்து கடந்த சில வருடங்களிதான் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களில் ஆனந்த விகடன் மட்டும்தான் புத்தகங்களைப் பதிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. விற்பனையைப் பொறுத்தமட்டில், இன்று தமிழின் முன்னணி புத்தகப் பதிப்பாளராகவும் உள்ளது. குமுதம், குங்குமம் போன்ற முதலீடு செய்யக்கூடிய, உள்கட்டமைப்புகள் கொண்ட வார இதழ் நிறுவனங்களும் தினத்தந்தி, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் போன்ற செய்தித்தாள் நிறுவனங்களும் தமிழ் புத்தகப் பதிப்பில் ஈடுபடவேண்டும். அது நிச்சயம் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தும்.

இவைதவிர தமிழின் முன்னணி பதிப்பாளர்கள் பலரும் அதிக அளவு முதலீட்டினைப் பெறும் வழிகளில் ஈடுபடவேண்டும். வீட்டின் முன்னறையில் நடத்தும் தொழிலாக நினைக்காமல் நிறுவனமயப்படுத்த வேண்டும். தொழில்முறை எடிட்டர்கள், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் வல்லுனர்களைக் கொண்டு புத்தகங்களை உருவாக்கி விற்கவேண்டும்.

சிறு பதிப்பாளர்கள் இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பெரும் பதிப்பாளர்கள் சிலராவது, மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டுசெல்வதன்மூலம் மட்டுமே புத்தகச் சந்தை விரிவடையும். அதன் பலனை சிறு பதிப்பாளர்களும் அடைவார்கள். ஆயிரம் பிரதிகள்தான் சந்தை என்பது போய் ஒரு நல்ல புத்தகம் (யார் பதிப்பித்திருந்தாலும் சரி), குறைந்தது பத்தாயிரம் படிகள் விற்கும் என்ற நிலை வரவேண்டும்.

-*-

தமிழில் புத்தகங்கள் அதிகமாக வரவேண்டிய சில துறைகள்:

* அனைவருக்கும் அறிவியல் (Popular Science). எளிமையாக, சாதாரண பொதுமக்களும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவியல் புத்தகங்கள் நிறைய வேண்டும். அறிவியல் என்றால் கணிதமும் சேர்த்து...

* குழந்தைகள் புத்தகங்கள். கடந்து செல்லவேண்டிய தூரம் வெகு அதிகம். சாகசக் கதைகள், வண்ணப்படக் கதைகள் (காமிக்ஸ்), படமில்லாத கதைகள், அறிவுப் புத்தகங்கள் என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

* உலக நடப்பு (Current Affairs), பொருளாதாரம், அரசியல்

* தொழில்நுட்பம்

* உலக இலக்கியம் (மொழிபெயர்ப்பாக)

-*-

கணினி மென்பொருள்களுக்கான அரங்குகள் குறைவுதான். அங்கு கிடைத்த பொருள்களும் குறைவுதான். Chennai Computer Club என்னும் அமைப்பு CCC Digital Library என்ற குறுந்தட்டை வெளியிட்டுள்ளது. இதில் பல காப்புரிமை இல்லாத நூல்கள் கிடைக்கின்றன. விலை ரூ. 250 என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் ரூ. 100க்குக் கிடைக்கிறது.

இதேபோல தமிழில் பல முயற்சிகள் இருந்திருக்கலாம். தமிழில் ஒரே ஒரு அகராதிதான் (பால்ஸ்) குறுந்தட்டு வடிவில் கிடைக்கிறது. அதுவும் அவ்வளவு திருப்தியாக இல்லை. தமிழில் டைப் செய்ய மென்பொருள்கள் இன்னமும் ரூ. 500க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. இ-கலப்பை முதல் எண்ணற்றவை இலவசமாகக் கிடைக்கும்போதே! தயாநிதி மாறன் கோடி கோடியாகச் செலவழித்து பல நூறு எழுத்துருக்களை இலவசமாகக் கொடுத்தபின்னும், எழுத்துருக்கள் விற்பனைக்குக் கிடைப்பதுபோல...

மற்றபடி கணினி உலகில் புதுமையாக எதுவும் என் கண்ணில் படவில்லை. புத்தக உலகில் சில ஆண்டுகள் பின்னடைவில் தமிழ் இருப்பதுபோல, கணினி உலகில் பல ஆண்டுகள் பின்னணியில் இருக்கிறோம் போல...

