Wednesday, July 30, 2008

தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா?

இன்று தி ஹிந்துவில் வந்த செய்தி: It’s Tamil medium, yet learning proves a challenge

தமிழில் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி இருப்பதால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி. கூடவே ஆங்கிலத்தில் இந்த diglossia இல்லாதிருப்பதால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருப்பதில்லை என்கிறது.

இது முழுத் தவறான வாதம்.

ஆங்கிலத்தில் ஒரு இழவும் புரிந்துகொள்ளாமல்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழில் பேச்சு வழக்கில் “புவி ஈர்ப்பு சக்தி” என்பதை நாம் பயன்படுத்துவதில்லை என்கிறார் ஒரு மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர். எதைச் சொல்லி அழ? (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம்? புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா? அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே? புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்? சரி, Gravity என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது? அப்படியே தெள்ளத் தெளிவாகவா இது புரிகிறது? இதன் வேர் வார்த்தை என்ன என்று ஆங்கிலத்தில் பேசும் எத்தனை பேருக்குத் தெரியும்? இதில் ஈர்ப்பு என்ற பொருள் எங்கிருந்து வருகிறது? பூமி என்பது (அல்லது பிற கோள் அல்லது பெரும் பொருள்) எங்கே உள்ளது? இழுவிசை அல்லது சக்தி எங்கே உள்ளது?

மற்றுமொரு ஆசிரியர் சொல்கிறார்: “Children find it hard not only while learning subjects such as science. Even in Tamil itself, they have to constantly learn very complex terms. Without any choice, they resort to memorising without any understanding.”

ஆசிரியர்கள் விளக்கிச் சொல்லும்போதுதானே கடினமான சொற்களின் பொருள் புரியும். பொருள் விளங்குமாறு சொல்லத் தெரியாது, மொழியையே குற்றம் சொல்கிறாரே இந்த ஆசிரியர்?

அடிப்படைப் பிரச்னை அதுவல்ல. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்கள் படிக்கச் சகிக்காமல் கேவலமாக உள்ளன. மகா மோசமான மொழியில் படிக்கும் எந்த மாணவனுக்கும் ஒரு இழவும் மண்டையில் ஏறுவதில்லை. அத்துடன், நம் ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் பிரமாதமாக வேறு உள்ளதா? அதில் நமது பரீட்சை முறையையும் சேர்ப்போம். இவையனைத்தும் சேர்ந்த கலவையில் சிறு குழந்தைகள் திக்குமுக்காடிப் போகின்றன.

மாற்றம், புத்தகங்களிலிருந்தும் கற்பிக்கும் முறையிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டும்.

அதற்கு இணைய வஸ்தாதுகள் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, நல்ல, எளிமையான தமிழில், அறிவியலையும் கணிதத்தையும் எழுதவேண்டும். வரலாற்றையும் பிற பாடங்களையும்கூடத்தான்.

வெகுஜன இதழ் மொழியில் (ஆனால் தேவையில்லாத ஆங்கிலச் சொற்களை விலக்கி), மாணவர்கள் விரும்பிப் படிக்கும் மொழியில் புத்தகங்கள் கிடைத்தால் அதுவே நல்ல மாற்றமாக அமையும்.

24 comments:

  1. Education system in Tamilnadu demands one to just memorize as it is given in the textbook and vomit in the exams. Even XII Maths exams only contain Qs which are replicated from the textbook without any change in the numerical values. Maths is a subject which is independent of the medium in which it is taught. I personally feel that Maths must be taught in one's mother tongue with a passing mention of equivalent terms in English. Other subjects are also can be taught either in English or in Tamil if the goal of the teacher is to make students understand the subject thoroughly and student also does not mind about marks in the exam but concentrates more on in-depth knowledge. Marks would surely But this is highly impractical given the entrance-less situation in Tamilnadu. Everyone wants to follow the mugup-and-vomit routine and get away. No one actually cares which medium they study as marks (not the understanding) is the main criterion. :)

    ReplyDelete
  2. You hit the nail on the head. Poorly written textbooks and unskilled teachers are to be blamed for this sorry scenario.

    ReplyDelete
  3. தமிழ் புழக்கம் குன்றி வருவதற்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. ஏற்கனவே குழம்பியுள்ள மக்களை மேலும் தடுமாறச் செய்கின்றன. பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் போதிய தெளிவுணர்ச்சி தேவைப் படுகிறது.

