Tuesday, January 08, 2008

இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவினால் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரிய பிரச்னை இது.

முதலாவது இந்தியா, 2001-ல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடந்த மிக மோசமான ஒரு நிகழ்ச்சி. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டியின் இரண்டாவது டெஸ்ட். இந்திய அணியின் பெரும்பான்மை வீரர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த மேட்ச் ரெஃபரி மைக் டென்னிஸ் என்பவருக்கு முன் குற்றம் சாட்டப்பட்டு நின்றனர். சச்சின் டெண்டுல்கர் பந்தை விரலால் நோண்டினார் என்று அவர்மீது குற்றம். வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், தீப் தாஸ்குப்தா (விக்கெட் கீப்பர்) ஆகியோர் அளவுக்கு அதிகமாக அப்பீல் செய்தனர் என்பது அவர்கள்மீதான குற்றச்சாட்டு. இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பது கேப்டன் சவுரவ் கங்குலி மீதான குற்றச்சாட்டு.

இவர்கள் அனைவருக்கும் தண்டனை. அதில் சேவாகுக்கு ஒரு டெஸ்ட் தடை, உடனடியாக அமலுக்கு வந்தது. மற்ற அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை - சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, அவர்கள் தண்டனையை அனுபவிக்கவேண்டாம். ஆனால் அவர்கள் மேற்கொண்டு வேறு ஏதேனும் குற்றம் செய்தால் தண்டனை இரட்டிப்பாகும்.

மைக் டென்னிஸ் நிஜமாகவே பைத்தியக்காரன் போல்தான் நடந்துகொண்டார்.

ஆனாலும் அதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடந்துகொண்டவிதம் படுமோசமாக இருந்தது. மைக் டென்னிஸ் இருந்தால் நாங்கள் விளையாடமாட்டோம் என்று இந்தியா சொன்னது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், பயந்துபோய், இந்தியாவுக்கு ஆதரவாக, ஐசிசி அலுவலரான மைக் டென்னிஸை மூன்றாவது/கடைசி டெஸ்டுக்கு அரங்குக்குள் நுழையவிடாமல் செய்தது. வெகுண்ட ஐசிசி, மூன்றாவது டெஸ்டை அங்கீகரிக்கமுடியாது என்று சொல்லிவிட்டது.

அடுத்து இந்தியா விளையாடும் டெஸ்ட் இங்கிலாந்துக்கு எதிரானது. அதில் சேவாக் விளையாடக் கூடாது, அவர்மீதான தடை நிறைவேற்றப்படவேண்டும் என்று ஐசிசி உறுதியாக இருந்தது. இந்தியா கடைசிவரை ஐசிசியை பயமுறுத்தியவாறே இருந்தது. கடைசியில் சேவாக் விளையாடவில்லை.

இந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவின் பக்கம் நிறைய நியாயம் இருந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்திய ஆதரவாளர்களும் நடந்துகொண்டது சரியாக இல்லை.

ஒருவர்மீது நியாயம் இருக்கும்போது அவர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ளவேண்டும். மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டு, அவனை மாற்று, இவனை மாற்று என்று குதித்து சின்னக் குழந்தை போல அசிங்கமாக நடந்துகொள்ளக்கூடாது. மைக் டென்னிஸ் விதிப்படி நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு மேட்ச் ரெஃபரி. அவர் கொடுத்த தீர்ப்பு ஏற்புடையதில்லை என்றால் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும். அடுத்த ஆட்டத்தில் அவருக்குக் கீழாகவே விளையாடியிருக்கவேண்டும். ஆனால் இந்தியா அப்படிச் செய்யவில்லை. மைக் டென்னிஸ் இருந்தால் நாங்கள் விளையாட மாட்டோம் என்று சொன்னதன்மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சிக்கலில் மாட்டிவிட்டனர். இத்தனைக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நட்பு வாரியம்.