அனிமேஷன் கேளிக்கை குறுந்தட்டுகள் சுமார் ரகம்தான். அனிமேஷன் செய்ய செலவு அதிகம் என்பதும் சந்தை சிறியது என்பதும் முக்கியமான காரணங்கள். இங்கும் பெருமளவுக்கு பண முதலீடு உள்ளே வரவேண்டும்.

-*-

பல ஆன்மிக மடங்கள் (சாமியார்கள்) புத்தகக் கண்காட்சி அரங்கில் இடம்பெற வேண்டுமா என்ற கேள்வி உண்டு. அவர்களும் புத்தகங்கள்தானே விற்கிறார்கள் என்று பதில் வரலாம்.

வேண்டுமானால் ஆன்மிக வரிசை, கணினி வரிசை என்று தனித்தனியாக வழி பிரித்து அவர்களுக்கு அங்கு இடம் ஒதுக்கலாமோ என்று தோன்றுகிறது. இதனால் தேடிச் செல்பவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும்.

வாசலில் பெங்களூரு கண்காட்சியில் வைப்பதுபோல இண்டெக்ஸ் - எந்தக் கடை எண்ணில் யார் யார் உள்ளனர் என்பதைக் கொடுத்திருக்கலாம். பலரும் குறிப்பிட்ட புத்தகங்களையோ, குறிப்பிட்ட பதிப்பகங்களையோ தேடி வந்தனர். சரியாக இடம் சொல்ல முடியவில்லை.

பல இடங்களில் தொடுதிரை கணினி வசதியைச் செய்துகொடுக்க முடியும் என்று தோன்றுகிறது. யார் யார் எங்கே இருக்கிறார்கள், எந்தெந்தப் புத்தகம் எந்தக் கடைகளில் கிடைக்கும் என்பதை கண்காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே கொடுத்துவைக்கலாம்.

-*-

மணிமேகலை ஸ்டாலில் தினமும் பல பிரபலங்கள் வந்தனர். எனி இந்தியன் புத்தக வெளியீடுகளை நடத்தியது. காலச்சுவடு எழுத்தாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தது. உயிர்மை சில நாள்கள் எழுத்தாளர்களை வரவழைத்து வாசகர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தது. பல எழுத்தாளர்களும் சினிமாத்துறையினரும் வந்திருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டு கடக்கும்போதும் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னையின் முக்கியமான கலாசார நிகழ்வாக வலுப்பெறுவது சந்தோஷமே.

-*-

முதல்வர் கருணாநிதி இரண்டு முறை வந்தபோதும் குழப்பங்கள் ஏற்பட்டன. இப்போது பாதுகாப்பு கெடுபிடி அதிகமாகியுள்ளது. மோப்ப நாய் வந்து ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான பொருள் உள்ளதா என்று கண்காணிக்கிறது. நிறைய காவலர்கள் தேவைப்படுகிறார்கள். முதல்முறை போட்டோகிராபர்கள் செய்த களேபரத்தால் முதல்வர் உடனடியாக வெளியேறவேண்டி இருந்தது. இரண்டாம் முறை, பார்வையாளர்களை உள்ளேவிடாமல் ஒரு மணிநேரம் வெளியே நிறுத்தவேண்டி வந்தது.

பிற அமைச்சர்கள் வந்தபோது இதுபோன்ற கெடுபிடிகள் ஏதுமில்லை. பக்கத்தில் ஒரு காவலர்கூட இல்லாமல் துரைமுருகன், ராஜா போன்றோர் வந்துவிட்டுச் சென்றனர்.

-*-

ஆங்கிலப் பதிப்பகங்கள் பல இந்தக் கண்காட்சிக்கு வரவேயில்லை. ரூபா அண்ட் கோ இருந்தனர். ஆனால் பெங்குவின் தனி அரங்கு அமைக்கவில்லை. தில்லியைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வரவேயில்லை. கணினி புத்தக விற்பனையாளர்கள் மிகக்குறைவாகவே வந்திருந்தனர். இதற்கு ஆங்கில ஸ்டால்களுக்கு மிக அதிகமாக வாடகை வசூலிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். (தமிழைப் போல் இரண்டு மடங்கு.) இது வேறெந்த ஊரிலும் நடப்பதில்லை. எனவே பபாஸி இந்த முறையை மாற்றவேண்டும்.

இரண்டு தெலுங்கு, ஒரு கன்னடம், ஒரு மலையாளம் ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. மேலும் சிலவற்றை வரவழைக்க முயற்சிகள் எடுத்திருக்கலாம்.

