Thursday, February 28, 2008

சுஜாதா - அஞ்சலி

சுஜாதாவுடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை. பத்துக்கும் குறைவான முறையே அவரைச் சந்தித்திருக்கிறேன்.

1997-ல் முதலாவதாக சந்தித்தேன். அப்பொது சென்னையில் கனகஸ்ரீ நகர் (ராதாகிருஷ்ணன் சாலையில் மியூசிக் அகாடெமிக்குப் பக்கத்து சந்து) என்னுமிடத்தில் நெட்கஃபே என்ற சென்னையின் முதல் இணைய உலவுதளம் உருவாகியிருந்தது. அதன் தொழில்நுட்ப ஆலோசகனாக நான் இருந்தேன். சென்னைக்கு மிகவும் புதியதான 'ஹை-ஸ்பீட்' இணைப்பு என்பதால் பல பிரபலங்கள் அங்கே வந்துள்ளனர். சுஜாதாவும் அதில் ஒருவர்.

பின்னர் 1997-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அவரைச் சந்தித்தேன். மாநாட்டிலிருந்து தங்குமிடத்துக்குச் செல்லும்போது ஒரு வண்டியில் சுஜாதா, முரசு அஞ்சல் முத்து நெடுமாறன், (கனிமொழி கணவர்) அரவிந்தன், நான், இன்னும் சிலர் சென்றோம். கிரிக்கின்ஃபோ பற்றி அப்போது பேசிய ஞாபகம் இருக்கிறது.

அதன்பின் அவரை தமிழ் இணைய மாநாடுகளில் மட்டுமே சந்தித்தேன் என்று நினைக்கிறேன். சென்னையில் 1999-ல் (?) நடந்த மாநாட்டின்போது இப்போது கொரியாவில் இருக்கும் (அப்பொது ஜெர்மனியில் இருந்த) நா.கண்ணன், சுஜாதா ஆகியோரோடு மனோஜ் அண்ணாதுரையின் சென்னை கவிகள் அலுவலகம் சென்றது ஞாபகம் இருக்கிறது.

பிறகு மீண்டும் 2003 தமிழ் இணைய மாநாடு. (அதைப்பற்றிய எனது பதிவுத்தளம்.) பின் 2004-ல் ழ கணினி அறிமுக விழாவின்போது. 2003-04 சமயத்தின் டிஷ்நெட் அலுவலகம் சென்று சிலமுறை தமிழ்+லினக்ஸ் பற்றி அவருடன் பேசியிருக்கிறேன்.

2006-ல் என் தந்தைக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்வதற்கு அபோல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயஷங்கர் அறை வாயிலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதா அங்கே வந்தார். என் தந்தைக்கு நடக்க உள்ள ஆபரேஷன்பற்றி அவரிடம் பேசினேன். அவரும் டாக்டர் விஜயஷங்கரிடம்தான் பைபாஸ் செய்துகொண்டதாகச் சொன்னார். இதயம் சரியாக இருக்கிறதா என்று ரொட்டீன் பரிசோதனைக்காக அங்கு வந்ததாகச் சொன்னார். 'He [Dr. Vijayashankar] is the best, don't worry' என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவருடன் நான் புத்தகங்கள் தொடர்பாகவோ இலக்கியம் தொடர்பாகவோ எதையுமே பேசியதில்லை. தமிழ் கம்ப்யூட்டர் பற்றி அதிகமாகவும், கிரிக்கெட் பற்றி ஓரளவுக்கும். கடைசியாக சில மாதங்களுக்குமுன் அவருக்கு சில ஆடியோ புத்தகங்களை அனுப்பிவைத்தேன். அப்போது ஃபோனில் பேசியவர், நாவல்களைவிட சிறுகதைகள் ஆடியோ வடிவில் நன்றாக வரும் என்று தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார். அவ்வளவுதான்.

-*-

சுஜாதாவின் எழுத்துகள் பல தலைமுறை இளைஞர்களை வசியம் செய்ததுபோலவே என்னையும் வசீகரித்திருக்கிறது. மூன்றாவது படிக்கும்போது குங்குமம் இதழில் சுஜாதாவின் ஒரு தொடர்கதை. (கதை என்ன என்று இப்போது ஞாபகம் இல்லை.) அதற்கு ஜெயராஜ் போட்டிருந்த படம் கதையைவிட மோசம். அந்தப் பக்கத்தை நான் கையில் வைத்திருக்கும்போது என் தாயிடம் மாட்டி உதை வாங்கியிருக்கிறேன். இனி புஸ்தகமே படிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுத்துவிட்டு நிறையப் படித்தேன்.

சுஜாதா அப்போது விகடன், குமுதம், குங்குமம், சாவி - வேறு எதுவாக இருந்தாலும் சரி, அவற்றில் எழுதியவற்றை ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன். கிழித்து பைண்ட் செய்யப்பட்டு பழுப்பேறிக் கிடந்த 'நைலான் கயிறு' போன்ற தொடர்கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்திருக்கிறேன். கணையாழியின் கடைசிப் பக்கங்கள் சின்னச் சின்ன தொகுப்பாக வந்தபோது வாங்கிப் படித்து அதிசயித்திருக்கிறேன். அசோகமித்திரன், சுஜாதா இருவரும் அந்தக்கால bloggers. கண்டது, கேட்டது, தங்களை பாதித்தது என்று இவர்கள் இருவரும் பதிந்துவைத்துள்ள விஷயங்கள் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவை.

