Sunday, April 22, 2007

லாராவும் டெண்டுல்கரும்

லாரா நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தோடு ஓய்வுபெற்றுள்ளார். முதலில் ஒருநாள் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வுபெறுவதாக இருந்தது. பின்னர் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக ஓய்வு.

லாராவும் டெண்டுல்கரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் விளையாட வந்தனர். லாரா 1990-லும், டெண்டுல்கர் சில மாதங்கள் முன்பாக 1989-லும்.

இந்த இரண்டு ஆட்டக்காரர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே வர்ணனையாளர்களின் வேலையாக இருந்தது. யார் யாரைவிடச் சிறந்தவர் என்பதில் பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருந்தன. ஆனால் இருவரும் சமகாலத்தைய பேட்ஸ்மேன்கள் அனைவரையும்விடச் சிறந்தவர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

பெரும் இன்னிங்ஸ் விளையாடுவதில் லாரா சிறந்து விளங்கினார். லாராவின் முதல் டெஸ்ட் சதமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 277. பின் இங்கிலாந்துக்கு எதிராக அவர் கேரி சோபர்ஸின் சாதனையை முறியடித்து எடுத்த 375. மீண்டும் அதே களத்தில் அதே இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 400*. மொத்தம் ஏழு முறை 200க்கு மேல், ஒருமுறை 300க்கு மேல், ஒருமுறை 400. இதைத்தவிர இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக டர்ஹாமுக்கு எதிராக அடித்த 500* என்று லாரா செய்திருக்கும் பல சாதனைகள் முறியடிக்கக் கஷ்டமானவை.

மாறாக டெண்டுல்கர் அதிரடியான ஆட்டத்தோடும் சாதாரண சதங்களோடும் நிறுத்திவிடுவார். பல வருடங்கள் கழித்தே அவரது முதல் இரட்டை சதம் வந்தது. மொத்தம் நான்கு இரட்டை சதங்கள். ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் டெண்டுல்கர் விளையாடியது குறைவுதான். கவுண்டி கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்புகளின்போதும் டெண்டுல்கர் அதியற்புதமாக ஒன்றும் செய்யவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் லாராவுக்கு டெண்டுல்கரைவிட அதிக ரன்கள். ஆனால் டெண்டுல்கருக்கு 35 - ஒரு சதம் அதிகம், சராசரியும் லாராவைவிட அதிகம்.

ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் லாராவைவிட மிகச்சிறப்பாகவே விளையாடியுள்ளார். லாராவைவிடச் சதங்களும் அதிகம், சராசரியும் அதிகம், மொத்த ரன்களும் அதிகம் - விளையாடியதும் அதிகமே. அதேபோல ஆட்டங்களை வெற்றிபெற்றுத் தந்ததும் அதிகம்.

இருவரது ஆட்டங்களும் வெகு வித்தியாசமானவை. லாரா ஆஃப் திசையில் மிகவும் வலுவாக விளையாடக்கூடியவர் - எல்லா இடதுகை ஆட்டக்காரர்களையும் போலவே. டெண்டுல்கர் நாலா பக்கமும் நன்றாக அடித்து விளையாடக்கூடியவர். லாரா, டெண்டுல்கரைவிடச் சிறப்பாக வேகப்பந்து வீச்சை சந்திக்கக்கூடியவர். டெண்டுல்கர் சுழல்பந்தை விளையாடுவதில் லாராவைவிடச் சிறப்பானவர்.

லாரா, டெண்டுல்கர் இருவருமே அணித்தலைமையில் படுதோல்வியைச் சந்தித்தவர்கள். டெண்டுல்கர்மீது அணியின் பிற வீரர்கள் பெருமதிப்பு வைத்திருந்தாலும் டெண்டுல்கரால் அவர்களை ஒன்று சேர்த்து மிக வலுவான அணியாக மாற்ற முடியவில்லை. லாரா நொறுங்கிப்போய்க்கொண்டிருக்கும் ஒரு மேற்கிந்திய அணிக்குத் தலைவராக வேண்டியிருந்தது. அணியை மீண்டும் தூக்கி நிறுத்தவே முடியவில்லை.

புகழ் உச்சிக்குப் போனபோது லாராவின் வாழ்க்கையில், விளையாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. அதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். அதிலிருந்து மீண்டுவர சில மாதங்கள் ஆனது. டெண்டுல்கருக்கு அம்மாதிரி நிகழ்ந்ததே கிடையாது.

இருவருமே ஃபார்ம் குறைவு, உடல் காயங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சூப்பர்மேன் படிமத்திலிருந்து சிலமுறை இருவருமே கீழே விழுந்துள்ளனர். இவர்கள் இருவரும் தத்தம் அணியை எப்படியாவது காப்பாற்றி மேலே கொண்டுவந்துவிடுவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருவருமே பலமுறை பொய்ப்பித்திருக்கிறார்கள்.