-*-

சுபம்!

Sunday, January 14, 2007

தமிழில் MP3 ஒலிப்புத்தகங்கள்

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் தமிழில் ஒலிப்புத்தகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளது.

இவை பெரும்பாலும் கிழக்கு, வரம் ஆகியவை வாயிலாக வெளிவந்த அச்சுப் புத்தகங்களின் ஒலிவடிவம். எழுத்துவடிவம் சுருக்கப்படாமல், தேர்ந்த குரல்களை உடையோரால் அப்படியே படிக்கப்பட்டு, இசை சேர்க்கப்பட்டு MP3 வடிவில் குறுந்தட்டாகக் கிடைக்கிறது.

ஒவ்வோர் ஒலிப்புத்தகமும் 2.30 மணிநேரம் முதல் 4.30 மணிநேரம் அல்லது அதற்குமேலும் செல்லும். தனித்தனி அத்தியாயங்களாக இருப்பதால் வேண்டிய இடத்துக்குச் சென்று, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து கேட்கமுடியும்.

இப்பொழுது இவை குறுந்தட்டு வடிவில் மட்டுமே கிடைக்கின்றன. விரைவில் இணையத்தில் இறக்கிக்கொள்ளுமாறும் செய்யப்படும்.

சென்னை புத்தகக் காட்சியில் F-5 அரங்கில் ஒலிப்புத்தகத்தைக் கேட்க ஆடியோ வசதி செய்யப்பட்டுள்ளது.

வரம் ஒலிப்புத்தகங்கள்

* பரணீதரனின் அன்பே அருளே
* சிரஞ்சீவி
* சுந்தரகாண்டம்
* சித்தமெல்லாம் சிவமயம் (சித்தர்கள் பற்றி)
* பாடிக்களித்த 12 பேர் (ஆழ்வார்கள் பற்றி)

கிழக்கு ஒலிப்புத்தகங்கள்

வாழ்க்கை: (அனைத்தும் சொக்கன் எழுதியவை)
* அம்பானி
* நாராயணமூர்த்தி
* லக்ஷ்மி மிட்டல்

தன்னம்பிக்கை
* நாகூர் ரூமியின் அடுத்த விநாடி
* சோம வள்ளியப்பனின் உஷார்! உள்ளே பார்!
* சோம வள்ளியப்பனின் இட்லியாக இருங்கள்!

புனைகதை
* இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
* ஆதவன் குறுநாவல்கள் (இரவுக்கு முன்பு வருவது மாலை)

வரலாறு
* மதனின் கிமு கிபி
* மதனின் வந்தார்கள் வென்றார்கள் (இரண்டு குறுந்தட்டுகள்)

அரசியல்
* பா.ராகவனின் ஹிஸ்புல்லா

இப்போதைக்கு ஏழுதான் புத்தகக் காட்சி அரங்கில் கிடைக்கும். அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் தமிழகமெங்கும் கடைகளில் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் புதுப்புது ஒலிப்புத்தகங்களும் வெளியாகும்.

Saturday, January 13, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 4

13/1/2007.

* இன்று காலை 11.00 முதற்கொண்டே கண்காட்சி திறந்திருந்தது. நல்ல கூட்டம். காயிதே மில்லத் கல்லூரிக்கு எந்த அளவிலும் குறையவில்லை. ஆனால் இங்கு இடம் அதிகம். அதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழாமல் நடக்கமுடிந்தது.

* நடிகர் சூர்யாவின் வாழ்க்கை அல்லயன்ஸ் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. சாலமன் பாப்பையா வெளியிட்டார். நடிகர் சிவக்குமார், சூர்யா ஆகியோர் வந்திருந்தனர். ஜோதிகா வரவில்லை என்று நினைக்கிறேன். நான் வாசலுக்குச் சென்று பார்க்கவில்லை. சூர்யா புத்தகங்களில் கையெழுத்து இட்டுத் தருவதாகச் சொன்னார்கள். அவர் எவ்வளவு புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார் என்று தெரியாது.

* கங்கை அமரன் ஸ்பெஷல் ஷோ ஒன்று நடத்தினார். இசைக்கச்சேரி அல்ல, பேச்சுக் கச்சேரி.

* Pictures of the day:


நுழைவாயிலில் பிரம்மாண்டமாக தமிழகத்தின் பல்வேறு முக்கியமான லேண்ட்மார்க் விஷயங்களைப் படமாக வைத்துள்ளனர்.