    தலைமைப் பண்புகளுக்கும் சிந்தைனத் திறன்களுக்கும் ஆராயும் ஆற்றலுக்கும் தாய்மொழி வழிக் கல்வியே வித்திடும். இது வரலாற்று உண்மை.

    ReplyDelete
  4. தமிழ் வழியோ அல்லது ஆங்கில வழியோ, கூடவே நமது தேர்வு முறையையும் மாற்ற வேண்டும்.

    அனைத்து பள்ளிகளுமே, மாணவர்களுக்கு தேர்வு நோக்கோடுதான் பாடம் நடத்துகிறது. சிறப்பு வகுப்புகள், சிறப்பு தேர்வுகள், பழைய வினாத்தாள்கள், முக்கியமான வினாக்கள் என்று முழுக்க முழுக்க அதிக மதிப்பெண் பெறவே பயிற்சி அளிக்கிறது, புரிந்துகொண்டு படிக்க அல்ல. வேறு வழியுமில்லை.

    இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட 'செயல்வழிக் கற்றல்' முறைக்கும் ஆசிரியர்களிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தகுந்த முன்னேற்பாடுகள், தொலைநோக்கு இல்லாமல் அவசரகோலத்தில் நடைமுறை படுத்தப் பட்டதால், இம்முறை தோல்வியடைந்து, கிடப்பில் போடப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

    ReplyDelete
  5. வணக்கம் பத்ரி , நல்ல பதிவு...
    நமது இந்திய பாடத்திட்டம் ஆதி முதல் அந்தம் வரை பல நிலைகளில் பிழைகளைகொண்டவை என்பது என் நம்பிக்கை. நான் நாகையில் நேரு பள்ளியில் படித்தவன் ..பிறகு சூழ்நிலை காரணமாக டிப்ளோமா படித்துவிட்டு இப்பொழுது பகுதி நேரப் பொறியியல் பயில்கிறேன்.என்னுடன்
    பள்ளியில் பயின்ற அனேக நண்பர்கள் கணினி துறையில் தான் இர்ருகின்றனர் .அடிப்படையில் ஆங்கிலவழி கல்வி என்பதால் அவர்களுடைய வளர்ச்சி அதிபயங்கரம்.ஆனால் கணினி அல்லாத துறைகளுலவர்கள் சாதாரண நிலைகளையே எட்டி உள்ளனர்.


    என்னை கேட்டால் அடிப்படை அறிவியல் மற்றும் கணிதவியலில்
    புரிதல் இல்லை என்பதே இதற்கான காரணம் என்று சொல்வேன்:( . ஆங்கிலத்தில் கூட தக திமி தா
    தான். ஆனால் என் தந்தை வேலை பார்க்கும் பள்ளியில் அவ்வாறு இல்லை , [ நாகூர் தேசிய பள்ளி.
    நீங்கள் நாகை தேசிய பள்ளியில் படித்தீர்கள் அல்லவா :) ]..பலர் நல்ல துறைகளுக்கு சென்றுள்ளனர்.
    சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன் , என் தந்தையை பார்பதிர்க்காக வந்திருந்தார் இஸ்ரோவில் வேலை
    பார்பதாக சொன்னார் ...


    என் நண்பன் MIETயில் ME ஆடோமொபில் பயில்கிறான்...போன முறை சந்தித்த பொழுது இவ்வாறு கூறினான் "இப்பலாம் எவன் டா ஒழுங்கா சொல்லிகொடுக்கிறான்...நாப்பது பேஜ் எடுப்பானுங்க அதிலுருந்து தான் கொஸ்டின் வரும்" . அனேக
    மாணவர்கள் (me too) அந்த செம் கொஸ்டின்ஸ் பற்றி தான் யோசிக்கிறார்கள்.ஆனால் கம்பனிகளின்
    எதிர்பார்ப்போ அதிகம். Miet லேயே இந்த கதி என்றால் மற்ற சிறு கல்லூரிகளில் ..அதனால்
    அனைத்தும் இப்படித்தான் இர்ருகிறது என்று இல்லை . பெரிய கல்லூரிகளில் படிப்பவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அதிகம் கை கொடுப்பவர்கள்.அந்த நிலை மாறி அனைத்து மக்களும் கை கொடுக்க வேண்டும்.



