Wednesday, May 30, 2007

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம், Indian Writing என்ற பெயரில் ஆங்கிலப் பதிப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்தப் பதிப்பு, இந்திய மொழிகளிலிருந்து சிறந்த நாவல்கள், சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிடும்.

முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட நாவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளோம்.


முதல் நான்கு நூல்கள்:
  • அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்': Star-Crossed
  • ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்': Love and Loss
  • ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்': I, Ramaseshan
  • இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா': Krishna Krishna
இந்த ஆங்கில நாவல்களிலிருந்து வெவ்வேறு பகுதிகளை JustUs Repertory என்ற குழுவினர் படித்து/நடித்துக் காண்பிப்பார்கள்.

இடம்: வித்லோகா புத்தகக்கடை, புது எண் 238/பழைய எண் 187, ரபியா கட்டடம், பீமசேனா கார்டன் தெரு, (ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்குக் குறுக்காக), மைலாப்பூர் - 600 004

நாள்: 1 ஜூன் 2007, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணி அளவில்

Tuesday, May 22, 2007

இரு திரைப்படங்கள்

பெரியார்

இந்தப் படம் பற்றி 'இட்லிவடை' ஒரு பதிவு எழுதியிருந்தார். இரவுக்காட்சியில் வுட்லண்ட்ஸ் திரையரங்கில் 15% கூட அரங்கு நிரம்பவில்லை என்று. அவர் பார்த்த வாரத்துக்கு அடுத்த வாரம் ஞாயிறு முன்னிரவுக் காட்சியில் (6.30 மணி), அதே தியேட்டரில் நான் பார்த்தேன். அரங்கு முழுவதுமாக நிரம்பியிருந்தது. வெறும் கட்சிக்காரர்கள் அல்ல, குடும்பத்தோடு மக்கள் வந்திருந்தனர். குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு.

பெரியார் என்னும் மாபெரும் ஆளுகையை அறிமுகப்படுத்தும் படம் என்ற வகையில், படம் ஓரளவுக்கு வெற்றிபெறுகிறது. ஆனால் சினிமா எனும் கலையின் அடிப்படையில் பார்த்தால் படம் பெரும் தோல்வியைத் தழுவுகிறது. பெரியாரின் பல முகங்களையும் எடுத்துக்காட்டுவதில் தவறியுள்ளனர். முக்கியமாக மொழிப்போர். அதைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை.

படம் பார்க்கும்போது மக்கள் பல இடங்களில் கைதட்டி ரசித்தனர். அவையெல்லாம் கடவுளை, மூடப்பழக்கங்களைக் கேலி செய்யும் காட்சிகள். ஆனாலும் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, ஏன் மணியம்மை (குஷ்பூ) நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளவில்லை என்று கணவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

மொத்தத்தில் பொதுமக்களிடையே பெரியாரைக் கொண்டுசேர்க்கும் அளவுக்கு படம் வெற்றிபெற்றுள்ளது.

மொழி

சத்யம், ஐனாக்ஸ் எல்லாம் டிக்கெட் கிடைக்காமல் அண்ணா சாலையில் 'அண்ணா' எனும் தியேட்டரில் பார்த்தேன். ஏதோ 'A' செண்டர் படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கூடியிருந்த மக்கள் கூட்டம் பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கியிருந்தது.

படம் slick ஆக எடுக்கப்பட்டிருந்தது. வேகமாகச் செல்லும் திரைக்கதை அமைப்பு. குழப்பமே இல்லாமல் சுவையாக எடுத்துள்ளார் ராதா மோகன். முக்கிய பாத்திரங்களில் நடித்த நால்வரும் நன்றாக நடித்துள்ளனர்.

உடல் ஊனத்தை 'பரிதாபம்' என்ற உணர்ச்சி மட்டுமே கொண்டு பார்க்குமாறு எடுக்கப்படும் படங்களிலிருந்து மாறுபட்டு வந்தாலும் ஜோதிகா பாத்திரம் தனக்கு பிறக்கும் குழந்தையும் தன்னைப்போலவே இருந்துவிடுமே என்னும் ஒரே காரணத்தால் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவது கொஞ்சம் இடிக்கிறது. படத்தில் பெரும்பாலும் புரட்சியைக் காண்பிக்கும் இயக்குனர், திருமணம் என்றாலே குழந்தை பெற்றுக்கொள்ளத்தான் என்னும் கொள்கையை உடைத்து எறியுமாறு செய்திருக்கலாம். கல்யாணம் செய்துகொண்டு எவ்வளவோ அநாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ளலாம். ஏன், ஊனமுள்ள குழந்தைகளைக்கூட தத்து எடுத்துக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம்.

மற்றபடி இந்து-கிறித்துவ மணம், விதவை மறுமணம், ஊனத்தைத் தடையாக நினைக்காமை, பெண்கள் சுதந்தரமானவர்களாக, பிறருக்கு அடிமையாக இல்லாமல் வாழ்வது போன்ற பலவற்றை 'moral of the story is...' என்று சொல்லாமல் இயல்பாகக் கதைக்குள்ளே கொண்டுவருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

படத்தை மக்கள் அனைவரும் வெகுவாக ரசித்துப் பார்த்தனர்.

Monday, May 21, 2007

இந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்?

கன்யாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்களும் கேரளத்தைச் சேர்ந்த ஒருவருமாக 12 பேர்கள் இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் காணாமல் போனார்கள். அதைத் தொடர்ந்து இவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுவிட்டதா, கடத்திவிட்டதா என்று சந்தேகம் எழுந்தது. பின்னர் இந்த மீனவர்கள் காணாமல் போனதில் விடுதலைப் புலிகளின் பங்கு இருக்கலாம் என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

சில நாள்களுக்குப் பின்னர் இந்தக் கடத்தலில் விடுதலைப் புலிகள்தாம் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக டிஜிபி முகர்ஜி தெரிவித்தார். இதையே தமிழக முதல்வர் கருணாநிதியும் சட்டசபையில் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சில விடுதலைப் புலிகளிடம் விசாரணை செய்தபோது இந்தத் தகவல் தெரியவந்ததாக தமிழக காவல்துறை தெரிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கட்சிகள் இதனை ஏற்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக 12 பேரில் 11 தமிழக மீனவர்கள், 68 நாள்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் வந்துசேர்ந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர் இன்னமும் கிடைக்கவில்லை; அவர் மாலத்தீவு காவலில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலையான 11 மீனவர்களும் தங்களை விடுதலைப் புலிகள்தாம் கடத்தினர் என்றும், தாங்கள் ஓட்டிச்சென்ற படகைக் கைப்பற்றவே இது நடந்தது என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே பத்திரிகையாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மக்கள் தொலைக்காட்சி, அந்த 11 பேரில் ஒருவராக இருந்த சிறுவனிடம் பேட்டி எடுக்கும்போது அந்தச் சிறுவன் தங்களைக் கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படைதான் என்றும் விடுவித்ததும் அவர்கள்தாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளான். [விடியோ இங்கே]

ஆனால் இதற்கடுத்து இன்றும்கூட தமிழகத் தொலைக்காட்சிகளில் (சன் டிவி உள்பட), "விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினர்" என்று செய்தி வாசிக்கப்படுகிறது.

ஆரம்பம் முதற்கொண்டே விடுதலைப் புலிகள் தமிழக மீனவர்களைக் கடத்தியதாகச் சொல்லப்பட்டது சந்தேகத்தை வரவழைத்தது. இந்தச் சந்தேகம் வருவதற்கு ஒருவர் புலிகள் ஆதரவாளராக இருக்கவேண்டியதில்லை. ஒரு சாதாரண படகைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் இந்த காரியத்தைச் செய்யவேண்டியதில்லை. தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் ஆதரவை இதன்மூலம் கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள்.

மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ஒருவர் கொடுத்த அறிக்கையில் "யார் கடத்தியது என்பதை முன்னிலைப்படுத்தாமல் யார் கடத்தப்பட்டார்கள் என்பதை முன்னிலைப்படுத்தவேண்டும்" என்று சொன்னது என்ன நடந்திருக்கலாம் என்பதை நமக்கு சூசகமாகத் தெரிவிக்கிறது.

