Saturday, April 26, 2008

கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்

இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம், குரோம்பேட்டை வளாகம், ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர்களும் மாணவர்களும் வந்திருந்தனர். சிஃபி அண்ணா கண்ணன் வந்திருந்தார்.

இது ஓர் இன்ஃபார்மல் சந்திப்பு. தமிழ்க் கணிமையில் இப்போது என்ன நிலை, யார் யார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இனி என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொதுவான பேச்சாக இருந்தது.

AU-KBC மையத்தின் இயக்குநர் பேரா. சி.என்.கிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உபுண்டு தமிழ் ஆர்வலர் ராமதாஸ், NRCFOSS-ல் வேலை செய்கிறார். அவர் முன்னின்று இந்த அமர்வை கவனித்துக்கொண்டார்.

விளக்கமான செய்திகள், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து வரும். கூட்டத்தின் இறுதியில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

அடிப்படை நோக்கம்: இணையத்தில் இந்திய மொழிகளில் (தமிழில்) செய்தி/தகவல்/விஷயங்களைக் கொண்டுவர உதவுவது. To enable creating Indian language (Tamil) content on the net. அதற்காக

1. NRCFOSS மூலம் ஓர் இணையத்தளத்தை உருவாக்குதல். அங்கே தமிழ் மென்பொருள் தொடர்பாக கல்வி நிலையங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தல்.
2. மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான ஒரு கூகிள் குழுமத்தை ஏற்படுத்துதல்.
3. இணைய மாத இதழ் ஒன்றை ஏற்படுத்துதல்.
4. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்துதல்.

*

இந்தச் சந்திப்பில் ஏற்கெனவே நான் அறிந்த பலர் என்ன புதுமையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பேரா. கிருஷ்ணமூர்த்தி ஒளிவழி எழுத்துணரி (OCR), பேரா.தெய்வசுந்தரம் (Tamil spellchecker, morphological analyser), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஒருவர் தமிழ்-மலையாளம், மலையாளம்-தமிழ் அகராதி ஆகியவற்றில் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று விளக்கினர். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் text-to-speech, voice recognition ஆகியவை தொடர்பாகச் சில காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார். Sourceforge-ல் கட்டற்ற மென்பொருளாகச் சிலவற்றைச் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.

NHM Converter-ஐ கட்டற்ற மென்பொருளாக மாற்ற, லினக்ஸில் வேலை செய்யவைக்க என்ன செய்வது என்பது பற்றிப் பேசினோம். விரைவில் அது நடக்கும். கூடவே NHM Converter, இலவச இணையச் சேவையாகவும் வெளியாகும்.

இன்றைய கூட்டத்தை ஓர் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டு, NHM நிறுவனத்தால் பல மென்பொருள் திட்டங்களைச் செய்யமுடியும். அங்கு வந்த பிறராலும் பல புதிய, உபயோகமான மென்பொருள்களை உருவாக்கமுடியும்.

கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி செய்வோருக்கும் தொழில்துறையில் வேலை செய்வோருக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியைக் குறைக்கவேண்டியது அவசியம்.

Wednesday, April 23, 2008

புத்தகங்களை விற்பது - 2

ஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டி

இன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற்சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.

இதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை எடுத்துக்கொண்டு புத்தகங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த பைலட் முயற்சியில் இப்போது ஒரு வண்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது விரைவில் விரிவாக்கப்படலாம்.



தற்போது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த வேன் இப்போது அலைந்துகொண்டிருக்கிறது.



பட்டுக்கோட்டையில் தெருவில் கடைபோட்டு விற்றபோது எடுத்த அசைபடம் கீழே.

Tuesday, April 22, 2008

மதியின் கார்ட்டூன்கள் வெளியீடு

24 ஏப்ரல் 2008 அன்று மியூசிக் அகாடமி அரங்கில் டாக்டர் அப்துல் கலாம், மதியின் பாக்கெட் கார்ட்டூன்கள் ‘அடடே' ஆறு தொகுதிகள் அடங்கிய செட்டை வெளியிடுகிறார். புத்தகங்களைப் பெற்றுக்கொள்கிறவர்கள் சுவாமி ஆத்மகனானந்தா மஹராஜ், ராமகிருஷ்ண மடம், ஜெயகாந்தன், கல்கி ராஜேந்திரன், சாலமன் பாப்பையா, மனோரமா, கிரேஸி மோகன் ஆகியோர்.

நிகழ்ச்சி நிரல்:

1. மதியம் 2.00 - 3.00 : மதி கார்ட்டூன்களில் ஒளிக்காட்சி
2. 3.00 மணிக்கு கடவுள் வாழ்த்து
3. வரவேற்புரை: கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
4. புத்தக வெளியீடு
5. கார்ட்டூனிஸ்ட் மதி பேச்சு
6. 'ஊடகங்களில் கார்ட்டூனின் பங்கு' என்பது பற்றி அப்துல் கலாம் உரை
7. நன்றியுரை - பத்ரி சேஷாத்ரி
8. தேசிய கீதம்

விழா மாலை சுமார் 4.00 மணிக்கு நிறைவுபெறுகிறது.

Saturday, April 19, 2008

புத்தகங்களை விற்பது - 1

நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த தினத்துக்கு அடுத்த தினம், கிரிக்கின்ஃபோவிலிருந்து முற்றிலுமாக விலகி, முழுநேர ஊழியனாக நியூ ஹொரைசன் மீடியாவில் சேர்ந்தேன். நேற்றோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

பதிப்பகத் தொழிலைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேவையான அளவு மூலதனம் இந்தத் தொழிலுக்கு இதுவரையில் வரவில்லை. பதிப்புத் தொழில் என்றால் அதில், புத்தக உருவாக்கம், அச்சிடுதல், கட்டுமானம், புத்தக விற்பனைக் கட்டுமானம் என அனைத்தும் அடங்கும். இதில் அச்சிடுதல், கட்டுமானம் (பைண்டிங்) ஆகியவை இயந்திரத் தொழில்நுட்பம் சார்ந்தவை. இங்குதான் ஓரளவுக்கு முதலீடு வந்துள்ளது. இன்று இந்தியாவின் பெருநகரங்கள் சிலவற்றிலும், சிவகாசியிலும் உலகத்தரம் வாய்ந்த அச்சு இயந்திரங்கள், தாள்களை மடிக்கும் இயந்திரங்கள், தானியங்கி பைண்டிங் இயந்திரங்கள் போன்றவை உள்ளன. உலகின் பல முக்கியமான பதிப்பாளர்கள் சிவகாசியிலும் சென்னையிலும் புத்தகங்களை அச்சிட்டு, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்து விற்கிறார்கள்.

அடுத்ததாக, pre-press துறையில், அதுவும் முக்கியமாக ஆங்கிலத்தில், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஐடி போன்றே, இந்த முன்னேற்றங்களும் அந்நிய நாட்டு வேலைகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதற்காகவே தோன்றியுள்ளன என்றாலும் விரைவிலேயே இந்தத் திறன், இந்தியப் புத்தகத் தயாரிப்புக்கும் பயன்படும். இந்தத் துறையிலும் சென்னை இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறது. உலகின் பல அறிவியல், பொறியியல், மருத்துவத் துறை ஜர்னல்கள் எடிட் செய்யப்பட்டு, டைப் செய்யப்பட்டு, அச்சாக்க ரெடியாக அனுப்பப்படுவது சென்னையில் இருந்துதான். அமெரிக்காவில் விற்கப்படும் பல கல்லூரிப் பாடத்திட்டப் புத்தகங்கள் டைப்செட் செய்யப்படுவது இப்போது சென்னையில்தான்.

இந்தியாவைச் சேர்ந்த பல pre-press நிறுவனங்களும் இன்று அமெரிக்காவில் இருக்கும் அதே துறை நிறுவனங்களை வாங்க ஆரம்பித்துள்ளன.

***

ஆனாலும் இந்தியப் பதிப்பகங்கள் முதலீடு போதாமை, பதிப்பகத் தொழில் நுணுக்கம் போதாமை ஆகியவற்றால் திசை தெரியாமல் தடுமாறுகின்றன. சின்னஞ்சிறு நிறுவனங்களாக இருப்பதால் சந்தையில் ஏற்படும் மாறுதல்கள் இவர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் நூலக ஆணையை நம்பி இருப்பது இதனால்தான். தமிழ்ப் புத்தகச் சந்தையை விரிவாக்க பதிப்பாளர்கள் பெரும் முயற்சி எதையும் எடுக்கவில்லை. அதற்கு ஏற்ற திறன் வாய்ந்தவர்களை பதிப்புத் தொழிலுக்குள் அவர்கள் கொண்டுவரவில்லை.

இன்றைய தமிழ்ப் புத்தகச் சந்தை என்பது என்ன?

1. தமிழக நகரங்கள் பலவற்றிலும் இருக்கும், தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே வைத்து விற்கும் கடைகள். இவை பெரும்பாலும் 200-300 சதுர அடி கொண்டதாக இருக்கும். சில மட்டுமே 800-1,000 சதுர அடியைத் தொடும். நான்கைந்து கடைகள் மட்டுமே 1,000 சதுர அடிக்குமேல் இருக்கும். இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்தால் தமிழகத்தில் சுமார் 600-700 கடைகள் இருக்கலாம்.

2. பொதுவாக ஆங்கிலப் புத்தகங்களையும், கூடவே கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்களையும் வைத்து விற்கும் லேண்ட்மார்க் போன்ற சென்னைக் கடைகள்.

3. இவற்றுடன் தெருவோரப் பெட்டிக் கடைகள், உணவகங்கள், பேரங்காடிகள், மருந்துக்கடைகள் என்று எங்கெல்லாம் FMCG பொருள்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் புத்தகங்களையும் விற்கமுடியும். எங்களது நிறுவனம் அதனைச் செய்துகாட்டியுள்ளது. மக்களுக்கு மத்தியில் புத்தகக் கடை இல்லை என்றால், அதற்கு மாற்றாக, இந்தக் கடைகளால் உபயோகமான காரியத்தைச் செய்யமுடிகிறது.

4. புத்தகக் கண்காட்சிகள்

5. ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் சொந்தமான ஷோரூம்கள்

6. மனி ஆர்டர், வி.பி.பி, அஞ்சல்மூலம் காசோலை, வரைவோலை வழியாகப் புத்தகங்கள் வாங்குவது.

7. இணையம் வழியாக, கிரெடிட் கார்ட் அல்லது இணைய வங்கிக் கணக்கு வாயிலாகப் புத்தகம் வாங்குவது.

8. பல நேரடி முறைகள் (book club போன்றவை) இப்போதைக்கு அதிகம் செயல்படுத்தப்படவில்லை.