    2020 ல் இந்தியா வல்லரசாக மாறலாம் ஆனால் கல்வித்தறன்? . மற்ற நாடுகளில் அவர்கள் மொழியில் உயர்க்கல்வி பயில்கிறார்கள் ..நாமோ ஹும்.......ஒரு வேலை தமிழன்
    ( இந்தியன் ) தனுடைய தொழில்நுட்ப்ப விசயங்களை ஓலைச்சுவடியில் எழுத முடியாமல் போனது இந்த நிலைக்கு ஒரு காரணமாக கூட இருக்கலாம் !! இதை பற்றி ஆராய்ச்சி செய்ய மக்கள்
    டிவிக்கு கூட எழுதி போடலாம் (இப்ப தான் நல்லா காசு வருதே :) ஹி ஹி )

    //அதற்கு இணைய வஸ்தாதுகள் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, நல்ல, எளிமையான தமிழில்,

    அறிவியலையும் கணிதத்தையும் எழுதவேண்டும். வரலாற்றையும் பிற பாடங்களையும்கூடத்தான்.//

    விஞ்ஞானக் குருவிகள் ,விஞ்ஞானி ஜெயபாரதன்.இவர்கள் இருவரும்
    விஞ்ஞானத்துக்கென்றே பதிவுகளை தனியா வைச்சிருக்காங்க.இதைப்போல் அந்த அந்த துறை சார்ந்தவர்கள் மொழி மாற்றம் செய்து பதிவிடலாம் .நீங்க கூட Thermodynamics போன்ற பாடங்களை மொழிபெயர்த்து பதிவுகள் போடலாமே :)

    ReplyDelete
  6. பத்ரி,
    தாய்மொழிவழி கல்வியே சிறந்தது. நான் பனிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்றேன். அப்பொழுது என்னுடைய புரிதல் மிக நன்றாக இருந்தது. நிறைய யோசிக்க முடிந்தது. பொறியியல் கல்லுரிக்கு சென்றவுடன், எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது. நாளடைவில் பழகிவிட்டது என்றாலும், இன்று வரை எனது 'புரிதல்' சற்று கடினமாகவே உள்ளது.
    ஆனாலும் இரண்டாண்டுகள் கணிபொறி துறையில் எவ்வித மொழி பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்துவிட்டு, இப்பொழுது மேல் படிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறேன். இப்பொழுதுகூட, சுஜாதாவின் தமிழ் அறிவியல் கட்டுரைகள் ஆங்கில புத்த்தகங்களை விட மிக தெளிவாக புரிய வைக்கிறது.
    ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இன்று வரை தாய் மொழி வாயிலாகவே பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் அனைத்து துறைகளிலும் சிறந்து தான் விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டும் தான் ஆங்கில மோகம் தலை விரித்து ஆடுகிறது.

    ReplyDelete
  7. பத்ரி

    கூகிள் ட்ரன்ச்ளிடேரடின் மூலம் எழுதுறேன்.

    வணக்கம். 1994 இல் இருந்து, நான் தமிழ் நன்றாக படிக்கிறேன்.
    மனைவி தாய்மொழி தமிழ். வீட்டிலே தமிழ் தான் 1998 முதல். (காதல் செய்யும் பொது 1989 டு 1991, அவளிடம் தமிழ் கற்றேன். )

    முதல் முன்று மாதம் தமிழ் கட்டாயம் கஷ்டம். பிறகு ஈஸி தான்.

    பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது ஸ்டேட் போர்டு புத்தகங்கள் நல்ல முறையில் உள்ளது. சயின்ஸ் மற்றும் மாத்ஸ் ஆங்கிலம் விட தமிழ் முறை சுலபமாக புரியும்.

    IIT இல் என்னோடு படித்த சங்கமேஸ்வரன் பிளஸ் டூ படித்தது தமிழில். இப்போது ஒரு அமெரிக்கா கம்பெனியில் டாப் மேன்.

    நீங்கள் தமிழில் அல்லது வழக்கு மொழியில் தான் யோசிப்பீர்கள். சிலருக்கு தாய் மொழி, உதாரணம் தெலுங்கு மக்கள். அதனால் தன் அவர்கள் பேச்சிலும் அந்தே வாடை. முன்னேற்றம் அவர்கள் கையில் செய்யும் தொழிலில்.