இனியும் முடியாது என்ற நிலையில் லாரா ஓய்வு பெற்றுள்ளார். அது தெரியும்போதிலும் ஓய்வு பெறாமலிருக்கிறார் டெண்டுல்கர்.

Legends should know when to quit. Lara himself was a bit late.

8 comments:

  1. அநியாயம் சார்... டெண்டுல்கர் அது தெரிந்தும் ஓய்வு பெறாமல் இருக்கிறார்னு எழுதிட்டீங்களே... இன்னும் ஒரு உலககோப்பை வரைக்கும் தாக்குப்பிடிப்பார். விமர்சனங்களை பொய்யாக்குவதே அவரது சிறப்பம்சம்.

    ReplyDelete
  2. //அது தெரியும்போதிலும் ஓய்வு பெறாமலிருக்கிறார் டெண்டுல்கர்// Tendulkar would prove your words wrong.. wait and see.

    ReplyDelete
  3. Team should be selected from the best 11 available in the country

    Reward or Punishment is a bad

    By reward, we mean selecting an individual for "some reason" (past performance) when we have a better individual outside 11

    By punishment, we mean omitting an individual for "some reason" (failure in two matches), when we don't have a person who can match him

    Indian selectors did the first mistake for a long time

    And now they are planning to do the second mistake now....

    It is agreed that Sachin of Today is not the sachin of yesterday..... but are there 11 players (or 5 batsman) who can play better than him ..... I don't think so. See the following table prepared by Vivek Kumar (http://vivekspace.wordpress.com/2007/03/27/dropping-tendulkar-and-others/)



    You see the average from your table.... I don't think that any player with an average of 44 can be said to be "out of form"... He is pretty much "in form"....

    If you are going to drop some one with an average of 44, you need to bring in some one who can score better than that.... I don't think that India has the bench strength of that calibre at present....

    It is time to think with head rather than heart


    When Ian Healy was dropped by Australia, they had Gilchrist in Waiting…. and hence healy was “not dropped”… But Gilchrist was “selected” as he was “better” than Healy….
    The only time, our selectors did this was in April 1996…. Other than that, our selection policy had been either “Reward” or “Punishment” including once dropping Kapil for a bad shot he played as a batsman, when it was very evident that he was the best bowler in the country at that time…

    While every one shouts loudly that “inclusion” in the team should be based on evidence and not on emotion, I am surprised as to why they want “exclusion” based on Emotion rather than evidence….

    Learn from what South Africans did with Pollock after World Cup 2003… If he had been in India, we would have wasted his bowling also by dumping him totally !!!

    ReplyDelete
  4. இந்த கோதவுல கங்குலி என்கிற சோதா பயல உட்டுபுட்டிங்க. இவன விடாதிங்க புட்டு புட்டு வைக்கனம்.
    கங்குலிக்கு உதனும் சங்கு

    ReplyDelete
  5. இரு ஆண்டுகளுக்கு பிறகு தெண்டுல்கர் பற்றி
    உங்கள் கருத்துகளை திருத்தி கொண்டிருபீர்
    என நினைக்கிறன் .

    ReplyDelete
  6. //இனியும் முடியாது என்ற நிலையில் லாரா ஓய்வு பெற்றுள்ளார். அது தெரியும்போதிலும் ஓய்வு பெறாமலிருக்கிறார் டெண்டுல்கர்.//

    நீங்கள் கூறிய பிறகு கடந்த வருடம் இந்தியாவிற்கு அதிகம் ஆட்டங்களை வென்று தந்தது யார் ??

    //இரு ஆண்டுகளுக்கு பிறகு தெண்டுல்கர் பற்றி
    உங்கள் கருத்துகளை திருத்தி கொண்டிருபீர்
    என நினைக்கிறன் .//
    வழிமொழிகிறேன் :) :)

    ReplyDelete
  7. திருத்திக்கொள்ளவில்லை. மாற்றிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம்.

    இப்போதைய கருத்து... டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று, டெஸ்ட் ஆட்டங்களில் மட்டும் விளையாடினால், மேலும் 12-18 மாதங்கள் தொடரலாம். 2010-ல் கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக விலகிவிடலாம். வேண்டுமென்றால் மேலும் ஓரிரு வருடங்கள் ரஞ்சிக் கோப்பை ஆட்டங்களில் பங்குபெற்று, இளம் வயதினரை ஊக்குவிக்கலாம். வழிகாட்டலாம்.

    அடுத்து இருக்கவே இருக்கிறது, கமெண்டரி...

    ReplyDelete
  8. பத்ரி,

    நிஜமாகவே டெண்டுல்கரால் கமெண்ட்ரியெல்லாம் முடியும் என்று நினைக்கிறீர்களா? அந்தக் கீச்கீச் குரலை ஐந்து நிமிடத்துக்குமேல் கேட்பது சிரமமாச்சே ;)

    - என். சொக்கன்,
    பெங்களூர்

    ReplyDelete