Friday, January 12, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 3

12/1/2007.

* அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று வந்திருந்தார். இத்துடன் அமைச்சர் குழாம் விழா நாயகர்களாக வருவது முடிவுற்றது. ஏதாவது அறிவிப்புகள் இருந்தனவா என்று கவனிக்கவில்லை.

* இன்றைய பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன் 'உலகைக் குலுக்கிய புத்தகங்கள்' என்ற தலைப்பில் பேசினார். இவர் ஈரோடு புத்தகக் கண்காட்சியை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இன்று புதிதாக மூன்று மொபைல் கழிப்பறைகள் முளைத்திருந்தன. ஆனால்... மிகக் கொடுமையாக அசிங்கம் செய்திருந்தனர் மக்கள். ஒருவேளை மக்களைச் சொல்லிக் குற்றமில்லை என்று நினைக்கிறேன். தண்ணீர் இல்லையோ என்னவோ... ஃப்ளஷ் செய்யப்படாது மோசமான நிலையில் இருந்தன.

* எழுத்தாளர் சா.கந்தசாமி தினசரி வருகிறார். அசோகமித்திரன் இன்று வந்திருந்தார். மதன் இன்று வந்திருந்தார். வேறு பல பிரபலங்களும் வந்திருக்கலாம். என் கண்ணில் படவில்லை.

Smile of the day:


மேலே இருப்பது ஆதி 'த' சாம்ராஜ் என்னும் ஒரு சாமியார்(!) குழு போட்டிருக்கும் ஸ்டால். நான்கைந்து வெள்ளைக்காரிகளை வைத்துக்கொண்டு என்ன விற்கிறார்கள் என்று பார்த்தேன். அவர்களது இணையத்தளத்தைப் படித்தால் உங்களுக்கு வரும் சிரிப்புதான் இன்றைய ஸ்மைல் ஆஃப் தி டே.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய கடவுளாவது / அவதாரமாவது கண்ணில் தென்படுகிறார். இவர்களுக்கென்றே தனியாக ஒரு கண்காட்சி போட்டுவிடலாம்.

Picture of the day:


விகடன் நிறுவனமும் பிர்லா கோளரங்கமும் இணைந்து நிறுவியிருக்கும் 'அறிவியல் விளையாட்டு அரங்கம்'. குழந்தைகளை அவசியம் அழைத்துச் செல்லவேண்டிய இடம்.

Thursday, January 11, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 2

11/1/2007. இதுதான் 'officially' முதல் நாள். நல்ல கூட்டம். புது மக்கள் நிறைய இருந்தனர். மதியம் 2.00 மணி முதற்கொண்டே கூட்டம் உள்ளே வரத்தொடங்கியது.

ஆனால் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை நடந்து செல்வதில் பலரும் கஷ்டப்பட்டனர். நடுநடுவே இருந்த எமெர்ஜென்சி பாதை வழியே குறுக்காகச் செல்ல மக்கள் முற்பட்டனர். அவர்களைக் காவலர்களும் சில கடைக்காரர்களும் தடுத்தனர்.

Other news

* முதல்வர் ஒரு கோடி ரூபாய்க்கு காசோலையை அனுப்ப (நேற்று சொல்லி, இன்று பணம் தயார்!) காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.

* கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது "தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே கலைஞர் நிறைவேற்றிவிட்டார், இங்கு (முதல்நாள்) கொடுத்த வாக்குறுதிகள் எம்மாத்திரம்?" என்றார்.

* கழிப்பிட வசதிகள் சுமார். கிடையவே கிடையாது. எங்கோ பாழடைந்த கட்டடம் போன்று இருந்த ஓரிடத்தில் பெண்களுக்கான கழிவறை இருந்தது. அங்கு விளக்குகள் ஏதும் இல்லை. இந்தியாவில் ஆண்களுக்கு கழிப்பறையே தேவையில்லை. அவர்கள் ஆங்காங்கு ஒதுக்குப்புறமாகத் தங்கள் வேலைகளைச் செய்தனர். பெண்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டனர்.

நாளைக்குள் நிர்வாகத்தினர் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம்.

* திடீரென குமுதம் ஸ்டாலில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் பக்கம் வருபவர்களுக்கு ஒரு புத்தகம் இலவசம் என்று அறிவித்தனர். ஒரே கூட்டம். கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் வரிசையில் நின்றனர். இதனால் பிற கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட, பலரும் சத்தம்போட, அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது.