சுஜாதாவின் தொடர்கதைகளில் நான் மிகவும் ரசித்துப் படித்தவை: பதவிக்காக, கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ, கொலையுதிர் காலம், பிரிவோம் சந்திப்போம் (பாகம் 1, 2), என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ. கிரிக்கெட் தொடர்பான நிலா நிழல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நாவல் என்ற வடிவத்தில் சுஜாதா அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. எல்லாமே தொடர்கதைகளாக ஜனித்தவை என்பதே அவற்றின் குறைபாடுகள். ஆனால் சுஜாதாவின் ஒரிஜினல் இலக்கியப் பங்களிப்பு அவரது சிறுகதைகள். புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியகர்த்தாக்கள் வரிசையில் சுஜாதாவை எந்தக் காரணம் கொண்டும் விலக்கிவைக்க முடியாது.

சுஜாதாவின் அறிவியல் தொடர்பான கட்டுரைகள், கேள்வி பதில்கள் பற்றி எனக்குக் கடுமையான விமரிசனம் உண்டு. மிகவும் மேலோட்டமாகச் சென்றுவிடும். அதேபோல அவர் பிரம்மசூத்திரம் தொடர்பாக குமுதம் பக்தியில் எழுதிய தொடர் ஏமாற்றத்தைக் கொடுத்தது. என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மற்றுமொரு ஏமாற்றம் சுஜாதாவின் சங்க இலக்கியங்களை தற்காலக் 'கவிதை?' நடையில் கொண்டுவந்தது. அவை சப்பையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. திருக்குறள்கூட சுஜாதாவிடமிருந்து தப்பவில்லை:-(

தமிழில் அறிவியல் புனைகதைகள் எழுதுவதற்கு சுஜாதாவைத்தவிர யாருமே தீவிரமாக முனைந்தது கிடையாது. வேறு சிலர் (பெயர்களைத் தவிர்த்துவிடுகிறேன்) எழுதியுள்ளவற்றை நான் அந்த வரிசையிலேயே சேர்க்கமாட்டேன்.

சுஜாதாவின் சினிமா பங்களிப்பு பற்றி பலருக்கும் பலவிதமான குறைகள் இருக்கின்றன. ஆனால் நேற்றுவரையில் சுஜாதா அளவுக்கு தமிழ் சினிவாவில் வசனம் எழுதுவதற்கு ஆள் இருந்ததில்லை. பயங்கர அடாஸான அந்நியன் போன்ற படங்களுக்கு சுஜாதாவின் வசனம் இல்லையென்றால் கொடுமையாக இருந்திருக்கும். எல்லோராலும் பழித்துத் தூற்றப்பட்ட ஷங்கரின் பாய்ஸ் படத்திலிருந்து சிவாஜி படம்வரை, சுஜாதாவின் வசனங்கள் அற்புதம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் படத்தின் பிற குறைகளுக்காக சுஜாதாமேல்தான் கண்டனங்கள் வந்தன.

எந்த இலக்கிய விமரிசகராலும் எள்ளித் தூக்கியெறியமுடியாதது சுஜாதாவின் மொழித் திறன். தமிழை அவ்வளவு இலகுவாக சமகால எழுத்தாளர் எவரும் கையாண்டு நான் பார்த்ததில்லை. அதில் இலக்கண வழு இருக்கும். ஆனால் சுவாரசியம் குன்றாது. சுஜாதா எப்பொதும் தன் மொழியை இளமையாக வைத்திருந்தார். கடைசியாக கல்கியில் வந்த 'உள்ளம் துறந்தவன்' தொடர்கதை வரையில் அவரது கதைமாந்தர்கள் பேசும் மொழி அவ்வளவு இளமையாக, contemporaneous ஆக இருந்தது.

சுஜாதாவால் தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வந்த பல தலைமுறை வாசகர்களில் ஒருவனாக என் அஞ்சலி. கண் ஓரத்தில் கண்ணீர் துளிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Friday, February 22, 2008

பாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்துக்கும் (நேஷனல் அசெம்ப்ளி) நான்கு மாகாணங்களின் சட்டமன்றங்களுக்குமான தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. ஒரு சில இடங்களின் முடிவுகள்தவிர அனைத்தும் வெளியாகியுள்ளன. முடிவுகள்:

நாடாளுமன்றம்:
மொத்தமுள்ள இடங்கள்: 272
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 262
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP) - புட்டோ/சர்தாரி: 87
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) - நவாஸ் ஷரீஃப்: 67
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - முஷரஃப்: 40
பிறர்: மீதம்.

சர்தாரி, ஷரீஃப் கூட்டணி அமைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடுகிறது. இன்னமும் முடிவாகாமல் இருப்பது யார் பிரதமர் என்பதும் அடுத்து என்ன செயல் திட்டம் என்பதும்.

நான்கு மாகாணத் தேர்தல்களில் என்ன நடந்துள்ளது?

சிந்த் என்பது பாகிஸ்தான் மக்கள் கட்சி (புட்டோ) கோட்டை.

மொத்த இடங்கள்: 130
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP): 71

தனியாகவே சர்தாரி/புட்டோ கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆட்சியை அமைப்பார்கள். இங்கு பெரிய மாறுதல் ஏதும் கிடையாது.

பஞ்சாப், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம். நவாஸ் ஷரீஃபீன் கோட்டை. இங்குதான் முஷரஃப், ஷரீஃபின் கட்சியை உடைத்து புதிய கட்சியை உருவாக்கியிருந்தார். இந்தத் தேர்தலில் என்ன நடந்துள்ளது?

மொத்த இடங்கள்: 297
முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடங்கள்: 289
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) - ஷரீஃப்: 104
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP) - சர்தாரி/புட்டோ: 79
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - முஷரஃப்: 66

இங்கே ஷரீஃபும் சர்தாரியும் இணைந்தால்தான் பெரும்பான்மை கிடைக்கிறது. இதை வைத்துதான் இரண்டு பேரும் டீல் போடப்போகிறார்கள். பஞ்சாப் ஷரீஃபுக்கு. பாகிஸ்தான் சர்தாரிக்கு. இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது. சிந்த் தனிப்பட்ட முறையிலேயே சர்தாரியின் கட்சிக்குப் போகிறது.