    எனக்கு தாய்மொழி மராட்டி. பிறந்து வளர்த்து பெங்காலியில். எனக்கு தெலுங்கும் மலையாளமும் தெரியும். உருது படிக்கிறேன் இப்போது.

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

    என் பிள்ளைகள் தமிழர்களாக தான் வளர்க்கிறாள் என் மனைவி. பள்ளியில் ஹிந்தி இரண்டாம் மொழி. நாடோடி வாழ்க்கைக்கு அரசு மற்றும் சாப்ட்வேர் காரர்களுக்கு ஆங்கிலம் முக்கியம், பிள்ளைகள் ஹிந்தி தான் படிக்க வேண்டும். தாய் மொழி இருந்தால் (பெங்களூரில் என் பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் என்றால் அடி உதை தான். இதற்காகவே ஹோசூரில் வீடு பார்க்கலாம் என்கிறாள் மனைவி.).

    எனக்கு என்னமோ நீங்கள் தாய் மொழியில் தான் படித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    இப்படிக்கு
    ரமேஷ்

    ReplyDelete
  8. நான் +2 வரை தமிழ்வழிக் கல்வியில்தான் பயின்றேன்..பொறியியல் படிக்கும்போது சில கடினமான பாடப்பகுதியை விளக்கும் நேரங்களில் பேராசிரியர்களே தமிழ் மொழிக்குத் தாவிவிடுவதுண்டு..நாம் சிந்திப்பது எல்லாம் தமிழில்தான் அப்படியிருக்கும்போது தமிழில் படிப்பது கஷ்டம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதே போல தமிழ்வழிக்கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறும்போது ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதும் ஒரு பயமுறுத்தும் செயலே.

    ReplyDelete
  9. பத்ரி, நான் பன்னிரெண்டாம் வகுப்பு 1998ல் முடித்தேன். பாடப் புத்தகங்களில் எந்தக் குறையும் இல்லை. இப்பொழுது பாழ்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. ஆசிரியர்களின் திறனின்மையும் உருப்போடச்சொல்லும் கல்வி முறையும்தான் காரணங்கள்.

    வீதிக்கு வீதி நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் நிலைமை நிரம்ப மோசமானது. 'புரிதல்' என்ற சொல்லையே அவர்களுக்கு நாம் உணர்த்த முடியாது.

    ReplyDelete
  10. பதிவை விடவும் கமண்ட்டுகள் சுவாரசியமாக இருக்கின்றன. :-)

    ReplyDelete
  11. சில கேள்விகள்: நாங்கள் தமிழில் படித்தோம் நன்றாக இருக்கிறோம் என்று 9/10 பின்னூட்டங்கள் இருக்கின்றது. அதுவும் ஐ.ஐ.டி யில் கலக்கியவர்கள் கூறியுள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    அப்புறம் ஏன் அந்த கராமத்து பையன் தற்கொலை செய்து கொண்டான் (விஜய் டி.வி.யில் பார்த்தது). 12ஆம் வகுப்போடு ஒரு மொழி வழிக்கல்வி முடிந்து மற்றோரு மொழி கல்விக்கு தாவுவது கடினமான ஒன்றே. இந்த மாற்றங்களை தினசரி வாழ்வில் சராசரி மனிதனால் இயல்பாக ஏற்கொள்ள இயலுமா? ஏற்கனவே மண்டை உடையும் கல்விக்கட்டணங்கள் இதில் பிள்ளைக்கு திடீர் என்று ஆங்கிலம் வராது என்று அறிந்தால் அந்த சராசரிக் குடும்பத்தின் நிலை என்ன?

    என் ஓட்டு சோத்துக் கட்சிக்கு பின்பு தான் கொள்கை , எளிமை எல்லாம்.

    ReplyDelete
  12. முதலில் நமது தேர்வு முறையை மாற்ற வேண்டும்.

    சென்ற வருடம் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு தேவையில்லை என்று ஒரு புண்ணியவான் கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்தது யார் தெரியுமா

    பெற்றோர்கள் !!