இலவசம் என்பதற்காக...

Smile of the day:



பல்லோடு ஸ்மைல்.

Picture of the day:



தென்கச்சி சுவாமிநாதன் பேசுவதைக் கேட்கும் மக்கள்.

சென்னை புத்தகக் காட்சி: நாள் 1

10/1/2007. புது இடம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக உள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 30-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது.

தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

Announcements for the day:

* முதல்வர் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ. ஒரு கோடியை எழுத்தாளர்களுக்காக என்று நன்கொடையாகக் கொடுப்பதாக அறிவித்தார். இந்தப் பணத்தை வைப்புநிதியில் வைத்து இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஆண்டுக்கு ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய்கள் பரிசாக அளிக்க வேண்டும். இந்த நிதியை நிர்வகிப்பது பபாஸி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்.

* நிரந்தரப் புத்தகக் கண்காட்சி ஒன்று அமைய அரசு 50% செலவை ஏற்கும். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இரண்டு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தை அரசு பதிப்பளர்களுக்கு வழங்கும். பபாஸி/பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து மீதிப் பணத்தை செலவழித்து இடத்தைக் கட்டிக்கொள்ளவேண்டும். எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் அல்லது சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் இடங்கள் உள்ளன. (என்னுடைய விருப்பம் எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் உள்ள இடம்...)

Awards for the day:

* சிறந்த எழுத்தாளர்: பிரபஞ்சன்
* சிறந்த குழந்தை எழுத்தாளர்: ரேவதி எனும் பெயரில் எழுதும்/எழுதிய ஹரிஹரன்
* சிறந்த பதிப்பகம்: பிரேமா பிரசுரம்
* சிறந்த புத்தகக் கடை: திருச்சி அகத்தியர் புத்தக நிலையம்

Other news

* முதல்வர் மின்சார காரில் அரங்கைச் சுற்றி வருவதாக இருந்தது. ஆனால் பத்திரிகை படம்பிடிப்போர் அடித்துப் பிடித்து காவலர்களைத் தள்ளி அமளி செய்ததில், முதல்வர் வாசலோடே கிளம்பிவிட்டார். இவ்வளவு அடாவடியான போட்டோகிராஃபர்களை நான் பார்த்ததே இல்லை.

* முதல்வர் வந்ததால் காவல்துறை அனுமதிச்சீட்டு இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. முதல்வர் சென்றபிறகே 6.30 மணி அளவில்தான் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். காயிதே மில்லத் கல்லூரியைவிட இந்த இடம் ஊருக்குத் தொலைவில் இருப்பதாலும் முதல் நாள் கூட்டம் சற்றே குறைவாக இருந்தது.

Smile of the day:



வாயெல்லாம் பல்லாக - அல்லது பல் இல்லாத ஈறாக.

Picture of the day:



Prodigy Books (ஸ்டால் எண் 205/206) அறையில் குழந்தைகள் வண்ணம் தீட்டுகின்றன.

Monday, January 08, 2007

குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்

தமிழில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வழவழப்பான வண்ணத்தாளில், தரமான விதத்தில், குறைவான விலையில் கிடைப்பதில்லை என்ற குறை இருந்துவந்துள்ளது.

அதனைப் போக்கும் விதத்தில், புத்தகங்கள் கொண்டுவரவேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வேலை செய்துவருகிறோம். இதற்கென நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் உருவாக்கியிருப்பதுதான் Prodigy Books.

தமிழில் மட்டுமன்றி, பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இந்தப் பதிப்பு புத்தகங்களை உருவாக்கும். தமிழ், ஆங்கிலம் ஒவ்வொன்றிலும் 12 புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சியில் களமமிறங்கிறோம். ஸ்டால் எண்கள் 205, 206-ல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.

குழந்தைகளுக்குக் கதையும் இருக்க வேண்டும், அதே சமயம், நீதிக் கதைகள் போன்று இல்லாமல், அறிவைப் புகட்டுவனவாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதையின் கதாநாயகர்கள் - விக்கி எனும் சிறுவன், ரேவா என்னும் சிறுமி. இவர்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, பிற விலங்குகள், பறவைகள், மனிதர்களுடன் உலகைச் சுற்றி உண்மைகளைக் கற்பார்கள்.