இதுவரையில் பெரிய மாற்றம் இல்லை. அடுத்து இரண்டு பிரச்னை மாகாணங்கள்.

பலூசிஸ்தான். சின்ன மாகாணம். மொத்த இடங்கள்: 40. இங்கு, முஷரஃப் ஆதரவு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 18 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 11. எனவே அதிலிருந்து மூன்றுபேரை இழுத்தால் போதும். இந்த ஒரு மாகாணம்தான் முஷரஃபுக்குப் போயுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தை ஆட்சி செய்வது எளிதானதல்ல. பிரிவினை சக்திகள் மத்திய ஆட்சியின்மீது கடும் கோபத்தில் உள்ளனர். மிகவும் பின்தங்கிய பகுதி.

கடைசியாக வடகிழக்கு எல்லை மாகாணம். சென்றமுறை அடிப்படைவாத முஸ்லிம் கட்சியான முத்தாஹிதா மஜ்லீஸ்-இ-அமால் இந்த மாகாணத்தை ஜெயித்தது. ஆனால் இந்த முறை இந்தக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

மொத்த இடங்கள்: 99
முடிவு அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்: 91
அவாமி நேஷனல் கட்சி: 31
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP) - புட்டோ/சர்தாரி: 17
முத்தாஹிதா மஜ்லீஸ்-இ-அமால் (MMA): 10
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - ஷரீஃப்: 5
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - முஷரஃப்: 5
மிச்சம் - பலர் + சுயேச்சைகள்.

இங்கே அவாமி நேஷனல் கட்சியும் புட்டோ கட்சியும் சேர்ந்தால் போதும். கிட்டத்தட்ட பெரும்பான்மை கிடைத்தாற்போலத்தான். மிச்சம் மீதி, சுயேச்சைகளிடமிருந்து வந்துவிடும்.

ஆக, இந்தத் தேர்தலில் பெரும் வெற்றி என்று சொன்னால் அது கொல்லப்பட்டு, தியாகியான பேநசீர் புட்டோவின் கட்சிதான். மத்தியில் தனிப்பெரும் கட்சி. ஆட்சியில் முக்கியப் பங்கு. சிந்த் மாகாணத்தில் தனி ஆட்சி. பஞ்சாப், வடகிழக்கு எல்லை மாகாணத்தில் ஆட்சியில் ஜூனியர் பார்ட்னர்.

-*-

சர்தாரியின் நோக்கம் என்னவாக இருக்கும்? ஷரீஃபின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஷரீஃபின் நோக்கம் ஒன்றுதான். முஷரஃபை அழிப்பது. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்போதும் மனத்தில் தேக்கி வைத்திருக்கிறார் ஷரீஃப். ஷரீஃப், நீதித்துறையின்மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர் அல்லர். அவரது குண்டர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகளை அடிக்க முற்பட்டவர்கள்தாம். ஆனால் இப்போது பாகிஸ்தானின் நீதித்துறையைக் காக்க வந்தவர்போலக் காண்பித்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் முஷரஃபை அவமானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பமுடியும்.

சர்தாரி பெரும் திருடன். இப்போது நியாயவான்போலக் காட்சி அளிக்க முற்பட்டாலும் தன் மனைவியின் ஆட்சிக்காலத்தில் எத்தனை எத்தனையோ கம்பெனிகளைச் சூறையாடி அவற்றைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டவர். ஏகப்பட்ட நில அபகரிப்புகள், லஞ்சம் என்று சொத்து சேர்த்தவர். இப்போது முஷரஃபை நேரடியாக ஒழித்துக்கட்ட அவருக்கு விருப்பம் கிடையாது. அதனால் சர்தாரி ஒரே நேரத்தில், ஷரீஃப், முஷரஃப் என்று இருவரிடமும் டீல் போடலாம்.

பதவி நீக்கப்பட்ட நீதிபதிகள் - இஃப்திகார் சவுதுரி, ரானா பகவன் தாஸ் ஆகியோர் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்களா என்பதுதான் அடுத்த சில மாதங்களில் நாம் ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

பாகிஸ்தான் ராணுவம் வாயே திறக்காமல் இருப்பது சந்தோஷமாக உள்ளது. அப்படியே பாகிஸ்தான் அரசியலில் தலையிடுவதற்கு ஒரு முழுக்கு போட்டால் அந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யும் ஒரு பேருதவியாக இருக்கும்.

பலர், MMA தோல்வியுற்றதை சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். இதனால் பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது உன்மையன்று. அடுத்த சில மாதங்களில் வளர்ச்சியின்மீது எந்தக் கட்சியும் ஈடுபாட்டைக் காண்பிக்கப் போவதில்லை. யார் யாரை எப்படி ஒழிப்பது என்பதிலேயே காலம் கடக்கும். இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னேறப்போவதில்லை. எங்கெல்லாம் வளர்ச்சி இல்லையோ அங்கு தீவிரவாதம் பெருகும். மக்கள் வாக்குகளை தீவிரவாதிகள் பொருட்படுத்தப்போவதில்லை. தாலிபன் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் முஷரஃப், ஷரீஃப், சர்தாரி ஆகியோருக்கு தெளிவான கருத்துகளும் ஒற்றுமையும் கிடையாது. இந்த மூவரும் சேர்ந்து மனது வைத்தால்தான் அந்தத் தீவிரவாதத்தை எதிர்கொள்ளமுடியும்.

அடுத்து இந்தியாவுடனான உறவு. இதில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. உள்நாட்டுப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கே அவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகள் தேவைப்படும். காஷ்மீர் போராளிகளுக்கு தனியாக எந்த உதவியும் வரப்போவதில்லை. இதையே சரியான தருணமாக எடுத்துக்கொண்டு, இந்தியா காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்யவேண்டும்.