    தலையை எங்கு போய் முட்டிக்கொள்வது :( :(

    ReplyDelete
  13. //தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி.//

    இது மட்டும் உண்மை. ஆனால் கூறப்பட்ட காரணங்கள் தவறு.

    மோசமான புத்தகங்கள், மற்றும் கேவலமான தேர்வு முறை தான் காரணம்.
    --
    //“பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்? //

    :) :) :)

    --
    //Even in Tamil itself, they have to constantly learn very complex terms. Without any choice, they resort to memorising without any understanding.”//
    அடப்பாவி %^&**(&*&*&#$ இதற்கு மேல் வாயில் (அல்லது விரலில் :) :) ) வந்த வார்த்தைகளை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்பதான் நானே தணிக்கை செய்து விட்டேன்

    தமிழ் பாடம் புரியவில்லை என்றால் அதை பிரஞ்சு மொழியிலா நடத்த வேண்டும்.

    இதற்கு (தமிழ் பாடம் புரியவில்லை ) காரணம்

    1. மோசமான பாடத்திட்டம்
    2. மோசமான பாடநூல்
    3. நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்
    4. கேவலமான தேர்வு முறை

    தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் :) :)
    --

    ReplyDelete
  14. I did all my schooling in tamil medium.in +2 i had to shift to english medium as we moved to another state.i had no problem
    in understanding science in +2 because i was comfortable in
    tamil and english. i was exposed
    to books and magazines in english at an early age. although we spoke
    only in tamil at home, the exposure beyond text books was crucial.That gave me the confidence to face the world and
    travel alone when i was not even
    8.

    Unfortunately schools do not
    focus on personality development
    and in instilling self-confidence
    among students.Often lack of confidence and soft skills, rather
    than lack of knowledge becomes
    a barrier to students.

    my uncles and aunt did schooling in tamil medium only. all of them switched over to english medium only when they joined PUC. it all depends on teachers, text books and the learning milieu in which students grow. A good teacher can make the students feel confident and nuture the spirit of learning in them. But when rote learning becomes important teaching and learning in the real sense become secondary.

    ReplyDelete
  15. முக்கியமான கட்டுரையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி, பத்ரி.

    **
    ஈராயிரம் நூற்றாண்டாக இந்த இரு வழக்குத் தமிழ் மொழியில் தானே கற்றோம்? தமிழில் இப்படி இரு வழக்கு இருப்பது சுமை இல்லை. தமிழின் தொடர்ச்சிக்கு இதுவே ஒரு முக்கிய காரணம்.

    பாடப்புத்தகத் தமிழில் உள்ள பாதி சொற்களாவது பேச்சு வழக்கில் உண்டு.

    (மிக உயர் தட்டுப் பள்ளிகள் தவிர்த்து) ஆங்கில வழியில் பயிலும் எத்தனை சொற்களை சிறுவர்கள் வீட்டிலும் நண்பர்களுடனும் பேசுகிறார்கள்?

    இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் காட்டி தமிழ் வழி கற்போரிடம் குழப்பத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் தெரிந்தே உருவாக்கும் விசமத்தனமான கருத்துகள்.

    **

    mrcritic - உங்கள் யோசனை அருமை. சிறு வயதில் இருந்தே முழுக்க ஆங்கிலக் கல்வி கொடுத்தால் யாரும் கல்லூரியில் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் கல்லூரியில் நுழையும் அளவுக்கே பாதி பேர் தேறி வர மாட்டார்கள். பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஊர்ப்புற மாணவர்கள் தவறுகிறார்கள் தெரியுமா?

    ReplyDelete
  16. //அப்புறம் ஏன் அந்த கராமத்து பையன் தற்கொலை செய்து கொண்டான் (விஜய் டி.வி.யில் பார்த்தது). 12ஆம் வகுப்போடு ஒரு மொழி வழிக்கல்வி முடிந்து மற்றோரு மொழி கல்விக்கு தாவுவது கடினமான ஒன்றே. இந்த மாற்றங்களை தினசரி வாழ்வில் சராசரி மனிதனால் இயல்பாக ஏற்கொள்ள இயலுமா? ஏற்கனவே மண்டை உடையும் கல்விக்கட்டணங்கள் இதில் பிள்ளைக்கு திடீர் என்று ஆங்கிலம் வராது என்று அறிந்தால் அந்த சராசரிக் குடும்பத்தின் நிலை என்ன?//

