Monday, April 23, 2007

வங்கதேசத்தில் நொறுங்கும் குடியாட்சிமுறை

'யானை தன் தலையில் மண் அள்ளிப்போடுவதைப் போல' என்பார்கள். யானை அவ்வாறு செய்வது தனக்குத் தானே தீங்கிழைக்கவா என்று தெரியவில்லை. ஆனால் வங்கதேச அரசியல்வாதிகள் தங்கள் தலையில் தகதகக்கும் தணலை அள்ளிக் கொட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள நான் சில மாதங்களுக்குமுன் எழுதிய பதிவைப் படித்துவிடுங்கள்.

வெட்டுப்பழி, குத்துப்பழியுடன் ஒருவரை ஒருவர் நாசமாக்க விரும்பிய காலீதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் இன்று நட்டாற்றில்.

முதலில், இருவருமே ஊழலில் உழல்பவர்கள்தாம். ஊழல், குடும்ப அரசியல், எதிர்க்கட்சியினர்மீது கடுந்தாக்குதல் - மொத்தத்தில் தமிழக அரசியலைப் போன்றுதான். இந்தப் போட்டியின் விளைவாக நாட்டில் constitutional crisis ஒன்றை உருவாக்கினார்கள். அடுத்த காபந்து பிரதமர்/ஆலோசகர் யார் என்று புரியாத நிலையில் நாட்டின் குடியரசுத் தலைவர் இயாஜுதீன் அஹமத் அந்தப் பதவியைத் தனதாக்கிக்கொண்டார். இவர் காலீதா ஜியாவின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஷேக் ஹசீனா இவரைக் கடுமையாக எதிர்த்தார். தன்னால் இனியும் இயங்கமுடியாது என்ற நிலையில் ஜனவரியில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துவிட்டு இயாஜுதீன் பதவி விலகினார்.

தொடர்ந்து முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் பக்ருதீன் அஹமத் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு கட்சிகளும் அவரை வரவேற்றன.

சீக்கிரம் தேர்தலை முடிப்பார்; நாம் ஜெயித்துவிடுவோம்; பின் மீண்டும் கொண்டாட்டம்தான் என்று இருவருமே நினைத்தனர். பக்ருதீன் முதலில் புது தேர்தல் ஆணையரை நியமித்தார். பின் ஊழலை ஒடுக்கக் கிளம்பிவிட்டார். தேர்தல் ஆணையரோ இன்னமும் ஒரு வருடத்துக்குத் தேர்தல் கிடையாது என்று சொல்லிவிட்டார். ராணுவம் பக்ருதீனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது.

கொஞ்சம் அமைதிக்குப் பிறகு, இரண்டு முன்னாள் பிரதமர்கள்மீதும் ராணுவம், காவல்துறை ஏவப்பட்டது. இவர்கள்தாம் உத்தமர்கள் இல்லையே! காலீதா ஜியாவின் மகன்கள் இருவரும் செய்த ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொண்டு நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருக்க, காலீதா ஜியா, சவுதி அரேபியாவுக்கு குடும்பத்தோடு காணாமல் போய்விடவேண்டும் என்று 'டீல்' செய்துகொண்டுள்ளதாகத் தகவல். [பாகிஸ்தானிலும் முஷரஃப் செய்த டீல் - நவாஸ் ஷரீஃப் குடும்பத்தோடு சவுதிக்கு சென்றுவிடவேண்டும்; பாகிஸ்தான் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது. ஊழல்வாதிகளின் புகலிடம் சவுதியா?]

ஹசீனாமீதோ கொலைக்குற்றச்சாட்டு. வெளிநாடு சென்றிருந்த அவரை நாட்டுக்கே திரும்பிவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது காபந்து அரசு.

இதற்கிடையில் அந்த நாட்டின் நீதித்துறை தனியாக இயங்குவதைப்போல் சில வழக்குகளை விசாரிக்கிறது. இது எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என்பது ராணுவத்தின் கையில்.

பொதுமக்கள் இப்பொழுதைக்கு காபந்து அரசு செய்வதை எதிர்க்கவில்லை. ஏனெனில் இரண்டு கட்சிகளும் அந்த அளவுக்கு ஊழல் செய்துள்ளனர். ஆனால் இப்பொழுது நடப்பது சரியான தீர்வல்ல. பல சட்டங்களில் கையை வைத்து யார் தேர்தலில் போட்டியிடலாம், யார் கூடாது, யார் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும், யார் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்ய எந்த இடைக்கால அரசுக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. இந்த இடைக்கால அரசிடம் அது உள்ளது.

இதன் விளைவாக என்னதான் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் காலீதாவும் ஹசீனாவும் நியாயமான முறையில் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டுள்ளது. இது குடியாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது.

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இதற்கிடையில் ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கிறார். காலீதா ஜியா, ஷேக் ஹசீனா சிக்கலில் மாட்டியிருப்பது இவரது வெற்றிவாய்ப்பைப் பிரகாசமாக்கியிருக்கிறது.

எனக்கு யூனுஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இவ்வாறு குடியாட்சி முறையை கேலிக்கூத்தாக்கி ஆட்சியைப் பிடிப்பது அவருக்கும் அழகல்ல.

இதில் ராணுவம் என்ன நினைக்கிறது என்பது அனைத்தையும்விட மிகவும் முக்கியம். திரைமறைவில் இருந்து பக்ருதீனை இயக்குவது யார்? அவர் என்ன நினைக்கிறார்? இதுவே முக்கியமான கேள்வி.

No comments:

Post a Comment