பாகிஸ்தானில் அமெரிக்காவின் தலையீடு: பேநசீர் புட்டோவின் கொலைக்குப்பிறகு, அமெரிக்கா கடும் குழப்பத்தில் உள்ளது. பாகிஸ்தானில் யார் தன்னுடைய நண்பன் என்று தெரியாமல் அமெரிக்கா திண்டாடப்போகிறது. முஷரஃப் ஆதரவை அதிகமாகக் காட்டியதால், ஷரீஃப் அமெரிக்காவுடன் ஒத்துப்போகமாட்டார். மேலும் உள்நாட்டுத் தேர்தல் காரணமாக, அமெரிக்கா சிறிதுகாலம் பாகிஸ்தானில் தலையை நுழைக்காமல் இருந்தால் அது நல்லது.

பாகிஸ்தானின் அமைதிக்குப் பெரும் இடையூறாக இருக்கப்போவது தாலிபன் தீவிரவாதமே. அதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது எதிர்காலம் அமையும்.

Thursday, February 21, 2008

பராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா

ஆஸ்திரேலிய பிரதமராக ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவர் கெவின் ருட் சில மாதங்களுக்குமுன் பதவி ஏற்றார். அதற்கு முந்தைய ஜான் ஹாவர்ட் அரசு, இந்தியாவுக்கு யுரேனியம் தருவதற்குத் தயாராக இருந்தது. அதாவது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) கையெழுத்தாகி, அதன்பின் இந்தியா IAEA-உடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு யுரேனியம் தரும்.

ஆனால் அப்போதே எதிர்க்கட்சித் தலைவரான கெவின் ருட், இதனை எதிர்த்தார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா யுரேனியம் வழ்ங்கவேண்டும் என்றார். இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறது.

கெவின் ருட்டின் கொள்கைப் பிடிப்பை நான் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியத் தேர்தலில் அவர் ஜான் ஹாவர்டைத் தோற்கடித்து பதவிக்கு வந்தது ஆஸ்திரேலியாவுக்கும் உலகத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு யுரேனியம் விஷயத்தில் இதனால் பின்னடைவுதான். இருந்தாலும் பரவாயில்லை. இன்று கெவின் ருட் வந்ததால்தான் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு வெள்ளை ஆஸ்திரேலியர்கள் செய்த அநியாயத்துக்கு அதிகாரபூர்வ மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் என்ன செய்தாலும், இப்போதைய ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரேலியா இவர்கள் இருவருக்கும் ஜிஞ்சா போட்டு பின்னாலேயே செல்லாது என்று நான் நம்புகிறேன்.

அதேபோல பராக் ஒபாமாவை நான் ஆதரிப்பது. எனது பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் வஜ்ரா இந்தச் சுட்டியைக் கொடுத்திருந்தார்: How Obama’s beedi ban affected India?

பராக் ஒபாமா, குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்ய நினைப்பது எந்தவிதத்தில் தவறானது? நமது இந்திய அரசுமே அதனைத்தானே செய்ய நினைக்கிறது? இதற்கென பல சட்டங்களை இயற்றியுள்ளது? ஆனால் அதில் எப்போதும் பலன் பெறுவதில்லை. குடிசைத் தொழில் அழிந்துவிடும், நசிந்துவிடும் என்று பேசுபவர்கள், எப்படி கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இன்றி, பச்சைக் குழந்தைகளை பீடி சுருட்டவிட்டு பணம் செய்வதை வரவேற்கிறார்கள்?

நான் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை வரவேற்கிறேன். ஆனால் இப்போதைய நிலையில் அது நிறைவேற்றப்படாது என்று நினைக்கிறேன். பராக் ஒபாமா பதவிக்கு வந்தால், அவர் கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம். அப்படியே நடந்தாலும்கூட, மொத்த உலக நன்மைக்கும், அமெரிக்க நன்மைக்கும் பராக் ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராக வருவதே நல்லது என்று நம்புகிறேன் நான்.

தங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசமாகப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது. இதைத்தான் அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சித் தலைவர்கள் - ரீகன், அப்பா புஷ், பிள்ளை புஷ் ஆகியோர் செய்துவந்துள்ளனர். இது கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. இந்தியா என்ற நாடு, அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டில் நடக்கும் தேர்தலில் யார் ஜெயிக்கவேண்டும் என்று கருத்து சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது பின்னர் அரசியல், ராஜரீகத் தொடர்புகளுக்குக் குந்தகமாக அமையும். ஆனால் தனிப்பட்ட மனிதனாக நான், எனது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒருவரை ஆதரிக்கும்போது அதனால் இந்திய நலன்களில் சிறிது குறைபாடு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் உலகமே பயனடையும்.

அதுவும் பராக் ஒபாமாவின் குழந்தைத் தொழிலாளர் கருத்து எனக்கு முழுதும் ஏற்புடையது. கெவின் ருட்டின் கொள்கையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றே.

Wednesday, February 20, 2008

கொசோவாவும் தமிழ் ஈழமும்

இரண்டு நாள்களுக்குமுன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரதேசமான கொசோவா தன்னிச்சையாக, தான் விடுதலை பெற்ற ஒரு புது குடியாட்சி என்று அறிவித்துள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்யா, சீனா, செர்பியா, கிரேக்கம் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கருத்து சொல்லவில்லை. இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளது. எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இலங்கை ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

கொசோவாவின் வரலாற்றை முழுமையாகச் சொல்வது இங்கே நோக்கமில்லை. யூகோஸ்லாவியா என்ற முடியாட்சி முதலாம் உலகப் போருக்குப் பிறகு பல பகுதிகளை உள்ளடக்கி உருவானது. 1943-1946 (அதாவது இரண்டாவது உலகப்போர் காலகட்டம்) சமயத்தில் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது. யூகோஸ்லாவியா என்பது இன்றைய செர்பியா, குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ ஆகிய ஐந்து நாடுகளுடன், இப்போது 17 பிப்ரவரி 2008 அன்று விடுதலையை அறிவித்த கொசோவா பகுதியும் சேர்ந்து இருந்த ஒரு நாடு. பல இன மக்கள். பல மொழிகள். இரு பெரிய மதங்கள் - கிறித்துவம், இஸ்லாம். ஆனால் பல்வேறு இன மக்களுக்கு இடையே கிறித்துவமும் பிரிந்தே இருந்தது.