    ஐயா,

    கல்லூரியில் கேரும் மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)என்று பொருள் பட நீங்கள் கூறுவதின் எனக்கு உடன்பாடு கிடையாது

    அதற்கு பல சமூக காரணங்கள், (தாழ்வு மனப்பாண்மை போன்றவை) முக்கியம்

    1. ஐ.ஐ.டியில் சேருபவர்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள் கூட தற்கொலை செய்கிறார்கள்

    2. இங்கிருந்து உருசியா சென்று மருத்துவம் கற்கும் அனைவரும் தற்கொலை செய்வதில்லை

    புரிகிறதா

    ReplyDelete
  17. பத்ரி மற்றும் பெரும்பாலானோர் (பின்னூட்டங்களில்) இங்கு சொல்லிய கருத்துக்களுடன் உடன்படுகிறேன். குறிப்பாக இரமேஷின் மொழி முயற்சிகள் பாராட்டுக்குரியன. அவரது பின்னூட்டம் ஆங்கிலவழிக் கல்வி மோகம் கொண்டுள்ளவர்களுக்கான நல்ல பதில்.

    ஒரு முக்கியமான பிரச்னையை எந்த வித ஆதாரங்கள், புள்ளி விவரங்கள், அலசல்கள் இல்லாமல், ஒருசில மேம்போக்கான செவிவழிக் கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இப்படி தத்துபித்தாக ஒரு செய்தியை எழுதும் பத்திரிகையாளர்களே அறிவிலாதவர்கள். அறிவியல் பாடங்களை கற்றுக் கொடுக்கத் தரமான நூல்களும், உருப்படியான ஆசிரியர்களும் இல்லாத குறையைத் திரித்து மொழியின் குறையாக மேம்போக்காக எழுதிடும் இப்பத்திரிகைகளுக்கிருக்கிற அக்கறையை என்ன சொல்வது?

    இதே இந்துப் பத்திரிகைக்குச் சென்ற மாதம் தமிழகம் வந்திருந்த போது ஒரு கடிதம் அனுப்பினேன். அது கிடைத்ததோ இல்லையோ என்று சந்தேகமிருந்த படியால் சில தினங்களுக்கு முன்பு மறுபடியும் அனுப்பியுள்ளேன். வெளியிடுவார்களா எனத் தெரியாது. தமிழகத்துக்குள் செல்லும் விமானங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை ஏன் தமிழில் சொல்வதில்லை என்று (கடிதத்தை கீழே கொடுத்துள்ளேன்). மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் அத்தியாவசியமான அறிவிப்புகளைச் செய்ய முன் வராத அரசுகளையும், வணிக நிறுவனங்களைப் பற்றியும் இப்பத்திரிகைகளுக்கு என்றாவது அக்கறையிருந்திருக்கிறதா?

    பள்ளியிறுதி ஆண்டு வரை நான் தமிழில் படித்த அறிவியல் கோட்பாடுகள் மட்டுமே (கல்லூரியில் கற்ற ஆங்கிலக் கோட்பாடுகளை விட) என் மனதில் அவற்றின் உண்மையான பொருளோடு இன்றளவும் தங்கியுள்ளன. கல்லூரிக்குச் சென்று சேர்ந்த பொழுதில் சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஆங்கிலவழி கற்ற மாணவர்கள் அனைவரைக் காட்டிலும், என்னால் அறிவியல் பாடங்களில் சிறப்பாகச் செய்ய முடிந்தது. புவியீர்ப்பு சக்தியும், சவ்வூடு பரவலும், அவற்றின் காரணப் பெயர்கள் மூலம் மனதில் நின்றனவே தவிர gravity, osmosis என்று மனனம் செய்த ஆங்கிலச் சொற்கள் மூலமாக அல்ல. ஆனால் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். கிராமப் புறப் பள்ளிகளில் பயின்றாலும் அக்கால கட்டத்தில் அறிவியலையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். இன்று பாலர் பருவத்திலிருந்து ஆங்கிலம் கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உருப்படியாக ஒரு கடிதம் எழுத வரவில்லை என்பதே வெட்கக் கேடு. எனவே புற்றீசல்கள் போலத் தோன்றியுள்ள ஆங்கிலப் பள்ளிகளின் மூலம் இங்கு சீரழிந்திருப்பது கல்வியின் தரமேயொழிய, தமிழ் மொழி வழி அறிவியலல்ல.