இந்திய ரசிகர்களுக்குத்தான் சட்டம், ஒழுங்கு என்று எதுவுமே தெரியாது. ரவுடிகள்போல நடந்துகொள்பவர்கள். ஆனால் இந்திய மீடியா செய்யும் அழும்பு தாங்கமுடியவில்லை. எல்லா சட்டங்களும் விதிகளும் மேல் முறையீட்டுக்கு வழி செய்து கொடுத்திருக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ளாமல், பிடிவாதம் பிடிப்பது எந்த ஓர் அமைப்புக்கும் நல்லதல்ல.

ஒட்டுமொத்தமான அமைப்பே ஒரு நாட்டுக்கு, அணிக்கு எதிராகச் சதி செய்கிறது என்று தீர்மானமாகத் தெரிந்தால்மட்டுமே அந்த நாடு/அணி வேறு வழிகளில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்.

இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரச்னைக்கு வருவோம். இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்டில் நடுவர்கள் கொடுத்த பல தீர்ப்புகள் தவறானவை என்பது உண்மை. அதனால் டிரா ஆகியிருக்கவேண்டிய டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது என்பதும் உண்மை. சொல்லப்போனால், முதல் இன்னிங்ஸில் சிமாண்ட்ஸ் சரியாக அவுட் கொடுக்கப்பட்டிருந்தால், இந்தியா இந்த ஆட்டத்தை கஷ்டப்பட்டு ஜெயித்திருந்திருக்கலாம். அத்துடன் ஹர்பஜன் சிங்குக்கு ‘இனவெறி' பட்டமும், மூன்று டெஸ்ட்கள் தடையும் சேர்ந்து கிடைத்திருப்பது இந்திய ஆட்டக்காரர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.

ஆனால் அதற்காக இந்தியா கடந்த இரு தினங்களில் செய்த அழும்பு பார்க்க சகிக்கவில்லை.

நடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

பாண்டிங் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார் என்று நாம் சொல்லலாம். அவர்மீதும் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் மீதும் குற்றம் சொல்லலாம். மேட்ச் ரெஃபரி மைக் புராக்டர் மீதும் குற்றம் சொல்லலாம். ஹர்பஜன் சிங் விவகாரத்தில் ஐசிசியிடம் மேல்முறையீடு செய்யலாம். (இந்தியா செய்துள்ளது.)

பிரச்னை நடந்தபோது தென்னாப்பிரிக்காவிலும் சரி, இப்போது ஆஸ்திரேலியாவிலும் சரி, இந்தியாவின் ஆட்டம் பார்க்கச் சகிக்கவில்லை. பேட்டிங் கண்றாவி. பவுலிங் ஏதோ தேவலாம். அதனால் frustration. வெறுப்பு. இதில் ஓரிரு நடுவர் முடிவுகள் தவறாகப் போனால் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் விளையாட்டு வீரர்களிடமும் இல்லை, இந்திய மீடியாவிடமும் இல்லை, இந்திய ரசிகர்களிடமும் இல்லை. என்னமோ எல்லாரும் சேர்ந்து இந்திய அணிக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற சுய பச்சாதாப உணர்வு. இந்த எண்ணம் வந்துவிட்டால் எந்தத் தனி நபரும் அமைப்பும் உருப்படவே முடியாது.

எவ்வளவோ டெஸ்ட் போட்டிகளில் நடுவர் செய்த தவறுகளால் பல அணிகள் தோற்றுப்போயுள்ளன. யாரும் இந்தியா போல நடுத்தெருவில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடிக்கும் குழந்தைபோல நடந்துகொண்டதில்லை.

ஆஸ்திரேலியாவை ஜெயிப்பது இருக்கட்டும். முதிர்ச்சியோடு நடந்துகொள்ள, இந்தியா முதலில் கற்றுக்கொள்ளட்டும்.