1991 முதற்கொண்டு, கடுமையான உள்நாட்டுப் பிரச்னைகளை அடுத்து செர்பியா, குரோவேஷியா, மாண்டிநீக்ரோ, ஸ்லோவீனியா, மாசிடோனியா ஆகியவை துண்டு துண்டாகப் பிரிந்தன. இதில் குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாண்டிநீக்ரோ, மாசிடோனியா மக்களை விட்டுவிடுவோம்.

செர்பியா, கொசோவா மக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். கொசோவாவுக்கு அண்டை நாடு அல்பேனியா. கொசோவா மக்கள் 90%க்கும் மேலானவர்கள் அல்பேனியர்கள். அல்பேனியா பல ஆண்டுகள் கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து 1991-க்குப் பிறகு குடியாட்சியாக மாறியுள்ளது. கொசோவா மக்கள் அல்பேனிய இனத்தினர். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். வரும் காலங்களில் கொசோவாவும் அல்பேனியாவும் இணைந்து ஒரு புதிய நாடாகலாம்.

ஒருங்கிணைந்த யுகோஸ்லாவியாவில், செர்பியா ஒரு பெரும் மாகாணமாக இருந்தது - ஆனால் அதற்கு ரிபப்ளிக் என்று பெயர். அந்த மாகாணத்தின் உள்ளேதான் கொசோவா ஒரு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய அமைப்பாக (autonomous council) இருந்தது. யுகோஸ்லாவியா துண்டாடப்பட்டபோது பெரும் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிய, பிரியமுடியாமல் மாட்டிக்கொண்டவர்கள் கொசோவா அல்பேனியர்கள் மட்டுமே.

செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்கள்மீது தொடுத்த இடைவிடாத தாக்குதல்களை, இன அழிப்பு (genocide) என்று கருதி அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள், 1999-ல் செர்பியா மீது தாக்குதல் நடத்தி, கொசோவாவை ஐ.நா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

செர்பியாவுக்கும் ரஷ்யாவுக்கும் (இது கம்யூனிசம் தொடர்பானதல்ல) பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த உறவு உள்ளது. செர்பியன் ஒருவன் ஆஸ்திரிய இளவரசனை சுட்டுக் கொன்ற நிகழ்வே முதலாம் உலகப் போருக்குக் காரணமானது. ஆஸ்திரியாவுக்கும் செர்பியாவுக்குமான தகராறு உலகப் போராக மாறியதற்குக் காரணம், செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு ஆதரவாக ஜெர்மனியும் களத்தில் இறங்கியதுதான். செர்பியாவுக்காக கடுமையான போருக்குச் செல்லவும் ஜாரின் ரஷ்யா தயங்கவில்லை. இன்று ஜார் மன்னர் இல்லை. செர்பியா (யூகோஸ்லாவியா), ரஷ்யா இரண்டுமே கம்யூனிசத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. செர்பியாவிடமிருந்து கொசோவா பிரிந்து போவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை.

சீனாவுக்கு இதில் என்ன பிரச்னை? ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? சீனா பல ஆண்டுகளாக தைவானை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என்கிறது. தைவானோ, தான் ஒரு சுதந்தர நாடு என்கிறது. கொசோவா தன்னிச்சையாக சுதந்தரப் பிரகடனத்தைச் செய்தால், அதனைப் பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டால், நாளை அதே தார்மீக உணர்வுடன் தைவானையும் தனி நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே சீனா, கொசோவாவின் தன்னிச்சைப் பிரகடனத்தை எதிர்க்கிறது.

கிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே சைப்ரஸ் தீவில் இருக்கும் கிரேக்க சிப்ரியாட்டுகள், துருக்கிய சிப்ரியாட்டுகள் தொடர்பாக பிரச்னை உள்ளது. கிரேக்கமும் தன்னிச்சை சுதந்தரப் பிரகடனத்தை இந்தக் காரணத்தால் எதிர்க்கிறது. மேலும் சீனா போலன்றி, கிரேக்க நாடு, பிரச்னை பூமியான பழைய யூகோஸ்லாவியாவுக்கு அண்டை நாடு. யுகோஸ்லாவியா பிரிவினையை அடுத்து உருவான மாசிடோனியா என்ற நாட்டுடனும் கிரேக்கத்துக்கு ஒரு சண்டை உள்ளது. மாசிடோனியா என்ற பெயரை அந்த நாடு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது கிரேக்கத்தின் கூற்று. கிரேக்க நாட்டில் மாசிடோனியா என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு மாசிடோனிய மொழிப்பிரிவினர் வாழ்கிறார்கள். நாளை அவர்கள் பிரிந்து மாசிடோனிய நாட்டுடன் சேர விரும்பலாம்.

இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.

இலங்கை அரசு, இந்த சுதந்தரப் பிரகடனத்தை எதிர்த்துக் கடுமையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.

****

கொசோவா தனி நாடாகலாம் என்றால், அதே லாஜிக்படி, தமிழ் ஈழமும் தனி நாடாகலாம். இரண்டு பகுதிகளிலும் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மட்டுமே நடத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் நிலை அப்படியேதான் உள்ளது. கொசோவா, தமிழ் ஈழம் இரண்டு இடங்களிலும் ஆயுதமேந்திய போராட்டம் பல வருடங்களாக நடந்து வருகிறது.

ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், கொசோவாவில் பிரதிநிதித்துவக் குடியாட்சி முறை நிலவுகிறது. கொசோவா அல்பேனியர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - செர்பியாவிலிருந்து பிரிந்து தனியாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் தமிழ் ஈழம் ஒரு சர்வாதிகாரக் கட்டமைப்பின்கீழ் உள்ளது. மக்கள் அனைவருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர் - 30%க்கும் மேல். பல இடங்களில் அதற்கும்மேல். ஆனால் கொசோவா 90%-க்கும் மேல் அல்பேனியர்கள் வசிக்குமிடம்.

இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் கொசோவாவைக் காரணம் காட்டி, தமிழ் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட முடியாது.

****

ஆனால் தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் சில செயல்களில் உடனடியாக ஈடுபடவேண்டும். பழைய தவறுகளை வெளிப்படையாகப் பேசி மன்னிப்பு கேட்கவேண்டும். பிற தமிழ் குழுமங்களை அழித்துக்கட்டுவதற்கு பதிலாக அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைய சேர்ந்து உழைக்க விழைய வேண்டும். தமிழர் குழுக்கள், சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்ப்பதால் தமிழர்களுக்கு எந்தவித நலனுமில்லை என்றாலும்கூட, ஒரு பக்கம் விடுதலைப் புலிகள் எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பலர் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அனுசரணையாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

இந்த இடத்தில்தான் கொசோவா ஒன்றாக, கட்டுக்கோப்பாக இருந்தது. அதன் விளைவாக, நேடோ நாடுகளின் ஆதரவைப் பெற்றது. கொசோவா தலைமை, தன் இன மக்களையே சுட்டுக்கொன்றதாகவோ, அழித்ததாகவோ எந்த நிகழ்வும் நடந்ததில்லை. இதுதான் தமிழ் ஈழத் தலைமைக்கும் கொசோவா அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம்.

[21 பிப்ரவரி 2008: இங்கே பாஸ்னியா பற்றி குறிப்பிட முற்றிலும் மறந்துவிட்டேன். பழைய யுகோஸ்லாவியாவில் பாஸ்னியாவும் ஒரு பகுதி. முஸ்லிம்கள் வாழும் இடம். கொசோவா போலன்றி, பாஸ்னியாவில், செர்பியர்களும் குரோவேஷியர்களும் கணிசமான அளவில் உள்ளனர். பாஸ்னியா-ஹெர்சகோவினா என்றும் அழைக்கப்படும் இந்தப்பகுதியும் ஒரு தனி நாடே.]

Thursday, February 14, 2008

ராஜ் டாகரேயின் குண்டர்கள்

மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற அமைப்பின் தலைவர் ராஜ் டாகரே கடந்த சில தினங்களாக செய்தியில் அடிபடுகிறார். ராஜ் டாகரே, சிவ சேனைக் கட்சியின் நிறுவனர் பால் டாகரேயின் தம்பி மகன். பால் டாகரேயின் சொந்த மகன் உத்தவ் டாகரே. கட்சியை சொத்தைப் போலப் பங்குபோடும்போது, தம்பி மகனுக்கு ஒன்றும் கிடையாது; எல்லாம் சொந்த மகனுக்குத்தான் என்று பால் டாகரே சொன்னதால், ராஜ் டாகரே தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டார்.

'மண்ணின் மைந்தருக்கு மட்டுமே மாநிலத்தில் வேலை' என்பது பல பிராந்தியக் கட்சிகளின் வாக்குவாதமாக இருந்துவந்துள்ளது. சிவ சேனை, இதனை முன்வைத்துப் பல போராட்டங்களை நடத்தியுள்ளது. மும்பையில் குஜராத்திகள், தமிழர்கள் புகுந்துள்ளனர் என்றும் அவர்களைத் துரத்தவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசியவர் பால் டாகரே. அதை முன்வைத்துதான் அவர் தன் கட்சியையே ஆரம்பித்தார். பின் கொஞ்சம் அடக்கி வாசிக்கலானார். அவருக்கு அடுத்து கையில் கிடைத்தது இந்துத்துவா. அதனால் 'மண்ணின் மைந்தன்' விஷயத்தை அவர் இப்போதைக்கு விட்டுவைத்துள்ளார்.

ஆனால், புதிதாகக் கடையைப் பரப்பியுள்ள ராஜ் டாகரே, பெரியப்பாவின் சரக்கை தூசு தட்டி எடுத்து விற்க முனைந்துள்ளார்.

எப்படி தமிழகம், ஆந்திரம் பிரிவினை வந்தபோது சென்னை யாருக்குப் போவது என்று சண்டை வந்ததோ, அதைப்போன்றே மொழிவாரி மாகாணப் பிரிவினை போது மும்பை நகரை என்ன செய்வது என்ற பிரச்னை எழுந்தது. குஜராத், மஹாராஷ்டிரா என்ற இரண்டு மாநிலங்களுக்கும் இல்லாமல், அந்த நகரை ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம் என்றும்கூட சிலர் கருதினர். பல போராட்டங்களுக்குப் பிறகு, மும்பை மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என்று முடிவானது.

