Thursday, July 03, 2008

தாடி ராஜா

(From Grimms' Fairy Tales, King Grisly-Beard, abridged and retold by Badri)

ஒரு ராஜாவுக்கு அழகான ஒரு பெண். ஆனால் இளவரசி ரொம்பவே அகம்பாவக்காரி. அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வரும் இளவரசர்களை மூக்குடைத்து அனுப்புவதில் அவளுக்கு அலாதி ஆனந்தம்.

ஒரு நாள் ராஜா தன் பெண்ணுக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஏகப்பட்ட பேரரசர்கள், அரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீந்தார்கள் என்று பெரும் கூட்டம். இளவரசி ஒவ்வொருத்தராகப் பார்வையிட்டு வந்தாள். சற்றே குண்டாக இருந்த ஒருவரைப் பார்த்து, “உருளைக்கிழங்கு போண்டா மாதிரி” என்றாள். ஒல்லியாக நெட்டையாக இருந்தவரைப் பார்த்து “ஈர்க்குச்சி” என்றாள். குள்ளமாக இருந்தவரைப் பார்த்து “குள்ளக் கத்திரிக்காய்” என்றாள். வெளுத்த உடலாக இருந்தவரைப் பார்த்து “மைதா மாவு” என்றாள். இப்படி அவளது சாட்டை நாக்கிடம் மாட்டாத ஆளே கிடையாது. கொஞ்சம் நீண்ட தாடி வைத்திருந்த ஒருவரைப் பார்த்து, “தாடியப் பாரு, தரை துடைச்சுவிடற விளக்குமாறு மாதிரி இருக்கு” என்றாள்.

ராஜாவுக்கு தனது மகள் செய்தது பிடிக்கவேயில்லை. இவ்வளவு அகம்பாவக்காரிக்கு தண்டனை, கண்ணில்படும் முதல் பிச்சைக்காரனுக்கு இவளைக் கல்யாணம் செய்துவைக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்தார்.

அடுத்த நாள், பாட்டு பாடிப் பிச்சையெடுக்கும் ஒருவன் அரண்மனைக்கு வந்தான். பாட்டுப் பாடி பிச்சை கேட்டான். “உனது பாட்டை மெச்சினோம். பரிசாக எமது மகளை உனக்குக் கொடுக்கிறோம்” என்று சொல்லி, உடனே பாதிரியாரைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார். இளவரசி கெஞ்சிக் கதறினாள். “மன்னிச்சிடுங்கப்பா, இனி இப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்றாள். ஆனால் ராஜா, சொன்னது சொன்னதுதான் என்று சொல்லிவிட்டார்.

பாட்டுப் பிச்சை, அவளை கல்யாணம் செய்துகொண்டு தன் ஊருக்குக் கூட்டிச்சென்றான். வழியில் பெரும் காடு கண்ணில் பட்டது. யாருடையது என்று கேட்டாள் அவள். “எல்லாம் தாடிக்கார ராஜாவோடது” என்றால் பாட்டுப் பிச்சை. “அய்யோ, என்ன துரதிர்ஷ்டம்! நான் அந்த தாடிக்கார ராஜாவைக் கட்டிக்கொள்ள சம்மதித்திருந்தால் இத்தனையும் எனக்குத்தானே?” என்றாள் அவள். கொஞ்சம் தள்ளி சமவெளிகள் நிறையக் கண்ணில் பட்டன. “யாருடையவை இவை” என்று கேட்டாள் அவள். “எல்லாம் தாடிக்கார ராஜாவோடது. நீ மட்டும் அவனைக் கட்டிகிட்டிருந்தால் எல்லாம் உன்னோடதாகியிருக்கும்” என்றான் அவன். “என்ன துரதிர்ஷ்டம்” என்று நொந்துகொண்டாள் அவள்.