1. ஹாய் கம்ப்யூட்டர்! (குட்டிப் பசங்களுக்கு கம்ப்யூட்டர், சுட்டிப் பையன் விக்கியோட டூர் போலாம் வாங்க!)
2. மீனம்மா, மீனம்மா (ரேவாவை கடலுக்கு அடியில் அழைத்துப் போகிறது ஸ்நூ! அடேங்கப்பா! அங்க எவ்ளோ விதவிதமான மீன்கள்!!)
3. ஜப்பானை சுத்திப் பாக்கப் போறேன்! (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான்! பெரிய சுமோ சாம்பியன்!)
4. hello நான் ரிசீவர் பேசறேன்! (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா?)
5. விக்கியைத் துரத்திய டைனோசர்! (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க!)
6. புல்புல் கொடுத்த பெட்ரோல்! (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம்!)
7. விண்வெளியில் விக்கி! (குறும்புக்கார விக்கி விண்வெளியை நோக்கி... கூடவே புஸ்புஸ்ஸும் துறுதுறு ஜோஜோவும்!)
8. எங்க போச்சு சூரியன்? (காணாமல் போன சூரியனை, தேடிச் செல்கிறான் விக்கி!)
9. விக்கி vs விக்கி (சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், லாரி... அப்பப்பா! ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா!)
10. ரயிலே... ரயிலே... (ரயிலை கோட்டை விட்டுட்டான் விக்கி. அதனாலென்ன? இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி!)
11. விமானத்தில் கலாட்டா! (விமானத்துல விக்கி, ரேவா! குறும்பு செய்ய குட்டி வாண்டுகள். அப்புறமென்ன? ஒரே ரகளைதான்!)
12. ஏலேலோ ஐலசா! (கட்டுமரத்துல போன ரேவா கப்பலில் திரும்பி வந்த கதை!)

இவை 16 அல்லது 24 பக்கங்களில் இருக்கும். தமிழில் ரூ. 25 அல்லது ரூ. 30 என்ற விலையிலும், ஆங்கிலத்தில் ரூ. 35 அல்லது ரூ. 40 என்ற விலையிலும் கிடைக்கின்றன.

அடுத்த மாதம் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகும்.

பர்வேஸ் முஷரஃப், In the Line of Fire

நாளை (செவ்வாய்), 9 ஜனவரி 2007, மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டை ஹோட்டல் டே'ஸ் இன், டெக்கான் பிளாஸாவில் (Day's Inn, Deccan Plaza), பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய "In the Line of Fire, A Memoir" என்னும் புத்தகத்தின் தமிழாக்கம் "உடல் மண்ணுக்கு" வெளியிடப்படுகிறது. புத்தகத்தை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளோர்:

1. பி.எஸ்.ராகவன், Former Director (Political), Ministry of Home Affairs, Govt. of India
2. பி.ராமன், Former Additional Secretary, Cabinet Secretariat, Govt. of India
3. Col. R.ஹரிஹரன், Retd. Military Intelligence Officer

இவர்கள், பாகிஸ்தானும் இந்தியாவில் பயங்கரவாதமும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கார்கில் போர், மற்றும் பிற எல்லைப் பிரச்னைகள், இந்தியா-பாகிஸ்தான் அமைதி ஆகியவை பற்றி பேச உள்ளனர்.

வரவேற்பு: பத்ரி சேஷாத்ரி, நன்றியுரை: நாகூர் ரூமி

அரங்கில் அதிக இடங்கள் இல்லாததால், வரவிரும்புபவர்கள் முன்கூட்டியே வந்து இடங்களில் அமர்ந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துப்பறியும் சாம்பு

இன்று (திங்கள்), 8 ஜனவரி 2007, மாலை 6.00 மணிக்கு மயிலாப்பூர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ஆர்.கே.சுவாமி அரங்கத்தில், 'துப்பறியும் சாம்பு' செம்பதிப்பு, கிழக்கு பதிப்பகம் மற்றும் தேவன் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்:
6.00: கதை சொல்கிறார் சஞ்சய் சுப்ரமணியன்
6.15: வரவேற்புரை - சாருகேசி, தேவன் அறக்கட்டளை
6.30: நூலை வெளியிடுபவர்: ஓவியர் கோபுலு, பெற்றுக்கொள்பவர்: மதன், சிறப்புரை: மதன்
வாழ்த்துரை: பாக்கியம் ராமசாமி, கிரேஸி மோகன், சஞ்சய் சுப்ரமணியன்
7.30: காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் துப்பறியும் சாம்பு நாடகத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி வீடியோ
7.50: நன்றியுரை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்

அனைவரும் வருக.