9. Institutional விற்பனை. சில புத்தகங்களை ஒரு நிறுவனம் (கல்வி நிறுவனம், தொழிற்சாலை ...) மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.

10. மேற்கொண்டு பல வழிமுறைகள் இருக்கலாம்.

***

ஆனால் இவற்றில் மிக முக்கியமானது, கடைகளில் நேரடியாக விற்பது. புத்தக சில்லறை விற்பனைக் கடைகள் இப்போது இருக்கும் எண்ணிக்கை போதாது. இந்தத் துறையில் பெரிய அளவு முதலீடு தேவை. ஆனால் எல்லா சில்லறை விற்பனையிலும் இருக்கும் பிரச்னை, இங்கு நேரடி அந்நிய முதலீடு கிடையாது. FIPB-யிடம் அனுமதி பெற்றால்தான் முடியும். கொள்கை அளவில் இதற்குக் கடும் எதிர்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கையும் மசாலா தூளையும் விற்பதில் அந்நிய முதலீடு என்பது ஒரு விஷயம். அங்கே பெருமளவு கடைகள் ஏற்கெனவே உள்ளன. அதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படலாம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் புத்தகங்கள் போன்ற துறைகளில் இது தேவையும் அவசியமானதும் ஒன்று. ஒரு புத்தகப் பதிப்பாளனாக, புத்தக விற்பனைத் துறையில் அந்நிய முதலீடு வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் இது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்தது புத்தக விநியோக நிறுவனங்கள். ஆங்கிலத்தில் IBD, IBH போன்றவை பல பதிப்பாளர்களுடைய புத்தகங்களை ஒன்றுதிரட்டி கடைகளுக்கு விற்பனை செய்கின்றன. லேண்ட்மார்க்கின் East-West, ரூபா அண்ட் கோ, ஜெய்கோ, UBS போன்ற பலரும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இந்த வேலையைச் செய்துவருகின்றனர். ஆனால் தமிழ்ப் புத்தகங்களை ஒன்றுதிரட்டி, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய வகையில் யாரும் இல்லை. இதனால் ஒவ்வொரு தமிழ் பதிப்பாளரும் ஒவ்வொரு தமிழ்ப் புத்தக விற்பனையாளரிடம் நேரடி அக்கவுண்ட் வைத்திருக்கவேண்டியுள்ளது. இதனை எல்லோராலும் செய்யமுடிவதில்லை.

பல தமிழ் பதிப்பாளர்கள், புத்தகம் வேண்டும் என்றால் என் 'அலுவலகத்துக்கு' வந்து வாங்கு என்று சொல்கிறார்கள். வேறு பலரோ, ஒரு அல்லது இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதையும் கவர் செய்யவேண்டும். இது முடியாத காரியம். புத்தகத்தைக் கொடுத்துவிட்டாலும், பணத்தை திரும்பப் பெறுவது பெரிய காரியம். பல பதிப்பாளர்களும் இதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்திருப்பார்கள். இதனால் வியாபாரத்தைப் பெரிய அளவுக்குக் கொண்டுசெல்ல பலரும் விரும்புவதில்லை. ஓவெர்ஹெட் செலவுகளைக் குறைத்து, ‘ஏதோ கொஞ்சம் லாபம் வந்தால் போதும்' என்ற எண்ணத்தில் தொழிலை நடத்தும் பதிப்பாளர்களே அதிகம்.

இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நாங்கள் தமிழகம் முழுவதிலும் கடைகளுக்கு விற்பனை செய்ய 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை வேலைக்கு வைத்துள்ளோம்.


இவர்கள் ஒரு கடைவிடாமல் சென்று, நியூ ஹொரைசன் மீடியா புத்தகப் பட்டியலைக் கொடுத்து, புத்தகங்களுக்கான ஆர்டர்களைப் பிடித்து, புத்தகங்கள் அந்தக் கடைக்குச் செல்லுமாறு பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு பணம் வசூல் செய்வதிலும் கவனமாக உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தமிழக மாவட்டம் கணக்கு. பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். விற்பனையை புதிய கடைகளுக்கு விஸ்தரிப்பது, புதுப் புது உணவகங்கள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் புத்தகங்களைக் கொண்டுசேர்ப்பது இவர்களது நோக்கம். இத்துடன் ஒவ்வொரு பெரு நகரத்திலும் சில விநியோகஸ்தர்களை நியமித்துள்ளோம். இவர்கள் உள்ளூர் ஸ்டாக்கிஸ்டுகளாகவும் உள்ளனர்.

இந்த மாதிரியான பெரிய விற்பனைக் குழுவைத் திரட்டுவது அனைத்துப் பதிப்பாளர்களுக்கும் சாத்தியமில்லாது இருக்கலாம். எனவே இங்கே உடனடித் தேவை என்று நான் கருதுவது புத்தக distribution நிறுவனங்களை. அதற்கான முயற்சிகள் புத்தகச் சந்தையை விரிவாக்குவதில் மிகவும் அவசியம்.

(தொடரும்)

Sunday, April 13, 2008

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்

'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற புத்தகத்தின் மலிவுப்பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த தேவை. இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவை அடுத்து, குடிமக்கள் முரசு சார்பாக, காந்திய இலக்கியச் சங்கம் வழியாக வெளியிடப்பட்டது.

காந்தி எழுதி நாம் அதிகம் அறிந்த புத்தகம் சத்திய சோதனை. பல லட்சம் பிரதிகள் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் புத்தகம் இது. ஆனால் வாங்குவோரில் 100-க்கு 3 பேர்கூட இதனைப் படிப்பார்களா என்று தெரியாது. இந்தப் புத்தகம் காந்தியின் முழு சுயசரிதை கிடையாது என்பதே பலருக்குத் தெரியாது. முக்கியமாக இந்திய விடுதலையில் காந்தியின் பங்கு என்ன என்பதே இந்தப் புத்தகத்தில் இருக்காது. ஏனெனில் இது 1921 வரையிலான காந்தியின் வாழ்க்கையில் உள்ள செய்திகளை மட்டுமே உள்ளடக்கியது. மேலும் நான் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் படித்தபோது அதிக ஏமாற்றத்தை அடைந்தேன். காந்தியின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம் லூயி ஃபிஷரின் Gandhi, His Life and Message for the World. இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு (தி.ஜ.ரங்கநாதன்) பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளியானது. ஆனால் இப்போது கிடைக்கிறதா என்று தெரியாது.

உண்மையான காந்தியை, அவரது கொள்கைகளை அன்று, அவரது செயல்முறைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம். இதனையும் ஏராவாடா சிறையில் அவர் குஜராத்தியில் சொல்லச் சொல்ல இந்துலால் யாக்னிக் எழுதி, வால்ஜி தேசாயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் தி.சு.அவினாசிலிங்கம், நா.ம.ரா.சுப்பராமன், டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் கொஞ்சம் கரடுமுரடுதான். ஆங்கிலம் படிக்கமுடியும் என்றால் ஆங்கிலத்திலேயே படித்துவிடுங்கள்!

இந்தப் புத்தகத்தை நான் படித்து நெகிழ்ந்துபோயுள்ளேன். இதுவரை இரண்டுமுறை முழுவதுமாகப் படித்துள்ளேன். எந்தப் புத்தகத்தையும் படிக்கும்போது இந்த அளவுக்கு ‘எமோஷனல்' ஆனதில்லை. காந்தியின் ஆகப்பெரிய சாதனை அவர் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான். அதன்பிறகு அவர் இந்தியாவில் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒருமுறை நானும் ஆர்.வெங்கடேஷும் கணையாழி கஸ்தூரி ரங்கனைப் பார்க்கச் சென்றபோது அவர் சொன்னார்: ‘காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு மனிதனாகச் சென்றார், மகாத்மாவாகத் திரும்பி வந்தார்.' இன்று புத்தகத்தை அறிமுகம் செய்த ஆ.கி.வெங்கடசுப்ரமணியனும் அதையே சொன்னார். முற்றிலும் உண்மை.

இந்திய விடுதலை பற்றி இதைப்போன்றதொரு புத்தகத்தை எழுதாமல் காந்தி கொல்லப்பட்டது நம் பேரிழப்பு.

இந்தப் புத்தகத்தில் சத்தியாக்கிரகம் என்ற போராட்ட முறை எப்படி உருவானது என்பதை துளித்துளியாக விளக்குகிறார் காந்தி.

காந்தியின் அகிம்சை முறைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிலர், ஆங்கிலேயனாக இருந்ததால்தான் காந்தியின் போராட்டமுறை வெற்றிபெற்றது; ஹிட்லராக இருந்தால் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பான் என்கிறார்கள். சமீபத்தில்(!) டோண்டு ராகவனும் இப்படியே தன் கேள்வி-பதிலில் எழுதியிருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க போ'அர் (Boer) தலைவர்களது நடத்தை பற்றி அறியாதவர்கள்தாம் இப்படிப் பேசுவர். நடத்தையில் பிரித்தானியர்களைப் போலன்றி, ஜெர்மானிய நாஜிக்கள் போலவே இவர்கள் தென்னாப்பிரிக்காவில் நடந்துகொண்டனர். காந்தி இந்தியர்களுக்குச் சலுகைகள் பெற்றுக்கொடுத்தபின்னரும், போ'அர்கள் கறுப்பர்களிடம் படுமோசமாகவே நடந்துகொண்டனர். அதனை எதிர்கொள்ள ஒரு நெல்சன் மண்டேலா பிறக்கவேண்டியிருந்தது.

காந்தியையும் சத்தியாக்கிரக அறப்போர் முறையையும் புரிந்துகொள்ள அனைவரும் தவறாது படிக்கவேண்டிய புத்தகம் இது. இப்போது தமிழிலும் மலிவு விலையில் (ரூ. 30) கிடைக்கிறது. கிடைக்கும் இடம்: காந்திய இலக்கியச் சங்கம், தமிழ்நாடு காந்தி நினைவு வீதி, மதுரை 625020. தொலைபேசி எண்: 0452-2533957

முந்தைய பதிவு

இட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்

பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், ஆங்கில செய்தி சானல்களின் ஆங்கர்களுக்கு (anchor) ஒரே ஆங்கர் (anger). அதனால் செய்திகளுக்குள்ளேயே அங்கங்கே இட ஒதுக்கீட்டை கேலி செய்தவண்ணம் இருந்தனர். கிரீமி லேயர், ரிசர்வேஷன் போன்ற சொற்களை எங்கெல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கமுடியுமோ அங்கெல்லாம் புகுத்தினர். பின், செய்திகளுக்கிடையே இட ஒதுக்கீட்டின் ஆதரவு, எதிர்ப்பு பிரபலங்களிடம் கேள்வி கேட்டு, தங்களது சானலின் ‘எடிட்டோரியலை' முன்வைத்தனர்.

இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பி.வி.இந்திரேசன், குர்ச்சரன் தாஸ், ஷிவ் கேரா ஆகியோரோடு, ஆதரவாளர் காஞ்சா அய்லய்யா என்.டி.டி.வியில் தோன்றினார். ஆனால் எதிர் கருத்துகளுக்கு மட்டுமே நேரம் அதிகமாக அளிக்கப்பட்டது. சி.என்.என் ஐ.பி.என்னில் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய மந்திரி ஒருவர் என இரண்டு பேர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசி, வறுபட்டனர்.

என்.டி.டி.வி, சி.என்.என். ஐ.பி.என், டைம்ஸ் நவ் ஆகிய அனைத்து சானல்களிலும் பேசிய மாணவர்கள் பெரும்பாலும் (3:1 என்ற விகிதம்) இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களாக இருந்தனர். இதில் பலரும் ஏற்கெனவே கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள். இவர்கள் எந்தவிதத்தில் தனிப்பட்ட முறையில் தாங்கள் பாதிக்கப்படப்போவதாக நினைக்கின்றனர் என்று புரியவில்லை.

யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்த ஒருவர் என்.டி.டி.வியில் படா தமாஷாகப் பேசினார். இப்போது இட ஒதுக்கீடு இல்லாமலேயே OBC மாணவர்கள் 24% இடங்களைப் பிடிப்பதாகவும், மேற்கொண்டு 3% இடம் கிடைப்பதால் ‘உங்களுக்கு என்ன லாபம்' என்றும் கேட்டார். மேற்கொண்டு 3% இடங்கள்தான் லாபம் என்பது ஏனோ இவருக்குப் புரியவில்லை. அதே கேள்வியையே திருப்பி, மேற்கொண்டு 3% இடங்கள் OBC-க்கு செல்வதால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்றால் இவர் என்ன பதிலைச் சொல்லியிருப்பார்?

ராஜா, அய்லய்யா போன்றோர் வரும் ஆண்டே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்றவுடன் இந்திரேசன், 'ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றால் இடங்களை அதிகப்படுத்தமுடியாது, எனவே இட ஒதுக்கீடு சாத்தியமல்ல' என்றார். 'எதற்கு அதிகப்படுத்தவேண்டும்? இருக்கும் இடங்களில் இட ஒதுக்கீடை வழங்க வேண்டியதுதானே' என்று அய்லய்யா கேட்டதும் இந்திரேசன் முகம் சிவக்க, அது 'மாணவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும். அது மிகப்பெரிய ஃப்ராட்' என்றார்.

நேற்று, இந்திரேசன், குர்ச்சரன் தாஸ், அய்லய்யா, சந்திர பன் பிரசாத் கலந்துகொண்ட Big Fight நிகழ்ச்சி என்.டி.டி.வியில் நடைபெற்றது. இவர்கள் நால்வருமே நன்கு அறியப்பட்டவர்கள். பத்திரிகையில் பத்தி எழுதுபவர்கள். புத்தகங்கள் எழுதியுள்ளவர்கள். தனிப்பட்ட முறையில் நான் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன். ஆனால் இட ஒதுக்கீட்டைப் பற்றிய பார்வையில், அல்லது தங்களது கருத்துகளை எடுத்துச் சொல்வதில் நால்வருமே நிறைய தவறுகள் செய்தனர்.

இந்திரேசனைப் பொருத்தமட்டில் இட ஒதுக்கீடு என்பது ‘பாவச்செயல்'. மெரிட் என்பதை ஒழித்துக்கட்டும் செய்கை. பிற்படுத்தப்பட்டோர் இழிநிலைக்கு அதே வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமே காரணம். '2000 ஆண்டு என்றெல்லாம் யாரும் பேசக்கூடாது. இன்றைய நிலையைப் பேசுவோம்' என்றே சொல்லிக்கொண்டிருந்தார். இது வைதீக, கன்சர்வேடிவ் மனநிலை.

குர்ச்சரன் தாஸ் கருத்தில் சந்தை எல்லாவற்றையும் சரிசெய்துவிடும். இட ஒதுக்கீடு கூடவே கூடாது. நிறைய கல்லுரிகளை தனியார் திறந்தால், அதுவும் அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஸ்டான்ஃபோர்ட் போன்றவை திறந்தால் எல்லாப் பிரச்னைகளும் சரியாகிவிடும். அனைத்து குடியைச் சேர்ந்தவர்களும் எந்தப் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க வழி இருக்கவேண்டும் (கல்வி வவுச்சர் பற்றிப் பேசுகிறார்). ஆனால் எல்லாக் கல்லுரிகளுக்கும் - முக்கியமாக தனியார் கல்லூரிகளுக்கு - அவர்கள் விரும்பும் அளவுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை வேண்டும். அர்ஜுன் சிங், வி.பி.சிங்கைப் போல இந்திய அரசியல் வானிலிருந்து காணாமல் போய்விடுவார் என்று சாபம் விட்டார். இது லிபர்ட்டேரியன், நியோகான் மனநிலை.

அய்லய்யா, இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர். ஆனால் இன்றைய கல்வி நிறுவன அமைப்புகளின்மீது, தனியார்துறைமீது கடும் வெறுப்பை வைத்திருக்கும் இடதுசாரி மனோபாவம். ஐஐடி பற்றிப் பேசும்போது 'so called centres of excellence' என்றார். இவை உருப்படியாக ஒன்றும் சாதித்ததில்லை என்றார். அந்த மனநிலை இருந்தால் 'அங்கு உனக்கு ஏன் ரிசர்வேஷன் வேண்டும், நீயே போய் OBC-க்களுக்காக ஒரு சூப்பர் செண்டர் ஃபார் எக்சலன்ஸை உருவாக்கிக்கொள்' என்று பதில் வரும். அதேபோல தனியார்துறை OBC-க்களுக்கு என்ன உருப்படியாகச் செய்துள்ளது என்று சொல்லி அதனைச் சாடினார். இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள், தங்களுக்கென நிறைய நண்பர்களைப் பெறவேண்டிய தருணம் இது. இந்த நண்பர்கள் தனியார் துறையிலிருந்தும், உயர்கல்வித் துறையிலிருந்தும் வரவேண்டும். எனவே அவர்களது பின்னணியையே கேள்விகேட்டு, வெறுப்பேற்றுவதற்கு இது உசிதமான நேரம் அல்ல.

சந்திர பன் பிரசாத், யாருக்கு நண்பர், யாருக்கு எதிரி என்றே புரியவில்லை. OBC இட ஒதுக்கீடு வேண்டும் என்றவர், அதே நேரம், இட ஒதுக்கீட்டின் காரணமாக, OBC கிரீமி லேயர் லாபி ஒன்று உருவானால் அதனால் நாட்டுக்கே கஷ்டம் என்றார். இவர் அதிகம் பேசவில்லை. அய்லய்யாவை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. அதே நேரம் இந்திரேசன் போன்றோரின் கருத்தையும் தீவிரமாக எதிர்க்கவில்லை.

***

இந்திரேசன் போன்றோர் என்ன சொல்கிறார்கள்? இட ஒதுக்கீடு என்று எதுவும் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சம அளவிலான கல்வியை சிறுவயதிலிருந்தே கொடுத்தால் போதுமானது. சமதளத் தரையிலிருந்து அனைவரும் போராடி, அதில் சிறந்தவர் (மெரிடோரியஸ்) வெற்றிபெறட்டும். இட ஒதுக்கீடு என்பது வேண்டுமென்றால் அது பொருளாதார ரீதியிலாக மட்டுமே இருக்கவேண்டும்.

மெரிட் என்பதன்மேல் எனக்கு முற்றிலும் நம்பிக்கை போய்விட்டது. பல செயல்களைச் செய்ய உன்னதம், உச்சம் என்ற நிலை தேவையே இல்லை. யாரைவேண்டுமானாலும் வேலைக்குச் சேர்த்து, சரியான, மேலோட்டமான பயிற்சி அளித்தால் போதும். வெகு சில வேலைகளுக்கு மட்டுமே (என் கணிப்பில் 5% வேலைகள்கூட இதற்குள் வராது) சிறந்த மூளைத்திறன் தேவை. அதாவது 100-க்கு 95 வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இன்று மக்கள் சில இடங்களுக்கு, துறைகளுக்குச் சென்று மோதுகிறார்கள். அதனால் அங்கு போட்டி அதிகரிக்கிறது. இருக்கும் 4 இடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டியிட்டால், ஏதோ ஒரு முறையில் 99,996 பேரைக் கழித்துக் கட்டவேண்டும். அதற்கு 'மெரிட்' எனப்படும் முறை ஒன்று என்றால் (உண்மையில் இது மெரிட்டே கிடையாது. எதோ ஒரு நுழைவுத்தேர்வு முறை) இட ஒதுக்கீடு மற்றொரு முறை. சீட்டு குலுக்கிப்போட்டு நான்கு பேரைத் தேர்வு செய்வது மற்றொரு முறையாகக்கூட இருக்கலாம். அல்லது யானையைக் கூப்பிட்டு யாருக்கெல்லாம் அது மாலை போடுகிறதோ அதுவாகக்கூட இருக்கலாம். வேலைகள் என்று வரும்போது இதில் எதைவேண்டுமானாலும் செய்யலாம். மெரிட்தான் தேவை என்றில்லை.

***

ஆனால் படிப்பு என்பது வேறு விஷயம். நாம்தான் தேவையின்றி கல்வி வாய்ப்புகளைக் குறுக்கி வைத்துள்ளோம். ஐஐடி என்றால் 5தான் இருக்கவேண்டும் (இப்போது 7) என்று யார் சொன்னது? 50, 100 என்று வேண்டிய அளவுக்கு ஐஐடிக்கள் இருக்கலாமே? அதனால் அதன் பிராண்ட் போய்விடும் என்றெல்லாம் சொல்வது கடும் அபத்தம். பார்ப்பனீயத்தின் ஒரு கூறே, எலீட் (elite) என்ற ஒரு உயர்மட்டக் குழுவை உருவாக்கி அதில் மிகக் குறைவான சிலரை மட்டும் அனுமதித்து அவர்களுக்கு மட்டும் தனிச் சிறப்புகளைத் தருவது. மத்திய அரசு நினைத்தால் ஆண்டுக்கு நான்கு புதிய ஐஐடிக்களைத் திறக்கமுடியும். அதற்கு செலவாகும். ஆகிவிட்டுப் போகட்டுமே? அதன்பின் ஐஐடியில் இட ஒதுக்கீடு என்பதைப் பெரிய விஷயமாக யாரும் பேசமாட்டார்கள்.

