Wednesday, September 03, 2008

அன்னை சத்யா நகர்

நேற்று பைரவன் என்பவரைச் சந்தித்தேன். மும்பையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் பணியாற்றி, இப்போது ஓய்வுபெற்ற நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் வசிக்கிறார். மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து, சமூக சேவையில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார்.

வில்லிங்டன் அறக்கட்டளை என்பது சென்னையில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் சமூக சேவை அளித்துவருகிறது. அதன் பொருளாதார ஆதரவில், பைரவன் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதி ஒன்றின் நிலையை மாற்ற முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஜாஃபர்கான்பேட்டை, அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு விளிம்புநிலை மக்கள் குடியிருப்பு “அன்னை சத்யா நகர்”. இந்த இடம் திறந்த கழிவுநீர்த் தேக்கம், குப்பை கூளங்கள், நீர் ஆதாரம் இன்மை, கழிப்பிட வசதி இல்லாமை ஆகியவற்றால் அல்லல்படும் ஓர் இடம். இதேபோல சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன.

இந்த இடத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு, பைரவன், வில்லிங்டன் அறக்கட்டளை உதவியுடன் பல விஷயங்களைச் செய்துள்ளார்.

* இட்டுக்கு வீடு கழிப்பிடம் அமைத்துக்கொடுத்தல்
* குப்பை கூளங்கள் அதற்கான இடத்தில் மட்டுமே போடுதல்
* கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டியவற்றைச் செய்தல்
* நிலத்தடி நீரைச் சேகரிக்க வசதிகளைச் செய்தல்

இதன் காரணமாக அந்தப் பகுதி முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்கிறார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். சில படங்களைப் பிடித்துவருகிறேன்.

கூடவே, அங்குள்ள மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில்லை என்று அறிந்திருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டபோது மாணவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் புரியாததும், புரியாததில் தேர்வு எழுத பயமாக இருப்பதும் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். அதனைச் சரி செய்ய, தன்னார்வலர்களைப் பிடித்துவந்து இங்குள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடங்களில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். விளைவாக இன்று மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்குச் செல்கிறார்களாம். மக்களைப் பீடிக்கும் வியாதிகள் பெருமளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்.

அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் சென்னை வலைப்பதிவர்கள் சென்று பார்த்து, மாற்றங்களைப் பற்றி எழுதலாமே?

No comments:

Post a Comment