Thursday, April 26, 2007

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்தல்

சில குடியாட்சி முறை நாடுகளில் Referendum, Recall போன்ற உரிமைகள் மக்களுக்கு உள்ளன. Recall என்றால் 'திரும்ப அழைத்தல்' என்று சொல்லலாம். Referendum என்பது மக்களிடம் பெறும் நேரடிக் கருத்து. இதற்கு ஆங்கிலத்தில் புழங்கும் மற்றொரு சொல் Plebiscite - அதாவது நேரடி மக்கள் வாக்கு.

'திரும்ப அழைத்தல்' உரிமை வெகுசில நாடுகளில் மட்டும்தான் உள்ளது. கனடாவில் ஒரு மாநிலத்தில்; அமெரிக்காவில் சில மாநிலங்களில், சில பதவிகளுக்கு மட்டும்; வெனிசுவேலாவில். வேறு சில நாடுகளிலும் இருக்கக்கூடும். நான் முற்றிலுமாகத் தேடிப் பார்க்கவில்லை. 'நேரடிக் கருத்து' முறை பல நாடுகளில் உள்ளது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப்கூட இதைப் பயன்படுத்தித்தான் தன் பதவியை முதலில் ஸ்திரமாக்கிக்கொண்டார்.

இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற முறையில் நமது பிரதிநிதிகளாகச் சிலரை நாம் இந்த அவைகளுக்கு அனுப்புகிறோம். இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களாகிய நமக்கு மட்டுமே உண்டு. இவர்களது தேர்தல் சில சமயங்களில் செல்லாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 (அதன் பிற சட்டத்திருத்தங்கள் சேர்ந்து) சொல்கிறது. அதற்கு ஏற்ப தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ ஒருவரது பிரதிநிதித்துவத்தைச் செல்லாததாக ஆக்கமுடியும்.

ஆனால் சென்ற ஆண்டு முதல்முறையாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களது பதவியை நாடாளுமன்றமே வாக்கெடுப்பின்மூலம் செல்லாததாக ஆக்கியது. இந்த உறுப்பினர்கள் அனைவரும் அவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது விடியோவில் பிடிக்கப்பட்டு நாடெங்கும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

அவையின் முடிவை எதிர்த்து பதவி இழந்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்றனர். இதை விசாரிக்கக்கூட நீதிமன்றங்களுக்குத் துப்பில்லை என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் கருத்து தெரிவித்தார். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீதிமன்றம் வழக்கை விசாரித்து அவைக்கு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.

எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.

பிற உறுப்பினர்களுக்கு ஓர் உறுப்பினரது பதவியை நீக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. அவைத்தலைவருக்கு ஓர் உறுப்பினரை அவையிலிருந்து வெளியே நிறுத்திவைக்கும் அதிகாரம் உண்டு. அந்த உறுப்பினரது சம்பளத்தை, படிகளை நிறுத்திவைக்கும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அந்த உறுப்பினர் கொலையே செய்தாலும் அவரது பதவியை நீக்கும் அதிகாரம் அவைத்தலைவருக்கோ, வாக்கெடுப்பின்மூலம் பிற உறுப்பினர்களுக்கோ இருக்கக்கூடாது. அந்தத் தொகுதியின் மக்களுக்கு மட்டும்தான் இதற்கான அதிகாரம் வழங்கப்படவேண்டும். இதற்கு நம் அனைவருக்கும் 'திரும்ப அழைத்தல்' (Recall) அதிகாரம் தேவை.

'திரும்ப அழைத்தல்' முறை செலவு பிடிக்கக்கூடியது. ஆனாலும் குடியாட்சி முறையில் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்தவரை நீக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இது லஞ்சம் வாங்கிய உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிகார துஷ்பிரயோகம் செய்த பாபுபாய் கட்டாரா போன்ற கிரிமினல்களாக இருந்தாலும் சரி, பிற ஊழல் கறைபடிந்தவர்களாக இருந்தாலும் சரி.

பணம் படைத்தவர்கள் மக்களை மீண்டும் ஏமாற்றிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு வரலாம். ஆனால் பொதுவான தேர்தலிலேயே நடப்பதுதானே? அரசியல் கட்சிகளே கிரிமினல்களை தேர்தலில் நிற்க வைப்பதைக் கண்டு வெட்கவேண்டும். லஞ்சம், கிரிமினல் குற்றம், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பொதுச்சொத்தை நாசம் செய்தல் போன்ற பலவற்றில் ஈடுபட்டுள்ளவர்களை ஒரு தொகுதி மக்கள் 'திரும்ப அழைக்காமல்' (நியாயமான முறையில் அத்தகைய Recall தேர்தல் நடந்திருந்தபோதிலும்) அவரையே மீண்டும் பதவியில் இருத்த விரும்பினால் அந்த மக்கள் திண்டாடட்டும்.

நாடாளுமன்றம் ஒன்றுகூடி ஒருவரைப் பதவியில் இருந்து தூக்குவது பெரும்பான்மை வாக்குகள் சார்ந்தது. அங்கு அரசியல் மட்டும்தான் நடக்கும்; நியாயம் நடக்காது. அதுவும் இன்றைய இந்திய அரசியலில்.

அதைப்போல பல முக்கியமான நிகழ்வுகளை மக்களின் பிரதிநிதிகள் மட்டும் தீர்மானிப்பது சரியாக இருக்காது. மக்களிடம் உள்ள பொதுக்கருத்து என்ன என்பதை வாக்குரிமை மூலமே தீர்மானிக்கமுடியும். இதற்கும் அமெரிக்காபோல ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் பொதுத்தேர்தலில் வரிசையாகப் பல தீர்மானங்களை முன்னிறுத்தி செய்துகொள்ளலாம்.

திரும்ப அழைத்தல், நேரடிக் கருத்து ஆகிய இரண்டும் இந்தியக் குடியாட்சி முறையை வலுப்படுத்தும்.

2 comments:

  1. ஒரு தகவலுக்காக,

    எம்.ஜி.ஆர், திமுகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்து, தேர்தலைச் சந்தித்த போது, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும், ரைட் டு ரீகால் என்கிற கொள்கையை, தன் தேர்தல் அறிக்கையில், முக்கிய கொள்கையாக வைத்திருந்தார். அப்போது, குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில், இது பற்றி விளக்கமாகச் சொல்லி இருந்தார். பிறகு, இந்த ' திரும்ப அழைக்கும் முறையை' நம் அரசியல்வாதிகள் யாரும் சொல்லிக் கேட்டதில்லை.

    பி.கு : உங்கள் செய்தி ஓடையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன். கவனிக்கவும்.

    ReplyDelete
  2. புது blogger மாற்றத்தில் செய்தியோடை முதல் பல விஷயங்கள் மாறியுள்ளன. புதுச் செய்தியோடை முகவரியை என் வலைப்பதிவில் தனிச் சுட்டியாகக் கொடுத்துள்ளேன்.

    ReplyDelete