தமிழக மக்களாகிய நாம் நம் ஆட்சியாளர்களை நோக்கிச் சில கேள்விகளைக் கேட்கவேண்டும்.

1. தமிழக மீனவர்கள் கடத்தலின் உண்மை விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்குமா?
2. மத்திய அரசின் உளவு நிறுவனம் (RAW), தமிழக அரசின் காவல்துறையுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் பழியை விடுதலைப் புலிகள்மீது வேண்டுமென்றே போட்டுள்ளதா?
3. 11 மீனவர்களையும் ஊடகங்கள் தடையின்றி நேர்முகம் காணலாமா? உண்மை என்ன என்று வெளிவர இது உதவி செய்யும்.
4. உண்மை வெளியே வராமல் இருக்க, போலி என்கவுண்டர்கள் என்ற வகையில் இந்த மீனவர்கள் உயிருக்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை வாயிலாக எந்தவித ஆபத்தும் நேராதிருக்க அரசு உத்தரவாதம் தருமா?

Saturday, May 19, 2007

பஞ்சாப் கலவரங்கள்

சீக்கியர்களின் தலைமைப்பீடம் அகால் தக்த். அவர்கள்தான் சீக்கிய மதத்தைக் கட்டிக் காப்பவர்கள். சீக்கிய மதம் பரவியிருக்கும் மாநிலங்களில் டேரா சச்சா சவுதா (உண்மையான தொழில்) எனும் தனிப்பிரிவு நிலவுகிறது. இவர்களும் சீக்கிய மதகுருக்களை ஏற்றுவந்தவர்கள். சீக்கிய மதமே சாதிப்பிரிவினைகளை ஏற்றுக்கொள்ளாத மதம். பல சாதிகளைச் சேர்ந்த ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கிய மதத்தில் இணைந்தனர். இரு மதங்களின் கொள்கைகளிருந்து சிலவற்றை ஏற்று, பலவற்றை விலக்கி உருவாக்கப்பட்டதுதான் சீக்கிய மதமே.

ஆனால் அடிப்படையில் சீக்கிய மக்களிடையே சாதி பார்ப்பது இன்றும் இருந்துவருகிறது. அதன் விளைவாகத்தான் சச்சா சவுதா போன்ற அமைப்புகள் உருவாகின்றன. இதனைப் பின்பற்றுபவர்கள் பிரேமிகள் என்று அழைக்கப்படுகின்றனர். சச்சா சவுதாவின் தலைவரான குர்மீத் சிங் ராம் ரஹீம், சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்கின் வேடத்தில் இருப்பதைப்போல ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. இது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்கள் குர்மீத் சிங்கின் கொடும்பாவியை எரிக்க, பிரேமிகள் திரண்டு எழுந்து சீக்கியர்களைத் தாக்க, சில சாவுகள். பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - இங்கெல்லாம் கலவரம்.

அகாலி தக்த், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி போன்றவை ஆளும் அகாலி தல் கட்சியின் ஆதரவு. சச்சா சவுதா காங்கிரஸ் ஆதரவு. இதனால் அரசியல் பிரச்னை இதற்கு அடிப்படையாக உள்ளது என்கிறார்கள். குர்மீத் சிங்மீதும் சச்சா சவுதா அமைப்பின்மீதும் கொலைக் குற்றங்கள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் ஆகியவை இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எங்கெல்லாம் அமைப்புரீதியான மடங்கள் உள்ளனவோ அங்கு பணம், நிலம், வன்குற்றங்கள், அரசியல் என அனைத்தும் உள்ளே நுழைகின்றன.

இந்தப் பதிவு அதைப்பற்றி அல்ல.

மத உணர்வுகள், மத உணர்வுகளைப் புண்படுத்துவது தொடர்பானது. 'முணுக்' என்றால் வெகுண்டெழுந்து தெருவுக்கு வந்து கலவரத்தில் ஈடுபடுவது பல மதங்களில் உள்ளது.
உலகெங்கிலும் முஸ்லிம்கள் தெருவுக்கு வந்து கலவரத்தில் ஈடுபடுவது, ஃபத்வா கொடுப்பது போன்றவை பல சமயங்களில் நிகழ்ந்துள்ளன. கடைசியாக உலகு தழுவிய போராட்டங்கள் நடந்தது முகமது நபியின் கார்ட்டூன்கள் ஐரோப்பாவில் ஒரு பத்திரிகையில் வெளியான சமயம். அதற்குமுன் சல்மான் ருஷ்டியின் நாவல்.

ஹிந்து மதக் காவலர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள் யாராவது ஏதாவது படம் வரைந்தால்போதும். கிளம்பிவிடுவார்கள். எம்.எஃப்.ஹுசைன்மீது எப்பொழுது பார்த்தாலும் வழக்கு போடுவது வாடிக்கை. இப்பொழுது குஜராத்தில் ஒரு நுண்கலை மாணவர் வரைந்த ஓவியத்தைக் கண்டித்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதத்தை மட்டும் காப்பதாகத் தங்களைக் கருதுவதில்லை. ஹிந்து கலாசாரத்தையே காக்கும் பொறுப்பு இவர்களுடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள். தீபா மேஹ்தா படம், ஜேம்ஸ் லெய்னின் சிவாஜி பற்றிய புத்தகம் என்று இவர்கள் ரகளை செய்யாத இடமே இல்லை.

'டா விஞ்சி கோட்' புத்தகம் தொடர்பாக கிறித்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தெருவில் இறங்கி அடிதடி, பொதுச்சொத்துக்கு நாசம், கொலை என்றெல்லாம் ஈடுபடுவதில்லை.

இப்பொழுது சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களும் ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

மத உணர்வுகள் vs தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை. பொது விஷயங்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை, வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றியோ அல்லது புராணப் பாத்திரங்களைப் பற்றியோ வெளிப்படையான கருத்துகளைக் பிரசுரிக்கும் உரிமை, நுண்கலைகள் (ஓவியம், சிலை) வாயிலாக அழகியல்ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். இந்த உரிமைகளை வெளிப்படுத்தும்போது பிறருக்கு அதனை எதிர்க்கும் உரிமை நிச்சயமாக உண்டு. ஆனால் வன்முறையை எதிர்ப்பின் கருவியாக ஆக்குவது முற்றிலுமாகத் தடுக்கப்படவேண்டும்.

நான் கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது Piss Christ என்ற கலை வெளிப்பாடு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு கலைஞர் தனது சிறுநீரை ஒரு பாட்டிலில் பிடித்து அதனுள் சிலுவையில் அறைந்த இயேசுவின் உருவை வைத்து அதனைப் புகைப்படமாகப் பிடித்திருந்தார். ஒளி திரவத்தின் வழியாக ஊடுருவி படத்தில் பல வர்ணஜாலங்களைச் செய்திருந்தது. பல்கலைக்கழகத்தில் கிறித்துவ வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் எதிர்ப்பு அமைதியாக இருந்தது.

இந்த எதிர்ப்புச் செய்திகள் வெளியே வந்ததால் நானும் சென்று அந்தப் படத்தைப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. இது நிச்சயம் கிறித்துவர்களின் மனத்தைப் புண்படுத்தக்கூடியதுதான். வண்ணத் திரவம் வேண்டுமென்றால் எத்தனையோ ரசாயனங்களை வைத்து உருவாக்கியிருக்கலாமே? அதற்கு சிறுநீர்தான் தேவையா? ஆனாலும் அந்த நிலையிலும்கூட எதிர்ப்பு என்பது வெகு அமைதியாக இருந்தது. அதுதான் நாகரிகம்.

மனம் புண்படலாம். அது எதிர்ப்பாக மாறலாம். ஆனால் அதற்காக வன்முறையில் இறங்குவது நாகரிகமான செய்கையல்ல. காட்டு விலங்குகள்தான் தெருவில் இறங்கி அநாகரிகமாகக் கற்களை எறிந்து, பொதுச்சொத்தைக் கொளுத்தி, காவல்துறையைத் தாக்கி, சேதம் விளைவிக்கும்.