அடுத்து அற்புதமான நகர் ஒன்றை அடைந்தனர். யாருடையது என்று கேட்டாள். “எல்லாம் தாடிக்கார ராஜாவோடது. நீ மட்டும் அவனைக் கட்டிக்கிட்டிருந்தா எல்லாம் உன்னோடதாக்கும்” என்றான் அவன். “அய்யோ துரதிர்ஷ்டமே. நான் அவனைக் கட்டிக்கலையே” என்றாள் அவள். “உனக்கெதுக்கு இன்னொரு புருஷன்? ஏன், நான் போதாதா உனக்கு” என்றான் அவன் பதிலுக்கு.

கடைசியாக சிறு வீடு ஒன்றை அவர்கள் அடைந்தனர். “இந்த அழுக்கான குப்பை வீடு யாரோடது” என்று கேட்டாள் அவள். “நம்ம ரெண்டு பேரோட வீடுதான்” என்றான் அவன். “வேலைக்காரங்க எல்லாரும் எங்க” என்றாள் அவள். “வேலைக்காரங்க எதுக்கு? எல்லா வேலையையும் நாமதான் செய்யணும். சரி, சமையல் செய். சாப்பிடுவோம். ரொம்ப அயற்சியா இருக்கு” என்றான் அவன். முன்பின் விறகைப் பற்றவைக்கத் தெரியாத அவள் தடுமாறினாள். வேறு வழியின்றி அவனும் உதவிசெய்ய எதையோ சமைத்து எதையோ தின்றுவைத்தனர்.

இப்படி 2-3 நாள் ஓடியபிறகு, “இப்படியே வாழமுடியாது. நீ எதையாவது செய்ய கத்துக்கோ. கூடை முடைஞ்சு பணம் சம்பாதி. நான் காட்டுக்குப் போய் விறகு வெட்டிகிட்டு வரேன்” என்றான் அவன். கூடை முடையும்போது பிரம்பு கையை அழுத்திப் புண்ணாக்கியது. காட்டிலிருந்து வந்த கணவன், “இதெல்லாம் உனக்கு ஒத்துவராது என்றால் பஞ்சை நூலாக நூற்க ஆரம்பி” என்றான். நூல் நூற்கும்போது அது கைகளை வெட்டி ரத்தம் வரவைத்தது. “சே, எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கியே! சரி, சட்டி பானை விற்கும் வேலையாவது செய்” என்றான் அவன்.

அவளுக்கு நிறைய சட்டி பானைகளை வாங்கித் தந்தான். அழகான பெண்ணொருத்தி கடைத்தெருவில் சட்டி பானை விற்பதைக் கண்ட மக்கள், விலை விவரம் பற்றிக் கவலைப்படாமல் அவள் விற்பதை வாங்கிக்கொண்டனர். கொஞ்சம் பணம் கிடைத்தது. அடுத்து மேலும் கொஞ்சம் பானைகளை வாங்கிக்கொடுத்தான். ஆனால் இந்தமுறை கடையில் அவள் இருக்கும்போது குடிகார சிப்பாய் ஒருத்தன் குதிரையில் வந்து பானைகளை அடித்து நொறுக்கி உடைத்துவிட்டான்.

ஓவென்று அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தவளை கணவன் கடுமையாகத் திட்டினான். “மண் பானை விற்பவள் ஓரமாக உட்காரலாமா? நாலு கடைக்கு நடுவில் உட்கார்ந்தால்தானே பத்திரமாக இருக்கும் பானைகள்?” என்றான். “சரி. இது சரிப்படாது. உன்னை சமையல் வேலை செய்ய ஒரு வீட்டில் கொண்டுபோய் சேர்க்கிறேன்” என்றான்.

அடுத்த சில தினங்கள் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்ய இளவரசி போனாள். அங்கே அவர்கள் கொடுக்கும் மிச்சம் மீதி இறைச்சியைக் கொண்டே அவர்களது வீட்டில் சாப்பாடு நடந்தது. ஒரு நாள் அந்த ஊர் ராஜாவின் பெரிய பையனுக்குத் திருமணம் என்று பேசிக்கொண்டார்கள். ஊரே திருவிழாக் கோலம். இளவரசிக்கு ஒரே வெறுப்பு. தனக்கு நடக்கவேண்டிய திருமணம் இப்படித்தானே இருந்திருக்கவேண்டும் என்று நினைத்தாள்.

