Friday, July 18, 2008

டிஜிட்டல் பிளவு

எங்களது அலுவலகத்தைச் சேர்ந்த நாகராஜன் எழுதி அனுப்பியது.

--பத்ரி

***

இன்று காலையில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ்க்கணினி பயிற்சி பட்டறை மாநகராட்சி சமூக அரங்கில் நடைபெற்றது. இதை கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கணினியில் எவ்வாறு தமிழ் படிக்கலாம், எழுதலாம் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றி செயல்முறை விளக்கங்களோடு பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள்.

ஆடியன்ஸ் பெரும்பாலும் மாநகராட்சி ஆசிரியைகள். ஆண்கள் மிகவும் குறைவு.

இதற்குமுன் வேறு சில கல்லூரி பட்டறைகளில் நான் இது தொடர்பாக பேசியிருந்தாலும், இந்த முறை நான் அதிக ஈடுபாட்டுடன் பேச ஆரம்பித்தேன். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளிலேயே நான் படித்திருந்ததால் என்னை அறியாமலேயே ஒரு emotional attachment இருந்தது.

முதலில் ரோமன் எழுத்து முறை கொண்ட (ஆங்கிலம் போன்ற) மொழிகளுக்கும், மற்ற (தமிழ் போன்ற) மொழிகளுக்கும் கணினியின் பார்வையில் உள்ள வித்தியாசங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். பின்னர் கணினியில் ஆங்கிலம் எவ்வாறு ஒழுங்காகத் தெரிகிறது? ஏன் ஆங்கிலத்தில் உள்ளிடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை? போன்ற விஷயங்களுக்கு வந்தோம். சிறிது font, encoding, 8-bit, 16-bit, ansi, unicode, keyboard driver போன்ற விஷயங்கள் மேயப்பட்டன.

தமிழ் போன்ற மொழிகளுக்கு எழுத்துகளை உள்ளிட தனியாக ஒரு மென்பொருள் ஏன் தேவை என்பது அவர்களுக்குத் தானாகவே புரிந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், Windows xp நிறுவப்பட்ட கணினிகளில் தமிழ் தெரிவதற்கு சில பகீரதப் பிரயத்தனங்களை செய்ய வேண்டியுள்ளது, CD எல்லாம் கேட்கிறது! போன்ற சிரமங்களை சிலர் ஏற்கெனவே அனுபவங்களின் மூலம் அறிந்திருந்தனர்.

ஆதலால் முதல் 40 நிமிடங்களில், என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விட்டது.

இப்போது தீர்வுகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

இதுநாள்வரை இந்த பிரச்சனைகளுக்கு என்னென்னெ மென்பொருள்கள் வந்தன? ஒவ்வொன்றும் என்னென்ன தீர்வுகள் தந்தன? எதையெல்லாம் தரவில்லை? என்று சொல்லிவிட்டு இதற்கு மேல் தியரி பேசினால் ஒன்று விரட்டியடித்து விடுவார்கள், முடியவில்லை என்றால் ஓடிப்போய்விடுவார்கள் என்பதால் செயல்முறை விளக்கத்திற்கு தாவலாம் என அறிவித்தேன்.

முதலில் NHM Writer.

வந்தவர்கள் அனைவருக்கும் NHM மென்பொருள்கள் கொண்ட CD மற்றும் வேறு சில CDகளையும் இலவசமாக கொடுப்பதற்கு கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட CD ஒன்றையே எடுத்து எனது மடிக்கணினியில் நுழைத்தேன்.

Setup file எங்குள்ளது என்பதில் இருந்து ஆரம்பித்து, installation எவ்வாறு செய்வது, regional language options நிறுவப்படாமல் இருந்தால் NHM Writer அதைத் தானாகவே சரி செய்து ஒரு தடவை restart செய்ய சொல்வது போன்ற சம்பிரதாயங்கள் அவர்கள் முன்னேயே திரையில் நடந்தேறின.

இம்முறை System tray, icon, mouse right button, click, keypreview, OnScreen Keyboard, Toggle key போன்ற விஷயங்கள் மேயப்பட்டன.

இப்போது தட்டச்சுவது எப்படி என்ற கட்டத்திற்கு வந்தோம்.

எனக்கு phonetic முறை பழக்கமென்பதால் toggle key-யாக Alt+2 அடித்து தட்டச்சிட ஆரம்பித்தேன். “அம்மா”.

“ஆமாம்.. தமிழ் வந்துடுச்சு”. “Alt key எங்கே இருக்கு”.

சிலர் என்னை நோக்கி முன்னேறினர்.

தாய்மொழியில் அம்மா எனத் தட்டச்சிட அன்னைகளுக்கு அத்தனை ஆர்வம்.

நான்கைந்து ஆசிரியைகள் முயற்சி செய்தனர்.

ஒருவருக்கு மட்டும் Altஐயும் 2ஐயும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை மட்டும் சேர்த்து அடிப்பது சிரமமாக இருந்தது.