குர்மீத் சிங், தன்னை குரு கோபிந்த் சிங்கின் அவதாரம் என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே? இதனால் கோபிந்த் சிங்குக்கு ஏதாவது குறைந்தா போய்விட்டது? அல்லது சீக்கியர்கள்தான் குறைந்துபோய்விட்டார்களா? சரசுவதி, லட்சுமி அல்லது எந்த இந்துக் கடவுளையும் நிர்வாணமாக யாராவது வரைந்துவிட்டுப் போகட்டும். முஸ்லிம்களின் புனிதமான நம்பிக்கையை யாராவது கேலிசெய்துவிட்டுப் போகட்டும். கோபம் வந்தால் எதிர்ப்பு அறிக்கை கொடுங்கள். கண்டியுங்கள். ஆனால் கள்ளுண்ட குரங்குகள்போல வெறிபிடித்து பொதுச்சொத்துகளை நாசமாக்கும் வன்முறையைக் கைவிடுங்கள்.

பிற்படுத்தப்பட்டோர் vs தலித்கள்

தலித் அறிவுஜீவி சந்திரபன் பிரசாத், பயனீர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை: Age of OBC isolation. அதிலிருந்து ஒரு மேற்கோளின் தமிழாக்கம்:
இரு பிறப்பினர் (பிராமண, சத்திரிய, வைசியர்கள்), இரண்டாயிரம் வருட சூதினால், தங்களை வெறுப்புக்கு உள்ளாக்கிக்கொண்டனர். (பிற) பிற்படுத்தப்பட்டவர்களோ இருபதே வருடங்களில் அதைச் சாதித்துவிட்டனர். பிறபடுத்தப்பட்டோர்களின் பிரதிநிதிகள் இந்தியக் குடியாட்சி முறையையே வெட்கப்பட வைத்துள்ளனர். சமூகநீதி என்பதை கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.
மாயாவதி உத்தர பிரதேசத்தில் வென்றதையொட்டி எழுதும் பிரசாத், பிற்படுத்தப்பட்டோர் சுய பரிசோதனை மேற்கொண்டு, தங்களைச் சீர்திருத்திக்கொள்ளாவிட்டால், ஆட்சியைப் பிடிப்பது நடவாத காரியம் என்கிறார்.

ஆனால் இது சில வட இந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடியது. தமிழகம் போன்ற இடங்களில் தலித்களுக்கு வலுவான அரசியல் கட்டமைப்பு கிடையாது. இருபிறப்பினர் என்று கூறப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. பிற்படுத்தப்பட்டோர் (OBC) - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இருவருக்கும் இடையேதான் அரசியல் போராட்டமே.

ராமதாஸால் வன்னியர்களை ஒருங்கிணைத்து வலுவான அரசியல் சக்தியாக மாற்ற முடிந்ததைப்போல, தமிழக தலித்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைப்பது எளிதாகத் தோன்றவில்லை. பள்ளர், பறையர், அருந்ததியர், சக்கிலியர், இன்னபிறர் என்று தலித்கள் பிரிந்துள்ளனர். வடக்குக்கு திருமாவளவன், தெற்குக்கு கிருஷ்ணசாமி என்று இரண்டு தலைவர்கள். இருவருக்கும் அரசியல்ரீதியாக மிகக்குறைந்த செல்வாக்கு. சட்டமன்றத் தேர்தலில் தனியாக நின்றால் ஒரு இடத்தைப் பெறுவதே இவர்களால் இயலாத காரியம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்றே தலித்கள் தனித்தனிச் சக்தியாக பிரிந்து இருக்கிறார்கள். அம்பேத்கரின் மஹாராஷ்டிரத்திலேயே தலித்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் அரசியல்ரீதியாக உபயோகமற்ற ஒரு குழுவாக இருக்கிறார்கள்.

Wednesday, May 16, 2007

தயாநிதி மாறனின் பங்களிப்பு

பிரகாஷ் தன் பதிவில் தயாநிதி மாறன் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை, அவருக்கு பதில் வேறு யார் இருந்திருந்தாலும் அவரது துறையில் இதுவரை நடந்த அனைத்தும் நடந்திருக்கும் என்று பொருள்பட எழுதியிருந்தார்.

தயாநிதி மாறன் கையில் இரண்டு அமைச்சகங்கள் இருந்தன. தகவல் தொடர்பு (Communications), தகவல் நுட்பம் (Information Technology). இதில் தகவல் தொடர்பில் இரண்டு பெரும் பிரிவுகள்: தபால் (Post), தொலைப்பேசி (Telecom).

இதில் மாபெரும் பாய்ச்சல் தொலைப்பேசித் துறையில் நடந்தது. அதற்கு இந்தத் துறையில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனங்களும் அவர்கள் கொண்டுவந்த முதலீடும் மட்டுமே காரணமல்ல. அந்தந்தத் துறையின் ஐஏஎஸ் செயலர்கள் மட்டுமே காரணமல்ல.

தொலைத்தொடர்புத் துறையின்கீழ் (DOT) இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன: பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், DOT செயலர்கள், தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள், மக்கள் - இந்த நால்வரும் வேவ்வேறு திசைகளில் பயணம் செய்பவர்கள். இதற்கிடையே TRAI எனப்படும் தன்னாட்சி உரிமை உள்ள ஒரு கட்டுப்பாட்டு வாரியம், தானாகவே சில முடிவுகளை எடுத்தது. பல வழக்குகள், தொலைத்தொடர்பு பிரச்னைகளைத் தீர்க்கும் TDSAT எனப்படும் தீர்ப்பாயம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நடந்தன. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே மெர்ஜர்/அக்விசிஷன் நடைபெற்றன.

தயாநிதி மாறன் சொந்தமாக அனைத்தையுமே சிந்தித்திருக்க முடியாது என்றாலும் பல விஷயங்களில் அவர் 'சரி, இதையே செய்யலாம்' என்று தீர்மானித்து அதை வலுவாக நின்று செய்தார். அவரால் தனியார் நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பி.எஸ்.என்.எல் மூலம் சில திட்டங்களைக் கொண்டுவந்து தனியார் நிறுவனங்களை அதே வழியில் செல்ல வைத்தார்.

2005-ல் நான் தொலை-நோக்குப் பார்வையில் தொலை-தொடர்பு என்று ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதிலிருந்து மேற்கோள்:
1. இந்தியா முழுமைக்குமாக தொலைபேசிக் கட்டணம் ஒரேமாதிரியாக ஆகும். அதாவது உள்ளூர்க் கட்டணம் என்று ஒன்று. அதற்கடுத்து நீங்கள் சென்னையிலிருந்து தில்லியைக் கூப்பிட்டாலும் சரி, திருச்சியைக் கூப்பிட்டாலும் சரி, நிமிடத்துக்கு ஒரே கட்டணம்தான்.

2. மொபைல் தொலைபேசிச் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் முதலில் ஆறாகவும், பின் ஐந்தாகவும் சுருங்கும். இவை நாடு முழுவதுமாக மொபைல் சேவையை அளிக்கும். அத்துடன் National Roaming எனப்படும் சேவை தனியாக அளிக்கப்படாமல், தானாகவே எந்த அதிகக் கட்டணமுமின்றி உங்களுக்குக் கிடைக்கும். "நான் 'ரோமிங்ல' இருக்கேன், அப்புறம் கூப்பிடு" என்று யாரும் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் ரோமிங் என்ற வார்த்தையை வெளிநாட்டுக்குப் பயணிக்கும் 3% மக்களைத் தவிர பிறர் அறியவேமாட்டார்கள்.
தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் வழியாகக் கொண்டுவந்த 'One-India Plan' இதில் முதலாவதைச் சாதித்தது. அதைத் தொடர்ந்தே ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதில் இறங்கின.