அதேபோலத்தான் மருத்துவக் கல்லுரிகளும். இன்று தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதனால் ஒரு கட்டத்துக்குமேல் யாரும் பொறியியல் இடங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இந்தக் கல்லூரிகளை நெறிப்படுத்தவேண்டும் என்பது வேறு விஷயம். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தால்தான் வாழ்க்கை என்பதில்லை. 10-15 தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று முன்னுக்கு வந்துவிட்டன. நாளை, மேலும் 20-30 இப்படியாகும். அதன்பின் ஒரு கட்டத்தில் பொறியியல் நுழைவுத்தேர்வு அல்லது கவுன்செலிங்மூலம் இடம் தருதல் ஆகியவை போய்விடும். இன்னும் 15 வருடத்தின் பொறியியலுக்கு காமன் கவுன்செலிங் இருக்காது. அந்தந்தக் கல்லுரிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து, அவர்கள் எடுத்துக்கொண்டால், சேர்ந்துகொள்ளலாம். அவ்வளவுதான். இட ஒதுக்கீடு என்ற பேச்சும் காணாமல் போய்விடும்.

ஆனால் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 3,000 இடங்கள் மட்டுமே உள்ளன. நமக்குத் தேவை 30,000 இடங்கள். அல்லது 60,000 இடங்கள். அப்படி ஆகிவிட்டால் இட ஒதுக்கீட்டைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? யாருக்கு மருத்துவம் தேவையோ அவர்கள் படித்துவிட்டுப் போகிறார்கள். அதன்பின் அந்தந்தக் கல்லூரிகள் தங்களுக்கென ஒரு தரத்தை வைத்துக்கொண்டு யாரை அனுமதிப்பது, கூடாது என்று அமெரிக்க பாணியில் முடிவுசெய்துவிட்டுப் போவார்கள்.

***

கல்வி நிலையங்களை அமைப்பதில் நிறைய தாராளமயக் கொள்கைகளைக் கொண்டுவரவேண்டும். புதிய கல்விக்கூடங்கள் உருவாகி நிறைய இடங்களை ஏற்படுத்துவதற்கு மேலும் 20 வருடங்கள் ஆகலாம். எனவே, அது நடந்தேறும்வரையில் இருக்கும் உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவை.

இட ஒதுக்கீட்டினால் தகுதியுள்ள பல மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். ஆனால் குறைந்த இடங்கள் இருக்கும் இடத்தில், மெரிட் கூடத்தான் பல தகுதியுள்ள மாணவர்களை வஞ்சிக்கின்றது. எனவே எப்படியிருந்தாலும் பல தகுதியுள்ள மாணவர்களுக்கு இன்று படிக்க சரியான இடம் கிடைப்பதில்லை. இது அனைத்து சமூக மக்களுக்கும் பொருந்தும். இதற்கான ஒரே தீர்வு, மேற்கொண்டு பல கல்வி நிலையங்களை உருவாக்குவதே.

Thursday, April 10, 2008

செக்ஸ் படங்கள்

கடந்த சில வாரங்களாக எனது வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு ஹிட் எகிறிக்கொண்டே வந்தது. அது எப்போதோ 2005-ல் எழுதியது. என்ன காரணம்? யாராவது இட்லிவடை, கில்லி போன்ற இடங்களில் சுட்டியுள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அந்தப் பதிவு டூரிங் டாக்கீஸ் என்ற தொடர் விளையாட்டு.

மேலும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில் காரணம் விளங்கியது. “செக்ஸ் படம்” என்ற குறிச்சொல்லை வைத்து கூகிளில் தேடுபவர்களுக்கு இரண்டாவது சுட்டியாக இந்தப் பதிவு வந்து தொலைக்கிறது. அதனால் ஏகப்பட்டவர்கள் இந்தப் பதிவில் வந்து குதிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன தேவையோ அது இங்கே கிடைக்கமாட்டேன் என்கிறது. கூகிள் படத் தேடல்தான் அவர்களுக்குத் தேவை. எழுத்துத் தேடல் அல்ல.

Wednesday, April 09, 2008

நான் ஒரு கனவு காண்கிறேன்!

சிரில் அலெக்ஸின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய பதிவில், அவரது ‘நான் ஒரு கனவு காண்கிறேன்' என்ற எழுச்சி மிக்க பேச்சின் விடியோவைக் கொடுத்திருந்தார்.

கிழக்கு பதிப்பகம் வழியாக வெளியான பாலு சத்யா எழுதிய கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் என்ற புத்தகத்தில் பின்னிணைப்பாக வருவதற்காக இந்தப் பேச்சை தமிழாக்கம் செய்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பில் நான் பல மாறுதல்களைச் செய்திருந்தேன். இன்று மீண்டும் அதனை எடுத்து அதில் சில மாறுதல்களைச் செய்தேன். முழுவதும் திருப்தியில்லை என்றாலும், இப்போது ஓரளவுக்குத் தேவலாம் என்று நினைக்கிறேன். இதோ உங்களுக்காக:

நான் ஒரு கனவு காண்கிறேன்!

1963, ஆகஸ்ட் 28 அன்று வாஷிங்டனிலுள்ள ஆபிரஹாம் லிங்கன் நினைவகத்துக்கு முன்பாக மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய உரை:

நம் நாட்டின் வரலாற்றிலேயே சுதந்தரத்துக்காக நடைபெற்ற மாபெரும் போராட்டம் என்று பேசப்படப்போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில், இன்று உங்களோடு இணைந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நாம் யாருடைய நினைவகத்தில் நின்றுகொண்டிருக்கிறோமோ, அந்த மாபெரும் அமெரிக்கத் தலைவர், நூறாண்டுகளுக்கு முன்பு அடிமை ஒழிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனம், அநீதித் தீயில் வாடி வதங்கி அடிமைகளாக இருந்த லட்சக்கணக்கான கறுப்பின மக்களுக்கு நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கமாக அமைந்தது. இருண்ட சிறையில் பல காலமாக அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விடியலாக அது இருந்தது.

நூறாண்டுகள் கழிந்துவிட்டன. நீக்ரோ இன்னமும் விடுதலை பெறவில்லை. நூறாண்டுகள் கடந்துவிட்டன. நீக்ரோவின் வாழ்க்கை, இன்னமும் இன ஒதுக்கல் என்ற தீமையாலும் இனப்பாகுபாடு என்ற சங்கிலியாலும் மிக மோசமாக முடக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகள் கழிந்துவிட்டன. செழிப்பு என்ற ஒரு பெரிய கடலுக்கு நடுவே, வறுமை என்ற தனிமைத் தீவில் நீக்ரோ வாழ்ந்துகொண்டிருக்கிறான். நூறாண்டுகள் கழிந்தும்கூட, நீக்ரோ அமெரிக்க சமூகத்தின் ஒரு மூலையில் வதைபட்டுக்கொண்டிருக்கிறான். சொந்த மண்ணிலேயே அகதியாக உணர்கிறான். இந்த வெட்கக்கேடான நிலைமையை வெளிச்சம்போட்டுக் காட்டவே நாம் இங்கு ஒன்றுகூடியிருக்கிறோம்.

ஒரு விதத்தில் பார்த்தால், ஒரு காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுவதற்காக, நாம் நமது நாட்டின் தலைநகருக்கு வந்திருக்கிறோம். நமது குடியரசை நிர்மாணித்த சிற்பிகள், அரசியலமைப்புச் சட்டத்தையும் சுதந்தரப் பிரகடனத்தையும் வீரம் மிக்க வார்த்தைகளால் எழுதியபோது, தங்களுடைய வாரிசுகளான ஒவ்வோர் அமெரிக்கருக்கும், ஒரு பிராமிசரி நோட்டாகவே அதைப் பாவித்துக் கையெழுத்திட்டார்கள். இந்த பிராமிசரி நோட், அனைத்து மக்களுக்கும் - ஆம், வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல, கறுப்பர்களுக்கும்கூடத்தான் - வாழ்வுரிமை, சுதந்தரம், மகிழ்ச்சியைத் தேடிப் பெறும் உரிமை போன்ற மீற முடியாத சில உரிமைகளை வழங்கியது.

ஆனால், கறுப்பின மக்களைப் பொருத்தவரை, அமெரிக்கா இந்த பிராமிசரி நோட்டில் மோசடி செய்துவிட்டது என்பது வெளிப்படை. இந்தப் புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஒரு மோசடிக் காசோலையை அமெரிக்கா கறுப்பின மக்களுக்குத் தந்திருக்கிறது. அந்தக் காசோலை, ‘போதுமான நிதி இல்லை’ என்ற காரணம் காட்டித் திரும்பி வந்துவிட்டது.

ஆனால், நீதி என்ற வங்கி திவாலாகிவிட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஏராளமான வாய்ப்புகள் பூத்துக்குலுங்கும் இந்த நாட்டில், எங்கள் காசோலைக்குமட்டும் வழங்க நிதியில்லை என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஆகவே, அந்தக் காசோலையைக் கொடுத்துப் பணத்தைப் பெற நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். அந்தக் காசோலையை நாங்கள் நீட்டும்போது, சுதந்தரம், நீதியின் பாதுகாப்பு போன்ற செல்வங்கள் எங்களுக்குக் கிடைக்கும்.

செயலில் இறங்கவேண்டிய தருணம் இதுதான் என்பதை அமெரிக்காவுக்கு நினைவூட்டவே இந்தப் பரிசுத்தமான இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். பிரச்னையை ஆறப்போடுவதற்கோ அல்லது படிப்படியான சிறுசிறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவதற்கோ இது நேரமல்ல. ஜனநாயகம் தந்த வாக்குறுதியை மெய்ப்பித்துக் காட்டவேண்டிய தருணம் இது. இன ஒதுக்கல் என்ற இருண்டதும் துக்ககரமானதுமான பள்ளத்தாக்கிலிருந்து வீறுகொண்டு எழுந்து, இனச் சமத்துவம் என்ற ஒளி வீசும் பாதையில் நடைபோட வேண்டிய தருணம் இது. இன அநீதி என்ற புதைகுழியிலிருந்து நமது நாட்டை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற உறுதியான அடித்தளத்தில் அதை நிலைநிறுத்த வேண்டிய தருணம் இது. கடவுளின் குழந்தைகள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.

