Saturday, October 20, 2007

புத்தக உரிமைச் சந்தை - 1

புத்தகச் சந்தை என்பது புத்தகத்தைப் பதிப்பிப்பவர் (பதிப்பாளர்), புத்தகத்தை விற்பனை செய்பவர் (விநியோகஸ்தர், கடைக்காரர்), புத்தகத்தை வாங்குபவர் (நுகர்வோர்) ஆகியோருக்கு இடையேயான சந்தையைக் குறிப்பது. பெரும்பான்மையான புத்தகக் கண்காட்சிகள் இந்தச் சந்தையைக் குறிவைத்து இயங்குகின்றன. உதாரணம்: சென்னை புத்தகக் கண்காட்சி. பதிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கடையைப் பரப்புவார்கள். படிப்பவர்கள் வந்து புத்தகத்தை வாங்கிச் செல்வார்கள். இது b2c (business to consumer) சந்தை.

ஆனால் இந்தியர்கள் அதிகம் அறியாத ஒன்று புத்தக உரிமைச் சந்தை. எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் பிரதிநிதிகள், பதிப்பாளர்கள் மட்டுமே இயங்கும் சந்தை இது. அதாவது b2b (business to business) சந்தை.

உலகில் அதிகமாக விற்கும் ஹாரி பாட்டர் அல்லது டா விஞ்சி கோட் போன்ற புத்தகங்களை எடுத்துக்கொள்வோம். இதுபோன்ற புத்தகங்கள் எவ்வாறெல்லாம் விற்பனை செய்யப்படலாம்?

* புத்தகம் எழுதப்பட்ட மூல மொழியில் உலகெங்கும் ஒரே பதிப்பாளரால் விற்பனை செய்யப்படலாம்.

* ஆனால் அந்தப் பதிப்பாளருக்கு உலகெங்கும் விற்பனை செய்யக்கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். ஹாரி பாட்டர் புத்தகங்களை பிரிட்டனில் பதிப்பித்து விற்பனை செய்ய உரிமம் பெற்றிருந்தது ப்ளூம்ஸ்பரி நிறுவனம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு கட்டுமானம் கிடையாது. அமெரிக்காவில் இந்தப் புத்தகங்க்களுக்கான 'ஏலம்' நடைபெற்றபோது ஸ்கோலாஸ்டிக் என்ற நிறுவனம் அமெரிக்காவில் பதிப்பித்து விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றது.

அதாவது நாம் மேலே குறிப்பிடுவது ‘நிலப்பகுதிவாரிப் பதிப்பு உரிமை' - Territorial Publishing Right.

* மறு அச்சாக்கும் உரிமை (Reprint Right). புது பதிப்பு என்றால் பதிப்பாளர் புத்தகத்துக்குள் பல இடங்களில் கையை வைக்கலாம். அமெரிக்காவில் ஸ்பெல்லிங்க் மாற்றம் பெறும். சில பிரிட்டானியச் சொல்லாக்கங்கள் மாற்றம் அடையும். அட்டை மாற்றம் காணும். புத்தகத்தில் தலைப்பே மாற்றம் பெறும். உலகெங்கும் Harry Potter and the Philosopher's Stone என்ற பெயரில் வெளியான புத்தகம் அமெரிக்காவில் Harry Potter and the Sorcerer's Stone என்ற பெயரில் வெளியானது. ஆனால் மறு அச்சாக்கும் உரிமையில் இதுபோன்ற மாற்றங்கள் ஏதும் இருக்கா. அப்படியே அச்சாக்கி, அட்டையை வேண்டுமானால் மாற்ற அனுமதி கிடைக்கலாம்.

பொதுவாக அமெரிக்கா, பிரிட்டனில் வெளியாகும் பல புத்தகங்கள் இந்தியாவில் கிடைக்கா. சில, இறக்குமதி செய்யப்பட்டு மிக அதிக விலையில் இந்தியாவில் விற்பனையாகும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவற்றின் மறு அச்சாக்கும் உரிமையை சில இந்திய நிறுவனங்கள் வாங்கலாம். இந்த நிறுவனங்களுக்கு எடிட்டோரியல் திறமை ஏதும் இருக்கவேண்டிய தேவையே இல்லை.