DOT செயலரோ, பி.எஸ்.என்.எல் தலைமை நிர்வாகியோ இதைத் தாங்களாகவே செய்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் அவர்களது எதிர்ப்பையும் மீறியே தயாநிதி மாறன் இதைச் செய்திருக்க முடியும். அதேபோல பதவியிலிருந்து விலகியதும், ரோமிங் கட்டணத்தை அடுத்த மாதம் (கருணாநிதி பிறந்தநாள் அன்று) நீக்குவதற்கான அறிவிப்பைச் செய்ய இருந்ததாகவும் அடுத்து வருபவரும் அதைச் செய்வார் என்று தான் நம்புவதாகவும் தயாநிதி மாறன் அறிவித்தார். இதனையும் எதிர்ப்பை மீறியே செயல்படுத்த வேண்டியிருந்திருக்கும். ராஜா செய்வாரா என்று பார்ப்போம். பி.எஸ்.என்.எல் செய்தால்தான் பிற தனியார் நிறுவனங்கள் இதைச் செய்வார்கள்.

இதைத்தவிர என் 2005 பதிவில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் இன்னமும் செய்யப்படவில்லை. இவை அனைத்துமே மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. வலுவான, முன்னோக்குப் பார்வை உள்ள அமைச்சரால் மட்டுமே இவற்றைச் செய்யமுடியும். துறைச் செயலர்களுக்கு இவற்றைச் செய்வதால் எந்த நன்மையும் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்யக்கூடியவர்கள் அல்லர்.

தொலைத்தொடர்பில் நடந்த அளவுக்கு முன்னேற்றம் தபால் துறையில் நடக்கவில்லை. தயாநிதி மாறன் நிறைய ஸ்டாம்புகளை வெளியிட்டார். தனியார் கூரியர் கம்பெனிகளை பயமுறுத்தினார். தபால்துறை நஷ்டத்தில் இயங்குவதால் கூரியர் கம்பெனிகள் கப்பம் கட்டவேண்டும் போன்ற ஆபத்தான சட்டங்களைக் கொண்டுவர முயற்சி செய்தார். (அந்த சட்டம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.)

ஐடியைப் பொறுத்தவரை தயாநிதி மாறன் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை. தனியார் ஐடி நிறுவனங்கள் வளர்வதற்கு அரசு சிறப்பாக எதனையும் செய்யவில்லை. (செய்யவும் வேண்டியிருக்கவில்லை.) தயாநிதி மாறன் CDAC உருவாக்கிய மென்பொருள்களை நிறையச் செலவுசெய்து வெளியிட்டார். ஆனால் அவையெல்லாம் உருப்படாத, உதவாக்கரை மென்பொருள்கள், எழுத்துருக்கள். விளம்பரம் தேடும் நோக்கம்தான் இருந்ததே தவிர மக்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் தயாரிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் சில மென்பொருள் நிறுவனங்கள் பணம் சம்பாதித்தனர். வேறு சிலர் வயிறு எரிந்தனர். [தமிழ் | ஹிந்தி | தெலுகு]

இந்தியர்களுக்கு என்று மென்பொருள் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்களுக்கு நிறையவே செய்திருக்கலாம். அப்படி எதையும் தயாநிதி மாறன் செய்ததாகத் தகவல் வரவில்லை. ஒரே அமைச்சரிடம் இதுபோன்ற பல முக்கியமான துறைகளைக் கொடுப்பதே தவறு என்று நினைக்கிறேன்.

தயாநிதி மாறன் மூலம் பல தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு வந்தன. (நோக்கியா போன்றவை.) நிறைய அந்நிய மூலதனம் கிடைத்தது. இவை வேறு அமைச்சர் இருந்தாலும் வந்திருக்ககூடும் என்றும் சொல்லலாம். ஆனாலும் தயாநிதி மாறனுக்கு இதற்கான கிரெடிட் போய்ச் சேரவேண்டும்.

தயாநிதி மாறன் இறுதி ரிப்போர்ட் கார்ட்:

தொலைத்தொடர்பு: 90/100
தபால்: 35/100
தகவல் நுட்பம்: 40/100

Tuesday, May 15, 2007

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

சென்ற சில வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். தமிழக 12-ம் வகுப்புத் தேர்வில் பெண்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனால் வேறு ஒரு புள்ளிவிவரம் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர்.

மொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 5,55,965
பெண்கள்: 2,89,115
ஆண்கள்: 2,66,850

ஒன்றாம் வகுப்பில் சேர்வதில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் பெண்களைவிட ஆண்களே அதிகமாகக் கல்வியிலிருந்து விலகுகின்றனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைவதில் ஆண்கள் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பெண்கள் தேர்ச்சி விகிதம்: 84.6% (சென்ற ஆண்டு: 75.4%)
ஆண்கள் தேர்ச்சி விகிதம்: 77.4% (சென்ற ஆண்டு 70.2%)

மொத்தத் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது நல்ல விஷயமா? அல்லது தேர்வு முறை எளிதாகியுள்ளதா?

மற்றபடி மாநில ரேங்க் பட்டியலில் பெண்களே அதிகம். முதலிரண்டு இடங்கள் பெண்களுக்கு.

இம்முறை நுழைவுத்தேர்வு இல்லாத காரணத்தால் பொறியியல், மருத்துவம் ஆகிய இரண்டிலும் நுழையும் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.

தமிழகத்தில் மலர்கிறது பெண்கள் சாம்ராஜ்ஜியம்! ஆண்களுக்கு உயர்கல்வியில் 33% இட ஒதுக்கீடு விரைவில் தேவைப்படலாம். :-)

பங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்

நேற்று சேவியர் தன் வலைப்பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தார்.
சன் தொலைக்காட்சி திமுக வை விட்டு விலகும் நிலையில் ராஜ் தொலைக்காட்சியை திமுக வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக கேள்வி. !! காலையிலேயே சன் தொலைக்காட்சியின் பங்குகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி இது உண்மைதான். 14 மே 2007 அன்று சென்செக்ஸ் குறியீடு 164.12 புள்ளிகள் (1.18%) உயர்ந்தது. நிஃப்டி குறியீடு 57.4 புள்ளிகள் (1.39%) உயர்ந்தது. ஆனால் தேசியப் பங்குச்சந்தையில் சன் டிவி பங்கு 4.83% இறங்கியது. ராஜ் டிவியின் பங்கோ 3.75% உயர்ந்தது.

இதனால் மார்க்கெட் இரண்டு விஷயங்களை நினைத்திருக்கலாம். ஒன்று - சன் டிவி பெற்றுவந்த 'ஏகபோக' உரிமை இப்பொழுது போய்விடும்; அதனால் சன் டிவியின் வருமானமும் லாபமும் குறையும். அதே நேரம் ராஜ் டிவிக்குக் கொடுக்கப்பட்டுவந்த இடைஞ்சல்கள் பல குறையும்; அந்த நிறுவனத்தின் லாபம் அதிகமாகும். இதனால் ஏற்பட்ட கரெக்ஷன் ஒன்று.

மற்றொன்று சேவியர் குறிப்பிட்டதுபோல சன் டிவி நிறுவனம் ராஜ் டிவியை வாங்க முயற்சி செய்யலாம் என்பது. அரசியல் ஆதரவு இல்லாத சன் டிவி அதிக பிரீமியம் கொடுத்தே ராஜ் டிவியை வாங்கவேண்டியிருக்கும். அப்பொழுது ராஜ் டிவியின் பங்கு விலைகள் உயர்வது நியாயமானது. சன் டிவி பங்கு விலைகள் குறைவதும் நியாயமானதே.

ஆனால் பங்க்குச்சந்தையின் இந்த இரண்டு எண்ணங்களுமே தவறானவை. இவ்வளவு குறுகிய காலச் சிந்தனை தேவையே இல்லை. அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் சன் டிவியின் வருமானமும் லாபமும் சடாரெனக் குறைந்துவிடும் என்று கணக்கு செய்யவே கூடாது. அதற்கான 'நிரூபணம்' ஏதும் சந்தையிடம் இல்லை.

அரசியல் குறுக்கீடுகள் இல்லாத நிலையில் ராஜ், ஜெயா, விஜய் ஆகிய மூன்று நிறுவனங்களின் லாபமும் அதிகரிக்கும். எனவே அந்த அளவில் ராஜ் டிவி பங்கு விலை ஏறுவது சரிதான் என்று தோன்றுகிறது.

இரண்டு நிறுவனங்களின் அடுத்த இரண்டு காலாண்டு வருமானத்தையும் லாபத்தையும் கவனிப்பது நல்லது.