பின்னர் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டனர்.

மீண்டும் கொஞ்சம் தியரி பேச ஆரம்பித்தேன்.

Alt+2ஐ விட Alt+1 நன்று என்றேன்.

தமிழ்99 முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியமானது. NHM Writer'ன் keypreviewவும் OnScreen Keyboard'ம் உங்களுக்கு உதவும் என்றேன். அதுபோக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட CDயில் சிந்தாநதி எழுதிய “தமிழ்99 கையேடு” இருக்கிறது என்பதையும் தெரிவித்தேன்.

இத்துடன் முடித்து கொள்ளலாம் என எண்ணியபோது ஆண்டோ பீட்டர் NHM Converter பற்றியும் சிறிது பேசச் சொன்னார்.

இது இவர்களைக் குழப்புமே என்று தயங்கியவாரே NHM Converter பற்றியும் ஐந்து நிமிடங்கள் செய்முறை விளக்கம் நடந்தது.

எல்லாம் ஓரளவு இனிதே முடிந்தது என்று கூறி எனது Sessionஐ முடித்துக் கொண்டவாறு அறிவித்தேன்.

அப்போது பங்கேற்பாளர்கள் திசையில் இருந்து ஒரு குரல். அதை ஆமோதித்தவாரே மேலும் சிலர்.

“எங்க பள்ளிகளில் இருப்பதெல்லாம் மத்தவங்க பயன்படுத்தின Condemned கம்ப்யூட்டருங்க சார்..”

“xp எல்லாம் கிடையாது சார். Windows 98 தான்”

“ரொம்போ ஸ்லோவா இருக்கும்”

கடைசியாக... ஒரு ஆசிரியை கேட்டார்.

“சார்.. கம்ப்யூட்டரும் தருவீங்களா சார்.”

8 comments:

  1. ---ஒருவருக்கு மட்டும் Altஐயும் 2ஐயும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை மட்டும் சேர்த்து அடிப்பது சிரமமாக இருந்தது.---

    என் அம்மாவுக்கும் ஆரம்பத்தில் இது சிரமமாக இருந்தது.

    ReplyDelete
  2. //“சார்.. கம்ப்யூட்டரும் தருவீங்களா சார்.”//

    :) :)

    ReplyDelete
  3. எண்முறை பிளவு... தலைப்பு எப்படி இருக்கு

    நான் திரைப்படத்தை எண்முறை ஒளி தகட்டில் பார்த்தேன் என்றால் புரிகிறதா :) :) :)

    ReplyDelete
  4. மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர இடத்துல ஆண்டோ பீட்டருக்கு என்ன வேலை? இந்த இடத்துல கன்வர்ட்டர் எல்லாம் எதுக்கு

    -----

    மாநகராட்சி பள்ளிக்கூட்டத்துல கண்டமான கணிணிகளா? கொடுமை......

    ரிலயன்சுகாரன் கணிணி உற்பத்தில நுழைஞ்சாதான் நமக்கெல்லாம் பத்தாயிரம் ரேஞ்சுல நமக்கெல்லாம் கிடைக்கும்...

    நாகராஜன், அடுத்த தரம் இது போல பயிற்சி குடுக்கறப்ப,

    //சிறிது font, encoding, 8-bit, 16-bit, ansi, unicode, keyboard driver போன்ற விஷயங்கள் மேயப்பட்டன//

    போன்ற விஷயங்களை எல்லாம் தவிர்த்துடுங்க.

    இந்த பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. இதையே புதிதாக ஆரம்பித்துள்ள எனது வலைப்பதிவின் முதல் பதிவாக்கி விட்டேன்.

    “டிஜிட்டல் பிளவு” எனப் பெயரிட்ட உங்களுக்கு chola sheraton பக்கத்துலேயே ஒரு டிஜிட்டல் ஹோர்டிங் வைக்கலாம்னு இருக்கேன் ;-)

    ReplyDelete
  6. Some weeks ago ELCOT had advertised that it would supply cheap laptop to students in tamil nadu. Should they not provide good
    desktops to schools first and should they not go for Linux as the
    Kerala govt. had done.If they can go for tender and get color TVs at cheap rates, why not do the same
    for all govt. schools in tamil nadu.

    “டிஜிட்டல் பிளவு” எனப் பெயரிட்ட உங்களுக்கு chola sheraton பக்கத்துலேயே ஒரு டிஜிட்டல் ஹோர்டிங் வைக்கலாம்னு இருக்கேன் ;-)

    No, Idly vadai told me that Badri wanted 10 tickets for Dasavatharam; so that would
    suffice for now :)

    ReplyDelete
  7. எல்காட் தற்பொழுது லினக்ஸ் இயங்கு தளம் உள்ள கணிப்பொறிகளைத்தான் வழங்குகிறார்கள்.

    கணினியை வாங்கியபின் அதில் திருட்டு (பைரேட்டட்) விண்டோஸை ஏற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பது தான் வேதனை !!!

    ReplyDelete