வேலைக்காரர்கள் அவளுக்கு நிறைய இறைச்சியைக் கொடுத்தார்கள். அதை அவள் கூடையில் போட்டுக்கொண்டு செல்லும்போது இளவரசன் ஒருவன் அங்கே வந்து அவளைத் தன்னுடன் நாட்டியம் ஆட அழைத்தான். அந்த இளவரசனைப் பார்த்ததும் அவன்தான் தாடிக்கார ராஜா என்று தெரிந்துவிட்டது. அவன் தன்னை அவமானப்படுத்தவே அவ்வாறு கூப்பிடுகிறான் என்று அவள் நினைத்து பயந்துபோனாள். ஆனால் அவன், அவளது கையைப் பிடித்து இழுத்தான். இழுத்த இழுப்பில், அவள் கையிலிருந்த கூடை கீழே விழுந்து, அதிலிருந்து இறைச்சித் துண்டுகள் சிதறின. அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

பூமி பிளந்து தன்னை விழுங்கிவிடாதா என்ற எண்ணத்துடன் அவள் அங்கிருந்து ஓடத்தொடங்கினாள். ஆனால் துரத்தி வந்த தாடி ராஜா அவளைப் பிடித்துவிட்டான். அவளிடம் சொன்னான், “பயப்படாதே. உன் கணவனான பாட்டுப் பிச்சைக்காரனும் நான்தான். குடிகார சிப்பாயாக வந்து சட்டி பானைகளை உடைத்தவனும் நான்தான். உன் அகம்பாவத்தை அழித்து உனக்கு நல்ல புத்தி கொடுக்கவே நான் அவ்வாறு செய்தேன். இன்று நமது திருமணத்தின்பொருட்டே இந்த விருந்து” என்றான்.

வேலைக்காரிகள் அழகான ஆடைகளைக் கொண்டுவந்து அவளுக்கு அணிவித்தனர். அனைவரும் பாட்டு, ஆட்டம், குடி, விருந்து என்று கொண்டாடினர்.

***

“இந்த ராஜா தசாவதாரம் கமல் போலவாப்பா?” என்றாள் என் பெண்.

5 comments:

  1. //“இந்த ராஜா தசாவதாரம் கமல் போலவாப்பா?” என்றாள் என் பெண்.//
    அபாரம்! :)
    அப்போ அந்த இளவரசி?

    ReplyDelete
  2. //அப்போ அந்த இளவரசி?//

    அசின்தான்!

    ReplyDelete
  3. ////“இந்த ராஜா தசாவதாரம் கமல் போலவாப்பா?” என்றாள் என் பெண்.////

    உங்களைப் போலவே உங்கள் பெண்ணுக்கும் டைமிங் சென்ஸ் அதிகம் :-)

    ReplyDelete
  4. //அழகான பெண்ணொருத்தி கடைத்தெருவில் சட்டி பானை விற்பதைக் கண்ட மக்கள், விலை விவரம் பற்றிக் கவலைப்படாமல் அவள் விற்பதை வாங்கிக்கொண்டனர்.//

    :) :) :)

    எல்லா ஊரிலும் இப்படித்தானா

    //“இந்த ராஜா தசாவதாரம் கமல் போலவாப்பா?” என்றாள் என் பெண்.//

    சிட்டிசன் அஜித் போல் :) :) :)

    ReplyDelete
  5. //
    இந்த ராஜா தசாவதாரம் கமல் போலவாப்பா?” என்றாள் என் பெண்
    //
    உங்க பொண்ணுக்குத் தெரிந்த இந்த சின்ன விசயம் கூட உலக நாயகர் கமலுக்குத் தெரிந்துத் தொலைக்கவில்லை. அவரே வில்லர், அவரே ஈரோ, அவரே ஈரோ வோட நண்பர் என்று எல்லா வேசத்தையும் கட்டிகிட்டு கிளைமாக்ஸில் சண்டை போட்டா, கடைசியில் எல்லாரும் ஒருவரே என்று வந்துத் தொலைக்குமே..?

    ReplyDelete