[சற்றுமுன்!: இன்று காலை 10.15 மணி நிலவரத்தின்படி ராஜ் டிவி நெருப்பாக 8%க்கும் மேல் ஏறியுள்ளது. சன் டிவி சுமார் 1.5% குறைந்துள்ளது.

15 மே 2005 இறுதித் தகவல்: சன் டிவி பங்கு 3.17% குறைந்துள்ளது. இரண்டு நாள்களில் மொத்த வீழ்ச்சி 8%. ராஜ் டெலிவிஷன் பங்கு இன்று மட்டும் 20% உயர்ந்துள்ளது. இரண்டு நாள்கள் மொத்த உயர்வு 24%! மிகவும் ஆச்சரியம் தரத்தக்கது இது.]

Saturday, May 12, 2007

மாயாவதியின் வெற்றி

மாயாவதியின் வெற்றி இரண்டு காரணங்களுக்காக வரவேற்கப்படவேண்டும்.

ஒன்று - தனிப்பெரும்பான்மை. அனைத்து ஊடகங்களும் தொங்கு சட்டமன்றமாகத்தான் இருக்கும் என்று தீர்மானித்திருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி ஆட்சி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஸ்திரமான கூட்டணி ஆட்சி பல இடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் பெரும்பாலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி, பிற கட்சிகள் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்று அமைதியான முறையில் செல்வார்கள். பிஹார் அப்படித்தான். மஹாராஷ்டிரம் அப்படித்தான்.

ஆனால் கர்நாடகம் குழப்பத்தில் இருப்பதற்குக் காரணம் எந்தக் கட்சியும் அடுத்ததை முழுமையாக 'நம்பர் ஒன்'னாக ஏற்காததே. இது எண்ணிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. மனநிலை சம்பந்தப்பட்டது. முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தாலும், கடைசிவரை அவரது தலைமையில் ஆட்சியை நடத்தவேண்டும் என்ற விருப்பம் இல்லாமை. உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் என்று தோன்றியது. ஏற்கெனவே சென்ற தேர்தலின்போது மாயாவதி - பாஜக கூட்டணியில் இதுதான் ஏற்பட்டது. பாஜக காலை வாரிவிட, மாயாவதியின் கட்சியை உடைத்து அதிலிருந்து வெளியேறியவர்களை வைத்து முலாயம் சிங் ஆட்சியைப் பிடித்தார்.

இம்முறை அதைப்போன்று நடக்காமல் தனிப்பெரும்பான்மை கிடைத்தது ஆச்சரியத்தை வரவழைத்தாலும் மிக நல்ல சகுனம்.

இரண்டு - மாயாவதி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள கூட்டணி. நேற்று ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதைப் பெரிதும் அலசினர். பகுஜன் சமாஜ் கட்சியில் தலித்கள், பிராமணர்கள், யாதவ்கள் உள்ளடங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் பெரும்பான்மையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.

சிலர் மாயாவதி தனக்கென எந்தத் தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கென்னவோ மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் அறிக்கை என்ற ஒன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது. உத்தர பிரதேசம் போன்ற இடத்தில் தேவை நல்லாட்சி, வளர்ச்சியைத் தடுக்காமல் இருப்பது, பொருளாதார வளர்ச்சி பரவலாக எல்லோரையும் அடையுமாறு செய்வது. இதற்கு பெரிய தேர்தல் மேனிஃபெஸ்டோ எதுவும் தேவையில்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாயாவதி எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்கள் - சாலைகள், வேலைகள், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை உருவாக்குகிறார் என்பதை வைத்து அவர் தலைமையில் உத்தர பிரதேசம் எங்கே போகும் என்று தீர்மானிக்கலாம்.

Friday, May 11, 2007

ரவுடித்தனத்தின் எதிர்காலம்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கடந்த இரு பத்தாண்டுகளில் பொது வாழ்க்கையில் வன்முறை குறைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.

சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவில், நிலவுடைமைக் கிழார்கள்தான் தங்களுக்கென்றே அடியாள்களை வைத்திருந்த முதல் கூட்டத்தினர். கீழவெண்மணிப் படுகொலைகள் இந்த அடியாள்களால்தான் நிறைவேற்றி வைக்கப்பட்டன. கூலிக்காக ஜமீந்தாரின் ஏவல்களை சிரமேற்கொண்டு அடிதடிகள், அவ்வப்போது கொலைகள், ஆள்கடத்தல்கள் ஆகியவற்றைச் செய்யும் ரவுடிகள் பின் அரசியலுக்கு மாற்றம் கண்டனர்.

ஆரம்பகட்டத்தில் அரசியலிலும் இந்த ஜமீந்தார் அடியாள்கள்தாம், தம் எஜமானருக்காக (அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்காக) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வில்லத்தனங்கள் பெரும்பாலும் கிராமப்புற, சிறு நகர ரவுடித்தனங்களே. இவற்றைப் பல சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம்.

இந்த அடியாள்கள் இல்லாமலேயே பல 'சூடு ரத்தம்' கொண்ட இனமானச் சிங்கங்கள், ஏதாவது ஒன்று என்றால் அறுவாளையும் பிச்சுவா கத்தியையும் தடிக்கழிகளையும் எடுத்துக்கொண்டு பிற ஜாதி, மத மக்களைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற சம்பவங்களும் ஏராளம். ஆனால் இவை பொதுவாக பணத்துக்காக இல்லாமல், 'மானத்துக்காக'ச் செய்யப்படுபவை. ஆனால் பல நேரங்களில் இங்கும் பணம் கொடுத்து அடியாள்களையும் கூட அழைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் உண்டு.

பெருநகர் ரவுடித்தனம், விளிம்புநிலை மக்கள் வாழும் சேரிகள் பக்கம் உருவானது. 'தாதா'க்கள் உருவாயினர். சிறு குற்றங்கள் - ஜேப்படி, திருட்டு, கள்ளக் கடத்தல் (contraband smuggling); கொஞ்சம் பெரிய குற்றங்கள் - காசு வாங்கிக்கொண்டு ஆள்களை அடித்தல், மாறு கால்/கை வாங்குதல், ஆசிட் ஊற்றுதல், கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், நில/வீடு அபகரிப்பு, கொள்ளையடித்தல், சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, ஹெராயின் கடத்துதல்-விற்றல், சதை வியாபாரம், அதற்காகப் பெண்களைக் கடத்துதல்; மாபெரும் குற்றங்கள் - கொலை, கூட்டமாகச் சேர்ந்து சென்று கொலைவெறியுடன் கண்மூடித்தனமாகத் தாக்குதல் (mob violence), பொதுச்சொத்துகளை நாசம் செய்தல் ஆகியவை. வேறு எந்தக் கண்ணியமான வேலை மூலமும் வருமானத்தைப் பெறமுடியாத நிலையில் பல இளைஞர்கள் (சில பெண்களும்) இந்தத் துறைக்குள் நுழைந்தனர்.

இந்த வன்முறையாளர்களை, சட்டத்துக்குப் புறம்பானவர்களை, அரசியல் விருப்பத்துடன் அழைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளுக்குச் சில தேவைகள் இருந்தன (இருக்கின்றன).
  1. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, போலி வாக்குகளை அடித்துத் தள்ளுவது
  2. பொதுமக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து, விரட்டி அடிப்பது
  3. தேர்தலின்போது எதிர்க்கட்சியில் முக்கியமானவர்களைக் கடத்துவது
  4. எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி, வாக்கு சேகரிக்க முடியாமல் தடுப்பது
  5. எதிர்க்கட்சிக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் புகுந்து ரகளை செய்தல்
  6. கடைசி அஸ்திரமாக 'போட்டுத் தள்ளுவது'
பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே (கம்யூனிஸ்டுகள் நீங்கலாக) இந்த அரசியல் ரவுடிகளை நம்பினாலும், ஆளும் கட்சிக்குத்தான் இவர்களது உதவி அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் காவல்துறையின் உதவி. காவல்துறை சுதந்தரமாகச் செயல்படாமல் ஆளும் கட்சியின் கைக்குள் இருந்ததால், ஆளும் கட்சி ஆதரவு ரவுடிகள் மட்டுமே அதிகச் செயல்திறனுடன் பணியாற்ற முடிந்தது.