அப்துல் ஜப்பார் எழுதியது - அதுவும் ஸ்டீவ் பக்னரை ஒருமையில் விளித்தது - எனக்கு சற்றும் ஏற்புடையதல்ல. அவ்வாறு அவர் எழுதியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒருவரைக் குற்றம் சாட்டவேண்டுமானாலும் கண்ணியமான முறையில் செய்யவேண்டும்.

7 comments:

  1. //மைக் டென்னிஸ் நிஜமாகவே பைத்தியக்காரன் போல்தான் நடந்துகொண்டார்.//

    "பைத்தியக்காரர்" என்று பன்மையில் விளிக்கவும்.

    ReplyDelete
  2. 100% ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. ஸ்டீவ் பக்னர் ஒரு டடுநிலை தவரியவர் என்பத்ற்கு 1992 டெஸ்ட் ஒரு உதாரனம்.

    ஜாண்டி ரோட்ஸ் ரன் அவுட். அதை "பெரிய திரையில்" (that was the time giant screens was introduced and that series was the first series to have third umpire) வேறு காட்டுகிறார்கள். ஆனால் இவர் மூன்றாவது நடுவருக்கு கேட்க மறுக்கிறார்.

    பந்து வீசிய கபில் (அப்படித்தான் என் ஞாபகம்) அடுத்த பந்து வீச மறுக்க ஒரே களெபாரம்.

    மேட்ச் பிக்சீங் விசாரனையில் ஸ்டீவ் பக்னர் விசாரிக்கப்படவேண்டியது அவசியம்.

    நடுவர் உறுதியாக அவுட் என்று நம்பினால் முன்றாவது நடுவரை கேட்காமலேயே அவுட் குடுக்கலாம். ஆனால் மூன்றாவது நடுவரை கேட்கமாட்டேன் என்பது அயோக்கியத்தனம். ரன் அவுட்டிலேயே இந்த கூத்து அடித்தவர் பக்னர்

    (1998 சார்ஜா ஞாபகம் இருக்கா)

    ReplyDelete
  4. உண்மை. வந்ததிலேயே உருப்படியான ஒரு விமர்சனம். கடந்த இரண்டு நாட்களாக தினப்பத்திரிகைகளை பார்க்கவேண்டுமே, ஏதோ இந்தியாவின் இறையாண்மையை யாரோ காயப்படுத்திவிட்ட மாதிரி ஒரே ஆர்ப்பாட்டமும் அமளியும்.

    ReplyDelete
  5. What you say is partially correct, but this is not about 1 or 2 decisions and India played better than aussies in this match. 13 decesions is what I was able to count while live telecast and highlights [here sky broadcasts highlights for an hour with decent pace]. If most of the decesions were right, it would have been an innings defeat for the aussies. I am not biased here. What BCCI did is not appropriate to some extent, but when do you want to appeal? Can an appeal over rule the result of a test match? What is sure that Steve wouldnt be repeating his stupidity again. If he is not capable of hearing such a loud nick, he has to get out of the ICC elite!!! panel. To err is human but not 13 times and not 4 times for one specific player. But, always, as u said, there are better ways to deal an issue, which BCCI hasnt learnt so far.

    -- Nokia Fan.

    ReplyDelete
  6. பத்ரி - இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. தொடர்பான என் பதிவைப் பார்த்தீர்களா?

    http://domesticatedonion.net/tamil/?p=719

    நீங்கள் Over-simplify செய்திருப்பதாகத் தோன்றுகிறது (இந்தியாவில் இருந்துகொண்டு ஊடகமும் பொதுமக்களும் கூச்சலிடுவதையும், புலம்புவதையும் கேட்பதாலிருக்கலாம்).

    பக்னர் நீக்கப்பட்ட வேண்டும் என்று நான் எழுதியிருந்தேன். பட்டிருக்கிறார். நீங்கள் அப்படிக் கேட்பது தவறு என்கிறீர்கள் (ஜபாரின் பதிவை நான் இந்னும் படிக்கவில்லை).

    பக்னர் பற்றி இன்னும் இரண்டொரு நாட்களில் எழுதுகிறேன்.

    ReplyDelete