சென்னையில் பிற மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு. தமிழ் பேசுபவர்கள் பெரும்பான்மை. மும்பையிலோ, மராத்தி பேசுபவர்கள் குறைவு. ஹிந்தி பேசுபவர்களே அதிகம். மும்பைக்கு வந்துசேரும் குஜராத்திகள், தமிழர்கள் என அனைவருமே ஹிந்தி கற்றுக்கொண்டு பேசுகிறார்கள். பிஹார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே ஹிந்தி பேசுபவர்களே. பாலிவுட் சினிமா, முழுக்க முழுக்க ஹிந்தி பேசும் சினிமா. இதனால் மாநிலத்தின் தலைநகராக இருக்கும் மும்பை, மராத்தி மொழியின் தலைநகராக இல்லை. மராட்டியர் கலாசாரத்தின் தலைநகராகவும் இல்லை. மராத்தி புத்தகங்களின் தலைநகராகவும் இல்லை. அந்த வேலையைச் செய்கிறது பூனா நகரம். இதனால் மும்பையில் ஒருவித நெருக்கடி நிலவுகிறது.

பெங்களூருவில் நிலவும் நெருக்கடியும் இந்த வகையைச் சார்ந்ததே. பெங்களூருவில் ஒரு புத்தகக் கண்காட்சி நடந்தால் அங்கு கன்னடப் புத்தகங்களைவிட தமிழ்ப் புத்தகங்கள் அதிகமாக விற்கின்றன. மும்பை நகரில் மராத்தி புத்தகங்களை விற்பதற்கு ஏதேனும் கடை இருக்கிறதா என்று தேடிப் போகவேண்டும். மும்பை மாநகரில் மராத்தி மீடியத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம்.

ஆனால் ராஜ் டாகரே இதுபோன்ற கலாசார விஷயங்களைப் பற்றிக் கவலை கொள்வதாகத் தெரிவதில்லை. உத்தரப் பிரதேசத்திலிருந்தும் பிஹாரிலிருந்தும் பிழைக்க வழிதேடி வந்துள்ள ஏழைகளிடம் தன் கோபத்தைக் காண்பிக்கிறார். மராத்தியர்களின் வேலைகளைத் திருடுவதாகக் கோபிக்கிறார்.

ஆனால் இது மஹாராஷ்டிரத்தில் மட்டும் நடக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி இல்லை. சில மாதங்களுக்குமுன் அசோமில் பிஹாரிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடைபெற்றது. பெங்களூருவில் நேற்றுகூட கன்னட ரக்ஷண வேதிகே என்ற காட்டுக்கூட்டம் கர்நாடகத்தில் கன்னடிகர்களுக்கு மட்டுமே ரயில்வே கடைநிலை வேலைகள் ஒதுக்கப்படவேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டு பொருள்களுக்குச் சேதம் விளைவித்துள்ளது.

ராஜ் டாகரேயின் குண்டர் குழு, பால் டாகரேயின் குண்டர் குழுவைப் போன்றதே. தலைவர் சொல்லிவிட்டார் என்றால் மூளையைத் தூரக் கழற்றிவைத்துவிட்டு தெருவில் இறங்கி கற்களை வீசுவது. கையில் கிடைத்த ஆள்களை அடித்து துவம்சம் செய்வது. இந்த வகை அரசியலை பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் பின்பற்றி வருகின்றனர். மேலே குறிப்பிட்ட கன்னட ரக்ஷண வேதிகே, சிவ சேனை, முற்காலத்திய வன்னியர் சங்கம், பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் (பஜ்ரங் தள், வி.எச்.பி) போன்றவை. இதனாலேயே இந்த அமைப்புகளின் தலைவர்களை எப்படிக் கைது செய்வது என்று தெரியாமல் அரசுகள் பயந்து நடுங்கியுள்ளன. இந்த பயமே இந்த குண்டர் கூட்டங்களுக்கு ஒருவிதத்தில் தைரியத்தைக் கொடுத்துள்ளன.

ராஜ் டாகரே 'வெறுப்பை உமிழும் பேச்சுக்காக' கைது செய்யப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. பிணையில் வெளியே வந்து தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டிருப்பார். தெருவில் வன்முறை செய்யும் ஒவ்வொரு ஆசாமியையும் பத்து வருஷத்துக்கு ஜெயிலில் போட்டால் போதும். ராஜ் டாகரே நாளை கூப்பிட்டால் எவனும் தெருவில் இறங்கி வன்முறை செய்ய வரமாட்டான். பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கும் எவரையும் மிகக் கடுமையான காவலில், பிணையே கொடுக்காமல், பல ஆண்டுகள் வைத்திருக்கவேண்டும். அது ஒன்றின்மூலம்தான் இதை ஒடுக்கமுடியும்.

அடுத்து, இந்த 'மண்ணின் மைந்தர்' பிசினஸ். இதைப் பற்றிப் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. பேச்சுரிமை என்ற அடிப்படையில் இதைப்பற்றிப் பேச எல்லோருக்கும் உரிமை தரப்படவேண்டும். இப்படிப் பேசியதற்காக யாரையும் கைது செய்தல் கூடாது என்பது என் கருத்து. அபத்தமான உளறல்களும் நமது குடியாட்சி முறையில் இடம்பெறுதல் அவசியம். தமிழ் தேசியம் போன்ற கருத்துகளும் ஒருவகையில் ராஜ் டாகரே பேசுவதோடு ஒத்துப்போகும் விஷயம்தான்.

இங்கு நாம் எதிர்க்கவேண்டியது சக மனிதர்கள்மீது நடத்தப்படும் வன்முறையையும் அனுமதியின்றி நடத்தப்படும் தெருப் போராட்டங்களையும் மட்டுமே.

[ராஜ் டாகரே, பால் டாகரேயின் தம்பி மகனாம். தங்கை மகன் என்று நினைத்து எழுதிவிட்டேன்.]

Tuesday, February 12, 2008

குவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்

எரிமக்கலன் பற்றி ராமநாதன் எழுதிவரும் பதிவுகளில் குவாண்டம் இயல்பியல் பற்றி ஒரு சிறிய விவாதம் நடந்துவருகிறது. தெளிவாக அதைப்பற்றி விளக்கக்கூடியவர்கள் அங்கு சென்று கொஞ்சம் உதவுங்களேன்?