ஆனால் சமீப காலமாக மைய தேர்தல் ஆணையம், மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவத்தின் உதவியுடனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் தேர்தலை நடத்துவதால் அரசியல் ரவுடிகளின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற இடங்களிலேயே இந்த அரசியல் ரவுடிகளால் அதிகம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலோடு அரசியல் ரவுடிகளின் தாக்கம் நின்றுவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில வருடங்களாக நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட்டு சிபிஐ விசாரணையை முடுக்கிவிடுகிறார்கள். இதனால் அரசியல் கொலைகள் யாரால் செய்யப்பட்டன என்பது தெரிந்து, அவர்களும் தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது. பிஹார் போன்ற இடங்களிலேயே இது நடக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில வருடங்களில் ஒருசில அரசியல் கொலைகள் நிகழ்ந்திருந்தாலும் இவை சீக்கிரமே நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.

முன்னெல்லாம் அரசியல் கட்சிகள் பத்திரிகைகள்மீது கோபப்பட்டு ஆசிட் வீச்சு, கல்லெறிதல், உள்ளே புகுந்து உடைத்தல் ஆகியவற்றை நிறையவே செய்துள்ளன. இப்பொழுது குறைவாகவே நடக்கிறது. விரைவில் இதுவும் நின்றுவிடும்.

கடந்த சில வருடங்களாக நிகழும் பொருளாதார வளர்ச்சியினால் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நியாயமாகச் சம்பாதிப்பதுடன், ஏமாற்றிச் சம்பாதிப்பது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு சம்பாதிப்பது என்று பல வாய்ப்புகள் உள்ளன. வளர்ச்சிப் பணிகள் குறைவாக நடக்கும் காலத்தில் 'கமிஷன் பணம்' பார்ப்பது அரசியல்வாதிகளுக்கு எளிதான விஷயமல்ல. ஆனால் பல வளர்ச்சிப் பணிகள் இப்பொழுது நடைபெறுகின்றன. சாலைகள், மேம்பாலங்கள், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்கள், வேலைக்கு உணவு திட்டம் என்று பல கோடி, கோடி பணங்கள் புரளும்போது ஆங்காங்கே புல்லுக்கும் கொஞ்சம் பொசிந்துகொள்கிறார்கள்.

இம்மாதிரியாகச் சேர்க்கும் பணம் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்றவற்றைவிட அதிகம். வேலையும் எளிது.

இந்தக் காரணங்களால் சீக்கிரமே வன்முறை குறைந்து, சட்டம் ஒழுங்கு அதிகமாகும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஊழல் குறையப்போவதில்லை. வேறு வடிவில் நிகழப்போகிறது. அத்தகைய ஊழல் பொதுமக்களின் உயிருக்கு நேரடியாக ஊறு விளைவிக்காது என்று தோன்றுகிறது. வன்முறையைவிட ஊழலை எதிர்கொள்வது எளிது என்று நினைக்கிறேன்.

ராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை

நேற்று மதியம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிய நேர்முக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டது. தமிழ் வர்ணனை படுமோசம். முன் பின் கிரிக்கெட் தெரியாத யாரோ ஒருவரை - அல்லது தமிழில் கிரிக்கெட் வர்ணனை தெரியாத ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அவருக்கு தமிழில் கிரிக்கெட் கலைச்சொற்கள் எதுவுமே தெரியவில்லை. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் பல வருடங்களாகச் சென்னை வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வந்துள்ளனர். ராமமுர்த்திக்கு வயதாகி குரல் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்துல் ஜப்பார் (வயதானாலும்) இன்னமும் கம்பீரமான குரலைக் கொண்டிருக்கிறார்.

ராஜ் டிவி கிரிக்கெட் வர்ணனையாளருக்கு உதவும் விதமாக, சில கலைச்சொற்கள் இங்கே: (இவை புழக்கத்தில் உள்ள சொற்கள். புதிதாக நான் உருவாக்கியவை அல்ல.)

Ball - பந்து
Bowler - பந்து வீச்சாளர்
Bowling - பந்து வீசுதல்
Fast Bowler - வேகப்பந்து வீச்சாளர்
Medium Pacer - மித வேகப்பந்து வீச்சாளர்
Spin - சுழல்பந்து
Spinner - சுழற்பந்து வீச்சாளர்
Left hand - இடது கை
Right hand - வலது கை
Over the wicket - வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர
Round the wicket - வீசும் கை விக்கெட்டைவிட்டு விலகி வர

Bat - மட்டை
Defended the ball - தடுத்து ஆடினார்
Played a stroke/shot - அடித்து ஆடினார்
Driving at the ball - செலுத்தி ஆடினார்
Cutting the ball - வெட்டி ஆடினார்
Pushed the ball - தட்டி விட்டார்
Sweep/Swept the ball - பெருக்கி அடித்தார்
Steered the ball - திசை கொடுத்துத் தட்டினார்
Lofted the ball - உயரத் தூக்கி அடித்தார்
(இவை போதா. பல அடிகளுக்கு தமிழில் புழக்கத்தில் நல்ல சொற்கள் இல்லை. கிளான்ஸ், ஃபிளிக், புல், ஹூக் என்று பல நுணுக்கமான அடிகளுக்குச் சொற்கள் இன்று இல்லாவிட்டால் பரவாயில்லை. நாளடைவில் உருவாக்கிக் கொள்ளலாம். இதேபோல பந்துவீச்சிலும் பல சொற்களுக்குச் சரியான தமிழாக்கம் எனக்குத் தட்டுப்பட்டதில்லை.)
Off-side - ஆஃப் திசை
On-side/leg-side - கால் திசை
Front foot - முன் கால்
Back foot - பின் கால்
Front foot defensive shot - முன்னாங்காலில் சென்று தடுத்தாடினார். (etc.)

Fielder - தடுப்பாளர் (பந்துத் தடுப்பாளர்)
(தடுப்பு வியூகத்தின் பல பெயர்களுக்கு தமிழாக்கம் கிடையாது. இவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாகப் பயன்படுத்துவதில் பெரிய தவறில்லை - இப்பொழுதைக்கு.)
Catch - கேட்ச்
catches the ball/caught the ball - பந்தைப் பிடிக்கிறார்/பிடித்தார்
Diving - பாய்ந்து விழுந்து (பிடித்தார்/தடுத்தார்)

Boundary - எல்லைக்கோடு - அல்லது நான்கு ரன்கள் (இடத்துக்குத் தகுந்தவாறு)
Six/Sixer - ஆறு ரன்கள்
Run(s) - ஓட்டம்(ங்கள்)/ரன்(கள்)

Glove(s) - கையுறை(கள்) / கைக்காப்பு(கள்)
Pad(s) - கால்காப்பு(கள்)
Helmet - தலைக்கவசம்

Umpire - நடுவர்

இன்னமும் கூட நிறைய இருக்கலாம். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு ஒப்பேற்றிவிடலாம். அடுத்த ஆட்ட வர்ணனை கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும் என்று நம்புவோம்.

Monday, May 07, 2007

கிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலும்

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ராஜ் டிவியில் தமிழிலும் அவர்களுடைய நெட்வொர்க்கின் விசா டிவியில் தெலுங்கிலும் ஒளிபரப்பாகும். இந்தத் தொடரின் உரிமையாளர்களான நியோ ஸ்போர்ட்ஸ் ராஜ் டிவி நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிந்தியல்லாத ஓர் இந்திய மொழியில் இப்படி தொலைக்காட்சி ஒளி/ஒலிபரப்பு வருவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.

எப்படி சன் டிவி இதை விட்டுக்கொடுத்தது என்று புரியவில்லை. கிரிக்கெட் இப்பொழுது இந்தியாவில் மோசமான ஆதரவில் உள்ளது என்றாலும் நூதனமான இந்த முயற்சி எந்த அளவுக்கு விளம்பரதாரர்களது ஆதரவைப் பெறும் என்று கண்டறிவதற்காவது சன் டிவி இதில் ஈடுபட்டிருக்கலாம்.