இந்தத் தருணத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நாடே பேரழிவைச் சந்திக்கும். கறுப்பின மக்களின் நியாயமான மனக்குறை என்னும் இந்தத் தகிக்கும் கோடைக்காலம், சுதந்தரம், சமத்துவம் என்ற உயிர்ப்பு தரும் இலையுதிர்காலம் வரும்வரை நீடிக்கும். 1963-ம் ஆண்டு முடிவல்ல; அது ஒரு தொடக்கம். ‘இந்தக் கறுப்பர்களின் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேவை என்பதால் இந்தப் பேரணியை நடத்துகிறார்கள். பேரணிக்குப் பின் மீண்டும் அமைதியாகி விடுவார்கள்' என்று நம்புபவர்கள், நாட்டைப் பழைய நிலைமையிலேயே நீடிக்குமாறு செய்தால் அதிர்ச்சியே அடைவார்கள். கறுப்பின மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கும்வரை அமெரிக்காவில் அமைதிக்கோ, நிம்மதிக்கோ இடமில்லை. நீதி என்ற பிரகாசமான நாள் உதயமாகும்வரை இந்தக் கலகம் என்னும் சூறாவளிக் காற்று நமது நாட்டின் அஸ்திவாரத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும்.

நீதிதேவனின் மாளிகை வாசலில் நின்றுகொண்டிருக்கும் என்னுடைய மக்களுக்கு நான் சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும். நமக்கான இடத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில், தீஞ்செயல்களைச் செய்யும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. வெறுப்பையும் கசப்புணர்வையும் குடித்து, நம் சுதந்தர தாகத்தைத் தணித்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது. கண்ணியமும் கட்டுப்பாட்டுடனுமான மேன்மையான பாதையில் நமது போராட்டம் தொடரவேண்டும். நமது நூதனமான எதிர்ப்பு, வன்முறையால் சீரழிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. வன்முறையை எதிர்கொள்ள, மீண்டும் மீண்டும் ஆன்மிக வலிமையின் துணையை மட்டுமே நாம் நாடவேண்டும்.

கறுப்பின மக்களைப் பற்றியிருக்கும் இந்த அற்புதமான, புதிய போர்க்குணம், அனைத்து வெள்ளையர்களையும் நம் எதிரிகளாக நினைக்கும் நிலைக்குத் நம்மைத் தள்ளிவிடக் கூடாது. பல வெள்ளையினச் சகோதரர்களும், அவர்களது எதிர்காலமானது, பிரிக்கமுடியாத வகையில் நமது எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். இங்கே பெருந்திரளாக அவர்கள் கூடியிருப்பதே இதற்குச் சான்றாகும். நமது விடுதலையோடு, அவர்களது விடுதலையும் பிரிக்கமுடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நாம் மட்டும் தனியே நடைபோட முடியாது.

நாம் மேற்கொண்டு நடக்கும்போது, நமது பயணம் முன்னோக்கித்தான் இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.

நாம் பின்னோக்கித் திரும்ப முடியாது.

சிவில் உரிமைமீது தீவிரப் பற்றுடையவர்களைப் பார்த்து, ‘நீங்கள் எப்போதுதான் திருப்தி அடைவீர்கள்?’ என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். காவல்துறையின் கொடுமைகளுக்குக் கறுப்பர்கள் பலியாவது நிற்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நீண்ட பயணம் செய்து களைப்படைந்திருக்கும் கறுப்பர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓட்டல்களிலும் நகர விடுதிகளிலும் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. அதிகபட்சம், சின்ன சேரியிலிருந்து பெரிய சேரிக்கு மட்டும்தான் கறுப்பின மக்களால் குடிபெயர முடியும் என்ற நிலை நீடிக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற பலகைகள், எங்கள் குழந்தைகளின் அடையாளத்தைச் சூறையாடுவதும் அவர்களது கண்ணியத்தைக் களவாடுவதும் நீடிக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. மிசிசிப்பியிலிருக்கும் கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நியூ யார்க் கறுப்பர்கள் தாம் வாக்களித்து எதைச் சாதித்துவிடப்போகிறோம் எனற அதிருப்தியுடன் இருக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நாங்கள் திருப்தி அடையவில்லை. அடையவும் மாட்டோம்... நீதி, மழையைப்போலப் பொழியும்வரை. நியாயம், ஆற்றைப்போலப் பாயும்வரை!

உங்களில் ஒரு சிலர், மாபெரும் அக்னிச் சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. உங்களில் ஒரு சிலர், சிறைச் சாலையின் குறுகிய அறைகளிலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களில் ஒரு சிலர், விடுதலை தாகத்தால் அடுக்கடுக்கான சித்திரவதைகளையும் காவல்துறையின் கொடுமைகளையும் சந்தித்த பகுதிகளிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நூதனமான முறையில் துன்பங்களை எதிர்கொண்டீர்கள். தேடாமல் கிடைத்த துன்பங்களுக்கு மீட்சி நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பணியாற்றுங்கள். ஏதாவது ஒரு வழியில் இந்தச் சூழ்நிலை நிச்சயம் மாறும்; மாற்றப்படும் என்ற புரிதலோடு மிசிசிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள்; அலபாமாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; தெற்கு கரோலினாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; ஜார்ஜியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; நமது வடக்குப் பகுதி நகரங்களில் இருக்கும் சேரிகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

நண்பர்களே, நிராசை என்னும் பள்ளத்தாக்கில் உழலவேண்டாம் என்று உங்களிடம் இன்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்றும் நாளையும் நம்மை இன்னல்கள் எதிர்கொண்டாலும், நான் ஒரு கனவு காண்கிறேன் என்பதை இன்று உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தக் கனவு அமெரிக்கக் கனவில் ஆழமாக வேர் கொண்டுள்ளது.

இந்த நாடு ஒரு நாள் எழுச்சிபெற்று, ‘அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்; இந்த உண்மை அனைவராலும் தெள்ளத்தெளிவாகக் காணக்கூடியது’ என்ற (அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட) உண்மைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

ஜார்ஜியாவின் சிவப்பு மலைகளில் முன்னாள் அடிமைகளின் புதல்வர்களும் அடிமைகளை வைத்திருந்த முன்னாள் எஜமானர்களின் புதல்வர்களும் சகோதரத்துவம் என்ற மேஜையில் ஒன்றாக அமரும் நாள் ஒன்று வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

அநீதி, அடக்குமுறை என்ற கொடுமைகளில் புழுங்கிக்கொண்டிருக்கும் மிசிசிப்பி மாநிலம்கூட,சுதந்தரமும் நீதியும் பூத்துக் குலுங்கும் சோலையாக நிச்சயம் ஒரு நாள் மாறும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

நிறத்தை வைத்து மதிப்பிடாமல், தங்களது நடத்தைகளை வைத்து மதிக்கப்படும் ஒரு நாட்டில் எனது சின்னக்குழந்தைகள் நான்கும் வாழும் நாளொன்று வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

நான் இன்று ஒரு கனவு காண்கிறேன்.

இனவெறி பிடித்தோர் அலையும் அலபாமாவில், வெற்று வார்த்தைகளை வீசும் ஆளுநரைக் கொண்ட அலபாமாவில், கறுப்பினச் சிறுவர், சிறுமிகள், வெள்ளையினச் சிறுவர், சிறுமிகளோடு கரம்கோக்கும் நாள் ஒன்று நிச்சயம் வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

நான் இன்று ஒரு கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படும்; ஒவ்வொரு குன்றும் மலையும் பெயர்த்தெறியப்படும்; மேடு பள்ளங்கள் சமதளமாக்கப்படும்; கோணல்மாணலான பாதைகள் நேராக்கப்படும்; தேவனின் மகிமை வெளிப்படும்; தேவனின் மாமிசமாக விளங்கும் அனைவரும் ஒன்றாக அதைக் காண்பார்கள் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

இதுதான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடுதான் நான் தென்பகுதிக்குச் செல்லப்போகிறேன்.

இந்த நம்பிக்கையைக் கொண்டுதான், நிராசை என்ற மலையிலிருந்து ஆசை என்ற சிற்பத்தைச் செதுக்கப்போகிறேன். இந்த நம்பிக்கையைக் கொண்டுதான் கருத்து வேற்றுமை என்ற அபசுரத்தைச் சகோதரத்துவம் என்ற அழகான சேர்ந்திசையாக மாற்றப் போகிறேன். இந்த நம்பிக்கையோடுதான் நாம் அனைவரும் ஒன்றாகப் பணியாற்றப் போகிறோம்; ஒன்றாக விளையாடப்போகிறோம்; ஒன்றாகப் போராடப்போகிறோம்; ஒன்றாகச் சிறை செல்லப்போகிறோம். ஒரு நாள் நிச்சயம் நமக்கு விடுதலை கிடைக்கும் என்ற புரிதலோடு சுதந்தரத்துக்காக போராடப்போகிறோம்...

கடவுளின் குழந்தைகள் அனைவரும் இந்தப் பாடலைப் புதிய அர்த்தத்தோடு பாடும் நாளாக அது இருக்கும்.

என் நாடே
விடுதலை தவழும் அற்புத நாடே
உன்னைப் பாடுகிறேன்
என் தந்தையர்கள் உயிர் நீத்த பூமியில்
என் முன்னோர்கள் குடியேறிய
பெருமைமிக்க தேசத்தில்
ஒவ்வொரு மலையிலிருந்தும்
ஒலிக்கட்டும் விடுதலை கீதம்!

அமெரிக்கா ஒரு மாபெரும் தேசம் ஆகவேண்டும் என்றால், இது நடக்கவேண்டும்.

நியூ ஹேம்ப்ஷயரின் கம்பீரமான மலைச் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

நியூ யார்க்கின் மாபெரும் மலைகளிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

பென்சில்வேனியாவின் உயரமான அலெகெனீஸ் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

பனிமூடிய கொலராடோவின் ராக்கி மலைச் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

கலிபோர்னியாவின் வளைந்த மலைச்சரிவிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

அது மட்டுமல்ல.

ஜார்ஜியாவின் ஸ்டோன் மலையிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

டென்னெசியின் லுக்அவுட் மலையிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒவ்வொரு குன்றிலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

எல்லா மலைகளிலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

இது நடக்கும்போது, விடுதலை கீதம் ஒலிக்கும்போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொரு குக்கிராமத்திலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கும்போது... அப்போது,

கறுப்பர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், யூதரல்லாதவர்கள், ப்ராட்டஸ்டண்ட்டுகள், கத்தோலிக்கர்கள் எனத் தேவனின் குழந்தைகள் அனைவரும் கரம்கோத்துக்கொண்டு கீழே உள்ள நீக்ரோ ஆன்மிகப் பாடலைப் பாடும் நாள் அப்போது உதயமாகும்:

விடுதலை பெற்றுவிட்டோம்! விடுதலை பெற்றுவிட்டோம்!
எல்லாம் வல்ல தேவனே, நன்றி! இறுதியாக நாங்கள் விடுதலை பெற்றுவிட்டோம்!

தமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்

நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதன்பேரில் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன்: Cyber world has not spare from Hogenakkal controversy

செய்தியைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் எழுதியுள்ள ஆங்கிலத்தைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. தலைப்பில் தொடங்கி ஒரு வாக்கியம்கூட இலக்கணப் பிழையின்றி எழுதப்படவில்லை. சப் எடிட்டர் என்ற ஜாதியையே ஒழித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

Tuesday, April 08, 2008

கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்

மைக்ரோகிரெடிட் என்னும் குறுங்கடன் இன்று உலகளாவிய அளவில் பிரபலமாகி வரும் ஒரு சிந்தனை. முகமது யூனுஸ் என்பவர் இதனைப் பெரிய அளவுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் சென்றவர் என்பதும் அவருக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

குறுங்கடனின் அடிப்படை நோக்கம், மிகக்குறைந்த அளவிலான கடன் வசதியைப் பெற்று, கிராமப்புற ஏழைகள் (அல்லது நகர ஏழைகள்), சிறு தொழில்களைச் செய்வதன்மூலம் தங்களது வளத்தைப் பெருக்கிக்கொள்வது. பொதுவாக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது எழை மக்களுக்குக் கடினமாக இருக்கும். வங்கிகள், யாருக்குக் கடன் கொடுக்கலாம் என்ற வரையறையை உருவாக்கியிருப்பார்கள். அதில் ஏழைகளுக்கு பொதுவாக இடம் இருக்காது. யூனுஸ், இதனை உடைத்தார். ஏழைகளுக்குக் கடன் கொடுத்தார். எந்த அடகும் இல்லாமல் கொடுத்தார். அதே நேரம், கடனைத் திரும்பப் பெற, சில முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒவ்வொரு கடன் மையத்திலும், ஐந்து பெண்கள் சேர்ந்த குழுக்கள் பல உருவாக்கப்படும். ஒரு குழுவில் தனித்தனி உறுப்பினர்களுக்குக் கடன் கொடுப்பார்கள். கட்ன பெற்ற ஒவ்வொருவரும் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஐவர் குழு அந்தக் கடனுக்குப் பொறுப்பு. அவர்களாலும் முடியாவிட்டால் அந்த மையத்தில் இருக்கும் அனைத்து ஐவர் குழுக்களும் சேர்ந்து கடனைக் கட்டியாகவேண்டும்.

தனி நபர் கடனுக்கு குழுவை, அவர்கள் சார்ந்த சமூகத்தைப் பொறுப்பாளியாக்குவதன்மூலம் யூனுஸ், குறுங்கடனை முன்னெடுத்துச் சென்றார். ஆனால் இதனால் பல சமூகப் பிரச்னைகளும் எழுந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பேச இந்தப் பதிவில் இடமில்லை.

குறுங்கடன்மூலம், கிராமப்புறங்களில் பல தொழில்முனைவர்களை உருவாக்குவதாக யூனுஸ், பிற குறுங்கடன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதனைப் பலர் மறுக்கிறார்கள். ஒரு பெட்டிக்கடை வைத்து தினசரி ரூ. 100-200க்கு வியாபாரம் செய்யும் ஒருவர் தொழில்முனைவரா? அந்த வருமானத்தில் செலவுகள்போக அவரால் குடும்பம் நடத்தமுடியுமா? இப்படி ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் அனைவராலும் கடைகளை நடத்திப் பிழைக்கமுடியுமா? கிராமங்களுக்குத் தேவை ஊதியம் கொடுக்கும் பல வேலைகள். இப்படிச் சொல்கிறார்கள் வேறு சிலர்.

குறுங்கடனுக்கான எதிர்ப்பு வலது, இடது என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் வருகிறது. வலதுசாரி பொருளாதார வல்லுனர்கள், பெரும் நிறுவனங்கள் அதிக முதலீட்டின்மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதனால்மட்டுமே கிராமப்புற ஏழைமையைக் குறைக்கமுடியும் என்று நம்புகின்றனர். இடதுசாரிகள், குறுங்கடன் என்பது கிராமப்புற ஏழைகளை ஏமாற்றும் ஒரு முயற்சி என்று நினைக்கின்றனர். மாற்றாக, கிராமப்புற ஏழைகளுக்கு அதிக மான்யம், வசதிகள் ஆகியவை அளிக்கப்படவேண்டும் என்கின்றனர்.

குறுங்கடனை மட்டும் வைத்துக்கொண்டு கிராமப்புறங்களில் ஏழைமையை ஒழித்துவிடமுடியாது என்று நான் நினைக்கிறேன். கடன்களை, நுகர்வதற்கான கடன், உற்பத்திக்கான கடன் என்று இரண்டாகப் பிரிக்கலாம். கடனை அடிப்படையாக வைத்துத் தொழில் செய்து, உற்பத்தியைப் பெருக்கி, அந்த உற்பத்தியை விற்பதன்மூலம் பணத்தைப் பெற்று, கடனை அடைத்து, மேலும் கடன் வாங்கி, மேலும் உற்பத்தியைப் பெருக்கி முன்னேறிச் செல்வதற்கு உதவுவது உற்பத்திக்கான கடன். நுகர் கடனைப் பெற்று, ஒரு கல்யாணம் நடத்தி விருந்துவைத்து பணத்தைச் செலவு செய்யலாம். அல்லது அவசர மருத்துவத் தேவைக்குச் செலவிடலாம். அல்லது தொலைக்காட்சி வாங்கலாம். இப்படி என்ன செய்தாலும், பணம் உடனே காணாமல் போய்விடும். பிறகு வேறு வருமானத்தைக் கொண்டு இந்தக் கடனை அடைக்கவேண்டும்.

உற்பத்திக்கான கடனைக் கொண்டு, பணத்தைப் பெருக்குவதற்கு சந்தை பற்றிய புரிதல் வேண்டும். போட்டியாளர்கள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். திறமையுள்ள ஊழியர்களைத் தேடிப்பிடித்து வேலைக்கு வைக்கவேண்டும். தரம் பற்றிய புரிதல் வேண்டும். இடைத்தரகர்களிடம் எப்படி நடந்துகொள்வது, பொருள் வாங்குவோரிடம் எப்படி ஒப்பந்தம் செய்துகொள்வது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நமது பல கிராமத்தொழில்கள் நசிந்துபோவது இதனைச் சரியாகச் செய்யமுடியாததால்தான். பல நெசவாளர்கள், தங்களது உயிரைவிட்டு உருவாக்கும் துணிவகைகள், டிசைன்கள் ஆகியவற்றிலிருந்து அதிகமான பணத்தைப் பெறுவது இடைத்தரகர்களும், அந்தப் பொருள்களை நுகர்வோருக்கு விற்கும் விற்பனை நிறுவனங்களுமே. சந்தைக்கு என்ன தேவை, சந்தையில் ஃபேஷன் எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது ஆகியவற்றை கிராமப்புற வினைஞர்கள் இன்று கண்டுகொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றனர்.

மேலும் தொழில்துறையில் நகர நிறுவனங்களோடு போட்டிபோடத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்கள் கிராமங்களில் இல்லை. 24 மணிநேர மின்சாரம், நல்ல சாலைகள், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை இல்லை. வங்கிகள் இல்லை. தொலைபேசி, இணையம் ஆகியவை நிறைய முன்னேறவேண்டும்.

இருந்தும், விவசாயத்துக்கு வெளியே பல தொழில்கள் கிராமப்புறங்களில் சாத்தியமாகும். அதனைச் செய்வதற்கு முனைப்புள்ள தொழில்முனைவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்லவேண்டும்.

ஐஐடி மெட்ராஸ், இதனை நோக்கி சில செயல்களைச் செய்துவருகிறது. பேரா. அஷோக் ஜுன்ஜுன்வாலா தற்போது, கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கக்கூடியவகையில் சில தொழில்முனைவர்களை ஊக்குவித்து, சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தொழில்களுக்கு ஆரம்பகட்டத்தில் தேவையான நிதி உதவி, கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை செய்துதர, பல அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். Tenet, L-RAMP ஆகியவைமூலம் பணம், மானியமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால் மானியங்கள் போதா. கூடவே ஒரு தொழிலை உருவாக்கி நடத்தத் தேவையான angel funding வேண்டியிருக்கும்.

அதற்காக Tenet-1, Tenet-2 போன்ற வென்ச்சர் நிதிகளை அஷோக் உருவாக்கியுள்ளார். இந்த நிதிகளை வென்ச்சர்-ஈஸ்ட் என்ற நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கிறது.

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சரகத்தின்கீழ் NRDC என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் தனது பிற செயல்களுடன், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில்களை உருவாக்க முனையும் தொழில்முனைவோருக்கு angel funding அளிக்கிறது. NRDC, ஐஐடி மெட்ராஸ் இரண்டும் இணைந்து, கிராமப்புறங்களை நோக்கிய, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை ‘அடைகாத்து' அவற்றுக்கு ஆரம்பகட்ட நிதி தர ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களை அடையாளம்கண்டு, இவற்றில் முதலீடுகளைச் செய்வதற்கான ‘முதலீட்டுக் குழு'வில் மூன்று பேரில் ஒருவனாக நானும் உள்ளேன். NRDC-யின் தலைமை நிர்வாகி சோம்நாத் கோஷ், பேரா. அஷோக் ஜுன்ஜுன்வாலா மற்ற இரு உறுப்பினர்கள்.

கடந்த கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களில் NRDC முதலீடு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இனி அரசு இயந்திரம் உருண்டோடி, இதற்கான வேலைகளை முடிக்கவேண்டும்.

இதில் ஒரு நிறுவனம், கிராமப்புறங்களில் உற்பத்திக் கேந்திரத்தை நிறுவி, பாரம்பரிய கைவினைத் தொழில்கள்மூலம் home textiles (தலையணை உறை, போர்வை, மேசை விரிப்புகள், ஜன்னல் திரைகள், தரைக்கம்பளம் போன்றவை) பொருள்களை உருவாக்கி இந்தியா மற்றும் உலகெங்கும் விற்பனை செய்து பொருளீட்டுவது. இதில் பலவற்றை இயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இயற்கை இழைகள் என்றால் வாழை நார், மூங்கில் நார், கோரைப்புல் போன்றவற்றிலிருந்து பெறும் நார் ஆகியவை! காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் தாவரப்பொருள்களிலிருந்து தயாரிக்கும் சாயத்தைக் கொண்டு இந்த இயற்கை நாரில் வண்ணம் சேர்த்து, வீட்டுக்கு உபயோகமாகும் பலவிதமான நெசவுப் பொருள்களைத் தயாரிக்கமுடியும் என்கிறார்கள்.