    (பத்ரி - கீழே உள்ள கடிதம் இந்த உரையாடலைத் திசைதிருப்பக் கூடும் என்று கருதினால் வெட்டி விடவும்.)

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    [My Letter to The Hindu:

    Airline safety and the use of local languages

    I have been living in the U.S. for the past 15 years and am currently in India on a three week visit.
    On June 17, 2008, I was traveling from Chennai to Coimbatore by Jet Airways Flight 9W-3533 leaving Chennai at 19.10 hrs. Since the flight started 10 minutes late, it missed its scheduled take-off time and waited in the runway for about 30 minutes thanks to the busy air traffic. Two passengers who were seated across the aisle (Seats 11 D & E) were still talking on their cellphones and did not have their seatbelt on.

    I and another passenger seated next to me had to ask them to stop using the cellphone when the flight was taking off. Having seen passengers religiously following the flight announcements in the West, I was wondering why few passengers do not even pay attention to such basic safety requirements.

    Later when I was following few in-flight announcements, the reasons struck me. All the announcements were made only in Hindi and English while more than 90 percent of the passengers may be Tamil speaking and 25-30 percent of the passengers (including the above two) may know only Tamil, if my observation is not too wrong.

    While thinking about this, I remembered the feed back sheets that I filled in Jet Airlines in the previous years whenever I flew to Chennai either from Mumbai or Bangalore. While commending the excellent services (much more than any International Airlines) of Jet Airlines, I wrote a humble request that Tamil (or another local language in a different city) must be included in flights to Chennai because my mother does not understand English. However the fact that a flight flying within Tamil Nadu does not use Tamil made me feel angry.

    I would not feel so if it were a flight operated by the Government of India because languages other than Hindi and English do not exist as far as I learn from my experience with the Indian government. But the fact that even the corporate sector seems to neglect the basic requirements of its customers not only shows the arrogance of the Hindi-speaking elite in these companies but also reflects the selfishness and inability of the English-speaking elite among the Tamils.

    I have traveled in almost all the major international carriers to visit India and they all provide services to Indians in (Indian languages including Tamil) in their respective travel segments to India. This is done in spite of the fact that Indians traveling internationally are expected to understand English. That is the basic courtesy one would expect from the airline companies as a customer. Here it also involves the very safety of the flight too as I have pointed out in the case of two passengers above. ]

    ReplyDelete
  18. The reporter of the article may be from the group of English medium elite. Understanding of Tamil language, literature and usage in day to day life are essential to make expert opinions in the media. Knowledge is power; it may come from any language. An M.A., Tamil, written I.A.S in Tamil excels in performance than others. Like the anonymous' comment
    "Unfortunately schools do not
    focus on personality development
    and in instilling self-confidence
    among students."

    English language teachers are responsible to teach English language to the students of Tamil medium to the appropriate level. Mostly English teachers give attention to the students learning in the English medium than the Tamil medium students. If the students learning in Tamil medium acquires effective spoken and written English, they may excel the others in understanding and performance.

    It is a subject to discuss to find appropriate solutions beyond political affiliations

    NanRi
    nanjil A Peter

    ReplyDelete
  19. //mrcritic - உங்கள் யோசனை அருமை. சிறு வயதில் இருந்தே முழுக்க ஆங்கிலக் கல்வி கொடுத்தால் யாரும் கல்லூரியில் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் கல்லூரியில் நுழையும் அளவுக்கே பாதி பேர் தேறி வர மாட்டார்கள். பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஊர்ப்புற மாணவர்கள் தவறுகிறார்கள் தெரியுமா?//

    ரவி - நான் யோசனைக் கூறவில்லை. கேள்வி தான் கேட்கிறேன். ஆங்கிலத்தில் தவறுகிறார்கள் வாதம் பிதற்றல்.

    புருனோ - {{மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)}} இதே வார்த்தைகளைத் தான் அவன் தந்தை தாயார் ஊர் பெரியவர் என்று அனைவரும் மீண்டும் மீண்டும் கூறினர் (விஜய் டி.வி.யில்).

