Thursday, November 13, 2008

சந்திரயான் - 100 கி.மீ சுற்றில்

நேற்று இரவு (புதன்கிழமை, 12 நவம்பர் 2008) சுமார் 7.00 மணிக்கு சந்திரயான் (சுமார்) 100 கி.மீ வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. இத்துடன் சந்திரயான் திட்டம் முழு வெற்றி அடைந்துவிட்டது எனலாம். அடுத்த இரண்டு நாள்களில் அந்தக் கலத்தில் உள்ள ஒவ்வொரு கருவியாக செயலுக்குக் கொண்டுவரப்படும். தொடர்ந்து, அவை வெவ்வேறு படங்களைப் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.

சந்திரயானின் உயிர் 2 வருடங்கள் என்கிறார்கள். அப்படியென்றால் என்ன பொருள்?

சந்திரயானில் கொஞ்சம் எரிபொருள் மிச்சம் உள்ளது. இந்த எரிபொருள் எதற்குத் தேவை? பூமியையோ, சந்திரனையோ ஒரு கலம் சுற்றிவந்தாலும் நாளாவட்டத்தில் அதன் பாதையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். இதற்குப் பல காரணங்கள்:

1. பூமியோ, சந்திரனோ, முற்றிலும் முழுமையான கோளம் கிடையாது. அதாவது மொழுமொழுவென்று அச்சில் உருவாக்கிய பிளாஸ்டிக் பந்துபோல அல்ல; சுமாராகப் பிடித்த வெல்ல உருண்டை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதனால் ஈர்ப்பு விசையில் ஆங்காங்கே சிறுசிறு மாற்றங்கள் இருக்கும்.

2. சந்திரயான், சந்திரனைச் சுற்றிவந்தாலும், பூமியின் ஈர்ப்பு இன்னமும் அங்கே ஓரளவுக்கு இருக்கும். இதனால், சந்திரயானின் பாதையில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றங்களை அவ்வப்போது அட்ஜஸ்ட் செய்யவேண்டும். அதற்கு, சந்திரயானின் மோட்டாரை அவ்வப்போது இயக்கி, வேண்டிய அளவு வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யவேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த எரிபொருள் தீர்ந்துவிடும். அதன்பிறகு இந்தச் சிறுசிறு அட்ஜஸ்ட்மெண்ட்களைச் செய்யமுடியாது. அந்தக் கட்டத்தில் சந்திரயான் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரன் பாதையிலிருந்து விலகும். சுற்றிச் சுற்றி, சந்திரனின் மேல்பரப்பில் விழுந்து உடையலாம்.

பூமியின் மேல்பரப்பில் இதேமாதிரியான கதி செயற்கைக்கோள்களுக்கு ஏற்படும். ஆனால் அவை பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து சாம்பலாகிவிடும்.

அதையும் மீறி, ஸ்கைலாப் போல சில சமயம் எரிந்த உலோகத் துண்டுகள் சில இடங்களில் விழலாம். நம் தலையில் விழாமல் இருந்தால் நல்லது.

5 comments:

  1. பத்ரி

    இது போன்ற சிறு மாற்றங்களுக்கு அண்டவெளியில் அளவில்லாமல் கிடைக்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்த முடியாதா?

    ReplyDelete
  2. முடியாது. தேவைப்படும் thrust-ஐக் கொடுக்க, சூரிய ஒளியைக் கொண்டு செய்யவே முடியாது. குறைந்த நேரத்துக்குள் ஏகப்பட்ட அளவு எனர்ஜியைச் செலவழித்தால்தான் இந்த அளவுக்கான வேகமாற்றங்களைச் செய்யமுடியும். சூரிய ஒளியைக் கொண்டு அதிகபட்சமாக உள்ளே சில கருவிகளை இயக்கலாம்! அதைத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  3. என்னை போன்ற சாதாரண இந்தியர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். (அறிவியல் ஈடுபாடு காரணமாக நீங்கள் இதை புறக்கணிக்க கூடும்).


    http://thatstamil.oneindia.in/news/2008/10/22/india-pslv-sucessfully-launches-chandrayan.html

    ReplyDelete
  4. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. http://www.cnn.com/2008/TECH/space/11/13/new.planets/index.html

    சூரிய குடும்பத்திற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் படங்கள்.

    ReplyDelete