மற்றொரு நிறுவனம், தொலைபேசிமூலம் ஒலிவழியாக தகவல் களஞ்சியத்திலிருந்து தகவலைப் பெறும் நுட்பத்தைச் செயல்படுத்துகிறது. இன்று எதற்கெடுத்தாலும் இணையத்தில் தேடிப் பெறுகிறோம் நாம். ஆனால் கிராமப்புறங்களில் இணைய வசதியும் சுமார். அதற்குத் தேவையான கணினிக்கு ஆகும் செலவும் அதிகம். ஆனால் இன்று எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. எனவே படிப்பறிவு - முக்கியமாக ஆங்கில அறிவு - இல்லாதவர்களும், அவரவர் மொழியில் தகவல்களை எளிதாகப் பெறமுடியுமா என்ற கேள்விக்கு இவர்கள் விடைகொடுக்க முற்படுகிறார்கள்.

இவர்கள் எப்படி தங்கள் துறைகளில் ஜெயிக்கிறார்கள் என்பதை வரும் நாள்களில் பார்ப்போம்.

Saturday, April 05, 2008

திபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்

CCTV-9 என்ற சீனத் தொலைக்காட்சி ஒளியோடை இப்போது சென்னையில் காணக்கிடைக்கிறது. நேற்று திபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் காட்டினர். இது சமீபத்தில் நடந்த அடிதடிகள், ஆள் சாவுகள் பற்றியதல்ல. எப்படி தலாய் லாமா, முற்போக்கு சக்திகளிடமிருந்து விலகி, எதிர்ப்பு (ரியாக்ஷனரி) சக்திகள் கையில் மாட்டிக்கொண்டார் என்பது பற்றிய ஆவணப்படம்.

இளம் வயது தலாய் லாமா, 1950களின் ஆரம்பத்தில் சீனாவின் கம்யூனிசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சீனாவின் விருப்பம், திபெத்தை சீனாவுடன் இணைப்பது. திபெத்தில் ஒருமாதிரி ஃபியூடலிசம், மதம் கலந்த ஆதிக்கமுறை நிலவுடைமைச் சமுதாயம். பொதுமக்கள் வெறும் கொத்தடிமைகள் போல நிலத்தில் உழுது விளைச்சலை, லாமாக்களிடம் கொடுக்கவேண்டும். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருக்கும் முற்போக்கு சக்திகள், திபெத்தையும் சீனாவுடன் இணைத்து, திபெத்தில் பொதுவுடைமைச் சமுதாயம் நிலவவேண்டும் என்று விரும்புகின்றனராம்.

ஆனால் திடீரென தலாய் லாமா சீனத் தலைவர்களிடமிருந்து விலகிப்போகிறார். இந்தியா வருகிறார். அங்கே தலாய் லாமாவின் இரண்டு சகோதரர்கள் அவரை வளைத்துத் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். (இந்த ஆவணப்படம் நேரடியாக நேருவும் இந்தியாவும்தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சொல்வதில்லை.) அமெரிக்கா தலாய் லாமா மனத்தைக் குழப்பிக் கலைத்துவிடுகிறது. சீனப் பிரதமர் சௌ-என்-லாய், ‘நீ மருவாதையா லாசா வந்துடு கண்ணா, வெளில இருந்தா உன்னோட புனிதம் கெட்டுடும்' என்று செல்லமாக மிரட்டுகிறார். ஒருவழியாக தலாய் லாமா மீண்டும் லாசா வருகிறார்.

சீன ராணுவம், தலாய் லாமாவுக்கு ஒரு இசை நிகழ்ச்சியைக் காணவாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது. ஆனால் லாசா நகர மேயர், மக்களைக் கிளப்பிவிட்டு, சீனர்கள், தலாய் லாமாவைக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உசுப்பிவிடுகிறார். திபெத்திய மக்கள் ஆயுதங்களுடன் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கை முற்றுகையிட்டு, தலாய் லாமாவை உள்ளே வரவிடாமல் செய்துவிடுகிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில், தலாய் லாமா ஊரைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சம் அடைகிறார்.

அமெரிக்கா, ஆயுதங்கள், கையாள்களை திபெத்தில் இறக்குகிறது. அதன் பிறகு என்ன? திபெத்தின் பிற்போக்கு சக்திகள் சீனர்களைக் கொல்கின்றனர். சீன ராணுவம் கலவரத்தை வெற்றிகரமாக அடக்குகிறது. முதல் முறையாக திபெத் மக்கள் தங்களுக்கென சொந்த நிலத்தைப் பெறமுடிகிறது. திபெத்தியர்கள் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவம். அமெரிக்க சூழ்ச்சி முறியடிக்கப்படுகிறது. திபெத்தில் சர்வ மங்களம் உண்டாகிறது.

***

ஒரு பக்கச் சார்புள்ள படம் என்றாலும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

அரசியல், சமூக நிலையில் திபெத், பழமைவாத, நிலவுடைமைச் சமூகமாக இருந்துள்ளது என்பது உண்மையே. பூட்டானும் நேபாளமும் நேற்றுவரை அப்படியே இருந்தன. மன்னராட்சி மாறி, குடியாட்சி வர ஒவ்வொரு சமூகமும் ஒரு குறிப்பிட்ட பாதையை எடுக்கவேண்டிவரும். அமெரிக்கா தனது பிராண்ட் குடியாட்சியை, கையில் துப்பாக்கியோடு ஈராக், ஆஃப்கனிஸ்தான் ஆகிய இடங்களில் புகுத்தி இதுவரையில் சாதித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். சீனா தனது பிராண்ட் பொதுவுடைமையை வேறுவிதமாக திபெத்தில் புகுத்தியுள்ளது.

கேட்டால், திபெத்தியர்கள்தான் அதனை விரும்புகிறார்கள் என்று சீனா சொல்லிவிடுகிறது. எதிர்க்கும் தலாய் லாமா ஒரு ரியாக்ஷனரி பழமைவாதி. கல்லை விட்டு எறியும் நான்கைந்து திபெத்தியர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்.

இந்த நிலைமையில் தலாய் லாமாவே, தாங்கள் கேட்பது விடுதலையல்ல, தன்னாட்சி உரிமையை மட்டுமே என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். தன் வாழ்நாளில் அதுமட்டுமாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கென்னவோ, அவர் வாழ்நாளில் அது நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.

Friday, April 04, 2008

உலக அரிசிப் பற்றாக்குறை

கோவி.கண்ணன் தன் பதிவில் சிங்கப்பூரில் அரிசிப் பற்றாக்குறை ஏற்படப் போவதைப் பற்றி எழுதியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உலக கோதுமை உற்பத்தி குறைவாகிக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. அதைவிட, கோதுமை கொள்முதல் குறைந்தது. எனவே இந்தியா வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. அதற்கு பெரும் எதிர்ப்பலைகள் எழுந்தன. புழுத்த கோதுமையை, அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று எதிர்ப்பணியினர் சொல்லினர்.

அதே காலகட்டத்தில் இந்தியாவில் அரிசி உற்பத்தியில் குறைபாடு பெரிதாக ஏற்படவில்லை. கொள்முதலிலும் பிரச்னைகள் இல்லை.

இப்போது, உலக அளவில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. உணவுப் பழக்கம் என்பது திடீரென மாற்றமுடியாதது என்பதால், அரிசி உண்ணும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படப் போகிறார்கள். உலகின் பெரும் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பான், தாய்லாந்து, இந்தியா ஆகியவை. தாய்லாந்து சமீபத்தில் தனது அரிசி ஏற்றுமதியைத் தடுத்துள்ளது. இந்தியாவும், உள்நாட்டு விலை குறைப்புக்காக அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது, முற்றிலுமாகத் தடை செய்யவில்லை. பாசுமதி அரிசியை இப்போதும் ஏற்றுமதி செய்யலாம். பாசுமதியல்லாத உணவு அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளில் பிரச்னைகள் ஏற்பட உள்ளன. சீனா, தனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களான மக்கா, ஹாங் காங் போன்ற இடங்களுக்குத் தேவையான அரிசியைத் தருவதாகச் சொல்லியுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

ஆனால் அமெரிக்கா, இந்த ஆண்டு அவர்களது கோதுமை விளைச்சல் அதிகமாகும் என்று சொல்லியுள்ளனர். அது ஓரளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க உதவலாம்.

இதற்கிடையே, மாற்று எரிபொருள் என்று மக்காச்சோளம்மூலம் பயோடீசல் தயாரிப்பது உலகின் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கலாம் என்ற சங்கடமான உண்மையும் வெளியே தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய அரிசி உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கமுடியும். அதற்கு விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும். Subsistence farming எனப்படும் முதுகை உடைக்கும், கடனில் மூழ்கவைக்கும் ஏழைமை விவசாயத்தை மாற்றவேண்டும். அதற்கு என்ன தேவை?

* தொழில்முனைவர்கள் விவசாயத்தில், அரிசி, கோதுமை உற்பத்தியில் நுழையவேண்டும்.
* ரசாயன உரங்கள் இல்லாமலேயே பெரிய பரப்பளவில், அதிக விளைச்சலைத் தரவைக்கும் ஒட்டு ரக தானியப் பயிர்களை நடவேண்டும்.
* தண்ணீரைக் கவனமாகக் கையாண்டு, வீணாதலைத் தடுக்கவேண்டும்.
* எலி, பூச்சிகள் தொல்லையில்லாமலும், இயற்கை சீற்றத்தால் உணவுப்பொருள் வீணாகாமலும் இருக்க நிறையப் பேரையும் தொழில்நுட்பத்தையும் வேலைக்குக் கொண்டுவரவேண்டும். சுகுணா சிக்கன் போன்ற ஒரு நிறுவனம் கோழிப்பண்ணைகளில் கொண்டுவந்துள்ள முன்னேற்றங்களை அரிசி, கோதுமை உற்பத்தியில் நாம் உடனடியாகப் புகுத்த வேண்டும்.
* விவசாயத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்கவேண்டும். (தெரியும், எனக்கு கம்யூனிஸ்டுகளிடமிருந்து தர்ம அடி காத்திருக்கிறது!)

இவையெல்லாம் நடந்தால் இந்தியா, தன் நாட்டு மக்களுக்கும் உலக மக்கள் பெரும்பாலானோருக்கும் உணவளிக்க முடியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை இதனை இன்று செய்கின்றன!

[எனது அரிசி, கோதுமை, விவசாயம் தொடர்பான பதிவுகள் இங்கே.]

தாயுள்ளம்

நேற்று ஒரு மீட்டிங். நான் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன். கார்பொரேட் உலகில் அதிகம் சாதித்த, உயர் பதவிகளில் இருக்கும் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஒருவர் மட்டுமே பெண். மீட்டிங் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது. மணி இரவு 8.00-ஐத் தாண்டுகிறது. அந்தப் பெண், நடுவில் தனது செல்பேசியில் தன் தாயைக் கூப்பிட்டு தன் மகனுக்கு உணவு கொடுக்குமாறு சொல்கிறார்.