இதன்மூலம் பங்க்குசந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனமான ராஜ் டிவிக்கு எத்தனை லாபம் கிடைக்கும், அதன் பங்குவிலை எவ்வளவு ஏறும் என்பது சுவாரசியமான தகவலாக இருக்கும்.

Saturday, May 05, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

இன்று 'தி ஹிந்து' நடுப்பக்கக் கட்டுரையில், ஹரீஷ் கரே குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி அலசியிருக்கிறார். ஹரீஷ் கரே காங்கிரஸ் மற்றும் சோனியா அபிமானி. அப்துல் கலாமை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. (ஏனோ?) கீழ்க்கண்ட வாசகத்தைப் பாருங்கள்:
... NDA seems to have lost its enthusiasm for its proposal [of a second term for Kalam] but the friends of President Kalam have stepped up the campaign in his favour. Political parties are sullenly watching a Kalam second-term bid, which they think is being choreographed from Rashtrapati Bhavan.
கலாமே தான் இரண்டாவது முறை பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகத் தன் நண்பர்களை வைத்து ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார் என்பது கரேயின் குற்றச்சாட்டு. ஆனால் அழகாக, அந்தப் பழியைப் பிற கட்சிகளின்மீது போட்டுவிடுகிறார்.

ராதாகிருஷ்ணன் முதற்கொண்டு கலாம் வரையில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் எப்படியாவது இரண்டாவது முறையும் பதவியில் இருந்துவிடுவது என்ற ஆசையில்தான் இருந்துள்ளனர் என்கிறார். இது எந்தவகையில் நியாயமான கருத்து என்று புரியவில்லை. பதவி ஆசை என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும் இருக்கும். ஆனால் சில குடியரசுத் தலைவர்கள் - ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் - கட்சிகள், அரசியல் ஆகியவற்றுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்.

கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதப்படாத விதிமுறை (convention) எந்த நபருக்கும் இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுக்கக்கூடாது என்பதே - என்கிறார் கரே. ஆனால் அவரது கட்டுரையிலேயே, இது விதிமுறை அல்ல, நிகழ்வுகள் அப்படியான ஒரு நிலையைக் கொண்டுவந்துவிட்டது என்று அறிகிறோம். இப்பொழுதைய நிலையை எடுத்துக்கொள்வோம். கலாம் வேண்டாம் என்று மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் கலாம் போட்டியில் நிற்க விரும்புவதாகச் சொன்னால் போதும். வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. ஆனால் அவர்கள் சென்ற தேர்தலின்போதும்தான் இவரை எதிர்த்து கேப்டன் லட்சுமி சேகாலை நிறுத்தினார்கள். எனவே இவர்களது எதிர்ப்பு மட்டும் போதாது. காங்கிரஸும் எதிர்க்கும் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் காங்கிரஸ், இடதுசாரியினருக்கு பெரும்பான்மையைவிடக் குறைவாகவே வாக்குகள் உள்ளன. UPA கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தாலும் பெரும்பான்மையைவிடக் குறைவான வாக்குகளே உள்ளன.

மொத்த வாக்குகள்: 1,098,882
UPA வாக்குகள்: 390,000
இடதுசாரி வாக்குகள்: 110,000
NDA வாக்குகள்: 335,000
உத்தரப் பிரதேச வாக்குகள்: 83,824 (மே 11 அன்று யாருக்கு எவ்வளவு என்று தீர்வாகும்)
பிற: 180,058

உத்தரப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்சிகளாக பஹுஜன் சமாஜ் கட்சி, பாஜக, சமாஜ்வாதி கட்சி ஆகியவையே (இதே வரிசையில் அல்ல) வரப்போகின்றன என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன. காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 10% இடங்கள் - சுமார் 40 - மட்டுமே கிடைக்கும். காங்கிரஸுடன் மட்டும் கூட்டு சேர்ந்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முலாயம் சிங்கும் மாயாவதியும் ஒருவரோடு ஒருவர் வெட்டுப்பழி/குத்துப்பழி. எனவே இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் பாஜக துணையுடன் ஆட்சி அமைக்கப்போகிறார். அப்படிப்பட்ட நிலையிலும்கூட எதிர்க்கட்சியாக இருக்கும் மூன்றாவது கட்சி (சமாஜ்வாதி அல்லது பஹுஜன் சமாஜ்) காங்கிரஸ்-இடதுசாரி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை.

பாஜகவுக்கு தனது கட்சியின் பைரோன் சிங் ஷேகாவத்தை நிற்கவைக்கக்கூடிய பலம் கிடையாது. அவரது RSS பின்னணி, வாக்குகளை உடைத்துவிடும். பாஜக எப்படியும் இடதுசாரி/காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது. எனவே கலாம் போட்டியில் இருக்கும் பட்சத்தில் பாஜக + தோழமைக் கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக கலாமுக்கே போய்ச்சேரும். சிவசேனைகூட இதில் பின்வாங்காது.

பிற கட்சிகளில் தெலுகு தேசம், அஇஅதிமுக, மதிமுக போன்றவை அப்படியே கலாமுக்குத்தான். தமிழகத்தில் திமுக கூட கலாமுக்கு ஆதரவாகத்தான் விழும். கலாமை எதிர்த்து வாக்களிப்பது (கலைஞர் பொன்விழாவுக்கு கலாம் வராதபட்சத்திலும்) தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

எனவே பிற வாக்குகளில் பெரும்பான்மை கிட்டத்தட்ட 150,000-க்கு மேல் கலாமுக்கே போகும். உத்தரப் பிரதேச முதலிரண்டு கட்சிகளும் கலாமுக்கே என்றாலும், மூன்றாவது கட்சியின் வாக்குகள் யாருக்கு என்பது முக்கியமாகிறது. அது காங்கிரஸ் வேட்பாளருக்குப் போவதற்கு சாத்தியங்கள் குறைவு. காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கட்சியோடும் சண்டையில் இருக்கிறது.

கலாமுக்கு எதிராக யாரை காங்கிரஸ்-இடதுசாரிகள் நிறுத்துவார்கள் என்பதும் முக்கியம். கலாமுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. (ஆனால் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை.)

காங்கிரஸ் அரசியல்வாதி யாரையாவது நிறுத்தினால் அவரால் பிற கட்சியினரின் வாக்குகளைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே. மன்மோகன் சிங்கையே நிறுத்தினால் ஒருவேளை நல்ல போட்டியைக் கொடுக்கமுடியும். ஆனால் அது நடக்காது என்று தோன்றுகிறது.

கலாமுடைய விருப்பம் என்னவென்று தெரியவில்லை. அவர் ஆணித்தரமாக எதையும் சொல்லவில்லை. அவர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் அவர் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் நல்ல போட்டி இருக்கும்.

Thursday, May 03, 2007

மே சிந்தனைகள்

தொழில்புரட்சியை அடுத்து உருவான கம்யூனிசச் சிந்தனை, தொழிலாளர் என்பவர் பொதுவாக ஒரு தொழிற்சாலையில் (Factory) வேலை செய்பவர் என்றும் கச்சாப் பொருளுக்கும் உற்பத்தியாகும் இறுதிப் பொருளுக்கும் இடைப்பட்ட மதிப்புக் கூடுதலைக் கொடுப்பது அந்தத் தொழிலாளரின் உழைப்பு மட்டுமே என்றும் இந்த உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பது மூலதனத்தைக் கொண்டுவந்த முதலாளி(கள்) என்றும் சொன்னது.

தொழில்புரட்சிதான் இயந்திரமயமாக்கலைக் கொண்டுவந்தது. எந்த ஒரு பிரச்னை அல்லது தேவைக்கும் ஓர் இயந்திரம் அல்லது ஒரு நுகர்பொருள் தீர்வாகும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அழுக்கான துணிகளைக் கைவலிக்கத் தோய்ப்பது பிரச்னை. அதைத் தீர்க்க உருவாக்கப்படுவது தோய்க்கும் இயந்திரம் (Washing Mechine). நாவிதர் துணையின்றி சவரம் செய்துகொள்வது தேவை. அந்தத் தேவையைத் தீர்த்துவைப்பது தூக்கியெறியக்கூடிய சவரக்கத்தி (Disposable Razor). காலையில் சமைக்காமல் சாப்பிட ஏதுவான பலகாரம் - தேவை. பாக்கெட்டில் அடைத்த தானிய உணவு (Cereals), தீர்வு.

பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று தோன்றியதுமே அடுத்து அதனைப் பெருமளவு உற்பத்தி செய்ய (Mass Production), தொழிற்சாலை வேண்டியிருந்தது. உற்பத்தி செய்த பொருள்களை மக்களுக்குக் கொண்டுசெல்ல விநியோக முறை, விளம்பர உத்திகள் ஆகியவை தேவைப்பட்டன. பெரு நிறுவனங்கள் (Corporations) உருவாயின. இவற்றை நடத்தத் தேவையான மூலதனத்தை - பங்கு மூலதனமாகவும் கடன்களாகவும் - வழங்க நிதி நிறுவனங்கள் உருவாயின.

இந்தச் சூழ்நிலையில், உற்பத்தியின் முக்கியமான அங்கமான தொழிலாளர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும்கூட, முக்கியத்துவத்தில் பெரிதும் கீழே சென்றனர். அதிகமான வேலை நேரம் (நாளுக்கு 8 மணிநேரத்துக்கு மேல்), மோசமான பணியிடச் சூழல், உயிருக்கே ஆபத்தான வேலைகள், விடுமுறை என்பதே இல்லாத சூழல், காப்பீடு இல்லாத நிலை, எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இழப்பீடும் தரப்படாமல் வேலை போகலாம் என்ற நிலை, சம்பளம் குறைக்கப்படலாம் என்ற சூழல், தொழிலாளர் நலச் சட்டதிட்டங்கள் என்று ஏதும் இல்லாமை, அரசும் காவலர்களும் முதலாளிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருத்தல் - போன்றவற்றால் தொழிலாளர் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.

1860களுக்குப் பிறகு அமெரிக்காவில் தடவண்டிப் பாதைகளை அமைத்தவர்கள், கச்சா எண்ணெய் தோண்டியவர்கள், இரும்பு-எஃகு நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் என்று அனைவருமே இப்படியான சூழலில்தான் வேலைசெய்தனர். ஒருநாள் கூட ஓய்வு இன்றி, (ஞாயிறு கூட ஓய்வு கிடையாது!) நாளுக்கு 12-14 மணிநேரமெல்லாம் வேலை செய்துள்ளனர். கார்னெகியின் இரும்புக் கம்பெனிகளில் லாபம் கொழிக்கும்போதுகூட தொழிலாளர்களின் சம்பளம் குறைந்துகொண்டே வந்துள்ளது.

இரும்பு, சிமெண்ட், ரசாயனத் தொழிற்சாலைகளில் பல வேதிப் பொருள்களும் உடலில் படுவதால், சுவாசிக்கப்படுவதால் உடல்நலம் குன்றி இறந்த தொழிலாளர்கள் எத்தனையோ பேர்.

தொழிலாளர்கள் சங்கம் (Union) அமைத்து, ஒன்றுகூடி, பல விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருந்தது.
  • எட்டு மணிநேர வேலை நாள்
  • வார விடுமுறை
  • உடல்நலக் குறைவு விடுமுறை, பண்டிகை விடுமுறைகள், பிற விடுமுறை
  • விடுமுறை நாள்களுக்கும் சம்பளம்
  • குறைந்தபட்ச சம்பளம்
  • தொழிலாளர் சங்கம் அமைக்கும் உரிமை
  • பணியிடங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்
  • தொழிலாளர் சங்கம் மூலம் சம்பளப் பேச்சுவார்த்தை (Collective negotiation)
  • லாபத்தில் பங்கு (Bonus)
  • வேலைக்கான இலக்கு (Target)
  • பணியிடத்தில் நிர்வாகத்தால் கண்ணியத்துடன் நடத்தப்படுதல்
  • ஓவர்டைம் நேரத்தில் அதிகச் சம்பளம்
  • ஓய்வூதியம்
  • தம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை
  • பிற வசதிகள்
இவை அனைத்தும் ஒரே நாளில் கேட்கப்படவில்லை. ஒரே நாளில் கிடைக்கவுமில்லை. போராடிப் போராடித்தான் இதில் பல விஷயங்கள் இன்று சர்வதேச, இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன. இதற்குமேலும் தேவைகள் உள்ளன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலவுமே இன்று தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

இன்று தொழிற்சாலை என்பதைத் தாண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் என்பதிலிருந்து பணியாளர் என்ற நிலை. அரசு அலுவலகங்களில், தனியார் சேவை அலுவலகங்களில், கடைகளில், உணவகங்களில் என்று எங்கு பார்த்தாலும் பணியாளர்கள்.

இதில் அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்த பிற அரசு அலுவலகங்களுக்கு லாபம் என்ற நோக்கு கிடையாது. பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலும் லாப நோக்கு உடையன அல்ல. ஆனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் லாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் நான்கு தனிப்பட்ட பங்காளிகள் உள்ளனர். முதலீட்டாளர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், பிற பணியாளர்கள், வாடிக்கையாளர்கள். இவர்கள் அனைவரது நோக்கங்களும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை. வாடிக்கையாளர் குறைந்த விலையில் சிறந்த சேவையை/பொருளை நாடுகிறார். ஆனால் இது முதலீட்டாளர்களது லாபத்தைப் பாதிக்கும். நிர்வாகிகள் முடிந்தவரை தங்களுக்கு நல்ல சம்பளமும் நிறுவனத்தை மேம்படுத்த நிறையப் பணமும் தேவை என்று எதிர்பார்ப்பார்கள். இதுவும் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பாதிக்கும். லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தையும் மோசமான பணியிடத்தையும் தந்தால் அது பொருளை/சேவையைப் பாதிக்கும். வாடிக்கையாளர் மனம் கோணுவார். வருமானம் குறையும்.

ஆனால் இந்த நான்கு பங்காளிகளுக்குள் எப்பொழுதுமே அதிகம் பாதிக்கப்படுவது பணியாளர்கள்தாம். தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடிக்கையாளர்கள் வேறு பொருளை/சேவையை நாடிப் போய்விடுவார்கள். மேல்மட்ட நிர்வாகிகள் பொதுவாகவே அதிகச் சம்பளம் வாங்குபவர்கள். இரண்டு மாதங்கள் விடுப்பில் போய் வேறு வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். சில தொழில்முனைவோரை விடுத்து, பொதுவாக முதலீட்டாளர்கள் கையில் நிறைய பசையுள்ளவர்கள்தாம். அதனால் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.

ஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.

ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில் பணியாளர் நிலை உயரவேண்டும் என்றால் அவர்கள் முதலாளிகளாக ஆனால் மட்டுமே இது ஏற்படும். அதற்கு ஒவ்வொரு லாப நோக்குள்ள நிறுவனத்திலும் கீழ்நிலைப் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து 10% பங்குகளையாவது வைத்திருக்கவேண்டும். ஸ்டாக் ஆப்ஷன் முறை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். மேலும் பணியாளர் பிரதிநிதி ஒருவராவது நிறுவனத்தின் போர்டில் (Board Of Directors) இயக்குனராக இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான் நிறுவனத்தின் லாபம், டிவிடெண்ட், மேல்மட்ட நிர்வாகிகளின் சம்பளம், அடிமட்டத் தொழிலாளியின் சம்பளம், பணியிட வசதிகள், வேலை நேரம், விடுமுறை, போனஸ் போன்ற பலவற்றிலும் பணியாளர்களது கருத்தும் கேட்கப்படும்.

கம்பெனியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் இது சாத்தியமானது. ஆனால் சிறு நிறுவனங்கள், கம்பெனியாக நிறுவப்படாத நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இதனைச் செய்வது கடினமாக இருக்கலாம்.

இருந்தும், பெரும் நிறுவனங்களிலாவது 10% பங்குகள் பணியாளர்களுக்கான அறக்கட்டளையில் இருப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.