    ReplyDelete
  20. வெளியிடுவார்களா எனத் தெரியாது.
    most probably they wont.letters to editor is not a column for discussing general, non-news related topics.such letters can be written as notes or articles for sunday magzine or open page column.

    ReplyDelete
  21. 2020 ல் இந்தியா வல்லரசாக மாறலாம் ஆனால் கல்வித்தறன்? . மற்ற நாடுகளில் அவர்கள் மொழியில் உயர்க்கல்வி பயில்கிறார்கள் ..நாமோ ஹும்.......ஒரு வேலை தமிழன்
    ( இந்தியன் ) தனுடைய தொழில்நுட்ப்ப விசயங்களை ஓலைச்சுவடியில் எழுத முடியாமல் போனது இந்த நிலைக்கு ஒரு காரணமாக கூட இருக்கலாம் !! இதை பற்றி ஆராய்ச்சி செய்ய மக்கள்
    டிவிக்கு கூட எழுதி போடலாம் (இப்ப தான் நல்லா காசு வருதே :) ஹி ஹி )////////

    சற்றேறக்குறைய இதே கருத்தைத்தான் "விஜய்காந்த்" என்னும் தலைப்பில் விவாதித்து வருகிறோம்....விவாதம் விஜயகாந்தில் ஆரம்பித்து தமிழ்வழிக்கல்வியில் வந்து நிற்கிறது...உயர்கல்வியில் தமிழ்வழிக்கல்வி ஒன்றே நமது தமிழ்நாடு சிறக்க ஒரே வழி...இதை உரக்கச்சொல்லுவோம்!!!!!!!!

    ReplyDelete
  22. //புருனோ - {{மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)}} இதே வார்த்தைகளைத் தான் அவன் தந்தை தாயார் ஊர் பெரியவர் என்று அனைவரும் மீண்டும் மீண்டும் கூறினர் (விஜய் டி.வி.யில்).//

    அது அவர்கள் கூற்று. ஆனால் அது தவறாக இருக்கக்கூடாது என்று என்ன கட்டாயம். மகனை இழந்த துக்கத்தில் எதையும் தீர ஆராயும் நிலையில் அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

    ச்ரி, ஐ.ஐ.டியில் நடக்கும் தற்கொலைகளும் ஆங்கிலம் தெரியாததாலா ???

    அல்லது வேறு நாடுகளுக்கு செல்லும் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்களா ??

    --

    95 சதவித மருத்துவ வார்த்தைகளை லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் பயிலும் மருத்துவக்கல்லூரியில் முதல் வருடம் தற்கொலை எனக்கு தெரிந்து இல்லை.

    ReplyDelete
  23. என் ஊரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போது கவனித்தேன், அவர்கள் பல விஷயங்களை தவறாக படித்துக்கொண்டிருந்தனர். என்னடா இதை இப்படியல்லவா படிக்க வேண்டும் என கேட்டபோது நீங்கள் சொல்வது போல பதிலை எழுதினால் எங்கள் வாத்தியார் மதிப்பெண் போடமாட்டார் என்றனர். ஏன்டா உங்க வாத்தியார் மதிப்பெண் போடுவார் என்பதற்காக எப்படியடா தவறான ஒன்றை நீ தேர்வில் எழுதமுடியும், அப்படியே இப்போது உனக்கு மதிப்பெண் கிடைத்தாலும் பொதுத்தேர்வில் இது தவறு என்றல்லவா மதிப்பிடப்படும் என்று கேட்டேன் அவன் பேய் முழிமுழித்தானே ஒழிய தன் வாத்தியாரிடம் இது தவறாமே என்று கேட்கும் தைரியம் அவனுக்கில்லை!

    எங்கள் ஊர் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்களை சந்தித்தேன், அவர்கள் பேச்சிலிருந்து ஒன்றை புரிந்துகொண்டேன், இவர்கள் உருவாக்கப்போவது மாணவர்களை அல்ல சிந்தனைகள் அறவே அற்ற முட்டாள்களை!!!! இவர்களுக்கே அடிப்படை தத்துவங்கள் தெரியவில்லையே இவர்களது மாணவர்களுக்கு இவர்கள் என்ன கற்றுக்கொடுத்துவிட போகிறார்கள் என்று கண்ணீர் வடிக்காத குறையாகு வீட்டுக்கு வந்தேன் :-(

    ReplyDelete