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

பராக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சி பிரைமரியில் வென்று, அடுத்து நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சிக்காரரைத் தோற்கடித்து, பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

இதனால் அமெரிக்காவின் நடத்தையில் ஓரளவுக்கு மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஹிலாரி கிளிண்டன், ஈராக் மீதான போரை ஆதரித்தது அவர்மீதான ஒரு கரும்புள்ளி. அவர் ஜெயித்தால், பில் கிளிண்டனின் ஈடுபாடு கொஞ்சம் அதிகம் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

ஒபாமா இந்த அளவுக்கு ஆதரவைத் திரட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதே வேகத்தில் தொடர வாழ்த்துகள்.

வெங்கட் பதிவு
அமெரிக்கத் தேர்தல் வலைப்பதிவு

Wednesday, February 06, 2008

எண்கள் - 4: எண் குறியீடு

இனி இந்தப் பதிவுகள் அனைத்தும் வேறு வலைப்பதிவு முகவரியில் வரும். நீங்கள் போகவேண்டிய இடம் kanakku.blogspot.com.

Tuesday, February 05, 2008

எண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்

முழுப் பதிவு இங்கே:
இப்போது மொத்தம் மூன்றுவிதமான எண்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஒன்று முழு எண்கள். இரண்டு விகிதமுறு எண்கள் (பின்னங்கள்). மூன்றாவதாக பலபடிச் சமன்பாடுகளின் மூலங்களான விகிதமுறா எண்கள்.

ஆனால் உண்மை அதுவன்று! இந்த எண்களுக்குள் சிக்காத பல எண்கள் உள்ளன. அப்படிப்பட்ட எண்களில் இரண்டு மிகவும் சுவாரசியமான எண்களை நாளை பார்ப்போம்!
முந்தைய பதிவுகள்:

1. எண்கள் - அறிமுகம்
2. எண்கள் - 2: விகிதமுறா எண்கள்

Sunday, February 03, 2008

எண்கள் - 2: விகிதமுறா எண்கள்

முழுப்பதிவைக் காண இங்கே செல்லவும்.
இப்படிப்பட்ட எண்களை விகிதமுறா எண்கள் என்று சொல்வோம். ஒவ்வொரு முழு எண்ணுடைய வர்க்கமூலம், ஒன்று மற்றொரு முழு எண்ணாக இருக்கும், அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கும். (2, 3 ஆகியவற்றின் வர்க்கமூலம் விகிதமுறா எண்ணாக இருக்கும். ஆனால் 4-ன் வர்க்கமூலம் 2. மீண்டும் 5, 6, 7, 8 ஆகியவற்றின் வர்க்கமூலம் விகிதமுறா எண்கள். 9-ன் வர்க்கமூலம் 3. எந்த முழு எண்ணின் வர்க்கமூலமும் இப்படித்தான் இருக்கும் என்பதை எப்படி நிரூபிப்பது என்று யோசியுங்கள்.)
முந்தைய பதிவு

Friday, February 01, 2008

எண்கள் - அறிமுகம்

பல நாள்களாக கணிதம் பற்றி பதிவுகள் எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான சரியான கருவிகள் புரிதல் இல்லை. இப்போது கடந்த இருதினங்களாக MathML பற்றிப் படித்துவருகிறேன். இப்போதும் எளிதாக கணிதச் சமன்பாடுகளை blogspot.com வலைப்பதிவுகளில் புகுத்திவிடமுடியாது என்றே தோன்றுகிறது. சில முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. Wordpress.com ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதில் வேலை செய்ய நேரம் இல்லை.

ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. Header பகுதியில் இந்த வரி தேவை.
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.1 plus MathML 2.0//EN" "http://www.w3.org/Math/DTD/mathml2/xhtml-math11-f.dtd">

அதேபோல content-type கீழ்க்கண்ட வகையில் மாற்றப்படவேண்டும்.
<meta http-equiv="content-type" content="application/xhtml+xml; charset=UTF-8"/>

அதன்பின் MathML-ஐப் பின்பற்றி சமன்பாடுகளை எழுதவேண்டியதுதான். இதற்கு ஓப்பன்ஆஃபீஸ், அமாயா போன்றவை உதவும். இருந்தாலும் இது எளிதான விஷயம் கிடையாது. எழுத நேரம் எடுக்கும் ஒரு விஷயம் - இப்போதைக்கு.

இந்தப் பக்கங்களை Firefox உலாவியில் எளிதாகப் பார்க்கலாம். சில கணித எழுத்துருக்கள் தேவைப்படலாம். அவற்றை இங்கேயிருந்து பெற்று இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் என்றால் நீங்கள் ஒரு plugin-ஐ இன்ஸ்டால் செய்யவேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.

***

அடுத்த சில பதிவுகளில் எளிமையாகத் தொடங்கி கணித விஷயங்கள் பற்றி எழுதப்போகிறேன். எப்படி, எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்று சொல்லமுடியாது. பார்ப்போம்.

எண்கள் தொடர்பானது இந்தப் பதிவு.
ஒருநாள் பித்தாகோரஸின் சீடன் ஒருவன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தான். ஒரு செங்கோண முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் நீளம் 1, 1 என்று இருந்தால், மூன்றாவது பக்கத்தின் நீளம் ஒரு விகிதமுறு பின்னமாக இருக்காது என்பதே அது.
...
முடியாது என்று சொன்னதால் அந்தச் சீடன் அடித்தே கொல்லப்பட்டான் என்கிறார்கள். காரணம், பித்தாகோரஸ் அப்படிப்பட்ட “கெட்ட” எண்கள் இருக்கமுடியாது என்று தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்யானது. ஏன் இந்த எண்ணை விகிதமாக, இரண்டு முழு எண்களின் பின்னமாகக் கொடுக்கமுடியாது என்பதை நாளை பார்ப்போம்.