* மொழிமாற்றிப் பதிப்பிக்கும் உரிமை (Translation Right). ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்து புத்தகங்களைப் பதிப்பித்து, அவற்றை உலகமெங்கும் விற்பனை செய்யும் உரிமை. இது பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

* சுருக்கிப் பதிப்பிக்கும் உரிமை (Abridgmenet Right). பல புத்தகங்களை உரிமம் பெற்று சுருக்கு, சில (அதிகாரபூர்வ) மாறுதல்களைச் செய்து, மீண்டும் பதிப்பிப்பது.

* மலிவுவிலைப் பதிப்பு உரிமை: பல வருடங்களாக விற்பனை ஆகும் புத்தகங்களின் உரிமையைப் பெற்று அவற்றை மலிவு விலைப் புத்தகங்களாக அச்சிட்டுக் கொண்டுவருவது. இதற்கு மாற்றாக சில புத்தகங்களை அதிகவிலைப் புத்தகங்களாக (Coffee-table books, Premium Production) உருவாக்கி விற்பதும் சாத்தியமே.

* வேறு பல உரிமங்களும் சாத்தியமே:

ஒற்றைப் பதிப்பு (Single Print run Right) என்பது தமிழகத்திலேயே நடைமுறையில் இருப்பது. ரமணி சந்திரன் கதைகள் ஒற்றைப் பதிப்பு முறையில் மாதநாவலாக வந்து, பின்னர் அதுவே அருணோதயம் பதிப்பகம் வழியாக தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

தொடர்நாவல் உரிமம் (Serialisation Right) என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். தமிழகத்தில் பொதுவாக தொடர்கதையாக (கட்டுரையாக) வந்தவை, பின் முழுப் புத்தகமாக அச்சேறும். ஆனால் பிற இடங்களில், புத்தகமாக வந்தவற்றை, தொடர் கதையாக/கட்டுரையாக மறுபிரசுரம் செய்வார்கள்.

திரைப்படமெடுக்கும் உரிமை (Cinema Rights) நமக்குக் கொஞ்சம் புதுசு. பொதுவாக தமிழ் இயக்குனர்கள் கதைகளைத் திருடி, உல்டா செய்து, நான்கைந்து இடங்களிலிருந்து வெட்டி ஒட்டி, கடைசியில் யாருக்கும் காசு கொடுக்காமல் ஒப்பேற்றி விடுவார்கள். அல்லது காசு கொடுத்து உரிமம் வாங்கினாலும் கதையைக் கைமா செய்துவிடுவார்கள். ஹாலிவுட்டில் ஓரளவுக்கு ஒழுங்காக, காசு கொடுத்து வாங்கி கதையை அப்படியே சினிமாக்குவது நடந்துவருகிறது.

ஒலிப்புத்தக உரிமை (Audio book Rights) இப்பொழுது பிரபலமாகி வருகிறது. புத்தகத்தை அப்படியே படித்து ஒலிப்பதிவாக்கி விற்பனை செய்வது.

மின் புத்தக உரிமை (E-book Rights) என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்பொழுது மின் புத்தகப் படிப்பான் கருவிகள் (சோனி ரீடர், ஐரெக்ஸின் இலியட், இதோ வந்துவிடும் என்று சொல்லப்படும் அமேசானின் கிண்டில்) போன்றவை. கணினியில் படிப்பது கண்களுக்கு எளிதான வேலை அல்ல. ஆனால் மின் புத்தகப் படிப்பான்கள் கண்ணுக்கு இதமாக உள்ளன.

மேலும் பல உண்டு. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்வோம். அடுத்த பதிவுகளில் இந்த உரிமங்களுக்கு உள்ளே சென்று ஆழமாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment