Friday, February 02, 2007

டாடா - கோரஸ்

டாடா குழுமம் கடைசியாக கோரஸ் என்னும் பிரிட்டன் - டச்சு உருக்கு நிறுவனத்தை விலைக்கு வாங்குவதில் வெற்றி கண்டுள்ளது. உடனடியாக 'இந்தியா வாழ்க', 'இந்நாள் பொன்னாள்' என்னும் பதிவும் 'தரகு முதலாளித்துவ டாடா ஒழியப்போகிறது; போகும்போது இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் வயிற்றில் அடித்துவிட்டுத்தான் போகப்போகிறது' என்னும் பதிவும் கண்ணில் பட்டன.

லக்ஷ்மி மிட்டல் சம்பாத்தியம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் கிடைத்தது. அவரது வளர்ச்சி சாமர்த்தியமான வளர்ச்சி. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் மிட்டல் கையில் எத்தனை பணம் இருந்தது என்றால் அதிகம் ஒன்றுமில்லை என்றுதான் பதில் கிடைத்திருக்கும். அவரது தந்தையும் மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி மேய்க்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி உலகின் ஐந்தாவது பணக்காரராகவும் உலகிலேயே மிக அதிகமாக உருக்கு இரும்பைத் தயாரிப்பவராகவும் மிட்டல் ஆனார் என்ற கேள்வி எழும். மிட்டலின் சாமர்த்தியம் நஷ்டத்தில் இயங்கும் உருக்கு நிறுவனங்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, அதுவும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்மூலம் வாங்கி, அந்த ஆலைகளை லாபம் பெறச் செய்து, கடனை அடைத்து நிறுவனத்தை முழுமையாகத் தன் கைக்குள் கொண்டுவரச் செய்வது.

டாடா நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் மூன்று டாடாக்கள் வருகிறார்கள். மூவரும் அவரவர் அளவில் மிகப் பெரிய ஆளுமைகள். டாடா குழுமத்தை ஆரம்பித்த ஜாம்ஜெட்ஜி டாடா (தாடிக்காரர்), ஜெஹாங்கீர் டாடா (ஜே.ஆர்.டி), இப்பொழுதைய ரத்தன் டாடா. (நேரடி உறவினர்கள் கிடையாது. ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட உறவு.)

ஜாம்ஷெட்ஜி, காலனிய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் தொழில்மூலம் பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருந்தனவோ, அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டார். ஜெஹாங்கீர் பாதி பிரெஞ்சுக்காரர். பெரும்பாலும் வெளிநாடுகளில் வளர்ந்தவர். டாடா குழுமத்தை மிகப்பெரும் தொழில் குடும்பமாக மாற்றியவர். பல புதுமையான தொழில்களைக் கொண்டுவந்தவர். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்தவர்.

ஜெஹாங்கீர் டாடாவின் கடைசிக் காலத்தில் டாடா குழுமத்தின் பல தொழில்கள் பிய்த்துக்கொண்டு போக முற்பட்டன. இந்திரா காந்தியின் அதீத சட்டங்களுக்குப் பயந்து ஜெஹாங்கீர் பல குழும நிறுவனங்களில் மிககுறைந்த அளவுக்கான பங்குகளையே வைத்திருந்தார். ஒவ்வொரு டாடா நிறுவனத்தையும் (டெல்கோ, டிஸ்கோ, டைடன் ....) ஒரு படைத்தளபதி ஆண்டுவந்தார். எப்படி ராஜாவுக்கு வயதாகும்போது தளபதிகள் தம்முடைய பகுதியை எடுத்துகொண்டு தங்களையே ராஜாவாக அறிவிப்பார்களோ அதுதான் நடக்க ஆரம்பித்தது. ரத்தன் டாடா குழுவின் சேர்மனாக அறிவிக்கப்பட்டதும் இப்படியான தளபதிகளை அடக்கி, துரத்தி, மீண்டும் குழுமத்தை ஒரு குடையின்கீழ் வலுப்படுத்தினார்.

டாடா குழுமம் அப்பொழுது பல நூறு தொழில்களில் இருந்தது. ரத்தன் அவற்றில் பலவற்றை விற்றார். புதிதாகச் சில தொழில்களில் இறங்கினார் (டெலிகாம்). பலவற்றை வலுப்படுத்தினார்.

இப்பொழுது டாடா குழுமத்தின் மிக முக்கியமான தொழில்கள் இவை:
* டாடா கன்சல்டன்சீஸ் (மென்பொருள், தகவல் தொழில்நுட்பம்)
* டாடா மோட்டார்ஸ் (கனரக, இலகுரக மோட்டார் வாகனங்கள், கார்கள்)
* டாடா ஸ்டீல் (இரும்பு, உருக்கு உற்பத்தி)
* டாடா டெலிகாம், வி.எஸ்.என்.எல்... (தொலைத்தொடர்பு)

இவைதவிர இன்ஷூரன்ஸ், நிதி மேலாண்மை, ஹோட்டல்கள், வாட்ச்கள், வோல்டாஸ் ஏர்கண்டிஷனர்கள், ரசாயனம் என பல துறைகளில் உள்ளனர். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு துறைகளில்தான் எதிர்கால வளர்ச்சி உள்ளது.

டாடா கன்சல்டன்சீஸ் நிறுவனம் இந்தியாவின் மென்பொருள் துறையில் முதலாவதாக உள்ள நிறுவனம். கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர் மார்க்கெட் கேபிடலைசேஷன் உள்ள நிறுவனம். ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலருக்குமேல் வருமானமும், சுமார் ஒரு பில்லியன் டாலருக்குமேல் லாபமும் பெறும் நிறுவனம். அடுத்த பல வருடங்களில் மாபெரும் வளர்ச்சி காணப்போகும் இந்திய நிறுவனங்களுள் முக்கியமானதாக இருக்கப்போகிறது.