மீட்டிங் தொடர்ந்து நடக்கிறது.

இன்னும் சில நிமிடங்களுக்குப் பிறகு, 'பையன் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறான், தாய் வந்தால்தான் சாப்பிடுவேன் என்கிறான்' என்ற செய்தியைச் சுமந்து வருகிறது எஸ்.எம்.எஸ். தாய் மீண்டும் போன் செய்கிறார். 'சாப்பிடுப்பா, நாளைக்கு ஸ்கூல் இருக்கே, சாப்பிட்டுவிட்டு தூங்கப்போ' என்று கெஞ்சுகிறார். பலன் என்ன என்று தெரியவில்லை.

மீட்டிங் தொடர்கிறது.

ஆனால் அந்தத் தாயால் பேசமுடிவதில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, உட்கார்ந்திருக்கிறார். சுற்றியுள்ளவர்கள் ஒன்றுமே நடவாததுபோல பேசுகிறார்கள். இந்தத் தாய் கண்ணில் நீர் வருவதை அடக்கிக்கொண்டு, ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பேசத்தொடங்குகிறார்.

மீட்டிங் தொடர்கிறது.

என் வேலை முடிகிறது. நான் கிளம்புகிறேன். அந்தத் தாய் இன்னமும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்ல எத்தனை நேரம் ஆகும் என்று தெரியவில்லை.

அந்த ஒரு கணம், அந்தத் துளி நேரம் அவர் தொண்டையை அடைத்துக்கொண்டு பேசமுடியாமல் இருந்தது, கண்ணில் ஒரு சொட்டு நீரை அடக்கிக்கொண்டது, என் கண்ணில் நிற்கிறது.

எந்த ஆணுக்கும் இந்த நெருக்கடி நேர்வதில்லை.

Wednesday, April 02, 2008

குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு

தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.

அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக விண்ணப்பித்துவைத்தோம்.

சுமார் இரண்டு வாரங்களுக்குமுன் விண்ணப்பித்த மென்பொருள்களை நேரில் வந்து இயக்கிக் காண்பிக்க அழைத்திருந்தனர்.

மொத்தம் 17 விண்ணப்பங்கள் வந்திருந்தன என்று நினைக்கிறேன். அதில் இருவர் (எங்களையும் சேர்த்து) இரண்டு மென்பொருள்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பித்தவர்கள். ஆக, மொத்தம் வந்தது 15 நிறுவனங்கள், அமைப்புகள். யார் யார் என்னென்ன மென்பொருள்களை அறிமுகம் செய்தார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை.

ஆனால் வந்தவற்றுள் எங்களைக் கவர்ந்தது திருச்சியிலிருந்து வந்திருந்த 'ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி' சார்பில் கொண்டுவந்திருந்த காது கேளாதோருக்கான சைகை மொழியின்மூலம் கணிதம் கற்பிக்க உருவாக்கியிருந்த மென்பொருள். அதையும்கூட அகஸ்மாத்தாகத்தான் பார்க்கமுடிந்தது. அவர்கள் கொண்டுவந்திருந்த டெமோ குறுந்தட்டு வேலை செய்யவில்லை. அதனால் அவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தனர். அப்போது என் அலுவலக சக ஊழியர் நாகராஜன், அதனைச் செப்பமிட்டு வேலை செய்யுமாறு செய்தார். அப்போதுதான் அந்த மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஓரளவுக்குப் பார்க்கமுடிந்தது.

முனைவர் சா.பிரபாகர் இம்மானுவேல், அவர்கூட ஒரு சகோதரி (பெயர் உடனடியாக ஞாபகம் இல்லை) ஆகியோர் வந்திருந்தனர். இம்மானுவேலுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இம்மானுவேல் இயல்பியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் குறைதிறனுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பாகவும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். குறைதிறன் என்றால் கண், காது போன்ற புலன்களில் குறைபாடுள்ளவர்கள், அல்லது மூளைத்திறனில் சற்றே மாறுபாடுள்ளவர்கள்.

கற்பித்தல் தொடர்பாக பல கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் இன்றைய கல்வித்திட்டம், அதன் குறைபாடுகள், அவை எவ்வாறு பள்ளிக் குழந்தைகளைத் துன்புறுத்துகின்றன என்பதை விளக்கினார். எந்த வகையில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் திறனைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர், எப்படி குழந்தைகளின்மீது அழுத்தம் கொடுக்கின்றனர், இதில் பள்ளிக்கூட ஆசிரியர்களின் பங்கும் எவ்வளவு மோசமாக உள்ளது என்று விளக்கினார்.

பல கற்றல் குறைபாடுகளை இளம் வயதில் கண்டுபிடித்துவிட்டால், அதாவது 3-4 வயதுக்குள்ளாகவே, உடனடியாக அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்றார்.

மற்றொரு முக்கியமான விஷயமாக அவர் சொன்னது ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்பிப்பதில் மாட்டிக்கொள்ளும் சராசரிக் குழந்தைகளின் பாடு. பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தலில் குழந்தைகளைப் புகுத்திவிடுகின்றனர். ஆனால் பிற இடங்கள் அனைத்திலும் (வீடு, விளையாடுமிடம், பள்ளிக்கூடம்!) ஆங்கில ஒலிப்பான்களையே கேட்காத ஒரு குழந்தை கடுமையான சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. ஒரேமாதிரி ஒலிக்கும் இரு சொற்களுக்கு இருவேறு ஆங்கில ஸ்பெல்லிங்கள் இருப்பதைப் பல குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் மொழியைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலில், சிந்தனையை, தகவலைப் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகின்றனர். விளைவு: மோசமான ஒரு மாணவரை உருவாக்கிவிடுகிறோம்.

இம்மானுவேலின் தீர்வு: பள்ளிக்குள்ளே நுழையும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ சோதனை நடத்தி, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குமேல் உள்ளவர்களை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துக்கொள்வது. அதனால் மற்றவர்களுக்கு ஆங்கிலமே சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதல்ல. ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்தால் அவர்களுக்குப் போதும். அந்த மொழியிலும் நாளடைவில் நல்ல திறனைப் பெறலாம்.

இதனை எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றேன் நான். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொண்டார்கள் என்றால் ஓரிரு நாள்கள் அழுதுவிட்டு பெற்றோர்கள், தமிழ்வழிக் கல்வியில் பிள்ளைகளைச் சேர்த்துவிடக்கூடும் என்று நம்புகிறார் இவர். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இப்போது இல்லை. பெற்றோர்களது புரிதல் அதிகமாக வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவுகாலம் வரும்.

பேச்சு 'தாரே ஜமீன் பர்' பக்கம் திரும்பியது. படம் நன்றாக இருந்தது என்றாலும் பிரச்னை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தான் எழுதியிருந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். (கற்றலில் பிரச்னை/குறைபாடு, பெற்றோர்-ஆசிரியர் கையேடு. வெளியீடு: ஹோலி கிராஸ் சர்வீஸ் சைசைட்டி, திருச்சி. விலை ரூ.50)

இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும். அதற்கு சில நாள்கள் ஆகலாம். அதற்கு முன்னதாக இந்தப் புத்தகத்தை அவர் ஏன் எழுதியுள்ளார் என்பது பற்றி அவரே கூறுவதைக் கேளுங்கள்:
இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் ஆங்கில மொழிவழிக் கல்விமுறை நோக்கி ஓடுவதை யாராலும் தடுக்கமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செல்லும் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை பிரச்னைக்குள் செல்லமாட்டான் என்று எண்ணுகின்றனர். ஒரு குழந்தை கல்வியில் தோல்வி நிகழ்வினை வெளிப்படுத்தும்போதும் பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கான காரணங்களை ஆராயாமல், தனிப்பயிற்சி (tuition), அபகஸ், நினைவாற்றல் பயிற்சி எனப் பல வழிகளில் செல்வதையும் நாம் தினசரி காண்கிறோம். சுமார் 8 அல்லது 9 வயதில் கல்விப் பிரச்னையுடன் குணாதிசயப் பிரச்னைகளும் அதிகமாக வெளிப்படும்போதுதான் பெற்றோர்கள் உதவி தேடி அலைகின்றனர். அந்நிலையிலும்கூட இது ஒரு கல்விப் பிரச்னை என உணராமல் மருத்துவப் பிரச்னை என பல மருத்துவர்களைத் தேடிச் செல்வதும், மருந்துகளின்மூலமாக இப்பிரச்னைகளை நீக்கமுடியுமா என முயற்சிப்பதும் நாம் காணும் ஒரு நிகழ்வு.

இந்தச் சூழ்நிலையில், என்னிடம் உதவி வேண்டி வருபவர்களின் எண்ணிக்கை தினசரி கூடி வருவதைக் காணும்போது, ஒரு பெற்றோராக என் மனது இந்தச் சூழ்நிலைகளில் உண்மையினை விளக்கி ஒரு புத்தகமாக வெளியிட எண்ணியது. என்னிடம் வழிகாட்டுதல் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுமே, குழந்தையின் கல்வி நிலைகளில் தங்களது அறியாமையினை உணர்ந்து, பெற்றோர்கள் அறியாமை நீக்க ஒரு புத்தகம் எழுதுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அதன் விளைவே இந்தப் புத்தகம்.
ஆனால் இந்தப் புத்தகத்தை நீங்கள் எளிதாகக் கடைகளில் பெற்றுவிடமுடியாது. உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் கற்றலில் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் எண்ணினால், முனைவர் இம்மானுவேலை நீங்கள் அணுகலாம்.

அவரது முகவரி:

ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி
Plot No. 3, எட்டுப்பட்டை காம்பவுண்ட்
பெரிய ஆஸ்பத்திரி பின்புறம்
புத்தூர், திருச்சி 620 017
தொலைபேசி எண்: 2771544, 2770031
மின்னஞ்சல்: holy.cross.service.society@gmail.com
prabakartrichy@hotmail.com

நான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகமும் இந்த முகவரியில் கிடைக்கும். முக்கியமாக அனைத்துப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்.

[பி.கு. இன்று உலக குழந்தைகள் புத்தக தினம். உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் புத்தகம் படிக்க ஆரம்பிக்கவில்லையென்றால் இன்றே தொடங்குவீர்.

இன்று காலை 10.00-11.00 மணிக்கு சென்னை Big FM-ல் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொடர்பாக நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வருகிறது. பல பாடல்களுக்கு மத்தியில் நான் சிறிது பேசவும் கூடும்!]