Monday, September 08, 2008

தேவன் 95-வது பிறந்த நாள்

இன்று தேவன் அறக்கட்டளை சார்பாக தேவனின் 95-வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. முழு விவரம் இங்கே. இதை சாக்காகக் கொண்டு, தேவனின் ஐந்து பெரும் நாவல்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடலாம் என்று முடிவுசெய்தோம். 95+5 = 100!

துப்பறியும் சாம்பு, தேவன் எழுதிய பல சிறு கதைகளின் தொகுப்பு. தேவனின் சில நாவல்கள் சற்றே சிறியவை. 250-280 பக்கங்கள் அல்லது குறைவு. அவற்றை முதலில் வெளியிட்டிருந்தோம். ராஜத்தின் மனோரதம் (224 பக்கங்கள்), கோமதியின் காதலன் (248), ஸ்ரீமான் சுதர்சனம் (288) ஆகியவையே இவை.

இப்போது வெளிவரும் புத்தகங்கள்: கல்யாணி (256 பக்கங்கள்), மிஸ்டர் வேதாந்தம் (672), ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (552), சி.ஐ.டி. சந்துரு (584), லக்ஷ்மி கடாட்சம் (880). எல்லாமே டெமி 1/8 அளவு.

500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் முன்னர் 2 அல்லது மூன்று தொகுதிகளாக அல்லயன்ஸ் மூலம் வந்திருந்தன. இந்த மறுபதிப்பில், இவை ஒவ்வொன்றையும் ஒரே புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.

ஒரு கல்கியோ, ஒரு சாண்டில்யனோ தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேவன் தெரியாதது அல்லது படிக்கப்படாதது துரதிர்ஷ்டமே. தேவன் ஆர்தர் ஹெய்லியைப் போன்ற எழுத்தாளர். ஹெய்லியின் 1965 வெளியீடான ஹோட்டல் முதல் அவருடைய அடுத்தடுத்த புத்தகங்கள் அந்தந்த தொழில்துறையைப் பற்றி அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின.

ஹோட்டல் (1965) - தங்கும் விடுதிகள் பற்றி
ஏர்போர்ட் (1968) - விமான நிலையம் பற்றி
வீல்ஸ் (1971) - தானியங்கி வண்டிகள் துறை பற்றி
தி மனிசேஞ்சர்ஸ் (1975) - வங்கித் துறை பற்றி
ஓவர்லோட் (1979) - மின் உற்பத்தி நிறுவனங்கள் பற்றி
ஸ்ட்ராங் மெடிசின் (1984) - மருந்து உற்பத்தித் துறை பற்றி

இவைதான் நான் படித்தவை. தி ஈவினிங் நியூஸ் (1990) - செய்தி வாசிப்பாளர்களைப் பற்றி, டிடெக்டிவ் (1997) - துப்புத் துலக்குதல் துறை பற்றி என்ற இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை.

ஓவர்லோட்தான் நான் முதலில் படித்த ஹெய்லியின் புத்தகம். அப்போது நான் ஐஐடி மாணவனாக இருந்தேன். ஹாஸ்டல் நூலகத்தில் எடுத்துப் படித்தது. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலேஸ், சிட்னி ஷெல்டன் என்ற கட்டத்திலிருந்து ஒரு கட்டம் தாண்டி, பல்வேறு தொழில்துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஹெய்லியின் நாயகர்கள் உதவினார்கள்.

தேவனின் கதைகளில் நான் முதலில் படித்தது மிஸ்டர் வேதாந்தம். இரண்டு தொகுதிகளையும் (அல்லயன்ஸ்) என் பள்ளி நண்பன் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நான் இரவல் வாங்கிய அந்தப் புத்தகத்தை இதுவரை திருப்பித் தரவில்லை! அட்டை கிழிந்துபோனாலும் புத்தகங்கள் இன்னும் உயிருடன் வீட்டில் இருக்கின்றன. இப்போது எங்களது பதிப்பிலிருந்தே ஒரு பிரதியை அவனுக்குத் தரவேண்டும்!

தேவனின் களம் ஹெய்லியின் களத்தைப் போல் அவ்வளவு பெரிதானதல்ல. அவ்வளவு ஆழமானதும், முழு விவரங்களை உள்ளடக்கியதும் அல்ல. ஆனாலும் கீழ்க்கண்ட நாவல்கள் அந்தந்தத் துறைகளைப் பற்றிய விரிவான விவரங்களைக் கொடுத்துவிடும்.

மிஸ்டர் வேதாந்தம் (எழுத்துத் துறை)
ஸ்ரீமான் சுதர்சனம் (ஆஃபீஸ் கிளர்க்)
ராஜத்தின் மனோரதம் (வீடு கட்டுதல்)
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (நீதிமன்ற வழக்கு விவகாரம்)
சி.ஐ.டி. சந்துரு (துப்பறிதல்)

இத்தனைக்கும் தேவன் இவற்றை 1940களிலும் 1950களிலும் எழுதியிருந்தார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால், ஹெய்லியைப் போன்றே விவரமாக மேற்கண்ட துறைகளை, அல்லது அதற்கும் மேற்பட்ட துறைகளையோ தொட்டு எழுதியிருக்கலாம்.

3 comments:

  1. பத்ரி

    விகடனில் வந்த தேவனின் பயணக் கட்டுரையான ஆறு நாடுகளில் அறுபது நாட்கள் படங்களுடன் மீண்டும் பதிப்பிக்க முடியுமா என்று கொஞ்சம் பாருங்கள். அருமையான பயணத் தொடர் அது. 1953ல் வந்தது. என்னிடம் இருந்த பைண்டு வால்யூமை அநியாயமாகத் தொலைத்து விட்டேன்.

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  2. We love Devan's books, we had collections for books(binding).

    Keep your good work. All the best

    Regards
    VS Balajee

    ReplyDelete
  3. That was a good function on September 8 at Sivakami Pethachi Auditorium. The play reading was a great idea. Kudos to you and Charukesi. I have posted my views at http://rajirules.blogspot.com/2008/09/book-release-event-and-play-reading.html
    Do take a look.

    ReplyDelete