டாடா டெலிகாம், வி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் சற்றே பின்னணியில் இருப்பவை. வேகமாக இயங்காத காரணத்தால் டாடா குழுமம் இந்தத் துறையில் பல வாய்ப்புகளை இழந்தது. ஐடியா செல்லுலார் நிறுவனம் தொடர்பான குழப்பங்கள் அவர்களை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளியது. இந்தக் குழப்பங்கள் இப்போது ஓரளவுக்கு மறைந்துள்ளன என்றாலும் டாடாவின் மொபைல், பிற தொலைபேசிச் சேவைகள் மெதுவாகவே வளர்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக அரங்கில் மிகச்சிறிய நிறுவனம். சிங்கூர் விவகாரத்தால் (ஒரு லட்சம் ரூபாய் கார்) பெரிய அளவில் பேசப்பட்டாலும் இந்திய அளவிலேயே பெரும் இடத்தைப் பிடிக்க நிறைய வேலைகளைச் செய்யவேண்டும். கொரியாவின் தேவூ நிறுவனத்தின் சில சொத்துக்களை வாங்கியதன்மூலமும் தென் ஆப்பிரிக்காவில் கால் ஊன்றியதன்மூலமும் உலக அளவிலும் தன் சந்தையை விரிவாக்க நினைக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா ஸ்டீல், கோரஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன்மூலம் உலகின் ஐந்தாவது பெரிய உருக்கு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆனால் கொடுத்த விலை அதிகம் என்று பலர் நினைக்கிறார்கள். விலை அதிகமானாலும் இந்த விலையைக் கொடுக்கக்கூடிய திறன் இந்தியாவின் வெகுசில நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது. கோரஸ் நிறுவனத்தை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர்கள் தேவை. டாடா கன்சல்டன்சீஸ் நிறுவனத்தின் 80% பங்குகள் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. மீதிப் பங்குகள் பொதுச்சந்தையில் உள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர்கள். டாடா சன்ஸ் மேலும் 20% டாடா கன்சல்டன்சீஸ் பங்குகளை அமெரிக்க / பிரிட்டன் பங்குச்சந்தையில் வெளியிடுவதன்மூலம் 7 பில்லியன் டாலராவது பெறமுடியும். (வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் பிரீமியம் அதிகம் கிடைக்கும். இப்பொழுது இன்போசிஸ் பங்குகள் அப்படித்தான் உள்ளன.)

மீதப் பணத்தை டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகியவை கொஞ்சமும், கடன்கள் மூலமும் பெறலாம். பின்னர் டாடா ஸ்டீல் + கோரஸ் நிறுவனத்தை பிரிட்டன் பங்குச்சந்தைக்குக் கொண்டுவந்து 20% பங்குகளை வெளியிட்டால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடன்களை வெகுவாகக் குறைக்கமுடியும்.

சர்வதேச நிதிச் சந்தையை டாடா குழுமம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தேவையான பணத்தை எளிதாகப் பெறமுடியும்.

வேறு எந்தச் சொத்தும் இல்லாத நிறுவனம்தான் முழுக்கவே கடன்களை நம்பி இயங்க வேண்டியிருக்கும் (CSN போல). மிகச்சிறிய நிறுவனமான டாடா ஸ்டீல், கோரஸ் நிறுவனத்தை வாங்கியது ஒரு பெரிய விஷயம் என்று பார்க்கக்கூடாது. டாடா குழுமம் என்று ஒருசேரப் பார்க்கும்போது அது கோரஸ் நிறுவனத்தைவிடப் பல மடங்கு பெரியது.

கோரஸை வாங்கியதுபோலவே டாடா குழுமம் ஐரோப்பாவில் நலிந்த நிலையில் இருக்கும் மோட்டார் கார் நிறுவனம் ஒன்றையும் வாங்க முற்படலாம். அதன்மூலம் பெரிய ஐரோப்பியச் சந்தைக்கு இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வழியைப் பார்க்கலாம். இந்தியாவுக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் அதன்மூலம் எளிதாகப் பெறலாம். அதுதான் அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.

4 comments:

  1. உருப்புடியான ஒரு பதிவு...நிறைய விஷய தெளிவு...

    ஆனா பெரிய டாட்டாவை தாடிக்காரர் என்று சொல்லிட்டீங்களே ? அவர் கோச்சுக்கப்போறாருங்க...:))))

    ReplyDelete
  2. இரண்டு நாட்களாக செய்தித்தாள்களில் பல நிமிடங்கள் செலவழித்து படித்ததை விட இரண்டு நிமிடங்களில் அதிகம் புரிந்து கொண்டது போல உள்ளது. எளிமையாக தமிழில் வர்த்தகம் பற்றி எழுத முடியும் என்பதை உணர்த்தும் பதிவு!

    ReplyDelete
  3. Badri, good article. Finally CK Prahalad bottom of pyramid is happening.. Indian companies in manufacturing sectors also started really thinking global. When i was talking to one CEO, he was mentioning "first we would like to be kitchen for the world market, then we will serve in the dining table too.. " TATA will prove its ethical DNA to the world

    Mani, Techoptions, Mumbai

    ReplyDelete
  4. A related post.

    http://nextindia.blogspot.com/2007/01/tata-steel-corus-are-we-cheering.html

    ReplyDelete