Tuesday, March 20, 2007

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்

லக்கிலுக் தன் பதிவில் பாப் வுல்மர் நிறவெறி, இனவெறிக்கு எதிராகப் போராடிய மாவீரன் என்று எழுதியுள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியதுகூடக் கிடையாது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை.

பேசில் டி'ஒலிவேரா என்ற கிரிக்கெட் வீரர் தென்னாப்பிரிக்காவில் கலப்பினத்தவராகப் பிறந்தவர். மிக நன்றாகக் கிரிக்கெட் விளையாடுவார். ஆனால் முதல் தர விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடையாது. இதனால் பேசில் இங்கிலாந்து (பிரிட்டன்) நாட்டுக்குச் சென்றுவிட்டார். சில வருடங்கள் அங்கு வசித்து, குடியுரிமை பெற்று, அந்த நாட்டு அணிக்கு விளையாடத் தகுதி பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் விளையாடினார்.

1970-ல் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா செல்லவேண்டும். அந்த அணியில் பேசில் டி'ஒலிவேரா சேர்க்கப்படவில்லை! அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் உண்மையில் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் போர்ட் பேசிலை இங்கிலாந்து அணியில் சேர்க்கக்கூடாது என்று தீவிரமாக முனைந்து எம்.சி.சியின் மனத்தை மாற்றியுள்ளது. பிற்காலத்தில் பேசில், தனக்கு நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் இங்கிலாந்தில் பெரும் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. பலரும் சேர்ந்து போராடி இங்கிலாந்து அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தை ரத்து செய்யவைத்தனர்.

அதைத் தொடர்ந்து நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா தன் நிறவெறிக் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அலி பேக்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவின் வெள்ளை கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பணத்தைக் காண்பித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை தென்னாப்பிரிக்கா வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். அப்படியான கிரிக்கெட் போட்டிகளுக்கு 'ரிபெல் டூர்ஸ்' என்று பெயர். இப்படி ரிபெல் பயணங்களில் சென்றவர்களை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் தம் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. சில போர்டுகள் அந்த விளையாட்டு வீரர்கள்மீது வாழ்நாள் தடையை விதித்தனர். ஆனால் சில போர்டுகள் (வெள்ளை இன நாட்டவர்...) சில வருடத் தடையை மட்டுமே விதித்தன.

1970களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து ரிபெல் பயணங்கள் நடைபெற்றன. 1980களில் இந்த ரிபெல் பயணங்களில் கறுப்பின நாடுகளும் பங்கேற்றன. உதாரணத்துக்கு இலங்கையிலிருந்து பந்துல வர்ணபுரா தலைமையில் ஓர் அணி சென்றது. மேற்கிந்தியத் தீவுகள் பக்கமிருந்தும்கூட அணிகள் சென்று அங்கு விளையாடியுள்ளன. (அதில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் (கயானா) வேகப்பந்து வீச்சாளர் காலின் க்ராஃப்டுடன் இதுபற்றி நான் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.)

நிறவெறிக் காரணத்துக்காகத் தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டுக்கு, பணம் காரணமாகச் சென்று கிரிக்கெட் விளையாடுவது ஒருவிதத்தில் நிறவெறிக்கு ஆதரவானது என்றுதான் கொள்ளவேண்டும். இதுபோன்ற ஒரு பயணத்தில்தான் பாப் வுல்மர் இங்கிலாந்து ரிபெல் அணிக்காக விளையாடினார். கிரஹாம் கூச், மைக் கேட்டிங் போன்ற பெரும் ஆசாமிகளெல்லாம் இந்த ரிபெல் டூர்களில் கலந்துகொண்டு மூன்று வருடம் தடையைப் பரிசாகப் பெற்று அதற்குப்பிறகு சந்தோஷமாக இங்கிலாந்துக்காக சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஆனால் பாப் வுல்மர் சுமாரான கிரிக்கெட் வீரராக இருந்ததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரிபெல் டூருக்குப் பிறகு முடிவடைந்தது.

அதன்பிறகு அவரது பயிற்சியாளர் வாழ்க்கை ஆரம்பித்தது.

இதற்கிடையில் மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் பயணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா சென்றது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. பாப் வுல்மர் அந்தச் சமயத்தில் வார்விக்ஷயர் கோச்சாக இருந்தார். பிரையன் லாரா டர்ஹாமுக்கு எதிராக 500 ரன்கள் பெற்றது அப்போதுதான்! 1994-ல் வுல்மர் தென்னாப்பிரிக்க அணிக்குக் கோச் ஆனார்.

வுல்மர் இலங்கை அணிக்கு 'இனவெறி' காரணத்தைக் காட்டி கோச்சாக மறுத்தார் என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.

-*-

பாப் வுல்மர் நல்ல கிரிக்கெட் கோச். நல்ல மனிதர். ஆனால் நிறவெறி, இனவெறி ஆகியவற்றுக்கு ஆதரவாக, எதிராக என்றெல்லாம் மாபெரும் கொள்கைகளை அவர் வைத்திருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. அபார்த்தீட் முடிந்தபிறகு தென்னாப்பிரிக்க அணியில் முதலில் வெள்ளை நிறத்தவரே பெரும்பான்மையாக இருந்தனர். கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அலி பேக்கர் காலத்துக்குப் பிறகு இப்பொழுது கறுப்பினத்தவர் தலைமையில் அதிகமான எண்ணிக்கையில் கறுப்பர்கள் மற்றும் கலப்பினத்தவர் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுகின்றனர்.

மகாயா ந்டினி, ஆஷ்லி பிரின்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ரோஜர் டெலிமாக்கஸ் ஆகியோர் இப்பொழுதைய உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருக்கும் கறுப்பு/கலப்பினத்தவர் ஆவர்.

2 comments:

  1. பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  2. Sir, where can we find this rebel tours and kerry packer series score cards.
    These score cards are not available on cricinfo.com

    ReplyDelete